பொருட்கள் சிலவற்றை வாங்கி விட்டு மதிய உணவிற்கு பின் ஆடை எடுக்க தமிழினியன் குடும்பத்துடன் மாலினுள் நுழைந்தான். பெண்கள் அனைவரும் மிருளாலினியை அழைத்து அவளுக்கு பிடித்த ஆடையை கேட்டு புடவையை குவித்து வைத்துக் கொண்டிருக்க, “பெரியம்மா..நீங்க எல்லாரும் எடுத்துட்டு இருங்க” என்ற தமிழினியனை நிறுத்திய சுவாதி,
அண்ணி, “உங்க திருமணப் புடவையை எடுத்துட்டீங்கல்ல?” என்று கேட்டாள்.
ம்ம்..என்று மிருளாலினி தலையசைக்க, வாங்க என்று மற்ற மாடர்ன் ஆடைகளை வாங்க மிருளாலினியை அழைத்தாள்.
மிருளாலினி அன்னம், வேல்விழியை பார்க்க, “சுஜி நீயும் தேவா மாப்பிள்ளையும் அவங்களுடன் போயிட்டு வாங்க” என்று வேல்விழி சொல்ல, அன்னமும் சென்று வரச் சொன்னார். மிருளாலினி எழுந்து அவர்களுடன் சென்ற பின் தமிழினியன் அங்கே வந்து அவளை தேடினான்.
“என்னடா?” அவன் சித்தி கேட்க, “சித்தி அவள எங்க?” தமிழினியன் கேட்க, அச்சச்சோ.. “அண்ணா அண்ணியை அதுக்குள்ள தேடுறாங்க” என்ற அவன் தம்பி சுவாதியின் அண்ணன் விகாஸ், “அண்ணி இப்ப தான் வேற செக்சனுக்கு போனாங்க”.
பெரியம்மா பார்த்து, “உங்கள இனியன் அண்ணா மறந்துடுவாங்க போல” என்று வேல்விழியிடம் கிண்டலாக கூறிக் கொண்டே தமிழினியனை பார்த்து சிரித்தான்.
தமிழினியன் அவன் அம்மாவை பார்க்க, இனியா கொஞ்ச நேரம் இங்கேயே இரு. சித்தப்பா, பெரியப்பா எல்லாரும் மிருளாவோட போயிருக்காங்க. நாங்க புடவை எடுத்துட்டோம். அடுத்து பசங்களுக்கு எடுத்திடலாம் என்று எல்லாரையும் வேறொரு இடத்திற்கு அழைத்து சென்றார்.
சற்று நேரத்தில் மாமா..என்று தீப்தி சத்தம் கேட்டு அனைவரும் அவளை பார்த்தனர். தீப்தி நேராக தமிழினியனிடம் வந்து, அம்மா உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னாங்க என்று கூற, “எதுக்கு தீபு?” என்று அவளின் இன்னொரு மாமா கேட்க, அது மாமா வந்து பார்க்கணும் என்றாள் கைகளை ஆட்டிக் காட்டிக் கொண்டு.
ஹேய், “அழகா இருக்க? குட்டி ஏஞ்சல் மாதிரி இருக்கிறியே?” என்று தீபுவின் மேக் அப்பை பார்த்து அவளின் சின்னமாமா சொல்ல, ஏஞ்சலுக்கு இறக்கை இருக்குமே? எனக்கு இல்லையே? என்று தீபு கேட்க, அங்கே சிரிப்பலை வந்து சென்றது.
இனியா, எல்லா ஆண்களையும் வரச்சொல்லு. ஆடைகள் எல்லாருக்கும் பிடிச்சிருக்கான்னு கேட்கணும் என்றார் அவன் அம்மா.
சரிம்மா என்று புன்னகையுடன் அவனும் அவன் தம்பியும் சென்றனர். தன் சித்தப்பா, அப்பா..என அனைவரும் நின்று கொண்டிருக்க, அனைவரையும் அங்கிருந்து கிளப்பி விட்டு தன் அக்காவிடம் இருவரும் வந்தனர்.
சுஜி, “எதுக்கு வரச் சொன்ன? சர்பிரைசாமே! தீபு குட்டி சொன்னா? என்ன சர்பிரைஸ்?” தமிழினியன் கேட்க, சுஜி கண்ணை காட்ட, ஆடை மாற்றும் அறையிலிருந்து நியூ மாடல் சேரி லெஹங்கா அணிந்து மேக் அப்புடன், தலையை விரித்து அழகான ஹேர்ஸ்டைலில் ஹேர் அக்சசரிஸ்ஸூடன் தமிழினியன் முன் வந்தாள் மிருளாலினி. அவன் மெய் மறந்து அவளை பார்க்க, அவள் அவனை பார்த்து விட்டு அவனுடன் வந்த விகாஸை பார்த்தாள்.
அண்ணி, அண்ணா இந்த உலகத்திலே இல்லை.
அண்ணா..அண்ணா..”கனவிலிருந்து வெளிய வா” என்று தமிழினியன் காதில் கத்தினான் அவன் தம்பி.
ஷ்..என்று தமிழினியன் காதை குடைந்து கொண்டு, “சும்மா இருடா” என்று வெட்கப்பட்டான்.
