அத்தியாயம் -12(2)

“இருன்னு சொன்னா இருக்க போறேன், அதுக்கு குடும்பம் மொத்தத்தையுமா டேமேஜ் பண்ணனும்?”

“உள்ளதைதான் சொன்னேன்”

“போக போக எல்லாரும் பழகிடுவாங்க மித்ரா”

“பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே படுத்தாள்.

‘ஹப்பா! ரெண்டாவது நாள் முடிவுல சண்டை இல்லைடா சாமி. இப்படியே கூட இவளோட ஓட்டிட்டா போதும்’ என பிரயாசை பட்டுக் கொண்டே அவனும் படுத்தான்.

அடுத்த நாள் எல்லாம் காலை உணவுக்கு அவளை கீழே அழைத்து சென்று விட்டான். சுரேந்தரின் இளைய மகன் லக்ஷன் பள்ளி சீருடையில் தயாராக இருந்தான்.

கொலுக் மொழுக் என உருண்டை முகமும் நெற்றி புரளும் கேசமுமாக இருந்த அந்த சிறுவன் சஞ்சயின் சிறு வயது தோற்றத்தை நினைவு படுத்த அவனை கண்டதுமே மித்ராவுக்கு பிடித்து விட்டது.

வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த நம்பி மருமகளிடம் நலம் விசாரித்தார்.

“ஜுரம் வந்த என்னை ஒரு வார்த்தை கேட்கல” பொய்யாக குறை பட்டான் சர்வா.

“உனக்கு வந்த ஜுரத்தைதான் நல்லாருக்கான்னு கேட்கணும். எங்க அந்த ஜுரம், உன்னை கண்டு பயந்து ஓடிப் போயிடுச்சா?” என கிண்டலாக கேட்டார் நம்பி.

“உங்களை கண்டு நான் ஓடாம இருக்கேன்னு மிதப்பா போச்சா உங்களுக்கு? ஒரு நாள் ஜுரத்துக்கே அவன் கன்னம் வத்திப் போச்சு, அவன்கிட்ட என்ன வம்பு பேச்சு?” என்றார் ருக்மணி.

“அவன் தடிமாடு கணக்கா நல்லாதான் இருக்கான், புது இடம்னு மருமக பொண்ணுதான் டல்லா இருக்கு, இந்த பயலை விட்டுட்டு மித்ராவை கவனி” என்றார் நம்பி.

“என்ன மாமா புது மருமக வந்ததும் என்னை மறந்தாச்சா?” லக்ஷனின் லஞ்ச் பேக் எடுத்து வந்து கொடுத்த பிரகல்யா வம்பாக கேட்டாள்.

“ரெண்டு மருமகளையும் கவனிச்சுக்க ருக்கு” என்ற நம்பி, “என்னம்மா இப்போ சரிதானே?” என்றார்.

“நல்லாருக்கே நீங்க சொல்றது, ரெண்டு பேரையும் என்னைய கவனிச்சுக்க சொல்லுங்க” என்றார் ருக்மணி.

“நாங்கதான் கவனிக்கணுமா? ஏன் இலக்கியா மட்டும் உங்களுக்கு செல்லமா? அவளை மட்டும் தனிக் குடித்தனம் அனுப்பி வச்சிட்டீங்க? இப்படிலாம் மாமியார் கொடுமை பண்ணினா நானும் மித்ராவும் கூட தனியா போவோம்” என்றாள் பிரகல்யா.

இலக்கியா அந்த வீட்டின் இரண்டாவது மருமகள். கணவன் நேத்ரனோடு பெங்களூருவில் வசிக்கிறாள். இருவரும் அங்குள்ள தொழில் நிறுவனங்களை கவனித்து வருகின்றனர். சர்வாவின் திருமண விஷயம் கேட்டு உடனே கிளம்பி வர இருந்தவர்களை நம்பிதான், “அவசரம் இல்லை, மெதுவா வீக் எண்ட் வாங்க” என சொல்லி தடுத்து விட்டார்.

“மித்ரா கூட தனிக் குடித்தனம் போறேன்னு பயமுறுத்தாதீங்க அண்ணி” என்றான் சர்வா.

“டேய் அவளோட நானும் மித்ராவோட நீயும் தனித் தனியா தனிக்குடித்தனம், அவங்க ரெண்டு பேரும் இல்லை” என சொல்லிக் கொண்டே வந்தான் சுரேந்தர்.

“தெளிவா சொல்லணும்ல? கேட்டதும் பக்குன்னு ஆகிருச்சு” என்றான் சர்வா.

