அத்தியாயம் 5

தனதறையில் சிலை போல் அமர்ந்திருந்தாள் ஷஹீரா. எட்டு வயது வரை கலகப்பாக பேசும் குழந்தைதான் ஷஹீ. ஏன் “வாயாடி…” என்று செல்ல பெயர் எடுத்தவளும் கூட. தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் இல்லை யார் கூட வேண்டுமானாலும் வாயாடும் சுட்டிக் குழந்தை அவள்.

ஐந்து வயதில் ரஹ்மானை சந்தித்த பொழுது அவள் கலகல பேச்சுதான் அவனுக்கு பிடிச்சிருந்திருக்கும். அப்படி இருந்த ஷஹீ மாறிப்போனதுக்கு காரணம் அவள் தந்தை.

திடீரென வாப்பா வேறு திருமணம் செய்து தங்களை விட்டு சென்றதில் வாப்பாவை தேடி அழுபவளை பேகம் சமாதானப்படுத்த முடியாமல் தடுமாற பாசமாக இருந்த தந்தை விட்டு சென்றதும் தன்னுள் இறுகி இருந்த முபாரக் ஷஹீயை தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தான். அழுது கொண்டிருக்கும் அன்னை, அடிக்கும் அண்ணன் முறையிட தந்தையுமில்லாமல் அழுது கரையலானாள் ஷஹீரா.

முபாரக் தங்கையிடம் அவ்வளவு பாசமாக இருப்பவன். விளையாட்டுக்கு கூட அவளை அழ வைக்க விரும்பாதவன் அன்றுதான் அடிக்க ஆரம்பித்த முதல் தடவை. தந்தையை பற்றி எப்போ பேச்செடுத்தாலும் அண்ணனிடமிருந்து அடி விழுவதால் தந்தையை பற்றி பேச வாய் திறக்காதவள் பேசுவதையும் மறந்து தன்னுள் ஒடுங்கினாள்.

அறியாத வயதில் தந்தையை பற்றிய கேலியும் கிண்டல்களும் அவள் மனதை காயப்படுத்த வீட்டில் சொல்லி ஆறுதல் தேடவும் பிடிக்கவில்லை. அது அவளை இன்னும் ஒடுக்க பேசுவது முற்றிலும் குறைந்தது. ஆனால் அவள் அறியாதது அவளை ரோட்டில் கிண்டல் செய்தவர்களுக்கு ரஹ்மான் செமத்தியாக அடிகளை பரிசாக கொடுத்தான் என்பதே! 

தேவைக்கு பேசுபவள் எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் ஹிதாயாவோடு கொஞ்சம் ஒட்டிக்கொண்டாள். ஹிதாயா பேசிப்பேசியே பேச வைத்தாள். அதனால் மனம் திறந்தவள் அவளோடு மட்டும் ஒன்றிவிட்டாள். ரஹ்மானால் நடந்த பிரச்சினையை ஹிதாவுக்கு தெரிந்திருக்கும் அதை கேட்கத்தான் அலைபேசி அழைப்பு விடுத்திருப்பாள் அலைபேசியில் பேசி அது முபாரக் காதில் விழுந்தால் மேலும் ஒரு பிரச்சினை வீட்டில் வெடிக்கும் என்பதால், நேரில் பேசலாம் என்று இருக்க புதுப் பிரச்சினையாக மாப்பிளை வீட்டிலிருந்து வந்திருந்தார்கள்.

“வந்த காதரும் நல்லவன்தான் படிக்க சொல்லி கல்யாணம் வேண்டாம் என்றான். ஆனால் அந்த ரஹ்மான் உள்ள வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான்” ஷஹீயின் மனம் ரஹ்மானை வசை பாட

“அவனும் நீ படிக்கட்டும் அப்பொறம் கல்யாணம் செய்து கொள்கிறேன்னு தானே டி சொன்னான்” மனம் தருணத்தில் ஞாபகப்படுத்த

“ஆமா பெரிய கொடைவள்ளல் உமர் கத்தாப் {ரலி} வம்சாவழி அவரு என்ன படிக்க சொல்லுறாரு. அவன் உள்ள வராம இருந்திருந்தாவே காதர், நாநா கிட்ட பேசி என்ன ஸ்கூலுக்கு அனுப்பி இருப்பாரு. இப்ப கல்யாண பேச்சும் ஊர் பூரா பரவி ஸ்கூல்ல அவன் பேர சொல்லி என்ன கிண்டல் பண்ணி கூப்பிட போறாங்க” அவள் வயதுக்கு பெரிய பிரச்சினை இதுவாக இருக்க, மனசாட்ச்சியை முறைத்தவள் பத்து வருட லவ் என்று ரஹ்மான் சொன்னது ஞாபகத்தில் வரவே

