ஷஹீரா மருத்துவமனையிலிருந்து வந்து மூணு நாட்களுக்கு மேலாகியிருந்தது. பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என பேகம் அவளை வீட்டில் ஓய்வெடுக்க சொல்ல அவளும் மறுக்கவில்லை. பாடசாலை செல்ல பயமாக இருந்தது. ஊருக்கே விஷயம் தெரியும் பாடசாலையிலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். போனால் எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். கேலி செய்வார்கள் என்ற பயம் தான் ஓய்வெடுப்பதாக சொல்லி வீட்டிலையே அடைந்து கிடந்தாள்.
பரீட்ச்சையும் நெருங்கிக் கொண்டிருந்தது. படிக்கவும் மனம் வரவில்லை. ஹிதாயா கூட இரண்டு தடவை போன் செய்து பேசினாள் ஓய்வெடுப்பதாக சொல்லி பேச மறுத்தாள் ஷஹீரா. அவளின் இன்னொரு பயம் ரஹ்மான். வெளியே சென்றால் அவன் மீண்டும் பின்னால் வருவானோ என்ற பயம். ஆனால் பாவம் அவளை இனி பாடசாலைக்கு அனுப்ப போவதேயில்லை என்று முபாரக் முடிவெடுத்திருப்பதை அவள் அறியவில்லை.
மொட்டைமாடியில் ஹஸன் ருகையாவோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள் ஷஹீரா. மூன்று நாட்களாக அன்னை வித விதமாக சமைத்து ஊட்டி, செல்லம் கொஞ்சியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பழைய மனநிலைக்கு திரும்பியவள் இன்றுதான் தன்னைவிட ஆறு வயது சிரியவளான ருகையாவோடும், எட்டு வயது சிறியவனாக ஹஸனோடும் விளையாட சென்றாள். அவள் சென்றாள் என்பதை விட அவர்கள் தான் இவளை இழுத்துச் சென்றனர்.
பானுவின் வீட்டு பாதையின் வளைவில் மாமரத்தின் நிழலில் வண்டியை நிறுத்திய ரஹ்மான் மறைவாக இருந்து கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான். வளைவோ மேடாக இருக்க, அவளின் இடுப்புக்கு மேல் தான் அவனால் பார்க்க முடியும். ஐம்பது அடி இடைவெளியில் அவள் முகம் தெளிவாக தெரியுமோ என்னவோ! பானுவின் நிழல் தெரிந்தால் கூட ரசித்துப் பார்ப்பான் இந்த ரஹ்மான். தன் துப்பட்டாவால் கண்களைக் கட்டிக்கொண்டு மாமா பசங்களை பிடிப்பதில் மும்முரமாக இருந்தவளின் சிரிப்பு சத்தம் அவன் காதில் சங்கீதமாய் ஒலிக்க அவன் அதரங்களும் மலர்ந்தன.
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
மருத்துவமனையிலிருந்து அஸ்ரப் ரஹ்மானை இழுத்துக்கொண்டு வந்து நேராக விட்டது அவன் வீட்டில் தான்.
இரத்த காயங்களோடு வீடு வந்த மகனைக் கண்டு ரஹ்மானின் அன்னை ரஷீனா பதற வரும் போது வண்டியிலிருந்து விழுந்து விட்டதாக சொன்னான் அஸ்ரப்.
ஷஹீராவின் விஷயம் அரசால் புரசலாக அன்னையின் காதுக்கு வந்தாலும் மகனிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. மாறாக கணவனிடம் கேட்டு வைக்க “நம்ம பையன பத்தி உனக்கு தெரியாதா?” என்று நவ்பர் பாய் அவளின் வாயை அடைத்து விட மகளுக்கு அலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ரஷீனா முறையிட்டிருந்தாள்.
