அத்தியாயம் -4(2)

சிதம்பரத்தின் பேச்சை கேட்டுக் கொண்டு மதுராவுக்கு சற்றும் பொருந்தாத வரனை கொண்டு வந்தார் சிவபுண்ணியம். அவளை விட பதினைந்து வயது மூத்தவன், முன்தலை வேறு ஏறியிருந்தது. அஞ்சலையும் வனராஜாவும் எதிர்ப்பு தெரிவிக்க தற்கொலை நாடகம் நடத்தி அவர்கள் இருவரையும் கூட பேச விடாமல் செய்து விட்டார்.

உங்களை மீறி சேரனை மணமுடிக்க மாட்டேன், இப்படியே வீட்டில் இருந்து விடுகிறேன், வேறு யாரையும் எனக்கு மாப்பிள்ளை ஆக்காதீர்கள் என மதுரா கெஞ்சி அழுததை சட்டை செய்யவே இல்லை அவளின் தந்தை. மிரட்டி உருட்டி திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

இங்கு இருந்தால்தானே திருமணம் நடக்கும், சென்னைக்கு சித்தி வீட்டுக்கு சென்று விடுவோம் என நினைத்த மதுரா வீட்டினருக்கு தெரியாமல் செயல் படுத்த ஆரம்பித்தாள். தான் சென்ற பிறகு தன்னை காணாமல் கலவரம் உண்டாகும், அதற்கும் சேரனிடம் போய்தான் நிற்பார்கள் என்பதால் தனம் அக்காவிடம் மட்டும் விஷயத்தை சொல்லியிருந்தாள்.

தனத்துக்கு மனம் கேட்கவில்லை, மதனுக்கு தெரியப்படுத்தி விட அவன் மூலமாக சேரனுக்கும் விஷயம் தெரிந்து போனது.

விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் இரயில் நிலையம் சென்ற மதுரா அங்கு சேரனை எதிர்பார்த்திருக்கவில்லை.

அவளருகில் வந்தவனின் கையை பிடித்துக்கொண்டு அழுதவளுக்கு பேச்சே வரவில்லை.

“நல்ல முடிவுதான்டி, நான் எக்கேடு கெட்டாலும் என்ன கவலைனு கிளம்பிட்டீன?”

“கொஞ்சம் பொறுமையா இருக்க வேண்டியதுதானே நீங்க? எதுக்காக அண்ணனை அடிச்சீங்க?” எனக் கேட்டாள்.

“அவன் யார் யாரையெல்லாம் எங்க வச்சு அடிச்சான்னு தெரியாதா உனக்கு?”

“அண்ணன் செஞ்சது சரின்னு சொல்லலை, அடிக்கு அடின்னு ஏன் நிக்கிறீங்க? நாளைக்கு சொந்த பந்தம் ஆக போறீங்க, உங்களுக்கு மனைவியா வரப் போறவளோட அண்ணன், கொஞ்சம் யோசிச்சு கோவத்தை கட்டுப் படுத்தியிருக்கலாம்தானே? என் அண்ணன் பண்ணின தப்புக்கு உங்கப்பா வச்சு பெரியவங்ககிட்ட பேசியிருக்கலாம்தானே? என் அண்ணனை நீங்க பதிலுக்கு அடிக்க போய்தான் அம்மா, அண்ணன் எல்லாம் என் பேச்சை காது கொடுத்து கேட்க மாட்டேங்குறாங்க”

“இல்லாட்டா மட்டும் உன் அப்பாவை மீறி என் கூட கல்யாணம் பண்ணி வச்சிடுவாய்ங்களாக்கும்? ப்ச்… வள வளன்னு பேசாத, எங்கூட வர்றியா என்ன இப்போ?”

“சொல்றத கேட்க மாட்டீங்களா? கொஞ்ச நாள் போகட்டுங்க. சித்தி சித்தப்பா விட்டு பேச சொல்றேன் வீட்ல” தன்மையாக சொன்னாள்.