“பத்து வருஷமா லவ் பண்ணுறாராமே! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். பத்து வருஷத்துக்கு மேலா நாநா கூட சண்டைனு அடிச்சி சொல்லலாம். அத மனசுல வச்சி கிட்டுதான் எதோ பிளான் பண்ணுறான். இது அக்பர் மாமாக்கு புரியாம இருக்கலாம், நாநா ஏன் பேசாம இருக்கான்னுதான் புரியல” ஷஹீ இவ்வாறு சிந்திக்க ரஹ்மானின் மேல் அச்சம்தான் வந்தது.

ஷஹீராவை பின் தொடர்வது அவளுக்கு தெரிந்திருக்கவுமில்லை. தற்செயலாக அவனை கண்டாலும் அது அவளை பின் தொடர என்று அவள் நினைக்கவுமில்லை. முபாரக்குக்கும் ரஹ்மானுக்கு சிறு வயதிலிருந்தே ஆகாது என்பதால் ஷஹீ ரஹ்மானை பற்றி தவறாக எண்ணலானாள்.

காதரோடு பேசியவைகளை அவள் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் தலை குனிந்தே இருந்ததில் ரஹ்மானின் கண்களில் இருந்த காதலை காணத்தவரினாள் ஷஹீ. இதனாலயே அவன் மனம் கஷ்டப்படும் படி பேசி வைக்க போகிறாள்.

காதர் தனியாக பேச வேண்டுமா என்று கேட்ட பொழுதாவது ரஹ்மான் ஷஹீயிடம் பேசி இருந்திருக்க வேண்டும். தன் காதலை புரிய வைத்திருக்க வேண்டும். அவன் கொடுத்த காத்தாடி அவளறையில் இருப்பதைக் கண்டு அவளும் அவனை விரும்புவதாக எண்ணி விட்டான். அது அவன் செய்த முதல் தவறு என்றால் திருமணத்துக்கு சம்மதமா என்று கேட்காதது இரண்டாவது தவறு.

காதலிக்கும் பெண். அதுவும் பத்து வருடங்களுக்கும் மேலாக மனதில் சுமப்பவளை திருமணம் செய்ய அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான் ரஹ்மான்.

ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி பார்த்துக்

கொண்டே பிரிந்திருந்தோம்

சோ்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா

மறு பாதி கதவு நானடா

தாழ் திறந்தே காத்திருந்தோம்

காற்று வீச பார்த்திருந்தோம்

நீ என்பதே நான்தானடி

நான் என்பதே நாம் தானடி….. ஹே

ரஹ்மானால் நம்பவே முடியவில்லை. காதலை சொன்ன போது கலவரம் வெடித்திருக்க, இன்று கல்யாண பேச்சில் வந்து நின்றிருந்தது அவன் காதல். மனசு முழுக்க பரவசம் ஊடுருவ வண்டியில் பறந்தவனை வழி மறித்தான் அஸ்ரப்.

“டேய் நில்லுடா… உன்னால எனக்கு நிம்மதி போச்சு. பவாஸ் போன் பண்ணி நீ கோபமா முபாரக் வீட்டுக்கு போனதா சொன்னான். ஹாஸ்பிடல்ல இருந்து என்ன எதுன்னு பதறியடிச்சு கிட்டு வந்தா நீ வேற உலகத்துல வண்டிய ஒட்டி கிட்டு இருக்க. பாத்துடா எங்கயாச்சும் போய் மோதினா நேரா சுவர்க்கம்தான்”

“அஸ்ஸலாமு அலைக்கும்டா நண்பா…” என்ற ரஹ்மான் வண்டியை விட்டு இறங்கி அஷ்ரப்பை நடு ரோட்டில் ஆரத்தழுவிக்கொள்ள

“வாலைக்கும் ஸலாம். டேய் மூச்சு முட்டுதுடா… முபாரக் வீட்டுக்கு போனியே! அவன் உன் மண்டைல அடிச்சிட்டானா” என்றவாறே ரஹ்மானின் தலையை பார்க்க

“இன்னைக்கி அடங்கித்தான் இருந்தான். என்னனு தெரியல”

“அங்க என்னதான் டா நடந்தது  சொல்லித்தொல”

“இப்போ நீ எங்க போய் கிட்டு இருக்க?”

“உன்ன காப்பாத்தத்தான் வேற எங்க?” அஸ்ரப் கடுப்பாக சொல்ல

“சரி வா வீட்டுக்கு போலாம்” என்ற ரஹ்மான் அஷ்ரப்பை வீட்டுக்கு அழைத்து சென்றான்.

