அத்தியாயம் 53

மாமா..அதை எடுத்து தாங்க. அது இதுவென நட்சத்திரா சிம்மாவை படுத்த, உதிரன் ரித்திகாவோ சரி சமமாக வேலையை பகிர்ந்து செய்து எப்படியோ பொங்கல் வைத்து கோவில் வழிப்பாட்டை முடித்து, சில சடங்குகளையும் செய்தனர்.

குழந்தைக்காக என சில பொருட்களை ( மஞ்சள். குங்குமம், விபூதி, மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, எலுமிச்சை பழம்) முந்தானையில் ஒவ்வொரு சுமங்கலி பெண்களிடமும் வாங்கிக் கொண்டே வந்தனர் புது தம்பதியினர். அதில் ரித்திகாவின் முந்தானையில் இருந்து எலுமிச்சை ஒன்று கீழே விழுந்து விட, அனைவரும் பதறினர்.

அங்கிருந்த பெரியம்மா ஒருவர், பதறாதீங்க. பிள்ளை அஜாக்கிரதையில கீழ விழல. விழணும்ன்னு இருந்தா விழுந்து தான் ஆகணும். இதுக்கு பரிகாரம் என சில விசயத்தை அம்சவள்ளியிடம் சொல்லி, குழந்தை பிறக்கும் வரை மாதா மாதம் கோவிலுக்கு வந்து செய்யணும் என்று சொல்ல ரித்திகா கண்ணீருடன் உதிரனை பார்த்தாள். அவன் அவள் கையை அழுத்தி பிடித்து அவள் கண்ணீரை துடைத்து விட்டான். அனைவரும் ரித்திகாவை சமாதானப்படுத்தினர்.

ரித்திகா சமாதானமாக அனைவரும் அங்கேயே உண்டு விட்டு இளைப்பாறினர்.

கீர்த்தனா மெதுவாக எழுந்து நகர, கீர்த்து..”எங்க போற?” விக்ரம் கேட்டான்.

அண்ணா, “ரம்யாவை பார்த்துட்டு வாரேன்” என்று அவள் சொல்லி கிளம்ப, “மாம்ஸ் நானும் பார்த்துட்டு வாரேன்” என்று விகாஸூம் சென்றான்.

வீ..இரு நானும் வாரேன் என்று திலீப் எழ, அண்ணா…நீ இரு என்று விகாஸ் ஓடினான்.

“என்ன திலீப்? நீ எங்க போற?” ரகசியன் அம்மா கேட்க, பெரியம்மா சும்மா தான் வெளிய சுத்தி பாக்கலாம்ன்னு தோணுச்சு என்று சமாளித்தான் திலீப்.

“அப்படியா? நாங்களும் வாரோம்” என்று சுவாதி எழ, ஹரா..அவளை முறைத்தாள்.

சுவா, சும்மா இரு. என்ன பண்றான்னு பார்க்கலாம் ராஜா சொல்ல, அண்ணா..இவன் சைட் வேணும்ன்னா அடிப்பான். ரம்யாகிட்ட பேசலாம் மாட்டான். பேசுனா கௌரவம் குறைஞ்சிடுமே!

மாமா சொல்றது சரிதான். அமைதியா இரு சுவா. முதல்ல அவர் போகட்டும். பின்னே நாம பார்க்கலாம் என்று ரசிகா சொல்ல, அதான திருட்டுத்தனமா பாக்க சொல்றா பாரு ரகசியன் ரசிகாவை முறைத்து பேசினான்.

அப்படின்னா முன்னாடி போய் நில்லுங்க. “எனக்கென்ன?” நம்ம எல்லாரையும் வச்சிட்டு ரம்யாவை பார்க்க கூட மாட்டார். அவர் குணத்துக்கு அவரை விட்டு தான் பிடிக்கணும் என்றாள் ரசிகா.

“அப்படி சொல்லுடா என் செல்லமே!” என்ற ரகசியனின் அம்மா, அவன் போகட்டும். பார்க்கலாமே! என்றார்.

“இது என்ன குடும்பமா?” ஹரா கேட்க, “ஏன்டி குடும்பமான்னு கேக்குற?” எங்க பையனுக்கு ரம்யாவ பிடிக்காமல் இல்லை. அவளுக்கும் அப்படி தான். பார்த்துட்டு தான இருக்க.

கடவுளே! என தலையில் அடித்த ஹரா, இதுக்கு தான் கேட்கிறேன். எதிர்ப்பை காட்டாமல் என்ன வேலை இது?

ஏன்டி..என்று சுவாதி அவள் வாயில் கை வைத்து அழுத்த, அம்மாடி எங்களுக்கு எங்க பிள்ளைங்க சந்தோசம் தான் முக்கியம் என்றார் பாட்டி.

சரி பாட்டி. என்னை விடுங்க.

சுவா, இப்ப போனால் சரியா இருக்கும். வாங்க என அனைவரும் அவர்கள் சென்ற திசை சென்றனர்.

ரம்யாவை பார்க்கவென வந்த கீர்த்தனா முகம் சுளித்து ஒரு காலை தூக்கிக் கொண்டு, ஷ்…என ஒரு கையை மரத்தில் வைத்து நின்றாள்.

ஏய் பப்ளி, “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை தள்ளி விட்டு திமிறா வேற பேசுவ?” விகாஸ் கீர்த்தனாவை நோக்கி வந்தான்.

அவள் நிற்பதை பார்த்து, “தவம் பண்ணீட்டு இருக்கியா பப்ளி?” என அவன் கேலியுடன் நகைக்க, கோபமாக கீர்த்தனா காலை கீழே ஊன்றி அவன் பக்கம் திரும்பி..ஆ..என காலை தூக்கிக் கண்கலங்க தடுமாறினாள்.

ஏய், “என்னாச்சு?” விகாஸ் கேட்க, கீர்த்தனா காலில் லேசான இரத்தம் உறைந்து இருந்தது.

பீங்கான் காலில் குத்திடுச்சு. நான் எடுத்துட்டேன். ஆனால் வலிக்குது என அவனை பார்க்க, அவன் குனிந்து அவள் காலை பார்க்க எத்தினிக்க அவனுக்கு பயந்து பின் நகர்ந்து மீண்டும் தடுமாற விகாஸ் கீர்த்தனா கையை பிடித்தான். அவள் அவனை இழுக்க, இருவரும் சேர்ந்தே கீழே விழுந்தனர்.

விகாஸ் மீது அவள் விழுந்து கிடக்க, சோ..சாஃப்ட் என்றான்.

“என்ன?” அவள் கண்களை உருட்ட, முதன் முறையாக விகாஸ் கீர்த்தனாவை ரசித்தான்.

“என்ன சாஃப்ட்?”

“அது அது தான்” என விகாஸ் சொல்ல, “எ..எது? அவள் பயத்துடன் வினவ?” அதான்..அது..என்று அவன் கையை காட்ட, “பொறுக்கி..பொறுக்கி..” என கீர்த்தனா அவளை அடித்தாள்.

