ஹால் சோபாவில் அமர்ந்து பாத்திரத்திலிருந்த திராட்சையை சுவைத்தபடி கண்களை டிவியில் பதித்திருந்தாள் பத்மா. நந்தகுமாரும், சுபாஷினியும் தேவியை அழைத்துக் கொண்டு கடை வீதிக்கு ஏதோ வாங்க சென்றிருந்தனர்.
போர்டிகோவில் நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்த கணேசன் கேட் அருகே ஒரு டாக்ஸி வந்து நிற்பதைக் கண்டுவிட்டு யாரென்று நோக்க, மகள் நிகிதா இறங்குவதைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.
“அடடே, நிகிக்குட்டி… நாளைக்கு தான் நீ வருவேன்னு அம்மா சொன்னா, இன்னைக்கே வந்து நிக்கற…” அருகே சென்றவர் புன்னகையுடன் கேட்க சிரித்தாள் மகள்.
“ம்ம்… ஹாஸ்டல்ல சாப்பாடு சரியில்லையா…? இளைச்ச மாதிரி தெரியறயே கண்ணு…”
“ஆமாப்பா, அதான் இங்க வந்துட்டன்ல, இனி நல்ல சாப்பாடா சாப்பிட்டு உடம்பைத் தேத்திடறேன்… என்ன சொல்லுறாங்க, உங்க புது மருமக…?”
மகள் கேட்கவும் சட்டென்று வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு குரலைக் குறைத்த கணேசன், “ஹூம், என்னத்த சொல்ல…? உங்கம்மாவுக்கு சம்பளம் இல்லாம ஒரு வேலைக்காரி கிடைச்சிருக்கா… அது என்னடான்னா விஜயாவுக்கு அசிஸ்டன்ட் மாதிரி வீட்டுல இருக்கற வேலை எல்லாத்தையும் செய்துட்டுக் கிடக்கு… ஊருல இருந்து சுபா அத்தையும், மாமாவும் வந்திருக்காங்க. அவங்களோட கடைக்குப் போயிருக்கா…” அவர்கள் பேசிக்கொண்டிருக்க குரலைக் கேட்டு பத்மா எழுந்து வந்தார்.
மகளைக் கண்டதும் மலர்ந்தவர், “நிகி…! நாளைக்கு தான் வருவேன்னு சொன்ன, திடுதிப்புன்னு வந்து நிக்கற…”
“சும்மா ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இன்னைக்கே வந்தேன் மா… என்ன, ஆளாளுக்கு வெளிய நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்கிங்க, நான் இன்னைக்கு வந்தது பிடிக்கலைனா சொல்லுங்க… போயிட்டு நாளைக்கே வர்றேன்…” அவள் உதட்டைச் சுளித்து சிணுங்கலாய் சொல்ல பத்மா மகளைக் கொஞ்சினார்.
“அதில்லடி கண்ணு, சும்மாதான் கேட்டேன்… கோச்சுக்காத, சரி வந்த கால்ல நிக்காம உள்ள வந்து உக்காரு…”
“ம்ம்…” என்றவள் உள்ளே வந்தாள்.
“அப்புறம், திருவாளர் விக்ரம பாண்டியன் வீட்டிலிருக்கிறாரா, இல்லை கடமையாற்ற அலுவலகம் சென்று விட்டாரா…?”
“ஹூக்கும், என்னைக்கு உன் அப்பா பிசினஸை அவன் கைல ஒப்படைச்சுட்டு எல்லாப் பொறுப்பையும் அவனுக்குக் கொடுத்தாரோ அன்னைல இருந்து என் பிள்ளை ஆபீசே கதின்னு கிடக்குறான், உன் அப்பா பண்ணத் தெரியாம பிசினஸ் பண்ணி சேர்த்து வச்ச நஷ்டத்தை சரி செய்ய என் பிள்ளை ஓடாத் தேயறான், பாவம்…”
“ஹூக்கும், கவனிச்சுக் கிழிச்சா… அவளைப் பார்க்கவே பிடிக்காம என் பிள்ளை தலை தெறிக்க ஓடறான், நீ வேற…”
“ம்ம்… மாமாவும், அத்தையும் என்ன சொல்லறாங்க…”
“அவங்க என்னத்த சொல்ல, இப்ப அவளுக்கு ஏதோ வாங்கிக் கொடுக்கணும்னு கூட்டிட்டுப் போயிருக்காங்க…”
அதற்குள் விஜயா ஜூஸுடன் அங்கே வந்தாள்.