வீட்டில் ஜமீலா அன்னையிடம் நடந்தவைகளை கேட்டறிந்து  தம்பியின் மேல் கோபத்தில் பொரிந்துக்கொண்டிருக்க

“இங்க பாரு ஜமீலா ரஹ்மான் வந்ததும் சத்தம் போட்டு பிரச்சினை பண்ணாத, என்ன எதுன்னு மெதுவா விசாரிக்கலாம் சரியா?” வசீம் தன்மையாக சொல்ல

“ஆமா ஆமா உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணான்னு அவன் லவ்வுக்கு சப்போர்ட்டா?” ஜமீலா கழுத்தை நொடிக்க

“ஆமா டி அப்படி நீ என்ன உருகி கரைஞ்சி லவ் பண்ணி நாம ரெண்டு பேரும் லவ் பார்ட்ஸ் மாதிரி பறந்து திரிஞ்சோம் பாரு. உன் கிட்ட பேச ட்ரை பண்ணதுக்கே சட்டையை புடிச்சி என்ன லவ்வானு கேட்டு உனக்கு பிடிச்சிருக்கானு உன்ன விசாரிச்சு, நேரா வீட்டுல வந்து பேச சொன்னான். பேசி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இதுல அவன் எனக்கு எங்க சப்போர்ட் பண்ணான்?” வசீம் கோபமாக பேச

“பின்ன.. முன்ன பின்ன தெரியாதவன் கிட்ட அக்காவை பேச விட்டுட்டு வேடிக்கை பார்ப்பங்களாக்கும்”

“ஆமா டி… நான் லவ் பண்ணுற பொண்ணு கிட்ட என்ன பேச விடல. ஆனா அவரு மட்டும் அவரு லவ் பண்ணுற பொண்ண பார்க்க ரோட் ரோடா அலைவாராம் வரட்டும் இன்னைக்கி பேசிக்கிறேன்” மனைவியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவன் நொடியில் மாறியதில் அடங்கினாள் ஜமீலா.

“இங்க பாருங்க அது அவன் வாழ்க பிரச்சினை. உங்களுக்குத்தான் பிரச்சினை இல்லாம கல்யாணம் ஆகிரிச்சில்ல. அவன் வந்தா என்ன எதுன்னு விசாரிச்சு ஆகா வேண்டியதை பாருங்க”

 “அப்படி வாடி வழிக்கு என் மொளகா பஜ்ஜி நான் உன் தம்பிக்கு சப்போட் பண்ணா எகிறுற. அதுவே திட்டினா விட்டு கொடுக்க மாட்டிங்களோ! பாசக்கார குடும்பம்யா… நான் வந்து மாட்டிகிட்டு முழிக்கிறேன்” வசீம் மனைவியை மனதுக்குள் செல்லமாக முறைக்க

“என்ன வசீம் பாய்  அக்கா கூட சண்டை போடுறீங்களா? அங்க தெரு வரைக்கும் கேக்குது. என்ன பிரச்சினை?” என்றவாறு உள்ளே வந்த அஸ்ரப் “அக்கா ஏதாவது பிரச்சினைனா சொல்லுங்க உங்க வீட்டுக்காரரை ஒரு வழி பண்ணிடலாம்”

“முதல்ல வீட்டுக்குள்ள வரும் போது ஸலாம் சொல்லி கொண்டு வாடா… எங்க போய் சுத்திட்டு வரியோ ஷைத்தானையும் கூடவே கூட்டிட்டு வார வீடு விளங்குமா?” ஜமீலா முறைக்க

“ஆமா அக்காவும் தம்பியும் பண்ணுறது பத்தல இதுல நீயும் கூட்டு சேந்துட்டியா?”  வசீம் அஷ்ரப்பை முறைக்க  

“அது சரி உங்க தம்பியோட இருக்குற வரைக்கும் சைத்தான் என்ன அவன் வாப்பா இப்லீஸ் கூட கிட்ட வரமாட்டான். எல்லா பிரச்சினையையும் அவனே இழுத்துக்கொண்டு வருவான். இப்போ கூட அக்பர் பாய் வீட்டுக்கு போய்ட்டுதான் வாரான்” உள்ளே நுழைந்த ரஹ்மானை பார்த்தவாறே கூற

பதறியவாறு ஜமீலா ரஹ்மானின் அருகில் வர அமர்ந்திருந்த  வஸீமும் சோபாவிலிருந்து எழுந்தவன்

“என்ன மச்சான் பிரச்சினை?”