பப்ளி, “அதென்ன பொறுக்கி? நீ தான என் மேல விழுந்து இருக்க? அப்ப நீ தான பொறுக்கி?” வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

யூ..யூ..அண்ணாகிட்ட சொல்றேன் பாரு என்று கீர்த்தனா எழ முயல, அவளது இடையில் கை வைத்து அழுத்தி, “சொல்லலாமே!” என்று அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் இதழ்களில் மென் முத்தத்தை பதிய வைத்து, “இப்ப சொல்லு பப்ளி” என விகாஸ் அஸ்கி வாய்சில் பேச, கீர்த்தனா உறைந்து போனாள்.

பப்ளி, “இதுக்கு மேல நீ எழலைன்னா சம்பவம் நடந்துரும்” என்று விகாஸ் சொல்ல, பயந்து நகர்ந்து மரத்தை பிடித்து நின்றாள் கீர்த்தனா.

பப்ளிம்மா..என அவளை நெருங்கிய விகாஸின் குரல் குலைய வந்தது. அவள் அதிர்ந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

டேய் வீ, “என்ன செய்ற?” திலீப் குரல் கேட்க, மா..மா..என குரல் தடுமாற உள்வாங்கிய குரலில் திலீப்பை பார்த்தாள் கீர்த்தனா.

அண்ணா, நான் ஒன்றும் செய்யலை. இங்க பாரு கீர்த்து தான் என் தோளில் கை போட்ருக்கா என்று சொல்ல, கீர்த்தனா கையை எடுத்து கீழே விழ, அவளது கையை பற்றிய விகாஸ் “விழுந்துறாத..”என அவளுக்கு அடிபட்டதை சொல்ல, திலீப் கீர்த்தனாவை பார்த்தான்.

ஒன்றுமில்லை மாமா, காலில் அடிபட்டிருக்கு. அதான். ரம்யாவை பார்க்கணுமே! என கீர்த்தனா கேட்க, “அண்ணா பாப்ஸை நீ போய் பாரு” என்று விகாஸ் கூற,

சரி. “கீர்த்து ரொம்ப வலி இருக்காடா?” திலீப் கேட்க, இல்ல மாமா. நான் போயிடுவேன். நீங்க ரம்யாவை பாருங்க. அவ ரொம்ப நேரம் தனியாகவே இருக்கா என்று ரம்யாவிற்காக வருத்தப்பட்டாள்.

திலீப் அங்கிருந்து சென்றவுடன் விகாஸ் தோளில் வைத்திருந்த கையை எடுத்த கீர்த்தனா, நீங்க கிளம்புங்க. நான் ரம்யாவை பார்த்துட்டு வாரேன் என்றாள்.

மேடம், “இந்த காலோடு எப்படி நடப்பீங்க?”

“அதுக்கு என்ன செய்றது?”

நான் தூக்கிட்டு போறேன்.

“என்னது?”

ஆமா, “தூக்கிட்டு போகவா?” என்று நாவால் கன்னத்தை சுழற்றி அவன் கேட்க, இப்படியெல்லாம் டபுள் மீனிங்கல்ல பேசாதீங்க.

“இது டபுள் மீனிங்கா? ஓ..நான் எடுத்துக்கவா?” என மீண்டும் அவன் அவ்வாறே பேச, அவளுக்கு தலை சுற்றாத குறைதான்.

ப்ளீஸ் விடுங்க. நான் நடப்பேன் என்றாள்.

“கீர்த்து” என மிருளாலினி சத்தம் கேட்டு, பட்டென கீர்த்தனா கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு நகர்ந்து கையை கட்டிக் கொண்டு நல்லவன் போல் நின்றான் விகாஸ்.

“அடப்பாவி” என வாயில் கை வைத்த கீர்த்தனா மரத்தில் சாய்ந்து நின்றாள்.

மிருளாலினி அவளை பார்க்க, அக்கா..அது வந்து என்று விகாஸையும் அவள் காலையும் பார்த்தாள் கீர்த்தனா.

“ரம்யாவை பார்த்தீங்களா?” மிருளாலினி கேட்க, விகாஸ் நடந்து கொண்ட தாக்கத்தில் இருந்தவள் நொண்டிக் கொண்டே அவளருகே சென்று மிருளாலினியை அணைத்து அழுதாள். விகாஸ் ஒரு நிமிடம் பயந்தே போனான்.

“கால் வலிக்குதுக்கா” என அடிப்பட்டதை சொல்ல, “உட்காரு” என அங்கேயே அவள் அமர வைக்க, சுவாதியும் மற்றவர்களும் வந்தனர்.

சுவாதி விகாஸை விழித்து பார்க்க, அவன் புருவத்தை உயர்த்தினான். இல்லை என தலையசைத்து அவளை கோவிலில் விட சொல்லி விட்டு மற்றவர்கள் ரம்யாவை காண சென்றனர்.

ஆற்றோர பகுதியில் கல்லின் மீது அமர்ந்து ஓடுநீரை வெறித்தவாறு பொன் சித்திரமாக கவலையின் உருவே அமர்ந்திருந்தாள் ரம்யா. அங்கே வந்த திலீப் அவளது கவலையான முகத்தை பார்த்து அவனுக்கு மனம் கனத்தது.

அவளை நோக்கி நடந்த திலீப் அவளது அலைபேசி சிணுங்கும் சத்தத்தில் அங்கேயே நின்று விட்டான்.

ரம்யா அதை பார்த்து முறைத்து விட்டு எடுக்காமல் இருந்தாள். மீண்டும் மீண்டும் ஒலிக்கவே கடுப்பான ரம்யா அதை எடுத்து, “உனக்கு என்னடா பிரச்சனை? என்னை நிம்மதியா இருக்கவே விட மாட்டியா?” எனக் கத்தினாள்.

ப்ளீஸ் ரம்யா. உன்னை பார்க்காமல் இருக்க முடியல. “எங்க இருக்க? சொல்லு?” ஜெகன் கெஞ்சினான்.

ஜெகன் போதும். ப்ளீஸ். நான் தான் உன்னை காதலிக்கலைன்னு சொல்லீட்டேன்ல்ல. “எதுக்கு தொந்தரவு செய்ற?” என்னை விட்ரு. உன்னோட பெற்றோர் நிலையை எண்ணிப் பாரு. தேவையில்லாத பிரச்சனைய இழுத்து விட்றாத.

இல்ல ரம்யா, பிரச்சனை வராது. நீ கொஞ்ச நாளாகவே ரொம்ப அமைதியா இருக்க. எனக்கு கஷ்டமா இருக்கு. சொல்லு. நான் இப்பவே வாரேன்.

“இப்பவா? நீ ஸ்கூலுக்கு போகலையா?” கோபமாக ரம்யா கேட்டாள்.

நீ இல்லாம..

போதும் நிறுத்து. நான் இல்லாம இருக்க முடியாது.” நான் எங்கு போனாலும் நீ வருவ தான? வீடியோ கால் வா” என அழைத்தாள் ரம்யா.