அய்யய்யோ, இங்க எல்லாம் உல்டாவா நடக்குதுடா. “அண்ணா இப்படியா வெட்கப்பட்டு மானத்தை வாங்குவ?” சுவாதி தமிழினியனை திட்ட, உஷாராகி தன் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளை பறக்க விடாமல் அடுத்த மோடிற்கு சென்றான் தமிழினியன்.
இந்தாங்க அண்ணி, இதை மாத்திட்டு வாங்க என்று அவன் தங்கை வெஸ்டர்ன் ஆடையை மிருளாலினி கையில் கொடுக்க, அவள் தயக்கமுடன் தமிழினியனையும் சுஜியையும் பார்த்தான்.
“விருப்பமில்லைன்னா போட வேண்டாம்” தமிழினியன் சொல்ல, அண்ணி..இது அவ்வளவு மாடர்ன் எல்லாம் இல்லை. வாங்க என்று மிருளாலினியை அவன் தங்கை மீண்டும் அறைக்குள் இழுத்து செல்ல, அக்கா என்றான் அவன்.
போடட்டும் டா. யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க. உனக்கு விருப்பமில்லையா? சுஜி கேட்க, “அப்படியில்லை” என்று தமிழினியன் தயங்க, அவன் தம்பி அவனை கிச்சுகிச்சு மூட்டி கேலி செய்தான்.
சின்னபிள்ளை போல் பண்ணாதடா. என்னை விடு என்று தமிழினியன் நகர்ந்தான். டேய் “ஓ.கேவான்னு பார்த்துட்டு போ” சுஜி சத்தம் போட, எது போட்டாலும் அவ அழகா தான் இருப்பா. பார்த்து போட்டு அழைச்சிட்டு வாங்க. நம்ம குடும்பம் எல்லாரும் இருக்காங்க என்று சொல்லிக் கொண்டே அவன் தம்பியையும் உடன் இழுத்து சென்றான் தமிழினியன்.
இனியன் அண்ணா, செம்ம என்றான் அவனின் மற்றொரு தம்பி திலீப்.
“என்னடா?” இனியன் கேட்க, அவனை சுற்றி அனைவரின் கவனமும் ஓரிடத்தில் ஈர்த்து இருந்தது. சிலர் ஆவென பார்த்துக் கொண்டிருந்தனர்.
அண்ணா, அண்ணி என்று கண்ணிமைக்காமல் தமிழினியனின் தம்பி கூற, பின்னே திரும்பிய தமிழினியன் கண்கள் விரிந்தது. புடவை, பாவாடை தாவணி, சுடி என பார்த்த தமிழினியன் மொத்தமாக மிருளாலினியிடம் கவிழ்ந்தான்.
கையில்லாத அழகான மாடர்ன் கவுன் அணிந்து, தமிழினியனை நோக்கி அவன் தங்கை, அக்காவுடன் சேர்ந்து வந்து கொண்டிருந்தாள். பெண்களும் அவளை பார்த்துக் கொண்டிருக்க, ஒருத்தி மட்டும் முகம் சுளிப்புடன் “மிருளாலினி நீயா?” என்று சத்தமாக கேட்டாள்.
மிருளாலினி நிற்க, அவளிடம் வந்தாள் மதுவந்தினி.
நேற்று நான் நியூஸ் பார்த்தேன். சுபியை அவன் அண்ணனே கொன்னுட்டானாமே! அய்யோ பாவம். இதுக்கு தான் அவனிடம் முதலிலே உன் பக்கம் செல்ல வேண்டாம்ன்னு சொன்னேன். கேட்டானா? போய் சேர்ந்துட்டான் என்று அவள் பேச, மிருளாலினிக்கு கோபம் வந்தாலும் அமைதியாக..”வந்த வேலையை பார்த்துட்டு போ” என்று நகர்ந்தாள்.
அவளை பிடித்து இழுத்த மதுவந்தினி, “நான் பேசிக்கிட்டு இருக்கும் போது மதிக்காம எங்கடி போற?” என்று மிருளாலினியை அடிக்க கையை ஓங்கினாள்.
“மதுவந்தினி” என்று தமிழினியன் சத்தம் அவ்விடம் கனீரென ஒலிக்க, மதுவந்தினி நிறுத்தி அவனை பார்த்து, “தமிழ் நீயா? நீ எப்படி இருக்க?” என்று அவனிடம் சென்றாள். அவன் அவளை கண்டுகொள்ளாமல் மதுவந்தினியை கடந்து மிருளாலினியிடம் வந்து, “ஒன்றுமில்லைல்ல?” என்று கேட்டான்.
தமிழ், “அவகிட்ட உனக்கென்ன பேச்சு?” அவள பத்தி உனக்கு தெரியாது. “சுபியை போல் உன்னையும் மயக்கிடுவா” என்று மதுவந்தினி கோபமாக அவர்களிடம் வந்தாள்.
“மயக்குவாளா? உனக்கு என்ன பிரச்சனை? அவள பத்தி இப்படி தப்பா பேசுற?” தமிழினியன் சினமுடன் கேட்டான்.
பாரு..பாரு..அவ நல்லவ போல சுபியிடம் நடித்தது போல் உன்னிடமும் நடிக்கிறா? இந்த ஆடை வாங்க கூட அவளிடம் பணம் இருக்காது. உன்னை மயக்க திருடிட்டு வந்திருக்கா என்று மேலும் பழியை மிருளாலினி மேல் போட்டாள்.
