ஆள வந்தாள் -2

அத்தியாயம் -2(1)

திருவாரூர் நோக்கி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் சேரன். மூன்று வருடங்களுக்கு பிறகு அவனோடு இப்படி ஒரு அருகாமை. மதுராவுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அவனுக்குமே சொல்லத் தெரியாத இதமான உணர்வுதான்.

கோவங்கள், வருத்தங்கள், இழப்புகள் என இரு பக்கங்களிலுமே உள்ளன. ஆனால் இந்த பிரிவை இருவராலுமே சகிக்க முடியவில்லை.

சேரனாவது தனக்கு இவள்தான் என்பதில் உறுதியாக இருந்தான். மதுராவின் நிலை பாவமானது, இனி வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்ற எண்ணத்தில் இருந்தவள் அவனுடன்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் மீண்டும் தனக்கு தானே கேட்டு உறுதி படுத்திக் கொண்டாள்.

“ஊமை கோட்டான் ஏதாவது வாய தொறக்கிறாளா பாரு!” வாய் விட்டு சேரன் சொல்ல அதே நேரம் ஏதோ குழியில் பைக் ஏறி இறங்கியது.

அவன் முதுகில் மோதி விலகியவள் “பார்த்து ஓட்ட மாட்டீங்களா?” என சிடு சிடுத்தாள்.

“இந்தா… வேணும்னு யாரும் உன்னோட உரசல, இருட்டுல குழி கண்ணுக்கு தெரியலை. குண்டும் குழியுமா ரோடு போட்டவனைத்தான் கேட்கணும்” என்றான்.

“ஏன் ஹெட்லைட் வெளிச்சத்துல கண்ணு தெரியலையா?”

“நிஜமாவே தெரியாம நடந்து போச்சு. எனக்கு உன்கிட்ட உரசித்தான் ஆகணும்னா எந்த குழியும் ஸ்பீடு பிரேக்கரும் தேவையில்லை” என்றவன் சொன்னது போலவே சீரான சாலையில் திடீரென பிரேக் போட்டு பைக்கை நிறுத்த, மீண்டும் அவன் முதுகில் மோதினாள் மதுரா.

“இதுக்குத்தான் பைக்ல ஏற சொன்னீங்களா?” சீற்றமாக கேட்டாள்.

“திரும்பவும் சொல்றேன், இதுக்குத்தான்னா குறுக்கு வழி எதுக்கு? தூக்கிட்டு போனேனா எவனும் என்னை கேட்க முடியாது” என அவனும் கோவப்பட்டான்.

“அப்போ போக வேண்டியதுதானே?” என அவள் சொல்லி விட பைக்கை சாலையோரமாக ஓரம் கட்டி நிறுத்தினான்.

“என்ன செய்ய மாட்டேன்னு நினைச்சியா? உன் விருப்பம் இல்லாம செய்ய கூடாதுங்கிற ஒத்த எண்ணத்துல அடங்கி இருக்கேன். இல்லைனா இந்நேரம் எனக்கு ரெண்டு புள்ளய பெத்தெடுத்திருப்ப”

“தப்பு தப்பா பேசாதீங்க. நீங்க என்னை அழைச்சிட்டு வந்த விஷயம் அண்ணனுக்கோ பெரியப்பாவுக்கோ தெரிஞ்சா…”

“ஹான்… தெரிஞ்சா… என்னடி என்ன என்ன செய்வானுவோ?”

“அண்ணனை மரியாதை இல்லாம பேசாதீங்க”

இவர்கள் தர்க்கம் செய்து கொண்டிருக்க, மதனும் செழியனும் ஒரு பைக்கில் வந்து நின்றனர்.

“என்னடா மாப்ள இந்நேரம் பஸ்ல ஏத்தி விட்ருப்பேன்னு வந்தா காவா பக்கமா கடல போட்டுக்கிட்டு நிக்கிற?” எனக் கேட்டான் செழியன்.

“பங்காளி என்ன சொல்றா என் மாமன் மவ? கையோட தூக்கிட்டு போடா, எவன் வந்தாலும் பார்த்துக்கிறேன்” என்றான் மதன்.

மதனை முறைத்த மதுரா சேரனை நெருங்கி நிற்க, “பஸ் போனா போகுது, வேற பஸ் ஏத்தி விட்டுக்கலாம். நீங்க போயி சில்லி பரோட்டா பார்சல் வாங்கி வையுங்க” என்றான் சேரன்.

“நான் சாப்பிட்டேன்” என்றாள் மதுரா.