ஜெகன் மகிழ்வுடன் அவளை அழைக்க, ரம்யா எடுக்கவும்..வாவ் கார்ஜியஸ். ரொம்ப அழகா இருக்க ரம்யா.

ஆமா, இருக்கேன். இங்க பாரு. நான் இருக்கும் இடத்தில் ஆறு ஒன்று ஓடுது என காட்டினாள்.

உன்னை போல் அதுவும் அழகா இருக்கு.

இப்ப நான் இந்த ஆத்துல்ல இறங்கி சாகப் போறேன். முடிஞ்சா நீயும் என் பின்னாடியே வந்து செத்துப்போ என சொல்ல, திலீப் அதிர்ந்தான்.

ஏய் ரம்யா, “எதுவும் செஞ்சுறாத” அவன் சொல்ல, “நல்லா பாரு” என்று அவள் ஆற்றில் இறங்க, ஜெகன் அலைபேசியில் அலறினான்.

“ரம்யா” என்று சத்தமாக கத்திய திலீப்பை பார்த்து, “திலீப் நீங்களா?” என சொல்லும் போதே தண்ணீர் அவளை இழுக்க விழுந்தாள் ரம்யா. அலைபேசி தண்ணீரில் விழ, ஆற்றுநீர் அவளை அடிக்க அங்கிருந்த கல்லை பற்றிக் கொண்டு திலீப்பை பார்த்தாள்.  திலீப்பும் சிந்திக்காமல் உள்ளே இறங்கி ரம்யாவிடம் கையை நீட்டினான். சரியாக அனைவரும் அங்கு வந்தனர்.

திலீப், ரம்யா..என பலகுரல்கள் கேட்டது. ரம்யா கையை நீட்டினால் ஆற்றோடு ஆறாக சென்று விடுவார். அவள் பிடித்திருந்த கல்லின் அருகே நீர் அதிகமாகவும் ஆழமாகவும் வேகமாகவும் ஓடிக் கொண்டிருந்தது. அவள் தவிப்புடன் திலீப்பை பார்க்க, யார் அழைப்பதும் திலீப் காதில் விழவில்லை. அவன் மேலும் முன்னேற ஆற்றுநீர் அவனையும் இழுத்து தள்ளியது. அவன் நீச்சலடித்தும் தப்ப முடியவில்லை. அவன் அத்தண்ணீருடன் ரம்யா அருகே செல்ல முயன்று, அவளிடமும் வந்து பின்னிருந்து அவளுடன் சேர்ந்து அக்கல்லை பிடித்தான். ரம்யா சோர்ந்து திலீப் மார்பில் சாய்ந்தாள்.

ரம்யா, “கண்ணை மூடாத” திலீப் கத்த, அனைவரின் சத்தத்திலும் அங்கு வேலை செய்யும் ஆட்கள் வந்தனர்.

அச்சோ, “பிள்ளைகள் ஆழமான இடத்துல்ல மாட்டிட்டு இருக்குதுக்களே!”

ஏலேய் மாரி..அந்த கயித்த எடுத்துட்டு வாடா..என்று ஒருவர் கத்த, கயிற்றை அங்கிருந்த மரத்தில் கட்டி உள்ளே இறங்கினான் ஒரு வாலிபன்.

சார், “கையை கொடுங்க” அவன் சொல்ல, “முதல்ல இவள பிடிங்க” என ரம்யா கையை அவரிடம் கொடுக்க, அவன் ரம்யாவை இழுத்து சென்றான். அவள் மயங்கி விட்டாள்.

மற்றொருவன் திலீப்பிற்கு உதவ அவனும் வெளியே வந்தான். தமிழினியன் அனைவரையும் விலக்கி, ரம்யாவின் வயிற்றை அழுத்தினான். அவள் குடித்திருந்த நீர் வெளியேற ரம்யா விழித்தாள்.

திலீப் சோர்வுடன் அங்கிருந்த புல்தரையில் சேறென்றும் பாராது மல்லாந்து படுத்து விட்டான்.

விழித்த ரம்யா எழுந்து அமர, “அனைவரும் நீ நல்லா இருக்கியா?” என பதறினார்கள். அவர்களை பார்த்து விட்டு, திலீப்பை பார்த்தாள். அவனருகே அவன் பெற்றோரும் கீர்த்தனாவும் இருந்தனர்.

விகாஸ் மீண்டும் சீண்டிக் கொண்டிருக்க, அனைவர் சத்தமும் கேட்டு அவர்களும் ஆற்றோரம் வந்தனர்.

ரம்யா ஆடையை சரி செய்து விட்டு தொண்டையை செருமி, “திலீப்” என அழைத்தாள். கண்ணை மூடி படுத்திருந்த திலீப் விழித்து எழுந்தான்.

ரம்யாவும் எழுந்து அவனிடம் வந்து, சாரி..நான் என அவள் பேசும் முன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் திலீப்.

டேய், ”என்ன பண்ற?” விகாஸ் திலீப் கையை இழுத்து பிடிக்க, ரம்யா கன்னத்தில் கையை வைத்துக் கொண்டே அவனை பார்த்தாள்.

“உனக்கு பிரச்சனைன்னா எங்க யார்கிட்டயாவது சொல்ல வேண்டியது தான? அவனுக்கு ப்ரூஃப் பண்ண என்ன காரியம் செய்ய பார்த்த?”

“யார்கிட்ட சொல்ல?” என்னால யாரிடமும் சொல்ல முடியாது ரம்யாவும் எதிர்த்து சத்தமிட்டாள்.

அடிச்சேன்னா பார்த்துக்கோ. இந்த வாய் தான் எல்லா பிரச்சனைக்கும் அஸ்திவாரம் என்ற திலீப், உனக்கு அண்ணனுக இருக்கானுக. உன்னை நினைச்சு எல்லாரும் கஷ்டப்படுறாங்க. இப்ப உனக்கு ஏதாவது ஆகி இருந்தால் எல்லாருக்கும் குற்றவுணர்வாகிப் போகும்.

எல்லாரும் எல்லாரும் என்ற திலீப் சொல்ல, “நீ வருத்தப்பட மாட்டாயா?” என ரம்யாவின் இதயம் கேட்க, கோபத்தில் அவள் மேலும் பேசினாள்.

என்னோட பிறந்தவனுக்கே நான் தேவையில்லை. நான் அநாதை தான. யாரும் பற்றி கவலைப்பட தேவையில்லை.

திலீப் முறைத்து அவளை மீண்டும் அடிக்க வர, அன்னம் ரம்யாவின் மறுகன்னத்தில் அறைந்து விட்டு,

வாய திறந்த கொன்றுவேன். அநாதையாம் அநாதை. இதுக்கு தான் நம்ம வீட்டுக்கு வாடி. விடுதியெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன். “பேச்சை நீ கேட்காம இருந்துட்டு எல்லாரும் கஷ்டப்படுற மாதிரி பேசிட்ட?” என்று கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்த அன்னம்.

