அத்தியாயம் -10(2)

 “இன்னொரு ஹெல்ப் வேணும் அங்கிள், முடியும்னா செஞ்சு தாங்க” எனக் கேட்டான்.

நிஜத்தில் அவருக்கு ‘என் பெண்ணை வேண்டாம் என்கிறாய், உனக்கு ஏன் செய்ய வேண்டும்?’ என கோவம்தான் வர வேண்டும். அவனது அணுகுமுறை அவருக்கு பிடித்திருக்க, பேச்சிலும் அவரை கவர செய்து விட்டான். ஆகவே, “சொல்லுப்பா, என்ன செய்யணும் நான்? என் சக்திக்கு மீறாத எதுவா இருந்தாலும் செஞ்சு தர்றேன்” என்றார்.

அடுத்து அவன் கேட்டுக் கொண்டதில் தானாக அவரது விழிகள் விரிந்து கொண்டன. இதுவரைக்கும் அவர் செய்திராத ஒன்று.

“என்னப்பா இது?” என சங்கடமாக கேட்டார்.

“நான் சொல்லித்தானே அங்கிள் செய்றீங்க? என் மனசுக்கு பிடிச்ச பொண்ணோடதான் கண்டிப்பா என் கல்யாணம், அப்பா சம்மதம் வேணுமே அங்கிள். தயங்காம செய்யுங்க” என்றான்.

சிரித்தவர், “அதிர்ஷ்டம் செஞ்ச பொண்ணுதான். உன்னை மிஸ் பண்றோம்னு என்னைய நினைக்க வச்சிட்ட” என்றார்.

“உங்க மகளுக்கு பெஸ்ட் பையன் கிடைப்பார் அங்கிள், அவங்களும் அதிர்ஷ்டம் செஞ்ச பொண்ணுதான்” என அசோக் மனதிலிருந்து சொல்லவும், நெகிழ்ந்து விட்டார்.

“என் மகனுக்கு என் சொந்த தங்கச்சி பொண்ணு இருக்கையில வேற பொண்ணே வேணாம்னு தலை தெறிக்க ஓட விடுறேனா இல்லயா பாரு உன் அப்பாவை” என கிண்டல் போல என்றாலும் உறுதியாக சொல்லி விட்டார்.

இவர்களின் உரையாடல் பற்றி புகழேந்திக்கு எதுவும் தெரியவில்லை. மகன் சம்மதித்து விடுவான், என்று திருமண நாளை குறிக்கலாம் என்ற யோசனையோடு அன்றைய இரவை கடந்தார்.

காலையிலேயே அவருக்கு அழைத்த மாரிமுத்து, “கேள்விப்பட்டேன், அசோக் தம்பி வேற பொண்ணை விரும்புதாம், என்கிட்ட மறைச்சிட்டீங்களே?” எனதான் பேச்சை ஆரம்பித்தார்.

புகழேந்தி மழுப்ப பார்க்க மாரிமுத்து விடவில்லை, கொஞ்சம் காரமாக பேசி பெண் கொடுக்க மாட்டேன் என சொல்லி விட்டார்.

 முன் தினம் மகனும் மாரிமுத்துவும் இணக்கமாக சிரித்து பேசிக் கொண்டிருந்ததாலும் நல்ல முறையிலேயே விடை கொடுத்து அனுப்பியதாலும் மகன் இப்படி பேச சொல்லியிருப்பான் என்ற சந்தேகம் அவருக்கு துளியும் இல்லை.

காலை உணவின் போது மகன் சொல்லிக் கொடுத்த படியே, “என்னங்க… தனுஜாவை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு, அவங்க எப்ப மாப்ள வீடு பார்க்க வர்றாங்களாம்?” என கணவரிடம் விசாரித்தார் விஜயா.

அசோக் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, குரலை செருமிக் கொண்ட புகழேந்தி, “அது… அந்த இடம் வேணாம், வேற பார்க்கலாம்” என்றார்.

“ஏங்க?” என அப்பாவியாக கேட்டார் விஜயா.

“வேணாம்னா வேணாம், போடி!” என மனைவியிடம் எரிந்து விழுந்தவர் முழுதாக சாப்பிட்டு முடிக்காமலேயே எழுந்து சென்று விட்டார்.

“சாப்பிடாமா போறார்டா” கவலையாக மகனிடம் சொன்னார் விஜயா.

அசோக் தன் அம்மாவை முறைக்க, “என்ன இப்போ… நாலு வாய் சாப்பாடு குறைஞ்சா என்ன வந்தது? டயட்னு நினைச்சுக்கிறேன்” என்றார்.