சேரனுக்கு அப்படி பேச்சு வார்த்தை எல்லாம் சரியாக வரும் என தோன்றவில்லை. தன்னை தவிர அவள் யாரையும் மணக்க மாட்டாள் என தெரியும். அவளின் சித்தி பற்றி கூட நம்பிக்கையாக சொல்ல முடியாதே. இவளது விருப்பம் மீறி திருமண ஏற்பாடு நடக்க போய் அசம்பாவிதமாக இவள் ஏதும் செய்து கொள்வாளோ என்ற பயம் அவனுக்கு.

“யார் பேசினாலும் உன் வீட்டாளுங்க மாற மாட்டாங்க. நாம கல்யாணம் பண்ணிப்போம், இப்பவே” என்றவனை சம்மதமில்லாத பார்வை பார்த்து வைத்தாள்.

“உன்னை விடுறதா இல்ல மதுரா, மரியாதைக்கு என்னோட வா, இல்லாட்டி தூக்கிட்டு போவேன்” என்றவன் நிஜமாகவே தூக்க வந்தான்.

அவன் கைகளை பிடித்து தடுத்தவள் இப்படி யாருக்கும் தெரியாமல் திருமணம் வேண்டாம் என கெஞ்சிப் பார்த்தாள். விடாப்படியாக நின்றவன் அவளைத்தான் அவனது வழிக்கு கொண்டு வந்தான்.

‘மதுரா விருப்ப பட்டு வந்தால் மட்டும் போதும், நான் திருமணம் நடத்தி வைக்கிறேன்’ என கந்தசாமி சொல்லியிருந்தும் அப்பாவுக்கு அழைக்கவில்லை சேரன். அதற்கெல்லாம் நேரம் இல்லை அவனிடம். அவளின் வீட்டினருக்கு தெரியும் முன் திருமணத்தை நடத்திக் கொண்டு விட வேண்டும் என மட்டுமே எண்ணினான்.

“என்னத்தடா காலை பூசை போட போறீய? எந்த வம்பு தும்புலேயும் என்னை இழுத்து வுட்ராதீயடா, நான் எங்குட்டும் வரலடா” கெஞ்சிய கோயில் பூசாரியின் காலில் விழாத குறைக்கு கெஞ்சியும் கொஞ்சம் போல மிரட்டியும் கோயிலுக்கு அழைத்து வந்து விட்டனர் சேரனின் நண்பர்கள்.

ஊர்க் கோயிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் மதுராவுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டான் சேரன்.

கிராமத்தில் அதிகாலை நேரத்தில் கூட ஆள் நடமாட்டம் இருக்கும்தானே? சற்று நேரத்துக்கு எல்லாம் விஷயம் காட்டுத் தீ போல சுற்று வட்டார ஊர்களில் பரவியது. இரு குடும்பங்களுக்கும் பெரும் பிரச்சனை ஆகிப் போனது.

பஞ்சாயத்தில் மதுராவை சேரனோடு அனுப்பி வைத்து விடுவார்கள் என்பதால் சிதம்பரத்தின் தூண்டுதலின் பெயரில் அளவாக பூச்சி மருந்தை அருந்தி விட்டார் சிவபுண்ணியம்.

ஏற்கனவே சர்க்கரை நோயாளி, லேசான இரத்தக் கொதிப்பும் உண்டு. ஆகையால் அவர் நினைத்தது போல இந்த முறை நடக்கவில்லை. கோமா நிலைக்கு சென்று விட்டார்.

சிதம்பரம், கந்தசாமி இருவர் சார்ந்திருந்த கட்சி ஆட்கள் அவர்களுக்கு துணையாக நின்றனர். சேரனுக்கு எதிராக வனராஜாவையும் தூண்டி விட்டார் சிதம்பரம். ஏற்கனவே சேரன் மீது வெஞ்சினத்தில் இருந்தவனுக்கு தலை கால் புரியாத நிலை.

