இருள் வனத்தில் விண்மீன் விதை -5

அத்தியாயம் -5(1)

சர்வா ஒன்றும் அனாதையில்லை, சென்னையில் நான் படித்த கல்லூரியில் எனக்கு சீனியர். பெரிய குடும்பத்தை சேர்ந்த பையன், அவனது பெற்றோரை ஏதோ கல்லூரி விழாவின் போது பார்த்திருக்கிறேன் எனஅடித்து சொன்னான் ராஜனின் உறவுக்கார பையன். அவனது தந்தை நம்ப மறுத்ததால் சில நிமிடங்களில் கல்லூரியில் எப்போதோ எடுக்க பட்ட புகைப்படங்களை நண்பனின் மூலம் பெற்று தான் சொன்னது உண்மைதான் என நிரூபித்தான்.

“தாராசுரமாம் ஊரு” என சர்வாவின் பூர்வீகம் பற்றி சொல்லப் படவுமே ராஜனுக்கு திக் என்றானது.

சர்வாவின் குடும்ப பின் புலம் பற்றியும் அவன் சொல்ல கூடியிருந்தோர் விக்கித்துப் போயினர்.

மேடையேறியவர் அப்படி இருக்க கூடாது எனும் பயத்தோடு சர்வாவின் காதுக்கருகில் விஷயத்தை சொல்லி, “இல்லைதானே மாப்ள?” எனக் கேட்டார்.

இன்றே தெரிய வேண்டுமா எனும் அதிர்ச்சி சர்வாவின் முகத்தில். மறுக்காமல் ஆம் என தலையாட்டி ராஜனின் மனதில் பிரளயத்தை உண்டாக்கினான். சில மணித் துளிகளில் மண்டபமே அமளி துமளி ஆனது.

மித்ராவுக்கு எதுவும் சரியாக புரிபடவில்லை. சர்வாவுக்கு குடும்பம் இருப்பதை ஏன் மறைக்க வேண்டும், என்னை மணம் முடிப்பது திட்டமிட்ட செயல் என்றால் ஏன்? என்னை ஏமாற்ற எப்படி இவனுக்கு மனம் வந்தது? என பல யோசனைகள் அவளுள்.

எந்த நேரத்திலும் உண்மை அம்பலத்துக்கு வரும் என எதிர் நோக்கியே இருந்த சர்வா முன்னெச்சரிக்கையோடுதான் இருந்தான். மித்ராவின் கையை அவன் இறுகப் பிடித்திருக்க தனியார் நிறுவன பாதுகாவலர்கள் அவர்களை யாரும் நெருங்கி விட முடியாத படி அரணாக நின்றனர்.

அவனை எதுவும் செய்யும் எண்ணத்தில் ராஜனின் உறவினர்கள்தான் இருந்தனரே தவிர ராஜனுக்கு மகளின் வாழ்க்கையை பற்றிய பயம், தளர்ந்து போய் காணப் பட்டார்.

“என்ன மாப்ள யோசனை? கட்டினத கழட்டி தர சொல்லிட்டு நம்ம பையன கட்ட வைப்போம்” என ஜெயந்தியின் அண்ணன்கள் யோசனை சொன்னார்கள்.

 மித்ராவை மணம் புரிந்து கொள்வான் என ஏற்கனவே மற்றவர்கள் நினைத்திருந்த ஜெயந்தியின் ஒன்று விட்ட சகோதரரின் மகன் தயாராக இருந்தான்.

“இங்க பாரு மித்ரா, நான் கெட்டவன் இல்லை. உனக்கு கெடுதல் செய்யவும் இந்த கல்யாணம் இல்லை. பரிபூரணமா உன்னை என் மனைவியா எம்மனசுல நான் ஏத்துக்கிட்டப்புறம்தான் உன் கழுத்துல நான் கட்டின தாலி ஏறியிருக்கு. பழகின இத்தனை நாள்ல என்கிட்ட உனக்கு நம்பிக்கை வரவே இல்லயா என்ன? என்னை முழுசா நம்பி என்னோட வா மித்ரா” என்றான் சர்வா.

