அத்தியாயம் -12(3)

 பின்னொரு நாள் மகள் மற்றும் பேத்தியோடு சர்வாவை காண வந்திருந்தார் டிரைவர். குழந்தைக்கு சர்வாதான் பெயர் சூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

லிசியுடன் காதல் அரும்பியிருந்த நேரமது. குழந்தைக்கு லிசி என பெயர் சூட்டி விட்டான். அருகிலிருந்த சர்வாவின் அம்மா கூட “என்னடா பேர் வச்சிருக்க?” எனக் கேட்டார்தான்.

காதல் மயக்கத்தில் இருந்தவன்தான், “ஏன் இந்த பேருக்கென்ன? என்னை வைக்க சொன்னா இப்படித்தான் வைப்பேன், பிடிக்கலைனா வேற பேர் நீங்களே வைங்க” என்றான்.

ஆனால் டிரைவரின் மகள் இந்தப் பெயரே நன்றாக இருக்கிறது என சொல்லி விட்டாள்.

‘ஹையோ அம்மா, அப்பவே என்னை காப்பாத்த ட்ரை பண்ணியிருக்க, தெரியாம சிக்கிட்டேனே!’ காலம் கடந்து இப்போது நொந்து கொண்டான் சர்வா.

லிசி சாக்லேட் டப்பாவை நீட்டிக் கொண்டிருக்க எடுத்துக் கொண்டவன் மித்ராவை பார்க்க அவளும் சாக்லேட் எடுத்துக் கொண்டாள். நலம் விசாரித்து விட்டு சென்றனர் லிசியின் பெற்றோர்.

சர்வாவின் பக்கம் திரும்பாமல் தள்ளி நடந்தாள் மித்ரா.

 வீட்டுக்கு திரும்புகையில் காரில் அசாத்திய அமைதி. வீடு வந்த பின் சாப்பிடாமலே அறைக்கு போக பார்த்தவளை விடாமல் பிடித்துக்கொண்டான்.

“அந்தப் பாப்பாக்கு பேர் வச்சதெல்லாம் எனக்கு ஞாபகமே இல்லை மித்ரா” என்றான்.

அவள் கோவமாக கையை உதறி விட ருக்மணி வந்து விட்டார். லக்ஷனை பள்ளியில் விட்டு வர இவ்வளவு நேரமா, முதலில் சாப்பிடுங்கள் என அவர் சொல்ல மறுக்க முடியாமல் சாப்பிட அமர்ந்தாள் மித்ரா.

சாப்பாட்டுக்கு பின் அறைக்கு அழைத்து சென்று கையில் காலில் விழுந்தாவது அவளை சமாதானம் செய்து விடலாம் என சர்வா நினைத்திருக்க, அவனுக்கு முன் சாப்பிட்டு முடித்தவளோ வெளியே சென்று விட்டாள்.

தோட்டத்தின் மையத்தில் இருந்தது சதானந்தம் பெரியவரின் குடில். சத்தமாக பாடி பூஜை செய்து கொண்டிருந்தார். அவரை பார்த்தாலே பயந்த மித்ரா இப்போது அவரின் இருப்பிடத்துக்கே சென்றாள்.

சில நிமிடங்கள் சென்றே சர்வா வெளியில் வந்தான். மனைவியை தோட்டத்தில் எங்கும் காணாமல் அவனும் தாத்தாவின் குடிலுக்கு சென்றான். அங்கே பய பக்தியோடு தாத்தா பூஜை செய்து கொண்டிருக்க நெற்றியில் விபூதி பட்டையோடு கண்கள் மூடி அமர்ந்திருந்தாள் மித்ரா.

தயக்கமாக உள்ளே வந்தவனை பார்த்தாலும் கடவுளை துதிப்பதிலேயே கவனமாக இருந்தார் தாத்தா. இவன் மித்ராவின் அருகில் நின்று அவளின் தோளை சுரண்டினான். கண்கள் திறந்து அவனை பார்த்தவள் பின் அவனொருவன் அங்கிருக்கிறான் என்பதையே பாவிக்காமல் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

வேறு வழியின்றி அவனும் அவளின் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான். ஏதோ ஒரு துதி பாடலின் புத்தகத்தை மித்ராவிடம் கொடுத்து அதை படிக்கும் படி சொன்னார் பெரியவர். அவளும் சிரத்தையாக படிக்க ஆரம்பித்து விட்டாள்.

