Advertisement

16…

எவர் எண்ணம் ஈடேறும்

 

காதலில் திளைத்து 

உன்னுடன் கலந்தது போல்

கனவு கண்டேன்..

விழி கண்ட கனவுகள்..

விரல் தீண்டிட நிறைவேறுமா…

விரகத்தில் என் உயிர் நோகுமா!..

பொழுது புலர்ந்ததென  உலகுக்கு அறிவிக்க பறவைகளின் கீச்சுக் குரல் வானமெங்கும் எதிரொலித்தது.

பல வண்ணப் பறவைகளின்  சங்கமக்   கீதத்துக்கு எதிர் ராகம் போல பெண்ணவள் வளையோசையும், கால்களில் மின்னிய  கொலுசின் சிணுங்கல் இசையும்    சமையல் கூடத்தில் இன்னிசை கச்சேரி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தது.

தழையத் தழைய கட்டியிருந்த  பட்டுப் புடவையை இருக்கின்றதோ இல்லையோ என்ற ஐயம்  கொள்ளும்  மெல்லிய இடையில் இழுத்து சொருகிக் கொண்டு..  பஞ்சுப் பாதங்கள்  தரையில் பதிகிறதா!,  இல்லை கொலுசின்   நாதத்துக்கு ஏற்ப  காற்றில்  மிதக்கிறதா! என்று  விவாதம் ஒன்று நிகழ்த்தும் வகையில்,  ஒரு இடத்தில் ஒரு நொடிக் கூட நில்லாது ஒருவித அவசரத்துடன் அதே நேரத்தில் அப் பணிக்கு தேவையான நேர்த்தியுடனும் சமையலறையின் அன்றாடப் பணிகளை வெகு சிரத்தையுடன் செய்து கொண்டிருந்தாள்.

நெற்றியில் வடிந்த வியர்வைத் துளிகள் அவள் உழைப்பின் அளவை எடுத்துச் சொல்ல.. கண் மறைத்து விழுந்த கூந்தலை காது மடலின் பின்புறம் இழுத்து வாரிக் கொண்டு, பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தவள், காலை உணவுக்கான   பாதார்த்தங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு,     தன் உடையவனுக்கு   பிடித்த விதத்தில் காலைக் குழம்பி ( ஃகாபி)  கலந்து கணவன் உறங்கும் அறைக்குள் சென்றாள்.

  இரவு முழுவதும் தன்னுடன் காதலில் கூடிக் களித்த அயர்வில் தன்னை மறந்து உறங்கும் தன்னவன் அருகில்  அடிமேல் அடிவைத்து அன்னநடையிட்டு வந்தவள், கையில் ஏந்தி வந்த குழம்பிக் கோப்பையை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு, அவன் அருகாமையில்   அமர்ந்தாள்.

உறக்கத்தில் முகம் மலர்ந்து சிரிக்கும் சிறு குழந்தை போல் ஆழ்ந்த உறக்கத்தில் இதழ் விரித்து  ரசனையுடன் புன்னகைத்து கொண்டிருந்தவனை  ரசித்து முடித்தவள்,  முன் நெற்றி மறைத்துக் கிடந்த கேசத்தை  மெதுவாய் ஒதுக்கி… இதமாய் இதழ் பதித்து…

‘ ஆயுள் கைதியாய் இருப்பதே

சுகம் என்று கண்டேன்..

என் ஆயுள்  முழுவதும்

உன் அன்பின் கைதியாய்..

காதலின் அடிமையாய்

வாழ்ந்திடவேப் பேராவல்

கொண்டேன்…

என்று கவிதை வரிகளில்  கணவனின்  காதலுக்கு  அடிமையெனத் தன்னை  அறிவித்தவள் நெருக்கத்தில் உறக்கம்  கலைந்து எழுந்தவன்,     தன்னை அரவனைத்துப் பிடித்திருந்தவள் இடைப்  பற்றி இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.

”  காலையில எழுந்திரிச்சதும் விளையாட்டை ஆரம்பிக்காதீங்க… மாமா, ” என்று செல்லச் சிணுங்களுடன்  தன் கொஞ்சலுக்கு  வளைந்து கொடுத்தவள் அழகை அருகாமையில் கூர்ந்துக்  கவனிக்கத்  துவங்கினான் அவளின் காதல் கணவன்.