நீ அநாதைன்னா..”எதுக்காக திலீப் மாப்பிள்ள அவர் உயிரையும் பொருட்படுத்தாமல் உன்னை காப்பாற்ற வரணும்? இத்தனை பேர் உனக்காக எதுக்கு துடிக்கணும்?” நீ அநாதையா இருந்தா எப்பவோ செத்து போயிருப்படி என்று கதறி அழுதார்.

ரம்யா கண்ணீர் நிற்காமல் மடிந்து அழுதாள்.

அன்னம், “பிள்ளைக்கிட்ட என்ன பேச்சு பேசுற?” பரிதி சத்தமிட்டார். அனைவரும் கண்கலங்க நின்றிருந்தனர். ரித்திகாவும் நட்சத்திராவும் ரம்யா தோளில் கை வைத்தனர். அவள் அவர்களை பார்த்தாள்.

உன்னோட கஷ்டம் புரியுது ரம்யா. இத்தனை நாள் வாழ்ந்தவர்களை விட முடியாத தவிப்பு. ஆனால் இப்ப தான் நிலைமை சரியில்லை. ஒரு நாள் கண்டிப்பாக மாறும். துளசி கண்டிப்பா புரிஞ்சுப்பா. “அதுக்காக அநாதைன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற?”

அத்தை, நீ வந்தால் தான் கோவிலுக்கு போகணும்ன்னு மாமாகிட்ட சொன்னாங்க ரம்யா. அவங்க உன்னை தன் மகளா தான் பாக்குறாங்க. இருக்கிற உறவுகளை புரிஞ்சுக்கோடா.

“இங்க பாரு பாசமில்லாமல்லா அப்பத்தா வீல் சேருடன் உன்னை பார்க்க வந்துருக்கு?” என நட்சத்திரா சொல்ல, கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்த ரம்யா..நட்சத்திராவின் அப்பத்தாவை பார்க்க, கண்ணீருடன் கையை நீட்டினார். சிறுபிள்ளையாக ஓடி அவரது மடியில் முகத்தை புதைத்து அழுதாள்.

ஏன்டி, “இப்படி பண்ண?” இனி இந்த மாதிரி செய்ய தோணுச்சுனா..இங்க இருக்கும் அனைவரின் கலவர முகம் தான் உனக்கு நினைவிற்கு வரணும் என்றார்.

நிமிர்ந்து அவரை பார்த்து விட்டு அங்கிருந்தவர்களை பார்க்க, அனைவரின் முகத்திலும் இருந்த கவலையை பார்த்து எழுந்து திலீப்பை பார்த்தாள். அவன் கோபமாக கையை கட்டிக் கொண்டு திரும்பி நின்று கொண்டிருந்தான்.

காதில் கையை வைத்து சாரி. எல்லாரையும் பயமுறுத்திட்டேன். கஷ்டப்படுத்திட்டேன். அது…அண்ணாவை பார்க்காம இருந்தேன்ல்ல அதுனால தான் இப்படி பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்க என்று கையை கூப்பினாள் ரம்யா கண்ணீருடன்.

பாட்டி அவளருகே வந்து, “அவளது தலையை தடவியவாறு உனக்கு எப்பொழுதும் நாங்க இருக்கோம்டா” என்று ஆதரவாக பேசினார். மற்றவர்களையும் ரம்யா சமாதானப்படுத்த, கீர்த்தனா, திலீப், அன்னம் கோபம் மட்டும் குறையவேயில்லை.

கீர்த்து, அன்னம்மா ரம்யா அவர்களிடம் செல்ல, “பேசாத” என்று இருவரும் ஒரே போல் சொல்லி விட்டு கோபமாக விலகி சென்றனர்.

பாருடா பப்ளிக்கு கோபத்தை விகாஸ் முணங்க, “என்னடா?” என அவன் அப்பா கேட்டார்.

“ஒன்றுமில்லையே!” என பல்லை விகாஸ் காட்டினான்.

“திலீப்” என ரம்யா அவனருகே செல்ல, “ரம்யா” என்ற குரலில் திகைத்து அவள் திரும்பி பார்த்தாள்.

ஜெகன் அவனுடைய பெற்றோர் உதவியுடன் ரம்யாவை பற்றி விசாரித்து வந்திருந்தான்.

“ஜெகன், நீயா?” என ரம்யா அவனை பார்க்க, திலீப் கோபமாக அவனை அடித்தான்.

“அடிக்காதப்பா” என ஜெகன் அம்மா அவனிடம் கெஞ்ச, “திலீப் வேண்டாம்” என ரம்யா அவர்களுக்கு இடையே சென்றாள்.

“இவனால தான் தப்பான முடிவுக்கு போன?” கேள்வி ரம்யாவிடம் இருந்தாலும் ஜெகனை அடிப்பதை திலீப் நிறுத்தவில்லை.

இல்லை, இவனால் நான் இந்த முடிவுக்கு வரலை என்ற ரம்யாவின் குரலால் திலீப் ஜெகனை அடிப்பதை நிறுத்த, “என்ன நடக்குது?” விக்ரம் சத்தமிட்டான்.

திலீப் நடந்ததை சொல்ல, அண்ணா..அதெல்லாம் இல்லை என்று ரம்யா கூற, திலீப் அவளை முறைத்தான்.

“விசயத்தை தெளிவா சொல்லு” சிம்மா சினமாக ரம்யாவிடம் கேட்டான்.

அண்ணா..ஒரு நிமிடம் என்று ஜெகன் பெற்றோரை பார்த்து, சாரி ஆன்ட்டி, சாரி அங்கிள். நான் முன்பே ஜெகனை பற்றி உங்களிடம் பேசி இருக்கணும். எனக்கு அவன் என்னுடன் படிப்பவன் மட்டும் தான். எனக்கு அவன் மீது விருப்பம் கூட இல்லை. அதனால இனி அவன் என் பக்கம் வராமல் பார்த்துக்கோங்க..

நிறுத்தும்மா. “சும்மா மன்னிப்பு கேட்டு பிரச்சனையை சரி செஞ்சிடலாமா?  அவன் யாரு என் மகனை அடிக்க? நாங்க யாருன்னு உனக்கு தெரியாமலா இருக்கும்?” உன்னோட தகுதிக்கு எங்க பக்கம் நிற்க கூட முடியாது. நான் இப்பொழுது நினைத்தாலும் உன்னை என் மகனுக்காக தூக்க கூட முடியும் என்று ஆத்திரமாக அவர் பேச, “டாட்..” ஜெகன் என சத்தமிட்டான்.

“என்ன சொன்னீங்க?” நாங்க இரு நாட்கள் இந்த ஊர்ல தான் இருப்போம். அவள் எங்க குடும்பத்துல்ல ஒருத்தி தான். முடிஞ்சா அவளை தூக்கிட்டு போங்க. பார்க்கலாம் என்றான் சிம்மா.

“எவ்வளவு திண்ணக்கம் இருந்தா என்னோட தங்கையை தூக்குவன்னு சொல்வ?” என்று விக்ரம் அவரை அடிக்க வந்தான்.