“வாங்க சின்னம்மா, நல்லாருக்கீங்களா…?”
“அடடா, இந்த அம்மா, ஆன்ட்டின்னு எல்லாம் என்னைக் கூப்பிடாதிங்கன்னு எத்தனை முறை சொல்லிருக்கேன்… நான் உங்களை விட சின்னப் பொண்ணு தான, பேர் சொல்லியே கூப்பிடுங்க விஜயாக்கா…”
“அதெப்படி பேர் சொல்லிக் கூப்பிடுவா… அப்புறம் வீட்டு எஜமானிக்கும், வேலைக்காரிக்கும் வித்தியாசம் தெரிய வேணாமா…? இப்படி எல்லாத்துலயும் சரிசமமா நடத்தும் போதுதான் அவங்களுக்கும் கொடுக்கு முளைச்சுக்குது… இந்தா விஜயா, நீ எப்பவும் போலவே அவளைக் கூப்பிடு…” பத்மா சொல்ல அவர்கள் பேசுவதை முகம் சுருங்கக் கேட்டு நின்ற விஜயா தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
சிறிது நேரத்தில் நந்தகுமாரும், சுபாஷினியும் தேவிக்கு புதிய உடைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். நந்தினி அவர்களிடம் தேவிக்கு சுரிதார் வாங்கிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பி இருந்தாள். நிகிதாவைக் கண்டதும் நலம் விசாரித்தவர்களிடம் அவளும் அக்கறையுடன் பேசிவிட்டு தேவியைக் கண்டு சிநேகமாய் புன்னகைக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த தேவியும் புன்னகைத்தாள்.
“இல்லடா கண்ணு, அங்கே நந்தினி தனியா இருக்கா… துணைக்கு பரிமளா வந்து இருந்தாலும் சிரமப்படுத்தக் கூடாதுல்ல, அப்புறம் நந்துவுக்கு ஒரு வரன் வந்திருக்கு… அடுத்த வாரம் மாப்பிள்ளை வீட்டுல இருந்து பொண்ணு பார்க்க வராங்க, அந்த விசேஷத்துக்கு கணக்கா இவங்களை விருந்துக்கு அழைச்சிட்டு போகத்தான் வந்தோம்…”
“ஓ…! அதுக்குள்ளே அண்ணிக்கு வேற மாப்பிள்ளை அமைஞ்சிருச்சா…?” நிகிதா சந்தோஷமாய் கேட்க அதைக் கேட்ட பத்மாவுக்கு வயிறு எரிந்தது.
“அடடே, நல்ல விஷயம் மாப்பிள்ள… அவளுக்கும் வயசாகுதுல்ல, இப்ப கல்யாண யோகம் இருக்கும்போதே முடிச்சு விடறது நல்லது தான்…” என்ற கணேசனை பத்மா வெறுப்புடன் முறைக்க அவர் வாய் மூடிக் கொண்டார்.
மதிய உணவுக்கு வந்த விக்ரமிடம் நந்தகுமார், நந்தினி கல்யாண விஷயத்தை சொல்ல அவள் பெயரைக் கேட்டதுமே அவன் உள்ளமெல்லாம் எரிந்தது. அதுவும் அவளுக்கு டாக்டர் சம்மந்தம் வந்திருப்பதாய் சொல்லவும் ஆத்திரம் பொங்கியது. கசப்பான விஷயங்களை மறந்து சந்தோஷமாய் அனைவரும் ஊருக்கு வரவேண்டுமென்று அழைக்க, மனதை மறைத்து வருவதாய் தலையாட்டினான்.