விடியலில்  எழுந்து.., இடை வரை  நீண்டு வளர்ந்து  நெளிந்தக்  கார் கூந்தலுக்கு… மனம் கமழும் சீகைக்காய் தேய்த்துக் குளித்ததன்  அடையாளமாய்    சரிவரத் துடைக்கப்படாத தலையின்  ஈரமும், வேலை    செய்ததன் வெளிப்பாடாய்  முகத்தில் துளிர்த்த வேர்வையுமாய்   பனியில் நனைந்த வெண்  மலர்போல்… புதுவித அழகுடன்  புத்துணர்வான மணத்துடன்  தன்னைக்  கவர்ந்திழுத்தவளை கண் இமைக்காது காதலுடன் பார்த்து ரசித்து இருந்தவன்…

‘ விலை உயர்ந்த

வாசனைத் திரவியத்தின்

செயற்கை மணமும்

தோற்றுப்போகுமடி..

உன் வியர்வைத் துளிகளின் 

இயற்கை  மன்மத வாசத்தின் முன்னால்.. ‘

என்று நெருக்கத்தில் தன்னவள் பிரத்யேக மணத்தை மேலும் நுகர்ந்தவன்..

” காலைல எந்திரிச்சதும் இப்படி வேர்த்து விறுவிறுக்க… வேலை செய்யனுமா குட்டிமா, ” என்று அக்கறையுடன் விசாரித்தான் கணவன்.

” நம்ம வீட்டு வேலையை நான் செய்யாம வேறே யார் செய்வாங்க மாமா” என்று கொஞ்சல் குரலில் கூறினாள் அவனது மனைவி.

“நம்ம வீட்டு வேலை தான்.. ஆனா அதை நீ  மட்டும் இப்படி  அரக்கப் பரக்கச்  செய்யணும்னு எந்த அவசியமும் இல்லையே.  அதான் வீட்ல ஒன்னுக்கு ரெண்டு வேலைக்காரங்க  இருக்காங்களே.. ” என்று தன் மனைவி தனக்காக செய்யும் வேலைகளை எண்ணி உள்ளுக்குள் பெருமிதப்பட்டுக் கொண்டாலும் அழகான முகத்தில் தெரிந்த அயர்வை கவனித்து கரிசனத்துடன் வினவினான்.

கணவனின்  வார்த்தையின் தனக்கான காதலையும் அக்கறையையும் உணர்ந்தவள்,  ” உங்களுக்காக இஷ்டப்பட்டு செய்யும்போது எந்த கஷ்டமும் எனக்குத் தெரியறது இல்ல மாமா. உங்களுக்கு பிடிச்ச மாதிரி பார்த்து பார்த்து நானே என் கையால  சமைச்சு.. அதை நீங்க  ரசிச்சு சாப்பிடுறத பார்க்கும் போது தான்   எனக்கு நிறைவா இருக்கு மாமா.. ” என்று கனிவுடன்  கூறினாள்.

” உன்னை  மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க நான்  கொடுத்து வச்சிருக்கணும் குட்டிமா.” என்றவன் மேலும் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு, முத்தமிட முயல… வெட்கத்துடன் அவள் விலக.., ” நீ மட்டும் எனக்கு முத்தம் கொடுத்து எழுப்பின.. நீ    கொடுத்ததை  நான் உனக்கு திருப்பிக் கொடுக்க கூடாதா என்ன?”

” ஒரு  முத்தத்துடன்

முடித்துக்கொள்ள

முற்படுகிறாய்

நீயடி…

உன் இதழ் ரேகை

எண்ணிக்கையை

முந்திவிடும் வேகத்தில்

நானடி…

என்று சரசம் பேசியபடி இடைவெளி குறைத்து காதலில் திளைக்க கணவன் முற்படும் நேரம்… வெட்கத்தில்  விலக்கித் தள்ளிவிட்டு விரைந்து ஓடி மறைந்தாள் அவனின் மனைவி.

மங்கையவள் மலர்க்கரம் தள்ளிய வேகத்தில் தடுமாறி கட்டிலில் இருந்து சரிந்து கீழே விழுந்தவன், விழுந்த வேகத்தில் உண்டான வலியுடன்.. அதுவரை தான் கண்ட கனவை கலைத்து எழுந்து அமர்ந்து… ” ச்சே… இவ்வளவு நேரம் வெறும் கனவுதான் கண்டுட்டு  இருந்தேனா?..கனவுல பார்க்கும்போது எல்லாம் நல்லாதான் இருக்கு. இதெல்லாம் என்னைக்கு தான் என் வாழ்க்கையில நிஜமா நடக்கப் போகுதோ!. ” என்று சலித்துக் கொண்ட படி மீண்டும் கட்டிலில் எழுந்து அமர்ந்திட… தன் அருகே படுத்திருந்தவன் சிலநொடி காணாமல் போனதைக்  கூட உணராமல் உறங்கிக் கொண்டிருக்கும் விஷல்யாவை  பார்த்து… ” பக்கத்துல படுத்து இருந்தவன், பத்து நிமிஷமா காணோமே… எங்கப் போனான் என்ன ஆனான்னு  கொஞ்சமாவது அக்கறை இருக்கா?, கும்பகர்ணனோட லேடி வெர்சன் மாதிரி தூங்குறதை பாரு,  குறட்டை ஒன்னு மட்டும் தான் குறைச்சல்  மத்தப் பத்துப் பொருத்தமும் பக்காவா பொருந்துது, ” என்று  புகைந்து கொண்டபடி, ” ஷாலு… ஹே..   ஷாலு, எழுந்திரி  விடுஞ்சு ரொம்ப நேரமாச்சு இன்னும்   தூங்கிட்டு இருக்க” என்று சிடுசிடுப்புடன் தட்டி  எழுப்பினான் அமுதேவ்.

