என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10

அத்தியாயம் -10(1)

தன் அம்மாவை அழைத்துக் கொண்டு அத்தையின் வீட்டுக்கு வந்திருந்தான் அசோக். திடீரென வந்து நிற்பான் என அனன்யா எதிர் பார்த்திருக்கவில்லை.

உன் அண்ணன் எளிதில் சம்மதிக்க மாட்டார்தான், அதற்காக இளையவர்களின் ஆசையை நிராகரிக்க கூடாது, என் வீட்டுக்கு மருமகளாக வந்து விட்டால் நான் பார்த்துக் கொள்வேன் என பேசியிருந்தார் விஜயா.

பாக்யாவால் அண்ணியிடம் மறுத்து எதுவும் கூறிட முடியவில்லை. ஆனாலும் சம்மதம் எனவும் சொல்லவில்லை. விஜயா விடவில்லை.

“புள்ளைங்க ஆசை பட்டதை நிறைவேத்தி வைக்க முடியலைன்னா நாம என்ன பெத்தவங்க சொல்லு? ஓரளவுதான் நம்மகிட்ட கேட்டுட்டு நிப்பாங்க, அவங்க அன்புல உறுதியா இருந்தா ஒரு கட்டம் மேல நம்மளை மீறி செய்திடுவாங்க” என கிட்டத்தட்ட பயமுறுத்தியே விட்டார்.

“அச்சோ அத்தை! அப்படிலாம் அம்மாவை மீறி செய்ய மாட்டேன், அவங்களும் உங்களை மீறி அப்படி என்ன பண்ணிடுவாங்க” என பதறிப் போனவளாக சொன்னாள் அனன்யா.

“சரிதான், அப்ப இவனுக்கு வேற பொண்ணு பார்க்கிறேன், நீயும் உன் அம்மா பார்க்கிற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டு” என்றார் விஜயா.

சும்மா சொல்கிறார் என தெரிந்தாலும் அனன்யாவின் முகம் சுண்டிப் போக, “அவளை பயமுறுத்தவா உன்னை அழைச்சிட்டு வந்தேன், போம்மா” என அம்மாவிடம் சலுகையாக சொன்னான் அசோக்.

மகளின் முகத்தைதான் பார்த்திருந்தார் பாக்யா. வாயாடிக் கொண்டே இருக்கும் துடுக்கான தன் மகள் சில நாட்களாக ஒடுங்கியும் சுங்ணங்கியும் இருப்பதைத்தான் கவனிக்கிறாரே.

“சரி அண்ணி, ஆனா அண்ணன் சம்மதிக்கமா இது நடக்காது” என்றார் பாக்யா.

“சொல்ற விதமே தப்பு பாக்யா. உன் அண்ணன் சம்மதத்தோட நடக்கணும்னு நேர்மறையா சொல்லணும் புரிஞ்சுதா?” என விஜயா கேட்கவும், பாக்யாவின் முகத்தில் முறுவல் மலர்ந்தது.

அனன்யாவை பார்த்த அசோக், ‘இப்போ சந்தோஷமா?’ என பார்வையால் கேட்டான்.

அவளது முகம் மலர்ந்து போக, “ரெண்டு பேர் மூஞ்சியையும் பாரு, இதுக்கு மேல வேற என்ன வேணும் உங்களுக்குன்னு உன் அண்ணன்கிட்ட கேட்க போறேன்” என தன் நாத்தனாரிடம் சொன்னார் விஜயா.

“எல்லாம் இங்கதான் அத்தை, அப்பா முன்னாடி வெறும் காத்துதான் வரும் அம்மாக்கு, இல்லம்மா?” என கிண்டல் செய்தான் அசோக்.

அதென்னவோ உண்மைதான். பாக்யாவின் மனநிலை பற்றி கூறி நீதான் பேச வேண்டும் என தன்னை உரிமையாக இங்கே அழைத்து வந்து நிறுத்தி விட்டான் மகன். நானும் ஜம்பமாக பேசி விட்டேன், அவரிடம் யார் பேசுவது, யார் அவரின் மனதை கரைத்து மாற்றுவது என அவருக்குமே மலைப்பாகத்தான் இருந்தது.

அண்ணியின் எண்ணவோட்டம் புரிந்தது போல, மீண்டும் கலக்கமானர் பாக்யா. அவருக்கு தைரியமளித்து சிறிது நேரத்தில் அம்மாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் அசோக்.