“என் கல்யாணத்துல அசிங்கப் படுத்திட்டு இப்ப டாக்டர் மாப்பிள்ளைய கட்டிக்கப் போறியா…? உன் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கறேன்டி…” மனதுக்குள் சொல்லிக் கொண்டான். நந்து, சுபாஷினி முன் பத்மா மருமகளிடம் எந்த வேலையும் சொல்லாமல் பாசத்தைப் பொழிந்து வியக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
நிகிதாவிடம் தனிமையில் சந்தித்து தேவிக்கு ஆறுதலாய் இருக்கும்படி சொன்ன சுபாஷினியிடம், “பயப்படாதீங்க அத்தை, அண்ணி இனி என் பொறுப்பு…” என சொன்னவளை நெகிழ்வுடன் அணைத்துக் கொண்டார் சுபா.
இரவு இருவருக்கும் சாந்தி முகூர்த்தத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து, விக்ரமிடம் தேவியை நன்றாய் பார்த்துக் கொள்ளும்படி வேண்டி, கண் கலங்கிய தேவிக்கு தைரியம் சொல்லி அறைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பத் தயாராகினர்.
ஆனால் பால் சொம்புடன் அறைக்கு சென்ற தேவியின் நிலை தான் கஷ்டமானது. நிகிதா தான் அவளை அறை வரை அழைத்துச் சென்றாள். கால்கள் அப்படியே வேரூன்ற அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் கதவின் முன் நின்றவளை வற்புறுத்தி உள்ளே அனுப்பிவிட்டே சென்றாள்.
தேவி கதவைத் திறந்ததும் அறை முழுதும் நிறைந்திருந்த இருட்டு தான் பார்வைக்குக் கிடைத்தது.
“ஒருவேளை, பாத்ரூம் போயிருப்பாரோ…” என சற்றே ஆசுவாசத்தில் தடுமாற்றமாய் உள்ளே வந்தவள் பயமும், தயக்கமுமாய் சுவரிலிருந்த சுவிட்சைத் தேய்க்க இருள் நீங்கி வெளிச்சம் நிறைய, கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த விக்ரமைக் கண்டதும் அதிர்ந்து நின்றாள்.
அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனைக் கண்டதும் அவளுக்கு வெலவெலத்துப் போக சற்றே நடுக்கத்துடன் தலை குனிந்தபடி நின்றாள்.
“கைல என்ன…?”
“ப..பால்…”
“அங்க வச்சிட்டு வா…” அவன் சொல்லவும் வேகமாய் டீப்பாய் மீது வைத்துவிட்டு வந்தவள் சட்டென்று அவன் காலில் விழுந்தாள்.
“ஏய்…! என்ன பண்ணற, எழுந்திரு…” எழுந்தவள் தலை குனிந்தபடி நிற்க இதயம் பலமாய் துடிப்பது அவள் காதில் பயங்கரமாய் கேட்டது.
“அத்தன பேரு முன்னாடி நீயும், உன் பிரண்டும் என் காலை வாரிவிட்டுட்டு, இப்ப இங்க தனி ரூம்ல என் கால்ல விழுந்தா சரியாகிடுமா…?” என்றவனின் வார்த்தையின் காரம் அவளுக்குள் சுர்ரென்று ஏறியது.
அவள் அமைதியாய் சற்றே நடுங்கியபடி நிற்க, ஒரு நிமிடம் வெறுப்புடன் பார்த்தவன், “அந்த செல்ப்ல ஒரு பாட்டில் இருக்கும் எடு…” என்றான். அவன் சொன்னது மது பாட்டிலை என்று புரிய வேதனையுடன் செல்பிலிருந்து எடுத்தவள் நீட்டினாள்.