“விக்ரம்” என்ற சிம்மா அவனை தடுத்து பிடிக்க, விடுடா அண்ணா, இந்த ஆளு பெரிய மனுசன் மாதிரியா பேசுறாரு என கத்தினான்.

தாத்தா ஜெகன் அப்பாவிடம் வந்து, நீ யாருன்னு எனக்கு நல்லா தெரியும். “என்னோட பேத்தி உன் பக்கம் நிற்க முடியாதா?” நீ தான் அவ பக்கம் நிற்க முடியாது என்று அவர் கழுத்தை பிடிக்க, “ஏய்..கிழவா விடுய்யா..” என அவர் தாத்தாவை தள்ள, “தாத்தா” என அவரின் பேரன்கள் எல்லாரும் முன் வந்தனர்.

தாத்தா, அந்த ஆளை விடுங்க. டேய்..ஒழுங்கா மரியாதையா ஓடிரு. இனி எங்க பாப்ஸ் பக்கத்துல வந்த உன்னை உயிரோட விட மாட்டோம் என விகாஸ் சீற்றமாக பேச, திலீப் அவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

சாரி, இனி நான் ரம்யாவை தொந்தரவு செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சிருங்க என்றான் ஜெகன்.

“மன்னிப்பா? என்ன பேச்சு பேசுறான் உன் அப்பன்?” சினமாக புகழேந்தியிடமிருந்து வந்தது வார்த்தைகள்.

டாட், நீங்க கிளம்புங்க. என்னால நடந்த தப்புக்காக மன்னிப்பு கேட்க தான் வந்தோம். ஆனால் ரம்யாவை நீங்க பேசியது தப்பு. நீங்களும் மன்னிப்பு கேளுங்க என ஜெகன் சொல்ல, “என்னது நான் மன்னிப்பு கேட்கணுமா?” அவர் திமிறாக பேசினார்.

உனக்கு உன்னோட பதவி தேவையில்லைன்னு நினைக்கிறேன் என்ற தாத்தா, திலீப் உன்னோட அலைபேசியை கொடு என்று கேட்டார்.

“எதுக்கு தாத்தா?” நாமும் அவங்கள மாதிரி சீப்பா நடந்துக்க கூடாது என்றான் அவன்.

நான் எனக்காக கேட்கலை. என் பேத்திகாக கேட்கிறேன். கொடு ராஜ்கட்டிற்கு கால் பண்ணா இவன் வேலை என்னாகும்ன்னு அவனுக்கு தெரியணும் என்றார்.

தாத்தா, “வேண்டாம்” என்ற ரம்யா, அங்கிள் ”ப்ளீஸ் கிளம்புங்க” என்றாள் ரம்யா.

ரம்யா, “நீ எதுக்கு ப்ளீஸ் பண்ற?” திலீப் கொந்தளித்தான்.

திலீப், “பிரச்சனை வேண்டாமே!” என ரம்யா கண்ணை சுருக்கி கேட்டாள்.

திலீப் அம்மா ரம்யாவிடம் வந்து, “யாரும் என்னமும் செய்யுங்க” என ரம்யாவை ஓரிடத்தில் அமர வைத்து தலையை துவட்டி விட்டு,

டேய்..இந்தா துவட்டிக்கோ என திலீப்பிடம் துவாலையை போட்டு விட்டு, வாம்மா..ஆடையை மாத்திக்கோ என்று அழைத்து சென்றார்.

அவ சொன்னதும் சரிதான் தாத்தா. பிரச்சனை வேண்டாம் என்ற திலீப், உன்னை அடித்ததற்கு சாரி. இதுக்கு மேல ரம்யா அருகே நீ வந்து அவளை தொந்தரவு செய்தால் உன்னால் எங்கேயும் படிக்க முடியாமல் போயிடும் என அவனது மெயின்பாயிண்டில் கையை வைத்தான் திலீப்.

நீங்க யாரு? ஜெகன் அப்பா தாத்தாவிடம் அரண்டவாறு கேட்க “கர்னல் சேகர்” என்றார் அவர்.

இனி உங்க பேத்தி பக்கம் கூட நாங்க வர மாட்டோம் என்றார் ஜெகன் அப்பா.

உங்க தங்கையை நல்லா பார்த்துக்கோங்க என ஜெகன் திலீப்பிடம் கூற, “அவ என்னோட தங்கைன்னு நான் உன்னிடம் சொன்னேனா?” திலீப் பல்லை கடித்து கேட்க, “அண்ணாவா?” என விகாஸ் சிரித்தான்.

அண்ணா, இல்லையா? ஜெகன் கேட்க, சுவாதி அவனிடம் வந்து, இவன் என்னோட அண்ணன். “ரம்யாவிற்கு மாமா” என்றாள் சுவாதி.

சுவா..என திலீப் அவளை முறைக்க, அண்ணா..விக்ரம் அவளுக்கு அண்ணான்னா நீ மாமா தான? சுவாதி கேட்க, சுவாதி கூறிய மாமாவில் மனதினுள் மகிழ்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், தாத்தா..வாங்க. நான் கோவிலுக்கு போகிறேன் என்று அவன் புன்னகையுடன் சொல்லி விட்டு சுவாதியை பார்த்தான்.

சுவாதி கீர்த்தனாவிடம் வந்து, ஏய்..அண்ணா சிரிக்கிறான். கீர்த்து..சக்சஸ் என்று சுவாதி கீர்த்தனாவை அணைத்தாள்.

என்ன? ஜெகன் அதிர, கிளம்புங்க. எல்லாரும் கோவிலுக்கு போகலாம் என கிளம்பினர்.

அன்னமும் கீர்த்தனாவும் ரம்யா மீது சினமுடன் இருக்க, கோவிலுக்கு வந்த திலீப் அம்மாவையும் ரம்யாவையும் பார்த்து திரும்பிக் கொண்டனர்.

“இங்க உடை மாற்றும் இடம் இருக்கா அண்ணி?” என்று திலீப் அம்மா கேட்க, “அண்ணியா?” என அன்னம் திரும்பி திலீப் அம்மாவை பார்க்க, ரம்யாவும் அவரை பார்த்தார்.

“நான் கேட்டேன்” என அவர் சொல்ல, இங்க மாத்த முடியாது. வீட்டுக்கு போகணும் என்றார் அன்னம்.

“அம்மா” என ரம்யா அவரிடம் வர, அவர் நகர்ந்து என்னிடம் பேசாத. “உனக்கு நாங்க யாரோ தான?” என கோபமாக கேட்டார்.

சாரிம்மா, “இனி பிரிச்சு பேச மாட்டேன்” என்றாள் ரம்யா.

அன்னம் கண்கலங்க, இனி இப்படி பேசுன நான் உன்னிடம் பேச மாட்டேன் என சொல்ல, அவரை கட்டிக் கொண்டாள் ரம்யா கண்ணீருடன்.

“கீர்த்து” ரம்யா அழைக்க, “போ. என் பக்கத்துல வராத” என கீர்த்தனா அழுது கொண்டே ஓடினாள்.

“சாரி கீர்த்து” என ரம்யா அவள் பின் ஓட, எதிரே வந்த திலீப் மீது கீர்த்தனா மோதினாள்.