பஞ்சாயத்தார் விசாரிக்கும் முன்னரே கை கலப்பாகி விட்டது. அண்ணனை அடிக்கும் முன் யோசித்திருக்கலாம்தானே என மதுரா கூறியது சேரனின் நினைவில் இருக்க வனராஜனை தாக்காமல் இருந்தான் சேரன். ஆனால் அவனோ சேரனின் தலையில் அடித்து விட்டான்.

சமாளித்து நின்ற சேரன் வனராஜனை கீழே தள்ளி அவன் நெஞ்சை மிதித்தான். திடீரென சிதம்பரத்தின் ஆள் ஒருவன் சேரனின் காலில் அரிவாள் கொண்டு வெட்டி விட்டான்.

தன்னிலை மறந்த வனராஜன் கீழே சாய்ந்து கிடந்த சேரனை வெட்ட போக ஓடி வந்து தடுத்தாள் மதுரா. அண்ணனிடம் அவள் போராடியும் கூட சேரனின் நெற்றியில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

போலீஸ் வந்துதான் கலவரத்தை அடக்கினார்கள். சில மணி நேரங்களில் என்னென்னவோ நடந்து போனது. சேரன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டான். தங்கையை தன் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று விட்டான் வனராஜன்.

“எனக்கு ஒண்ணுமில்ல, அவளை எப்படியாவது நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திடுங்க ப்பா” என கெஞ்சிய மகனின் வேண்டுகோளை கந்தசாமியால் நிராகரிக்க முடியவில்லை.

வீட்டுப் பெண்கள் சேரனுடன் மருத்துவமனையில் இருக்க, பூங்கொடியின் கணவன் மோகனை துணைக்கு வைத்து விட்டு ஊர்ப் பெரியவர்களோடு மதுராவின் வீட்டுக்கு சென்றார் கந்தசாமி.

அப்பாவின் நிலை, தங்கை ஓடி சென்றது, சேரன் தாக்கியது, பெரியப்பாவின் கெட்ட உபதேசம் என எல்லாம் சேர்ந்து வனராஜனை மிருகமாக மாற்றியிருந்தது.

அவனது அப்பாவை போலவே எதையாவது சொல்லி தங்கையை மிரட்டி பயமுறுத்தி அவளை தன் சொல்லுக்கு பணிய வைப்பதென முடிவெடுத்தான்.

“தாலியை கழட்டி தூக்கி எறிஞ்சிட்டு என் தங்கச்சியா வீட்டுக்குள்ள வரலை… உனக்கு தாலி கட்டினவன் கழுத்தை அறுத்து போட்ருவேன்” என மிரட்டல் விடுத்தான்.

தலையிலிருந்தும் காலில் இருந்தும் இரத்தம் வழிய சேரனை காரில் ஏற்றிய காட்சி மதுராவின் அடி வயிற்றை கலங்க செய்தது. அண்ணனின் கோவம் தணிந்தால் கூட எதற்கும் துணிந்த பெரியப்பாவை எண்ணி நடுக்கம் கொண்டாள்.

சிவபுண்ணியம் உயிர் பிழைப்பது அரிது என சொல்லி விட்டார்கள். அதற்கு மகள்தான் காரணம் என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார் அஞ்சலை. மதுராவுக்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலை.

ஊர்ப் பெரியவர்களோடு கந்தசாமி வந்து நிற்கையில் தன் விருப்பமின்றி கட்டாயமாகத்தான் இந்த திருமணம் நடைபெற்றது எனக் கூறினாள் மதுரா.

திகைத்து போனாலும், “எம் மருமவள மிரட்டிதான் இப்படி சொல்ல வைக்கிறாங்க” என்றார் கந்தசாமி.