சிரித்தவன், “இனிமே நான் என்ன சொல்லிக் கொடுத்தாலும் அவர் சாப்பிட்டு முடிச்சு எழுந்து போற நேரமா கேளும்மா” என்றான்.

“இன்னும் வேற என்னென்ன கேட்கணும் டா நான்?” கடுப்பாக கேட்டார் விஜயா.

“இதே கேள்விதான். அப்பா வேற வேற இடம் பார்ப்பார், அத பத்தி உங்கிட்ட சொல்லுவார். நீயும் அடுத்த நாள் இப்ப கேட்ட மாதிரியே கேளு” என்றான்.

“என்னடா நடக்குது?”

“ம்மா… அவரே அன்னயாவை எனக்கு பொண்ணு கேட்பார், அது நடக்கும். வேற என்ன தெரிஞ்சுக்கணும். இப்படி அப்பாவியாவே இரு” அம்மாவின் கன்னத்தை செல்லம் கொஞ்சி சொல்லிக் கொண்டே எழுந்து சென்றான்.

இரண்டு வாரங்கள் ஓடியிருந்தன.

ஸ்ருதி கல கலவென சிரித்துக் கொண்டிருக்க, அசோக்கை முறைத்துக் கொண்டிருந்தான் சமரன்.

“நான் இல்லடா இந்த அப்பாடக்கர் வேலை பார்த்தது. ஸ்ருதிதான் காரணம். என் அப்பா பொண்ணு பார்த்திருக்காராம்னு இவகிட்டதான் புலம்பினேன். யார் என்னான்னு விசாரிச்சு இவதான் இப்படி ஐடியா கொடுத்தா” என்றான் அசோக்.

இப்போது சமரன் ஸ்ருதியை முறைக்க, “உனக்கு என் அப்பா பார்த்த இடத்தையெல்லாம் கலைக்க நிறைய மெனக்கெட்டோம். அசோக் விஷயத்துல ஈஸியா நடக்குது எல்லாம்” என்றாள்.

“ஸ்ருதி! இதெல்லாம் தப்பு” என அதட்டினான் சமரன்.

 “மதுரை ஜில்லா முழுக்க அசோக் ஒரு காதல் இளவரசன் ரேஞ்சுக்கு ஃபேமஸ் ஆகிட்டான் சமர். பொண்ணு பார்க்கிற இடமெல்லாம் அமையாம போறப்ப ஸ்டிஃப் புகழேந்தி மாமா கொஞ்சம் கொஞ்சமா அவர் தங்கச்சி பக்கம் வளைஞ்சுதான் ஆகணும். எல்லாம் சரியாதான் போயிட்டிருக்கு” என்றாள்.

“டேய் இந்த கசின்ஸ் ரெண்டு பேரும் சரியான ஃபிராடுங்க. நீ வா நாம தப்பிச்சு போயிடுவோம்” என மகனிடம் சொல்லிக் கொண்டே அவனை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டான் சமரன்.

அசோக்கும் ஸ்ருதியும் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென, “மனசாட்சி இருக்கா உனக்கு?” எனக் கேட்டான் அசோக்.

ஸ்ருதி முகத்தை சுருக்க, “உன் லொட லொடப்பை கேட்கத்தான் போலீஸ்காரன் இருக்கான்ல? என்கிட்ட ஏன் பிளேட் போடுற? அனன்யாவை வர சொல்வோம்னு எண்ணம் இருக்கா உனக்கு?” எனக் கேட்டான்.

“அதான் உன் அத்தை ஓகே சொல்லிட்டாங்களே அசோக், நீயே அங்க போக வேண்டியதுதானே?”

“அத்தைக்கு தெரியறதுக்கு முன்னாடி அவகிட்ட ஃப்ரீயா பேச முடிஞ்சது. இப்ப அப்படிலாம் பேச முடியாது ஸ்ருதி. ஃபோன்ல மட்டும்தான் பேசுறோம். நான் கூப்பிட்டா அம்மா ஏதாவது சொல்வாங்கன்னு பிகு பண்ணுவா” என்றான்.

“நான் கூப்பிட்டு நீ இங்கதான் இருக்கேன்னு தெரிஞ்சா நிஜமா எனக்கு அவ ஹெல்ப் வேணும்னு கூப்பிடறப்போ வராம போய்டுவா. நான் கூப்பிட மாட்டேன்” என வம்பு செய்தாள் ஸ்ருதி.