அதை வாங்காமல், “கிளாஸ்ல ஊத்திக் குடு…” என்றான். தவிப்புடன் அவன் முகம் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் கண்ணாடி கிளாசை எடுத்து குப்பியைத் திறந்து ஊற்ற, பொன் நிறத்தில் பளபளத்தது அந்த திரவம்.
“அதுல கொஞ்சம் தண்ணி ஊத்து…” என அவளையே மிக்ஸ் பண்ண வைத்து கிளாஸை வாங்கிக் கொண்டான்.
அதன் வாசமே தேவிக்கு குடலைப் பிரட்ட அவஸ்தையுடன் நின்று கொண்டிருந்தவளை கிளாசிலிருந்த மதுவைப் பருகிக் கொண்டே நோக்கியவன், “உக்கார்…” என்றான்.
திகைத்தவள் எழுந்து கீழே அமர வில்லத்தனமாய் அவளை நோக்கியவன், “அந்த நந்தினியும், நீயும் எல்லார் முன்னாடி என்னைப் பொம்பள பொறுக்கின்னு சொல்லாம சொல்லிட்டீங்கள்ள… அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரியும்ல, அப்பவும் வாயைத் திறக்காம அப்படியே நிக்கற… சொல்லுடி, உண்மைல நான் உன்னை என்ன செய்தேன்…” எனக் கோபமாய் கேட்க அவள் தவிப்புடன் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“ஏய்…! அன்னைக்கும் ஊமைக்கொட்டான் போல இருந்துதான என் வாழ்க்கையைக் கெடுத்த… இப்பவாச்சும் உண்மையை சொல்லித் தொல… இல்ல, என்னைப் போல படிச்ச, அழகான பணக்காரப் பையனைப் பார்த்ததும் ஆசைப்பட்டு, உன் பிரண்டுக்கு கல்யாணம் முடிக்க முடிவானது தெரிஞ்சும், பரவால்லன்னு கிடைச்ச சான்சை யூஸ் பண்ணி என் மேல பழி போட்டாச்சும் என் வாழ்க்கைல வர முடிவு பண்ணிட்டியா…?” அவன் வார்தைகள் சாட்டையாய் சுழல கேட்க முடியாமல் அதிர்ந்து போனாள் தேவி.
“போதும்…! இந்த கல்யாணத்தை நான் நிறுத்தல… ஆரம்பத்துல உங்க மேல சின்னதா ஒரு ஆசை வந்தது உண்மைதான், ஆனா எப்ப நந்துவோட உங்களுக்கு கல்யாணப் பேச்சு வந்துச்சோ அப்பவே அதைத் தூக்கிப் போட்டுட்டு உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு நினைச்சவ நான்… மத்தபடி உங்க அழகையோ பணத்தையோ எதிர்பார்த்து உங்களைக் கல்யாணம் பண்ணலை…”
“அப்புறம் எதுக்குடி, என்னைக் கல்யாணம் பண்ணனும்னு அவ சொன்னதுக்கு அமைதியா இருந்த… இது உன் நாடகமா…? இல்லை, எவனோ யூஸ் பண்ணின உன்னை என் தலைல கட்ட அவ போட்ட நாடகமா…?”