கீர்த்தும்மா, “எதுக்கு ஓடி வர்ற?” திலீப் பதட்டமாக, மாமா அவ கூட நான் பேச மாட்டேன் என்றாள்.

“சாரி கீர்த்து” என இருவர் முன்னும் மூச்சிறைக்க வந்து நின்றாள் ரம்யா.

“நீ இன்னுமா ஆடையை மாற்றலை?” திலீப் கேட்க, அவள் அவனை பார்த்து விட்டு, “கீர்த்து பேச மாட்டாளாம்” என கண்கலங்க, “நீ என்ன வேலை பார்த்துட்ட? உயிரே போச்சு” கீர்த்தனா அழுதாள்.

கீர்த்து நான் வேண்டுமென்றே இறங்கலை. அவனை பயமுறுத்த செய்தேன். ஆனால் விழுந்துட்டேன். இப்ப நல்லா தான இருக்கேன். ப்ளீஸ்டா கோவிச்சுக்காத. மனசும் சரியில்லாமல் இருந்ததால் கொஞ்சம் வீக் ஆகிட்டேன். “இல்ல நானே வந்துருப்பேன்” என ரம்யா சொல்ல, ஆமா மேடமுக்கு ஜான்சிராணின்னு நினைப்பு திலீப் கோபமாக பேசினான்.

ஆமா, “நான் ஜான்சி ராணி தான்” என்று வாலை எடுத்து சுழற்றுவது போல் காற்றில் ரம்யா விளையாட்டு காட்ட, கீர்த்தனா புன்னகைத்தாள்.

“ஜான்சிராணி கையில குழந்தையும், குதிரையிலும் வருவாங்களே!” திலீப் குறும்புடன் கேட்க, அவனை முறைத்த ரம்யா..ரொம்ப முக்கியம்.

கீர்த்து, என் செல்லம்ல்ல.. பேசுவேல்ல என கேட்டாள்.

ம்ம்ம்.. “இனி இவ்வாறு செய்யாதே!” என்ற கீர்த்தனா, “மாமா நீங்க ரம்யாவை மன்னிச்சுட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“மன்னிக்கணுமா? என்னால முடியாது” என திலீப் ரம்யாவை முறைத்தான்.

திரும்ப முதல்ல இருந்தா..என ரம்யா சோர்ந்தாள்.

திலீப் அம்மாவும் அன்னமும் அவர்களிடம் வந்தனர்.

“திலீப் நீ ஆடை மாத்திட்டீயா?” காரை எடு. வேற வழியில் செல்லலாம் என்ற அவன் அம்மா. ரம்யா வா. வீட்டிற்கு சென்று ஆடையை மாத்திட்டு வரலாம் என மூவரும் கிளம்பினர்.

வீட்டிற்கு வந்து அன்னம் சொன்ன இடத்திலிருந்து ஆடையை எடுத்து விட்டு, திலீப் நீ இங்கேயே இரு. ரம்யாவை ஓர் அறைக்கு அழைத்து சென்றார். திலீப் அலைபேசியில் மூழ்கி இருந்தான்.

திலீப் அம்மா வெளியே வந்து, ரம்யா வந்தான்னா இருக்க சொல்லு. நான் பக்கத்துல்ல கடைக்கு போயிட்டு வாரேன் என்றார்.

அம்மா, “என்ன வாங்கணும்?” சொல்லுங்க. நான் வாங்கிட்டு வாரேன்.

“பூ, மாலையெல்லாம் பார்த்து வாங்கிடுவியா?” அவர் கேட்க, “வாங்க நாம இருவருமே போயிட்டு வரலாம்” என்றான்.

“வயசு பிள்ளைய தனியா விட்டு போகச் சொல்றீயா?” நீ இரு. நான் வாங்கிட்டு வாரேன் என்று அவர் வெளியேறினார்.

“ஆன்ட்டி” என ரம்யா சத்தம் கொடுக்க, கதவின் பக்கம் வந்த திலீப், “என்ன வேணும்?” எனக் கேட்டாள்.

இல்ல, ஆன்ட்டி..எனக் கேட்டாள்.

“அம்மா கடை வரைக்கும் போயிருக்காங்க” என்றான்.

“கடைக்கா?” என அவள் கேட்க, ஆமா..”என்னாச்சு? தயாராகிட்டியா?” அம்மா உன்னை வெளிய வந்து அமர சொன்னாங்க என்றான்.

அது..அது என தயங்கினாள்.

“என்ன?”

நான் தயாராகிட்டேன். ஆனால் நான் வர முடியாது. “ஆன்ட்டி வந்த பின் வாரேனே!” என்றாள்.

அம்மா வந்தவுடனே கிளம்பணும். இன்னும் ஒரு மணி நேரத்துல்ல கோவில்ல பூஜை இருக்காம். தயாராகிட்டேல்ல. வெளிய வா என்றான்.

இல்ல, “நாட் போட முடியலை” என்றாள்.

“என்ன?”

பேக் நெக் நாட் போட முடியல. ஆன்ட்டி வந்தவுடன் போட்டுட்டு வாரேன் என்றாள்.

“ஆடையை மாத்திட்டேல்ல?” திலீப் கேட்க, ம்ம்..என்றாள்.

கதவை திற..

“என்ன?”

ஆமா, கதவை திற.

முடியாது .

நீ திறக்கலைன்னா. நான் உடைச்சிருவேன் என்ற நிமிடம் கதவை திறந்தாள்.

அழகு சிலையாக ரம்யா புடவையில் விழிகளுக்கு காஜலிட்டு, ரோஜா இதழ்களில் லேசான உதட்டு சாயம், செயின், நெக்லஸ் என அணிந்து இருந்தாள்.

கண்ணெடுக்காமல் திலீப் அவளை மேலிருந்து கீழாக பார்த்து அசந்து விட்டான். அவன் பார்வையில் கூச்சத்துடன் நெளிந்தாள்.

திலீப், ஆன்ட்டி வாராங்களான்னு பாருங்களேன். திலீப்..திலீப்..என ரம்யா அழைக்க, அவன் அசையாது நின்றான்.

அவன் தோள்களை பற்றி அவள் உலுக்க, விழித்தவன் போல் ஹ..என கேட்டான்.

ஆன்ட்டி வாராங்களான்னு பாருங்க என்றேன்.

ஓ..என சுயம் வந்து, அவளது முகத்தை உற்று பார்த்தான்.

திலீப், “எதுக்கு இப்படி பாக்குறீங்க?”

“ஒண்ணுமில்லை” என்ற திலீப் அவளை திருப்பினான்.

அய்யோ, “என்ன பண்றீங்க?”

“நாட் தான நானே போட்டு விடுறேன்” என்றான்.

“என்னது?”

“திரும்பும்மா” என அவளை திருப்பி புன்னகையுடன் போட்டு விட்டான். அவள் பெருமூச்சு விட்டாள். அவள் செய்கையில் அவன் புன்னகைத்தான்.