உறக்கத்தை விட  மனமில்லாமல்   புரண்டு படுத்தவளை  ” எழுந்திரி ஷாலு, விடிஞ்சுடுச்சு ” என்று விடாமல் அசைத்து எழுப்பினான் அமுதேவ்.

” விடிஞ்சா தூங்கக் கூடாதுன்னு ஏதாவது ஈபிகோ  சட்டம் இருக்கா?”  என்றபடி எழுந்து அமர்ந்தவள், “ஏன் இப்படி பண்ணுற அம்மு நல்லாத் தூங்கிட்டு  இருந்தேன். , ” என்றாள்.

” தூங்குறவங்களை தான் எழுப்ப முடியும், முழிச்சுட்டு இருக்கிறவங்கள எழுப்பினா.. என்னை பைத்தியம்னு சொல்லுவாங்க”  என்றான் அமுதேவ்.

” நைஸ் ஜோக் அம்மு. அப்புறமா ஞாபகப்படுத்து சிரிக்கிறேன்.  இப்போ கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன், ” என்றபடி  தன்னை எழுப்பியவன் மடியிலேயே தலை வைத்துக் கொண்டு  மீண்டும்  உறங்கத் தயாரானாள் விஷல்யா.

விஷல்யாவின்  செயலில் அதுவரை கொண்டிருந்த கோபம் மறைய.. இதமாய் அவள்  தலையை  வருடியபடி, ” நான் உன்னை எந்திரிக்க சொல்லிட்டு இருக்கேன்,  நீ என்னடான்னா என் மடியிலேயே படுத்து தூங்க ஆரம்பிச்சுட்ட ”  என்றான் அமுதேவ்.

அவன்  விரல்களை பற்றி  கன்னத்தில் பதித்துக்கொண்டு… ” இன்னும் கொஞ்ச நேரம் அம்மு.” என்றவள்  சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாக, ” ஆமா இப்போ எதுக்கு   எந்திரி ஷாலு எந்திரின்னு என் பெயரை ஏலம்  போடுற..  ” என்று  விஷல்யா வினவிட.. ” எழுப்ப எழுப்ப.. எந்திரிக்க மாட்டேன்னு அடம் புடிச்சா வேற  என்ன செய்வாங்களாம்?” என்றான் அமுதேவ்.

 ” நல்லவேளை நாலாவது தடவை கூப்பிடும் போதே எந்திரிச்சிட்டேன், இல்லைனா  அஞ்சலி படத்துல கிளைமாக்ஸ் சீனை  இங்க ரீ கிரியேட் பண்ணியிருப்ப.  ” என்று கேலி செய்து சிரித்தாள் விஷல்யா.

”     புரியல”  என்று ஒற்றை வரியில் விஷல்யாவின் வார்த்தைக்கு விளக்கம் கேட்டான் அமுதேவ்.

”    அஞ்சலி படம் பார்த்திருக்கியா,   மணிரத்தினம் சார் படம் பா, அந்தப் படத்துல  நடிச்ச பொண்ணுக்கு அவார்டு கூட கிடைச்சதே !”  என்று விஷல்யா விவரித்திட … ” அந்தப் படத்தைப் பத்தி எனக்கேத் தெரியும் நீ புதுசா லெக்சர் எடுக்காத. அந்தப் படத்துக்கும் நான் உன்னை எழுப்பினத்துக்கும் என்ன சம்பந்தம்?  அதை சொல்லு முதல” என்றான் அமுதேவ்.

” படத்தோட க்ளைமாக்ஸ்ல அந்த சின்ன பொண்ணோட அக்கா  கேரக்டர் அஞ்சலி பாப்பாவை  இப்படித்தான் தூங்கும்போது எழுப்பும்.. எவ்வளவு எழுப்பியும் அந்த பாப்பா  எந்திரிக்காது, உடனே அந்த அக்கா கேரக்டர் வீட்ல இருக்குற ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரையும் வரிசையா கூட்டிட்டு வந்து அந்த பாப்பாவ எழுப்ப முயற்சி பண்ணுமே!,  அதே மாதிரி நீயும் என் வீட்ல இருக்கிற எல்லாரையும் கூட்டிட்டு வந்திருபன்னு சொல்ல வந்தேன், ”  என்றாள் விஷல்யா.