ஏய், “யாரை பத்தி என்ன பேசுற?” அந்த ஆடைக்கு பணம் அவங்ககிட்ட இருக்கு. “ஓவரா பேசுற?” என்று தமிழினியனின் தங்கை சுவாதி கையை ஓங்க, மிருளாலினி அவளை தடுத்தாள்.
“நீ யாருடி? அவள பத்தி பேசுனா உனக்கு கோபம் வருது?” மதுவந்தினி கேட்க, “அவங்க என் அண்ணன் தமிழினியனின் மனைவி” என்றாள் அவள்.
“என்னது? மனைவியா?” என்று மிருளாலினி கழுத்தில் தொங்கும் தாலி செயினை பார்த்து விட்டு, தமிழ் உனக்கு வேற பொண்ணா கிடைக்கலை சத்தமிட்டாள் மதுவந்தினி.
தாலி விசயம் விபத்து தான். ஆனால் அக்காவை தான் என் மாமா பல வருடங்களாக காதலிக்கிறார். அவங்களுக்காக தான் காத்திருந்தார். இரு நாட்களில் ஊரறிய திருமணம் செய்து கொள்ளப் போகிறார். “உனக்கு என்ன பிரச்சனை?” என்று அவள் முன் வந்தாள் தமிழினியன் அத்தை பொண்ணு சுருதி .
நோ..தமிழ், “அவள கல்யாணம் பண்ணிக்காத” என்று மதுவந்தினி சுருதி குறைய, தமிழினியன் மிருளாலினி கையை இறுக பற்றி, இவள் என் மனைவியாகி ஓர் நாள் ஆகிவிட்டது. யாரும் அறியாமல் நடந்ததால் இப்பொழுது எல்லார் முன்னும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று மிருளாலினியை காதலுடன் பார்த்தான் தமிழினியன்.
“ஒரு நிமிசம்” என்று அவன் கையை விடுத்த மிருளாலினி மதுவந்தினியிடம் வந்து கையை கட்டிக் கொண்டு முறைத்து பார்த்தாள்.
“என்ன முறைக்கிற? எனக்குரிய எல்லாரையும் என்னிடமிருந்து எடுத்துக்கிற? உனக்கு அசிங்கமா இல்லையா?” மதுவந்தினி கேட்க, அவளை பார்த்து புன்னகைத்த மிருளாலினி, “என்னை பற்றி நீ பேசுறியா? உனக்கு யாரு அந்த அதிகாரம் கொடுத்தது? நான் உன்னிடம் வெகுநாட்களாகவே ஒரு விசயம் கேட்கணும்?” என்றாள்.
“என்ன?” என்று மதுவந்தினி தமிழினியனை பார்த்துக் கொண்டே கேட்டாள்.
நானும் சுபியும் காதலித்த சமயம், “அவன் அண்ணனுக்கு எங்க காதல் எப்படி தெரிந்தது?” மிருளாலினி கேட்க, புருவத்தை சுருக்கி தமிழினியன் மதுவந்தினியை பார்த்தான். அவனை பார்த்து விட்டு,” எ..எ..எனக்கு..எனக்கு எப்படி தெரியும்?” என்று தயக்கமுடன் கேட்டாள்.
“உனக்கு தெரியாதா? நடிக்கிறியா?” சரி அதை விடு. உனக்கு கோகுலை நினைவிருக்குல்ல?
ஆமா, பள்ளியில் நம்முடன் படித்தவன்.
அவன் தான். அவனிடம் எதற்கு நட்சத்திராவை பற்றி கூறி அவன் மனதில் ஆசையை வளர்த்தாய்? மிருளாலினி கேட்க, தமிழினியனும் அன்னமும் அதிர்ந்து அவர்களிடம் வந்தனர்.
“என்னம்மா சொல்ற?” அன்னம் கேட்க, சாரிம்மா..நானும் இவரும் அறையில் பேசுவதை நீங்க கேட்டது எனக்கு தெரியும். நட்சத்திராவின் கணவனாக நடிக்க தான் அவனை அழைத்தோம். அதற்கு முன்னதாகவே இவள் உங்க மருமக நட்சத்திராவை பற்றி கோகுலிடம் கூறி ஆசையை வளர்த்து இருக்கா. அவனும் நட்சுவை காதலிக்க ஆரம்பித்தான். அது தெரியாமல் சுபி நடிக்க அவனை அழைக்க, அவனுக்கு தோதாக போனது.
உங்க ஊருக்கு வந்து சென்ற பின் தான் அவன் அடிக்கடி அவளை சந்திக்க வந்தான். ஆனால் அவள் கருவுற்று இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. அவளிடம் காதலை கூறி அவள் குழந்தை பிறந்த பின் எங்காவது விட்டுட்டு வா. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்ல, அவள் மறுத்தாள்.
“அவளுக்கு பிடித்த அவள் மாமாவின் குழந்தையை அவள் தவிர்ப்பாளா?” அம்மா, நிச்சயமாக உங்க பையனும் சரி, அவளும் சரி உடலுறவில் ஈடுபடவில்லை. ஓர் ஹாஸ்பிட்டலின் அலட்சியப்போக்கால் நடந்த விபரீதம் தான் அவள் கருவுற்றது.
