அத்தியாயம் -14(2)

காரில் சென்று கொண்டிருக்கையில் லிசியின் மனதை நோகடித்து விட்டாய் என திட்டினாள் மித்ரா.

“மியூச்சுவலா பேசித்தான் பிரிஞ்சு போனோம். திரும்ப அவ மறுபடியும் அதே எண்ணத்தோடு என்னை நெருங்கும் போது அவளை பத்தி யோசிக்கிற நிலையில இல்லை நான். உன்னை தேடி வராம போயிருந்தா கூட அவளுக்கு என் லைஃப்ல இடம் இருந்திருக்காது, எங்களுக்கு செட் ஆகாதுன்னு நல்லா தெரிஞ்சும் விபரீத முடிவு எடுத்திருக்க மாட்டேன்” என்றான்.

“நான் மட்டும் உங்களுக்கு செட் ஆவேனா?” என கிண்டலாக கேட்டாள்.

“உன் விஷயம் வேற, நீதான்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் நீ செட் ஆவியா மாட்டியான்னு யோசிக்கிறது முட்டாள்தனம்”

“ஓ அதனால இந்த அறிவுசாலி என்னை கட்டிக்கிட்டு வாழ்க்கைல பெரிய தியாகம் செஞ்சிட்டீங்க?”

“இல்லை மித்ரா, கல்யாணத்துக்கப்புறம் அறிவு வேலைக்கு ஆகாது, நீ எனக்கு செட் ஆவியான்னு திங்க் பண்ணவே இல்லை, நான் உனக்கேத்த மாதிரி செட் ஆகிடலாம்னு தீர்மானிச்சிட்டேன். வானத்துல வெள்ளை காக்கா இல்லை மஞ்ச பச்ச சிவப்புன்னு எந்த கலர்ல காக்கா பறக்கிறதா நீ சொன்னாலும்…”

“ஆமாம் சாமி போட போறீங்களா?”

“நீ சொல்ற கலர்ல காக்காக்கு பெயிண்ட் அடிச்சு பறக்க விட போறேன், நீ உண்மை சொன்னது மாதிரியும் ஆச்சு, சர்வா அவன் பொண்டாட்டி பேச்சுக்கு தலையாட்டுறான்னு பேச்சு இல்லாம அவன் பொண்டாட்டி என்ன சொன்னாலும் உண்மை ஆக்கிடுவான்னு சிட்டிக்குள்ள என் பெருமை பரவின மாதிரியும் ஆச்சு” என அடக்கப் பட்ட சிரிப்புடன் சொன்னான்.

மித்ராவுக்கும் அவளை மீறி சிரிப்பு வரத்தான் செய்தது, வலிந்து அடக்கிக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அமைதியாக செல்ல, “லிசி என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றாங்க, பாவம் அவங்க” என்றாள்.

“என்னை பத்தி அவகிட்ட கிளியர் பண்ணிட்டேன் மித்ரா, நீயும் அவ டாபிக்குக்கு ஃபுல் ஸ்டாப் வச்சிடு. அவ நம்பர் கூட நான் பிளாக் பண்ணிட்டேன்” என்றான் சர்வா.

“எதுக்காகவாவது அவங்க கால் பண்ணினா? நம்பர்லாம் பிளாக் பண்ணாதீங்க” என்றாள்.

“நீ எப்ப எப்படி பேசுவ எப்படி மாறுவேன்னு தெரிய மாட்டேங்குது. இனிமே எனக்கு கால் பண்ண மாட்டா, அப்படியே அவ கால் பண்ணி நான் எடுக்கலைன்னா திரும்ப பண்ண மாட்டா. எனக்கு உன்னை சமாளிச்சா போதும்” என அவன் சொல்ல, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

பின் அவளாகவே திருமண வரவேற்பு பற்றி விசாரித்தாள்.