அழுது கரைந்தவாறே ரஷீனா மருந்திட அன்னையை தேற்றியவன், பானுவின் நினைவுகளில் தூங்கியும் போனான். மாலை மருத்துவமனை வாசலில் நின்று அவள் வீடு செல்வதை பார்த்தவன் தான் அதன் பிறகு அவளை அவனால் பார்க்க முடியவில்லை.
உடம்பு முடியாதவள் பாடசாலை வர மாட்டாள் என்ற ஞாபகம் கூட இல்லாமல் வழக்கமாக அவள் வரும் பாதையில் தவமிருந்தவன் அவளை காணாமல் பெரிதும் ஏமாற்றமடைய, அக்பர் தனது இரு குழந்தைகளையும் வண்டியில் கொண்டு வந்து விடவும் தான் ஷஹீரா பாடசாலை வர மாட்டாள் என்பதே! புத்தியில் உரைத்தது. வண்டியை எடுத்துக்கொண்டு ஷஹீராவின் வீட்டுப் பக்கம் இரண்டு தடவை வட்டமடித்தான். ஆனால் பானு அவன் கண்களில் சிக்கவில்லை.
வேறு வழியில்லாது கறிக்கடைக்கு கிளம்பியவன், அங்கிருந்து ஷெட்டுக்கு போகும் போதும் வண்டியை எடுத்துக்கொண்டு வந்தது கொஞ்சம் நேரம் ஷஹீராவின் வீட்டையே பாத்திருந்தான். அவள் வெளியே வருவது போல் தெரியவில்லை.
ஆட்டோவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்க மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான் ரஹ்மான்.
சொந்தமாக ஒரு ஆட்டோ வைத்திருக்கின்றான். ஷார் ஆட்டோ போல் பெரிதாக இருப்பதால் சவாரிக்காக அதை ஓட்டாமல். சில மினி ஹோட்டல்களுக்கு பொருட்களை விநியோகம் செய்வது, வீடுகளுக்கு விநியோகம் செய்வது என்பதை மாத்திரம் செய்வான்.
இந்த எண்ணம் அவனுக்கு வந்தது உண்மையில் கறியை கொண்டு செல்ல வண்டி வேண்டும் என்று வாங்கிய பின் தான். சிலர் தம்பி இதை கொஞ்சம் வீட்டில் கொடு, ஹோட்டலில் கொடு என்று கேட்க அதையே நாம் ஏன் வேலையாய் பார்க்க கூடாது என்று தோன்ற தரமான சில்லறை பொருட்கள், பழங்கள், மரக்கறிவகைகள் என எல்லாம் முன் தினமே வாங்கி விநியோகம் செய்ய இரட்டிப்பு லாபம். நவ்பர் பாயும் மகனின் புத்தி கூர்மையை எண்ணி மெச்சிக்கொண்டவர் அதன் பின் அவனை அவன் போக்கில் விட்டு விட்டார்.
ஷெட்டில் வேலை பார்ப்பது கூட பொழுதுபோக்குக்காக, இதைத்தான் பிரதானமாக செய்து கொண்டிருக்கிறான். இரண்டு நாட்களாக இந்த நிலமை நீடிக்க பானுவை கண்ணில் கூட காணாமல் தூக்கமும் தூர ஓட இன்று அவளை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று தான் மாமரத்தடியில் தவமாய் தவமிருந்தான். இன்று அவனை ஏமாற்றால் அவன் தேவதை அவனுக்கு தரிசனம் தந்து விட மலர்ந்த முகமாக அவளையே கண்சிமிட்ட மறந்து பார்த்திருந்தான் ரஹ்மான்.
கண்ணாமூச்சி விளையாடியவர்கள் போதும் என்று நிறுத்த ஹஸன் வானில் பார்க்கும் காத்தாடியை காட்டி
“அங்க பாரு பட்டம் அழகா இருக்கு. நாமளும் பட்டம் விடுவோமா” என கண்களை விரிக்க
“எப்படி பானு மைனி துப்பட்டாவால் பட்டம் செஞ்சி பறக்க விட போறியா?” ருகையா கிண்டலடிக்க
அக்காவை முறைத்த ஹஸன் “நான் உம்மா கிட்ட காசு வாங்கி கடைக்கு போய் பட்டம் வாங்க போறேன்” என்றவன் சிட்டாக வீட்டுக்கு பறந்தான்.
