செழியன் வெளியே செல்ல எத்தனிக்க, மோகன் அழைப்பதாக மதனும் வந்து சொன்னான்.
மதுராவிடம், “இரு வந்திடுறேன்” என சொல்லி வெளியேறினான் சேரன்.
வனராஜனிடம் அடி வாங்கியதில் சேரன் உள்ளுக்குள் உறுமிக் கொண்டிருக்கிறான் என்பதை மோகனால் புரிந்து கொள்ள முடிந்தது. வெளியே வந்த சேரனை அவனது நண்பர்கள் மற்றும் தம்பியோடு தள்ளி அழைத்து சென்றான் மோகன்.
மோகன் வீட்டு மாப்பிள்ளையாகி பத்து வருடங்கள் ஆகின்றன. மிகுந்த பொறுப்பு, எதையும் அலசி ஆராய்ந்து முடிவுகள் எடுப்பவன். ஆகவே தன் மகனுக்கு நல்ல விதமாக அறிவுரை சொல்லத்தான் அழைத்து செல்கிறான் என்பது புரிந்து வீட்டுக்குள் சென்றார் கந்தசாமி.
மதுரா இன்னும் யாரோ போல கூடத்தின் ஓரம் நின்றிருக்க, “என்னம்மா இப்படியே நிக்குற? பூங்கொடி எங்க? ஆயி ஆயி பூங்கொடி…” மருமகளிடம் கேள்வி கேட்டு மகளை அழைத்தார்.
அவள் வெளியே வருவதாக காணோம் என்றதும் இன்னொரு முறை அவர் அவளை அழைக்க, “அவ பேரை ஏலம் போடாம சும்மா இருங்க” என்றார் கனகா.
“ஏட்டி இந்தூட்டுல என்ன ஏதுன்னு என்னடி தெரியும் ஆயிக்கு? நீதான் காளியாத்தா வேஷம் போட்டு நிக்கிறேன்னு பார்த்தா பூங்கொடிக்கு என்னாச்சு? பூங்கொடி…”
அதே சமயம் வனராஜனிடம் ஏதும் வம்புக்கு சென்று விடக்கூடாது என சேரனிடம் கண்டிப்போடு அறிவுறுத்திக் கொண்டிருந்தான் மோகன். சேரன் பதில் சொல்லாமல் இருக்க அவனது நண்பர்களும் சரவணனும்தான் ‘அதெப்படி அப்படியே விட முடியும்?’ என எகிறிக் கொண்டிருந்தனர்.
“எல்லாத்துக்கும் பதிலுக்கு பதில்னா இதுக்கு முடிவே கிடையாது. யாராவது ஒரு தரப்புல ஒரு முறை விட்டுக் கொடுத்துதான் ஆகணும். இந்த முறை நாமளா இருப்போம். என் வார்த்தைக்கு மரியாத இருக்குன்னா யாரும் ஏதும் செய்யக் கூடாது, சொல்லிப்புட்டேன்” என்ற மோகன் அதற்கு மேல் அங்கு நில்லாமல் வீட்டுக்கு சென்றான்.
சேரன் அவனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்க, வீடு வந்த மோகன் மாமியார் மதுராவை கண்டு கொள்ளாமல் இருப்பது பார்த்து கோவம் கொண்டான்.
“எங்குட்டு போனா மாமா உங்க பொண்ணு? பூங்கொடி…” என மோகனும் மனைவியை அழைக்க வெளியில் வந்தால்தானே அவள்.
மனைவியை அழைக்க மோகன் அறைக்கு செல்லப் போக அவனை தடுத்த கந்தசாமி, “சேரனை வர சொல்லுங்க மாப்ள” என்றார்.
மோகனுக்கும் அதுவே சரியென பட வெளியே வந்து, “போதும்டா உங்க சதி ஆலோசனை. வயசு ஏற ஏற பொறுப்பு கூடணும், பக்குவமா நடக்கணும். ஆவுறத பாருங்க” என பொதுவாக சொல்லி, “வீட்டுக்கு வந்த பொண்ணு கண்ண கட்டி காட்டுல விட்ட கணக்கா நிக்குது, அந்த புள்ளைய போய் பாருடா மொத” என சேரனிடம் சொல்ல ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு விரைந்தான் அவன்.
“பாத்துடா மாப்ள… வேட்டி தடுக்கி குப்புற வுழுந்திட போற, பொறவு மண்டிக்கா போட தெரியாத எம் மவன புடிச்சு தள்ளிட்டியேன்னு அத்த சண்டைக்கு வந்தா என்னால மல்லுக்கு நிக்க முடியாது” கிண்டலாக சொன்ன செழியனை மோகன் முறைக்க நண்பனின் புரடியில் அடித்து அவனை அடக்கினான் மதன்.