எனக்கு தெரிந்து அவள்..என்று நிறுத்தி கண்ணீருடன் மிருளாலினி தமிழினியனை பார்த்தாள். “அவன் வேண்டாம்” என்று தலையசைத்தான். அதை விடுங்க என்று அன்னத்திடமிருந்து மதுவந்தினியை நெருங்கினாள்.
“கோகுல் விபத்தால் தான் இறந்தானா? இல்லை சதியா?” மிருளாலினி கேட்க, பதறி நகர்ந்தாள் மதுவந்தினி.
“நீ நடந்து கொள்வதை பார்த்தால் அவன் கொலை செய்யப்பட்டிருக்கானோ? அதில் உனக்கும் பங்கிருக்குமோ?” மிருளாலினி கேட்க,
இல்லை..இல்லை..நானில்லை. சுபியையும் உன்னையும் அவன் அண்ணனிடம் நான் தான் போட்டுக் கொடுத்தேன். அப்புறம்..நட்சத்திரா எனக்கு இடையூறாக வந்தால் அவளை திசை திருப்ப கோகுலை பயன்படுத்தினேன். மற்ற எதுவும் எனக்கு தெரியாது என்றாள்.
“தெரியாதுன்னா எதுக்கு பதருற?” தமிழினியன் கேட்க, தமிழ்..ப்ளீஸ். என்னை ஏதும் கேட்காத. அவங்க என்னை கொன்றுவாங்க என்றாள் மதுவந்தினி.
“யாரு உன்னை கொல்லப் போறா?” நீ யாரையும் கொல்லாமல் இருந்தால் சரி என்றான் அவன்.
திடீரென துப்பாக்கி சத்தம் கேட்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதறி ஓடினர். தமிழினியன் குடும்பம் அனைவரும் ஒன்று கூடி தனியே பாதுகாப்பாக ஆண்கள் முன் நின்றனர்.
துப்பாக்கி தோட்டா ஒன்று மதுவந்தினி வயிற்றை துளைத்துக் கொண்டு சென்றது. மிருளாலினி பதட்டமாக அவளிடம் வந்தாள். தமிழினியனும் அங்கே வந்தான்.
அவங்க என்னை கொன்னுட்டாங்க. மி..மி..ருளா..லினி, ஐ அம் சாரி..தமிழ், அ..அ..வன்…. உங்க எல்லாருக்கு…ஆ..ப..த்..து..என்று தனித்தனியே பேச இருவருக்குமே புரியவில்லை. அவள் இறந்து விட்டாள் மிருளாலினி அழ, தமிழினியன் அவளை அணைத்துக் கொண்டான்.
வேல்விழி இருவரிடமும் கோபமாக வந்து, “இந்த மாதிரி பொண்ணிடம் என்ன பேச்சு வேண்டி இருக்கு?” என்று இருவரையும் இழுத்து சென்றாள். மிருளாலினியும் தமிழினியனும் அவளை பார்த்துக் கொண்டே சென்றனர். அனைவரும் அங்கிருந்து செல்ல, காவலர்கள் அங்கே வந்தனர்.
அன்னம் மனம் கேட்காமல் வீட்டிற்கு சென்றதும் சிம்மாவிடம் விசயத்தை சொன்னார். அந்த பொண்ணு மிருவிடமும், “அந்த பையனிடம் ஏதோ சொல்லிட்டு செத்து போச்சு” என்று சொல்லி வைக்க, சிம்மா யோசனையுடன் அலைபேசியை வைத்தான்.
மிருளாலினி அப்பா, சிம்மாவிடம் என்னவென்று கேட்க, ஒன்றுமில்லைப்பா, நான் பார்த்துக்கிறேன். “இது ஒரு கேஸ் விசயம் தான்” என்று சொல்லி விட்டு அவர்களை காரில் அழைத்து சென்றான்.
சில நிமிடங்களிலே சிம்மாவிற்கு மிளிரனிடமிருந்து கால் வந்தது. “சார், எங்க இருக்கீங்க?” டி.ஐ.ஜி முக்கியமான கேஸை உங்களிடம் ஒப்படைக்க கால் பண்ணார். நீங்க எடுக்கவேயில்லை என்று அவன் சொல்ல, அவரிடம் நான் பேசுகிறேன். எனக்கு பதிலாக அவரை நீ பார்க்க போ.
“சார்? நானா?”
மிளிரா, இந்த கேஸ் நம்ம கையில தான் இருக்கணும். புரியுதுல்ல. கை நழுவக்கூடாது.
ஆனால் சார், “நான் எப்படி? அவர் கோபப்படப் போகிறார்?”
அதான் நான் பேசுகிறேன்னு சொல்றேன்ல்ல. அவரிடம் பேசி விட்டு உடனே நம்ம டீமை அழைச்சிட்டு ஸ்பாட்டுக்கு போ. முதல்ல அங்கிருந்து சிசிடிவியை புட்டேஜை எடு. சீக்கிரம் போ..என்று சிம்மா அலைபேசியை வைத்து விட்டு, காரை நிறுத்தி, அம்மா..ஒரு நிமிசம் என்று கீழே இறங்கி டி.ஐ.ஜி சாருக்கு கால் பண்ணி பேசினான்.