“இவன் கேட்ட உடனே உம்மா காசு கொடுப்பாங்க நான் கேட்டா மட்டும் கொடுக்க மாட்டாங்க” ருகையா முகத்தை சுருக்க, ஆண் பிள்ளைகள் என்றால் மட்டும் சில அன்னைகள் சிறப்பு சலுகை செய்வது ஏன் என்று ஷஹீராவுக்கும் புரியவில்லை.
இருவரும் பேசியவாறு மொட்டை மாடியில் சுவரில் கை வைத்து வானத்தையும், ரோட்டையும் வேடிக்கை பார்த்திருக்க, மாமரத்தடியில் இருந்து ரஹ்மான் பானுவை பார்த்திருந்தான்.
ஹஸன் ரஹ்மானை தாண்டித்தான் கடைக்கு செல்ல வேண்டும். ஹஸன் வரும் பொழுது வழி மரித்தவன் எங்கே செல்கிறாய் என விசாரிக்க காத்தாடி வாங்க செல்வதாக ஹஸன் கூற அவனே அழைத்து சென்று மூன்று காத்தாடிகளை வாங்கிக் கொடுத்தான்.
ஹஸன் வேண்டாம் என்று மறுக்கவும் “நான் உனக்கு நாநா {அண்ணன்} முறைடா தம்பி வாங்கிக்க” என்றதும்
“நீங்க எங்களுக்கு சொந்தமா? அப்போ எதுக்கு முபாரக் மச்சான் உங்க கூட சண்டை போட்டாரு”
“அதெல்லாம் சும்மா.. இப்போ உனக்கு புரியாது நீ போ”
“இல்ல எனக்கு வேணாம். கண்டவங்க கிட்ட வாங்க கூடாதுனு பானு மைனி சொல்லி இருக்கா”
“நான் கண்டவனா” அந்த சொல்லே ரஹ்மானை பெரிதும் தாக்க, சிரித்தவாறே “இல்லடா தம்பி அது அவ மத்தவங்கள சொல்லி இருப்பா நான் என்றா அப்படி சொல்ல மாட்டா” எப்படியோ பேசி ஹஸனிடம் காத்தாடிகளை கொடுத்தனுப்பினான் ரஹ்மான்.
காத்தாடிகளோடு வரும் தம்பியை கண்டு குதூகலித்த ருகையா “மைனி இங்க பாருங்க ஹார்ட் பட்டம், கொக்கு பட்டம் கூட இருக்கு”
“ஹார் பட்டம் உங்களுக்கு. கொக்கு உனக்கு” என்று இதயவடிவானதை பானுவுக்கும், கொக்கு பட்டத்தை அக்காவுக்கும் கொடுத்த ஹஸன் பாம்பு பட்டடத்தை தான் வைத்துக்கொண்டான்.
“டேய் உம்மா மூணு பட்டம் வாங்க காசு கொடுத்தாங்களா? சூப்பர் டா…” என்றவாறு ருகையா தன் பட்டத்தை பறக்க விட அக்கா கேட்டது ஹஸன் காதில் விழுந்தாலும் காத்தாடியை பறக்கவிடும் ஆர்ப்பாட்டத்தில் பதில் சொல்லாது இருக்க, ஷஹீராவும் சந்தேகப்படாமல் காத்தாடியை பறக்க விட ஆரம்ப்பித்தாள்.
