இருள் வனத்தில் விண்மீன் விதை -13 1 6658 இருள் வனத்தில் விண்மீன் விதை -13 அத்தியாயம் -13 தான் என்ன பேசினாலும் வெடித்துச் சிதறி விடுவாள் என்பதை புரிந்திருந்த சர்வா இயலாமையுடன் மித்ராவை பார்த்தான். அவன் சொன்னதை வைத்து லிசி மீண்டும் இவன் வாழ்க்கைக்குள் வர முயற்சி செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டவளுக்கோ அத்தனை ஏமாற்றமாக இருந்தது. இவனும் வேறு வழியின்றி என்னோடு வாழப் போவதாக சொல்கிறான் என்பதாக அர்த்தம் செய்து கொண்டவள் அவன் முகத்தை காணப் பிடிக்காமல் எழுந்து சென்று விட்டாள். அம்மாவையும் அறிவானந்தம் தாத்தாவையும் பார்த்து விட்டு அவன் அறைக்கு திரும்பிய போது படுக்கையில் சுருண்டு படுத்திருந்தாள் மித்ரா. அவளை பார்க்க பார்க்க அவனுக்கு பாவமாகி விட்டது. தான் இவளது வாழ்வில் நுழைந்திருக்கா விட்டால் இந்நேரம் அவளது குடும்பம், சாக்லேட் ஃபேக்டரி என மகிழ்ச்சியாக இருந்திருப்பாள். ஆசை காட்டி ஏமாற்றி விட்டோமோ என குற்ற உணர்வில் குன்றியவன் ‘இல்லையில்லை ஆசை காட்டினேன், ஆனால் ஏமாற்றவில்லை’ என தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான். அன்றிலிருந்து அவசியத்திற்கு கூட அவனிடம் பேசுவதில்லை மித்ரா. தான் உடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்து அவனும் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டான். மித்ராவுக்கு அந்த வீட்டிலிருப்பதை சுலபமாக்கினாள் பிரகல்யா. அவளது பிள்ளைகள் இருவரும் மித்ராவின் மீது பிடிப்போடு இருக்க அவளுக்கும் அவர்களுடன் நேரம் செலவிடுவது நல்ல மனநிலையை கொடுத்தது. பிரதீப் உடன் பழக பழக அவளுக்கு அவன் புதியவன் என்ற என்ற எண்ணமே ஏற்படவில்லை. பல காலம் பழகியிருந்தவன் போன்ற நினைப்பை கொடுத்து விட்டான். பிரதீப் பூரண குணமடைய வேண்டுமென மித்ராவுமே மனமார வேண்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். “முடிஞ்சா காலைல நீயே விளக்கேத்தி பூஜை பண்ணும்மா” என மருமகளை கேட்டுக் கொண்டார் காஞ்சனா. அவளும் அதை கடைபிடிக்க தொடங்கினாள். சதானந்தம் தாத்தாவின் குடிலுக்கும் எப்போதாவது சென்று வருகிறாள். இன்னும் மெய்யப்பன் மீதான பயம் அகலவில்லை, அதே போல எதார்த்தமாக இருக்கும் ருக்மணியை சரியாக புரிந்து கொள்ளாமல் அவரிடமிருந்து தள்ளியே நிற்கிறாள். சொன்னது போல வார இறுதியில் ராஜனால் வர முடியவில்லை. சாக்லேட் ஃபேக்டரியில் ஏதோ இயந்திரம் பழுதாகியிருக்க அவருக்கு அங்கே இருக்க வேண்டியது அவசியமானது. அதற்கடுத்த வாரம் நாள் சரியில்லாமல் இருப்பது, மழை, சம்பந்தி