” யா எக்ஸாக்ட்லி… மெம்பர்ஸ் மட்டுமல்ல அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கிற எல்லாரையும் கூட்டிட்டு வருமே..  அதே மாதிரி   அக்கம் பக்கத்துல இருந்து எல்லாரையும் கூட்டிட்டு வந்துடுவேன், ”  என்று சிரித்தான் அமுதேவ்.

”  அடப்பாவி, ” என்று  விஷல்யா அதிர்ச்சி காட்டிட.. ”  யாரு பாவி…  கட்டின புருஷன்  காலையில இருந்து பசியோட  இருக்கேன், நீ என்னடான்னா சாவகாசமா எந்திரிச்சு அஞ்சலி படக் கதை சொல்லிட்டு இருக்க.. நீ தான் பாவி, படுபாவி…. ”  என்று தன் மடியில் படுத்திருந்தவள் கன்னத்தை வலிக்கும் படி  கிள்ளினான் அமுதேவ்.

ஆவென்று   வலியில் அலரியவள், அடுத்த நொடி யோசிக்காது அமுதேவ்  தொடையை கிள்ளி தனது கோபத்தை வெளிப்படுத்தினாள்.

அமுதேவ் வலியில் துடிக்க…” நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. எனக்கு வலிச்சா அந்த வலியை உனக்கும் திருப்பிக் கொடுப்பேன்னு”  என்றபடி  எழுந்து.. குளியல் அறைக்கு சென்று தன் அன்றாடப் பணிகளை முடித்துக் கொண்டு வெளியே வந்து பார்க்க  அறையின் ஓரத்தில் இருந்த  முகப்பு மாடத்தில் நின்று… வீதியில் சென்று கொண்டிருந்த வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அமுதேவ்.

‘நேத்து நல்லா தான பேசிட்டு இருந்தான் திடீர்னு என்னாச்சு?’ என்று அமுதேவ் செயல்பாடுகளில் இருந்த மாற்றத்தை எண்ணி தனக்குள் புலம்பியபடி…  சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த தாமரையிடம் தன் தேவையை தெரிவித்தாள்.

அதற்கான வேலையை கவனித்தபடியே” நேத்து எல்லாம் நல்லபடியா நடந்ததா.. ?”என்று தயக்கத்துடன் தாமரை வினவிட, ” என்னடா இன்னும் ஃபார்மல் கொஸ்டின் கேட்காம இருக்கீங்கன்னு    நினைச்சேன், இதோ கேட்டீங்களே!, அதென்ன பொண்ணுக்கு கல்யாணம் ஆனதும் எல்லா அம்மாக்களும் இதே கேள்வியை கேட்கிறீங்க!, நீங்களா  ஒருத்தனைத்  தேடிக் கண்டுபிடிச்சு இவன் கூட நம்ம பொண்ணு சந்தோஷமா இருப்பான்னு  நம்பித்தானே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க?,  அப்புறம் எதுக்கு சந்தோசமா இருந்தியான்னு  ஒரு கேள்வி?, அது நடந்தா  மட்டும் தான் சந்தோஷமா?, கணவன் மனைவிக்குள்ள இருக்கிற அன்னியோன்யம்.. நைட்ல நடக்கிற அந்தரங்க விஷயத்துல தான் அடங்கி இருக்கா?” என்றாள் விஷல்யா.

“கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா குறைஞ்சா போய்டுவ.. என்னக் கேட்டாலும்  எதிர்வாதம்  பண்ணிட்டு,  எவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவுல கல்யாணம் நடந்துச்சு. உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சுன்னு தெரிஞ்சா எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ல. அதனாலதான் கேட்டேன்.” என்று  அலுத்துக்கொண்டார் தாமரை.

அமுதேவ் மீது உண்டான கோபத்தை  அன்னையிடம்   காட்டி விட்டதை உணர்ந்ததும்.. ” சாரிமா.. அம்மு அங்க பசியோட இருக்கான் அந்த  டென்ஷன்ல பேசிட்டேன். ” என்று மன்னிப்பு  வேண்டினாள் விஷல்யா.

” மாப்பிள்ளை பசியோட இருக்காரா?, இதை எதுக்கு இவ்ளோ லேட்டா சொல்ற..?, ” என்று  வேலையை கவனித்தவர், அவசரமாய் தயாரித்த  காலைக் குழம்பிக் கோப்பையை கையில் கொடுத்தார் தாமரை.

சமையலறையை விட்டு  விஷல்யா வெளியேறிட.. ” காலையில டிபன் ரெடியா இருக்கு, ” என்று அவசரமாய் அறிவித்தார் தாமரை.