“போதும் நிறுத்துங்க… உங்களுக்கு வேணும்னா ஒரு பொண்ணை ஒட்டுத் துணி இல்லாமப் பார்க்கறது சாதாரண விஷயமா இருக்கலாம்… கிராமத்துலயே பிறந்து வளர்ந்த என்னைப் போல பொண்ணுகளுக்கு மானம் தான் உயிர்… கட்டின புருஷனைத் தவிர வேற எவனாச்சும் தன்னுடைய உடம்பைப் பார்த்துட்டா அது மரணத்துக்கு சமமா நினைச்சுப் பழகினவங்க… அன்னைக்கு இப்படி நடந்தப்ப நானும் மயக்கத்துல இருந்ததால எனக்கும் முழுமையா புரியல… நமக்குள்ள எதுவும் நடந்தாலும், நடக்கலன்னாலும் என்னை நீங்க உடம்புல துணி இல்லாமப் பார்த்துட்டது நிஜம்… உங்களைக் கல்யாணம் பண்ணலேன்னா சாகறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை… அதான், நந்தினி அப்படி ஒரு விஷயத்தை சொன்னப்ப என்னால மறுக்க முடியல… என் மௌனத்துக்குக் காரணம் என்னைக் காப்பாத்த வந்து உங்க ரெண்டு பேருக்கும் நடக்க இருந்த கல்யாணம் நின்னு போச்சேன்னு மனசுல இருந்த குற்றவுணர்வு தான்… மத்தபடி இதுல எந்த நாடகமும் இல்ல…”
அவளது பேச்சைக் கேட்டு அவன் விக்கித்து நிற்க, பேசி நிறுத்தி பெரிதாய் மூச்சு விட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென்று இறங்கியது.
“உங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருந்தும் வாய் இருக்கேன்னு என்ன வேணும்னாலும் பேசலாம்னு நினைக்காதிங்க……” அழுத்தி சொன்னவள் சட்டென்று எழுந்து உடை மாற்றும் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டாள்.
அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் காதில் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க, “அன்றைய நிகழ்வுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்குமென்று யோசிக்கவே இல்லையே…” என்று விக்ரமின் மனசாட்சி குற்றப்படுத்தியது.
கையிலிருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்துவிட்டு பாட்டிலை வைத்தவன் அமைதியாய் படுத்துக் கொண்டான். லேசாய் ஏறியிருந்த போதையும் இறங்கிப் போயிருந்தது.
சிலை போல் அமர்ந்திருந்த தேவியின் மனம் விக்ரம் சொன்ன கடைசி வார்த்தையை மீண்டும் மீண்டும் நினைத்து குமுறிக் கொண்டிருந்தது.
“எவனோ யூஸ் பண்ணின உன்னை என் தலைல கட்ட அவ போட்ட நாடகமா…?” அந்த வார்த்தை மனதுக்குள் வந்து மோதும் போதெல்லாம் இதயம் மிக வலிக்க கண்கள் மீண்டும் கண்ணீரை நிறைத்தன.
“நான் அப்படிப்பட்டவ இல்லை…” எனக் கதறி அழத் தோன்றினாலும் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“இல்ல, நான் அழ மாட்டேன்… இதுல என் தப்பு என்ன இருக்கு…? நான் எதுக்கு அழணும்…? இவங்க பணமும், பகட்டும் பார்த்தா நான் ஆசைப்பட்டேன்… ச்ச்சே… என்னை இப்படிப் பேச எப்படி மனசு வந்துச்சு…?” கண்ணைத் துடைத்துக் கொண்டவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.
ஊரில் நந்தினியும் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். இன்று விக்ரம், தேவிக்கு சாந்தி முகூர்த்ததுக்கு ஏற்பாடு செய்துவிட்டு பெற்றோர் கிளம்பி வந்து கொண்டிருப்பதாய் போன் செய்து சொன்னாலும் தேவியைப் பற்றியே அவள் மனது நினைத்திருந்தது.
“விக்ரம் அவகிட்ட கோபப்படாம நல்லபடியா பழகத் தொடங்கணும்… ரெண்டு பேரும் சந்தோஷமா கிடைச்ச வாழ்க்கையை ஏத்துகிட்டு தாம்பத்தியத்தை இனிமையாத் தொடங்கணும்… விக்ரம் மாம்ஸ் அவ்ளோ சீக்கிரம் எதையும் மறக்க மாட்டார்னாலும் தேவி மேல எந்தத் தப்பும் இல்லைன்னு சீக்கிரமே புரிஞ்சுகிட்டு ஏத்துக்கணும்… அப்பதான் நான் இதை நடத்திக் கொடுத்ததுக்கு அர்த்தம் இருக்கும், அதிர்ச்சில இறந்து போன சரவணன் அப்பா ஆன்மாவுக்கும் சாந்தி கிடைக்கும். கடவுளே…! நீதான் எங்க தேவி வாழ்க்கைல விளக்கேத்தி வைக்கணும்…” மனமார வேண்டிக் கொண்டிருந்தாள் நந்தினி.