அனிருத் வந்தவன் லக்ஷனை தூக்க முயன்று முடியாதவன் போல நெளிவு எடுத்தவன், “நீ ஓவர் வெயிட்டா, இல்லை நான் நோஞ்சானாடா?” எனக் கேட்டான்.

“புள்ளய கண்ணு போடாத!” என அதட்டினார் ருக்மணி.

அனிருத்தை முறைத்த லக்ஷன் சர்வாவிடம் வந்து, “தூக்கி காட்டுங்க சர்வாப்பா” என்றான்.

அவனை தூக்கி பின் விட்டான் சர்வா.

“நீதான் நோஞ்சான்” என அனிருத்தை பார்த்து சொன்னான் லக்ஷன்.

“உன் சித்தப்பாவோட வலில நெளிஞ்சு போன மூஞ்ச பாரு, உன்னை தூக்கினதுல அவர் இடுப்பு புடிச்சுகிட்டு நினைக்கிறேன்” என கிண்டல் செய்தான் அனிருத்.

லக்ஷன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு வெளியில் சென்று விட, மற்றவர்கள் சின்ன பையனிடம் இப்படியா பேசுவது என அனிருத்தை கண்டித்தனர்.

மித்ராவுக்கும் அந்த சிறுவனின் சின்னதாகிப் போன முகத்தை காணவும் மனம் இளகிப் போனது. வெளியில் சென்று, “நீ க்யூட்டா இருக்க, ஸ்மார்ட் பாய் வேற, சும்மா கிண்டல் செய்றதுக்கு போய் கோச்சுக்க கூடாது. சிரி” என்றாள்.

புதிய சித்தி வந்து சொன்னதும் உடனே மலர்ந்து சிரித்தான். அவளை அங்கேயே இருக்க சொல்லி விட்டு வேகமாக உள்ளே ஓடியவன் ஐந்து நிமிடங்களில் மூச்சிரைக்க வந்து நின்றான். தனியாக ஓவியம் பயில்கிறான், அவன் வரைந்த ஓவியங்களை அவளுக்கு ஆசையாக காட்டினான்.

நிஜமாகவே நன்றாக இருந்தன. வியந்து பார்த்தவள் அவனை பாராட்டவும் செய்தாள். வெட்க பட்டுக் கொண்டே நன்றி சொன்னவனின் கன்னங்களை பிடித்துக் கொஞ்சிக் கொண்டே, “ச்சோ ஸ்வீட்!” என்றாள்.

அவர்களிடம் வந்த சர்வா, “ஸ்டார்ட் பண்ணிட்டியாடா?” எனக் கேட்டான்.

தனக்கு பிடித்தமானவர்களிடம் ஓவியங்களை காட்டி பெருமை பட்டுக் கொள்வது லக்ஷனின் பழக்கம்.

“ரொம்ப நாளா நீங்களும் பார்க்கல சர்வாப்பா” என்ற லக்ஷன் சர்வாவிடமும் காட்ட ஆரம்பித்தான்.

“ஸ்கூலுக்கு டைம் ஆகிடுச்சாம், இதெல்லாம் ஈவ்னிங் காட்டுவியாம். அப்பா ரிலாக்ஸா சாப்பிடட்டும், இன்னிக்கு நான் கொண்டு போய் ஸ்கூல்ல விடுறேன்” என்றான் சர்வா.

பிரதீப்க்கு அப்படி ஆனதிலிருந்து லக்ஷனை சுரேந்தரே பள்ளியில் விட்டு அழைத்து வருகிறான். டிரைவரை நம்பி மகனை அனுப்ப என்னவோ பயம் அவனுக்கு.

லக்ஷன் ஓவியங்களை உள்ளே வைக்க செல்ல, “இங்கேயே வை, நான் வந்து உன் அம்மாகிட்ட கொடுத்திடுறேன், லேட் ஆச்சு, கிளம்பு” என அவசர படுத்தினான் சர்வா.

புத்தகப் பையை சர்வா எடுத்துக் கொள்ள உற்சாகமாக அவனோடு நடந்தான் சிறுவன். லஞ்ச் பேக் அங்கேயே இருக்க அதை எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி சென்றாள் மித்ரா.

“ஹை சித்தி! நீங்களும் வர்றீங்களா?” லக்ஷன் உற்சாகமாக கேட்க, “வாயேன் மித்ரா, சும்மா போயிட்டு வரலாம்” என சர்வாவும் அழைத்தான்.

லக்ஷன் ஆசையாக கேட்டிருக்க மறுக்க முடியாமல் அவளும் காரில் ஏறிக் கொண்டாள். குஷியாகி விட்ட லக்ஷன் சல சலத்துக் கொண்டே வர மித்ராவும் அவனுக்கு இணையாக பேசினாள்.