அஷ்ரப்பை முறைத்தவாறே ரஹ்மான் “ஒன்னும் இல்ல மச்சான்…. எல்லாம் நல்லபடியா தொடங்கிருச்சு” விரிந்த புன்னகையோடு சொல்பவனை வித்தியாசமாக பார்த்தனர் மூவரும்.

“முறைக்குறதுக்கு போட்டி வச்சா இவங்க குடும்பம் பஸ்ட்டு ப்ரைஸ் வாங்கும் போல” மனதில் நினைத்த  அஸ்ரப்

“என்னடா ஆச்சு உனக்கு எல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சுனு தானே சொல்வாங்க. கண்டிப்பா அந்த முபாரக்கிட்ட நீ செமத்தியா வங்கிட்ட போல”

“அட போடா… பானுவோட எக்ஸாம் முடிஞ்ச பின்னால குடும்பத்தோட வந்து பொண்ணு கேக்க சொல்லிட்டாங்க” ரஹ்மானின் முகம் எல்.இ.டி பல்ப் போல் பிரகாசமாக ஜொலிக்க

“டேய் என்னடா சொல்லுற?” ஜமீலா சந்தோசமாக கேட்க அழகாக வெட்கப்பட்டான் ரஹ்மான்.

குளித்து விட்டு வந்த ரஸீனா இவர்கள் பேச்சைக் கேட்டவாறு வந்து “முதல்ல வந்து சாப்பிடு”

அன்னையின் குரலை வைத்தே கோபமாக இருப்பதாக புரிந்து கொண்ட ரஹ்மான் ஓடிச்சென்று அன்னையை கட்டிக்கொண்டவன் கன்னத்தில் முத்தமிட்டு சமாதானப்படுத்தியவாறு பானுவின் வீட்டில் நடந்ததை கூற மகனுக்கு பரிமாறியவாறே

“உனக்கு பிடிச்சிருந்தா எங்க கிட்ட சொல்லி இருக்கணும் இல்ல. அந்த புள்ள கிட்ட பேச போய் வீண் பிரச்சினையாச்சே! நீயே வந்து சொல்லுவனு பார்த்த சொல்லல. அந்த அளவுக்கு உம்மா உனக்கு வேண்டாதவளாக்கிட்டாளா?” ரஸீனா கண்ணை கசக்க வாசலில் அமர்ந்திருந்த மூவரும் உள்ளே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே! ஒழிய எதுவும் பேசவில்லை.

“சொல்ல வேணாம்னு எதுவும் இல்ல உம்மா.. முதல்ல பானு கிட்ட பேசணும்னு”

“அதென்ன பொம்பள புள்ள கிட்ட பேசுறது? ஊரு உலகத்துல இல்லாதது. மரியாதை என்று ஒன்னு இருக்கில்ல. வீட்டுல சொல்லி பொண்ணு வீட்டுல போய் பேசி ஒழுங்கா நடக்கணுமில்ல. நீ என்ன ஆம்புள புள்ள உனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. அது பொம்பள புள்ள பேர் கெட்டிடுமே! யோசிக்க வேணாம்”

“ஊரு உலகத்துல நடக்குறது மாமிக்கு தெரியல பாவம்” அஸ்ரப் மெதுவாக சொல்லி சிரிக்க ஜமீலா முறைத்தாள்.

“நான் வீட்டுல சொல்லலாம்னு தான் சொன்னேன். இவன் தான் என்ன இழுத்துக்கொண்டு போனான் உம்மா” என்று அஷ்ரப்பை மாட்டி விட

“அடேய் ஸ்கூல் வாசலுக்கு என்ன இழுத்து கொண்டு போனது நீ. லவர்ஸ்ல கார்ட் வாங்கினது நீ. பானுகிட்ட ஐ லவ் யு சொன்னது நீ. இதுல நான் எங்க வந்தேன்” அஸ்ரப் கோபமாக பேச ரஹ்மானின் தம்பி பாஷித் உள்ளே நுழைந்தான்.

“வாடா நீயாச்சும் யாரையாவது லவ் பண்ணுறதா இருந்தா உன் உம்மா கிட்ட சொல்லிடு. எங்க கழுத்த அறுக்காத. வீட்டுக்கு வந்தவனுக்கு ஒரு டீ போட்டு கொடுக்கல. குத்தம் சொல்ல கிளம்பிட்டாங்க” அஸ்ரப் கோபமாக சொல்லி விட்டு செல்ல வசீம் சிரிப்பை அடக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்க பாஷித் என்ன நடந்தது என்று அக்காவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

ரஸீனாவோடு பிறந்தவர்கள் ஆறு பேர். நவ்பர் பாயோடு பிறந்தவர்கள் எட்டு பேர். ஆகா மொத்தத்தில் ரஹ்மானின் குடும்பம் பெரிய குடும்பம்.