“நம்ம கல்யாணம் மேல டவுட் இருக்கு உனக்கு. அதை சரி செய்யதான் ரிஸப்ஷன். காலையிலேயே வீட்ல பேசிட்டேன், அப்புறம்தான் வெளில கிளம்பினோம்” என்றான்.

மித்ராவின் மனம் அவளது பிறந்த வீட்டினரை தேடியது. அதை புரிந்து கொண்டவனாக, “பெரியப்பாவும் பெரியம்மாவும் உன் அப்பா வீட்டுக்கு நேர்ல போய் சொல்றதா இருக்காங்க” என்றான்.

“மத்தவங்களுக்கு பயந்துகிட்டு என்னை என் உறவை கட் பண்ணினாலும் பண்ணுவாங்க” என வருத்தமாக சொன்னாள்.

“என் குடும்பத்துக்காக உன்னை இங்க வர வச்சேன், அதுக்காக உனக்கு உன் பிறந்த வீட்ட இல்லாம செஞ்சிட மாட்டேன். நான் சரி பண்ணி தர்றேன்” என்றான்.

முடியுமா என்பது போல பார்த்தாள்.

“கட்டம் கட்டி உன்னையவே தூக்கலையா? உன் ரிலேட்டிவ்ஸ்லாம் ஜூஜூபி. ட்ரஸ்ட் மீ மித்ரா” என்றான்.

அவள் முறைக்க, “செஞ்சது தப்புன்னாலும் எப்படி தைரியமா ஒத்துக்கிறேன் பார்? உனக்கு உண்மையா இருக்கேன்னு சொன்னதை சரியா ஃபாலோ பண்றேன்தானே?” என்றான்.

“ஆமாமாம்!” சலிப்பாக சொல்லி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

கார் வீட்டுக்கு வந்த பின் முதலில் இறங்கியவள் அவனுக்கு காத்திராமல் வீட்டின் உள்ளே செல்ல நடந்தாள். காரை நிறுத்தி விட்டு அவளை நோக்கி ஓடி வந்தவன் அவளின் கையை பிடித்து நிறுத்தினான்.

“என்ன?” என எரிச்சலாக கேட்டாள்.

“ரொம்ப மெனேக்கெட்டு கிளம்பின, வேஸ்ட் ஆக கூடாது. செல்ஃபி எடுத்துக்கலாம்” என்றான்.

அவள் உச்சு கொட்ட, கைப்பேசியை கையில் எடுத்தான் அவன்.

ஏசி இல்லாமல் ஜன்னல் கதவை திறந்து வைத்துதான் பிரயாணம் செய்திருந்தனர். ஆகவே அவளின் ஒப்பனை கலைந்து போயிருந்தது. வைத்திருந்த பூ கூட வெயிலின் தாக்கத்தால் வாடிப் போயிருந்தது.

“தலை முடியெல்லாம் பறக்குது, டச் அப் பண்ணிட்டு அப்புறம் செல்ஃபி எடுக்கலாம்” என்றாள்.

அவளின் பக்கத்தில் நின்றிருந்தவன் அவளின் முகத்தை நெருக்கமாக பார்த்து, “நீ எப்படி இருக்கேன்னு எனக்குதான் தெரியும், இப்படியேதான் எனக்கு ஃபோட்டோ வேணும்” என்றான்.

முகத்தில் மோதிய அவனது மூச்சுக் காற்றில் தடுமாறிக் கொண்டிருந்தவள் மறுப்பு சொல்லவில்லை. அவளின் தோளில் கை போட்டு தன்னோடு நெருக்கமாக அணைத்தவாறு புகைப்படம் எடுத்தான்.

நெளிந்து கொண்டே அவள் விலக, “என்ன வாசம் உம்மேல?” எனக் கேட்டான்.

அவளின் முகம் அஷ்ட கோணலானது. வாசனை திரவியம் ஏதும் அவள் உபயோகித்திருக்கவில்லை. ஒரு வேளை வியர்வை வாடையோ, அதைத்தான் கிண்டல் செய்கிறானோ என நினைத்துக் கொண்டாள்.