சரி சிம்மா, ஏற்கனவே விக்ரம் இந்த கேஸ்ல்ல ஆர்வமா இருக்கான். சீக்கிரம் வந்துரு. அவனுக்கு நான் வேற கேஸை பார்த்துக்க சொல்றேன். நீ வரலைன்னா அவனிடம் தான் நான் கொடுக்க வேண்டி இருக்கும் என்று சிம்மாவை நெருக்கினார்.
சார், இப்பொழுதைக்கு இன்ஸ்பெக்டர் மிளிரன் பார்த்துப்பார். நான் மாலைக்குள் வந்துடுறேன்.
இல்ல சிம்மா, இரு மணி நேரம் தான். வந்துரு சீக்கிரம் என்றார்.
“தேங்க்ஸ்யூ சார்” என்று விறைப்புடன் கூறி விட்டு, மிருளாலினி பெற்றோரை பார்த்தான். அவள் அப்பா புரிந்து கொண்டு, நீங்க கிளம்புங்க தம்பி. நாங்க இருட்டும் முன் வந்துருவோம் என்று அவர் சொன்னார்.
“தனியாக உங்களை விட்டு போக முடியாது” என்று சிம்மா யோசனையுடன் அவனுடைய ஆள் ஒருவனை அவ்விடம் வர வைத்தான். அவனும் ஒரு மணி நேரத்தில் வந்து விட, அவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, இவங்க பத்திரமா பார்த்துக்கோ. என்னோட அம்மா, அப்பா மாதிரி என்று சிம்மா சொல்லி விட்டு அவன் வந்த பைக்கில் கிளம்பினான்.
தமிழினியன் வீட்டிற்கு எல்லாரும் வந்த பின் அமைதியாக இருந்தனர். திருமண கொண்டாட்டம் யார் முகத்திலும் இல்லை. வந்தவுடன் உள்ளே சென்ற மிருளாலினியும் வெளியே வரவில்லை.
வேல்விழியும், தமிழினியன் சித்திகளும், பெரியம்மாவும் கோபமாக, “யாரோ ஒருத்தி செத்ததுக்கு எதுக்கு இப்படி நம்ம உலகமே இடிந்தது போல் இருக்கீங்க?” என சத்தமிட்டனர்.
எல்லாரும் மிருளாலினி இருக்கும் அறையை பார்த்தனர். நிலையை புரிந்து கொண்ட தமிழினியன், எல்லாரும் வேலையை பாருங்க. ஹேய் ரௌடி..மஹாலுக்கு போய் எந்த அளவு முடிஞ்சிருக்குன்னு பாரு.
டேய், “அலைபேசியை பார்த்துட்டு இருக்க?” போங்க..வேலையை கவனி என்று தமிழினியன் அவன் தம்பிகளை விரட்ட, சுஜி மிருளாலினி அறையை பார்த்தாள்.
நான் பார்த்துக்கிறேன்க்கா. எல்லாரும் வேலையை பாருங்க. இரவு பாட்டியும் தாத்தாவும் வரும் முன் எல்லாவற்றையும் முடிங்க. இல்லை வந்து கத்துவாங்க என்று அவன் சொல்ல, ஆமா எல்லாரும் எழுந்திருங்க என்று மற்றவர்களும் விரட்டினர்.
வேல்விழி தன் மகனை பார்க்க, அவன் அம்மாவிடம் வந்து, “நான் பேசிட்டு வரவாம்மா?” எனக் கேட்டான்.
ம்ம்..பேசு. வெளிய வரும் போது அவள் புன்னகையுடன் வரணும். பாட்டி, தாத்தாவுக்கு இது தெரிந்தால் அபசகுணம் அது இதுன்னு ஏதாவது சொல்லுவாங்க. போ என்றார்.
ம்ம்..என்று அவன் உள்ளே செல்ல, படுக்கையில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்த மிருளாலினி அவனை பார்த்து எழுந்தாள்.
மிருளா, அவளை விடு. அவள் செய்ததற்கு நடந்ததாக எடுத்துக்கோ என்றான் அவன். அவள் அழுது கொண்டே அவனிடம் வந்து அவனை கட்டிக் கொண்டு அழுதாள். அவன் தயக்கமுடன் அவளை அணைத்தான்.
“போதும் மிருளா” என்று அவளை விலக்கி பார்த்தான். “நாம கல்யாணத்தை நிறுத்திடலாமா?” என்று பட்டென அவள் கேட்க, அவனுக்கு கோபம் வந்தது.
“என்ன பேசுற? எல்லாம் தயார் செய்து கொண்டிருக்கும் போது இப்படி கேக்குற? உனக்கு பிடிக்கலைன்னா முதல்லவே சொல்லி இருக்கலாம்ல்ல?” என்று கோபமுடன் அவன் கண்கள் கலங்கியது.
பிடிக்காமல் இல்லை. எனக்கு பயமா இருக்கு. சுபி மாதிரி உங்களுக்கும் ஏதாவது ஆகி விடுமோன்னு பயமா இருக்கு என்று அவனை அணைத்து மிருளாலினி அழுதாள்.
அவன் அதிர்ச்சியுடனும் மகிழ்வுடனும், “என்ன சொன்ன?” என்று அவளிடம் கேட்டான்.