அசோக் அவளிடம் கெஞ்சி மிரட்டி என பல விதங்களில் அனன்யாவை இங்கு வரவழைக்க பார்த்தான். ஸ்ருதி விளையாட்டை கைவிட்டு கைப்பேசி எடுக்கும் நேரம், அனன்யாவே வந்து விட்டாள்.

ஏதோ வீட்டில் செய்த பலகாரம் எடுத்து வந்திருந்த அனன்யா அசோக்கை கண்டுவிட்டு மகிழ்ச்சியாக அதிர்ந்தாள்.

அப்போதுதான் தலைக்கு குளித்திருப்பாள் போலும். அரை ஈரமாக இருந்த கூந்தலில் கிளிப் போட்டு, பளிச் என்ற முகத்தோடு வந்திருந்தாள். ஸ்ருதி இருக்கும் நினைப்பு கூட இல்லாமல் அவளை விட்டு பார்வையை அகற்றவில்லை அசோக்.

“பாரு அனன்யா, காலையிலேயே வந்திட்டான். அனன்யாவை பார்த்திட்டு வான்னு அப்போலேருந்து சொல்றேன், கட்டிக்க போறவளை பார்க்கணும்னு ஒரு இன்ட்ரெஸ்ட்டே இல்லாம கல்லு மாதிரி இங்கேயே உட்கார்ந்திருக்கான். வேற வேலை இருக்குன்னு சொல்லி மதுரை கிளம்ப பார்த்தவனை சமாளிச்சு உட்கார வச்சிட்டு உனக்கு கால் பண்ணலாம்னு நினைச்சேன், நீயே வந்திட்ட” என அசோக்கை போட்டுக் கொடுத்து விட்டு அனன்யா கையிலிருந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டு சமரனிடம் சென்று விட்டாள் ஸ்ருதி.

அனன்யா முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள, “ஏய் அவ பொய் சொல்றா அனும்மா” என்றவன் நடந்ததை விளக்க முனைந்தான். அவள் கேட்டால்தானே?

கோவமாக சமையலறை வந்து நின்று கொண்டாள் அனன்யா. அவளின் பின்னாலேயே வந்தவன், “அங்க வந்தா பேச முடியாதுன்னு உன்னை இங்க வரவைக்க சொன்னேன். இவ்ளோ தூரம் வந்ததே உன்னை பார்க்கத்தான். அவ விளையாடுறா” என்றான்.

“சமாளிக்காதீங்க, ஸ்ருதி அக்கா பொய் சொன்ன மாதிரி தெரியலை. நீங்களும் பொய் சொல்லாதீங்க. அம்மா ஏதும் நினைப்பாங்கன்னுதானே அங்க வரலை, எனக்கு புரியும். உண்மையை பேசினா அப்படி ஒன்னும் சண்டை போட்டிட மாட்டேன்” என்றாள்.

இடுப்பில் கை வைத்து சிறு ஆயாசத்தோடு அவன் அவளை பார்த்திருக்க, “உங்களை நேர்ல பார்க்கணும் பேசணும்னு எல்லாம் எனக்கு எவ்ளோ ஆசை தெரியுமா? உங்களுக்கும் அப்படிலாம் தோணலைன்னுதான் கஷ்டமா இருக்கு. எம்மேல ஆசையே இல்லை உங்களுக்கு, போங்க” என்றாள்.

“எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது”

“எனக்கு தெரியும். அங்க உங்கப்பாவை சமாளிக்கவே படாத பாடு படுவீங்க. எங்கேருந்து என் நினைப்பு வரும்? விடுங்க…” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

எதிர்பாராதவள் பட படத்த இதயத்தோடு அவன் அணைப்பில் சில நொடிகள் அடங்கி நின்று, பின் விலக முனைய, விடவே இல்லை அவன்.

மூச்சை நன்றாக உள் இழுத்தவன், “ஹமாம் சோப்தானே?” எனக் கேட்டான்.

விலக முயற்சி செய்து கொண்டே, “என்ன கேட்குறீங்க?” என்றாள்.

“உன்கிட்டேருந்து வர்ற வாசம் அனு. இரு… தலையிலேருந்து வேற வாசம் வருது” என்றவன், ஒற்றைக் கையால் கிளிப்பை அகற்றி விட்டு, கூந்தல் இழைகளில் விரல்களை நுழைத்து விளையாடிக் கொண்டே வாசம் பிடித்தான்.

“விடுங்க அசோக்” என பலமில்லாத குரலில் சொன்னாள்.

