Epilogue
நான்கு வருடங்களுக்கு பிறகு…
மதன் வீட்டில் அவனது ஒரு வயது மகளுக்கு காதணி விழா நடந்து முடிந்திருக்க, கறி விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆமாம் மதனுக்கும் அர்ச்சனாவுக்கும் சேரனும் செழியனும் வனராஜன் உதவியோடு திருமணத்தை நடத்தி வைத்திருந்தனர். சேரனின் திருமணத்தின் போது நடந்த கலவரங்கள் இல்லாமல் ஊரை கூட்டி அமர்க்களமாக நடந்திருந்தது அந்த திருமண வைபவம்.
சிதம்பரம் முதலில் முறுக்கிக் கொண்டார்தான். சொந்த சகோதரியின் மகன்தான் மாப்பிள்ளை என்பதாலும் மகளுக்காகவும் அதிக நாட்கள் வீம்பு செய்யாமல் பேச ஆரம்பித்து விட்டார். ஆனால் சமயம் கிடைத்தால் ஏதாவது திருகுதாளம் செய்து வம்பையும் வளர்த்து விடுவார்.
அப்படித்தான் இப்போதும் அவரது மனைவியின் அண்ணனுக்கு கறி நிறைய வைக்கவில்லை என பிரச்சனை செய்தார்.
வேட்டியை மடித்துக் கட்டி நாக்கை துருத்திக் கொண்டு சிதம்பரம் கோதாவில் இறங்கியிருக்க, சுற்றிலும் அவரது சில அடி பொடிகள்.
“பெனா தனா குஸ்தி போட ரெடி ஆகிட்டாராம்டா சேரா. தின்ன கறி செமிக்கிற மாதிரி ஏதாவது செஞ்சு வுட்ரா மாப்ள” என்றான் இரத்தப் பொரியல் பரிமாறிக் கொண்டிருந்த செழியன்.
சிதம்பரம் அருகில் சென்ற சேரன் அவரது ஆள் ஒருவனை இழுத்து போட்டு சாத்தி, “ஒரு பெரி…ய மனுஷன் கூட இருக்கையில பதமா நடக்க தெரியாது. பேசாம தின்னுட்டு போடா, இல்ல உன்னை அடிச்சு போட்டு காக்கா கழுகுக்கு விருந்து வச்சிடுவேன்” என பெரிய மனுஷன் என்பதில் அழுத்தம் கொடுத்து மிரட்டலாக சொன்னான். அவன் கேட்ட தொனி நீயெல்லாம் பெரிய மனிதனா என்பது போலதான் இருந்தது.
“முக்கியஸ்தரை கவனிக்காம இவனை எதுக்கு அடிக்கிற? நீ நல்லா போட்டு விடு, என்ன நடந்தாலும் பார்த்துக்கிறேங்கிறேன்” என வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்த வனராஜன் சிதம்பரத்தை நன்றாக முறைத்து வைத்தான்.
சிதம்பரம் அவரது ஊரிலும் கட்சியிலும் இப்போது செல்லாத காசுதான். வனராஜன்தான் அங்கு எல்லாமே. அவனது ஊரின் பிரசிடெண்ட்டாக இருப்பவனுக்கு அடுத்த தேர்தலில் எம் எல் ஏ சீட் கொடுக்க பட போவதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
மச்சானும் மாப்பிள்ளையும் எதிரெதிர் கட்சிகளில் இருந்தால் சரி வராது என்பதால் அரசியலில் ஈடுபாடு இல்லாத சேரன் அதிலிருந்து முழுதாக விலகி விட்டான். கந்தசாமியை தவிர அவரது குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை. சின்னய்யனோடு சேர்ந்து கொண்டு அவர் மட்டும் கட்சி பணிகளை ஆற்று ஆற்று என ஆற்றிக் கொண்டிருக்கிறார்.