ரஹ்மான் ஒரு பெண்ணை விரும்புவதாக கேள்விப்பட்டு ஒவ்வொருத்தராக வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்திருந்தனர்.

நவ்பர் பாயின் குடும்பத்தில் எது நடந்தாலும் முன் வருபவர் நவ்பர் பாயின் அக்கா ஷம்ஷாத். நவ்பர் பாயை வளர்த்தவர் அவர். அன்னை சிறு வயதில்லையே இறந்து போக அக்கா தான் அனைவரையும் அன்னையாய் அரவணைத்து திருமணமும் செய்து வைத்திருந்தார்.

நவ்பர் பாயோடு சேர்த்து அவருக்கு சகோதரர்கள் ஆறு பேரும் ஒரு தங்கையும் தான். நவ்பர் பாய் நான்காவது தம்பி. தம்பியின் மனைவிமார்களிலையே ரஸீனாவைத்தான் அவருக்கு பிடிக்கும்.

அதற்கு ஒரே காரணம் திருமணம் செய்து அனைவரும் கூட்டுக் குடும்பமாக அக்கா வீட்டில் தான் இருந்தார்கள். பகல் சாப்பாடு மட்டும் தான் ஒன்றாக சமைப்பார்கள். மற்ற இரண்டு வேலையும் அவரவர் வெளியே சாப்பிட்டுக்கொள்வார்கள் அல்லது சமைத்துக்கொள்வார்கள். அப்படி இருக்கும் பொழுது எந்த நாளும் இரவில் நவ்பர் பாய் வாங்கி வருவதை ஷம்ஷாத்தின் குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டுத்தான் சாப்பிடுவாள் ரஸீனா.

அவளின் இரக்க குணமும், அன்பும் ஷம்ஷாத்தை பெரிதும் கவர தங்கையாகவே நினைத்து சில புத்திமதிகளை கூற அதை ஏற்றுக்கொண்ட ரஸீனா இன்றும் ஷம்ஷாதோடு சுமூகமான உறவில் இருக்கிறாள்.

ரஸீனா தன் குழந்தைகளையும் ஒழுக்கமானவர்களாக, மார்க்கப்பற்றோடு வளர்ப்பவள் என்று தெரியும். பொறுப்பான பையன் என்ற நல்ல பெயர் இருப்பதால் ரஹ்மானின் மேல் ஷம்ஷாத்துக்கு அதீத அன்பு. ரஹ்மான் இப்படியொரு காரியம் செய்தான் என்பதையே முதலில் நம்ப மறுத்தவர் வீடு தேடி வந்து விசாரிக்கலானார்.

அவர் அங்கு வரும் போது ரஸீனாவின் அக்காவும் தங்கையும் இருந்தார்கள். ரஷீனாவுக்கு இரண்டு அக்கா ஒரு தங்கை ஒரு அண்ணன். ஒரு தம்பி. ஏழ்மையான குடும்பத்து பெண். தந்தையில்லாமல் வளர்ந்தவர்கள். அக்கா தங்கை என்று அனைவரும் மார்க்கப்பற்றோடு இருப்பவர்கள். ரஸீனாவின் பிள்ளைகள் எவ்வாறோ அவ்வாறே அவர்களின் பிள்ளைகளும். ஒரே தோட்டத்து மரங்கள் போல் குணங்களும் ஒரே மாதிரி இருந்தன.

இரண்டு குடும்பத்திலும் சொந்தத்தில் திருமணம் முடிக்கவுமில்லை. அதனால் குழந்தைகளின் மனதில் சொந்தத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை. சகோதரர்கள் போல் பழகுவதால் ஒருவருக்கு ஒரு பிரச்சினை என்றால் மற்றவர் முன் நின்றனர்.

கேலி, கிண்டல் இருந்தாலும் காதல் என்று யாரும் வந்து நின்றதில்லை. இதுவே முதல் தடவை. அதுவும் ரஹ்மான் இப்படி செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

நவ்பர் பாயின் குடும்பம் மொத்தமும் இதே ஊரில் இருப்பதால் எது நடந்தாலும் தகவல் உடனடியாக அனைவருக்கும் சென்று விடும். ஷம்ஷாத்தின் மகன் வழி பேரனுக்கு உடம்பு முடியாமல் போனதால் உடனடியாக வரமுடியாமல் போக இன்று வந்திருக்க, விஷயமறிந்த வெவ்வேறு ஊருக்களிலிருந்து ரஸீனாவின் சகோதரிகளும் வந்திருந்தனர்.

