ஆள வந்தாள் -24(pre final -2)

அத்தியாயம் -24(1)

வீட்டிற்குள் செல்லாமல் சமையல் கொட்டகையிலேயே இருந்தனர் மதுராவும் சேரனும்.

 “அண்ணி…” என சரவணன் அழைக்க இவள் எழுந்து சென்றாள்.

சொம்பு நிறைய பசும் பால் கொடுத்தவன், “காபியோ டீயோ எதா இருந்தாலும் எல்லாருக்கும் சேர்த்து போடுங்க அண்ணி” என்றான்.

“எல்லாருக்கும்னா?” என கேள்வி கேட்டாள் மதுரா.

“அண்ணி… அது…” அம்மாவுக்கும் என சொல்ல முடியாமல் தவித்தான் சரவணன்.

“எவ்ளோ அடிச்சாலும் தாங்குவா இவன்னு நினைச்சிட்டீங்கல்ல?” எனக் கேட்ட மதுராவின் குரல் கமறியது.

“ஐயோ இல்லண்ணி…” என அவன் சொல்ல, “பெத்தவங்களாவே இருந்தாலும் தப்புன்னா தப்புன்னு சொல்லி பழகிகுங்க, நாளைக்கு உங்கள நம்பி வர்ற பொண்ணு நிலைய கேள்விக்குறி ஆக்கிடாதீங்க” என்றாள்.

“அண்ணி!”

“என் கையால இனிமே பச்ச தண்ணி கூட உங்கம்மாவுக்கு தர மாட்டேன். தியாகி, பொறுமைசாலிங்கிற பட்டமெல்லாம் எனக்கு வேணாம்” என நறுக் என சொல்லி சென்று விட்டாள்.

கலக்கமடைந்த சரவணன் வீட்டுக்குள் சென்றான். அறைக்குள் இருந்த கனகா மருமகள் மகனை மாற்றி விட்டாள் என புலம்பிக் கொண்டிருக்க, சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த கந்தசாமி எதிர்ப்பக்க சுவரை வெறித்துக் கொண்டிருந்தார்.

தன்னால் இதை கையாள முடியாது என உணர்ந்து அக்காவின் கணவனுக்கு அழைத்து மேலோட்டமாக விவரம் சொல்லி வீட்டுக்கு வர சொன்னான் சரவணன்.

 அதற்குள் தேநீர் தயாரித்திருந்த மதுரா வீட்டுக்குள் வராமல் சரவணனை அழைத்தாள்.

 அவன் செல்லவும் ஒரு சொம்பில் தேநீர் கொடுத்தவள், “ரெண்டு டம்ளர்தான் இருக்கு இங்க, பிரிச்சு ஊத்திக்கிறீங்களா?” எனக் கேட்டாள்.

தலையாட்டிக் கொண்டு வந்தவன் தேநீரை நிரந்து மூன்று டம்ளர்களில் ஊற்றிக் கொண்டு போய் அம்மாவுக்கும் கொடுத்தான்.

“வீட்ட ரெண்டாக்கி விட எம்மூட்டு மகனை தூண்டி விட்ருக்கா, அவ கையால போட்டது எனக்கு வேணாம்” என்றார் கனகா.

“ரொம்ப சந்தோஷம், அவ்வோ உனக்கு போட மாட்டேன்னுதான் சொன்னாவோ, போடவும் இல்ல. எனக்குதான் மனசு கேக்காம எங்களுக்குள்ளதிலேருந்து கொடுத்தேன். ஆனா ஒன்னு சொன்ன பாரு, வீட்டை ரெண்டாக்க அண்ணி பாக்குறாவோன்னு. சிரிப்புதான் வருதும்மா. நீ மாறலைன்னா வீடு மூனாகி கூட போவும். முழு காரணமும் நீயாதான் இருப்ப” என சொல்லி கூடம் வந்து விட்டான் சரவணன்.

வீட்டுக்கு வந்த மோகன், கனகா நடந்து கொண்ட விதத்திற்கு வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து, சேரனையும் மதுராவையும் அழைத்து வரும்படி சரவணனை அனுப்பி வைத்தான்.

மாப்பிள்ளையிடமும் தன் பக்கம்தான் நியாயம் என பேசினார் கனகா.

 “அப்படிங்களா அத்தை? உங்க பொண்ணுகிட்ட கூட எத்தனையோ முறை சண்டை போட்டு உங்கம்மாதான் உனக்கு ஏத்தி ஏத்தி வுடுறாங்க. இனிமே அவ்வோகிட்ட பேசாதன்னு பல முறை சொல்லியிருக்கேன். அவ கேட்டதே கிடையாது. எங்கம்மாவும் என் புள்ள பேச்ச மீறிட்டன்னு நீங்க மதுராவுக்கு செஞ்சதை உங்க பொண்ணுக்கு செஞ்சா ஒத்துக்கிடுவீயளா?” எனக் கேட்டான்.