வனராஜனை கண்டு பயந்த சிதம்பரம் வேஷ்டியை இறக்கி விட்டுக் கொண்டு பவ்யமாக அமர்ந்து கொண்டார்.
“திங்க மட்டும்தான் வாய தொறக்கணும் சொல்லிட்டேன், உட்காருடா” சிதம்பரத்தின் இன்னொரு ஆளை மிரட்டி உட்கார வைத்த சேரன் மீண்டும் பரிமாற ஆரம்பித்தான்.
வீட்டுப் பெண்கள் எல்லாம் கீழேதான் இருந்தனர். பொதுவாக கறி விருந்து என்றாலே ஏதாவது சண்டை வம்பு வந்து சேரும் என்பதால் ஆண்கள்தான் பரிமாறுவார்கள்.
மதனின் மகள் நை நை என அழுது கொண்டே இருக்கிறாள் என சொல்லி கணவனை அழைத்து அவனிடம் குழந்தையை கொடுத்து விட்டாள் அர்ச்சனா. மதனை பரிமாற சொல்லி விட்டு நண்பனின் மகளை பெற்றுக் கொண்டான் செழியன்.
குழந்தை அவனது சட்டையை நனைக்க, “ஏட்டி எலிக் குட்டி! எப்போ மாமனுக்கு பன்னீர் தெளிக்கலாம்னு காத்து கெடந்தியா?” என செல்லமாக மிரட்டினான்.
“அதென்னடா எந்த புள்ளய நீ தூக்கினாலும் உன்னையவே குளிப்பாட்டி விடுதுவோ. தினம் குளிடான்னு சொன்னா பேச்ச கேக்குறியாடா நாறப்பயலே!” என கிண்டல் செய்தான் சேரன்.
“பச்ச புள்ளைய்வோ பன்னீர் தெளிக்க எல்லாம் ஒரு முக வெட்டு வேணும்டா, செழியன் சுழி அப்படி” என தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டான் செழியன்.
மதுரா, பூங்கொடி, சுகந்தி என சேரன் வீட்டு பெண்கள் மதிய உணவு முடியவுமே நடந்தே செல்கிறோம் என பிள்ளைகளோடு கிளம்பி விட்டனர்.
மொட்டை மாடியில் இருந்து எதேச்சையாக கீழே பார்த்த சேரன், “செத்த இருந்தா பைக்ல கொண்டாந்து விடுவேன், எதுக்குடி புள்ளயையும் தூக்கிட்டு வெயில்ல போற?” என சத்தமிட்டான்.
“மூனு பொம்பளைங்க இருக்கையில அக்காவுக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்றீயளே எந்த ஊரு நியாயம் அத்தான்?” என வம்பு செய்தாள் சுகந்தி. அவள் அப்படித்தான் சேரனுடன் நன்றாக வாயடிப்பாள்.
“நீயும் நில்லு, ஒருத்தர் ஒருத்தரா கொண்டாந்து வுடுறேன்” என சமாளிக்க பார்த்தான் சேரன்.
“அதெல்லாம் ஏத்துக்க முடியாது. தப்பு பண்ணிபுட்டீய, அதுக்கு தண்டனையா வாறப்போ நுங்கு வாங்கிட்டு வாங்க. இன்னிக்கு உங்க சம்சாரத்தை வெயில்ல காய வுடாம ஓய போறதில்ல நான்” என சொல்லி மதுராவின் கையை பிடித்திழுத்தாள்.
அவளின் இழுப்பில் மனைவியின் தோளில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் இரண்டரை வயது மகள் தீக்ஷிதா விழித்து விடுவாளோ என நெஞ்சில் கை வைத்து பதறினான் சேரன்.
“விடு சுகந்தி, வுட்டா அவன் மாடியிலேருந்து அப்படியே குதிச்சு வந்து பொண்டாட்டி புள்ளைய தலைல தூக்கி வச்சிக்குவான்” என தன் தோளில் உறங்கிக் கிடந்த சுகந்தியின் ஒன்றரை வயது மகனை தட்டிக் கொடுத்து கொண்டே கிண்டல் செய்தாள் பூங்கொடி. அவளின் பிள்ளைகள் பள்ளிக்கு சென்று விட்டனர்.