ரஹ்மானின் அலைபேசி அடிக்கவே இயக்கி காதில் வைத்தவன் இன்று ஷெட்டுக்கு வரமாட்டேன் என்று கூற அங்கிருக்கும் நண்பன் பவாஸ்
“ஆமா நீ வந்து என்ன வேலையா பார்க்க போற பார்த்திருக்கும் வேல சரியா இருக்கானு பார்த்துட்டு கல்லால இருக்குற காச கணக்கு பார்க்க போற. இதுக்கு நீ வந்தா என்ன? வரலைனா என்ன? ஆனாலும் காரணமில்லாம நீ வராம இருக்க மாட்டியே! வீட்டுல யாருக்காவது உடம்புக்கு முடியலையா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு முக்கியமான வேல வந்துச்சு, நாளைக்கு வரேன்” என்றவன் அலைபேசியை அனைத்து மீண்டும் பானுவை சைட்டைடிப்பதை தொடர்ந்தான்.
நேரம் சென்று கொண்டிருந்தது மாமரத்தில் சாய்ந்திருந்த ரஹ்மான் அசையாது வைத்த கண்வாங்காமல் பானுவையையே பார்த்திருக்க மீண்டும் அவன் அலைபேசி அடிக்க வேண்டா வெறுப்பாக இயக்கி காதில் வைத்தவன் தம்பி பாஷித் பேசவும் எரிச்சலோடு வினவ பொருட்களை விநியோகம் செய்ய நேரமாவதை ஞாபகப்படுத்த இன்னும் அரைமணித்தியாலத்தில் வருவதாக கூறி அலைபேசியை அனைத்தான்.
மூன்று நாட்களாக பானுவை காணாதது ஆசை தீர கண்களில் அவளை நிரப்பிக் கொண்டவனின் மனதில் நாளை பாடசாலை விடுமுறை அவளை நாளை பார்க்க முடியாமல் போய்விடும் என்று ஞாபகம் வர நாளையும் பட்டம் விட வருவாளா? தான் வாங்கிக் கொடுத்த பட்டம் அவளுக்கு பிடித்திருக்குமா? என்ற கேள்விகள் மனதில் எழ யோசனைக்குள்ளாகி இருந்தவன் நாளையும் இங்கே வர வேண்டும் என்ற முடிவோடு மீண்டும் பானுவை பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பட்டம் விட்டுக்கொண்டிருந்த பானு ருகையாவின் நூல் அறுந்து போகவும் அதை பிடிக்க எட்டிப் பிடித்திருக்க அவள் பார்வையும் மாமரத்தடியில் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவனின் மீது விழ காத்தாடியை ருகையாவிடம் கொடுத்தவள் அவன்தானா இவன் எனும் விதமாக ரஹ்மானை பார்க்கலானாள்.
ரஹ்மானை அடையாளம் கண்டு கொண்டவள் அச்சத்தில் மூளை மரத்துப்போக சிலையென உறைந்தவளின் கண்களோ அவனை விட்டு எங்கும் அசையவில்லை. ஆனால் இதய வடிவ காத்தாடியை விடாது பற்றிப் பிடித்திருந்தாள்.
பானுவின் பெரிய விரிந்த கண்கள் தன்னை பார்ப்பதைக் கண்ட ரஹ்மான் மலர்ந்த புன்னகையோயோடு கையை தூக்கி அசைக்க அவளில் உடலோ ஆட்டம் கண்டது.
இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிற, கால்கள் பலமிழந்து, யாராவது பார்த்து விட்டால்? மீண்டும் ஒரு பிரச்சினை வீட்டில் வெடிக்கும் என்ற அச்சம் நெஞ்சுக்குள் குளிர்ப்பரவ அது அவள் மேனியெங்கும் பரவி ஜுரம் வந்தவள் போல் நடுங்கலானாள்.
ருகையா அவளை உலுக்கவும், திகைத்து விழித்தவள் எதுவும் பேசாது படிகளில் தாவி இறங்கி வீட்டினுள் ஓடி தனதறையில் தஞ்சமடைந்தாள்.
கட்டிலில் தாவி எறியவள் கால்களை மடக்கி கைகளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தவாறு அமர்ந்துகொள்ள கையேடு வந்த காத்தாடி கட்டிலில் அனாதையாக கிடந்தது.