வீட்டினரின் திடீர் வருகை என ஏதாவது ஒன்று அவரை மகளை காண செல்ல முடியாமல் தடுத்தது. வேண்டுமென்றுதான் அப்பா தன்னை பார்க்க வரவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக பிறந்த வீட்டின் உறவு இல்லாமல் போய் விடுமோ என பயம் கொண்டாள் மித்ரா. தன் மனக் கவலையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. சர்வாவாக அவளை கவனித்து விட்டு, “என்ன மித்ரா கவலை, எம்மேல சந்தேகமா இல்லை வேற எதுவுமா? எதுவா இருந்தாலும் சொல்லு” எனக் கேட்டுப் பார்த்தான். அவனை வெறுமையாக ஒரு பார்வை பார்த்தவள் வாயே திறக்கவில்லை. லிசியை பற்றி பேசி புரிய வைக்கலாம் என நினைத்து இவன் ஏதாவது ஆரம்பித்தால் கையெடுத்து கும்பிடு போட்டு விட்டு அவனிருக்கும் இடத்தில் இல்லாமல் எங்காவது சென்று விடுகிறாள். மித்ராவை சமாளிக்கும் வகை அறியாமல் அவனுக்கு கண்களை கட்டிக் கொண்டு வந்தது. பெங்களூருலிருந்து நேத்ரனும் இலக்கியாவும் வந்தனர். இலக்கியா பிரகல்யா போல இல்லாமல் கொஞ்சம் கர்வத்தோடு நடந்து கொள்வது போல மித்ராவுக்கு பட்டது. மாலையில் வீட்டு பெரியவர்கள் அல்லாமல் இளம் தலைமுறையினர் மட்டும் தோட்டத்தில் இருந்தனர். அனிருத்தும் லக்ஷனும் ரிங் பால் விளையாடிக் கொண்டிருக்க, மெய்யப்பனும் பந்து கீழே விழுந்தால் எடுத்து தருவது இடையில் அவரும் பந்தை தூரமாக போடுவது என இருந்தார். பிரதீப்போடு நடந்து கொண்டிருந்தனர் அவனது பெற்றோர். இலக்கியாவுடன் இலகுவாக பேச முடியாமல் கணவனின் பக்கமும் திரும்பாமல் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தாள் மித்ரா. நேத்ரனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான் சர்வா. இங்குள்ள வசதியை ஒப்பீடு செய்கையில் மித்ராவின் பிறந்த வீட்டு வசதி ஒன்றுமே இல்லை. இவளும் என்னை போல இந்த வீட்டு மருமகளா? எனக்கு இணையான மதிப்பும் மரியாதையும் இவளுக்கும் கிடைப்பதா? என உள்ளுக்குள் பொறுமினாள் இலக்கியா. “என்ன மித்ரா இந்த கார்டன் பார்த்து மலைச்சு போயிட்டியா? இப்படி பார்க்கிற?” என வம்பிழுத்தாள் இலக்கியா. “எங்க ஊர்ல நான் பார்க்காததா?” என்ற மித்ரா மேலும் பேச்சை வளர்க்க விரும்பாதவளாக முகத்தை திருப்பிக் கொண்டாள். அதில் சீண்டப் பெற்ற இலக்கியா, “ஊரும் வீடும் ஒண்ணா என்ன? ம்ம்ம்… என்ன ஒரு மூணு சென்ட்ல இருக்குமா உன் வீடு?” எனக் கேட்டாள். மித்ரா அமைதி காக்க, “என் டாடி மூணு சென்ட்ல அவர் சர்வண்ட்ஸ்க்கே வீடு கட்டி கொடுத்திருக்கார்” என்றாள் இலக்கியா. ‘கொசு தொல்லை தாங்க முடியலை!’ என்பது போல பார்த்திருந்தாள் மித்ரா. “பொறந்ததிலேருந்து சொஃபிஸ்டிகேட்டட் ஃபேமிலில வளர்ந்ததால வெக்கேஸன்ஸ்க்கு இந்த குன்னூர்லாம் வந்ததில்லை, எங்களுக்கு தனியா பிரைவேட் ஜெட் இருக்கு. அதுல ஃபாரின் கன்ட்ரீஸ்தான் போவோம். அது சரி உன்கிட்ட சொல்றேன் பாரு, ஏர் டிராவல்லாம் பண்ணியிருக்கியா நீ?” எனக் கேட்டாள் இலக்கியா. மித்ரா வாயை இறுகி மூடியிருக்க, “பெரியவங்க பேசினா பதில் சொல்லணும்னு தெரியாதா உனக்கு?” எனக் கோவமாக கேட்டாள் இலக்கியா. “பதில்தானே?” என்ற மித்ரா, “எங்க வீடு எங்கப்பா அவர் சுய சம்பாத்யத்துல கட்டின வீடு, அப்பா காசுல எப்படி வேணும்னாலும் ஆடுங்கன்னு விடாம எங்களையும் சுயமா நிக்கணும்னு சொல்லி வளர்த்திருக்கார். அப்பா காசுல ஏரோபிளேன் வாங்கிறதுல இல்லை பெருமை, சொந்த காசுல பென்சில் வாங்கினா கூட அதுதான் உழைப்போட அருமைனு சொல்லி கொடுத்திருக்கார்” என்றாள் மித்ரா. “அப்படியே வசதியான வீட்டு பையனை வளைச்சு போட்டா ரொம்ப சுலபமா சொகுசாவும் வாழலாம்னு சொல்லி கொடுத்திருப்பார் போல” இளக்காரமாக சொன்னாள் இலக்கியா. வெகுண்டெழுந்து விட்ட மித்ரா, “பார்த்து பேசுங்க, இல்லைனா நடக்கிறதே வேற!” என சீறினாள். சர்வாவும் நேத்ரனும் வேகமாக அவர்களின் அருகில் வந்து விட்டனர். என்னவாகிற்று என இருவருமே அவரவர் மனைவிகளை கேட்டனர். மித்ரா அவளது கணவனோடு பேசுவதில்லையே, அதை இப்போதும் கடைப்பிடித்தாள். மித்ராவுக்கு தன்னை கண்டு பொறாமை, தாழ்வு மனப்பான்மை அதனால் தேவையில்லாமல் தன்னிடம் சண்டை போடுகிறாள் என தன் கணவனிடம் புகார் வாசித்தாள் இலக்கியா. “என்னடா சர்வா?” எனக் கேட்டான் நேத்ரன். “என்னடான்னா என்ன அர்த்தம்? மித்ரா மேல தப்புங்கிறியா?” எனக் கோவமாக கேட்டான் சர்வா. அந்த வீட்டில் சகோதரர்களுக்கு இடையில் சிறு வயதிலிருந்தே நல்ல பிணைப்பு உண்டு. நேத்ரன் கோவம் கொள்ளாமல், “என்ன நடந்துச்சுன்னு இவ சொல்றா, உன் வைஃப் ஏதும் சொல்லலையே, அதனால சொன்னேன்” என்றான். தன்னிடம் ஏதும் சொல்வாள் என மனைவியின் முகத்தை பார்த்திருந்தான் சர்வா. அவளோ அங்கிருந்து செல்ல நடக்க ஆரம்பித்தாள். “பார்த்தீங்களா நேத்ரன், வயசுல பெரியவர் உங்களுக்கு மரியாதை தராம அவ பாட்டுக்கும் போறத, நான் பிரகல்யாக்காலாம் வசதியான வீட்டு பொண்ணுங்க, இவ அப்படி இல்லியே அதான் குணமும் சீப்பா இருக்கு” என்றாள் இலக்கியா. நேத்ரன் தன் மனைவியை கண்டனமாக பார்த்தான். “இப்படித்தான் ஏதாவது பேசி வச்சிருப்பாங்க இவங்க, அதான் அப்படி ரியாக்ட் பண்ணிட்டு போறா. அவகிட்ட என்ன சீப்பான குணத்தை