ராஜனின் வீட்டில் அவரது உறவினர்கள் குழுமியிருந்தனர்.
“என்னதான் நம்ம பொண்ணு ஆசை பட்டு நம்மள மீறி போயிருந்தாலும் அப்படியே விட்ர முடியுமா? நம்ம குல பொண்ணுங்களுக்கு நாமதான் காவல். அங்க எப்படி இருக்கு, ஒண்ணும் பிரச்சனை இல்லையேன்னு ஆராஞ்சு தெரிஞ்சுக்கணுமா இல்லயா?” என சொல்லிக் கொண்டிருந்தார் அவர்களின் குலப் பெரியவர்.
மற்றவர்களும் அதை ஆமோதிப்பது போல நின்றனர். எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் மித்ராவின் புகுந்த வீட்டுக்கு செல்வது என முடிவு செய்தனர்.
ராஜனுக்கும் மகளை பற்றிய கவலை இருக்கத்தான் செய்தது, இருப்பினும் தான் போய் மகளை பார்ப்பது சரி, அனைவருடனும் எப்படி செல்வது என தயக்கத்தோடு பதில் சொல்லாமல் மௌனமாக நின்றிருந்தார்.
அறிவுடைநம்பியும் ருக்மணியும் ராஜனின் வீட்டுக்கு வருகை தந்தனர். கூட்டத்தை கண்ட இருவரும் குழப்பமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களை ராஜன் வரவேற்கவும் மற்றவர்களுக்கும் யாரென புரிந்தது.
தன்னுடைய உறவினர்கள் மித்ராவின் நலனை உறுதி செய்து கொள்ள விரும்புவதை கூறினார் ராஜன்.
சர்வா, மித்ரா இருவருக்கும் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருப்பதை சொன்ன நம்பி, “எல்லாரும் வந்து அவங்கள வாழ்த்தணும்” எனக் கேட்டுக் கொண்டார். ருக்மணியும் அவர்களை முறையாக அழைத்தார்.
அவர்களின் பெரியவர் முன்னால் வந்தார்.
“நடக்க கூடாத ஒண்ணு நடந்து போச்சு, அதுக்குன்னு எங்க பொண்ணை அப்படியே விட்ர மாட்டோம். நீங்க எவ்ளோ பெரிய இடமா இருந்தாலும் கவலையில்ல, மித்ராக்கு ஏதாச்சும்னா சும்மா விட மாட்டோம்” என்றார்.
இதென்னடா தேவையில்லாமல் ஏன் இப்படி பேசுகிறார் என சங்கடமாக பார்த்திருந்தார் ராஜன்.
ஆனால் நம்பி கோவம் கொள்ளாமல் அழகாக கையாண்டார்.
“மித்ரா எங்க குடும்பத்துக்கு வந்ததை எப்பவோ நடந்த தப்ப சரி செய்ய எங்களுக்கு கிடைச்ச வாய்ப்பாதான் நாங்க பார்க்கிறோம். செண்பகம் அம்மாக்கு கிடைக்க வேண்டிய அத்தனையும் மித்ராவுக்கு கிடைக்கும், நீங்க எல்லாரும் எப்ப வேணும்னாலும் அங்க வரலாம், ஆனா ஒருபோதும் மித்ராவுக்கு நீதி கேட்கன்னு அங்க வரவேண்டிய சூழ்நிலை வராது” என்றார் நம்பி.
“நானும் ஒரு காலத்துல வேற குடும்பத்து பொண்ணுதாங்க, இவருக்கு மனைவியாகி நாப்பது வருஷம் ஆகுது. வர்ற பொண்ண எப்படி வச்சுப்பாங்கன்னு என்னை பார்த்தே நீங்கள்லாம் தெரிஞ்சுக்கலாம். மித்ராவை நினைச்சு யாரும் கவலை படாதீங்க” என்றார் ருக்மணி.
அவர்களின் தன்மையான பேச்சிலும் பணிவிலும் திருப்தி அடைந்த பெரியவர் திருமண வரவேற்புக்கு வருவதாக சம்மதம் சொன்னார்.
ஒருசிலர் இன்னும் சமாதானம் ஆகவில்லைதான், ஆனால் பெரியவர் சொல்லி விட அவரின் வார்த்தைக்கு மரியாதையளித்து அமைதி காத்தனர்.
மிருதுளாவின்புகுந்தவீட்டினர்மட்டும் இருக்க, மற்றவர்கள் கிளம்பி விட்டனர். நம்பிக்கும் அவரது மனைவிக்கும் விருந்து ஏற்பாடானது.