அத்தியாயம் -7(3)
மனக் குமுறல்கள் வெளி வந்து ராஜன் சற்றே ஆசுவாசம் ஆன பின்னர் என்ன காரணத்துக்காக சர்வா இப்படி செய்து விட்டான் என்பதை விளக்கினார் நம்பி.
“இதையெல்லாம் எவ்ளோ தூரம் நம்புறதுன்னு இல்லீங்களா ஸார்? எம்பொண்ணு வாழ்க்கைதான் கிடைச்சுதா உங்க வீட்டு பையனுக்கு? இப்படி ஏமாத்திறது எந்த விதத்துல சரி?” கோவமாக அல்லாமல் நியாயமாக கேட்டார் ராஜன்.
பெரியப்பா பேசும் போது இடையில் தான் பேசுவது மரியாதை இல்லை என கருதி அமைதியாகவே இருந்தான் சர்வா.
தற்போதைய தங்கள் வீட்டின் நிலைமையை விளக்கினார் நம்பி.
சதானந்தம் பற்றி சொன்னவர், “அவர் முழு சாமியாராவே மாறிட்டார். அவர்தான் இந்த யோசனையை இவனுக்கு சொல்லியிருக்கார். என்னோட கடைசி தம்பிக்கு உடம்பும் மனசுல சரியில்லை. இவன் அப்பா போன வருஷம் இறந்து போயிட்டான், இப்போ என் பேரனுக்கும் ஆபத்து. என்ன தின்னா பித்தம் தெளியுங்கிற மன நிலைல பெரியவர் சொன்னதை செய்து பார்க்கலாம்னு இப்படி செஞ்சிட்டான்.
அதுக்காக உங்க பொண்ணுகிட்ட பொய் சொல்லி ஏமாத்தினதை எல்லாம் சரின்னு சொல்லலைங்க. இந்த கல்யாணம் உண்மை, உங்க பொண்ணு இவனை விரும்பினது உண்மை. எங்க வீட்டு மருமகளா இருக்க மித்ராவுக்கும் சம்மதம்னா அழைச்சிட்டு போறோம். எந்த நம்பிக்கைல அங்க அனுப்புறதுன்னு யோசிக்காதீங்க, அந்த வீட்டு ராஜகுமாரியா மித்ராவை வாழ வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்றார் நம்பி.
ராஜன் அமைதி காக்க, “என் நிலைமையை விளக்கி பொண்ணு கேட்ருந்தா நீங்க கொடுத்திருந்திருப்பீங்களா? இல்லை மித்ராதான் உடனே என்னோட வந்திருப்பாளா? அதனாலதான் இப்படி செய்ய வேண்டியதா போச்சு மாமா, மன்னிச்சுக்கோங்க” என்றான் சர்வா.
“எதுவும் பேசாதீங்க நீங்க, என்ன செஞ்சத நியாய படுத்துறீங்களா?” ஆதங்கப் பட்டார் ராஜன்.
“இந்த கல்யாணம் இப்படி நடந்தது தவறா படலாம் உங்களுக்கு. என்னை உங்க மகளுக்கு மாப்பிள்ளை ஆக்கினத்துக்காக ஒரு போதும் ரெக்ரெட் ஆக மாட்டீங்க மாமா, என் கூட வாழ்ந்து பார்த்திட்டு உங்க பொண்ணே… இல்லை என் வைஃபே உங்ககிட்ட சொல்வா. அவளை என்னோட அனுப்பி வைங்க மாமா” என்றான் சர்வா.
ராஜனால் முடிவெடுக்க முடியவில்லை, மகளின் முகத்தை பார்த்தார்.
“நான் எங்கேயும் போகலப்பா” கோவமும் உறுதியுமாக சொன்ன மித்ரா உள்ளே சென்று விட்டாள்.
“மித்ரா… ப்ளீஸ் போகாத, உன் கோவம் போக நான் என்ன பண்ணனும்? கொஞ்சம் நிதானமா யோசிச்சா என்னை உன்னால புரிஞ்சுக்க முடியும் மித்ரா, அவசர பட்டு என் கூட வர மாட்டேன்னு சொல்லாத” கெஞ்சிக் கொண்டே அவளின் பின்னாலேயே சென்றான் சர்வா.
சங்கடமாக பார்த்த ராஜன், “அவரை கூப்பிடுங்க ஸார்” என நம்பியிடம் சொன்னார்.
“சர்வா… வாடா இங்க” என அதட்டினார் நம்பி.
“நான் அவ கூட தனியா பேசணும் பெரியப்பா” என்றான் சர்வா.
