அத்தியாயம் -3(2)
அவனோடு மீண்டும் சேர அத்தனை ஆசை, ஆனால் அதை மீறிய அளவில் அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ என்ற பயம். மதுராவால் சுத்தமாக படிப்பில் கவனம் வைக்க முடியவில்லை. நீ எனக்கு எந்த உறவுமில்லை என சொல்லி விட்டு தானாக அவனுக்கு அழைக்கவும் தயக்கம். நான்கு நாட்கள் கழித்து அவனாகத்தான் அழைத்து பேசினான்.
“உம்மேல அம்புட்டு கோவத்துலதான் இருக்கேன்டி. பரீட்சைல கோட்டை விட்ருவியோன்னு பாவம் பார்த்து நானா பேசுறேன்” கொஞ்சமாக இறங்கி வந்தான்.
அவனே அழைத்து பேசியதில் அவளுக்கு அத்தனை ஆனந்தம். மன்னிப்பு கேட்டாள்.
“வேற எத பத்தியும் ரோசனை செய்யாம படி. பெயில் ஆகி தொலைஞ்சிடாதடி, இதுக்கு மேல அங்குட்டே உட்கார்ந்து நீ படிச்சிட்டு கெடந்தா நம்ம வம்சம் வெளங்கின மாதிரிதான்”
“அதெல்லாம் நான் நல்லா எழுதுவேன். உங்கள மாதிரி கிடையாது நான், டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணுவேன்”
“ம்ம்… பாக்குறேன்” என்றவன் இன்னும் சில நிமிடங்கள் நக்கலும் நையாண்டியுமாக பேசி விட்டு வைத்தான். அவளது தேர்வுகள் தொடங்கிய பின்னர் கூட தினமும் இரண்டு நிமிடங்கள் அனுசரணையாக பேசுவான்.
மதுராவும் சிறப்பாகவே தேர்வுகளை எழுதி முடித்து விட்டாள்.
“இந்த முறை எதுவும் அவசர பட்டு செஞ்சிடாதீங்க, பொறுமையா செய்யலாம். சமயம் பார்த்து அம்மாகிட்ட பேசுறேன் நான்” என சேரனிடம் அலைபேசி வாயிலாக சொல்லி விட்டுத்தான் இரயிலில் ஊருக்கு புறப்பட்டாள்.
சிறு தேங்காய்களாக இருப்பவற்றையும் சற்றே லேசாக உடைந்த தேங்காய்களையும் விற்பனைக்கு கொடுக்காமல் கொப்பரையாக்கி காய வைத்து எண்ணெய் ஆட்டி வைத்துக்கொள்வது அங்கு வழக்கம்.
அப்படி தேங்காய் கொப்பரைகளை வீட்டின் முன் இருந்த இடத்தில் பெரிய படுதா ஒன்றில் கொட்டி பரப்பி வைத்தான் சேரன்.
“மாடில போட வேண்டியதுதானேடா?” முறத்தில் வறுத்த நிலக்கடலையின் தோல் உரித்து புடைத்துக் கொண்டே கேட்டார் கனகாம்புசம்.
“மழை வந்தா உன்னால ஓடிப் போய் எடுக்க முடியுமா? யாரையாவது கூப்பிடணும்ன? நீ வேகமா சமைச்சு முடிச்சிட்டு திண்ணைல வந்து உட்கார்ந்து பார்த்துக்க” என்றான்.
“எனக்கு வேலை ஏவுறதுலேயே இருடா” பேசிக் கொண்டே கனகா புடைக்க சேரனின் கண்ணில் தூசு வந்து விழுந்து விட்டது.
“அட ஏம்மா காலங்காத்தால உசுர வாங்குற” அம்மாவை திட்டிக் கொண்டே கண்ணை கசக்கினான்.