“வாங்க மைனி அஸ்ஸலாமு அலைக்கும். உக்காருங்க” கீரையை சுத்தம் செய்தவாறே ரஸீனாவின் தங்கை அய்நா வரவேற்க செருப்பை கழட்டி விட்டு ஸலாத்துக்கு பதில் சொல்லியவாறே உள்ளே நுழைந்த ஷம்ஷாத்.

“எப்ப வந்தீங்க மைனி, சுகமா இருக்கீங்களா?” என்று நலம் விசாரிக்க ரஸீனாவின் அக்கா குல்தும் வர அவளிடமும் நலம் விசாரித்தவள் ரஸீனா எங்கே என்று கேட்க சமையலறையிலிருந்து வந்தாள் ரஸீனா.

“வாங்க மைனி. சாப்டீங்களா?” ஷம்ஷாத்தை வரவேற்றாள் ரஸீனா.

“சாப்பிட்டுத்தான் வந்தேன். ரஹ்மான் வீட்டுல இல்லையா?” வந்த உடனே ரஹ்மானை பற்றிய விஷயம் அறிந்து தான் வந்தேன் என்று குறிப்புக் காட்டினாள் ஷம்ஷாத்.

“ரஹ்மான் காலேஜ் போய்ட்டான் மைனி. அக்பர் பாய் குடும்பம் பத்தி உங்களுக்கு தெரியாதததா?” பேச்சை ஆரம்பித்து வைத்து விட்டு ஒதுங்கி அமர்ந்துகொள்ள

“பேகம் எங்க தூரத்து உறவுதான் நல்ல பொண்ணு. அவ புருஷன் விட்டுட்டு போனது ஒன்னும் அவ தப்பு கிடையாதே!” ஷம்ஷாத் சொல்ல

“அவரு எதுக்கு இவங்கள விட்டுட்டு போனாரு” குலத்தும் கேட்க

“ஏன் மைனி. என்ன இருந்தாலும் இந்த மாதிரி குடும்பத்துல பொண்ணு எடுத்தா நல்லா இருக்குமா? ஊருல நாலு பேர் நாலு விதமா பேசுவாங்களே!” அய்நா சொல்ல

யோசனையில் விழுந்த ஷம்ஷாத் “எனக்கு தெரிஞ்சு பேகத்தோட புருஷன் பேகத்தை விட்டுட்டு போகல. ஊரு பேசுறது போல இன்னொரு பொண்ண இழுத்துட்டும் போகல. சுனாமில பாதிக்க பட்டவங்கள பார்க்க போன இடத்துல அனாதையான ஒரு பொண்ண திடிரென்று வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாரு அதுதான் பிரச்சினையாகிருச்சு”

“என்ன சொல்லுறீங்க?” அய்நா கண்களை விரிக்க

“சுனாமில அந்த பொண்ணோட குடும்பமே இறந்துட்டாங்க இந்த பொண்ணு மட்டும்தான் உயிர் தப்பி இருக்கு. காப்பாத்தினவரு அங்கேயே காப்பகத்துல விட்டுடு வராம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. வீட்டுக்கே கூட்டிட்டு வந்தா பேகம் கொஞ்சம் யோசிக்க வேணாம் என்ன ஏதுனுனு விசாரிக்காம பிரச்சினை பண்ணிட்டா. அவளுக்கு நல்லத சொல்லவும் ஆளில்ல. சரியானவளா இருந்தா அந்த ஆனாத பொண்ண தம்பிக்கு கட்டி கொடுத்து இருந்திருப்பா புத்தி கெட்டு புருஷன் கூட சேர்த்து வச்சி பேசப் போய் அவரும் ஆமாம்னு சொல்லிட்டாரு அவ்வளவுதான் ரகள பண்ணி வீட்டை விட்டு போக சொல்லிட்டா”

“அல்லாஹ்ட காவல்”

“கட்டின பொண்ணாடியே பேசினா ஊர் சும்மா இருக்குமா? நாலு பேர் நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க. இவளும் புருஷன் வேண்டாம்னு விவாகரத்து செஞ்சி புள்ளைங்கள கூட பார்க்க விட மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா. இப்போ அவரு எங்க இருக்காருன்னு யாருக்கும் தெரியல”

“அப்போ அவரு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கலயா?”