மனது சட்டென்று அந்த நாள் நினைவுகளை அசை போடத் தொடங்க அவள் மனது பின்னோக்கிச் சென்றது.
“நந்து…! நம்ம பாத்ரூம்ல ஹீட்டர் ஆன் பண்ணினா ஷாக் அடிக்குது… நானும், அம்மாவும் பெரியவர் காரியத்துக்குப் போயிட்டு வர்றோம்… எலக்ட்ரீசியன் மணி நாளைக்கு வந்து பார்க்கறேன்னு சொன்னான், நீ எதுவும் தொட்டுடாத…”
“சரிப்பா…” என்றாள் நந்தினி.
“நீயும், தேவியும் லைப்ரரிக்குக் கிளம்பும்போது பூட்டிட்டு சாவியை எப்பவும் வைக்கிற இடத்துல வச்சிட்டுப் போங்க…” என்றவரிடம் நந்தினி தலையாட்ட, இருவரும் கிளம்பினர். வீட்டருகே ஒரு பெரியவர் விஷக்காய்ச்சலில் பத்து நாளாய் படுக்கையில் கிடந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் விட்டிருந்தார். அவரது இறுதிக் காரியத்தில் கலந்து கொள்ள நந்தகுமாரும், சுபாவும் கிளம்பினர்.
உள்ளே வந்த நந்தினி அலைபேசியை எடுத்து தேவிக்கு அழைக்க அது சுவிட்ச் ஆப் என்றது.
“ப்ச்… எத்தன மணிக்கு வருவான்னு கேக்கலாம்னு பார்த்தா இந்த தேவி வேற போன ஆப்ல வச்சிருக்கா, சரி வர்ற வரைக்கும் பாட்டு கேக்கலாம்…” என நினைத்துக் கொண்டு வாசல் கதவை வெறுமனே சாத்திவிட்டு மாடிக்கு சென்றாள்.
காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு இளையராஜாவின் இன்னிசையில் தனை மறந்து கேட்டிருந்தாள் நந்தினி. எத்தனை நேரம் சென்றதோ பாட்டைக் கேட்டு அப்படியே உறங்கிப் போயிருந்தவள், கண் விழித்து சமயம் பார்க்க இரண்டு மணி நேரம் ஓடியிருந்தது.
“அடடே, ரெண்டு மணி நேரம் தூங்கிட்டனா…? இந்த தேவி எங்கே இன்னும் காணோம்…?” என யோசித்திருக்க அவள் தோழி ஒருத்தி போனில் வந்தாள்.
“ஓஹோ, இன்னைக்கு நான் சொன்ன பிரவுன் கலர் சுரிதார் தான உடுத்திருக்க…”
“ஆமாடி, நீதான் அதே டிஸைன்ல தைக்க கொடுக்கணும்னு போட்டு வரச் சொன்னியே…”
“ம்ம்… எதுக்கும் அதை போட்டோ எடுத்து எனக்கு அனுப்பு…”
“சரி அனுப்பறேன்…” என்றவள் செல்பி எடுத்துப் பார்த்து திருப்தி ஆகாமல் காமெராவை ஆன் செய்து எங்கே நல்ல வியூ கிடைக்கிறது என பார்த்துக் கொண்டே கீழே வந்தவள் பின்பக்கமாய் வீட்டுக்குள் இருந்த பாத்ரூம் அருகே கண்ட காட்சியில் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க அதிர்ந்து கையிலிருந்த நழுவிய மொபைலை அழுத்திப் பிடித்தாள்.