லக்ஷனை பள்ளியில் விட்டு திரும்பும் போதும் பின்னிருக்கையிலேயே அமர்ந்து கொண்டாள், சர்வாவும் தடுக்கவில்லை.

“வழில பெருமாள் கோயில் இருக்கு மித்ரா, போயிட்டு வருவோமா?” எனக் கேட்டான்.

கோயிலுக்கு சென்றால் மனம் அமைதியை உணரலாம் என நினைத்து அவளும் சரியென்றாள்.

“பசிக்குதுன்னா சொல்லு, வீட்டுக்கே போயிடலாம்” என்றவனை முறைத்தாள்.

“ஆர்வத்துல கேட்டுட்டேன், அப்புறம்தான் சாப்பிடலைங்கிறது நினைப்பு வந்துச்சு. எங்க போலாம் கோயிலுக்கா வீட்டுக்கா?”

“கோயிலுக்கே போங்க” என அவள் அனுமதி தந்த பின்னர்தான் கோயிலுக்கு காரை செலுத்தினான்.

அங்கே வழிபாடெல்லாம் நன்றாகத்தான் நடந்தது. ‘எனக்கு என்ன செய்யன்னு எதுவும் புரியலை, நீதான் வழி நடத்தணும் கடவுளே’ என வேண்டிக் கொண்டாள் மித்ரா.

அவனுடன் இணைந்தே அவள் பிரகாரத்தை வலம் வர சர்வாவுக்கும் நேர்மறையாக தோன்றியது.

“அங்கிள்…” என அழைத்தது ஒரு குழந்தை.

இவன் நின்று திரும்பிப் பார்க்க ஐந்து வயதுடைய பெண் குழந்தை பட்டுப் பாவாடை சட்டையில் அழகாக குதித்துக் கொண்டு இவனை நோக்கி ஓடி வந்தது.

முதலில் இன் முகமாக அந்தக் குழந்தையை நோக்கி கை காட்டியவன் பின் என்ன நினைத்தானோ அங்கிருந்து சென்று விட துடித்தான். அதற்குள் அந்தக் குழந்தை அவனை நெருங்கி விட்டது.

“இன்னிக்கு எனக்கு பர்த்டே அங்கிள்” அழகாக சொன்ன குழந்தைக்கு வாழ்த்து சொன்னவன் மித்ராவை சங்கடமாக பார்த்தான்.

அவளும் வாழ்த்து சொல்லி, “யாரு இந்த பாப்பா?” என விசாரித்தாள்.

“நம்ம வீட்டுல முன்னாடி டிரைவரா வேலை செஞ்சவரோட பேத்தி” என்றான். அந்த டிரைவர் இப்போது வேலையில் இல்லை, போன வருடம்தான் வயோதிகம் காரணமாக வேலையை விட்டு விட்டார்.

“உன் பேரென்ன பாப்பா?” என மித்ரா கேட்க, “லிசி” என்றது குழந்தை.

சட்டென கணவனின் முகத்தை பார்த்தாள் மித்ரா, அவன் விட்டால் அழுது விடுபவன் போல பார்த்திருந்தான்.

“எனக்கு அங்கிள்தான் பேர் வச்சாங்க” என கூடுதல் தகவலையும் சொல்லி விட்டு ஓடிச் சென்ற குட்டி லிசி சில நிமிடங்களில் சாக்லேட் டப்பாவோடு திரும்ப வந்தாள். அவளின் பெற்றோரும் வந்து கொண்டிருந்தனர்.

லிசியின் அம்மாதான் டிரைவரின் மகள், அவள் படிக்க வைக்க உதவி செய்தது எல்லாம் சர்வா குடும்பத்தினர்தான். இறுதி வருட படிப்பிலிருந்த சர்வா விபத்து ஏற்படுத்தியிருக்க அவனை காரோட்ட அனுமதிக்காமல் டிரைவர் போட்டிருந்தனர்.

தனக்கு காரோட்டிக் கொண்டிருந்த டிரைவரின் மகளுக்கு பிரசவ வலி எனவும் உடனே அவர்களின் வீட்டுக்கு காரை விட சொன்னான் சர்வா. அவரின் மகளை அதாவது லிசியின் அம்மாவை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பிரசவத்தில் சிக்கல்.

“என்ன செலவானாலும் பரவாயில்லை, பாருங்கள்” என சர்வா சொல்ல உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டது அவளுக்கு.

சொன்னது போலவே எல்லா செலவையும் சர்வாதான் ஏற்றுக் கொண்டான்.