அவன் சொல்பவை அனைத்தும் காதில் விழுகிறது, கருத்தில் பதிகிறது, ஆனால் முடிவெடுக்க முடியாமல் குழப்பமும் அவன் மீதான கோவமும் எதிர்காலம் குறித்த பயமுமாக அவளை ஒரு நிலையில் இல்லாமல் செய்கிறது.

திடீரென இந்த திருமணம் செல்லாது, அடுத்து வரப் போகும் முகூர்த்தத்தில் இன்னொருவன் மித்ரா கழுத்தில் தாலி கட்டுவான் என அறிவிக்க பட்டது. மொத்தமாக மிரண்டு போனாள் மித்ரா. அவளின் பார்வை அப்பா, அம்மா, அக்கா, தம்பி என அவளுடைய நெருங்கிய உறவுகளை தேடுகிறது.

தான் எடுத்த முடிவு பெருந்தவறாக போய் விட அத்தவறையும் மகளின் வாழ்க்கையையும் சரி செய்ய சொந்தங்கள் எடுத்த முடிவு சரியானதுதானா என்ற குழப்பத்தோடு நின்றிருந்தார் ராஜன். அவருடைய குடும்பத்தினர் எதுவாக இருந்தாலும் அவரின் முடிவுதான் என்ற தீர்மானத்தோடு அவருக்கு பக்கத்தில் நின்றிருந்தனர்.

நீ இறக்க வேண்டும் வெட்டுப்பட்டா குத்துப்பட்டா என்பது போலானது மித்ராவின் நிலை.

அவளின் மன நிலையை யாரும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பம் விட்டால் மகளின் வாழ்வு என்னாகுமோ என்ற பயம் அவளின் பெற்றோருக்கு. என்ன நடந்தாலும் தன் மனைவியில்லாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு சர்வா.

மனமார ஏற்றுக்கொண்ட மாங்கல்யம், திருமணம் முடிந்து விட்டது என்ற எண்ணம் அவளுள் பதிந்து விட்டது.

மறுதிருமண ஏற்பாட்டில் அவளுக்கு துளியும் உடன்பாடில்லை. அவளின் விருப்பம் கருத்து என எதையும் கேட்கும் நிலையில் அங்கு யாருமே இல்லை.

உடனடியாக மறு திருமணம் என்ற நிலையில்லாமல் அப்பாவின் வார்த்தை என்னவென்றாலும் ஏற்றுக்கொள்வாள். ஆனால் ராஜன் என்ன சொல்லப் போகிறார் என யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

யார் என்ன வேண்டுமென்றாலும் முடிவு செய்து கொள்ளுங்கள், நான் நினைப்பதுதான் இங்கே நடக்கும் என உறுதியோடு இருந்தான் சர்வா.

ஆனால் சௌந்திரராஜன் மயங்கி சரிந்ததில் எந்த முடிவும் எட்டப் படாமல் போய் விட்டது.

கணவனின் கையை உதறித் தள்ளி விட்டு அப்பா என்ற அலறலோடு ராஜனிடம் ஓடிச் சென்றாள் மித்ரா.

சர்வாவுமே திகைத்து போனவனமாக அவளை தன்னிடமே நிறுத்திக் கொள்ளும் வகை தெரியாமல் பார்த்தான்.

ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மித்ராவும் அவளது குடும்பத்தினரும் இன்னும் சில நெருங்கிய உறவுகளும் அங்குதான் இருந்தனர். இரத்த அழுத்தம் மிகவும் உயர்ந்து விட்டதே அவரின் மயக்கத்துக்கு காரணம் என்றனர். சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

மணக் கோலம் கலையாமல் சமைந்து போனவளாக அமர்ந்திருந்த சின்ன மகளை நினைத்தும் நன்றாக இருந்த கணவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை நினைத்தும் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் வைஜெயந்தி.

“ராஜனுக்கு பயப்பட ஒண்ணுமில்ல, கொஞ்ச நேரத்துல ரூமுக்கு மாத்திடுவாங்களாம், நாம மித்ரா விஷயத்தை என்ன ஏதுன்னு பார்ப்போம், இன்னிக்கு விட்டா அப்புறம் காலத்துக்கும் சரி செய்ய முடியாம போயிடும்” என்றார் ராஜனின் சகோதரர் முறையுள்ள ஒருவர்.