பானு தன்னை பார்த்து விட்டாள் என்ற சந்தோஷமும், நிம்மதியும், மனதை நிறைக்க பாடலொன்றை சீட்டியடித்தவாறு வண்டியை எடுத்தான் ரஹ்மான்.
இரவு சாப்பாடு உண்டு கொண்டிருந்த முபாரக் சாப்பிட்டவாறே அன்னையிடம் தங்கையின் திருமணத்தை பற்றி பேச
“ஏன் பா… அவளுக்கு என்ன வயசாகிருச்சுனு இப்போ கல்யாணம் பண்ணி அனுப்ப பாக்குற? படிக்குற புள்ள பா…”
“படிச்சி கிழிச்சதெல்லாம் போதும். ஸ்கூல் போக வேணாம். கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம்”
“அவசரப்படாதே! பா… அந்த நவ்பர் பாயோட மகன் பண்ணதுக்கு நம்ம ஷஹீ என்ன பண்ண?”
“அவ எதுவும் பண்ணிட கூடாதுன்னுதான் இந்த முடிவு. அவ படிச்சது போதும். கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம். அவன் ரெண்டு நாளா ஸ்கூல் கிட்ட நின்னு இருக்கான் மாமா கண்டிருக்குறாரு. அவன் அடங்க மாட்டான். என்ன பழிவாங்க அவன் என்ன வேணாலும் செய்வான். நாம தான் புத்திசாலித்தனமா நடந்துக்கணும். இவள இழுத்துட்டு ஓடிட்டா, வாப்பா மாதிரி பொண்ணும்னு ஊரே பேசும். அசிங்கமா போய்டும். இந்த பேச்செல்லாம் நமக்கு தேவ இல்ல. நான் சொல்லுறத கேளுங்க கல்யாணம் பண்ணி கொடுக்குறதுதான் சரியான முடிவு. மஸீஹா மாமியோட சொந்தத்துல மாப்புள இருக்கிறதா சொன்னாங்க யாரு? என்னனு விசாரிங்க. பொண்ணு பார்க்க வர சொல்லுங்க” என்றவன் கை கழுவி விட்டு தனதறைக்குள் நுழைந்து கொள்ள
தனதறையிலிருந்து எல்லாவற்றயும் கேட்டுக் கொண்டிருந்த ஷஹீரா வாயை மூடி அழ ஆரம்பித்தாள்.
தன் நிலமையை நினைத்து அழுது கரைந்தவள், இதெல்லாம் ரஹ்மானால் தான் என்று ஞாபகத்தில் வர மொத்த கோபமும் அவன் மேல் திரும்பியது. கோபித்து என்ன செய்ய? போய் அவனோடு சண்டை போடவா போகிறாள்? அவனை விட்டு எவ்வளவு தூரம் ஒதுங்கி இருக்க முடியுமோ! அவ்வளவு தூரம் ஒதுங்கி இருக்கத்தானே பார்ப்பாள்.
இன்று வீட்டின் அருகில் வந்தவன், நாளை வீட்டினுள்ளே வரமாட்டான் என என்ன நிச்சயம்? நாநா சொல்வதை போல் திருமணம் தான் இதற்கு தீர்வா? வேறு தீர்வே இல்லையா? என்னால் படிக்கவே முடியாதா? தன்னையே நினைத்து நொந்தவளின் பார்வை காத்தாடியின் மீது விழ அந்த இதய வடிவத்தில் ஒரு பக்கத்தில் ஆங்கில எழுத்து R ஓடு S பிணைந்திருக்க, மறு புறத்தில் A யோடு B பிணைந்திருந்தது.