எனக்கு பயமா இருக்கு. மது இறக்கும் போது நாம அங்க இருந்தோம். உங்களுக்கு அவளை தெரியும்ல்ல. அதை அந்த கொலைகாரன் பார்த்திருப்பான். உங்களை ஏதாவது செய்திடுவானோன்னு பயமா இருக்கு என்று அழுதாள்.
“நீ எனக்காக பயப்படுறியா? உனக்கு என் மீது காதல் இல்லையே?” என தமிழினியன் கேட்டான். மிருளாலினி அவனை விட்டு விலகி நின்றாள்.
காதல் இல்லை. “ஆனால் நீங்க என் கணவன்ல்ல?”
“ஓ..அதுக்காக தானா?” என்று அவன் முகம் மாறியது.
சரி, “அதுக்காக பார்த்தால் நீயும் அங்க தான இருந்த? உன்னையும் அவன் பார்த்திருப்பானே?” தமிழினியன் கேட்க, அவள் ஏதும் சொல்லாமல் அமர்ந்தாள்.
“உனக்கு விருப்பமில்லாமல் இல்லையே?” என தமிழினியன் மீண்டும் அவளிடம் கேட்டான். அவள் அவனை பார்த்து, “எத்தனை தடவை கேட்பீங்க? விருப்பமில்லாமல் எப்படி ஒத்துப்பேன்?”
அப்படின்னா, “இப்ப எதுக்கு நிறுத்த சொல்லி கேட்ட?”
சுபி போல நீங்களும் என்னை விட்டு போயிருவீங்களோன்னு பயமா இருக்கு என்று அழுதாள். அவளருகே அமர்ந்த தமிழினியன், அவள் கையை பிடித்து அவன் கைக்குள் வைத்துக் கொண்டு அவளை பார்த்தான். அவள் அவனை பார்த்தாள்.
“நாம கல்யாணம் முடிந்த பின் உன்னை விட்டு நான் எங்கும் தனியே செல்ல மாட்டேன்” என்றான்.
“அப்படின்னா?”
நான் உன்னை மட்டும் இல்லை, உனக்காக என்னையும் பார்த்துப்பேன் என்றான். அவள் கண்ணீருடன் அவனை தாவி அணைத்தாள்.
“மிருளா” தமிழினியன் காதலுடன் மிருளாலினியை அழைத்தான். இருவரும் நெருக்கமாக இருந்தனர். அவள் அவனை பார்த்து, ம்ம்..சொல்லுங்க என்றாள்.
“நீ என்ன நடந்தாலும் என்னுடன் என் அருகிலே இருப்பாயா?”
கண்டிப்பாக இருப்பேன். ஆனால் காதல் வருமான்னு தெரியலை என்றாள்.
வரும். உனக்கு என் மீது காதல் வரும் என்று தமிழினியன் மனதினுள் எண்ணிக் கொண்டு, “இப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்ல்ல?”
“இப்பவா?”
இப்பன்னா இப்ப இல்லை. “நாளை மறுநாள் உனக்கு ஓ.கே தான?” அவன் கேட்க, ம்ம்..என்று சொல்லிக் கொண்டே அவனிடமிருந்து அவனை பார்த்துக் கொண்டே இறங்கினாள். அவனும் காதலுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முற்றிலும் நகர, அவள் கையை விடாது தமிழினியன் பிடித்திருந்தான்.
விடுங்க. “உங்களுக்கு வேலை இருக்கும்ல்ல?” என்றாள்.
ம்ம் என்று அவள் கையை பிடித்துக் கொண்டே எழுந்த தமிழினியன் கண்ணாடி முன் அவளை நிறுத்தி, இந்த அழுது சோர்ந்த முகத்தை, பளிச்செனவும் அழகாகவும் சீக்கிரம் மாத்திரு. இரவு பாட்டி, தாத்தா மற்றும் சில முக்கியமான ஆட்கள் வருவாங்க. நீ அழுத முகத்துடன் இருந்தால், உனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும் நான் கட்டாயப்படுத்தியதாகவும் நினைப்பாங்க. கொஞ்ச நேரம் முன் தயாரானது போல் அழகாக இருக்கணும் என்றான்.
“அழகா இல்லைன்னா?”
இல்லைன்னாலும் எனக்கு ஓ.கே தான். என்னோட அத்தை, மாமாவும் வருத்தப்படுவாங்க என்றான்.
அத்தை, மாமாவா?
“உன்னோட பெற்றோர்” என்று அவள் அசந்த நேரத்தில் அவள் கன்னத்தில் முத்தமிட்டு “சாரி” என்று வெளியேறினான். அவள் திகைப்புடன் நின்று பின் வெட்கப்புன்னகையுடன் கண்ணாடியை பார்த்தாள்.
நட்சத்திரா வீட்டிற்கு வந்த அன்னம் வீடு பூட்டி இருப்பதை பார்த்து தன் கணவன் பரிதியை அழைத்தார். அவர் அலைபேசியை எடுத்து, “ஷாப்பிங் முடிந்ததாம்மா?” என்று கேட்டார்.
நான் பாப்பா வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
“வேலையா?”
