ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12
அத்தியாயம் -12(1)
அனன்யாவை அவளது அம்மா அடித்து விட்டதில் அதிர்ந்திருந்தான் அசோக்.
“இதுக்குத்தான் சொன்னேன் வேணாம்னு, எவ்ளோ கேவலமா பார்த்திட்டு போறாங்க பார்த்தியா?” என மகளிடம் சீறினார் பாக்யா.
கோவத்திலும் அவமானத்திலும் பேச்சு வராமல் அம்மாவை முறைத்தாள் அனன்யா.
“சத்தியமா அவங்க என்ன பேசிட்டு போறாங்கன்னு புரியவே இல்லை அத்தை. எதுவா இருந்தாலும் இப்படியா அடிப்பீங்க அத்தை?” எனக் கேட்டான் அசோக்.
“என்ன அசோக் புரியலை உனக்கு? இவளை பத்தி தப்பா பேசுறாங்க. அவங்கள தப்பு சொல்ல முடியாது, பார்க்கிற யாரா இருந்தாலும் இப்படித்தான் பேசுவாங்க. எப்பதான் உங்க கல்யாணம் நடக்கும்?” என ஆதங்கமாக கேட்டார் பாக்யா.
“ம்மா, பெரியம்மா பத்தி உனக்கு தெரியாதா? சின்ன விஷயத்துக்கு கூட கண்ணு காது மூக்கு வச்சு பேசுற ஆளு. அதுக்காக இவரை நிக்க வச்சு கேள்வி கேட்பியா?” என்றாள் அனன்யா.
“வாய மூடிட்டு உள்ள போயிடு, இல்லன்னா இன்னொரு கன்னமும் பழுத்து போயிடும். உன்னாலதான் எல்லாம், சொல் பேச்சு கேட்ருந்தா யாரார்கிட்டயோ தேவையில்லாம பேச்சு வாங்கணும்னு எனக்கு அவசியமில்லாம போயிருக்கும்” என சத்தம் போட்டார் பாக்யா.
“அத்தை ஏன் இவ்ளோ கோவம்?” என அசோக் கேட்க, அவனை கோவமாக பார்த்தவர், “என் இடத்திலேருந்து பாருப்பா, கோவம் ஏன்னு காரணம் புரியும். இனிமே இவ உன்கிட்ட வேலைக்கெல்லாம் வர மாட்டா. கல்யாணம் நடக்கிறது உறுதின்னா பெத்தவங்கள கூட்டிட்டு வா, நடக்காதுன்னு தெரிஞ்சாலும் பரவாயில்லை, எங்களை விட்ரு அசோக்” என்ற பாக்யாவிற்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.
“இதென்ன அத்தைஇப்படி பேசுறீங்க? எம்மேல நம்பிக்கை இல்லயா உங்களுக்கு?” என ஆதங்கமாக கேட்டான் அசோக்.
“புருஷன் துணை இல்லாம பல வருஷம் தனியா கஷ்ட பட்டு ரெண்டு பொண்ணுங்கள வளத்து ஆளாக்கியிருக்கேன் அசோக். திரும்பி பார்த்தாலும் சரி முன்னாடி பார்த்தாலும் சரி அலுத்து சலிச்சு வருது. எப்ப கடமையை முடிக்கலாம், எப்ப அக்கடான்னு ஓஞ்சு உட்காரலாம்னு இருக்கு. இவ்ளோ வருஷம் யாரும் கை நீட்டி என்னையோ எம் பொண்ணுங்களையோ எதுவும் சொன்னதில்லை, இன்னிக்கு எம்பொண்ணு ஒழுக்கத்தை குறிச்சு பேசுறாங்க. நான் என்ன செய்யணும்னு நீயே சொல்லு” என்றார் பாக்யா.
அசோக்கிற்கு அத்தையின் மன வேதனை, பயம் எல்லாம் புரியாமல் இல்லை, ஆனால் அதற்காக தன்னிடம் கடுமை பாராட்ட வேண்டிய அவசியம் என்ன எனதான் யோசித்தான். மனம் குழம்பிக் கிடக்கையில் என்ன பேசினாலும் எடுபடாது என்பதால், “வர்றேன் அத்தை, பத்திரமா இருங்க” என சொல்லி வாயில் நோக்கி நடந்தான்.
“மழை இன்னும் விடல அசோக்” பரிதவிப்பாக சொல்லி அவனை நோக்கி சென்றாள் அனன்யா.
பாக்யாவிற்கும் இந்த மழையில் எப்படி செல்வான் என்ற கவலை இல்லாமல் இல்லை. ஆனால் இருக்க சொல்லி கேட்கவும் பயமாக இருந்தது. ஆகவே, “ரெயின் கோட் எடுத்திட்டு வர்றேன், நில்லு அசோக்” என சொல்லி அறைக்கு சென்றார்.
“சமர் வீட்டுக்குத்தான் போறேன், காலைல வர்றேன், அத்தைகிட்ட சண்டைஎதுவும் போடாம சாப்பிட்டு தூங்குங்க” என அனன்யாவிடம் சொல்லி விட்டு, மழையில் நனைந்து கொண்டே சென்று விட்டான் அசோக்.