“பண்ணிகிட்டாரா? இல்லையானு தெரியல. அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லாம இருந்திருக்கலாம். இவ பேசியே உண்டு பண்ணி விட்டதால அநேகமா பண்ணி இருப்பார்னுதான் பேசிக்கிறாங்க” ஷம்ஷாத் சொல்ல

“பொம்பளைங்க சரியா யோசிக்காம பேசி, சரியா நடந்துக்கலைனா இப்படித்தான் நடக்கும்” குல்தூம் அங்கலாய்க்க

“பேகத்தையும் தப்பு சொல்ல முடியாது. எந்த பொண்ணும் புருஷன் கூட இன்னொரு பொண்ண பார்த்தா டென்ஷன் ஆகத்தான் செய்வா”  ஷம்ஷாத் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே உள்ளே நுழைந்த பாஷித் அடி நுனி தெரியாம

“நம்ம மார்கத்துலதான் நாலு கல்யாணம் பண்ண சட்டத்துல இடம் இருக்கே நான் குறைஞ்சது ரெண்டாவது பண்ணிக்கலாம்னு இருக்கேன். லவ் பண்ணி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன். அது என் விருப்பம். உம்மா அவங்களுக்கு பிடிச்சா மாதிரி பொண்ணு பார்க்கட்டும் அந்த பொண்ணையும் கட்டுகிறேன். எப்படி..” குறும்பாகவே சொல்ல

“நாலு கல்யாணம் பண்ண சட்டத்துல இடமிருக்கு என்பதற்காக எந்த மனைவியும் சம்மதிக்கவும் மாட்ட எந்த ஆணும் துணியவும் மாட்டான். ஒண்ண கட்டி ரெண்டு புள்ளய பெத்து அதுங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுறதுக்குள்ளயே நாக்கு தள்ளுது இதுல இன்னொரு குடும்பமா? ரெண்டு மனைவிக்கும் நடுவுல நீதமா நடந்துகொள்ளல மகனே மறுமைல உனக்கு வேட்டுதான்” அய்நா முறைத்தவாறே சொல்ல

“நல்ல ஒழுக்கமான, அடக்கமான பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம். இதுல ரெண்ட கட்டி ரெண்டு பேருக்கும் ஒரேமாதிரி வீடு, நகை, நட்டு, துணிமணின்னு பண்ணாலும் சண்டை போடமா இருப்பாங்களா? பொம்பளைங்க பொம்பளைங்கதான்  சண்டகோழிங்க. எனக்கு கல்யாணமே வேணாம்”

“முதல்ல நீ போய் ஒழுங்கா படி. பொண்ணு நாங்க பாத்து தரோம்” பாஷித்தின் காதை திருகிய அய்நா சிரித்தவாறே “இல்ல ஒண்ணுக்கு ரெண்டா பாத்து வச்சிருக்கியா?”

“ஒண்ணுக்கே வழி இல்ல ரெண்டா… சும்மா சொல்லுறதெல்லாம் கப்புனு புடிச்சிக்கோங்க.. நீக்க எல்லாம் நாநா விஷயம் பேசத்தான் வந்தீங்க அத பேசுங்க நான் போறேன்” என்றவன் நழுவிக்கொள்ள

“எதுக்கும் இவன் மேல ஒரு கண்ண வை ரஸீனா.. ரஹ்மானே இப்படி பண்ணிட்டான் சின்னவனை நம்ப முடியாது”

வெளியேறிய பாஷிதின் காதில் இது விழ “தமாஷ் கூட பண்ண முடியல சீரியஸ்ஸாகிடுறாங்க. நாநா லவ் பண்ணாலும் பண்ணா என் சுதந்திரம் பறிபோகும் போல இருக்கே”

“சரி மைனி பொண்ண பத்தி ஏதாவது தெரியுமா?” அய்நா கேட்க

“புள்ளைங்க ரெண்டும் தங்கம்பா.. அழகா இருப்பா.. சின்ன வயசுல ஒரு கல்யாண வீட்டுல பார்த்த ஞாபகம். நம்ம ரஹ்மானுக்கு பொருத்தமா இருப்பா. சின்ன பொண்ணு ரஸீனா நீதான் கொஞ்சம் பொறுமையா நடந்துக்கணும்” ஷம்ஷாத் சொல்ல ரஸீனா கேட்டுக்கொண்டாள்.

“அப்போ அந்த குடும்பத்துல பொண்ணு எடுக்கலாம்னு சொல்லுறீங்களா?” குல்தூம் கேட்க

“குடும்பம் நல்ல குடும்பம்தானே இதுல என்ன யோசிக்க வேண்டி இருக்கு. நம்ம பையன் ஆச பட்டுட்டானே! கல்யாணத்த பண்ணி வச்சிடலாம்” ஷம்ஷாத் பச்சை கொடி காட்ட மற்ற பெண்களும் ஏற்றுக்கொண்டனர்.