காலையில் ஏறிய தாலியை அகற்றி அடுத்து இன்னொரு தாலி என்பதையெல்லாம் வைஜெயந்தியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மித்ராவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பிருந்தாலும் உடனடியாக இப்படி இன்னொரு திருமணம் நடத்த வேண்டுமா எனதான் அவருக்கு இருந்தது.

“அப்பா நல்லாகி வரட்டும், தயவுசெஞ்சு வேற எதுவும் பேசாதீங்க” மன்றாடுதலாக சொன்ன மித்ரா மீண்டும் மௌனமானாள்.

“உன்னாலதான் எல்லாம், குடும்ப பழக்க வழக்கம் தெரிஞ்சும் இப்படியா ஜென்ம விரோதி குடும்பத்து பையன் மேல ஆசை பட்ருப்ப? நம்ம குலத்து பொண்ணு அந்த குடும்பத்துக்கு போய் வாழ நாங்க யாரும் சம்மதிக்க மாட்டோம், ஏன் ராஜனே சம்மதிக்க மாட்டான்” என்றார் பெரியவராக இருந்த ஒருவர்.

“அவ்ளோதானே, நான் அங்க…” என்றவள் உதடுகளை அழுத்தி தன் அழுகையை அடக்கி “நான் அவர் கூட போகல, போதுமா?” எனக் கேட்டாள்.

“போதாது ம்மா, அவன் கூட உனக்கு எந்த ஒட்டும் உறவும் எப்படியும் இருக்க கூடாது, சின்ன பொண்ணும்மா நீ, வாழ வேண்டிய வயசு, அந்த கயித்த கழட்டி கொடுத்திடு” என்றார் மித்ராவின் மாமா. மற்றவர்களும் அதுவே சரியென்றனர்.

மித்ரா தன் நெஞ்சை பிடித்துக் கொண்டாள். சேலையின் மறைவில் கிடந்த மாங்கல்யம் அவளது மார்பை அழுத்தியது. இதற்கு அர்த்தம் இருக்கிறதா என சரியாக தெரியா விட்டாலும் உறவுகள் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 நாகரீக பெண்ணாக இருந்தாலும் மனமுவந்து ஏற்றுக் கொண்டதுதானே, இதை இல்லை என்றாக்கினால் இன்னொரு திருமணத்துக்கும் வற்புறுத்துவார்களோ என்றெல்லாம் யோசித்தாள். நின்று போயிருந்த அவளது அழுகை மீண்டும் வந்தது.

அவனை ஏன் விரோதி என்கிறார்கள், என்ன பகை, யார்தான் அவன்? மனதுக்குள் குடைந்த கேள்விகளை யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் அங்கே இருக்கவும் முடியாமல் எழுந்து வெளியே செல்லப் பார்த்தாள்.

ஆனால் யாரும் அவளை விடவில்லை, தங்கள் கண் பார்வையில்தான் இருக்க வேண்டும் என சொல்லி விட்டனர்.

எஸ்டேட்டில் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்தான் சர்வானந்த். இப்போது மருத்துவமனை செல்வது பாதுகாப்பாக இருக்காது என சொல்லி நாகாதான் அவனை இங்கு அழைத்து வந்திருந்தார்.

அவனது அனுமதி இல்லாமல் அவனது வீட்டின் பெரியவருக்கும் தகவல் தந்து விட்டார். அவருக்கு இவன் இங்கிருப்பதே தெரியாதாம், தான் வரும் வரை சர்வாவை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என கட்டளை போட்டிருந்தவர் இங்குதான் வந்து கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் சர்வாவுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தான் அவனது ஆள்.

கோவமாக வெளியேறப் போனவனை தடுத்தார் நாகா.

“விடுங்க, நான் கட்டின தாலியை கழட்டணும்னு சொல்லிட்டு இருக்காங்களாம், அப்படி செய்ய எவனுக்கு தைரியம் இருக்குன்னு பார்க்கிறேன், அவளோடதான் திரும்ப வருவேன்” என சத்தமிட்டான்.

நாகவால் அவனை அடக்க முடியவில்லை.

“நம்பி ஸார் வந்திட்டு இருக்காங்க, அவர் வர்ற வரைக்கும் உங்களை வெளியில விடக்கூடாதுன்னு ஆர்டர் போட்ருக்கார்” என்றார் நாகா.