ஹால் வந்த பாக்யா அசோக்கை கண்களால் தேட, “போயிட்டார், மழைல நனைஞ்சிட்டே போயிட்டார். சந்தோஷமா உனக்கு?” எனக் கோவப்பட்டாள் அனன்யா.
வெளியில் பொழியும் மழையை கவலையாக கண்டவர் மகளை முறைத்து விட்டு அறைக்கு சென்று சுருண்டு படுத்து விட்டார். சின்ன மகளின் வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லாமல் மலர்ந்து விட வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டும்தான் அவரிடம்.
சுடுதண்ணீரில் குளித்து ஆடை மாற்றி வந்த அனன்யா அசோக்கிற்கு அழைத்து பேசினாள். சமரனும் ஸ்ருதியும் வீட்டில் இல்லையாம், குழந்தைக்கு தடுப்பூசி போட மருத்துவமனை சென்றிருக்கிறார்களாம்.
“இப்ப எங்க இருக்கீங்க?” என பத்தற்றத்தோடு கேட்டாள்.
“வீட்டு பின் பக்கத்துல மழைய பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்கேன்” என்றான்.
ஈர உடையை மாற்றாமல் குளிரில் அமர்ந்திருக்கிறான் எனவும் அனன்யாவுக்கு அழுகை வரும் போலிருந்தது. அவர் பாட்டுக்கும் இருந்தார், என் மனதில் ஆசை எனவும்தான் அவரும் என் மேல் ஆசை வைத்தார். என்னால்தான் கஷ்ட படுகிறார் என நினைக்க நினைக்க அவள் மீதே அவளுக்கு கோவம் வந்தது.
நேரம் கடந்திருக்க பாக்யாவின் உள்ளமும் சற்று சம நிலைக்கு வந்தது. படுத்திருந்த படியே ஹாலை எட்டி பார்த்தார். மகள் ஈர தலையோடு அப்படியே அமர்ந்திருப்பதை கண்டவர் எழுந்து வந்து பார்த்தார்.
முகம் சிவந்து கண்களில் கண்ணீருடன் அவளை கண்டதும் பதறிப் போய், “என்னடி ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? அசோக்குக்கு போன் போட்டியா? எதுவும் பிரச்சனை இல்லையே?” எனக் கேட்டார்.
அம்மாவின் மேல் கோவம் என்றாலும் அவரின் துடிப்பை கண்ட பிறகு நிதானமாகவே விஷயத்தை சொன்னாள்.
“பாவம்மா அவர். ஸ்ருதி அக்கா எப்போ வருவாங்களோ? அதுவரைக்கும் ஈர ட்ரெஸ்ல சாரல்ல உட்கார்ந்து கிடப்பாரா? இங்க வர சொல்லட்டுமா?” என கெஞ்சலாக கேட்டாள்.
கையை பிசைந்தவர் நேரத்தை பார்க்க, எட்டை நெருங்கி விட்டது நேரம். அம்மாவின் அமைதியில் இன்னும் முகம் சிவக்க வெடுக் என எழுந்து வெளியே சென்றாள் அனன்யா.
“எங்கடி போற?” என அதட்டல் போட்டார் பாக்யா.
அம்மாவுக்கு பதில் தராமல் வெளியில் வந்து மழையின் தீவிரத்தை பார்த்தவள் மீண்டும் உள்ளே வந்தாள்.
“ஸ்ருதி வீட்ல இப்போ வந்திடுவாங்கதானேடி, முன்னாடி வேற கதை, இப்ப அசோக்கை நம்ம கூட தங்க வச்சது உன் பெரியப்பா வீட்ல தெரிஞ்சா… ஐயையோ என்ன பேசுவாங்கன்னு யோசிக்க கூட பயமாயிருக்குடி. எனக்கும் அசோக் நினைச்சு கவலையாதான் இருக்கு, ஆனாலும்…” அம்மா பேசுகிற எதையும் அவள் காதில் வாங்கிக் கொள்வது போலவே தெரியவில்லை.
மகளின் அலட்சியப் போக்கில் ஒரு புறம் கோவம் எழ, அசோக்கை இங்கு வர சொல்ல முடியாத தன் நிலையை எண்ணி மறு பக்கம் ஒரு வித இயலாமை எழ, தவித்துப் போனார். ‘என்னை நிர்கதியாக்கி விட்டு சென்று விட்டீர்களே!’ என உயிரோடு இல்லாத கணவரிடம் மனதில் சண்டை போட்டார் அந்தப் பெண்மணி.
அவந்திகாவின் கணவனுக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வர இருக்க அவனுக்கு கொடுப்பதற்காக புத்தாடை எடுத்து வைத்திருந்தார் பாக்யா. அதையும் துண்டையும் ஒரு பைக்குள் திணித்துக் கொண்ட அனன்யா குடையோடு ஹால் வந்தாள்.
திகைத்த பாக்யா, “வீட்டை விட்டு வெளில போன தொலைச்சி கட்டிடுவேன்” என்றார்.
