அத்தியாயம் -2(2)

“உன்னை நானும் அப்பாவும் எவ்ளோ நம்பியிருந்தோம்? ஏன் டி உன் புத்தி இப்படி போச்சு?” எனக் கேட்டு கண்ணீர் வடித்தார் வைஜெயந்தி.

அவர்கள் பேசிப் பேசி சோர்வடையும் வரை அமைதியும் அழுத்தமுமாகவே அமர்ந்திருந்தாள் மித்ரா.

தங்கையின் உறுதியில் மிரண்டு போன பெரியவள் அம்மாவை கலக்கமாக பார்க்க, அவரையும் அந்த கலக்கம் தொற்றிக் கொண்டது.

“உங்களை கஷ்ட படுத்தணும்னுலாம் நான் யோசிச்சதே கிடையாது. என்னை மீறி நடந்ததுக்கு நான் என்ன பண்ணுவேன்? சர்வாவை தவிர யாரையும் என் துணையா நினைக்க கூட முடியலை. தயவுசெஞ்சு என்னை புரிஞ்சுக்குங்களேன்!” முடிவில் அழுது விட்டாள் மித்ரா.

தங்கள் வீட்டு செல்லப் பெண்ணை வேதனை படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் அல்லவே. ஆனாலும் அவளின் காதலை அங்கீகரிக்க முடியவில்லை. தங்கள் குடும்பத்திற்கு ஏன் இந்த நிலை என நொந்து கொண்டனர்.

அடுத்த நாள் சர்வாவே இறங்கி வந்து மித்ராவுக்கு அழைத்தான். வீட்டினரின் எதிர்ப்பில் கலங்கிக் கொண்டிருந்தவளுக்கு சர்வாவின் மௌனமும் சோர்வை தந்திருக்க, இப்போது அழைப்பை கண்டதும் அவளை மீறி கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அவன் சமாதானமாக பேசும் முன்னர் திட்டி தீர்த்து விட்டாள். இடையிடாமல் பொறுமையாக அனைத்து திட்டுக்களையும் வாங்கிக் கொண்டவன், “எனக்கு மட்டும் உன் கூட பேசாம நல்லா இருந்துச்சுன்னு நினைக்கிறியா மித்ரா? ஒரு வேளை உன் வீட்டுல உள்ளவங்களுக்காக என்னை தூக்கி எறிய நினைச்சா அது எப்படி இருக்கும்னு உனக்கு தெரிய வேணாமா? அதான் மூனு நாள் ஒரு சாம்பிள் காட்டினேன்” என்றான்.

அவனை திட்டி விட்டதில் மட்டுப் பட்டிருந்த அவளின் கோவம் சர் என உச்சிக்கு ஏறியது.

“என்னை பத்தி என்ன திங்கிங்ல இருக்கீங்க சர்வானந்த்?” சீறினாள்.

“திரும்ப கோவமா? நீ உறுதியா இருப்பேன்னு தெரியும் மித்ரா, உன் குடும்பம் மேல உள்ள அஃபெக்ஷனும் தெரியும், அதனால…”

“அதனால… அதனால… என்ன எனக்கு டெஸ்ட் வைக்கிறியா? போ போயிடு, ஆமாம் எனக்கு என் குடும்பம்தான் முக்கியம் நீ இல்லை” ஆத்திரமாக சொன்னவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.

சர்வாவின் அடுத்தடுத்த அழைப்புகளை ஏற்கவே இல்லை அவள்.

மித்ராவை ரோஷம் கொள்ள செய்ய வேண்டும் என்பதுதான் அவனது எண்ணம் கூட. ஆறு மாத காலம் இங்கேயே ஓடி விட்டது. இனியும் நாட்களை கடத்த முடியாத நிலை அவனுக்கு. விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றால் இப்படி ஏதாவது செய்தால்தான் என நினைத்து திட்டமிட்டு பேசியதுதான்.

பழகிய இத்தனை நாட்களில் மித்ராவின் குணம் பற்றி அவனுக்கு நன்றாக தெரியும். என்ன நடந்தாலும் பின் வாங்க மாட்டாள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததுதான். அதே போல வீட்டாரின் ஒப்புதல் இன்றியும் எதையும் செய்ய மாட்டாள் என்பதும் அவனுக்கு தெரிந்திருந்தது.