அறையை விட்டு வெளியேறி சென்ற போது எந்த நிலையில் இருந்தானோ,  அதே நிலையில் கையைக் கட்டிக் கொண்டு அமிதேவ் நின்றிருக்க.. ”  என் அம்முவுக்கு இன்னும் என் மேல இருக்கிற கோபம் குறையலையா? ” என்று கொஞ்சலாய் கேட்டபடி அவனுக்கு பின் வந்து நின்றாள் விஷல்யா.

நீண்ட நெடு மூச்சை வெளியேற்றி திரும்பியவன்,  விஷல்யா கையில இருந்த கோப்பையை கவனித்து..  ” நீ பிரிப்பர் பண்ணுனதா?, ”  என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேள்வியாய் நிறுத்த..”  செம்ம கட்ஸ் தான் உனக்கு..  என்னைப் பத்தி தெரிஞ்சிருந்தும். நான் பிரிப்பர் பண்ணின ஃகாபிய குடிக்கணும்னு ஆசைப்படுற பாத்தியா உனக்கு தைரியம் அதிகம்தான். ” என்று கேலிக் குரலில் கூறினாள் விஷல்யா.

காலையில் தான் கண்ட கனவை மீண்டும் ஒருமுறை நினைவுக் கூர்ந்தவன், ” நான் எப்படி எல்லாம் வாழனும்னு கனவு கண்டேன் தெரியுமா?”  என்று  தான் வாழ நினைக்கும் வாழ்க்கையையும் கண்ட கனவையும் ஆசை தழும்பும் விழிகளுடன் விவரித்தான் அமுதேவ்.

” நல்ல கனவு கண்ட போ… நீயே உன்னோட கனவை திரும்ப ஒரு தடவை யோசிச்சிப் பாரேன், ரொம்பவே சினிமாத்தனமாக டிராமாடிக்கா  நீயே பீல் பண்ணுவ.. ”  என்றாள் விஷல்யா.

” எனக்கு அப்படி ஒன்னும் தோனல.. ” என்று உண்மையை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் பிடிவாதத்துடன் பேசினான் அமுதேவ்.

” என்னது சினிமாட்டிக்கா இல்லையா..  அடிக்கிற வெயிலுக்கு புடவையை அதுவும் பட்டுப்புடவையை  சுத்திகிட்டு  அடுப்படி வெக்கையில அவிஞ்சு போய் உனக்கு  காபி கலந்து கொண்டு வந்து.. மாமானு எழுப்புறதும்  . மாமான்னு நான் கூப்பிட.. ஏம்மான்னு நீ பார்க்க.. இது போதாதுன்னு வேர்த்து  விறுவிறுத்து போன வேர்வைக்கு கவிதை வேற… இது உனக்கு சினிமாட்டிக்கா இல்ல,  கடைசியா என்ன சொன்ன நீ முத்தம் கொடுக்க வரும் போது வெட்கப்பட்டு ஓடினேனா.. நல்ல கவனிச்சியா வெட்கப்பட்டு ஓடி இருக்கமாட்டேன். காலையில எந்திரிச்சதும் பல்லு கூடத் தேய்க்காம  பக்கத்துல வருதே  பக்கின்னு பதறியடிச்சு ஓடிருப்பேன். ”  என்று அமுதேவ்   கற்பனையில் கண்டு விவரித்ததை கிண்டல் செய்தாள் விஷல்யா.

” ஆமா சினிமாட்டிக் தான் அதனால என்ன?, எதார்த்த வாழ்க்கையில் என்ன த்ரில் இருக்கு. உப்புச்சப்பில்லாத எதார்த்த வாழ்க்கையைவிட என்னோட சினிமாட்டிக் கற்பனை  எவ்வளவோ பெட்டர். ” என்று விஷல்யா கையில்  இருந்த கோப்பையை வாங்க கை நீட்ட.. ” ஹலோ என்ன இது பல்லு கூட விளக்காம காபிக்கு கைநீட்டற… பெட் காபி குடிக்க இது ஒன்னும் நீ சொன்ன கனவுக் கதை இல்ல நிஜம்” என்று அமுதேவ் நீட்டிய கரத்தில்  ஓங்கி  அடித்தாள் விஷல்யா.

” பொருடி வந்து உன்னை   கவனிச்சுக்கிறேன், ” என்று பொறுமியபடி குளியல் அறைக்குள் சென்று தன் காலைப் பணிகளை முடித்துவிட்டு விஷல்யா இருக்குமிடம் வந்து சேர்ந்தான் அமுதேவ்.