“நீ யாருன்னு அவருக்கு தெரிஞ்சதுக்கப்புறம் உனக்கு, நமக்கு என்னென்ன உதவி செஞ்சார்னு ஒரு நிமிஷம் நினைச்சி பாரும்மா. நாளைக்கு அவருக்கு உடம்பு முடியாம போயிடுச்சுன்னா பரவாயில்லையா உனக்கு? சொல்லும்மா, போகாம இருந்திடவா?” எனக் கேட்டாள்.
அசோக்கிற்கு முடியாமல் போய் விடும் என்பதிலேயே அவரின் மனம் கலங்க ஆரம்பித்து விட்டது. அசோக்கை இங்கு வரவழைத்தாலும் தங்க வைப்பது உசிதமாக படவில்லை, மீண்டும் சமரனின் வீட்டுக்குத்தான் அவன் செல்ல வேண்டும். அவனை அலைய வைப்பதை காட்டிலும் அவனுக்கு மாற்றுத்துணி கொண்டு போய் கொடுப்பதே சிறந்தது என நினைத்தவர் தானும் உடன் வருவதாக சொன்னார்.
“ம்மா மழை அடிச்சிக்கிட்டு ஊத்துது, பக்கத்து தெருல இருக்க வீட்டுக்கு தனியா போயிட்டு வந்திட மாட்டேனா? சமரன் ஸாரும் ஸ்ருதி அக்காவும் வர்ற வரைதான் இருப்பேன், நீ எதுக்கு கூட வர்றேன்னு காரணம் சொல்லேன்” என்றாள்.
“இல்லடி, நீ தனியா அசோக் கூட…” என்றவர், மகளின் குற்றம் சுமந்தும் கோவ பார்வையில் வாயை மூடிக் கொண்டார்.
மழையின் காரணமாக மின்சாரமும் போயிருந்தது. இன்வெட்ர்ட்டர் உதவியோடு சமரனின் வீட்டின் வெளியிலும் பின் பக்கத்திலும் மின் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.
குளிர்ந்த காற்றும் உடலின் ஈரமும் சேர்ந்து அசோக்கின் குடல் வரை நடுங்க வைத்தது. அதையும் பொருட்படுத்தாமல் அத்தை பேசியதையும் அப்பாவின் மனதை எப்படி மாற்றுவது என்பது பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் அனன்யாவை எதிர்பார்த்திராதவன், “தனியா வந்தியா அனு? ஏன் வந்த?” எனக் கேட்டுக் கொண்டே அவளிடம் சென்றான்.
ஈரக் குடையை மடக்கி ஓரமாக வைத்தவள் கையிலிருந்த பையை அவனிடம் கொடுத்தாள். ‘அப்பாடா இந்த ஈரத்திலிருந்து விடுதலை’ என்ற உணர்வு தோன்ற துண்டை எடுத்து தலையை துவட்டலானான்.
“ட்ரெஸ் மாத்திட்டு தலை துவட்டுங்க” என அவள் சொல்ல, சட்டையின் பட்டனில் கை வைத்தவன் அவளை குறும்பாக பார்த்தான்.
கண்களால் கண்டனம் சொல்லி விட்டு திரும்பி நின்று கொண்டாள். ஆடை மாற்றிக் கொண்டவன், “சாப்பிட ஏதும் எடுத்திட்டு வந்தியா?” என விசாரித்தான்.
“சரியா போச்சு, வீட்ல சாப்பிட என்ன இருக்குன்னு கூட பார்க்கல நான். பசிக்குதா?” என கவலையாக கேட்டாள்.
“லைட்டா, பரவாயில்லை, சமர் வந்திடுவான் இப்போ” என்றான்.
அதற்குள் மகளுக்கு அழைத்து விட்டார் பாக்யா. இதோ வந்து விடுகிறேன் என சொல்லி அழைப்பை துண்டித்தவள், “அக்கா வர்ற வரைக்கும் இருக்கலாம்னுதான் நினைச்சேன், அம்மா இன்னும் கோவ படுவாங்க, நான் கிளம்பவா?” எனக் கேட்டாள்.
“தனியா போவியா? நானும் வர்றேன்” என்றான்.
அவள் மறுக்க அத்தைக்கே அழைத்து விட்டான்.
“வாழ்க்கை முழுக்க நான்தான் அத்தை இவ கூட வரப் போறேன், இப்ப கூட வந்தா கோச்சுப்பீங்களா?” எனக் கேட்டான்.
“புரியாம பேசாத அசோக். கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் என்ன, யாரும் உன்னை ஒன்னும் சொல்ல முடியாது, இப்ப அவளே வந்துக்கட்டும். அப்புறம்…” என தயங்கியவர், “இனிமே மதுரைக்கு வேலைக்கு வரலைப்பா அவ, அத்தை சொன்னா கேட்டுக்கணும் நீ. என் மன நிம்மதிக்காக அசோக்” என்றார்.
ம் என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு ஒளியிழந்த முகத்தோடு அனன்யாவை பார்த்தான். அவளுக்கும் என்ன பேச என தெரியவில்லை, அமைதியாக மழையை வெறித்தாள்.