“மருமவள கவனிக்காம அங்குட்டு என்னத்தடா செஞ்சிட்டு கெடக்க?” என உள்ளே வந்த மகனை கந்தசாமி அதட்ட, இயலாத கோவத்தோடு அம்மாவை பார்த்த சேரன் மனைவியை அழைத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றான்.
மதுராவுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெளிப்பட, ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டவன், “எல்லாம் முடிஞ்சு போச்சுடி, என் கூட வந்திட்ட நீ, இனிமேட்டு அழக் கூடாது” என்றான்.
“என்னத்த முடிஞ்சது? உங்கம்மா அக்கா எல்லாம் என்னை விரோதி மாதிரி பார்க்கிறாங்க. என்னென்ன கேட்டுட்டாங்க உங்கம்மா?” அழுகையை நிறுத்தாமலே கேட்டாள்.
“தப்புதான் மதுரா, இப்பகோவமா இருக்க அம்மாகிட்ட என்ன பேசியும் புரிய வைக்க முடியாது, நான் பொறுமையா பேசி சொல்லிக்கிறேன். மனசுல வச்சுக்காத” என்றவன் கப்போர்ட்டில் இருந்து பை ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
“இதுல உனக்கு தேவையானது எல்லாம் இருக்கு, குளிக்கிறியா இல்லை சாப்பிடுறியா?” எனக் கேட்டான்.
“இதெல்லாம் எப்ப வாங்குனீங்க?”
“திடீர்னா உன்னை அழைச்சிட்டு வந்தேன். பிளான் பண்ணித்தானே எல்லாம் செஞ்சேன். வந்த பொறவு தேவ படும்னு முன்கூட்டியே வாங்கி வச்சேன்” என்றான்.
தேவையானவை எடுத்தவள், “சரியான போக்கிரி நீங்க? இவ்ளோ கரெக்ட் அளவுல எப்படி வாங்குனீங்க?” வெட்கமாக இருந்தாலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டாள்.
ஒரு நடிகையின் பெயரை சொன்னவன், “அந்த மாதிரிதான் என் பொண்டாட்டி இருப்பா தங்கச்சி, நீயே பார்த்து எடுத்துக் கொடுன்னு கடைக்கார புள்ளகிட்ட கேட்டேன். சரியா இருக்கா எல்லாம்?” எனக் கேட்டான்.
“ஓ அவ்ளோ தூரம் சைட் அடிச்சிருக்கீங்களோ அவள?”
“புருஷன் யாரையும் பார்க்க கூடாதுன்னு அக்கறை இருக்கிறவ என்னை வுட்டுட்டு போயிருக்க கூடாதுன்ன?” என்றவனை அவள் முறைக்க, “என்னடி இப்போ? இனிமே ஹீரோயினே இல்லாத படமா பார்க்கிறேன்” என சமாதானம் செய்தான்.
புன்னகையோடு அவனை கூர்ந்து பார்த்தவளுக்கு வனராஜன் அவனது கன்னத்தில் அடித்திருந்த தடம் தெரிய, “அண்ணனுக்காக சாரிங்க” என்றாள்.
அவனது முகம் இறுக்கமாக மாறியது.
“கொஞ்ச நாள் இப்படி கோவமா இருக்கும், நீங்க வேணா பார்த்திட்டே இருங்க, சீக்கிரம் மனசு மாறி நம்மள ஏத்துக்கும்” என்றாள்.
“எப்படி எப்படி ஊர் முன்னாடி என் கன்னத்துல அடிப்பான், உனக்கு நான் மொத கட்டின தாலிய மிரட்டி கழட்ட வச்சதே அவன்தான். இனி அவன் மனசு மாறி வருவான், நான் ஈஈ ன்னு பல்லு காட்டி பேசணுமோ அவன்கிட்ட. இந்த நெனப்ப அடியோட மறந்திடு மதுரா. சாவுற வரைக்கும் உனக்கு நான்தான் நான் மட்டும்தான் உறவு” என கடினமான குரலில் சொன்னான்.
அவளின் முகம் வாடிப் போக, “ப்ச்… வா பாத்ரூம் காட்டுறேன், குளிச்சிட்டே வா, அப்பதான் தெம்பா இருக்கும்” என்றவன் தேவையானவை மட்டும் எடுத்துக் கொள்ள சொல்லி அழைத்து சென்றான்.
பின் கட்டு வாசலில் அமர்ந்திருந்த கனகா இன்னும் எழுந்திருக்கவில்லை. இவர்களை கண்டதும் முகம் சுளித்து திரும்பிக் கொண்டாரே தவிர அசையவில்லை.
“வழி விடும்மா” என சேரன் கேட்டும் அசைவதாக தெரியவில்லை.