“என்ன வார்த்தை தம்பி சொல்லிப்புட்டியோ? பூங்கொடியும் இவளும் ஒன்னா? பெரியவங்க பாத்து பேசி முறையா கல்யாணம் பண்ணிகிட்டு வந்தவ பூங்கொடி. நீங்க இப்படி பேசுவீயன்னு எதிர்பாக்கல” என்றார் கனகா.

அந்த நேரம் சேரனும் மதுராவும் வீட்டுக்குள் வர, மதுராவை சுட்டிக் காட்டிய கனகா, “தாலிய கழட்டிக் கொடுத்து சேரன் உயிரை பறிக்க பாத்தவ இவ. பெத்தவளுக்குத்தான் அந்த தவிப்பு என்னன்னு புரியும்” என்றார்.

அம்மாவிடம் பேசவே விருப்பம் இல்லை எனும் விதமாக சேரன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

மோகன் ஏதோ பேச வர, அதற்குள் மதுரா, “இந்த பழி நான் சாவுற காலம் தொட்டும் மறையாதுல்ல ண்ணா?” எனக் கேட்டாள்.

அவளை இரக்கமாக பார்த்த மோகன் ஆறுதலாக பேச வர, அவனை பேச விடாமல் தடுத்து அவளே பேசினாள்.

“புருஷன் உசுரு தாலிக்குள்ள இருக்குதுன்னா பொண்டாட்டி உசுரு எதுல இருக்குது ண்ணா? தாலியே கட்டாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறவங்க இருக்காங்க. மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணிக்கிறவங்க இருக்காங்க. கல்யாணம் பண்ணிக்க உலகம் முழுக்க வேற வேற முறை இருக்கு. அவங்களுக்கெல்லாம் புருஷன் உசுர் எதுல இருக்கும்?” என மதுரா கேட்க பதில்தான் யாருக்கும் தெரியவில்லை.

“தாலி கட்டிட்டா ஒருத்தன் ஒருத்தி மனசுல புருஷனா நின்னுடுவானா? பொம்பள மனசு வச்சு அவனை புருஷன்னு ஏத்துக்கணும். தாலியெல்லாம் கட்டுறதுக்கு முன்னாடியே எப்பவோ எனக்கு இவர்தான்னு என் மனசுல புருஷன் ஆகிட்டார் இவர்” கணவனை பார்த்துக் கொண்டே மதுரா சொல்ல, தோளில் முகத்தை இடித்து நொடித்துக் கொண்டார் கனகா.

 “என் அண்ணனுக்கு அது புரியாமதான் தாலிய கழட்டிட்டா எங்களுக்குள்ள ஒன்னுமில்லன்னு ஆகிடும்னு தப்புக்கணக்கு போட்டுச்சு. சத்தியமா சொல்றேன், திரும்ப இவர் கூட சேருவேங்கிற நம்பிக்கை எல்லாம் என்கிட்ட இருந்தது இல்ல. ஆனாலும் இவர்தான் என் புருஷங்கிற நினைப்பு என்னை விட்டு போகல. திரும்ப இவர் என்னை கூட்டிட்டு வரலைனா கூட என் சாவளவும் இவர மனசுல நினைச்சுகிட்டே வாழ்ந்திருப்பேன்” என்றவள் மாமியாரை முறைப்பாக பார்த்துக் கொண்டே,

“நான் தாலிய கழட்டி கொடுத்தேன் அதனாலதான் இவருக்கு அப்படி ஆச்சுன்னு யாரும் என்னைய குறை பேசினா பேசிட்டு போவட்டும். அவங்க தற்குறி தனத்துக்கு எல்லாம் இனிமேலும் நான் விளக்கம் சொல்றதா இல்ல” என்றாள்.

“இந்தாடி… நீ என்ன மூச்சு முட்ட பேசினாலும் நடந்த அத்தனை கலவரத்துக்கும் நீதான் காரணும்கிறது மாறிடாது. இவனுக்கு இன்னும் நிறைய பட்டு அனுபவிக்கணும்னு இருக்கு, அதான் வுட்டு தொலைஞ்ச பீடைய திரும்ப இழுத்திக்கிட்டு வந்திருக்கான்” என்றார் கனகா.

அருகில் கிடந்த நாற்காலியை சேரன் தூக்கி வீச, அவனை பிடித்துக்கொண்டான் மோகன்.

“இதுக்கு மேல ஏதாவது பேசின தொலைச்சு கட்டிடுவேன் டி உன்னை” கந்தசாமி கனகாவை தள்ளி விட, தன் மீதுமோதிக் கொண்ட அம்மாவை விழாமல் பிடித்துக்கொண்ட சரவணன் வெறுப்பாக பார்த்துக் கொண்டே தள்ளி நிறுத்தினான்.

“சொல்லுங்க இன்னும் என்னை என்னென்ன சொல்லணுமோ சொல்லுங்க. என் அப்பா செத்ததுக்கு நான்தான் காரணம், இவருக்கு முடியாம போனா நான்தான் காரணம். என்ன கெட்டது நடந்தாலும் நான்தான் காரணம். ஓடிப் போனவ, தானா புருஷனை தேடிகிட்டவ, அப்பனை கொன்னவன்னு இல்லாத அவப் பேரெல்லாம் வாங்கிக்கிட்டு பொறந்த வீட்ட விட்டும் மூனு வருஷம் சென்னைல போயி கெடந்தேனே… அப்ப என் நிலைமைக்கு யாரு காரணம்?” மாமியாரை நோக்கி சீறிக் கொண்டு வந்தாள் மதுரா.