” எனக்காக வெயிட் பண்ணனும்னு தோணலையா..?” என்றபடி அவள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன், தனக்காக ஒதுக்கப்பட்ட கோப்பையை எடுத்து ஒரு மிடறு விளங்கியவன் அடுத்த நொடி அதை    அப்படியே துப்பி விட்டு  ” நீ போட்ட ரம்பத்துல.. காபியோடு சூடு ஆறிப் போச்சு.. இதை இனி எப்படி குடிக்கிறது.. ”  என்றான் அமுதேவ்.

” குடிக்க பிடிக்கலனா வச்சுடு உன்னை யாரும் இங்க கம்பெல் பண்ணலை. ரொம்ப பசிக்குதுனா  காலையில டிபன் ரெடி. கீழ போய் சாப்பிட்டு வரலாம். ” என்று யோசனை வழங்கினாள் விஷல்யா.

” பசில காது அடைக்குது.. எனக்கிருக்கிற பசிக்கு உன்னையேக் கடிச்சு   தின்னாலும்  தின்னுடுவேன்,  வா வா   சாப்பிட போகலாம் ” என்று விஷல்யாவையும் உடன் இழுத்துக்கொண்டு உணவு மேஜைக்கு வந்து சேர்ந்தான் அமுதேவ்.

புது மாப்பிள்ளைக்கு வேண்டிய பதார்த்தங்களை பக்குவமாக செய்து அடுக்கி வைத்திருந்த தாமரை…   அமுதேவ்வை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கத் துவங்கினார், அவன் அருகில் காலித் தட்டுடன் இருந்த  விஷல்யாவை  கண்டு கொள்ளாது…  மருமகனை மட்டும் சிறந்த முறையில கவனிக்கும் அன்னையின்  செயலில்  கடுப்பானவள்.. ” அங்க வச்சது போக மிச்ச மீதி ஏதாவது இருந்தா  என் தட்டுல வைப்பீங்களா.. இல்லை   என்னை இப்படியே பட்டினி போட்டுடுவீங்களா?” என்று கோபத்துடன் வினவினாள் விஷல்யா.

” மாப்பிளை சாப்பிட்டு முடிச்சதும் அவர் தட்டுல சாப்பிடு” என்றார்   தாமரை.

” என்னது இவன் தட்டுல சாப்பிடனுமா?”  என்று விஷல்யா அதிர்ச்சி காட்டிட.. ” அது தான் முறை… ” என்று முறைப்புடன் கூறினார் தாமரை.

” உங்க முறையை உங்கக் கூடவே  வெச்சுக்கோங்க.. என் மேலத் திணிக்காதீங்க ” என்று பதிலடி தரும் வேகத்துடன் பேசியவள் தட்டில் உணவு பதார்த்தங்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.. ”  இதுவரைக்கும் என் பேச்சைக் கேட்டு நீ  நடந்ததில்ல…  இனியாவது பெரியவங்க பேச்சு கேட்டு அடக்க ஒடுக்கமா நடந்துக்க கத்துக்கோ… ” என்று மகளை  அடக்கிவிட்டு அவள்  தட்டை தன் புறம் இழுத்துக்கொண்டார் தாமரை.

” அம்மா,  திஸ் இஸ் டூ மச்  அடுத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்பு தரணும்னு   நீங்க தான்  சொல்லுவீங்க!, இப்போ நீங்களே உங்க வார்த்தையை மீறி நடந்தா என்ன அர்த்தம்?,” என்றாள்  விஷல்யா.

” உன்னோட உணர்வுக்கு நான் மதிப்பு தரது இருக்கட்டும் , நீ முதல்ல மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுத்து பேசு.. இதுக்கு முன்னாடி எப்படியோ?, இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு இனியாவது அவர மரியாதையா பேசி பழகு. அவர் பேச்சைக் கேட்டு நடந்துக்கோ” என்றார் தாமரை.

” சூப்பரா சொன்னீங்க அத்தை.  ”  என்று தாமரையை பாரட்டியவன்,  விஷல்யா புறம் திரும்பி, ” காலைல இருந்து ஒரு காபி கூட தராம   பட்டினி போட்டேல..  இப்போ நான் வயிறு முட்ட  சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும்  உட்கார்ந்து வேடிக்கை பாரு.. ”  என்று உணவில் கவனம் செலுத்தினான் அமுதேவ்.

வேறு வழியில்லாமல் கன்னத்தில் கை வைத்து விஷல்யா அமர்ந்துவிட.. அவ்விடம் வந்து சேர்ந்தார் தாமோதரன். சம்பிரதாயமாய் மருமகனை வரவேற்றவர் மகள் முகத்திலிருந்த சோர்வை கவனித்து… ” என்ன  ஷாலு… பசியில  இருக்கிற மாதிரி இருக்கு. அப்புறம் எதுக்கு சாப்பாடு வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க தட்டுல  எடுத்து வைச்சு சாப்பிட வேண்டியதானே, ” என்றார் தமோதரன்.