மதுரா கலக்கமாக கணவனை பார்க்க, “இப்படிலாம் பண்ணினா… ப்ச்… என்ன செய்யணும்னு நினைக்கிற நான்? எழும்பு மா” கொஞ்சம் அதட்டலாக சொல்லவும் விருட் என எழுந்தவர் வேகமாக கூடம் சென்று விட்டார்.
மதுரா குளியலறை சென்று விட அவள் அறைக்கு திரும்பிய பின் சேரனும் குளித்து வந்தான். வீட்டில் அடுப்பே எரியவில்லை அன்று. மதன் அனைவருக்கும் உணவு வாங்கி வந்திருந்தான். மோகன் தன் மனைவியை திட்டி அழைத்து அனைவருக்கும் பரிமாற செய்தான்.
மதுராவுக்கான உணவை அறைக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டான் சேரன்.
கை கழுவ, ஓய்வறை செல்ல என அவள் வெளியே வரும் போதெல்லாம் வன்மமாக பார்க்கும் கனகாவையும் முகத்தை திருப்பிக் கொள்ளும் பூங்கொடியையும் எதிர்கொள்ள முடியவில்லை அவளால். முதல் முறை அவள் அறையிலிருந்து வரும் போது சேரன் அவளுடன் சேர்ந்து நடக்க என இருக்க அதற்கும் திட்டினார் கனகா.
அம்மாவை மேலும் மேலும் தூண்டி விட வேண்டாம் என கருதிய சேரனும் அவளருகில் செல்லாமல் இருக்க, அங்கு இருக்கவே அவளுக்கு பிடிக்கவில்லை.
ஒரு வேளை சேரனுடைய அப்பாவிடம் சொல்லி முறையாக திருமணம் நடந்திருந்தால் தனக்கும் அவப் பெயர் வந்திருக்காது, கனகாவும் இத்தனை கோவத்தை தன்னிடம் காட்ட மாட்டார் என்ற எண்ணம்தான் எழுந்தது.
சேரனுக்கும் சோர்வுதான், எட்டு ஊர்கள் இணைந்து நடத்தும் கோயில் திருவிழா, இவன் வேறு கவுன்சிலர், தோப்பு, வயல் என விவசாய வேலைகள் எனவும் இருந்தன.
இன்று ஒரு நாளாவது தம்பியிடமோ அப்பாவிடமோ சொல்லி விட்டு வீட்டிலேயே இருக்கலாம், அவர்களாக எதுவும் சொல்லாமல் போக அவனும் தயங்கி கேட்கவில்லை. எனவே மதிய உணவுக்கு பின் மதுராவை உறங்கி ஓய்வெடுக்க சொல்லி விட்டு அவன் வெளியில் கிளம்பி விட்டான்.
இரவெல்லாம் தூங்கியிருக்கவில்லை மதுரா, அப்போதும் இந்த நொடி கண்களை மூடினால் பலவித சிந்தனைகள். உடலும் மனமும் அயர்ந்து கிடக்க உறக்கம் என்பதே வரவில்லை.
ஏதோ சிறைக்குள் இருக்கும் உணர்வை தந்தது அவளுக்கு. இரவு எட்டரை மணிக்குத்தான் அறைக்கு வந்தான் சேரன். மதியம் ஒரு முறை ஓய்வறை சென்றிருந்தவள் அதற்கு பின் வெளியில் செல்ல பிடிக்காமல் செல்லவே இல்லை.
அவனை கண்டதும் எழுந்து கொண்டவள் விஷயத்தை சொல்ல, “பைத்தியமாடி உனக்கு? எவ்ளோ நேரமா இப்படி… வா மொத வெளில வா” என சொல்லி அவளது கைப்பிடித்து வெளியில் அழைத்து சென்றான்.
சமையலறை கடக்கும் போது ஏதோ பாத்திரத்தை டங் என வைத்து தன் கோவத்தை வெளிப்படுத்தினார் கனகா. மதுரா கணவனை முறைப்பாக பார்க்க கண்களால் கெஞ்சியவன் அவளை போக சொன்னான்.
அவள் ஓய்வறை சென்றதும் அம்மாவிடம், “செய்றது ஏதும் சரி கிடையாதும்மா, வந்த மொத நாளே அவளை எந்த தூரம் பயமுறுத்தி வச்சிருக்க நீ, பாத்ரூம் கூட போகாம ரூமுக்குள்ள அடைஞ்சு கெடந்திருக்கா, மனசாட்சியே கிடையாதாம்மா உனக்கு?” என கடிந்தான்.
அதுதான் சாக்கென மூடியிருந்த வாயை திறந்து கொண்டார் கனகா. ஏன் தான் அம்மாவிடம் கேள்வி கேட்டோம் என தன்னைத்தான் சேரன் நொந்து கொள்ள வேண்டியதாக இருந்தது.