“ஏட்டி… என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காதவோகிட்ட ஏன் உன் சக்தியை வீணடிக்கிற? வா இங்குட்டு” மனைவியின் கையை பிடித்து இழுத்தான் சேரன்.

கணவனை கோவமாக பார்த்தவள், “உங்களுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னுதானே தாலிய கொடுத்தேன்? எம்மேல என்னங்க தப்பு? மூனு வருஷம் முந்தி நீங்க கஷ்ட பட்டதாவே எல்லாரும் சொல்றாங்களே. அப்ப பொண்ணுங்கிறதால நான் பட்டதெல்லாம் ஒன்னுமே இல்லயா? காந்தி கணக்குக்கு போயிட்டா?” எனக் கேட்டாள்.

“பழசையே நினைக்காதம்மா, இப்போதான் அவன் கூட வாழ வந்திட்டியே” என்றார் கந்தசாமி.

கணவனையே பார்த்திருந்த மதுரா, “ஆமாம் வாழ வந்திட்டேன், ஒரு மாசத்துக்குள்ள ஆஞ்சு ஓஞ்சு ஆயாசமா வருது. நீண்டு கெடக்குற மிச்ச சொச்ச காலத்த நினைக்கையிலேயே எப்படி ஓட்ட போறோமோன்னு பகீருங்குது. நீங்க கிளம்பி போனதுக்கு அப்புறம் இந்த வீட்டுல மூலையில ஒடுங்கி கெடக்கிறேன். இன்னிக்கு வெளியவே போயிட்டேன், அமைதியா இருக்கேன்னுதானே என்ன வேணா செய்யலாம்னு நினைச்சிட்டாங்க. இனியும் அமைதியா போவ மாட்டேன். என்ன நடந்தாலும் உங்களுக்கு உங்கம்மா ஓவியம்னா நீங்களே வச்சுக்கோங்க. மாமியாங்கிற உறவு எனக்கு தேவையே இல்ல” என்றாள்.

மனைவியின் பேச்சை தடை செய்யாமல் நின்றிருந்த சேரனை பார்த்த கனகா, “என்னடா இவளை பேச விட்டு வேடிக்கை பாக்குறியா?” எனக் கேட்டார்.

“இனி ஒரு வார்த்தை அவங்ககிட்ட பேச மாட்டேன்னு சொல்லிடுங்க அத்தான்” என மோகனை பார்த்து சொன்னான் சேரன்.

கனகா பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க, கந்தசாமி அதட்ட, சத்தம் போட்டு இருவரையும் அமைதியாக்கிய மோகன் சரவணனை கொண்டு மாமியாரை மட்டும் அறைக்கு அனுப்பி வைத்தான்.

இனியும் பொறுக்க முடியாது, தனிக் குடித்தனம் செல்கிறோம் என உறுதியாக சொன்னான் சேரன்.

மோகனும் அதுதான் சரி எனும் விதமாக அமைதி காக்க, மாப்பிள்ளையின் முகத்தை பார்த்த கந்தசாமி, ‘ஏதாவது செய்யுங்கள்’ என கெஞ்சலாக பார்த்தார்.

வாயை குவித்து மூச்சு விட்ட மோகன், மீண்டும் சேரனை பார்த்து, “வீட்டு கதவை உடைச்சு போட்டுட்ட. திரும்ப சரி பண்ணி மூனு சாவியா போட்டு மதுரா கைல ஒன்னு கொடுத்திடலாம் சேரா. மாமாவை நினைச்சு பாரு, நீ தனியா போனா அவர் தாங்க மாட்டாருடா, ஊர்ல உள்ளவனும் என்னென்ன பேச மாட்டான். இதுதான் கடைசி மாப்புடா, இதுக்கு மேல எதுவும் நடந்தா நானே தனியா வைக்கிறேன் உன்னை” என நயந்து சொன்னான்.

“இதுக்கும் மேல வேற என்ன அத்தான் நடக்கணும்னு சொல்றீய? சரி வராது அத்தான். இந்தா என்னைய இத்தன கேள்வி கேக்குறாளே என் பொண்டாட்டி, எதுக்கும் என்னால பதில் சொல்ல முடியலையே அத்தான். வாழ வந்த வீட்டுல மரியாதைய வாங்கித் தராத உனக்கெல்லாம் எதுக்குடா பொண்டாட்டினு நாக்க புடிங்கிக்கிற மாதிரி இவ கேக்குற வரைக்கும் காத்துக்கிட்டு இருன்னு சொல்ல வாறீயலா அத்தான்? ஒத்து வரலைங்கிறப்போ தனியா போறது ஒன்னும் கொலை குத்தம் இல்லன்னு அங்குட்டு எடுத்து சொல்லுங்க அத்தான்” என்றான் சேரன்.