” என் ஹஸ்பண்ட் சாப்பிட்டு  முடிச்சதும்,  அவன் … சாரி அவர் தட்டுல தான்  நான் சாப்பிடனுமாம்  உங்க ஹோம் மினிஸ்டர் ஆர்டர் போட்டுட்டாங்க.. ” என்று சோர்வுடன் கூறினாள் விஷல்யா.

மருமகன் முன் தன் மனைவியின் வார்த்தையை எதிர்த்துப் பேசினால் மனைவிக்கு  அவமரியாதை ஏற்படுத்தி விடும்  என்று  உணர்ந்து தாமோதரன் அதற்குமேல் பேசாது அமைதி கொள்ள… கண் ஜாடையில் கணவருக்கு எதையோ

நினைவுறுத்தினார் தாமரை. மனைவியின் கண் அசைவின் அர்த்தம் உணர்ந்தவர், ” அப்புறம் மாப்பிள கல்யாணம்  நல்லபடியா முடிஞ்சா குலதெய்வம் கோயிலுக்கு வரதா வேண்டியிருந்தேன்.  உங்களுக்கு எப்ப ஃபிரீன்னு சொன்னீங்கன்னா உங்க தோதுப்படி குலதெய்வக் கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம்.. ” என்றார் தமோதரன்.

” ஒரு கவர்மெண்ட் ப்ராஜெக்ட் முடிக்க வேண்டிய வேலை இருக்கு மாமா.  அது மட்டும் இல்ல, ஷாலுவ கூட்டிட்டு,  எங்கேயாவது அவுட் ஸ்டேஷன் போயிட்டு வரலாம்னு யோசிச்சேன்.  அதுக்கப்புறம் ஃப்ரீ டைம் பார்த்து சொல்றேன். ” என்றான் அமுதேவ்.

பசியில் பேச வார்தையற்று  எதுவும் பேசாமல் விஷல்யா அமைதியாய் அமர்ந்திருக்க..” விஷல்யாவின் பசியை உணர்ந்தவன் போல.. அவளுக்கு ஊட்டிவிடத் துவங்கினான் அமுதேவ்.

மகள் மருமகன் உறவில் இருக்கும் புரிதலை எண்ணி… உள்ளம் நெகிழ்ந்து போன பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நிம்மதியுடன் புன்னகை செய்துக் கொண்டனர்.

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும்  முன்  விஷல்யாவை  தனியே சந்தித்த தாமரை. ” இங்கப்  பாரு ஷாலு..  இதுக்கு முன்னாடி எப்படி இருந்தியோ அதை எல்லாத்தையும் மறந்துடு.. இனி நீ வாழ போற வாழ்க்கையே வேற.. இனி நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் செய்யுற ஒவ்வொரு  செயலும், எடுக்கிற ஒவ்வொரு முடிவும்.. உன் புருஷனையும் சேர்த்து பாதிக்கும். அதனால எது பண்றதா இருந்தாலும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசிச்சு  பண்ணு. அப்புறம் இன்னொரு விஷயம்..  இங்க இருக்கிற வரைக்கும் உனக்காக எல்லா வேலையும் நான் செஞ்சு கொடுத்திடுவேன். உன் புகுந்த வீட்டுக்குப் போயிட்டா உன் வேலையை நீ தான் செஞ்சுக்கணும், அதோட மாப்பிள்ளையையும் நீதான் நல்லபடியா கவனிச்சுக்கணும்,  இன்னைக்கு மாதிரி  இனி  லேட்டாக்காம மாப்பிள்ளைக்கு முன்னாடி எந்திரிச்சு அவருக்கு வேண்டியதை  கவனி, அது தான்  நல்ல மனைவிக்கு அடையாளம்” என்று அறிவுரை வழங்கினார் தாமரை.

”  மாப்பிள்ளைக்கு தப்பாத மாமியார் தான் நீங்க..!, அவனும் உங்கள மாதிரிதான் பத்தாம் பசலித்தனமா பேசிட்டு இருப்பான்.   ” என்று விஷல்யா சலித்துக்கொள்ள… ” முதல்ல மாப்பிள்ளைய அவன் இவன்னு பேசுறத நிறுத்து… இனி அவரை மரியாதையோட கூப்பிடு,  அவருக்கான எல்லா விஷயத்தையும்   நீயே செஞ்சு  கொடு, ” என்று மகளைக் கண்டித்தார்  தாமரை.

