இருள் வனத்தில் விண்மீன் விதை -9
அத்தியாயம் -9 (1)
சென்னையில் சர்வாவின் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தது அவனது கார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை பார்த்தவன், “இருபது நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம் மித்ரா” என்றான்.
‘கேட்டேனா உன்னை?’ என்பது போல அவனை பார்த்தவள் மீண்டும் ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
தாங்கள் வரப் போகும் விஷயத்தை பெரியப்பாவிடம் முன் கூட்டியே சொல்லியிருந்தான் சர்வா. ஆகவே வீட்டினருக்கு அதிர்ச்சி ஏற்படாத வண்ணம் இந்நேரம் அவரே விஷயத்தை சொல்லி மித்ராவை எதிர் கொள்ள அவர்களை தயார் படுத்தியும் இருப்பார்.
தன் கணவனோடு சேர்த்து தன் பெற்றோர் மீதும் மித்ராவுக்கு கோவம்.
இவனோடு செல்ல சொன்னவர்களுக்கு மறுப்பு தெரிவித்தவளிடம், “சொந்தக்காரங்க பூரா உனக்கு இன்னொரு கல்யாணம் ஏற்பாடு செய்ய பார்க்கிறாங்க, நீ இங்கேயே இருந்தா அவங்கள அப்பாவால தனியா சமாளிக்க முடியாது. மிருதுளா வீட்டுக்கும் நம்மளுக்கும் மனஸ்தாபம் ஆகிப் போகவும் வாய்ப்பிருக்கு, அடுத்து உன் தம்பிக்கும் யாரும் பொண்ணு தர மாட்டாங்க, அப்பாவையும் தள்ளி வச்சிடுவாங்க” என்றார் ஜெயந்தி.
“அப்ப என்னை துரத்தி விடுறியாமா?” ஆற்றாமையாக கேட்டாள் மித்ரா.
ராஜனுக்கு பதறி விட்டது, அவரது மனைவி சொல்வது போல யாருக்கும் பயந்தெல்லாம் மகளை அனுப்ப அவர் நினைக்கவில்லை. கணவர் வாயை திறந்தால் மகள் இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவாள் என்பதால் ஜெயந்தி முந்திக் கொண்டு பேசினார்.
“எங்கடி துரத்தி விடுறோம், நீயா ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த வாழ்க்கைதானே? அதைத்தான் நல்ல படியா வாழுன்னு சொல்றோம். நீயாவே இவரோட போயிட்டீனா எங்க பேச்சை கேட்காம அவ புருஷன்தான் முக்கியம்னு போயிட்டான்னு எல்லார்கிட்டேயும் சமாளிச்சுக்குவோம்.
நீ இங்கேயே இருந்தா ஒண்ணு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கணும், இல்லைனா பெரிய சண்டைதான் வரும். அப்பாக்கு வேற பிரஷர் ஜாஸ்தி ஆகுது, அவரு நிம்மதியா இருக்கணும்னா நீ உன் புருஷன் வீட்டுக்கு போறதுதான் சரி” என தீர்மானமாக சொன்ன ஜெயந்தி, சாமர்த்தியமாக தன் கணவரின் வாயை திறக்க விடவே இல்லை.
அறைக்குள் போய் அடைந்து விட்டாள் மித்ரா. சர்வாவுக்கு சங்கடமாக இருந்தது.
“நல்ல விதமா சொல்லி ஹேப்பியாவே அவளை அனுப்பி வைக்கலாம் அத்தை” என்றான் சர்வா.
“அப்படின்னா இப்போதைக்கு அவ உங்க கூட வரவே மாட்டா, பரவாயில்லையா?” என ஜெயந்தி கேட்க, அவன் அமைதியாகி விட்டான்.
“நீங்க கிளம்புங்க, அவகிட்ட கொஞ்சம் சமாதானமா பேசி புரிய வச்சு நைட் நானே கொண்டு வந்து விடுறேன்” என்றார் ராஜன். சர்வாவுக்கும் அதுவே சரியென பட அங்கிருந்து சென்று விட்டான்.
மகளிடம் சென்ற ராஜன் அவளின் தலை கோதி, “உன் வாழ்க்கை நல்லாருக்கணும், நீ ஆசைப்பட்டரோட சந்தோஷமா வாழணும், அதுக்காகதான் அவர் கூட போக சொல்றேன். உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் அப்பாக்கிட்ட சொல்லு, உடனே ஓடி வந்து நிப்பேன்” என்றார்.
“எனக்கு போக விருப்பமில்லைப்பா” கெஞ்சுதலாக சொன்னாள்.