மதுரை வந்ததும், “அவளைத்தான் கட்டிப்பேன்னு உறுதியா இருக்கதானே? நாளை கடத்தாம உன் அப்பாகிட்ட பேசிடுடா” என அறிவுறுத்தினார் விஜயா. அவனும் தலையாட்டிக் கொண்டான்.

அப்பாவிடம் அலுவலகத்தில் வைத்து பேச முடியாது என தெரியும். இரவு வீடு திரும்பியதும் பேசி விட வேண்டும் என முடிவு செய்து, எப்படி பேச வேண்டும், அவர் என்ன கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

இரவு நேரமும் வந்தது. உணவு நேரம் முடியவும் மகனுக்கு முன் முந்திக் கொண்டார் புகழேந்தி. அவனுக்கு அவர் பார்த்து வைத்திருக்கும் தனுஜா என்ற பெண் பற்றிய விவரங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

“மாரிமுத்து பத்தி உனக்கு தெரியும்தானே, அவர் பொண்ணுப்பா” என்றார்.

 அவரை பற்றி அசோக்கிற்கும் தெரியும், பிரபலமான மனிதர். பெரிய அளவில் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்து கொண்டிருந்தவர். இப்போது தொழில் முழுவதையும் மகன் வசம் ஒப்படைத்து விட்டார். பூர்வீக சொத்துக்கள் அதிகம் உண்டு.

பணம் சம்பாதிக்க அதிகம் ஓடியாகி விட்டது, மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், நண்பர்கள் என அவருக்கென நேரத்தை செலவு செய்கிறார். அவர்கள் சமூகத்தில் மட்டும் வரன்கள் பார்த்து அமைத்து கொடுப்பார். வாட்ஸ் ஆப் குரூப் தனியாக வைத்திருக்கிறார். பணம் சம்பாதிக்கும் நோக்கில் அல்லாமல் உபயோகமான விதத்தில் பொழுது போக்கு போல செய்து கொண்டிருந்தார்.

சாதாரணமாக ஆரம்பித்தது இன்று கல்யாணப் பேச்சை ஆரம்பித்தால் அவரது வாட்ஸ் ஆப் க்ரூப்பில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு வந்திருந்தது. சுற்று வட்டாரத்தில் அவர்களின் சமூகம் சார்ந்த எந்த திருமணமாக இருந்தாலும் அவர் மூலமாக நடந்திருக்கலாம், அல்லது பையன், பெண் குடும்பம் எப்படி என அவரிடம் விசாரிக்க பட்டிருக்கலாம்.

அசோக்கின் பாயோடேட்டா கூட அவரிடம் உண்டு. ‘திருமணம் வேண்டாம், கொஞ்ச காலம் போகட்டும்’ என சொல்லியிருந்த அவரின் மகள் இப்போதுதான் சரி, மாப்பிளை பாருங்கள் என சொல்லிருந்தாள்.

ஆதலால் அவர் நினைத்த படி உள்ள வரன்களின் ஜாதகங்களில் சல்லடை போட்டு சலித்து தன் மகளுக்காக அசோக்கை தேர்ந்தெடுத்திருந்தார்.

“நம்மளை பத்தி அவருக்கு எல்லாம் தெரியும், கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான். நீயும் அந்த பொண்ணும் நேர்ல ஒரு முறை பார்த்து பேசிட்டா, நாள் குறிச்சிடலாம்” என சந்தோஷமாக சொன்னார் புகழேந்தி.

விட்டால் நாளைக்கே திருமணத்தை நடத்தி விடுவார் போல, அந்த அளவு வேகம் அவரது பேச்சில் தெரிந்தது.

தனக்கு பிடித்தமில்லை என்பது போல அசுவாரஸ்யமாக அசோக் பார்த்திருக்க, “ரொம்ப நல்ல பொண்ணுடா, கண்டிப்பா உனக்கு பிடிக்கும்” என்றார் புகழேந்தி.

“கண்டிப்பா பிடிக்காதுப்பா” என்றான் அசோக்.

புகழேந்தி கண்களை சுருக்கிக் கொண்டு கேள்வியாக மனைவியை பார்த்தார். அவரோ கணவரின் கண்களை சந்திக்க முடியாமல் தடுமாறினார்.