கனகா வந்து அவனது கண்ணை திறக்க சொல்லி ஆராய்ந்து கொண்டே, “கோட்டூர் பொண்ணு போட்டோவ உன் அக்கா செல்லுக்கு அனுப்பியிருக்காவோ, உனக்கு அனுப்ப சொல்லியிருந்தேன், பாத்தியா என்னடா?” எனக் கேட்டார்.
அம்மாவின் கையை பட்டென தட்டி விட்டவன், “எம்மனசு புரிஞ்சும் எப்படிம்மா இப்படி நடக்க முடியுது உன்னால? தூசு உறுத்தினா உறுத்திட்டு போவுது, விடு பார்த்துக்கிறேன்” என சொல்லி பைக் எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டான்.
மதுரா வந்து கொண்டிருந்த இரயில் அவள் இறங்கும் ஸ்டேஷனுக்கு இரண்டு ஸ்டேஷன்களுக்கு முன்னால் நிற்க அவளிருந்த பெட்டியில் ஏறிய சேரன், “வேகமா இறங்கு” என்றான்.
அவள் விழிக்க, “பேசணும் இறங்கு” என அதட்டினான்.
“என்னை கூப்பிட ஸ்டேஷனுக்கு அண்ணன் வரும், நான் இல்லைனா பிரச்சனை ஆகும், போன்ல பேசுங்க” என்றவள் இறங்க மறுத்தாள்.
“நேர்லதான் பேசணும்” என்றவன் அவளது லக்கேஜை எடுத்துக் கொண்டு அவளை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து இறங்கினான்.
அவளும் இறங்கிக் கொள்ள இரயில் புறப்பட்டு சென்றது. அவள் தவிப்பும் பயமுமாக பார்த்திருக்க, “உன் அண்ணன் ஊர்ல இல்ல, உன்னை அழைச்சிட்டு வர சொல்லி மதனோட அத்தான்கிட்டதான் சொல்லியிருக்கான். ட்ரெயின் லேட்னு ஏதாவது காரணம் சொல்லிகிடுவார் அவர், கொஞ்ச நேரம் உன்னை தேட மாட்டாங்க யாரும்” என அவன் சொல்லவும் சற்றே ஆசுவாசம் அடைந்தாள்.
அந்த ஸ்டேஷன் ஆள் அரவம் இன்றி வெறிச்சோடி காணப் பட்டது. சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவன் அவளையும் அமர வைத்தான்.
அப்போதுதான் அவனது சிவந்த கண்ணை கண்டவள் என்னவென விசாரித்தாள். தூசு விழுந்து விட்டதாக சொன்னவன் கண்ணை கசக்க, “கையை எடுங்க, நான் பார்க்கிறேன்” என சொல்லி அவனை நெருங்கி அமர்ந்து ஆராய்ந்தாள்.
“விட்றீ, ரொம்பவும் அக்கறைதான்”
“பேசாம இருங்க, தூசு இருக்கு” என்றவள் சுடிதார் துப்பட்டா கொண்டு தூசு எடுத்து விட்டாள்.
கண்ணின் உறுத்தல் அகலவும் இலகுவாக உணர்ந்தவன், “எங்கண்ண சரி பண்ணிட்ட, என்னை எப்ப சரி பண்ணுவ?” எனக் கேட்டான்.
அவனிடமிருந்து அவள் நகர்ந்து அமரவும், “போ போ இன்னும் எத்தன நாளைக்கு இப்படின்னு பார்க்கிறேன். எனக்கொரு பதில சொல்லு, என்ன முடிவுல இருக்க நீ?” எனக் கேட்டான்.
“அதான் முன்னாடியே போன்ல சொன்னேனே?”
“அந்த பொறுமை எருமை எல்லாம் ஒர்க் அவுட் ஆவாது. என் அம்மா பொண்ணு பார்த்திடுச்சு. அதுக்கு அர்ஜண்டா பேரன் வேணுமாம். வயசு என்னடி ஆவுது நமக்கு?”