“ம்ஹ்ஹா…” என வாசம் பிடித்தவன், “இயற்கையிலேயே கூந்தலுக்கு வாசம் இருக்கா இல்லயான்னு எனக்கும் டவுட் வருது” என்றான்.

“போதும் பினாத்தினது, யாரும் வந்திட போறாங்க அசோக்”

எதையும் காதில் வாங்கும் மன நிலையில் இல்லாத அசோக், அவளது ஆடை தாண்டி இடையில் கை கொண்டு வருட, மயக்க நிலைக்கு சென்றாலும் ஏதோ ஒரு நொடியில் சுதாரித்த அனன்யா முழு பலத்தையும் பிரயோகித்து அவனிடமிருந்து விலகி நின்றாள்.

இருவரது முகங்களும் சிவந்து கிடந்தன.

அவளது முடி முகத்தில் விழுந்து கிடக்க ஒதுக்குவதற்காக அவளிடம் சென்றான். அவள் பின்னால் செல்ல, “ரிலாக்ஸ் அனு, ஸாரி… அது…” என்றவன், அவள் இன்னும் பின்னால் செல்லவும் வேகமாக அவளது கையை பிடித்து தன்னருகில் நிறுத்திக் கொண்டான்.

“அசோக்!” கண்டனமாக அழைத்தாள்.

 “ஆசை இல்லைனு சொன்னா எவ்ளோ ஆசை இருக்குன்னு இப்படித்தான் காட்ட முடியும். எதுவும் செய்யல உன்னை” என சொல்லிக் கொண்டே முடியை ஒதுக்கி விட்டு, சமையல் மேடையில் இருந்த கிளிப்பை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

முடியை கிளிப் செய்வதற்காக விலக போனவளை விடாதவன், “இன்னிக்கு விட்டா திரும்ப எப்படி இந்த நெருக்கம் கிடைக்கும், சும்மா இப்படியே இரு” என ஆசையாக சொன்னான்.

வெட்க சிரிப்புடன் அவளும் அவனுடன் நெருக்கமாக நின்றவாறே முடியை கிளிப் செய்தாள்.

தேகங்கள் உரசிக் கொள்ள மோகத் தீ மூண்டுக் கொண்டது. முதல் முத்தத்திற்கு அச்சாரம் போட்டான் அசோக். அவள் கண்களில் இசைவு தெரிய இதழ்களில் இதழ் பூட்டினான்.

ஜன்னல் வழியே திடீரென வந்த பலத்த காற்றுதான் முத்தத்திற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. நாணத்தால் சிவந்து கிடந்த முகத்தை பற்றிக் கொண்டவன் நெற்றி, இமைகள், நாசி, கன்னங்கள், காதோரம் என ஓரவஞ்சனை இல்லாமல் முத்தங்களிட்டான்.

“அசோக்…” சின்னச் சிறு குரலில் அழைத்தவளின் குரல் கொடுத்த மயக்கத்தில் மீண்டும் அவளது இதழ்களை நெருங்கினான். அவன் மார்பில் கை வைத்து தள்ளி விலகி நின்றாள்.

இன்னும் இந்த தனிமை நீடித்தால் இளமை இஷ்டத்திற்கு விளையாடும் என புரிந்து, குளிர்ந்த நீர் பருகி கொஞ்சமாக தன்னிலை அடைந்தவன் அவளுக்கும் பருக தண்ணீர் கொடுத்தான்.

அவள் பருகிய தண்ணீர் லேசாக சிந்தி கழுத்தில் இறங்க, வேகமாக உதடுகள் கொண்டு சிந்திய நீரை துடைத்து விட்டான். அவனது சில்மிஷத்தில் அவள் கையிலிருந்த தண்ணீர் குவளை தரையில் விழ, என்னவோ ஏதோ என்று சமரனும் ஸ்ருதியும் அங்கு வந்து சேர்ந்தனர்.

அசோக்கும் ஸ்ருதியும் திரு திரு என விழித்தனர். சமரனும் ஸ்ருதியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர், பின் சிரித்துக்கொண்டே அவ்விடம் விட்டு சென்று விட்டனர்.

“ஹையோ என்ன நினைப்பாங்க? உங்களாலதான் போங்க” என குறை சொன்னாள் அனன்யா.

“ஆமாம் என்னாலதான், இனிமே சொல்லுவ ஆசை இல்லைனு?” எனக் கேட்ட அசோக், அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். அவன் மார்பில் கை வைத்து, அவனோடு ஒன்றிக் கொண்டு, அந்த நொடியை அனுபவித்தாள் அனன்யா.