அவள் படிக்க படிக்க கடவுளை பூக்களால் அர்ச்சித்தார் பெரியவர். துதி பாடல் முடிந்த பின், “இன்னிக்கு ரொம்ப விஷேஷமான நாள், நீ வந்து பூஜைல கலந்துகிட்டது அந்த தாயோட செயல்தான்” என சிலாகித்தார் பெரியவர்.

“என்னை எந்த காரணத்துக்காக இவர் அழைச்சிட்டு வந்திருக்காரோ அதை செய்றேன், என் வேலை முடிஞ்சதும் நான் போயிடுவேன். இங்க நான் என்ன பண்ணனும் தாத்தா?” என்றாள்.

சர்வாவை கேள்வியாக பார்த்தார் பெரியவர், அவன் என்ன சொல்வதெனே பாவமாக பார்த்தான்.

அவளை பார்த்து புன்னகைத்தவர், “நீ எதுவும் செய்ய வேணாம் மா, நீ நீயா இரு. இதை உன் குடும்பமா மனசார ஏத்துக்க. நடக்க வேண்டியது தானா நடக்கும்” என்றார்.

“உங்களை மாதிரி சாமியாரா ஆக என்ன செய்யணும் நான்?” என அவள் கேட்கவும் திகைத்தான் சர்வா.

பெரியவரோ, “அப்படி நீ எல்லாத்தையும் துறக்க நினைச்சா அதுக்காகன்னு ஏதும் செய்ய வேணாம், அதுதான் உனக்கு விதிச்சிருக்குன்னா அதுவும் தானா நடக்கும்” என்றார்.

தாத்தாவை முறைத்த சர்வா, “இப்படி எல்லாம் தானா நடக்கும்னா என்னை ஏன் இவளை கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வர சொன்னீங்க?” எனக் கோவமாக கேட்டான்.

“அதை நான் சொல்லணும், நீ நடத்தி வைக்கணும்னு இருந்திருக்கு, என் கடமையை நான் செஞ்சேன்” என சாந்தமான குரலில் சொன்னார்.

“சாமியார் ஆக்கவா இவளை அழைச்சிட்டு வந்திருக்கேன்? ஒழுங்கா என் கூட குடும்பம் நடத்த சொல்லி அட்வைஸ் பண்ணாம சாமியார் ஆகணும்னா ஆவுன்னு சொல்லி தர்றீங்க இவகிட்ட, என்ன தாத்தா இதெல்லாம்?” என இரைந்தான் சர்வா.

“ஷ் ஷ்… இது ஆன்மீக குடில், இங்க சண்டை சத்தம் கோவம் இதுக்கெல்லாம் இடமில்லை” என பெரியவர் சொல்லிக் கொண்டிருக்க, “நான் கிளம்பறேன் தாத்தா” என சொல்லி வெளியேறி விட்டாள் மித்ரா.

“உங்களை வந்து பேசிக்கிறேன்” என கடுப்பாக சொல்லி விட்டு சர்வாவும் வெளியே சென்றான்.

அவன் தன்னிடம் வரக்கூடும் என்பதை கணித்தே வேகமாக நடந்து வீட்டுக்குள் சென்றவள் எங்கே செல்ல என தெரியாமல் குத்து மதிப்பாக ஒரு அறைக்குள் சென்றாள். அங்கே பிரதீப் அவனுடைய ஆசிரியருடன் செஸ் விளையாடிக் கொண்டிருந்தான்.

தொந்தரவு செய்ததற்காக மன்னிப்பு கேட்டவள் வெளியேறப் பார்த்தாள்.

“வாங்க சித்தி, ஸார் கிளம்ப போறாங்க, நாம விளையாடலாமா?” எனக் கேட்டான் பிரதீப்.

மித்ரா அவனருகில் செல்ல, ஏதோ அவசர வேலையாக ஆசிரியரும் கிளம்பி விட்டார். அங்கு வந்த பிரகல்யா மகனுடன் மித்ரா இருப்பதை பார்த்து விட்டு, “நீ போறப்போ என்கிட்ட சொல்லிட்டு போ மித்ரா” என சொல்லி சென்று விட்டாள்.

நல்ல உயரத்துடன் கண்ணாடி அணிந்து அமைதியான முகத்தோடு இருந்தான் பிரதீப். பார்த்தால் அவனுக்கு உடல்நலமில்லை என யாரும் சொல்லி விட முடியாது.