“நம்பி ஸார் பத்தி நிறைய கேள்வி பட்ருக்கேன் மா, நிஜமா நல்ல மனுஷர் அவர். அவரே அவர் வம்சத்துல நடந்த அநீதிய ஒத்துக்கிட்டு அப்பவும் உன்னை வற்புறுத்தாம உனக்கு இஷ்டம்னா அழைச்சிட்டு போறதாதானே சொன்னார்? ஒரு வேளை அவங்கலாம் நம்புற மாதிரி உன்னால அங்க நல்லது நடக்கும்னா நீ அங்க போகாம இருக்கிறது பின்னால நமக்கே குற்ற உணர்வை கொடுக்காதாம்மா? உன்னால அங்க இருக்க முடியலைன்னா அப்பா உடனே வந்து அழைச்சிட்டு வந்திடுறேன்” என பொறுமையாக சொன்னார்.
அவர் என்ன சொல்லியும் சரியென சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
“விருப்பமே இல்லாம நடிச்சிட்டிருந்த ஒருத்தர்கிட்ட ஏமாந்து போயிருக்கேன்னு நினைக்கும் போது எம்மேலயே எனக்கு கோவமா வருதுப்பா. அவர் கூட போய் வாழுன்னு அனுப்பி வைக்குறீங்க, என்னை எனக்கே கீழா உணர வைக்க ட்ரை பண்ணாதீங்க ப்பா, நான் போகலைனா போகலப்பா” என அழுதாள்.
மகளின் பேச்சில் ராஜன் தடுமாற, “இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வாங்க, அவளுக்கு பேக் செய்யணும், அவளை நானே பார்த்துக்கிறேன்” என கணவரை வெளியேற்றி விட்டார் ஜெயந்தி.
மிருதுளாவுக்கும் தங்கையை இப்படி அனுப்பி வைப்பதில் விருப்பமில்லை, ஆனால் சஞ்சய் இதுதான் சரியென நினைத்தான். “நீ ஏதாவது பேசி அக்காவை குழப்பி விட்றாதக்கா, மாமா நல்லா பார்த்துப்பார்னுதான் தோணுது” என சொல்லி அவளை சமாதானம் செய்தான்.
மகளிடம் சற்று கடினமாகத்தான் நடந்து கொண்டார் ஜெயந்தி, அம்மாவை என்னவென கேட்காமல் அப்பாவும் அமைதி காக்கிறாரே என மனம் குமுறிய மித்ரா தன் உடன்பிறப்புகளை தேட, அவர்களும் அவள் பக்கமாக பேசவில்லை.
பொறுத்துப் பார்த்தவள், “யாருக்கும் நான் இங்க இருக்கிறது பிடிக்கலைல, அப்புறம் ஏன் இங்க இருக்கணும்? நல்லவரோ கெட்டவரோ அவர்கிட்டேயே போறேன்” என வீம்பாக பேசி அவளே பேக் செய்ய ஆரம்பித்து விட்டாள்.
இரவு உணவுக்கு பின் தயாராக இருந்த மித்ராவால் வீராப்பாக இருக்க முடியவில்லை. அவளது மனம் பிசைய அது அவளின் முகத்தில் தெரிந்தது. அதுவரை அதட்டி மிரட்டிக் கொண்டிருந்த ஜெயந்திக்குமே அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை.
மித்ராவை கொண்டு போய் விடுவதற்காக ராஜனும் சஞ்சயும் தயாராக, அவர்களுக்கு சிரமம் தராமல் சர்வாவே வந்து விட்டான்.
“நீங்க சொன்ன வார்த்தையையும் என் பொண்ணு நல்லாதான் இருப்பாங்கிற என் உள்ளுணர்வையும் நம்பி இவளை உங்களோட அனுப்பி வைக்கிறேன்” என கலங்கிய குரலில் சொன்னார் ராஜன்.
“இவளை நல்லா பார்த்துக்கோங்க தம்பி” என்றார் ஜெயந்தி.
சர்வா வாயை திறப்பதற்கு முன், “என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்!” என அம்மாவிடம் வெடுக் என சொன்ன மித்ரா, அங்கேயே நின்றிருந்தால் நின்று போயிருந்த அழுகை மீண்டும் வருமோ என பயந்து வெளியே சென்று விட்டாள்.
அந்தக் குளிர் இரவில் குன்னூரை கடந்து கோவை வந்து அதி காலையில் விமானம் மூலம் சென்னை வந்து இதோ புகுந்த வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள் சங்கமித்ரா.
சர்வாவின் வீடு வந்து விட்டது. பிரம்மாண்டமான அந்த பங்களாவை மிரட்சியோடு பார்த்தவளிடம், “நம்ம வீடு மித்ரா” என்றான்.