அதைப் பார்த்தவளுக்கு ரஹ்மான், ஷஹீரா என்று தோன்ற தலையை உலுக்கிக் கொண்டவள், ஹஸன் வாங்கி வந்ததால் தற்செயலாக இருந்திருக்கும் என்று எண்ணியவள் தான் வீணாக சிந்திப்பதாக எண்ணலானாள். ஆனால் A யும் B யும் அப்துல், பானு என்பதை அவள் கணிக்க தவறினாள். கலங்கி இருந்த அவள் மனம் கணிக்க தவறியதால் ஹஸனை விசாரிக்கவில்லை. விசாரித்திருந்தால் நாளை நடக்க இருக்கும் கலவரம் நடந்தேறி இருக்காதே!
முபாரக்கிடம் பேசிய மஸீஹா மாப்பிள்ளை வீட்டில் பேசி இருக்க அவர்கள் என்று வேணாலும் பெண் பார்க்க வருவதாக சொல்லி இருந்தனர். ஷஹீராவை அந்த இரு குழந்தைகளின் தந்தையான காதருக்கு திருமணம் செய்து வைப்பது எப்படி என்று சிந்திக்கலானாள் மஸீஹா. அக்பரை கூட சம்மதிக்க வைக்கலாம் பேகத்தை சம்மதிக்க வைப்பதுதான் கடினம் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவள் பேகம் வீடு தேடி வரவும்
“வாங்க மைனி… வாங்க கீழ வீட்டுல இருக்கீங்க ஆனா எங்க வீட்டுக்கு வாறதே இல்ல” குத்தல் பேச்சென்று எடுத்துக்கொள்வதா? மனக்குறையாக சொல்கிறாள் என்று எடுத்துக் கொள்வதா?
இன்முகமாக பேகம் “மூட்டு வலி இருக்கில்ல மஸீஹா மைனி அதான் படி ஏற முடியிறதில்ல”
“ஆமால்ல… ஆனாலும் மூட்டு வலிய வச்சிக்கிட்டு படியேறி வந்திருக்கீங்கன்னா.. விஷயமில்லாமலையா இருக்கும்” அதே குத்தல்
“இல்ல மைனி அது சரிப்பட்டு வராது” மஸீஹா மறுக்க பேகம் ஏன் என்று கேட்கலானாள்.
“பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு. மனைவி இறந்துட்டா. இரண்டு குழந்தைகளோடு இருக்கான். பத்து வருஷம் வித்தியாசம் இருக்கும். நம்ம பொண்ண அவனுக்கு கொடுக்க வேணாம்” என்று முதலில் மறுப்பது போல் பேசியவள் “ஆனா பாருங்க மாப்பிள வீட்டுலையும் பொண்ண பத்தி விசாரிப்பாங்க, விசாரிக்கும் போது எங்களை பிடிக்காதவங்க அந்த நவ்பர் பாயோட பையன பத்தியும் சொல்லி நம்ம பொண்ணுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்குனு யாராவது சொன்னா? யாரும் பொண்ணெடுக்க மாட்டாங்க. காலத்துக்கும் வீட்டுலையே கிழவியா உக்காந்துட்டு இருக்க வேண்டியதுதான். அதுக்கு பிறகு இப்படி ஒரு சம்பந்தத்தை பார்த்துதான் முடிக்க வேண்டி இருக்கும். அதுக்கு பேசாம இந்த சம்பந்தத்தையே முடிச்சிடலாம். பையன் கை நிறைய சம்பாதிக்கிறான். சொந்த வீடு, வாகனம் இருக்கு. பள்ளிவாசலுக்கு போறான். ஐஞ்சி நேரமும் தொழுறான். சொல்ல எந்த குறையும் இல்ல” மூச்சு விடாமல் பேசியவள் பேகத்துக்கு அருந்த டீ போட சமயலறைக்குள் செல்ல யோசனையில் விழுந்தாள் பேகம்.
