மகனை முறைத்தவர், “நானே விளக்கேத்துறேன், அவ இந்த நேரம் தூங்கிட்டு இருந்தா லட்சுமி பின் வாசல் வழியால போயிடும். அப்பப்பா! என்ன பேச்சு பேசுறான்” என சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“ஹாஹான்… லட்சுமிக்கு போன் போட்டு அப்படிலாம் போவாதம்மா தாயேன்னு நான் சொல்லிக்கிறேன், நீ கவலை படாத” என்றான் சேரன்.
“அடங்கொப்புறானா!” என்றவர் மாலை நேரத்தில் இப்படி சொல்லி விட்டோமே என பதறி, தன் வாயிலேயே இரண்டு அடிகள் போட்டுக் கொண்டு, “வுட்டேன் வுட்டேன்” என்றார்.
“ஆணை வுட்டீன்ன? வுட்டேன்னா சொன்ன வார்த்தை இல்லைனு ஆகிடுமா? இன்னும் பலமா வாய்ல அடிச்சுக்க” என சொல்லி சிரித்தான்.
“இந்தாருடா, கட்டின புதுசுலேயே அவளுக்கு இவ்ளோ இடம் கொடுத்தீன்னா உன் தலையில ஏறி உட்கார்ந்துப்புடுவா, பார்த்து சூதானமா இரு”
“என் தலைலதான உட்கார போறா? நான் சுமந்துக்குறேன், அது எம்பாடு” என சொல்லி சென்றவனை கண்டு கனகாவுக்கு கோவத்தில் மூச்சு வாங்கியது.
அறைக்கு வந்தவன் மதுராவை தட்டி எழுப்பி விட, இரவில் சரியாக உறங்காதவள் விழித்தாலும் எழுந்து கொள்ளவில்லை.
“ஏட்டி! இன்னும் தூங்குறேன்னு அம்மா சத்தம் போடுதுடி, நைட் தூங்கலாம், இப்ப எழுந்துக்க” என்றான்.
“இல்லாட்டா மட்டும் உங்கம்மா மௌன விரதத்துல இருப்பாங்க பாருங்க! அப்புறம் நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நைட் தூங்கதான் போறேன், தூங்க மட்டும்தான் போறேன்” என சொல்லிக் கொண்டே எழுந்து புடவையை சரியாக கட்டிக் கொண்டாள்.
இப்போது எது பேசினாலும் வீம்பு பாராட்டுவாள் என்பதால் பேச்சை வளர்க்கவில்லை சேரன். மனைவியை ஏதாவது அம்மா சொல்லக்கூடும் என்பதால் அவனும் வெளியில் வந்து அமர்ந்து கொண்டான்.
பின் பக்கத்தில் பாத்திரங்கள் குவிந்து கிடக்க கழுவ சென்றாள் மதுரா. இருட்டி விட்டதால் கொசு பிடுங்கி தின்றது. ஐந்து நிமிடங்களில் அழுகையே வந்து விட்டது அவளுக்கு.
பொறுப்பாக கொசு வர்த்தி ஏற்றி கொண்டு வந்து வைத்தான் சேரன்.
அடுப்படியிலிருந்து எட்டிப் பார்த்த கனகா, “இவன் அடிக்கிற கூத்துல எனக்குதான் பிரஷர் ஏறும்” என முணு முணுத்துக் கொண்டே கூடத்திற்கு சென்று விட்டார். கந்தசாமி திண்ணையில் வானொலி கேட்டுக் கொண்டிருக்க சரவணன் வீட்டில் இல்லை.
மதுரா கணவனை கண்டுகொள்ளாமல் இருக்க, “புருஷன்கிட்ட சண்டை போட்டு பேசாம இருந்தா இப்படித்தான் கொசு கடிக்கும்” என்றான்.