ஆமா, வெட்டிங்கிற்கு நம்ம பாப்பாகிட்ட தான பொறுப்பை ஒப்படைத்து இருக்காங்க. பாப்பாவுடன் அவள் டிவிஎஸ் ஜூப்பிட்டரில் வந்தேன். பிள்ளை எவ்வளவு பொறுப்பா இருக்கா என்றார் அவர்.
“நான் இப்ப என்ன செய்வது?” அன்னம் கேட்க, நீயும் வா என்றார் அவர்.
“எங்க? எப்படி வர்றது?”
நீ அங்கேயே இரு. நான் வருகிறேன் என்று பரிதி சொல்ல, சீக்கிரம் வாங்க. முக்கியமான விசயம் சொல்லணும்.
“அப்படி என்னம்மா விசயம்? பாப்பாவிடமும் பேசணுமா?”
இல்ல..இல்ல..உங்ககிட்ட தான் பேசணும் என்றார் அன்னம்.
சரிம்மா, நான் வாரேன் என்று பரிதி நட்சத்திராவை பார்த்தார். அவள் மும்பரமாக அங்கிருந்த ஆட்கள் கொண்டு வரும் பொருட்களை சரி பார்ப்பதும், டெக்கரேட் செய்து கொண்டிருப்பவர்களையும், அவள் குழுவினர் பார்க்கும் வேலையையும் சரி பார்த்து அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தாள்.
கீரா, “கேட்டரிங் ஆட்களிடம் பேசினாயா?” என்று நட்சத்திரா கேட்க, நீங்க தான் மேம் போகணும். அவன் விலை அதிகமா சொல்றான்.
அத்தை, “இங்க வரணும்ன்னு சொல்றா” என்று அவர் சொல்ல, என்னோட வண்டிய நீங்க எடுத்துட்டு போங்க. நான் ஓர் வேலையா போறேன். சில வேலைகளை முடித்து விட்டு அர்சுவை அழைச்சிட்டு வாரேன் என்றாள்.
“இப்பவே வா”?
இல்ல மாமா, நாங்க போற வேலை நேரமாகும். அவனுக்கு பள்ளியும் விட்ருவாங்க. நான் அழைச்சிட்டு வந்துடுறேன். இரு நாட்கள் அவனுக்கு விடுமுறை தான். மிரு, டாக்டர் சார் திருமணம் முடிந்த பின் அவனை பள்ளிக்கு அனுப்பணும் மாமா என்றாள்.
“சரிம்மா” என்று வண்டிச்சாவியை எடுத்து அவர் கிளம்பிய பின், தியாவுடன் அவளது வண்டியில் நட்சத்திரா கிளம்பினாள். சற்று நேரத்தில் இருவரும் ஓர் சிக்னலில் நின்றனர். தியா தண்ணீர் அருந்த கார் ஒன்று வேகமாக வந்து
அவள் பக்கம் நின்றது. பயத்தில் தண்ணீர் ஆடையில் கொட்டி விட்டது. வாய்க்கு வந்தபடி தியா கார்க்காரனை திட்ட, கார்க்கண்ணாடியை இறக்கினான் அஜய்.
“நீங்க பிடிங்க மேம்” என்று அவளிடம் கொடுத்து விட்டு கையில் இருந்த பாட்டில் தண்ணீரை காரில் இருந்த அவன் மீது ஊற்றினாள்.
ஏய், “லூசா நீ?” அஜய் சத்தமிட்டான்.
“நானாடா லூசு?” நீ தான் லூசு. காரை மெதுவா ஓட்டணும்ன்னு கூட தெரியல. “உனக்கெதுக்குடா கார்?” எத்தனை பேர் சின்னபசங்களோட இருக்காங்க. பாரு…கர்ப்பமானவங்க கூட இருக்காங்க. உன்னை மாதிரி ஆளால தான் விபத்து நிறைய ஏற்படுது அவள் சத்தமிட்டாள்.
தியா, “சும்மா இரு” நட்சத்திரா சொல்ல, மேம் இந்த பணக்காரவங்களே இப்படி தான் பணத்தால எல்லாத்தையும் வாங்கிடலாம்ன்னு திமிரு அவள் சொல்ல, கோபமாக அஜய் வெளியே வந்தான்.
ஆமாடி திமிரு தான். “அதுக்கென்ன இப்ப? யார்க்கிட்ட பேசுற”? இதுக்கு மேல பேசுன உன்னை சும்மா விட மாட்டேன் என்றான் அஜய்.
“என்னடா செய்வ?” அவள் மேலும் கத்த, சிக்னல் போடப்பட்டது. எல்லா பக்கமும் ஹாரன் அடித்தனர்.
தியா, வா. தேவையில்லாமல் பிரச்சனை செய்யாத! நட்சத்திரா சொல்ல, டேய் “என்னடா செய்வ?” என்று அவள் எகிறினாள். அஜய்யும் அவளை அடிக்க வந்தான். நட்சத்திரா இடைபுகுந்து உங்க பிரச்சனைய நிறுத்துங்க. “வாடி” என்று வண்டியின் பின் தியாவை அமர வைத்து அழைத்து சென்றாள். அஜய்யும் கோபமாக காரை எடுத்தான்.
