ஆள வந்தாள் -1
அத்தியாயம் -1(1)
“கேட் போடுறதுக்குள்ள கிளம்பினாதான பஸ்ஸ புடிக்க முடியும்? இன்னும் அங்குட்டு கெடந்து என்னதான் பண்ற?” அஞ்சலையின் சத்தத்தில் அறையிலிருந்து வேக எட்டுக்கள் எடுத்து வைத்து வெளியில் வந்தாள் அவரது மகள் மதுரா.
ஆட்டோ காத்துக் கொண்டு நிற்க அண்ணன் அண்ணியிடம் இன்னொரு முறை சொல்லிக் கொண்டவள் அம்மாவை பார்த்து தலையசைக்க, “ஏறுடி ஆட்டோல” என சற்று சீற்றமாகவே சொன்னார் அஞ்சலை.
கண்கள் கலங்கி விட அழுது விடாமல் கவனமாக இருந்தவள் முகத்தை மட்டும் முறைப்பாக வைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.
தன் மனைவியின் கண்டிப்பு முகத்தை கண்டு கொள்ளாமல் தங்கையை வழியனுப்ப தானும் ஆட்டோவில் ஏறப் போனான் வனராஜன்.
“அவ என்ன சின்ன புள்ளையா? தெரிஞ்ச ஆட்டோதானே, அவளே போயிப்பா, நீ உள்ள போ, உன் சம்சாரத்தை அழுது வடிய வுட்டு இவ கிளம்பினா நல்ல படியா ஊர் போய் சேர்ந்த மாதிரிதான்” என சொல்லி மகனை தடுத்து விட்டார் அஞ்சலை.
“கிளம்பட்டுமா க்கா?” ஆட்டோக்காரன் அஞ்சலையிடம் கேட்க தலையசைத்து விடை கொடுத்தார்.
வீடு இருக்கும் தெருவை தாண்டிய பின்னர் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள் மதுரா.
“பஸ்ஸு எத்தன மணிக்கு ஆயி?” ஏற்கனவே அஞ்சலை சொல்லியிருந்த போதும் இன்னொரு முறை கேட்டான் ஆட்டோக்காரன்.
“எட்டே முக்காலுக்குண்ணா, போயிடலாம், மெதுவாவே ஓட்டுங்க” என்ற மதுரா வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
இன்னும் ஐந்து நிமிடங்களில் ரெயில்வே கேட் தாண்டி விட வேண்டும், இல்லையேல் இருபது நிமிடங்கள் வீணாக காத்திருக்க நேரிடும். ஆட்டோ வேகமாக செல்ல ஏற்கனவே கேட் போடப் பட்டிருந்தது.
ஆட்டோக்காரன் சலித்துக் கொள்ள, “பரவாயில்லை ண்ணா, பஸ் மிஸ் ஆனாலும் வேற பஸ்ல போய்க்குவேன்” என சாதாரணமாக சொன்னாள்.
“புக் பண்ணின பிரைவேட் பஸ்ல சொகுசா போறத விட்டுட்டு எந்த பஸ்ல ஏத்தி விடுவேன் ஆயி, செத்த முன்னேரமா கெளம்பியிருக்க கூடாது?” என ஆட்டோக்காரன் கேட்க பதிலேதும் சொல்லவில்லை மதுரா.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் அந்த ஊர். சென்னை செல்லும் பேருந்து ஊருக்குள் வராது, அரை மணி நேரம் பிரயாணம் செய்து வேறொரு ஊருக்கு செல்ல வேண்டும். ஆட்டோவில் அங்குதான் சென்று கொண்டிருக்கிறாள் மதுரா.
அந்த ஊரில் மட்டுமல்லாது அக்கம் பக்கத்து ஊர்களில் கூட பெருவாரியான மக்களுக்கு அவளை தெரியும். கடந்த மூன்று வருடங்களாக அவள் மீது பலரது பச்சாதாப பார்வையும் சிலரது துச்ச பார்வையும் படிந்து போகிறது.
இருபது நிமிடங்கள் கழித்து ரெயில்வே கேட் திறக்கப் பட ஆட்டோ மீண்டும் புறப்பட்டது.
பக்கத்து கிராமத்தின் உள்ளே ஆட்டோ நுழைய மதுராவுக்கு சேரனின் நினைவு தானாக வந்தது. சட்டென ஒரு முறுவல் மலர்ந்து உடனே மறைந்தும் போனது.
அம்மன் கோயில் இருந்த தெருவில் வாலிபர்கள் கூட்டம் வழியை அடைத்துக் கொண்டு நிற்க, ‘பஸ்ஸ புடிச்ச மாதிரிதான்!’ என நினைத்துக் கொண்டாள்.