நவ்பர் பாய்க்கு அக்கா சொன்னால் மறு பேச்சில்லை. ஆனால் மகனின் வாழ்க்கையில் முடிவுகளை அவன் எடுக்க வேண்டும் என்று விரும்புபவர் கல்யாணம் என்பது தனி ஒருவனின் விருப்பம் என்றாலும் குடும்ப நிம்மதியும் சந்தோஷமும் அடங்கி இருக்கும். வரும் மருமகள் குடும்பம் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். மாறாக குடும்பத்தில் கலகம் பண்ணினால் குடும்பம் சீர்குலையும். அக்பர் நல்லவன்தான் பேகத்தை பற்றியும் எந்த குறையும் சொல்ல கேட்டதில்லை. ரஹ்மானின் ஆசையும் முக்கியம். அக்கா என்ன சொல்வாளோ என்று வீடு வந்தவருக்கு நல்ல செய்தியே கிடைக்க நிம்மதியானார்.

பாஷித் ரஹ்மானை அழைத்து வீட்டில் நடக்கும் பஞ்சாயத்தை பற்றி கூற யோசனையாகவே வீடு வந்தவனை அமைதியான வீடே வரவேற்றது.

மாமி, சாச்சி. பெரியம்மா என்று அனைவரும் இருந்தாலும் வந்தவனை வா என்று நலம் விசாரித்து விட்டு எதுவுமே பேசாமல் இருக்கவும் அவர்கள் தன் மீது கோபத்தில் இருப்பதாக நினைத்தான் ரஹ்மான். எப்படி சமாதானப்படுத்துவதென்று ஒவ்வொருவிதமாக பேச்சுக் கொடுத்து பார்த்தும் யாரும் அசையவில்லை.

 “ஆஹா….. ஆளாளுக்கு முகத்தை  தூக்கி  வச்சிக்கிட்டு உக்காந்து இருக்காங்களே. பெருசுங்களே இப்படின்னா இளசுங்கள கொலை வெறில இல்ல இருப்பாங்க. அப்படி நான் என்ன கொலையாடா பண்ணி புட்டேன். காதல் தானேடா பண்ணேன்” ரஹ்மான் இவர்களை எவ்வாறு சமாளிப்பது  என்று யோச்சிக்க காதல் கொலை செய்வதை விட கொடியது என்று அவன் பானுவே அவனுக்கு உணர்த்த காத்துக்கொண்டு இருக்கிறாள் என்று அவன் அறியவில்லை.

அவன் பேச்சு கொடுக்க முயற்சிப்பதும் இவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் மாலை வரை நீடிக்க இளசுகள் கூட்டமும் வந்து சேர்ந்து அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.

எங்கே? எப்போது? பார்த்தாய்? எப்படி காதலிக்க ஆரம்பித்தாய்? என்றெல்லாம் கேள்விகளை கேட்டு குடைந்தெடுக்க வேறு வழியில்லாது ரஹ்மான் கதை சொல்ல. இவனுக்கு முத்திருச்சு சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க என்று கேலிதான் செய்தனர்.

இத்துணை வருஷமா சொல்லாதத திடிரென்று ஏன் சொல்ல தோணியது? அதனால எவ்வளவு பிரச்சினை? வீட்டுல சொல்லி இருக்கலாமே! என்று ரஹ்மானை விட பெரியவன் ஒருவன் சொல்ல கொஞ்சம் பேர் ஆமோதிக்க, கொஞ்சம் பேர் வீட்டுல சொன்னா அடித்தான் விழும் என்றனர்.

இதில் பெண்களும் அப்போ நாங்களும் லவ் பண்ணலாம்ல என்று கேள்வி எழுப்ப, ரஹ்மானே! அவர்களை முறைத்தான்.

“பார் டா… இவரு பண்ணலாமாம் நாங்க பண்ண கூடாதாம். நல்ல கதையாவல்ல இருக்கு?”

“பிடிச்சிருந்தா எங்க கிட்ட வந்து சொல்லு ஆள தூக்கியாவது கல்யாணம் பண்ணி வச்சிடுறோம் அத விட்டுட்டு ஊர் சுத்துனீங்க கால் ரெண்டும் இருக்காது”

கேலி கிண்டலோடு மிரட்டல்களும் அவ்விடத்தை அலங்கரிக்க, அடுத்து இரண்டு மாதங்களும் பானுவை தூரத்திலிருந்தே ரசிக்கலானான் ரஹ்மான்.