பார்த்தாங்களாம் இவங்க? இவங்கள பார்த்து பொறாமை படற அளவுக்கு எந்த விதத்துல இவங்க அவளை விட உயர்ந்திட்டாங்க? காம்ப்ளக்ஸ் உங்களுக்குத்தான் இருக்கு, சுபிரியாரிடி காம்ப்ளக்ஸ். பெங்களூருல இருந்தே அங்க பார்த்துக்கோங்கன்னு உங்கள அங்க பெரியப்பா அனுப்பி வச்சது சும்மா ஒண்ணும் இல்லை” என்றான் சர்வா. நேத்ரன் தன் தம்பியிடம் சமாதானமாக ஏதோ சொல்ல வர, அதற்கு முன், “மித்ராவை யார் என்ன பேசினாலும் பொறுத்து போக மாட்டேன் அண்ணா” என தீர்க்கமாக சொன்ன சர்வா மனைவியை நோக்கி சென்றான். அறைக்கு வந்து விட்ட மித்ரா உர் என இருந்தாள். “என்னன்னு நான் கேட்கும் போது பதில் பேசாம அப்படித்தான் என்னை இன்சல்ட் பண்ணுவியா?” எனக் கோவமாக கேட்டுக் கொண்டே வந்தான் சர்வா. அலட்டிக் கொள்ளாமல் அவனிடமிருந்து தள்ளிப் போனவளை தடுத்து அவன் பிடிக்க, “இன்சல்ட் பண்ணிட்டேனா? இங்க ஒருத்தர் என் லைஃபையே நாசம் பண்ணிட்டார், அப்போ நான் எவ்ளோ கோவ படணும்?” எனக் கேட்டாள். “ஏன் மித்ரா இப்படி, உனக்கு சப்போர்ட் பண்ணத்தானே என்ன ஆச்சுன்னு கேட்டேன்?” “உங்க சப்போர்ட் எனக்கு தேவையில்லை, யாரையும் தாங்கணும்னா போங்க அந்த லிசிகிட்ட, அவதான் உங்களுக்காக காத்துகிட்டு நிக்கிறா” என்றாள். “போவதான் போறேன், அப்போ தெரியும் சேதி” அவனும் கோவமாக சொல்லி விட்டு வெளியேறி விட்டான். அதற்குள் நடந்தவற்றை மனைவியின் வாயாலேயே உருவியிருந்த நேத்ரன் அவளை திட்டிக் கொண்டிருந்தான். அங்கு வந்து சேர்ந்த ருக்மணிக்கும் விஷயம் தெரிய வந்தது. “வசதி வாய்ப்பு பார்த்தெல்லாம் நாங்க யாரையும் இந்த வீட்டுக்கு மருமக ஆக்கிக்கல. உன் பொறந்த வீடு வசதின்னா அது உன்னோட. இந்த வீட்டுக்கு வந்திட்டா இங்க உள்ளதுதான். மருமகளா வர்ற எல்லாரும் எங்களுக்கு சமம்தான். நாப்பது வருஷமா கூட்டு குடும்பம் சிதஞ்சு போயிடாம காப்பாத்திட்டு வர்றேன், நொடியில குலைக்கலாம்னு பார்த்திடாத” என இலக்கியாவை கண்டித்தார் ருக்மணி. காதலித்து மணந்தவன் என்றாலும் எல்லா விஷயத்திற்கும் கண் மூடித் தனமாக மனைவிக்கு ஆதரவு தர மாட்டான் நேத்ரன். ஆகவே மாமியாரின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் அமைதி காத்தாள் இலக்கியா. அங்கு வந்த சர்வா தனியாக போய் அமர்ந்து கொண்டான். அவனிடம் வந்த ருக்மணி, “என்னடா புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஆளுக்கொரு தீவா நிக்கிறீங்க? நீ எப்படி கல்யாணம் பண்ணி வந்தேன்னு மறந்திடாத, நீதான் இறங்கி போகணும். ஒழுங்கா அவளை தாஜா கீஜா பண்ணி குடும்பம் நடத்துற வழிய பாரு” என்றார்.