“உட்காரு” என அவளை அமரச் சொல்லி எதிரே அமர்ந்தான். அவன் கண்கள் அவனையும் மீறியும் அவளிடம் நிலைத்தது.

“எதுக்கு இப்படி பாக்குறாரு?” என மனதினுள் எண்ணியவாறு, சாரி என்றாள்.

“எதுக்கு?”

“என்னால நீங்களும் பயந்துட்டீங்கல்ல?”

ம்ம்..பயந்துட்டேன் என மனதில் எண்ணிய திலீப், “அப்படியெல்லாம் இல்லையே!”

ஓ..”கோபம்?”

இல்லை..

அவன் பதிலில் மனம் ஓய்ந்தது ரம்யாவிற்கு. அவளுக்கு திலீப்பை முதலிலே பிடித்து விட்டது.

“அவன் பேசிய பேச்சு அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா?” அதிலும் அவன் அடிக்கடி அவளை சொல்லும் சின்னப்பிள்ளை. அதனால் தான் அவனிடமிருந்து விலகியே இருக்க எண்ணினாள். ஆனால் அவளால் முடியலை. ஆனால் இனி அவ்வாறு தான் இருந்தாகணும் என எண்ணியவாறு விரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்த திலீப், “நீ யாரையாவது காதலிக்கிறியா?” என பட்டென கேட்டு விட்டான்.

“நா நானா? இல்லையே!” என் வாழ்க்கைக்கு அது ஒண்ணு தான் கேடு. எனக்கு பிடிச்ச யாருக்காவது ஏதாவது ஆகிடும். இல்லை அவங்க பக்கம் கூட போக முடியாது.

“அப்படியிருக்க காதல் செய்து உயிரே இல்லாமல் வாழ்வதற்கா?” என கேட்டாள். திலீப்பிடம் வலியை காட்டக் கூடாது என சாதாரணமாக பேசினாலும் இதயத்தை கிழித்து தான் அந்த வார்த்தையை உதிர்த்தாள்.

“எதுக்கு இவ்வளவு விரக்தி?” திலீப் கேட்க, ப்ளீஸ் திலீப். எனக்கு சோர்வா இருக்கு. “இதை பற்றி பேச வேண்டாமே!”

சரி, “காதலை பற்றி என்ன நினைக்கிற?” அவன் கேட்க, “எதுக்கு காதல் பத்தியே கேக்குற?” யோசனை முகத்துடன் அவள் வினவினாள்.

சும்மா. எல்லாருடைய எண்ணமும் ஓரளவு தெரியும். நீ என்ன நினைக்கிறன்னு கேட்க தோணுச்சு.

“காதல்…நாம விடும் மூச்சுக்காற்று” என முடித்தாள். திலீப் அசந்து அவளை பார்த்தான். ஆனாலும் “அது என்ன மூச்சுக்காற்று?” எனக் கேட்டான்.

“நம்மால் மூச்சில்லாமல் இருக்க முடியுமா?” முடியாதுல்ல. அதே போல தான் காதல். காதலிக்கிறவங்க இல்லாமல் ஒரு நொடி கூட வாழ முடியாது. அப்படி வாழும் வாழ்க்கை கொடுமையானது. அதை என் அண்ணா, அண்ணிக்கு கொடுக்கக் கூடாதுன்னு தான் அவங்கள விட்டு விலகி இருக்கேன் என்றாள்.

ம்ம்..சூப்பர். கிரேட்..அழகா சொன்ன என்று ரம்யாவை பாராட்டினான். அவள் புன்னகைத்தாள்.

ரம்யா, “நீ தப்பா எடுத்துக்கலைன்னா ஒரு பிக் நாம எடுத்துக்கலாமா?” அவன் கேட்க, அவளுக்கு இனிய அதிர்ச்சி.

ம்ம்..சுயர் என்று அவனருகே வந்து அமர்ந்தாள். இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புன்னகையுடன் அதை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார் திலீப் அம்மா.

“கிளம்பலாமா?” என்று “திலீப் இதை கார்ல்ல வை” என்று அவர் வாங்கி வந்த பொருட்களை கொடுத்தார். மூவரும் கோவிலுக்கு செல்ல, அங்கே பூஜை ஆரம்பிக்க, அனைவரும் அதில் கலந்து கொண்டனர். அன்றைய நாள் அனைவருக்கும் மகிழ்வுடன் கழிந்தது. அன்றிரவே அனைவரும் பரிதி, புகழேந்தி வீட்டிற்கு சென்றனர்.

காலையில் ரம்யா விடுதிக்கு கிளம்ப, நட்சத்திரா அவளிடம் நாளை அவள் சென்னை கிளம்புவதாக சொல்லி, ரித்து இனி இங்கே தான் இருக்கப் போறா. அவ உன்னை பார்த்துப்பா என்று அவளை அணைத்து விடை கொடுத்தாள். திலீப் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டி, தாத்தா குடும்பத்தினர்களும் சென்னைக்கு கிளம்பினார்கள்.

இரு நாட்கள் கழிந்தது.

அஜய்- தியா சிம்மா வீட்டிற்கு வந்தனர். அவர்களை எதிர்பார்க்காத நட்சத்திரா புன்னகைத்து வரவேற்றாள். அவர்கள் சொன்ன செய்தியில் அதிர்ந்தே விட்டாள்.

அங்கே தான் விக்ரம், மகிழும் இருந்தனர்.

தியா, “உறுதியா இருக்கிறாயா?” சிம்மா கேட்க, ஆமா அண்ணா, நாளை எங்களுக்கு நிச்சயம் எல்லார் முன்னும் சிறப்பாக நடக்க உள்ளது. வினித்தால் வர முடியாது.

அண்ணா, “நீங்களும் மேம்மும் தான் என் உறவாக வரணும்” என்று கண்கலங்கினாள்.

அஜய் சார், “என்னது?” நட்சத்திரா கேட்க, தியா கையை இறுக பற்றி அதை காட்டி, இவளோட கையை நான் என் உயிர் இருக்கும் வரை விட மாட்டேன் நட்சத்திரா. நான் தியாவை மனதார காதலிக்கிறேன் என்றான்.

சிம்மா அவனை முறைத்துக் கொண்டே, “உனக்கு எப்படி காதல் வந்தது? பழி வாங்க முதல் போல நடந்துக்க நினைக்கிறீயா?” சிம்மா கர்ஜித்தான்.

“அண்ணா” என தியா அதிர்ந்தாள்.

எனக்கு எல்லாமே தெரியும் தியா. அன்று கிளப்பில் நடந்தது. இவன் உன்னை பாலோ செய்தது என அனைத்தையும் ஆட்கள் வைத்து கண்காணித்தேன். என்னால இவனை நம்ம முடியாது என்றான் சிம்மா.

விக்ரம் அஜய்யை அளவிடுவது போல் பார்த்தான்.

“மாமா” நட்சத்திரா அழைக்க, “ஷ்..பேசாத ஸ்டார்” என்றான் சிம்மா.