“உன்னை எவன்டி கேட்டான்? காலேஜ முடிச்சிட்டு வா, எல்லாத்துக்கும் சேர்த்து வச்சிக்கிறேன் உன்னை” என்ற சேரன் பைக்கில் அமர அவளும் அமர்ந்து கொண்டாள்.

பைக் சீறிப் பாய, “இருபத்தியொம்போது பொறக்கவும் பய தெளிவா திரியுறானே… சங்கதியென்னங்கிறேன்?” எனக் கேட்டான் மதன்.

“நீ இப்பதானடா கருப்பு கண்ணாடிய கழட்டியிருக்க, அதான் உள்ளது உள்ள படி தெரியுது, அவன் எப்பவும் தெளிவாதான் இருக்கான், வண்டிய கெளப்பு” என செழியன் சொல்ல, மதனின் பைக்கும் சாலையில் வேகம் எடுத்தது.

மதுரா புக் செய்திருந்த பேருந்து திருவாரூரில் இருந்தும் புறப்பட்டு சென்றிருந்தது. வேறொரு தனியார் பேருந்தில் டிக்கெட் எடுத்து கொடுத்தவன் நண்பர்கள் வாங்கி வைத்திருந்த உணவு பார்சலையும் அவளிடம் நீட்டினான்.

அவள் மறுப்பாக பார்க்க, “இந்த பஸ்ஸையும் விட்டுட்டு இப்பவே என் கூட வர்றேங்கிறியா? எனக்கு ஓகேதான், இருபத்தொம்பது வயசாகியும் முதிர் கன்னியனா சுத்துறதாலதான் ஊருல ஒரு நல்லது நடக்க மாட்டேங்குது. என் ஏக்க பெருமூச்சுல பயிரெல்லாம் வாடி வதங்குது. குடும்பம் நடத்த நான் ரெடி நீங்க ரெடியா?” அரும்பு மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு கேட்டான்.

அவள் வெடுக் என உணவை வாங்கிக் கொள்ளவும், “ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பு. இந்த அத்தானையே நினைச்சிட்டு இல்லாம பரீட்சை எல்லாம் ஒழுங்கா எழுது” என்றான்.

பாவமாக அவனை பார்த்தவள், “யாரையும் கல்யாணம் பண்ணிகிட்டு நல்லபடியா வாழக் கூடாதா நீங்க? ஏன் இப்படி இம்சிக்கிறீங்க?” எனக் கேட்டாள்.

காதை குடைந்தவன், “திரும்ப சொல்லு” என்றான்.

அவன் கேட்ட தொனியில் பயந்து போனவள், “ஒண்ணும் இல்ல, நான் வர்றேன்” என சொல்லி பேருந்தில் ஏறிக் கொண்டாள்.

பேருந்து புறப்பட இன்னும் நேரமிருக்க சேரன் அவனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு அங்குதான் நின்றிருந்தான். அவன் பாராத நேரம் ஒரு முறை அவனை பார்த்தவள் பின்பு மனதை கட்டுப்படுத்தி அவன் பக்கமாக திரும்பாமல் இருந்தாள்.

“பஸ் அட்டெண்டர் நம்பர்தான் இருந்துச்சுல்ல, ஒரு போன் போட்டு வெயிட் பண்ண சொல்லிருக்கலாம்லடா?” எனக் கேட்டான் மதன்.

“அப்படி செஞ்சிருந்தா நான் எப்படி அவ கூட சென்னை போறது?” எனக் கேட்ட சேரனை அவனது நண்பர்கள் ஆ என பார்த்தனர்.

“என்னடா மாப்ள இதெல்லாம்?” எனக் கேட்டான் செழியன்.

“அவளோட சென்னை போகப் போற நீ திரும்பி வருவியா, இல்ல அங்குட்டே செட்டில் ஆகப் போறியா?” என்றான் மதன்.

முறைத்த சேரன், “மூணு வருஷம் ஆச்சுடா, வர மாட்டேன்னு நினைச்சிட்டா போல. அப்படி இல்லைனு அவளுக்கு தெரிய வேணாமா?” என்றான்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க அதே பேருந்தில் ஏறினான் சதீஷ். இவன்தான் மதுராவின் அண்ணன் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டிய புது வீட்டுக்கு என்ஜினியர். மதுராவை மணந்து கொள்ள பிரியப் படுவதாக இவன் வனராஜனிடம் சொன்னதாக தகவல். ஆனால் இவளிடம் இது பற்றி யாரும் அபிப்ராயம் கேட்காததால் இவளும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

மதுராவை பார்த்தவன் அவளருகில் வந்து நின்று ஏதோ பேச்சு கொடுக்க ஓரிரு வார்த்தைகளில் பதில் கொடுத்து அவனை தள்ளிப் போக செய்து விட்டாள். ஆனால் மனதில் மட்டும் கலவரம், சேரன் பார்த்து விட்டு ஏதும் வம்பு செய்வானோ என.