“என்ன… பெரியப்பாக்கு சொன்னீங்களா? யாரை கேட்டு சொன்னீங்க?” என எகிறினான்.

“ஐயையோ ஸார்! என்கிட்ட கோவ படாதீங்க. என்னதான் நீங்க பெரிய ஆளுன்னாலும் இது அவங்க இடம் ஸார். அவங்க சொந்த பந்தம் அத்தனை பேரும் ஒண்ணா இருக்காங்க. உங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நம்பி ஸாருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? அதனாலதான்…” என கெஞ்சலாக பேசினார் நாகா.

“என்னை எவன் என்ன பண்ணுவான்? மித்ராக்கும் அவ பேரெண்ட்ஸ்க்கும் மட்டும்தான் பதில் சொல்லணும் நான், இடையில உள்ளவனுங்கதான் தேவையில்லாம பெருசு பண்றானுங்க” என்ற சர்வா சற்றே தளர்வாக அமர்ந்து கொண்டான்.

“அவங்க சமூகமே வேற மாதிரிதான் ஸார், அவங்க எல்லாரும் கூடி முடிவெடுக்குறதுக்கு அவங்க ஆளுங்க கட்டுப்பட்டுதான் ஆகணும்”

“இல்லைன்னா… இல்லைனா என்ன செஞ்சிடுவாங்களாம்? தண்ணி தெளிச்சு தள்ளி வச்சிடுவாய்ங்களா?” கோவமாக இரைந்தான் சர்வா.

“எனக்கு அது தெரியாதுங்க ஸார், அப்படி ஒண்ணு நடந்திருந்தாதானே என்னாகும்னு தெரியும். அவங்களுக்குள்ள அவ்ளோ ஒத்துமை ஸார், யாரும் யாரையும் விட்டு தர மாட்டாங்க”

“போதும் நாகா ஸார் அவங்க பெருமை. நான் கெடுதல் செய்றதுக்காக பண்ணிக்கல இந்த கல்யாணத்தை”

“என்ன காரணம்னு இப்பவாவது சொல்லுங்களேன் ஸார்” என நாகா கேட்டதற்கு நெற்றியை பிடித்துக் கொண்டானே தவிர காரணத்தை சொல்லவில்லை.

மேலும் அவனிடம் வற்புறுத்திக் கேட்கும் தைரியம் இல்லாமல் அமைதியாக இருந்தார் நாகா. திடீரென எழுந்தவன் மித்ராவை காணப் போவதாக சொன்னான்.

அவசரமாக கைப்பேசியை எடுத்தார் நாகா. சர்வாவின் பெரியப்பாவும் மாநிலத்தின் தொழில் வளத்துறை அமைச்சருமான அறிவுடைநம்பிக்கு அழைத்தவர், “சர்வா ஸார்கிட்ட நீங்களே பேசுங்க ஸார், என்னால சமாளிக்க முடியலை” என்றார்.

நாகாவை முறைத்துக் கொண்டே கைப்பேசியை வாங்கினான் சர்வா. எதிர் முனையிலிருந்து விழுந்த திட்டுக்களை அமைதியாக பெற்றுக் கொண்டான். இறுதியாக, “நடந்தத விசாரிக்க இதுவா நேரம் பெரியப்பா? வாங்க அவளை என்னோட சேர்த்து வைங்க” என்றான் சர்வா.

சர்வாவின் அஷ்ட கோணலான முகம் இன்னும் திட்டுக்கள் தொடர்கிறது என்பதை நாகாவுக்கு காட்டிக் கொடுத்தது.

“ஸ்டாப் பெரியப்பா, யார் வாழ்க்கையையும் அழிச்சிடல நான். உங்ககிட்ட எதுவும் சொலூஷன் இருந்ததா? வேற வழி தெரியாமதான் இப்படி செஞ்சேன், சரியா வருமா வராதான்னு இப்பவே எப்படி தெரியும்? பாசிட்டிவா பேசுங்க. நீங்க இல்லை யார் சொன்னாலும் என் வைஃப் இல்லாம குன்னூர்லேருந்து நகர்றதா இல்லை நான்” இறுதி வாக்கியத்தை உறுதி பட சொன்னவன் கைப்பேசியை நாகாவிடமே கொடுத்து விட்டான்.