“என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா!,    அம்முவே    நான் இப்படித்தான்னு புரிஞ்சுக்கிட்டு, என் குணத்தை  ஏத்துக்கிட்டு, என்னை எனக்காகவே கல்யாணம் பண்ணிகிட்டான். நீங்க என்னடான்னா மறுபடியும் அவனை பழைய மாதிரி மாத்திடுவாங்க போல…. எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல நேத்து எல்லாத்தையும் பேசி சரி பண்ணிட்டோம். அம்மு என்னை  ரொம்ப லவ் பண்றான். எனக்காக அவனோடப் பிடிவாதத்தைக்  கூட விட்டுக் கொடுத்துட்டான். ” என்று தன்னை தனக்காகவே ஏற்றுக்கொண்ட கணவனின் பெருந்தன்மையை பெருமையுடன் அறிவித்தாள் விஷல்யா.

” வாழ்க்கையோட நிதர்சனத்தை  புரிஞ்சவர் மாப்பிள்ளை அதனால தான் உன் தப்பையும்   மன்னிச்சு, உன் குணத்தையும் புரிஞ்சு  ஏத்துகிட்டார். நீயும் அவர மாதிரியே எப்ப தான் புரிஞ்சு நடந்துக்க போறியோ?”  என்றார் தாமரை.

” அதென்ன  எனக்குத்  புரியாத  நிதர்சனம் உங்கப்  மாப்பிள்ளைக்கு  புரிஞ்சுடுச்சு”  என்று கிண்டலுடன் வினவினாள் விஷல்யா.

“நிறை குறை இரண்டும் சேர்ந்ததுதான்  மனுஷங்களோட குணம்.  பொதுவா ஒருத்தரோட நிறைவான குணத்தை பார்த்து பழக ஆரம்பிச்சதுக்குப் பிறகு.. அவங்களோட குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.. நிறைய ஏத்துக்கிட்ட நம்மளால அவங்களோட  குறைய ஏத்துக்க மனசு வரதில்ல. அதனாலதான் பல உறவுகள்ல விரிசல் வருது. நிறைய ஏத்துகிற மாதிரி குறையையும் ஏத்துகிறது தான்  நான் சொன்ன  நிதர்சனம். அதைத்தான் மாப்பிள்ளையும் செஞ்சிருக்காரு. நமக்கு பிடிச்சவங்க நமக்கு பிடிச்சதை மட்டும் தான் செய்யணும் பிடிச்ச மாதிரி  இருக்கணும்னு எதிர்பார்க்கிறது எதார்த்த வாழ்க்கைக்கு ரொம்பவே அபத்தமான விஷயம். நமக்கு பிடிச்சதை மட்டுமே செய்யக் கூடிய ஆட்கள்னு இந்த உலகத்துல யாருமே இல்ல.  அப்படி ஒருத்தர் வேணும்னு நினைச்சா தனிப்பட்ட உணர்வுகள் இல்லாத  மிஷினை  உருவாக்கி நமக்கு   புடிச்ச விஷயத்தை எல்லாம் அதோட சிஸ்டத்துல ப்ரோக்ராம் பண்ணா மட்டும் தான் முடியும். நமக்குன்னு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கிற மாதிரிதான் அடுத்தவர்களுக்கும் இருக்கும் அவங்களுக்கும் தனி உணர்வு, வாழ்க்கை  இருக்கும்னு புரிதல் வந்தாலே போதும் வாழ்க்கையோட நிதர்சனத்தை நம்ம புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டோம்னு அர்த்தம். ” என்றார் தாமரை.

” அப்போ என் அம்மு எனக்கு பிடிச்ச  மாதிரி  இருக்கணும்னு நான் நினைக்கிறது முட்டாள்த் தனமான  விஷயம்னு சொல்லுறீங்க அப்படித்தானே!,” என்று குற்றம்  சாட்டும் குரலில்  வினவினாள் விஷல்யா.

“மாப்பிள்ளைக்கு பிடிச்ச மாதிரி உன்னை மாறச் சொன்னது தப்புன்னா.. அவரை உனக்கு பிடிச்ச மாதிரி மாத்த முயற்சிக்கிறதும் தப்பு தான்.  உன்னோட  குறையையும் ஏத்துகிற புருஷன் உனக்கு கிடைச்சிருக்காரு, நீயும் அவரோட சின்னச் சின்னக் குறையையும் பெரிசு படுத்தாம வாழப் பழகிக்கோ.. உன் வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும், உன்னை சுத்தி இருக்குறவங்களுக்கு நிம்மதியா இருக்கும். ” என்று அறிவுரை வழங்கினார் தாமரை.

இதுவரை ஒன்றாக இருந்த அன்னை தந்தையை விட்டு செல்ல போகிறோம் என்ற எண்ணமே அவளை வாயடைக்க வைக்க மறுத்து எதுவும் பேசாமல் சம்பந்தமாய் தலையசைத்து பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு காலடி எடுத்து வைத்தாள் விஷல்யா.

Advertisement