அத்தியாயம் -4(2)
“என்ன சர்வா பதிலையே காணோம்” எனக் கேட்டாள் லிசி.
“என் கெஸ் கரெக்ட்னா முடிஞ்சு போன விஷயத்தை ரீஸ்டார்ட் பண்ண நினைக்கிற நீ, அப்படித்தானே?” மேலும் இழுக்காமல் அப்போதே கேட்டு விட்டான்.
தன் மனநிலை என்ன என்பதை அண்ணனிடம் சொல்லியிருக்கிறாள்தான் லிசி, ஆனால் அவன் முன்னிலையில் சர்வாவிடம் வெளிப்படையாக எதையும் பேச முடியவில்லை.
“நேர்ல எப்ப பார்க்கலாம்னு சொல்லு சர்வா, நாம பேசலாம்” என மட்டும் சொன்னாள்.
“நாம இனிமே பார்த்துக்க…” என்றவன் ‘வேணாம்’ என்ற வார்த்தையை முழுங்கி விட்டான். இந்திரஜித் அவனிடம் வந்து நின்றதை கவனித்தவன் அதற்கு மேல் லிசியிடம் பேச்சு வளர்க்க விரும்பாமல், “லைன் கிளியரா இல்லை போல, நான் அப்புறமா கூப்பிடுறேன்” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்.
“என்ன சிம் யூஸ் பண்றீங்க, அடிக்கடி பிராப்லம் ஆகுதுன்னா சிம் மாத்திடுங்க” என்ற இந்திரஜித் எந்த நெட்ஒர்க் சிறந்தது என சொற்பொழிவு ஆற்றத் தொடங்கியிருக்க சர்வாவுக்கு நிஜமாகவே தலை வலிக்க ஆரம்பித்தது.
லிசியின் பெயருக்கு பின்னால் எப்போதோ போட்டிருந்த தி ஏஞ்சல் என்பதை எடுத்து விட்டு அவளது எண்ணையும் பிளாக் செய்ய நினைத்தவன், ‘இல்லை என் முடிவை தெளிவாக சொல்லி விட்டு பிறகு செய்யலாம்’ என தீர்மானித்துக் கொண்டான்.
“ரோட் கிராஸ் பண்ணிப் போகணும் சர்வா, அப்புறம் ஃபோன் பாருங்க, இப்ப ஏதாவது அடி கிடி பட்டா சகுணத்தடைனு ஏதாவது சொல்லிடுவாங்க” என இந்திரஜித் சொல்ல, கைப்பேசியை சட்டைப் பையில் வைத்து விட்டு அவனோடு நடந்தான்.
முகூர்த்த ஆடைகள் எடுத்து முடித்த பிறகு நகைகள் வாங்க சென்றனர். அக்காவும் அம்மாவும் மித்ராவுக்கு பார்த்து பார்த்து தேர்வு செய்தனர், அதிகமாக செலவு வைக்கிறார்களே என மித்ராவுக்குத்தான் கவலையாகிப் போனது. ஆனால் எதுவும் சொல்லாமல் அனைத்துக்கும் பணத்தைக் கொடுத்தான் சர்வா.
பின் மதிய உணவையும் முடித்துக் கொண்ட பிறகு வேறொரு ஆடையகத்தில் அவர்களின் ஷாப்பிங் தொடர்ந்தது. பழகி விட்ட இந்திரஜித் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சர்வாதான் நொந்து விட்டான்.
நிறைய யோசனைகளும் குழப்பங்களுமாக இருந்தவன் மித்ராவின் தேர்வுகளுக்கு நன்றாக இருக்கிறது எனும் பதிலையே சொல்லிக் கொண்டிருக்க, எரிச்சல் கொண்டாள் அவள்.
வேண்டுமென்றே சுமாராக இருந்த ஒரு ஆடையை கையில் எடுத்து அவனது அபிப்ராயம் கேட்டாள். சுதாரித்து விட்டவன், “நீ எத போட்டாலும் நல்லாதான் இருக்கும், அதனால இதுக்கும் என் பதில் சூப்பர்தான்” என்றான்.
சமாளிக்கிறான் என்பதை புரிந்து கொண்ட மித்ரா எடக்கு மடக்காக ஏதோ கேட்கப் போனாள். அதற்குள், “நம்ம சகலை இப்பவே ஹஸ்பண்ட் வேலைய சரியா செய்ய ஸ்டார்ட் பண்ணிட்டார், உங்க லைஃப் அமோகமா போக போவுது பாரு மித்து” என்றான் இந்திரஜித்.
மித்ரா அழுத்தமாக சர்வாவையே பார்த்திருந்தாள், அவனுக்கும் என்ன எதிர்வினை ஆற்ற என தெரியவில்லை, தடுமாறினான்.
“இனிமே எது நல்லாருக்குனு என்கிட்ட கேளு, நானும் உன்னை எப்படி கவுக்கிறேன்னு பாரு” மனைவியிடம் சொன்னான் இந்திரஜித்.
“அவளை மாதிரி நானொன்னும் லூசு இல்லை, உங்ககிட்ட ஓபீனியன் கேட்கிறதுக்கு எம்மேல வச்சு கண்ணாடிலேயே பார்த்துப்பேன், என் கண்ணை நம்புற மாதிரி உங்க வார்த்தையை நம்ப மாட்டேன்” என்றாள் மிருதுளா.
“நீ சொல்லுடி எனக்கு இது எப்படி இருக்கு?” ஏதோ புடவையை காட்டி கேட்டார் வைஜெயந்தி.