பாத்திர வேலையை முடித்தவள் தன்னை சுத்தப் படுத்தி, வேறு ஆடை மாற்றி வந்து தலை வாரிக் கொள்ள ஆரம்பித்தாள். ஏதோ நினைவில் குளிர் சாதன பெட்டியை திறந்து பார்த்தான். காலையில் இவளுக்கென கனகா வைத்திருந்த பூ பத்திரமாக இருக்க, அதை எடுத்து வந்து நீட்டினான்.
“கொசுவத்தி வைக்கிறது, பூ கொடுக்கிறது, அல்வா ஊட்டுறதுக்கெல்லாம் மயங்க மாட்டேன்” என சொல்லிக் கொண்டே பூவை வாங்கிக் கொண்டாள்.
“அல்வாவா? அது சரி, வேணும்னா நேரா கேளுடி” என்றான்.
அவள் எரிச்சலாக பார்க்க, “சரிடி தப்பா புரிஞ்சுக்கிட்டு உன் பொறந்த வீட்டோட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டேன். உனக்கு என்ன இஷ்டமோ பண்ணிக்க போதுமா?” என்றான்.
“பாருங்க இப்ப கூட கோவமாதான் சொல்றீங்க. இதே நான் எதுக்காகவும் உங்கம்மாவோட பேசக்கூடாதுன்னு சொன்னா கேட்பீங்களா?”என மதுரா கேட்டுக் கொண்டிருக்க, கணவர் தண்ணீர் கேட்டார் என அடுக்களை வந்த கனகாவின் காதில் இந்த பேச்சு விழுந்து விட்டது.
மகன் என்ன சொல்ல போகிறான் என பார்த்திருந்தவர் அவன் அமைதியாகவும் ஏதோ யோசனையாகவும் நிற்பதை கண்டு விட்டு நெஞ்சில் கை வைத்து திகைத்துப் போனார்.
தான் எதுவும் கேட்க போய், மகன் இவளின் முன்னால் தன்னை எதுவும் பேசி அவமானம் செய்து விடுவானோ என பயந்து போனவர் சத்தமில்லாமல் வெளியேறி விட்டார்.
“என்ன யோசனை? கூட குறைச்ச பேசினாலும் நடந்தாலும் உங்கம்மா உங்களை பெத்தவங்க, யார்கிட்டேயும் விட்டு தர மாட்டீங்கதானே? யார் சொன்னாலும் அவங்க கூட பேசாம இருக்க முடியுமா உங்களால?” எனக் கேட்டாள் மதுரா.
இல்லை என்பதாக தலையாட்டினான் சேரன்.
“அப்ப நான் மட்டும் என் அம்மா கூட பேசக்கூடாதா? அதை தடை செய்யலாமா நீங்க?” எனக் கேட்கும் போதே அவளின் விழிகள் கலங்கி விட்டன.
சேரனுக்கு தான் அப்படி சொன்னது எத்தனை பெரிய அபத்தம் என புரிய, “சரிடி அழுவாத. இனிமே அப்படி சொல்ல மாட்டேன். பிரச்சனை வராத மாதிரி உன் அம்மாவ தனியா பார்த்து பேசிக்க, நான் எதுவும் கேட்க மாட்டேன். ஆனா என் அம்மாக்கு மட்டும் தெரியாம பார்த்துக்க” என்றான்.
அவள் கண்டனமாக பார்க்க, “உனக்காகத்தான் சொல்றேன் மதுரா. உன்னை என் அம்மா பேசிட்டே இருக்கும்டி, பேசாதன்னு சொல்ல எந்நேரமும் நான் வீட்ல இருக்க மாட்டேன், அம்மா குணத்தை இனியா மாத்த முடியும்? புரிஞ்சுக்க” என்றான்.
சரி என அவள் தலையசைக்க, கொஞ்சம் நெருங்கி அவளது கண்களை துடைத்து விட்டவன், “போ, வேலைய பாரு” என்றான்.