“அக்கா உங்க கூட வர விரும்பலன்னு உங்க முன்னாடிதானே சொல்லிட்டு போகுது? கிளம்புங்க இங்கேருந்து” என சஞ்சய் அதட்ட, மிருதுளா அவனது கையை பிடித்து அவனை அடக்கினாள்.
சஞ்சயின் அருகில் வந்தவன், “என் இடத்துல நீ இருந்தா என்ன பண்ணியிருப்ப சஞ்சய்? சொல்லு… கண்ணு முன்னாடியே குடும்பம் அவதி படும் போது அதுக்கான வழி தெரிஞ்சும் ஒண்ணும் செய்யாம ஒதுங்கி நிப்பியா?” எனக் கேட்டான்.
“அதுக்காக இன்னொரு பொண்ணை ஏமாத்த மாட்டேன்” என்றான் சஞ்சய்.
“என்னடா நான் ஏமாத்தினேன்? கல்யாணம் பண்ணி விட்டுட்டு போனாதான் ஏமாத்துறது, அவளை கூட வச்சு வாழுறேன்னு சொல்றது எப்படி ஏமாத்துறது ஆகும்?” என கோவமாக கேட்டான் சர்வா.
“அப்ப நீங்க பண்ணினது தப்பே இல்லை, இப்ப மித்ரா வர மாட்டேன்னு சொல்றதுதான் தப்பு, என்ன?” எனக் கேட்டாள் மிருதுளா.
“நான் பண்ணின தப்புக்கு என்ன வேணா தண்டனை கொடுக்கட்டும் அவ, ஏத்துக்க ரெடியா இருக்கேன். ஆனா வர மாட்டேன்னு சொல்ல வேணாம்னு அவகிட்ட சொல்லுங்க” என்றான் சர்வா.
இப்போது சர்வா பேசட்டும் என வேடிக்கை பார்த்தார் நம்பி.
“அந்த வம்சத்துல எங்க பொண்ண கட்டி கொடுக்கிறது எங்க குலத்துல வழக்கம் இல்லீங்களே தம்பி” என்றார் வைஜெயந்தி.
“வழக்கம் இல்லாமதானே நான் உங்க ஆளு இல்லை, அனாதைன்னாலும் பரவாயில்லைனு அவளை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க அத்தை? எல்லா வழக்கத்துக்கும் ஆரம்பம்னு ஒண்ணு இருக்கும்தானே அத்தை? நூறு வருஷங்களுக்கு முன்ன நடந்ததையே நினைச்சிட்டு இருக்காதீங்க, நாங்க அவங்க வம்சமா இருந்தாலும் வாழ வர்ற பொண்ண கொடுமை செய்றவங்க இல்லை. அவ என் வைஃப், என்னோட அனுப்பி வைங்க” என மன்றாடுதலாக கேட்டான் சர்வா.
அறைக்குள்ளிருந்த மித்ராவுக்கு அனைத்தும் கேட்டதுதானே. வேகமாக வெளியே வந்தவள், “என்னை முழு முட்டாளாக்கிட்டு, என் ஃபீலிங்ஸோட விளையாடிட்டு, ட்ராமா பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டு ‘என் வைஃப்’ அப்படின்னு உரிமை வேற பேசுவீங்களோ? உங்க குடும்பம் நல்லா இருக்க நான் பலிகடாவா? மரியாதையா போங்க இங்கேருந்து!” என கோவமாக இரைந்தாள்.
“ஹேய் மித்ரா, ஸாரி ஸாரி ஸாரி… என்னோட நோக்கம் உன்னை ஏமாத்துறது இல்லை” என சொல்லிக் கொண்டே அவளை நெருங்கி அவளின் கையை பிடித்தான்.
“ச்சீ தொடாத!” என சத்தம் போட்டாள்.
அதில் அவமானம் அடைந்தவன் வேண்டுமென்றே அவளது கையை அழுந்தப் பற்றினான்.
அதில் அவள் முகம் சுழிக்க, ராஜன் கோவமாக எழ, “சர்வா என்ன பண்ணிட்டு இருக்க?” என கோவமாக கத்தினார் நம்பி.
நிதானமடைந்து அவளின் கையை விட்டவன், அவளைப் பார்த்து கை கூப்பி கும்பிட்டான்.
“உன்கிட்ட பொய் சொன்னதுக்காக மன்னிச்சுடு, தயவு பண்ணி என் கூட வா” என்றான்.
தன் தம்பியின் மகன் இத்தனை இறங்கி வரக்கூடும் என எதிர்பார்த்திராத நம்பி அவனது இந்த செயலில் அதிர்ந்தாலும் தடை செய்யவில்லை.