“வீட்ல வேலை கெடக்குங்க, நாங்க போயிக்குவோம்” என சொல்லி கணவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தாள் மதுரா.
சரி என தலையாட்டி மனைவிக்கு விடை கொடுத்தான் சேரன்.
வனராஜன் அவன் மனைவி, மகன், அம்மாவோடு அவனது புதுக் காரில் புறப்பட்டு சென்றான்.
செல்வியையும் தன் இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டு விட்டு வந்தான் செழியன்.
வாடகைக்கு எடுத்த பண்ட பாத்திரங்கள், நாற்காலி, மேசைகளை மீண்டும் அனுப்பி வைத்து விட்டு புறப்பட்டனர் சேரனும் செழியனும்.
இப்போதெல்லாம் கனகாவுக்கு சமைக்க முடிவதில்லை. பெரிய பையன் வீட்டிலிருந்து ஒரு நாள், சின்ன பையன் வீட்டிலிருந்து ஒரு நாள் என சாப்பாடு கொடுத்து அனுப்புகிறார்கள். மேலுக்கு முடியாமல் மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் மகன்கள் அழைத்து சென்று வந்தனர். கைச்செலவுக்கு பணத்திற்கும் குறையில்லை.
தன்னை பார்க்க வரும் மகளிடம் மருமகள்களை பற்றி குறை கூறினால் அம்மாவுக்குத்தான் அறிவுரை சொன்னாள் பூங்கொடி. தம்பிகளை பகைத்துக் கொள்ள தயாராக இல்லாதது மட்டும் காரணம் இல்லை. மதுரா மற்றும் சுகந்தியின் குணங்களை வைத்து தனிப்பட்ட முறையிலேயே அவளுக்கு அவர்களை பிடித்திருந்தது.
விஷேஷ நாட்களில் மட்டும் சுகந்தி கீழே வந்து பூஜை எல்லாம் செய்வாள். ஆனால் மதுரா அவளது வீட்டில்தான் பண்டிகைகளை கூட கொண்டாடினாள்.
மகன் வழி பேரப் பிள்ளைகளும் இவரோடு ஒட்டுவதில்லை. மேலோட்டமாக பார்த்தால் கனகாவுக்கு என்ன குறை எனதான் கேட்க தோன்றும். ஆனால் பணமும் மற்ற வசதிகளும் மட்டும் வாழ்க்கை இல்லையே. ஆகவே அவர் இழந்தது ஏராளம்.
வீடு செல்லும் வழியில் நுங்கு விற்றுக் கொண்டிருந்தவனை கையோடு அழைத்து சென்று விட்டான் சேரன்.
வீட்டின் முன் பக்கம் நுங்கு விற்பவன் கடை விரிக்க, அக்கா வீட்டினரையும் அழைத்து விட்டான் சேரன்.
கனகா தன் கையில்தான் யாராவது கொண்டு வந்து தர வேண்டும் என வீம்பாக உட்கார்ந்திருக்க சேரனே எடுத்துக் கொண்டு போய் கொடுத்தான்.
சண்டை நடந்து ஒரு வருடம் அம்மாவிடம் பேசாமல் இருந்த சேரன் அதற்கு பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தான். ஆனால் மதுரா சுத்தமாக பேச மாட்டாள்.
கந்தசாமி அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் மகன்களுக்கு பிரித்து கொடுத்து விட்டார். அவருக்கு முழு நேரமும் கட்சி பணிகள்தான்.
குத்தகைக்கு எடுத்த தென்னந்தோப்பை சொந்தமாக வாங்கி விட்டான் சேரன். இரண்டு சின்ன கார்களும் ஒரு வேனும் வாடகைக்கு ஓடுகின்றன.