இப்படி மற்றவர்கள் ஆடைத் தேர்வில் ஆக்ரமித்திருக்க மித்ராவின் பார்வையில் சர்வா திணறிக் கொண்டிருந்தது அவர்களின் கவனத்தில் பதியவில்லை.
தனிமையில் அவளிடம் சிக்கி விடாமல் எப்படியோ தப்பித்து விட்டான். குன்னூர் திரும்பிய பிறகு இரவில் அவளிடமிருந்து வந்த அழைப்பை தவிர்க்க முடியவில்லை.
“உலகத்திலேயே ரொம்ப கஷ்டம் இந்த பொண்ணுங்கள சமாளிக்கிறதுதான்” வாய் விட்டு புலம்பிக் கொண்டே அழைப்பை ஏற்றான்.
எந்த முகாந்திரமும் இல்லாமல், “என்ன பிராப்லம்னு ஒழுங்கா சொல்லிடுங்க” என்றாள் மித்ரா.
“எந்த பிராப்லமும் இல்லை எனக்கு, ஏன் இப்படி கேட்கிற?” அப்பாவியாக கேட்டான்.
“காலைல நல்லாதான் இருந்தீங்க, போக போக நீங்க ஆள் சரியில்லை. என்னங்க ஏதாவது ஃபினான்ஸியல் பிராப்லமா?” என அவளே அவனுக்கு பதில் தயாரித்துக் கொடுக்க அவனும் ஆம் என்றான்.
“ஏன் என்கிட்ட சொன்னா கவுரவ குறைச்சல்னு நினைச்சிட்டீங்களா?” அவள் ஆதங்கமாக கேட்கவும் தலையை சுவரில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு.
உரிமையாக சண்டை போட்டு முடித்தவள் அடாவடியாக அவனுடைய வங்கிக்கணக்கு விவரங்களை பெற்றுக் கொண்டாள். அடுத்த சில நிமிடங்களில் அவளுடைய சேமிப்பு முழுவதையும் அவனுடைய கணக்குக்கு மாற்றி விட்டாள்.
அந்தப் பணம் அவனுக்கு பெரிய விஷயமே இல்லை, ஆனால் அவளுக்கு அது பெருந்தொகை. கண் மூடித் தனமான இவளது அன்புக்கு தான் தகுதியானவன்தானா என அவனுள் குற்ற உணர்வு.
எந்த சந்தேக கேள்வியும் வேண்டாம், இனி சங்கமித்ராதான் என் வாழ்க்கை துணை, அவளை முன்னிறுத்திதான் அனைத்தும், ஈடில்லா அன்பை என்னாலும் அவளுக்கு கொடுக்க முடியும், நன்றாக வாழ வைப்பேன் அவளை சபதம் போலவே எடுத்துக் கொண்டான். அதன் பின்தான் அவனால் நிம்மதியாக உறங்க முடிந்தது.
திருமண நாள் உதயமானது. மனமாற நெஞ்சம் உருக வழிபாடு செய்து விட்டுத்தான் மண மேடைக்கு சென்றாள் மித்ரா.
அதிகாலை முகூர்த்தம். காதலித்தவனை மணமுடிக்கப் போகும் சந்தோஷத்தில் மலர்ச்சியோடு இருந்த மித்ரா, அவ்வப்போது சர்வாவை பார்த்த வண்ணம் இருந்தாள்.
அவனிடம் சிறு பதற்றம் குடி கொண்டிருந்தது. அவனுக்கென யாருமே இல்லாமல் இன்று தானே எல்லா சொந்தமுமாக அவனுக்கு மாறப் போகும் நிகழ்வில் உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறான் போலும் என நினைத்துக் கொண்டவள் யாரின் கவனத்தையும் கவராமல் அவனது கையை பிடித்து அழுத்தினாள்.
பெரிய மூச்சை உள் இழுத்து விட்டவன் அவளை பார்த்து புன்னகைத்தான். தன் அடி நெஞ்சத்தை தொடாத அந்த புன்னகையில் நெற்றி சுருக்கினாள்.
இப்போது அவன்தான் அவளின் கையை பிடித்து அழுத்தினான். சொல்லத் தெரியாத பய உணர்வு மித்ராவின் உள்ளத்தில் வியாபித்து எழுந்தது.
சில நொடிகளில் தன் தலையை லேசாக உலுக்கி புன்னகையை தருவித்துக் கொண்டாள்.
மங்கல நாண் சர்வாவின் கையால் அவளின் கழுத்தில் ஏறியது. மித்ராவின் உடல் சிலிர்த்து பின் அடங்கியது. கண்களில் கண்ணீர் படலம் தோன்றி இமை மீறாமல் கண்களுக்குள்ளேயே கரைந்து காணாமல் போனது.
அடுத்தடுத்த சடங்குங்களும் எவ்வித குறைகளும் இல்லாமல் சுபமாக நடந்தேறியது.
காலை உணவுக்கு பின் வந்திருந்த விருந்தினர்கள் மேடை ஏறினார்கள்.
வந்திருந்த உறவுக்காரர்களில் ஒரு இளைஞன் சென்னையில் இருக்கிறான். அவன் அவனது தந்தையிடம் ரகசியமாக ஏதோ சொன்னான். அவரின் முகம் வெளுத்துப் போனது. மகனிடம் இன்னொரு முறை கேட்டு ஊர்ஜிதம் செய்தவரின் கண்கள் சௌந்திரராஜனை தேடின.
சில நிமிடங்களில் செய்தி ராஜனையும் சென்றடைந்தது. அடுத்த சில நிமிடங்களில் மண்டபம் ஸ்தம்பித்துப் போனது.