அவள் முகத்தை திருப்பிக் கொள்ள, இத்தனை கெஞ்சியும் வீம்பு செய்பவளின் மீது அவனுக்கும் கோவம் வந்தது.
“என்ன உன் உத்தேசம்? இன்னும் ஒரு வாரத்துல உனக்கு இன்னொரு கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்காங்களே, அதை செஞ்சுக்க போறியா? சொல்லு” என அதட்டலாக கேட்டான்.
“அது என் இஷ்டம், என்ன வேணும்னாலும் முடிவெடுப்பேன், ஆனா உங்களோட மட்டும் வர மாட்டேன்” என்றாள்.
அடுத்து என்ன பேச என திகைத்துப் போய் விட்டான் சர்வா.
“அம்மாடி… இவன் மேல உள்ள கோவத்துல பேசாத, இதுதான் உன் முடிவுன்னா… எங்க என்கிட்ட சொல்லு” என்றார் நம்பி.
அவரை தீர்க்கமாக பார்த்தவள், “என்னை என் மனசை கொன்ன இவர் கூட வர எனக்கு துளியும் விருப்பமில்ல, போதுமா?” எனக் கேட்டாள்.
‘போதும்’ என்பது போல தலையாட்டிக் கொண்ட நம்பி, “சர்வா வா போலாம்” என்றார்.
“பெரியப்பா!” அதிர்ந்தான் சர்வா.
“இனி உன்னால அந்த பொண்ணுக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது, கிளம்பி வா, நைட் சென்னைக்கு கிளம்பறோம் நாம” என முடிவாக சொன்னார் நம்பி.
பார்வையில் கெஞ்சலை தேக்கி மித்ராவை ஆழ்ந்து பார்த்தான் சர்வா. அவன் விழிகளை சந்திக்க மறுத்தாள் அவள்.
இன்னொரு திருமணம் வேண்டாம் என தன்னிடம் கெஞ்சிய மகள் விரும்பியவனை போக சொல்வது கோவத்தில் எடுத்த முடிவா ஒரேயடியாக பிரிய நினைத்துதான் சொல்கிறாளா என தெரியாமல் பார்த்திருந்தார் ராஜன்.
கணவரை போன்ற எண்ணத்துடனே இருந்த வைஜெயந்தி அதனை தெளிவு படுத்திக் கொள்வதற்காக, “ஏன் அவரை சும்மா அனுப்புற, அவர் கட்டினதையும் கழட்டி கொடுத்து அனுப்பி வை” என்றார்.
அம்மாவை அதிர்ந்து பார்த்தாள் மித்ரா. அவளின் அந்தப் பார்வையில் தைரியமும் நம்பிக்கையும் வரப் பெற்ற சர்வா ‘எங்கே கழட்டித் தா’ என்பது போல மனைவியை நோக்கினான்.
சர்வாவின் சவால் பார்வையில் வெகுண்டெழுந்தவள், “அவர்தானே கட்டினார், அவரையே கழட்டி எடுத்திட்டு போக சொல்லும்மா” என்றாள்.
கோவத்தோடு மித்ராவை நெருங்கியவன் வேகமாக அவளது கழுத்தில் கிடந்த தாலிக் கயிறை கையில் எடுத்தான். அந்த நொடியை கடக்க துணிவின்றி கண்களை இறுகி மூடிக் கொண்டவள் அவனது செயலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
கூடியிருந்த யாருமே சர்வாவுக்கு தடை சொல்லவில்லை, இருப்பினும் அவர்களிடமும் சொல்லத் தெரியாத பதற்றம்.
திருமாங்கல்யத்தை கைக்குள் வைத்து மூடி அழுத்திக் கொண்டவன், “நீயும் நானும் புருஷன் பொண்டாட்டிங்கிறதுதான் இந்த ஜென்மத்துல நமக்கு விதிக்க பட்ருக்கு. உன் கூட பழகின இத்தனை நாள்ல உன்னை நான் புரிஞ்சுகிட்டது வச்சு… நீயா என்னை தேடி வருவேங்கிற நம்பிக்கையோட…” என அவன் பேசிக் கொண்டிருக்கும் போது விழிகளை திறந்தாள் மித்ரா.
“என் மனைவியான உன்னை இங்க விட்டுட்டு போறேன்” என சொல்லி மாங்கல்யத்தை விடுவித்தான். அது அவளின் நெஞ்சில் மோதி அங்கேயே தஞ்சமடைந்தது.
தன் பெரியப்பா முதற்கொண்டு அனைவருக்கும் பொதுவாக, “இந்த வீட்லேருந்துதான் போறேன், மித்ரா இல்லாம குன்னூர் விட்டு போக மாட்டேன்” என அறிவிப்பு கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.