“என்னடி என்ன?” என உறுமினார் புகழேந்தி.

“அம்மாகிட்ட ஏன் சத்தம் போடுறீங்க? என்னை கேளுங்கப்பா” என அசோக் சொல்லவும், கடுமையான முகத்தோடு அவனை பார்த்தார்.

“என் அத்தையோட பொண்ணு அனன்யாவை நான் விரும்புறேன், அவளை எனக்கு பிடிச்சிருக்கு ப்பா. வெளில பொண்ணு தேடாம அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பா” என்றான்.

புகழேந்திக்கு யாரை சொல்கிறான் என தொண்ணூறு சதவீதம் தெரிந்தாலும், உறுதி படுத்திக் கொள்வதற்காக, “யாரை சொல்ற?” என கடினக் குரலில் கேட்டார்.

“அன்னிக்கு வீட்டுக்கு வந்தாங்களே… பாக்யா அத்தை, அவங்க பொண்ணு. அவளும் வந்திருந்தா அன்னிக்கு” என்றான்.

மகனை கோவமாக பார்த்தவர், “நினைச்சேன் டா, இப்படி ஏதாவது வரும்னு நினைச்சேன். அப்பாங்கிற உறவு உனக்கு வேணும்னா அந்த ஓடிப் போனவ பொண்ணை கனவுல கூட நினைக்காத” என ஆங்காரமாக சொல்லி விட்டு மொட்டை மாடிக்கு சென்று விட்டார்.

விஜயா தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, “ஓரளவு எக்ஸ்பெக்ட் பண்ணினதுதானேம்மா? கொஞ்சம் கொஞ்சமா அவர் மனசை மாத்தலாம், அவர் வருவார், நீ தூங்க போ” என்றான்.

“வயசானா வறட்டு கவுரவம் குறையும்னு பேரு, உன் அப்பாக்கு ஜாஸ்திதான் ஆகியிருக்கு. இவர் அனன்யாவை பொண்ணு கேட்டு போவாருன்னு எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைடா. என்ன பாவம் செஞ்சேன், என் புள்ளைக்கு கல்யாணம் இப்படி தட்டிகிட்டே போகுதே…” என புலம்பிக் கொண்டே அறைக்கு சென்றார் விஜயா.

அடுத்த நாள் காலையில் எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்த புகழேந்தி, “ஈவ்னிங் தனுஜா வீட்ல அந்த பொண்ணோட அண்ணன் பையனுக்கு பர்த்டே ஃபங்ஷன் இருக்கு. நீ, நான், அம்மா மூனு பேரும் போறோம்” என அறிவித்தார்.

விஜயா தன் மகனை கவலையாக பார்க்க, அப்பாவின் செயலில் அவனுக்கும் வருத்தம் என்றாலும் எதிர்த்து பேசாமல் இருந்தான்.

கணவர் கிளம்பிய பிறகு, “என்னடா நாம அங்க போறோமா?” என சந்தேகமாக கேட்டார் விஜயா.

“அதான் அப்பா சொல்லிட்டாரே, போயிட்டுதான் வருவோமே” என சாதாரணமாக சொல்லி அவனும் கிளம்பி விட்டான்.

மாலையானது. மறுப்பேதும் சொல்லாமல் தன் மகன் உடன் வருவது கண்டு, ‘ஏதோ அழகா இருக்கவும் ஆசை பட்டுட்டான். எனக்கு பிடிக்காது நான் சம்மதிக்க மாட்டேன்னு புரிஞ்சுக்கிட்டான் பையன்’ என நினைத்துக் கொண்டார் புகழேந்தி.

தனுஜாவின் வீட்டில் தங்கள் வருகை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தார் புகழேந்தி. தடபுடலாக வரவேற்றனர். நல்ல மனிதர்களாக தென்பட்டனர். அப்பா இப்படி சங்கடம் செய்கிறாரே, இவர்களுக்கும் வருத்தம்தானே என கவலை பட்டான் அசோக்.

தனுஜாதான் வந்து இவர்கள் மூவருக்கும் பழச்சாறு தந்தாள். ஆர்வமாக தன்னை பார்க்கும் அவளை காண்கையில் ‘ஐயோ!’ என தவித்து விட்டான் அசோக். ஆசை கொண்டு நடக்காமல் போனால் அது எத்தகைய ஏமாற்றத்தை தரும் என்பது அவனை தவிர யாருக்கு தெரியும்?