குடும்பத்துக்கும் அவனுக்கும் இடையில் நடு மையமாக நிற்பவளை அவனை நோக்கி இழுக்க நினைத்து செயல் பட்டான். இந்த கோவம் கூட அவன் எதிர்பார்த்ததுதான்.

எட்டு முறை அவளுக்கு அழைத்து பார்த்தவன் அதற்கு மேல் பொறுமை இல்லை எனும் விதமாக கைப்பேசியை பாக்கெட்டில் வைத்து தாடையை தடவிக் கொண்டே தன் கண் முன் பரவி படர்ந்திருந்த தேயிலை தோட்டத்தை பார்த்தான்.

அந்த பசுமை அவனது மனதில் குளுமையை தரவில்லை. மித்ரா பற்றிய சிந்தனை வேகமாக மூளை முழுதுமாக ஆக்ரமித்தது. இந்நேரம் அவள் அழுது கொண்டிருப்பாள் எனும் நினைவு நெஞ்செல்லாம் வேதனையை பரப்பியது.

சில நிமிடங்கள் கழித்தே மித்ரா எனும் பிம்பம் சிறிதாகி வேறு சில நினைவுகளும் அவனுள் வியாபித்தன. முகம் இறுகிப் போக அப்படியே நின்றிருந்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து இயல்புக்கு திரும்பியவன் மித்ராவை காண கிளம்பினான்.

அவள் ஃபேக்டரி செல்லும் வழியிலேயே அவளை பார்க்கலாம் என எண்ணி இவன் காத்திருந்தான். அவனை கண்டும் ஸ்கூட்டியை நிறுத்தாமல் சென்று விட்டாள். வேறு வழியின்றி அவளது ஃபேக்டரிக்கே போய் நின்றான். இதுநாள் வரை இங்கு வந்ததில்லை. வேறெங்காவதுதான் சந்திப்பார்கள்.

பார்க்கிங் ஏரியாவில் அவனை கண்டதும் பதறித்தான் போனாள் மித்ரா.

சௌந்திரராஜன் இந்நேரம் தேயிலை தூள் தொழிற்ச்சாலைக்கு சென்றிருப்பார், ஆனாலும் இவனது வருகை பற்றி அவருக்கு கண்டிப்பாக தெரிய வரும். கண்காணிப்பு கேமரா இருக்கிறது, அவரது கைப்பேசி வாயிலாகவே இங்கு நடப்பவற்றை நேரடி ஒளி பரப்பாக காணலாம் அவர்.

இனி இவனை பற்றி மறைக்க என்ன இருக்கிறது என்றாலும் ‘வேலை செய்யும் இடத்தில் என்னம்மா இது?’ எனக் கேட்டால் முகத்தை எங்கு வைத்துக்கொள்வது என கலங்கியவள், “ஈவ்னிங் பார்க்கலாம், கிளம்புங்க” என்றாள்.

“என் வேலையை விட்டுட்டு உன்னை பார்க்க ஓடி வந்தா இப்படித்தான் துரத்தி விடுவியா?”

“உங்க அதி முக்கியமான வேலையை விட்டுட்டு முக்கியமே இல்லாத என்னை தேடி யார் வரச் சொன்னது உங்களை? போங்க”

“உன் வாய்லேருந்து போ போங்கன்னு வர்ற வார்த்தை இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும் மித்ரா” எச்சரிக்கை போல சொன்னான்.

“ரொம்ப மாறிட்டீங்க சர்வா, இந்தளவு கோவத்தை இத்தனை நாள் எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க?”

“எனக்குள்ளதான் இருக்கு மித்ரா. நீ எனக்கு இல்லைங்கிற நிலை வந்தா இதுக்கு மேலேயும் என் கோவத்தை நீ பார்க்கலாம்” என சூடாக சொல்லி விட்டவன் உடனேயே ‘இதுதான் நீ இவளை சமாதானம் செய்யும் லட்சணமா?’ என தன்னையே நொந்து கொண்டான்.

ஒட்டு மொத்த கோவமும் மித்ராவின் முகத்தில் குவிந்து இரத்தமென சிவந்து கிடக்க, “ஸாரி மித்ரா” என சொல்லி அவளை நெருங்கினான்.

“இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க கூடாது, கிளம்புங்க” என சீறி விட்டு விரைந்து விட்டாள் மித்ரா.

இவள் சொன்னால் நான் என்ன கேட்டே ஆக வேண்டுமா? என அவனுள் வீம்பு பிறந்தது. அவளை தொடர்ந்து செல்ல நினைத்தவனால் அதை செயல் படுத்த முடியவில்லை. அவளது வார்த்தையை மீறி இன்னும் அவளை கோவமூட்ட வேண்டாம் என கருதியவன் புறப்பட்டு விட்டான்.

மதியமே அவர்கள் வழக்கமாக சந்திக்கும் உணவகத்தில் காத்திருப்பேன் என செய்தி அனுப்பி வைத்து விட்டான் சர்வா. அவள் படித்து விட்டாலும் பதில் செய்தி அனுப்பவில்லை. ஆனால் அவனை ஏமாற்றாமல் குறித்த நேரத்துக்கு வந்து விட்டாள்.

முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தவளை பார்த்து புன்னகை செய்ய, அவளோ எரிச்சலாக பார்த்தாள்.

“கொஞ்சம் ஓவரா போறேன்னு புரியுது மித்ரா. இதெல்லாம் நீ என் லைஃப்ல இல்லாம போயிடுவியோங்கிற இன்செக்யூரிடில என்னை மீறி வர்ற கோவம். என் நிலையிலேருந்து கொஞ்சம் யோசி” என தன்மையாக சொன்னான்.

அவள் முகத்தை திருப்பிக் கொள்ள இன்னும் கொஞ்சம் குழைந்து கெஞ்சினான். அவளுக்கு பிடித்ததை அவனே ஆர்டர் செய்தான். இன்னும் அவளிடமிருந்து ஒரு வார்த்தை கூட வெளி வரவில்லை. சாப்பிட மட்டும் வாய் திறந்தாள்.

மனதில் சலித்தாலும் கைகளை இறுக மடக்கி பொறுமையை தேடிப் பிடித்து தன்னிடத்திலேயே வைத்துக் கொண்டவன் மேலும் அவளிடம் கெஞ்சினான்.

ஒரு வழியாக பேசவும் வாய் திறந்தாள்.

“என் வீட்ல சம்மதிக்க உங்களால முடிஞ்சத நீங்க செய்யுங்க, என்னால முடிஞ்சத நான் செய்றேன். நம்ம கல்யாணம் என்னிக்குன்னு என் அப்பா சொல்ற அன்னைக்கு உங்களை மீட் பண்றேன்” என்றாள்.

‘எப்ப உன் அப்பா சம்மதிச்சு எப்ப இங்கேருந்து கிளம்பறது?’ மனதில் எரிச்சலடைந்தான். கண் முன் அமர்ந்திருப்பவள் சாமான்யமாக தன் குடும்பத்தை விட மாட்டாள் எனும் நிதர்சனம் அவனது நெற்றிப் பொட்டில் அறைந்தது.

“ஏன்… ஏன் மித்ரா, என் கூட பேச மாட்டேன்னு இவ்ளோ பெரிய முடிவு எதுக்கு? வீட்ல நீ போராடும் போது நான்தான் உனக்கு ஆதரவா இருக்கணும்னு உன் அறிவு கெட்ட சர்வாவுக்கு இப்போதான் புரியுது, இனிமே என்ன காரணத்துக்காகவும் உங்கிட்ட பேசாம இருக்க மாட்டேன்” என சொல்லிக் கொண்டே அவளது கையை பற்றினான்.

நாசூக்காக தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள், “நான் சொன்னது சொன்னதுதான். பில் பே பண்ணிட்டு கிளம்புங்க” என்றாள்.

அடுத்து ஏதோ பேசப் போனான் சர்வா, ஆனால் அவன் உதிர்த்த வார்த்தையை கேட்க அவள் அங்கே நிற்கவில்லை. அவளது உதாசீனத்தில் வெகுவாக ஆத்திரப் பட்டான். இப்படி இவளுடன் போராடிய வேண்டிய தன் நிலையை நினைத்து தன் இயல்பை தொலைத்து நிற்பது குறித்து அவன் மேலேயே அவனுக்கு கோவம் வந்தது.