சில நிமிடங்கள் பேசியதிலேயே அறிவு செறிந்தவன் என்பதை புரிந்து கொண்டாள். மனைவியை எங்கெங்கோ தேடி விட்டு இறுதியாக இங்கு வந்தான் சர்வா.

தன் இடத்தில் சித்தப்பாவை அமர வைத்து விட்ட பிரதீப், காய்கள் நகர்த்த மித்ராவுக்கு உதவி செய்தான். பத்து நகர்வுகளில் மித்ராவை வெற்றி பெற வைத்து விட்டான் பிரதீப்.

“அவளையே விளையாட விடாம நீ ஏன்டா ஹெல்ப் பண்ணின?” எனக் கேட்டான் சர்வா.

“இல்லையே சித்திதான் விளையாடினாங்க, உங்க தோல்வியை ஒத்துக்க முடியாம பேசாதீங்க சர்வாப்பா” என்றான் பிரதீப்.

அங்கு வந்த பிரகல்யா மகனை ஓய்வெடுக்க வரும்படி அழைத்தாள்.

“ரெண்டு பசங்களையும் நல்லா வளர்த்திருக்கீங்க க்கா, சமத்து பசங்க” என்றாள் மித்ரா.

புன்னகைத்த பிரகல்யா மகனோடு சென்று விட்டாள்.

“இந்த வீட்ல எல்லா பசங்களுமே ஷார்ப் அண்ட் சமத்துதான். நமக்கு பசங்க பொறந்தாலும் அப்படித்தான் இருப்பாங்க மித்ரா” என்றான் சர்வா.

“ஓ உங்களுக்கு புள்ள பெத்து தருவேன்னு வேற கனவு காண்றீங்களோ?”

“ஏன் ஏன் ஏன்… ஏன் பெத்து தர மாட்ட?”

“இங்க இருக்கிறதா முடிவு பண்ணியிருக்கேன், இந்த முடிவு உங்களுக்காக இல்லை இந்த பசங்களுக்காக. எப்ப தோணுதோ கிளம்பி போயிட்டே இருப்பேன்”

“என் மாமியாரோட ஃபுல் சப்போர்ட் எனக்கிருக்கு. நீ போனாலும் உன்னை பேக் பண்ணி ‘வச்சுக்கோங்க மாப்ள’ன்னு என் கையிலேயே உன்னை கொடுத்திடுவாங்க” என்றான்.

“போவேன்னு சொன்னேன், என் அம்மா வீட்டுக்கு போவேன்னு சொல்லலை” என்றவளை கேள்வியாக பார்த்தான்.

“உங்க தாத்தாகிட்ட தீக்ஷை வாங்கிட்டு சந்நியாசி ஆக போறேன்”

“இல்லற வாழ்க்கைல ஈடுபட்டுட்டு அதையும் துறந்தாதான் முழு சந்நியாசி. அதனால என் கூட வாழ்ந்திட்டு அப்புறம் தாத்தாகிட்ட தீக்ஷை வாங்கு” என்றான்.

அவள் பதில் தராமல் எரிச்சலாக பார்க்க, “ஆனா என் கூட வாழ்ந்து பார்த்தீனா என்னை விட்டு போக தோணவே தோணாது” என்றான்.

கைகளை கட்டிக் கொண்டு “அப்புறம் எப்படி உங்களோட பழகின அந்த லிசி மட்டும் உங்களை விட்டு போனா?” என புருவங்களை உயர்த்தி குதர்க்கமாக கேட்டாள்.

அவளின் அந்த உடல்மொழியில் சீண்டல் பேச்சில் நிதானத்தை பறக்க விட்டவன், “யாருக்கா இருந்தாலும் என்னை விட்டு விலகறது கஷ்டம்தான், அதனாலதான் அஞ்சு வருஷம் முடிஞ்ச பின்னாடியும் அவளும் என்னை சுத்தி சுத்தி வர்றா” என கோவமாக சொன்னான்.

மித்ரா நெருப்புக் கோழியாக மாறியிருக்க, தன் அறிவின்மையையும் அவசரத் தன்மையையும் நினைத்து நொந்து கொண்டவன் தன் நெற்றியில் வேகமாக அறைந்து கொண்டான்.