தாமரைப் பூவின் நறுமணம் கொண்ட எண்ணெயை தலைக்கு வைத்திருந்தாள். அதுவும், வாடியிருந்தாலும் இன்னும் மணம் வீசிக் கொண்டிருந்த மல்லிகையும் இணைந்து சர்வாவை மயக்கின.

அவள் தன் சந்தேகத்தை கேட்க, சத்தமாக சிரித்தவன், “இருக்கும் இருக்கும் உன் ஸ்வெட் கூட ஸ்வீட் ஸ்மெல்ல இருக்குமா இருக்கும். ரூம் போனதும் டெஸ்ட் பண்ணிட்டு சொல்றேன்” என்றான்.

கண்கள் தெறித்து விழுவது போல அவனை பார்த்தவள் வீட்டிற்குள் செல்ல ஓட்டம் எடுத்தாள்.

ஹாலில் எதிர் பட்ட ருக்மணியின் மீது மோதி சமாளித்து நின்றாள் மித்ரா. தன் மனைவி விழுந்து விடாமல் காப்பாற்றினார் அறிவுடைநம்பி. அவர் மதிய உணவுக்காக வீடு வந்திருந்தார்.

“ஏம்மா இப்படி ஓடி வர்ற?” என நம்பி கேட்க, “என்னை மருமகளுங்கதான் கவனிச்சுக்கனும்னு முன்னாடி எப்பவோ சொன்னேனே, அதான இடுப்ப ஒடச்சி படுக்க வச்சு சிறப்பா கவனிச்சுக்கலாம்னு நினைச்சிட்டா போல” என்றார் ருக்மணி.

மித்ரா என்ன சொல்வதென விழித்துக் கொண்டு நின்றாள். பின்னால் வந்த சர்வா, “டவுட் கேட்டா, டெஸ்ட் பண்ணி கிளியர் பண்றேன்னு சொன்னேன். கோச்சுக்கிட்டு ஓடி வந்திட்டா” என்றான்.

“என்னடா, புரியுற மாதிரி பேசுடா” என்றார் நம்பி.

“உங்க மருமக சொல்வா” என நமட்டு சிரிப்போடு சொல்லி உணவு மேசைக்கு சென்று விட்டான் சர்வா.

“என்னம்மா சொல்றான் அவன்?” என சந்தேகம் கேட்டார் நம்பி.

மித்ரா சங்கடமாக பார்க்க, “அரசியல்வாதிக்கு அப்பப்ப ஆறாவது அறிவு ஆஃப் ஆகிடும். நீ போ, நீயும் அவனோட சேர்ந்து சாப்பிடு” என சொல்லி கணவரை இழுத்துக் கொண்டு நகர்ந்தார் ருக்மணி.

சர்வாவை கண்டனமாக பார்த்துக் கொண்டே சாப்பிட வந்தாள் மித்ரா.

அங்கே அவர்கள் மட்டுமே தனித்து இருந்தாலும் யாரும் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் ஏதும் கேட்டுக் கொள்ளாமல் அவனுக்கு பரிமாறி தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஒரு டெஸ்ட்க்கே பயந்தா எப்படி மித்ரா? உன்னை முழுசா பார்க்கிற சந்தர்ப்பம் கிடைச்சும் கூட, உன் உடம்போட வெயில் படாத இடமும் இப்ப கண்ணுக்கு தெரியற உன் ஸ்கின் கலர்லதான் இருக்குமாங்கிற கேள்விக்கு பதில் யோசிக்கிற அளவுக்கு நல்லவன் நான், நீ ஒழுங்கா கோஆபரேட் செய்யலைனா டெஸ்ட்ல எப்படியாவது பாஸ் ஆகணும்னு ஆர்வக்கோளாறுல ஏதும் செஞ்சிடுவேனோன்னு பயமா? ப்ச், நான் நிஜமா அப்பாவி மித்ரா” என சொல்லி சிறு பிள்ளை போல உதடுகள் பிதுக்கினான்.