“நைட் நான் சமைக்கட்டுமா?” என ஆவலாக அவள் கேட்க, “உனக்கு என்ன தோணுதோ செய், பார்த்துக்கலாம்” எனக் கூறி சிரித்தவன் அப்பாவோடு திண்ணையில் வந்தமர்ந்து கொண்டான்.
அவர் கோவத்தை குறை, பொறுப்பாக இரு என அறிவுரைகள் வழங்க அமைதியாக கேட்டுக் கொண்டான்.
வேகமாக பூஜையறை சென்று வணங்கி விட்டு வந்த மதுரா சமையலறை வர, பார்த்திருந்த கனகாவும் பின்னால் வந்தார்.
சப்பாத்தி செய்ய அவள் மாவு எடுக்க, வெடுக் என பிடுங்கி வைத்தவர், “இந்தூட்டுல ராத்திரிக்கு எப்பவும் சோறுதான். நீ முறையா வராததால எம்மூட்டு முறைய மாததிபுடலாம்னு திட்டம் போடாத” என சுருக் என பேசினார்.
பொங்கிய கோவத்தை கட்டுப்படுத்திய மதுரா, “சரி அத்தை, நான் எனக்கு மட்டுமாவது செஞ்சுக்கிறேன். நைட் எனக்கு சாதம் சாப்பிட்டு பழக்கம் இல்ல” என்றாள்.
“பழக்கம் இல்லைனா இனி பழகிக்க. நீ தனியா சமைச்சா கேஸ் வேஸ்ட் ஆவாதா? உங்கப்பன் வீட்லேருந்து கொண்டு வந்தத வச்சா குடும்பம் ஓடுது? வயல்லேயும் வரப்புலேயும் வெயில், மழை பாக்காம இந்தூட்டு ஆம்பளைங்க உழைச்சு கொடுக்கிற காசு. சிக்கனமாதான் இருக்கணும். நீ வேணும்னா உன் புருஷன்கிட்ட கோள் மூட்டி வை, நேத்து காசை கரி கோலம் பண்ணின மாதிரி இனியும் ஏதாவது செய்வான்…”
கனகா வாயை மூடுவதாக காணோம் என்றதும் அங்கிருந்து அறைக்கு சென்று விட்டாள் மதுரா.
சேரனிடம் இப்போதே சொன்னால் சும்மா விடமாட்டான்தான். முதல் முறை தாலி ஏறி மூன்று வருடங்கள் எதிர்காலம் குறித்த பயமும் சேரனை பற்றிய நினைவுமாக எத்தனை வாடியிருப்பாள். இப்போது அவனுடன் சேர்ந்து விட்டோம் என்பதே பெரிய கனவு போலதான் இருக்கிறது. இந்த முறையும் தாலி ஏறிய நொடியிலிருந்து எத்தனை எத்தனை பிரச்சனைகள்?
அலுத்து சலித்து வந்தது அவளுக்கு. சற்று முன்னர்தான் கணவனுடன் சமாதானம் ஆகியிருக்க, மீண்டும் மாமியார் பற்றி சொல்லி இன்றைய நாளின் மிச்சப் பொழுதை மோசமாக்கிக் கொள்ள விரும்பாமல் கணவனிடம் இது பற்றி சொல்லவே இல்லை.
அப்பாவுடன் இருந்தவன் மதனிடம் பேச கைப்பேசியோடு மொட்டை மாடிக்கு சென்று விட, மதுரா சமைக்கவில்லை என்பது அவனுக்கு தெரியாமல் போனது.
அர்ச்சனாவை காதலிக்கிறான் என்பதை மதன் வாய் மொழி வாயிலாக உறுதி செய்து கொண்டவன், ஏன் முன்னரே சொல்லவில்லை எனக் கேட்டு விலாசித் தள்ளி விட்டான்.
அசராமல் அனைத்து திட்டுக்களையும் வாங்கிக் கொண்ட மதன், “பங்காளி நீதான் டா எங்கள சேர்த்து வைக்கணும்” என்றான்.