அர்சுவை வேலை நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர் தியாவும் நட்சத்திராவும். அன்னம் பரிதியை பார்த்து மகிழ்ச்சியுடன் அர்சு அவர்களிடம் ஓடி வந்து, “பாட்டி” என்று அன்னத்தை கட்டிக் கொண்டான்.
கண்ணா, “தாத்தாவிடம் வாங்க” என்று தன் பேரனை தூக்கிக் கொஞ்சினார் பரிதி. நட்சத்திரா புன்னகையுடன் அவர்களை பார்த்து விட்டு, அவள் வேலையை கவனிக்கலானாள். சிம்மா டி.ஐ.ஜியை சந்திக்க, விக்ரமும் அவருடன் இருந்தான்.
சிம்மாவை பார்த்த விக்ரம் நக்கலாக சிரித்தான். சிம்மா பல்லை கடித்துக் கொண்டு அவனை முறைத்தான்.
சார், “நான் தான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல்ல?” சிம்மா கோபமாக கேட்டான்.
அச்சோ பாவம் சார், சின்னப்பையன். அவனுக்கு இந்த கேஸ் இல்லைன்னு தெளிவா சொல்லுங்க விக்ரம் மேலும் கேலியுடன் பேசினான்.
சார், “அவனை சும்மா இருக்க சொல்லுங்க” சிம்மா சினமுடன் கூறினான்.
இருவரும் அமைதியா இருங்க. நீங்க இருவருமே விசாரிங்க. யார் சரியா கொலையாளியை பிடிக்கிறீங்கன்னு பார்க்கலாம் என்றார் டி.ஐ.ஜி.
“ஓ.கேடா பார்க்கலாம்” என்று கெத்தாக காலரை உயர்த்தி விக்ரம் செல்ல, சிம்மா அவரை பார்த்துக் கொண்டே கோபமாக சென்றான்.
நேராக மிளிரனிடம் சென்றான். அவனிடம் புட்டேஜை கேட்க, அவன் கொடுத்தான்.
டி.ஐ.ஜி சார் வெளியே வந்து சிம்மாவை அழைத்தார். அவன் அவரிடம் வந்தார். விக்ரம் அவர் அருகே வந்து நின்றான். விக்ரம் சிறு வயதிலே பெற்றோரை இழந்தவன். டி.ஐ.ஜியின் வளர்ப்பு மகன். சிறுவயதில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்தாலும் வளர்ந்த பின் அவன் தனித்து வாழ ஆரம்பித்தான். அவனுக்கென குடும்பம் வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டான்.
டி.ஐ.ஜியின் மனைவிக்கு விக்ரமை பார்த்தாலே பிடிக்காது, அதனால் தான் அவன் வெளியே வந்து தனியே இருக்கிறான். ஆனால் அவருக்கும் அவர் பொண்ணுக்கும் விக்ரம் என்றால் மிகவும் பிடிக்கும்.
சார், இரு நாட்கள் என்னால நம்ம ஆபிஸிற்கு வர முடியாது. என்னோட சிஸ்டருக்கு மேரேஜ். சோ..என்று சிம்மா அவரை பார்க்க, விக்ரம் பயங்கரமாக சிரித்தான். சிம்மா அவனை முறைக்க, “சும்மா இரு விக்ரம்” என்றார் அவர்.
“அவனுக்கு எங்கே தங்கை?” ஸ்கூல் பையன் போல லீவு கேட்கிறான் என்று விக்ரம் மேலும் சிரிக்க, சிம்மா முகத்தை சுளித்து, “நான் வாரேன் சார்” என்றான்.
“உன்னோட ஊருக்கா போகப் போற?” அவர் கேட்க, நோ..சார், இங்க தான் பங்சன். மாப்பிள்ளை “டாக்டர்” என்று சிம்மா விக்ரமை முறைத்து விட்டு செல்ல, அவன் மேலும் வம்புக்கு இழுக்க..”குடும்பம் இல்லாதவனுக்கு எங்கே உறவின் அருமை தெரியும்?” என பட்டென சிம்மா கூறி விட்டு திரும்பி பார்க்காமல் சென்றான்.
இவ்வளவு நேரம் புன்னகையுடன் இருந்த விக்ரமின் முகம் மாறியது. அவன் கோபமாக அவனும் சிம்மாவும் குடியிருக்கும் காவலர் குடியிருப்பிற்குள் சென்றான். மனதில் தோன்றிய வலியால் பயங்கரமாக மது அருந்தினான்.
அவனுக்கு அழைப்பு வந்து கொண்டிருக்க போதையிலே அலைபேசியை எடுத்து, ஏதோ உளறினான். அந்த பக்கம் பேசுபவன் சொன்னதை கேட்டு விக்ரம் அடித்த போதை மொத்தமும் இறங்கியது.
“என்னடா சொன்ன? கொலையான பொண்ணுடன் பேசியவர்களுக்கு இரு நாட்களில் திருமணமா? சிம்மாவின் அம்மா அவர்களுடன் இருந்தாரா?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட விக்ரம் திடீரென சிரிக்க ஆரம்பித்தான்.
சிம்மா, “இதுக்கு தான் இந்த கேஸ் உன் கைக்கு வரணும்ன்னு நினைக்கிறியா? அப்படின்னா அந்த கல்யாணப்பொண்ணு. நீ சொன்ன தங்கையா?” என்று சிரித்தான் விக்ரம்.