தெரியாத இந்த இடத்தில் தெரிந்த ஒரே நபர் இவன்தானே? பிடிக்கா விட்டாலும் அவனுடனே சேர்ந்து நடந்தாள்.
நம்பியின் மனைவி ருக்மணி, அவரது மூத்த மருமகள் பிரகல்யா, வீட்டு வேலை செய்யும் நடுத்தர வயது பெண்மணி ஒருவரோடு சேர்ந்து மூவருமாக ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்றனர்.
மனைவியின் கைப்பற்றிய சர்வா அவளோடு சேர்ந்து பெரியப்பா பெரியம்மாவின் கால்களில் விழுந்தான்.
“நல்லாருங்க” என வாழ்த்திய நம்பி, “ரொம்ப டயர்டா இருக்கு மித்ரா, நீ பாட்டுக்கும் சடங்கு சம்பிராதயம்னு மருமகளுக்கு ட்ரில் எடுக்காம ரெஸ்ட் எடுக்க விடு” என மனைவியிடம் சொன்னார்.
“உங்க செல்ல புள்ளை திடீர்னு மருமகளை கொண்டாந்து நிறுத்துவான்னு கனவா கண்டேன்? அந்த ஷாக்லேருந்தே வெளில வர முடியாம நிக்கிறேன், கல்யாணத்தையே கண்ணால பார்க்கல, எந்த சடங்கு சாங்கியம் நினைப்பு வருது எனக்கு?” என நொடித்தார் ருக்மணி.
மித்ராவின் வரவை முன்னிட்டு யாரும் அவளை நோகும் படியோ சங்கட படும் படியோ ஒரு வார்த்தை பேசி விடக்கூடாது, நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ அந்த பெண்ணால்தான் நன்மை பயக்கும் என திருமணம் செய்து கொண்டு வருகிறான் சர்வா, நாம் அனைவருமே அந்தப் பெண்ணை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என தொண்டை தண்ணீர் வற்ற குடும்பத்தினரிடம் முன்கூட்டியே பேசியிருந்தார் நம்பி.
இப்போது தன் மனைவியே தான் பேசியதை காற்றில் பறக்க விடவும் முறைப்பாக பார்த்தார்.
“அடடா என்ன சொல்லிட்டேன் இப்போ? நான் வாயே தொறக்கல போதுமா?” மேலும் நொடித்தார் ருக்மணி.
“இவ இப்படித்தான்மா லொட லொடன்னு பேசிட்டே இருப்பா, இவளே நினைச்சாலும் இவ வாயை யாராலேயும் மூட வைக்க முடியாது. ஆனா வெள்ளந்தி, இந்தக் குடும்பம் இப்போ வரை கூட்டு குடும்பமா இருக்குன்னா இவ மனசு வச்சதாலதான்” என்றார் நம்பி.
“இப்போ என்னை வாரி விட்டதுக்காக இவரை திட்டவா, இல்லை புகழ்ந்து பேசினதுக்காக சந்தோஷ பட்டுக்கவா? அக்மார்க் அரசியல்வாதின்னு நிரூபிக்கிறார் பார்த்தியாம்மா?” என்றார் ருக்மணி.
“மித்ராக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை, கேள்வியெல்லாம் கேட்டு கஷ்ட படுத்தாம நீங்களே என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிக்கோங்க அத்தை” என்ற பிரகல்யா மித்ராவை பார்த்து சிரித்தாலும் அந்த சிரிப்பில் உயிர்ப்பில்லை.
“டிராவல்லாம் சௌகரியமா இருந்துச்சாம்மா?” என மித்ராவிடம் அக்கறையாக நம்பி கேட்க, தலையாட்டிக் கொண்டாள்.
“வீட்டுக்கு பேசினியாம்மா?” என அவர் கேட்ட அடுத்த கேள்விக்கு இல்லை என்பதாக தலையாட்டினாள்.
சர்வா எல்லாமே சொல்லியிருக்க, ஏன் என்றெல்லாம் மித்ராவிடம் கேட்டுக் கொள்ளவில்லை அவர். ராஜனின் கைப்பேசி எண்ணை பெற்று அவரிடம் பேசியவர் தன் மனைவியை விட்டு ஜெயந்தியிடமும் பேச வைத்தார்.
நம்பியின் மூத்த மகன் சுரேந்தர், சர்வாவின் தம்பி அனிருத் இருவரும் தங்களை தாங்களே மித்ராவிடம் அறிமுகம் செய்து கொண்டு நட்பாக புன்னகை செய்தனர்.