சிதம்பரத்தின் மிரட்டலுக்கு பயந்து போன பூசாரியும் ஆமாம் வலுக்கட்டாயமாகத்தான் சேரன் மதுராவுக்கு தாலி கட்டினான் என சாட்சி கூறினார்.

கடுமையான பார்வையோடு தங்கையின் அருகில் சென்ற வனராஜன் கண்டிப்போடு ஏதோ சொல்ல, மனதை இரும்பாக்கிக் கொண்டு தாலியை கழட்டி கொடுத்து விட்டாள் மதுரா.

இதையெல்லாம் எதிர்பார்க்காத கந்தசாமி மொத்தமாக அதிர்ந்து போனார்.

“பொம்பள புள்ள விஷயம்னு போலீஸ் கேஸ் ஆக்காம விடுறோம், இல்லன்னா நடக்கிறதே வேற” என மிரட்டினார் சிதம்பரம்.

சேரன் மீது வழக்கெல்லாம் பதிவு செய்ய வேண்டாம், இந்த திருமணம் செல்லாது என பஞ்சாயாத்து பேசி முடித்து வைத்தனர் இரண்டு ஊர் பெரியவர்களும்.

அதற்கு பின் கந்தசாமியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

விஷயம் அறிந்து துடித்து போய் விட்டார் கனகாம்புசம். அனைத்தையும் விட்டு விட்டார், என் மகன் கட்டிய தாலியை அவன் உயிரோடு இருக்கும் போது எப்படி அவள் கழட்டி தரலாம் என மதுரா மீதுதான் அவருக்கு பயங்கர ஆத்திரம்.

நான்கு நாட்களில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார் சிவபுண்ணியம். அவரது இறுதி சடங்குக்கு வந்தவர்கள் அனைவரும் அவரின் மரணத்துக்கு மதுராதான் காரணம் என குற்றம் சுமத்தும் பார்வையோடு அவளை பார்த்தனர்.

காரியம் முடிந்த பின் மதுராவை தன்னோடு சென்னைக்கு அழைத்து சென்று விட்டார் அவளின் சித்தி.

சேரனின் காலில் ஆழமான வெட்டுக் காயம், துரு பிடித்த ஆயுதம் கொண்டு காயப்படுத்தியிருக்க அவனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. மேற்சிகிச்சைக்காக திருச்சி அழைத்து சென்றனர். ஒரு மாதம் வரை மருத்துவமனையில்தான் இருந்தான்.

மீண்டும் அவன் ஊருக்கு வரும் போது மதுரா சென்னை சென்றிருந்தாள்.

“இனிமேட்டு உனக்கும் மதுராவுக்கும் சம்பந்தம் இல்லயாம்டா, உன்னை பேச வேணாம்னு சொல்லிபுட்டா, போன் நம்பர் கூட மாத்திப்புட்டா போலடா” என தகவல் தந்தான் மதன்.

சேரனுக்குமே அவளின் மீது கோவம், அவளின் பக்கம் புரியாமல் தன் தந்தையையும் தன்னையும் அவமதித்து விட்டதாக நினைத்தான்.

சேரனின் கோவம் கொஞ்சமாகவேணும் குறைய சில மாதங்கள் ஆகின. அடுத்து என்ன என அவர்களின் வாழ்க்கை பற்றி அவன் சிந்திக்க ஆரம்பித்த சமயத்தில் பி ஜி படிக்க கல்லூரியில் சேர்ந்து விட்டாள் மதுரா.

தன் வீட்டினர் அனைத்தையும் மறந்து உடனே மதுராவை ஏற்பது சுலபம் இல்லை என்பது சேரனுக்கு புரிய அவளின் படிப்பு முடியட்டும் என காத்திருக்க ஆரம்பித்தான்.

தன்னை விட்டு முற்றும் முழுதாக விலகி சென்று விட்டான் சேரன் என தவறாக எண்ணிக் கொண்டாள் மதுரா.