நாத்தனாரின் பிள்ளைகளோடு சேர்த்து இன்னும் இருபது பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்கிறாள் மதுரா. வாடகைக்கு செல்லும் கார் எப்போது எங்கு செல்ல வேண்டும், டிரைவர்களின் சம்பளம், வங்கி கணக்கு வழக்குகள் என அவள்தான் பார்த்துக் கொள்கிறாள். நேரம் சரியாக இருக்கிறது அவளுக்கு.
பனை ஓலைகள் கொண்டு காற்றாடி தயாரித்தான் மோகன். வீடு வந்த கந்தசாமியும் சரவணனும் கூட காற்றாடி தயாரிப்பில் இணைந்து கொண்டனர்.
“உன் காட்டுல மழையா, அடிச்சு நொறுக்குற போல…” ஆசையாக நுங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த சுகந்தியை கிண்டல் செய்தான் சரவணன்.
“வேணும்னா நீயும் அடிச்சு நொறுக்குடா, தங்கச்சி மேல கண்ணு வைக்காத” என்றான் மோகன்.
நுங்கு விற்பவன் நன்றாக வியாபாரம் ஆனதில் கொள்ளை மகிழ்ச்சியோடு புறப்பட்டு சென்றான்.
பிள்ளைகள் பனை ஓலை காற்றாடி சுற்றி அந்த விளையாட்டிலேயே மூழ்கி விட்டனர்.
பாத்திரத்தில் இருந்த பதநீரை அப்படியே வைத்து விட்டு காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள் மதுரா.
வீட்டுக்குள் வந்த சேரன், “அப்படியே வச்சிட்டு போயிருக்க, புள்ளைங்க ஓடி வந்து தள்ளி விட்டா வேஸ்ட்டா போவாது, எங்குட்டுடீ போயிட்ட?” சத்தம் போட்டான்.
“மழை வர்றாப்ல இருந்ததுன்னு துணி எடுக்க போனேன், அதுக்குள்ள ஊர கூட்டாதீங்க” என சொல்லிக் கொண்டு கைகளிலும் தோள்களிலும் துணிகளோடு வந்தாள் மதுரா.
துணிகளை நாற்காலியில் அப்படியே போட்டவள் பாதி பதநீரை பருகி விட்டு அவனிடம் மீதத்தை கொடுத்து, முந்தானை கொண்டு வாய் துடைக்க போனாள்.
அவளை தடுத்தவன், “பவுனு மாதிரி விக்கிறான் பதநீரை. உன் சீலத்துணி குடிக்கத்தான் வாங்கி கொடுத்தேனா?” எனக் கேட்டு அவளை நெருங்கினான்.
சாவகாசமாக அவளிடமிருந்து விலகியவன், “இன்னும் கொஞ்சம் குடிக்கிறியா?” எனக் கேட்டு பாத்திரத்தை அவளிடம் நீட்டி குறும்பாக சிரித்தான்.
முறைத்துக் கொண்டே வேண்டாம் என அவள் மறுக்க, அவன் வற்புறுத்தி குடிக்க வைக்க போக, அவளின் கன்னத்தில் மீது சிந்தியது பதநீர்.
“ச்சே… தள்ளுங்க…” என சொல்லிக் கொண்டே கன்னம், கழுத்து என பிசு பிசுத்த பதநீரை துடைக்க போனாள். அவளின் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டவன் பார்த்த பார்வையில் பொய்யாக பயந்து உள்ளே ஓடினாள் மதுரா.
அவளின் பின்னால் ஓடிச் சென்ற சேரன் வேகமாக கதவை அடைத்தான்.
சேரனும் மதுராவும் குறையாத அன்பையும் தினம் தினம் பெருகும் காதலையும் கொண்டு ஒருவரை ஒருவர் ஆட்சி செய்கின்றனர். இவர்களின் வாழ்வு சிறக்கட்டும்!