பிறந்தநாள் விழா ஆரம்பமானது. கேக் வெட்டி முடித்த பின் தனுஜாவின் அப்பாவிடம் வந்த அசோக், “ தனியா பேசணும் அங்கிள்” என்றான்.

தன் மகளோடு பேச நினைக்கிறான் போல என நினைத்தவர் மலர்ந்த முகத்தோடு, “அதுக்கென்ன ப்பா? இதோ தனுவை கூப்பிடுறேன்” என்றார்.

“இல்லை அங்கிள், உங்ககிட்டதான் பேசணும்” என்றான்.

அவர் குழப்பமாக பார்த்தாலும் உடனே அவனுடன் தனிமையை ஏற்படுத்திக் கொண்டார்.

 சுருக்கமாக தன் காதல் பற்றி சொன்னவன், “அப்பா உங்களுக்கு உங்க பொண்ணுக்கு ஹோப் கொடுத்திட கூடாதுன்னுதான் நானே நேர்ல வந்தேன் அங்கிள். உங்களுக்கு உங்க வீட்ல உள்ளவங்களுக்கு எவ்ளோ சிரமம்னு தெரியுது. ஸாரி அங்கிள்” என்றான்.

இந்த இடம் தன் மகளுக்கு முடியும் என நினைத்தார்தான். ஆனால் அதிக நாள் நம்பிக்கை இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ஓரளவு உறுதியாகும் படி சொல்லியிருந்தார் புகழேந்தி.

அவசர பட்டு அசோக்தான் மாப்பிள்ளை என்றெல்லாம் மகளுக்கு உறுதியும் தந்திருக்கவில்லை. எனக்கு பிடித்திருக்கிறது, ‘நீயும் பார், பேசு பின் உன் விருப்பத்தை சொல்’ எனதான் சொல்லியிருந்தார். முதலிலேயே தெரிந்து விட்டதால் மகள் ஏமாந்து போக மாட்டாள் என மனதை திடப் படுத்திக் கொண்டார்.

அசோக் மீது கோவமில்லை, ஆனால் “உங்கப்பாக்கு இது தெரிஞ்சும் இங்க அழைச்சிட்டு வந்திருக்கார்னா என்னை பத்தி என் குடும்பம் பத்தி என்ன நினைச்சிட்டார் அவர்?” என மென்மையாகவே கோவப்பட்டார்.

“நேத்துதான் அங்கிள் இந்த பேச்சு வார்த்தை எனக்கு தெரியும். இன்னிக்கு இந்த ஃபங்ஷனுக்கு அப்பா கூப்பிடாட்டா காலையிலேயே உங்களை பார்க்க வந்திருப்பேன். நீங்க யாரும் ஹர்ட் ஆகிட கூடாதுன்னுதான் உடனே சொல்லிட நினைச்சேன். அப்பாவுக்கும் உங்களை ஏமாத்த எண்ணம் இல்லை. ஆனாலும்…” என்றவன் அப்பாவின் செயலை நியாய படுத்தாமல் இன்னொரு முறை மன்னிப்பு கேட்டான்.

அடக்கமான, தன்மையான அவனது சுபாவம் அவரை மிகவும் கவர்ந்தது. நாட்கள் கடத்தாமல் தன்னை பற்றி தன் மகளின் மனநிலை பற்றியெல்லாம் யோசனை செய்திருக்கிறானே என அவன் மீது நல்ல அபிப்ராயம் கொண்டார்.

“விடுப்பா, யாருக்கு யாருன்னு நாம முடிவு செஞ்சா போதுமா? ஆண்டவன் நிர்ணயம் செய்றதுதானே எல்லாம்” என பெருந்தன்மையோடு சொன்னார்.

அவரது கைகளை பிடித்துக்கொண்டு அவரின் புரிதலுக்காக நன்றி சொன்னவன், “உங்க பொண்ணை பிடிக்கலைன்னு நான் சொல்லலை, வேற எந்த பொண்ணையும் பிடிக்கும்ங்கிற கட்டத்தை நான் கடந்து வந்திட்டேன்னு அவங்ககிட்ட சொல்லுங்க அங்கிள்” என்றான்.

அவருக்கு பேச்சே வரவில்லை.