“இதென்னடா கூத்து கட்டி அடிக்கிறீங்க நடு வீதியில?” மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை இறக்கி விட்டுக் கொண்டே எரிச்சலாக கேட்டான் சேரன். அவனது இடது காலில் இருந்த வெட்டுக் காயத்தின் தழும்பும் வேட்டிக்குள் மறைந்து போனது.
லேசாக முறுக்கி விடப் பட்ட மீசையும் தலை கொள்ளாத கேசமுமாக இருந்த சேரனின் வலது புருவத்தில் கோடாக ஒரு தழும்பு தெரிந்தது. சுற்றிலும் உள்ள வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில இள வயதுப் பெண்களின் பார்வையும் இவனைத்தான் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
“என்ன நடு வீதி? எந்த பஸ் வர போகுது இந்த நேரத்துல? கேக்க வெட்ரா மாப்ள” என்றான் இளஞ்செழியன்.
பின்னால் ஆட்டோ வரும் சத்தம் கேட்க நண்பனை முறைத்தான் சேரன்.
“என்னா இப்போ? அஞ்சு நிமிஷம் நிக்காதா ஆட்டோ?” பச்சை நிற வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு செழியன் கேட்க, இன்னும் இருவர் ஆட்டோவை நிறுத்தி வைப்பதற்காக ஓடினார்கள்.
“சட்டு புட்டுன்னு கேக்க வெட்டுவியா… பராக்கு பார்த்துகிட்டு, இந்தா புடிங்கிறேன்” நிஜக் கத்தியை சேரனின் கையில் கொடுத்தான் செழியன்.
“என்னடா இது?”
“அட்டக்கத்திலாம் உனக்கு செட் ஆவாது மாப்ள, வெட்டு” என செழியன் சொல்லிக் கொண்டிருக்க, “ஹலோ மைக் டெஸ்டிங்… ஒன் ட்டூ த்ரீ…” என்ற மதனகோபாலின் குரல் கேட்டது.
“அட நாதாரி பயலுவளா… என்னடா இதெல்லாம்? ஸ்டேஜ்ல அவன் என்னடா பண்றான்?” எரிந்து விழுந்தான் சேரன்.
“இன்றைய தினம் இருபத்தெட்டு முடிந்து இருபத்தொன்பதாவது பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு நண்பன் அஞ்சா நெஞ்சன் ஆசை மச்சான், ஊர் பெண்களின் கனவு கண்ணன் சேரனுக்கு… ஹேப்பி பர்த்டேடா பங்காளி… டேய் பாடுங்கடா” மைக்கில் மதனகோபால் அலற, தொடர்ந்து பல கட்டைக் குரல்களில் ஹேப்பி பர்த் டே ஒலித்தது.
“எப்படி அலம்பல் பண்றானுவோ பாரு ஆயி?” சலித்தான் ஆட்டோக்காரன்.
அந்தப் பகுதியில் அம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தம், ஒரு வாரத்திற்கு விமரிசையாக விழா நடக்கும். பெரிய மேடை போட்டு பலவித கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அங்கிருந்துதான் மைக்கில் பேசிக் கொண்டிருந்தான் மதன்.
மதுராவின் பதினைந்தாவது வயதில் இதே போல அமைக்க பட்ட மேடையில்தான் இவளது அரங்கேற்றம் நடந்தது.
பக்கத்து ஊராக இருந்தாலும் அவள் சிறு வயதில் படித்ததும் இப்போது முதுகலை படிப்பதும் சென்னையில் அவளது சித்தி வீட்டில் தங்கித்தான். பெரிய பெண் ஆன சமயத்தில் அங்கிருக்க வேண்டாம் என சொல்லி இவளது பெற்றோர் பிறந்த ஊருக்கே இவளை அழைத்து வந்து விட சில வருடங்கள் மட்டும் இங்கு இருந்தாள்.
சென்னையில் பரதம் கற்றிருந்தவளுக்கு அரங்கேற்றம் செய்ய அவளது சித்தி பிரியப் பட கோயில் திருவிழாவில் ஆடினாள்.
பச்சை நிற பரத உடையில் துறு துறு என இருந்தவளை இதற்கு முன் பார்த்தது இல்லை சேரன். யார் என மண்டையை குடைந்து கொண்டிருந்தவன் அவளிடமே “எந்தூரு பச்சக் கிளிமா நீயி?” எனக் கேட்க அவனைப் பார்த்து பயந்து போனாள் மதுரா.