டீயோடு சேர்த்து பேகத்தின் புத்தியில் உரைப்பது நல்ல படியாக கல்யாணம் செய்து வைத்த பெண்களின் வாழ்க்கையிலையே ஊரில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருப்பதாகவும், இப்படி பேர கெடுத்து கிட்டு இருக்கிறாளே! உங்க பொண்ணு அவ வாழ்க நல்லா இருக்குமா? மனைவியை இழந்தவன் குழந்தைகளுக்காக ஷஹீராவை திருமணம் செய்தால் பொறுத்துப் போவான், என்று சொல்லி காதர் தெரிந்த பையன் என்பதால் கண்டிப்பாக ஷஹீயை நன்றாக பார்த்துக் கொள்வான் என்றும் கூறி பேகத்தை சம்மதிக்க வைத்து நாளைக்கே பெண் பார்க்க வர சம்மதமும் வாங்கிக் கொண்டாள் மஸீஹா.
பேகமும் இரு மனதாக சரியென்றவள் அக்பர் வந்தபின் அக்பரிடமும் பேச பையன் நல்ல பையன்தான் அவசர பட வேண்டாம் என்று சொல்ல மஸீஹாவோ தான் போன் செய்து நாளை வர சொன்னதாகவும் திரும்ப போன் செய்து வர வேண்டாம் என்று தன்னால் சொல்ல முடியாதென்று கோபப்பட பேகமும் ஷஹீயின் தலையெழுத்து போல் நடக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.
அன்றிரவு ஷஹீராவும் தூங்கவில்லை. பேகமும் தூங்கவில்லை. இருவரும் தங்களது சிந்தனையில் உழன்றுக்கொண்டிருந்தனர்.
பேகத்துக்கு தன் மகளை பெரிய வசதி வாய்ப்புள்ள இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. தன் வாழ்க்கையில் கிடைத்த கணவனை போல் அல்லாது நல்ல கணவன் அமைய வேண்டும் என்று தான் எண்ணினாள்.
கணவன் விவாகரத்து செய்ததில் தான் பட்ட கஷ்டங்கள் என்னவென்று நன்கு அறிந்தவள் அந்த நிலமை தன் மகளுக்கு வரவே கூடாதென்று தான் படிக்க வைத்தாள். ஷஹீராவும் நன்றாக படிப்பவள், அவள் விதி இவ்வாறு ஆகிற்று இனி நடப்பது நடக்கட்டு. நாளை விடியல் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ! என்றவாறு பேகம் தூங்கிப்போக
ஷஹீராவோ சுனாமி வந்து தாக்கி எல்லாம் அழிந்து போன மனநிலையில் இருந்தாள். கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நான் கேட்கவுமில்லை. பண்ண சம்மதமா என்று என்னை யாரும் கேட்கவுமில்லை. நாளை மாப்பிள்ளை வீட்டார்கள் வருகிறார்களாம் உம்மா நாநாவிடம் கூறியது காதில் விழுந்திருக்க, சம்பந்தப்பட்ட அவளிடம் சொல்ல வேண்டும் என்று யாரும் எண்ணவில்லை. நாளையும் மாப்பிள்ளை வீட்டார் வந்தால் இதே போல் அவளிடம் யாரும் சம்மதமா என்று கேட்கப் போவதுமில்லை. மனக்குமுறல் அழுகையாய் வெடிக்க எப்பொழுது தூங்கினாள் என்று அறியாமளையே தூங்கிப் போனாள் ஷஹீரா.
பெண் பார்க்க தானும் தன்னுடைய தாயும் மாத்திரம் தான் வருவதாக சொல்லி இருந்தான் காதர். பெண்ணை பார்க்க வேண்டும் ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் என்று முபாரக்கோடு அலைபேசி வழியாக பேசிய பொழுது சொல்லி இருந்தான்.
ஆர்ப்பாட்டமாக எதுவும் செய்யவேண்டாம், அலங்காரம் கூட வேண்டாம். பெண் அவங்க வீட்டுல எப்படி இருக்காங்களோ அப்படி இருக்கட்டும் என்று விட்டான்.