ஆனால் விட்டுச் செல்ல முடியாத கையறு நிலை. ஆயாசமாக அவள் சென்ற திசையை பார்த்தான். என்ன ஆனாலும் இவளோடுதான் இங்கிருந்து செல்வேன் என தனக்குள் சங்கல்பம் செய்து கொண்டான்.

இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை நின்று போனது.

அன்றிலிருந்து அடுத்த நான்காவது நாள் சர்வா அவன் வேலை பார்க்கும் எஸ்டேட்டின் உரிமையாளர் நாகா ரெட்டியின் அறையில் இருந்தான்.

“உங்களை கேட்காம அவருக்கு என்ன பதில் சொல்லி அனுப்பன்ன தெரியலை. நான் பார்த்துக்கிறேன்னு பொதுவா சொல்லிட்டேன்” என்றார் நாகா ரெட்டி.

மித்ராவின் அப்பா அவருக்கும் நாகா ரெட்டிக்கும் தெரிந்த பொதுவான நபரை அழைத்துக் கொண்டு நாகாவை சந்திக்க வந்திருக்கிறார். சர்வாவை பணி மாற்றம் தேவைப்பட்டால் பணி நீக்கம் செய்து விடும் படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைத்தான் இவனிடம் சொன்னார் நாகா.

சர்வாவிடம் பெரிதான சலனங்கள் இல்லை. “இனிமே அவர் உங்களை எந்த வகையில கான்ட்டாக்ட் பண்ண நினைச்சாலும் அவருக்கு அவைலபில் ஆகாதீங்க” என்றான்.

நாகா சரியென தலையாட்டிக் கொள்ள, “வேறெந்த டவுட்ஸ்ம் வரக்கூடாது, ப்ளீஸ்…” என்றான்.

“நான் உங்களுக்கு கடமை பட்டவன், ப்ளீஸ்லாம் வேணாம், செய்யுன்னா செய்ய போறேன்” என்றார் நாகா.

“தேங்க்ஸ் மிஸ்டர் நாகா” என்றான்.

“கேட்கிறேன்னு தப்பா நினைக்க வேணாம்” என இழுத்தான் நாகா.

கேளுங்கள் என அனுமதி வழங்கினான் சர்வா.

“அந்த பொண்ணும் உங்களை விரும்புதுன்னா ஏன் இந்த போராட்டம்?” எனக் கேட்ட நாகாவை கண்கள் சுருக்கி கேள்வியாக பார்த்தான்.

“மித்ராவை உங்களோடவே அழைச்சிட்டு போயிடலாம், அந்த பொண்ணு வர மாட்டேன்னு சொன்னாலும் கட்டாயப் படுத்தியோ இல்லை அந்தப் பொண்ணுக்கே தெரியாமலோ கூட இங்கேருந்து கூட்டிட்டு போறது ஒண்ணும் உங்களால முடியாத காரியம்னு இல்லையே, யாரால என்ன பண்ணிட முடியும்? ஏன் இத்தனை மாசமா இங்க இருந்து கஷ்ட படுறீங்கன்னு கேட்டேன்”

“என்கிட்ட சொல்ல நினைச்ச முக்கியமான விஷயத்தை எப்பவோ சொல்லிட்டீங்கதானே, அப்ப நான் கிளம்பறேன்” என சர்வா எழுந்து கொள்ள, அவனுக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு நாகாவும் எழுந்து கொண்டார்.

“யார்கிட்ட எதை எந்தளவு சொல்லலாம்னு இருக்கு நாகா, உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்” என்றவனை நேராக பார்க்க இயலாமல் பார்வையை தாழ்த்திக் கொண்டார்.

தேவையற்றவை என்னிடம் பேசி என் நேரத்தை வீண் செய்யாதே, என்பது போலிருந்தது சர்வாவின் பார்வை, பேச்சு, உடல்மொழி மூன்றும்.

அங்கிருந்து வெளியேறிச் செல்ல நடந்தான். அவனுக்கு முன்னே சென்று அறைக் கதவை திறந்து விட்டார் நாகா.

வேக நடை போட்டு அவரை கடந்து சென்றவனை பயமும் வினோதமுமாக பார்த்திருந்தார் நாகா.