“பங்கு டேய்… என் மாமன் மவடா, நீ போ மது” என மதனகோபால்தான் அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
பழைய நினைவுகள் எல்லாம் மதுராவை சூழ்ந்து கொண்டன.
அழகான பெண் என்றதில் அவளை ஆர்வமாக பார்த்த சேரன் சின்ன பெண் என தள்ளித்தான் இருந்தான்.
அவளது அழகை நினைத்தே அவளின் பெற்றோருக்கு பயம். அவளது பள்ளிப் படிப்பு முடியவும் அந்தப் பகுதியில் இருக்கும் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட மகளிர் கல்லூரியில் சேர்த்து விட்டனர். கல்லூரிப் பேருந்து அவளின் ஊருக்குள் செல்லாது, பேருந்தில் ஏற சேரனின் ஊருக்குதான் அவள் வர வேண்டும்.
அதற்கு முன் எப்போதாவது இவளை பார்க்கும் சேரனுக்கு கல்லூரி விடுமுறை இல்லாத அனைத்து நாட்களிலும பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அவள் சாதாரணமாக இருந்தால் கூட பெரிதாக கண்டு கொண்டிருக்க மாட்டான், இவனை கண்டாலே வேண்டுமென்றே பார்வையை தவிர்ப்பாள், ஆடை சரியாக இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வாள்.
ஒரு நாள் சேரனின் பொறுமை பறக்க அவளிடமே போய் நின்று, “ஏட்டி என்னைய பார்த்தா எப்டி தெரியுது?” என கோவமாக கேட்டு விட்டான்.
“என்ன… ஏன் அதட்டுறீங்க? வாடி போடின்னு எல்லாம் பேசுற வேலை வச்சுக்காதீங்க” பயத்தை மறைத்துக் கொண்டு சொன்னாள்.
அருகில் நின்று பார்க்கையில் அவளது அழகு அவனை இன்னும் ஈர்த்தது. கோவத்தை விலக்கி, “நான் ஒண்ணும் பொறுக்கி இல்ல, அசிங்க படுத்தாத என்னை. இனிமே உன்னை பார்க்க மாட்டேன்” என்றான்.
அவனை தவறாக நினைத்ததற்காக அவளும் உடனே மன்னிப்பு கேட்டு விட்டாள். நல்ல பையன் போல தலையசைத்து சென்றவன் அவளிடம் சொன்னதை செய்யவே இல்லை.
ஆமாம் அவளை பார்ப்பதை நிறுத்திக் கொள்ளாதவன் தீவிரமாக பார்க்க ஆரம்பித்திருந்தான். எத்தனையோ நாட்கள் மனதிற்குள்ளாகவே அவனை திட்டி குமித்திருக்கிறாள்.
ஒரு நாள் முக்கியமான தேர்வு நடக்க இருக்க கல்லூரிப் பேருந்தை தவற விட்டு விட்டாள். அண்ணனுக்கு அழைத்து சொல்ல அவன் மதனுக்கு சொல்லி விடுகிறேன், அவன் அழைத்து செல்வான் என சொல்லி விட்டான்.
ஆனால் மதனின் பைக்கோடு வந்து நின்றதோ சேரன். அவள் ஏறத் தயங்கினாள்.
“உன் அத்த மகன் ஊருல இல்ல” என்றான் சேரன்.
“நான் அண்ணனை வர சொல்லிக்கிறேன், உங்க கூட பைக்ல போனா வீட்ல திட்டு விழும்” என்றாள்.
“அது எனக்கு தெரியாதா? ஹெல்மெட் போட்டுக்கிறேன், யாருக்கும் நான்னு தெரியாது. அந்த மதன் பய ஏதோ உனக்கு எக்ஸாம்னு சொன்னான், அதனால வந்தேன், உன் அண்ணன் வந்து சேர்ந்து நீ காலேஜ் போறதுக்குள்ள எக்ஸாம் ஹாலை இழுத்து சாத்திடுவாங்க. வேணாம்னா போ” என அவன் சொல்ல வேறு வழியில்லாமல் அவனோடு பயணித்தாள்.
அப்படி ஆரம்பித்த பழக்கம் மெல்ல மெல்ல அடுத்த கட்டம் நோக்கி நகரத் துவங்கியது.
அந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்த போது பட படப்பாக பயந்து போனவளாக இருந்தவள் இப்போது அந்த நினைவுகளில் இனிமையாக உணர்ந்தாள்.
பரவாயில்லை, வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது நமக்கும் சில நல்ல தருணங்கள் இருக்கின்றன என்பதாக இருந்தது அவளது எண்ணம்.