அவனுக்கு தூரத்து சொந்தம் என்ற முறையில் மஸீஹாவையும் அக்பரையும் தெரியும். அக்பரின் அக்கா குடும்பத்தை பற்றி எதுவும் தெரியாது. எல்லாம் மஸீஹா சொன்னதுதான். ஷஹீரா ஸ்கூல் முடித்து விட்டாள். காலேஜ் அனுப்ப அண்ணன் முபாரக்கு இஷ்டமில்லை என்றும் ஷஹீராவின் தந்தையை பற்றியும் சொல்ல வேண்டிய தகவலை சொல்லி இருந்தாள் மஸீஹா.
இது அவனுக்கு இரண்டாவது திருமணம். அவனுக்கு மனைவி என்பவள் வேண்டும் என்பதை விட இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அன்னை வேண்டும் என்றுதான் திருமணத்துக்கு சம்மதித்திருந்தான் காதர்.
வழக்கமாக மாலைதான் பெண் பார்க்க வருவார்கள். அனால் காதர் அன்னையோடு காலை வருவதாக கூறி இருந்தான். சொன்னது போல் காலை பத்து மணிக்கே உம்மாவுடன் தனது காரில் வந்திறங்கினான் காதர்.
“குழந்தைக்குகளையும் அழைத்து வந்திருக்கலாமே! எங்க ஷஹீயும் குழந்தைகளை பார்த்த மாதிரி இருக்கும், குழந்தைகளும் உம்மாவை பார்த்த மாதிரி இருக்கும்” மஸீஹா ஷஹீராவை பெண் பார்க்க முன்பாகவே காதரின் இரண்டு குழந்தைகளுக்கும் அன்னையாகியவள் காதரிடமே கேட்டு வைக்க சிரித்து சமாளித்தவன் பதில் சொல்லவில்லை.
“பெண்ணை பார்க்க வேண்டும், பிடிக்க வேண்டும், பெண்ணுக்கும் இந்த திருமணத்தில் சம்மதமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் அதன் பின் குடும்ப அங்கத்தவர்களாக அறிமுகமாக்கிக்கலாம்” இதுதான் அவன் முடிவாக இருந்தது.
வந்த உடனே வித விதமான சிற்றுண்டி வகைகளையும், காபியையும் மஸீஹா பரிமாற, காதரின் அன்னையே மஸீஹாவை “எதற்கு இதெல்லாம்” என்று கடிந்தாள்.
அவளும் சிரித்துக்கொண்டு “எங்க வீட்டுக்கு யார் எப்போ வந்தாலும் இப்படித்தான் கவனிப்போம்” எனும் விதமாக பேச ஹஸன் கண்களை உருட்டி அன்னையை பார்த்த விதமே காதருக்கு சிரிப்பை வரவழைத்தது.
அவனின் இரு குழந்தைகளும் ஏறக்குறைய ஹஸனின் வயதை ஒத்தவர்கள் தான். அப்பா செல்லம். மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்கும் பொழுது கேன்சர் என்று கண்டு பிடிக்கப்பட்டு குணப்படுத்த முடியாமல் இறந்தாள். இரு குழந்தைகளையும் தன் நெஞ்சுக்குள் பொத்தி வைத்திருப்பவன் காதர்.
குழந்தைகளை அன்னைதான் பார்த்துக்கொள்கிறாள். மனைவியின் அன்னையிடமும் அழைத்து செல்வான் அவர்களும் வேறு திருமணம் செய்ய சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவனுக்குத்தான் வருபவள் எப்படிப்பட்டவளாக இருப்பாளோ என்ற பயம்.
“பொண்ண பார்க்கலாமா?” மேலும் ஏதாவதை தட்டில் கொண்டு வந்து நீட்டி விடுவார்களோ என்று அஞ்சியே காதரின் அன்னை கேட்க,
“வாங்க” என்ற பேகம் இருவரையும் அழைத்துக்கொண்டு ஷஹீராவின் அறைக்கு செல்ல கதிரையில் அமர்ந்திருந்த ஷஹீரா எழுந்து நின்று கொண்டாள்.
காதர் ஷஹீராவோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது புயல் போல் உள்ளே நுழைந்தான் ரஹ்மான்.