நம்பி அவரது அன்றாட பணிகளை கவனிக்க சென்று விட, சுரேந்தர் அவனுடைய நிறுவனத்துக்கும் அனிருத் கல்லூரிக்கும் புறப்பட்டு விட்டனர். சுரேந்தர் மற்றும் பிரகல்யா தம்பதியினரின் மூத்த மகன் பிரதீப் அறையிருக்க, இளைய மகன் லக்ஷன் பள்ளிக்கு சென்றிருந்தான்.
தன் அம்மாவை தேடினான் சர்வா. அவனது பார்வையை புரிந்து கொண்டது போல, “ரூம்ல இருக்கா காஞ்சனா, நீங்க ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க. பெரிய தாத்தா சின்ன தாத்தா உன் அம்மான்னு எல்லாரையும் பார்க்கலாம்” என்றார் ருக்மணி.
அந்த வீட்டின் ஆடம்பரமும் சொகுசும் ஒட்டாத அந்நியத்தன்மையை மித்ராவிடம் உண்டாக்கின. அவளால் அங்கு இணைந்து கொள்ள முடியவில்லை, மனம் அவளது பெற்றோரை தேடியது. அவர்கள்தான் என்னை இங்கு அனுப்பி வைத்து விட்டனரே என சொல்லிக் கொண்டவளின் முகத்தில் வருத்தமும் வேதனையும்தான் டன் டன்னாக வழிந்தது.
லிஃப்ட் மூலமாக இரண்டாவது தளத்தில் இருந்த தனது அறைக்கு மனைவியை அழைத்து வந்தான் சர்வா.
“ஏன் மித்ரா டிராவல் பண்ணினதுல உடம்புக்கு ஏதும் முடியலையா? என்ன செய்யுது, உன் முகம் சரியில்லையே” என்றான் சர்வா.
“முகம் மட்டுமா சரியில்லை? எனக்கு எதுவுமே சரியா நடக்கல. வசமா வந்து மாட்டிகிட்டேன். உங்க இஷ்ட படி ஆட்டி வைங்க என்னை” பொறுமலாக சொன்னாள்.
“முதல்ல குளிப்பியாம், அப்புறம் சாப்பிட்டு என் அம்மாவை தாத்தாவை எல்லாம் பார்ப்பியாம். அப்புறம் ரூம் வந்து ரெஸ்ட் எடுப்பியாம்” குழந்தைக்கு சொல்வது போல சொன்னவன் “போக போக நீதான் மாட்டிகிட்டியா இல்லை வேற யாரும் உன்கிட்ட மாட்டிகிட்டங்காளான்னு உனக்கே தெரியும்” தன்னை சுட்டிக் காட்டி சொன்னான்.
சாப்பாட்டை பற்றி பேசவும்தான் தன் பசியை உணர்ந்தாள். முதல் நாள் சரியாக சாப்பிடவில்லை, உறக்கமும் இல்லை. யாரோ போட்டு அழுத்துவது போல உடல் அயர்ந்து கிடந்தது. ஆகவே ஓய்வுக்கான நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டே தனக்கான ஆடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.
பொறுப்பாக மாமனாருக்கு அழைத்து பேசினான் சர்வா. மகளிடம் பேச வேண்டும் என்றார் ராஜன்.
“குளிக்க போயிருக்கா மாமா, வந்ததும் பேச சொல்லட்டுமா?” எனக் கேட்டான் சர்வா. சரியென சொல்லி அழைப்பை துண்டித்தவருக்கு விடிந்ததிலிருந்து மகளிடம் பேச முடியாததில் ஒரே பதட்டம்.
அவள் குளித்து வந்ததுமே வீட்டிற்கு பேச சொல்லி விட்டுத்தான் அவன் குளிக்க சென்றான். அப்பா மீது கொண்டிருந்த கோவத்தில் அவள்தான் பேசவில்லை.
நேரமாகியிருந்ததால் மற்றவர்கள் சாப்பிட்டிருந்தனர். உணவு மேசையில் அவளும் அவனும் அருகருகே அமர்ந்திருக்க பணியாளர் பரிமாறி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.
“என்னடா இது வந்த முத நாளே சாப்பிடறத கவனிக்க கூட யாருமே இல்லைனு நினைக்காத மித்ரா. பிரதீப்க்கு முடியாம போனதால அண்ணி எந்நேரமும் அவன் கூடவே இருக்க வேண்டியதா இருக்கு, அப்பா இறந்த பிறகு அம்மா அதிக நேரம் ரூம்லேயே இருக்காங்க, அதனால பெரியம்மாக்கு நிறைய ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ். இல்லைனா கண்டிப்பா யாராவது நம்மள கவனிக்க இங்க இருந்திருப்பாங்க” என்றான்.