அண்ணா, அன்று போல் இவர் இல்லை. ப்ளீஸ் அண்ணா..என தியா கெஞ்ச, சிம்மா தியாவை அவன் பக்கம் இழுத்து, இதை நடக்க விட மாட்டேன் என்றான்.

சிம்மா, நம்பு. நான் முன் போல் இல்லை. தியாவை நல்லா பார்த்துப்பேன். அவளை தவிர என்னால யாரையும் நினைக்க முடியாது அஜய் சொல்ல, சிம்மா அமைதியாக இருந்தான்.

“என்ன செய்யணும் சொல்லு?” அஜய் கேட்க, கீழே போனா..வலது பக்க ரோட்டின் ஓரத்தில் ஒரு கிணறு இருக்கு. அதுல்ல நீ குதிக்கணும். தியாவிற்காக. “நீ தான் காதலிக்கிறாயே!” என சொல்லி முடிப்பதற்குள் அவன் வேகமாக செல்ல, தியா பதறி போனாள்.

அண்ணா, “என்ன பண்ணீட்ட?” அஜூ..போகாதீங்க என தியா பின்னாடியே ஓட, அங்கிருந்தவர்கள் சிம்மாவை குழப்பமுடன் பார்த்தனர்.

சிம்மா, ஏதும் ஆகி விடாமல்டா. உறுதியா இருக்கிற மாதிரி தான் இருக்குடா என்றான் விக்ரம்.

“என்ன மாமா?” என சமையலறைக்கு அந்த பக்கம் உள்ள கதவு வழியே வெளியே பார்த்தாள் நட்சத்திரா. விக்ரம், மகிழன், சிம்மாவும் அவ்விடம் வந்து பார்த்தனர்.

சிம்மா சொன்ன இடத்தில் கிணறே இல்லை. அஜய்யும் தியாவும் மேலிருந்தவர்களை பார்க்க, சிம்மா புன்னகையுடன் “உள்ள வாங்க மாப்பிள்ள சார்” என்றான்.

அஜூ, “அண்ணா ஒத்துக்கிட்டாங்க” என தியா அவனை தாவி அணைக்க, அனைவரும் மகிழ்ந்தனர்.

வீட்டிற்கு அவர்கள் வரவும் அவர்களிடம் நடந்த கதையை பேசினார்கள். தமிழ் சாரையும் பார்த்து அழைக்கணும் என்றாள் தியா.

தியா, “இப்ப அங்க மொத்த குடும்பமும் இருப்பாங்களே!” நட்சத்திரா சொல்ல, அதனால் என்ன அழைச்சிட்டா போச்சு. அங்கே எனக்கு சிலரை தெரியும் என்றான் அஜய்.

“உங்களுக்கு யாரை தெரியும்?” மகிழன் கேட்க, ரகசியன் பிசினஸ் மீட்ல்ல தெரியும். ஆனால் அவனுக்கு என்னை பிடிக்காது. நான் அவனுக்கு செய்தது அப்படி என்றான்.

“அவர் என்னோட தங்கையை திருமணம் செய்து கொள்ளப் போறவர்” என்றான் விக்ரம் முறைப்புடன்.

அப்பொழுது இருந்த புரியாத மனநிலையில் அவரிடம் அதிகமாக பேசிட்டேன். நான் மன்னிப்பு கூட கேட்டுக்கிறேன்.

“அப்புறம் யாரை தெரியும்?” சிம்மா கேட்க, கிளப்ல்ல வச்சு விகாஸை தெரியும் என்றான்.

ம்ம்..சரி தான் என்றான் சிம்மா புன்னகையுடன் விக்ரமை பார்த்து.

ஸ்டார் கிளம்பு. எல்லாருமே போகலாம் சிம்மா சொல்ல, அர்சு தூங்கி எழுந்து வந்தான்.

அஜய்யை பார்த்து, அஜய் அங்கிள் என்னோட அப்பா, அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நீங்க கல்யாணம் பண்ணிக்க முடியாது என்றான்.

ஆமாடா செல்லம், நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். உன் அம்மாவை அல்ல. என்னோட பேப்பை என்று தியாவை அணைத்தான். அவன் வயிற்றில் இடித்து, “சின்னப்பையன் முன்னாடி என்ன இது?” தியா முறைத்தாள்.

தியா ஆன்ட்டி, “நீங்க அஜய் அங்கிளையா கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?”

ஆமாடா, அர்சு குட்டி.

கல்யாணம் பண்ணா பாப்பா வருமாம். எங்களுக்கு சீக்கிரம் பாப்பா வரும். உங்களுக்கும் பாப்பா வரும்ல்ல. “நான் பாப்பா கூட விளையாடலாமா?” அர்சு கேட்க, தியா வெட்கத்துடன் அஜய் பின் மறைந்து கொண்டாள்.

கண்டிப்பா அர்சு. பாப்பா வந்த பின் நாம மூவரும் உங்க ஆன்ட்டிய விட்டுட்டு விளையாடலாம் என்றான். அவன் முதுகில் ஓர் அடியை தியா போட, பாரு உன்னோட ஆன்ட்டி அடிக்கிறா என கேலிப்பேச்சுடன் தமிழினியன் வீட்டிற்கு சென்றனர்.

அஜய்யை பார்த்த ரகசியன் அவனை முறைத்து விட்டு, “எனக்கு வேலை இருக்கு” என எழுந்தான்.

ரகசியன் நில்லுங்க, அன்று கொஞ்சம் மமதையில் அதிகமா பேசிட்டேன். மன்னிச்சிருங்க. நாளை மாலை எனக்கும் தியாவிக்கும் நிச்சய விழா இருக்கு. எல்லாரும் கண்டிப்பா வந்திருங்க என பாட்டி, தாத்தாவையும் பார்த்தான்.

“நீ யாருப்பா?” பாட்டி கேட்க, அஜய்யை பற்றிய அனைத்தையும் தாத்தா சொல்ல, அவன் புன்னகையுடன் எங்களுக்கு தாத்தா, பாட்டின்னு யாருமில்லை. நீங்க வந்து தான் விழாவை நடத்தி தரணும் என எல்லா குடும்பத்தையும் அழைத்து விட்டு கிளம்பினார்கள். அன்று தமிழ் வீட்டில் அஜய் பற்றிய பழைய, புதிய நிகழ்வுகள் தான் ஓடிக் கொண்டிருந்தது.

அஜய்- தியாவின் நிச்சய விழா சிறப்பாக தொடங்க, அனைவரும் வந்திருந்தனர். பாலா அவன் குடும்பத்துடனும் நிஷாவுடனும் வந்திருந்தான். ரகசியனும் அவனும் தோழர்கள் ஆதலால் நன்றாக பேசினர். நிஷா சிம்மா, நட்சத்திராவிடம் உதிரன்- ரித்துவை பற்றி விசாரித்தனர்.

விழா முடிய அனைவரும் இணைந்து மகிழ்வுடன் புகைப்படம் எடுத்தனர். இது போல் அனைவர் வாழ்வும் சிறக்க வாழ்த்துக்கள்.

         (முற்றும்)