“இப்படி அவசர பட்டீங்கன்னா உங்கம்மா பார்க்கிற பொண்ணையே கட்டிக்கோங்க, நான் இப்படியே இருந்துக்குவேன். ரிசல்ட் வரட்டும், மேல பி எட் படிச்சிக்கிறேன், அப்புறம் சென்னையிலேயே ஏதாவது ஸ்கூல்ல டீச்சரா ஜாயின் பண்ணிக்குவேன்” என்றாள்.
அவன் கண்டனமாகவும் கோவமாகவும் பார்க்க, “வேற என்ன செய்ய? போங்க, நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க” என்றாள்.
“மூணு வருஷம் உன்னை பார்க்காம இருந்தேன்னா அப்ப சூழ்நிலை அப்படி, நீயும் படிக்க போயிட்ட, சரி படிப்பு முடியட்டும்னு இருந்தேன். இனியும் விட முடியாது, இப்பவே என் கூட கிளம்பு” என்றான்.
“ஏற்கனவே எவ்ளோ நடந்துச்சு? திரும்பவும் இப்படி கூப்பிடுறீங்க? அப்படிலாம் நான் வர மாட்டேன், என் அப்பாவே இல்லாம போயிட்டார், அம்மாவும் ஏதாவது பண்ணிக்கிட்டா நானும் இருக்க வேண்டியது இல்லை” என்றாள்.
“உன் அப்பா திட்டம் என்னன்னு உனக்கு நல்லா தெரியும். செத்து போனவங்க பத்தி பேசக்கூடாதுன்னு பார்க்கிறேன். என்னை நினைச்சு பாருடி” என்றான்.
அவனை பாவமாக பார்த்தவள், “நீங்களே ஏதாவது செஞ்சு நல்ல முறைல என்னை அழைச்சிட்டு போங்க, சமயம் பார்த்து நான் சொல்றேன், ஒரு தடவ வீட்ல வந்து பேசுங்க” என்றாள்.
அவன் உச்ச பட்ச கோவத்தில் எழுந்து நிற்க, “இனியாவது எல்லாத்தையும் சரியா நடத்திப்போமே, ரெண்டு குடும்பமும் நமக்கு வேணும்தானே? அண்ணன் செஞ்சது தப்புதான், திட்டம் போட்டு செய்யல, அப்பா செஞ்ச காரியத்தாலயும் பெரியப்பா தூண்டி விட்டதாலேயும்தான்…” என்றவள் அவன் உறுத்து விழித்ததில் வாயை மூடிக் கொண்டாள்.
மதுராவின் கண்களில் கண்ணீர் வழிய, “கிளம்புன்னு சொன்னேன்!” என்றான்.
“இப்படி பண்ணினா மூணு வருஷம் முன்னாடி நடந்ததுதான் இப்பவும் நடக்கும். அப்பாவை இல்லாம பண்ணிட்டேன், உங்களோட சேர்ந்து வாழ முடியாட்டியும் நல்லா இருக்கீங்கங்கிற நினைப்போட இருந்துப்பேன். நான் வரலை” என்றாள்.
கோவத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவள் பக்கம் அமர்ந்து பொறுமையாக பேசிப் பார்த்தான். அவள் மசிவதாக இல்லை. மதன், மதனின் அத்தான் முருகன், செழியன் என மூவரும் வந்து விட்டனர்.
முருகனிடம் சென்றவள், “லேட் ஆகுதுண்ணா, வீட்ல விட்ருங்க” என்றாள்.
“இந்த பயலுவ நடத்துற நாடவம் எங்குட்டு போய் முடிய போவுதோ தெரியல ஆயி, என்னைய வேற உள்ள இழுத்து விடுறானுவோ, நீ வா ஆயி” என்ற முருகன் அவளது லக்கேஜை எடுத்துக் கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
சேரனின் பக்கத்தில் அவனது நண்பர்கள் இருவரும் அமர்ந்து கொண்டனர்.