கன்னச் சிவப்பை அவனுக்கு காட்டாமல் வலது கையை கன்னத்தில் வைத்து மறைத்தவள் விட்டால் தலையை தட்டில் வைத்து படுத்து விடும் அளவுக்கு குனிந்திருந்தாள்.

“கொஞ்சம் கொஞ்சமா உன்னை படிச்சி பார்த்து டெஸ்ட் எழுதணும் மித்ரா. ஃபெயில் ஆனாலும் பரவாயில்லை, விடாமுயற்சிய கை விடாம உன்னை படிச்சிட்டே இருப்பேன்” என்றான்.

“சாப்பிட விடப் போறீங்களா இல்லயா இப்போ?” பொய்யான கோவத்தோடு கேட்டாள்.

வாடிய மல்லி சரத்தில் ஆங்காங்கே சின்ன காகித ரோஜா மொட்டு வைத்து கட்டப் பட்டிருந்தது. அதை சுட்டிக் காட்டியவன், “உன் கன்னம் கடனா கொடுத்ததா அந்த பூவோட கலர்?” எனக் கேட்டான்.

“சத்தியமா முடியலை, போதும் விட்ருங்க என்னை” என்றவள் அவனது குறும்பு பார்வையையும் சிரிப்பையும் எதிர் கொள்ள முடியாமல் தடுமாறினாள்.

வம்பை குறைத்து அவளை சாப்பிட விட்டான்.

உல்லாச மன நிலையோடு அறைக்கு வந்தனர் இருவரும். ஆசையாக அவளை அணைக்க போனவனின் நெஞ்சில் கை வைத்து தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தினாள்.

“ஆம்பளைக்கு அழகான பொண்ணு மேல ஆசை வரலாம், பொம்பளைக்கு அன்பு வச்சவன் மேல மட்டும்தான் ஆசை வரும்” என்றாள்.

“இவ்ளோ கிரிடிகலா பேசணுமா? எனக்கு புரியற மாதிரி பேசேன்” கிறக்கம் குறையாமல் அவளை நெருங்கினான்.

“ஹார்மோன் செய்ற சேட்டைல இந்த நொடி உங்களுக்கு என்னை நெருங்க தோணுது, மனசார விரும்பினவர் பேச்சை நானும் ரசிச்சிருக்கலாம்”

“ம்ம்… எல்லாம் சரியாதானே இருக்கு?”

“காதல் வரட்டும் முதல்ல, அப்புறம் பார்க்கலாம்” என்றாள்.

அவள் சலிப்பாக பார்க்க, “என்னை காதலிச்ச சர்வாகிட்டதான் என்னை கொடுக்க நினைச்சேன், ஏமாத்தின உங்ககிட்ட இல்லை” என்றாள்.

ஆயாச மூச்சு விட்டவன் கண்களை ஏமாற்றமாக மூடி திறந்தான்.

“இனியாவது ஏமாத்தாம உண்மையா என்னை லவ் பண்ணிட்டு அப்புறம் என்னை நெருங்கி வாங்க” என்றாள்.

இந்த நேரம் மனநிலை இப்படி ஆகும் என காலையில் கூட அவனுக்கு தெரியாது. சலனப் பட்ட மனதை கட்டுப் படுத்தியவன் அவளிடம் சம்மதமாக தலையாட்டி விட்டு அலுவலக அறைக்கு சென்று விட்டான்.

இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து பார்க்கலாம் என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மித்ரா ஆடை மாற்றிக் கொண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தாள்.

லிசியால் விளைந்த பயம் முற்றிலுமாக அகன்றிருக்க நல்ல மனநிலைக்கு மாறியிருந்தவளை உறக்கம் அரவணைத்துக் கொண்டது.