மதுராவை கவனித்தே இருந்தவன் கேள்வியாக மதனை பார்க்க சதீஷ் யாரென்ற விவரம் சொல்லி மதுராவை அவன் மணந்து கொள்ள பிரியப் படும் செய்தியையும் சொல்லி வைத்தான்.

“அடிங்… அவ யாருன்னு இந்த நாதாரிப்பயலுக்கு தெரியாதாமா?” கோவப்பட்டான் சேரன்.

“ஆமாம் அந்த புள்ள யாரு? என் மாமன் மவ அம்புட்டுதானடா, வேறென்ன இருக்கு?” சீண்டலாக கேட்ட மதனின் உச்சி முடியை பிடித்து சேரன் குலுக்க வலியில் லேசாக முனகினான்.

“விடு மாப்ள, அவன் சொல்றதுலேயும் அர்த்தம் இருக்குதானே? மூணு வருஷமா நீ சும்மா விட்டு வச்சிருக்க, அதான் கண்டவனும்…” என்ற செழியன் சேரனின் கோவப்பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.

பசி எடுக்க உணவை பிரித்து சாப்பிட்டாள் மதுரா.

“பரோட்டாவ இந்த முழுங்கு முழுங்குதே உன் மாமன் பொண்ணு, என் மாப்ளையோட பர்த்டே இன்னிக்கு, ஒரு விஷ் பண்ணினாளாடா?” மதனிடம் வம்பாக பேசினான் செழியன்.

“இடையில அவளுக்கும்தான் மூணு பொறந்தநாள் வந்தது, இவன் என்ன விஷ் பண்ணினான் இப்ப அவ பண்ண?” மதனும் பதிலுக்கு வம்பு பேச பேருந்து புறப்பட தயாரானது.

சேரன் பேருந்து நோக்கி செல்ல, “உன் வீட்ல என்ன பொய் சொல்லணும்னு சொல்லிட்டு போடா, மாத்தி மாத்தி சொல்லி உன் அம்மாகிட்ட வாங்கிக் கட்டிக்க முடியாது” என்றான் செழியன்.

“உண்மையையே சொல்லுங்கடா” என்றான் சேரன்.

“சேரா!” அதிர்ந்தான் மதன்.

“என்ன நினைப்புல இருக்கேன்னு அவங்களுக்கும் தெரிய படுத்தனும்ன?” இலகுவாக நண்பர்களிடம் சொன்ன சேரன் ஓடிப் போய் பேருந்தில் ஏறிக் கொண்டான். அவள் திடுக்கிட்டுப் போய் பார்க்க, என்ன என கண்களால் கேட்டான்.

“விளையாடாதீங்க, யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா பிரச்சனைதானே? ப்ளீஸ் இறங்கிடுங்க” என கெஞ்சலாக கூறினாள்.

“யாருடி அந்த தெரிஞ்சவன்?” என இவன் கேட்கும் போதே பின்னால் நான்கு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த சதீஷ் எழுந்து நின்றான்.

“என்ன?” அவனிடமும் சேரன் சீற, ‘ஒன்றுமில்லை’ என்பதாக தலையசைத்து மீண்டும் அமர்ந்து கொண்டான் சதீஷ். பயத்தில் வெளிறிப் போனது மதுராவின் முகம்.

அவளது இருக்கையை தளர்த்தி விட்ட சேரன், “சும்மா பயந்து சாவாத, கண்ண மூடு” என சொல்லி பக்கத்து இருக்கையில் அமர்ந்து தளர்வாக சாய்ந்தான்.

“நிஜமா கூட வர்றீங்களா?” என அவள் கேட்க, சட்டைப் பையில் இருந்து அவனுக்கான டிக்கெட் எடுத்து காண்பித்தான்.

கலவரமான மதுராவுக்கு செய்வதறியாத நிலை. சுற்றிலும் பார்த்தாள். சதீஷை தவிர தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. ஆனால் அவன் போதுமே தெரியப்படுத்த. வீட்டினருக்கு செய்தி தெரிய வரும் போது… என நினைக்கையிலேயே அவளது ஈரக்குலை நடுங்கியது