“அவ வர மாட்டான்னு எனக்கு நல்லா தெரியும், போனா போறா, அடுத்த பிளான் என்ன பங்காளி?” எனக் கேட்டான் மதன்.
“ஹான்… மாப்ளயோட ஒரு புருவத்துலதான கோடு போட்ருக்கானுங்க, கண்ணு காது மூக்கெல்லாம் நல்லாத்தானே இருக்கு, அத ஏன் விட்டு வக்கணும்?” என்ற செழியனை முறைத்தான் மதன்.
“அவிங்களுக்கு சொன்னேன்டா பங்கு. அவிங்க மூஞ்சு மொகரகட்டைல ஒரு இண்டு இணுக்கு பாக்கி இல்லாம கோடு கோடா போட்டு அது மேல ரோடும் போட்டு விட்ருவோம்” என்ற செழியனும் மதனும் கையை உயர்த்தி அடித்துக் கொண்டனர்.
“எம் பொண்டாட்டிய எனக்கு கட்டி தர மாட்டேன்னு என் மாமனார் வீம்பா நின்னப்போ மாப்ளதான் எங்க கல்யாணத்தை நடத்தி வச்சான். இவன் இவனோட பொண்டாட்டி கூட சேர எதுவும் பண்றோம்டா” செழியன் ஏற்றி விட, மதன் விரைப்பாக சேரனை பார்த்தான்.
“திரௌபதி அம்மன் கோயில் திருவிழா என்னிக்கு ஆரம்பிக்குதுடா?” எனக் கேட்டான் சேரன்.
பக்கத்து கிராமம் ஒன்றில் இருக்கிறது திரௌபதி அம்மன் ஆலயம். சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுமே சேர்ந்துதான் திருவிழாவை எடுத்து நடத்தும்.
“நாளான்னிக்கு” சேரனின் நண்பர்கள் இருவரும் ஒரு சேர சொன்னார்கள்.
“பீமன் சாமி என்னிக்குடா அவ ஊருக்கு போவுது?” எனக் கேட்டான் சேரன்.
விடை தெரியாமல் அவனது நண்பர்கள் இருவரும் பார்த்துக் கொண்டனர்.
இரயில் தண்டவாளத்தை சேரன் வெறித்துக் கொண்டிருக்க யாருக்கோ அழைத்து பேசி விட்டு வைத்த மதன், “வெள்ளிக்கிழமைடா பங்கு” என்றான்.
சேரன் அர்த்தமாக தன் நண்பர்களை பார்க்க, “முகூர்த்த நாள்தான் மாப்ள, ஆனா போன தடவ மாதிரி கல்யாணம் செல்லாதுன்னு பஞ்சாயத்து பேசி வுட்டுட்டாய்ங்கன்னா?” எனக் கேட்டான் செழியன்.
தன் திட்டத்தை சொன்னான் சேரன்.
“கொஞ்சம் பிசகினாலும் மூஞ்சுல காரித் துப்பிட்டு போயிடும்டா தங்கச்சி” என்ற செழியனை சேரன் முறைக்க, “என் முகத்துல சொன்னேன்டா” என சமாளித்து அசடு வழிய சிரித்தான்.
“ஹ்ஹான்… உன் தங்கச்சிதானே? கையை விரிச்சு மூஞ்சுல வச்சு நல்லா துடைச்சிட்டு போடா” நக்கலாக சொன்னான் சேரன்.
“எல்லாம் சரியா நடக்குமாடா?” சந்தேகமாக கேட்டான் மதன்.
“டேய் அவ என் லவ்வரா இருக்கப்பவே எல்லாம் துணிஞ்சு செஞ்சேன், இப்ப எம்பொண்டாட்டிடா, உரிமைகாரன்டா நான்” மீசையை முறுக்கிக் கொண்டே சொன்ன சேரனின் குரலில் தீவிரத் தன்மை தெரிந்தது.