“அது தம்பி அங்க சபையிலே உட்கார அப்பா இருக்கணும். கண்டிப்பா வரணும்ன்னு சொல்லி கேட்டுட்டுகிட்டு இருக்கா” என,
“ஏன்ம்மா போக வேண்டாமா. அப்பா என்ன சொல்றார்?” என்று விசாரித்தான் மகன்.
“அப்பாக்கு போக இஷ்டம் தான் தம்பி. அந்த ராஜேஸ்வரி அம்மாவை நினைச்சா தான் எனக்கு மனசு ஒப்ப மாட்டேங்குது. இந்த மூணு வருஷம் பொங்கல் சீர் கொடுக்க பாரதி வீட்டுக்கு போகும் போதே அவ்வளவு பேசுறாங்க. இப்போ அங்க எல்லார் முன்னாடியும் வைச்சு எதாவது சொல்லிட்டா என்ன பண்றதுன்னு தான்”
“ம்மா.. அவர் தங்கச்சிக்காக அவர் போகணும் நினைச்சா போயிடணும். மத்தவங்க என்ன பேசுறாங்கன்னு எல்லாம் யோசிக்க கூடாது” என்றான்.
“அதுவும் சரி தான் தம்பி. அப்பாவும் இப்படி தான் சொல்றார். இத்தனை வருஷம் தான் அந்தம்மா பேச்சுக்காக பாரதியை விட்டு கொடுத்தாச்சு. இனியும் அப்படி இருந்தா சரிப்பட்டு வராதுங்கிறார்..” என்றவர்,
“அப்புறம் தம்பி அனுஷா வீட்டுகாரர் சொந்த ஊர்ல வீடு கட்டுறார் போல. நாம எதாவது செஞ்சா நல்லா இருக்கும்” என்றார்.
ரகுராம் நிதானம் எடுத்தான். கண்களை மூடி ஏதேதோ யோசித்து மனக்கணக்கு போட்டவன், “செய்யலாம்மா.. நான் பார்த்து சொல்றேன்” என்றான்.
“அப்பா உன்கிட்ட கேட்கவே கூடாதுன்னு சொன்னார் தம்பி. இந்த ஆர்டர் முடிச்சு வர பணத்துல செஞ்சா போதும்ன்னு நினைக்கிறார் போல” என்று பத்மாவும் சங்கடத்துடன் தான் சொன்னார்.
“ம்மா.. நான் பார்த்துகிறேன். விடுங்க”
“அவளுக்கு அங்க ஒரு மரியாதையா இருக்கும் இல்லை தம்பி அதான்”
“புரியுதும்மா. அக்காக்கு நாம செய்யாம வேற யார் செய்வா? எப்போ ஆரம்பிக்கிறாங்களாம்?” என்று கேட்டான்.
“அடுத்த மாசம் ஆகிடும்ன்னு சொன்னா” என்றார் பத்மா.
“சரிம்மா.. அதுக்குள்ள நான் என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கிறேன்” என்றவன், மேலும் பேசி வைத்தான். அதன்பின் வழக்கம் போல் அவன் நாட்கள் கடந்தது.
அருணகிரி தங்கை மகன் நிச்சயத்துக்கு செல்ல, தங்கள் தறியிலே பட்டு புடவை நெய்தார். இந்த மூன்று வருடமாக பாரதிக்கு இப்படி தான் பட்டு நெய்து பொங்கல் சீர் கொடுத்து வருகிறார்.
முதல் வருடம் சென்ற போது பாரதியின் ஆனந்த ஆர்ப்பரிப்பு அண்ணன் நெஞ்சை சுட்டு தான் விட்டது.
வேணியின் கணவர் சுந்தரமும் பொங்கல் சீர் கொடுக்க, ராஜேஸ்வரி இரண்டையும் வைத்து பேசிய பேச்சை தங்கையின் ஆர்ப்பரப்பில் தான் கடந்து வந்தார்.
அருணகிரியின் ஆக பெரிய உறுத்தலே பாரதி இன்னமும் மகளுடனே இருப்பது தான். இப்போது தான் ப்ரவீன் நிச்சயத்துக்காக திருப்பூர் வந்துவிட்டதாக சொன்னார்.
இன்னமும் தணிகைவேலின் கோவம் குறையவில்லையா? இல்லை வேறேதும் காரணமா?
நாளை நிச்சயம் என்ற நிலையில் பாரதியின் வீடு அதற்காக தயாராகி கொண்டிருந்தது. அவர்களின் தொழில் முறை நண்பரின் மகளையே ப்ரவீனுக்கு பேசியிருந்தனர்.
சம அந்தஸ்து என்பதிலே ராஜேஸ்வரி திருப்தி கொண்டுவிட்டார். தணிகைவேல் மனைவியை வரவைத்து அவரிடம் பேசியே முடிவை சொன்னார்.
“இதென்ன அவகிட்ட எல்லாம் கேட்டுகிட்டு. நாம முடிவு எடுத்தா போதாதா?” ராஜேஸ்வரி பேச,
“போதாது. எனக்கு என் அம்மா சொல்லணும்” என்றான் ப்ரவீன்.
“ப்ரவீன் நீ போய் அந்த லோட் என்ன ஆச்சுனு பாரு” தணிகைவேல் மகனை அனுப்பி வைத்தவர், “பிள்ளைங்க வளர்ந்துட்டாங்கம்மா. எனக்கு நீங்க எப்படியோ அவங்களுக்கும் அவங்க அம்மா அப்படி தான்” என்றார் ராஜேஸ்வரியிடம்.
“நானும் அவளும் ஒன்னா?” ராஜேஸ்வரி கோவமாக கேட்க,
“அம்மான்னா எல்லோருக்கும் ஒன்னு தான்ம்மா. பார்த்தீங்க இல்லை நாம இல்லாமலே அவ சொன்னான்னு நிச்சயம் வரை போயிட்டாங்க. அதுலே நம்ம இடத்தை நாம புரிஞ்சுக்கணும்” என்றார் தணிகைவேல்.
‘என்னதான் உயிரை கொடுத்து மகளை வளர்த்தாலும் அவள் அன்று அவள் அம்மாவிற்கு தானே துணை நின்றாள்’ இப்போது வரை.. ம்ஹூம் கடைசி வரையிலும் அவரின் தந்தை பாசத்திற்கு அது மாபெரும் அடி தான்.
தந்தையாயிற்றே. வலியை தாங்கிகொண்டு மகளிடம் பழையபடி தான் உள்ளார். மகளுக்கு அதிலே மகிழ்ச்சி. முன்பை விட அவரிடம் அதிகமாக ஒட்டி கொண்டாள்.
மகன் எப்போதுமே இருபக்கம் என்றாலும் பாரதி தான் அவனுக்கு கூடுதல் பாசம்.
‘அம்மா பிள்ளை!’ என்று ராஜேஸ்வரி இப்போதெல்லாம் அவனை சாட, “உங்க மகன் அளவு எல்லாம் இல்லை” என்று பதில் கொடுப்பான் அவன்.
இதில் பாரதி, தணிகைவேலின் உறவு மட்டுமே ஊஞ்சலாடி கொண்டிருப்பது. முதலில் அவர் மலை ஏறினால் இப்போது பாரதி ஏறி கொண்டிருக்கிறார்.
இருவரும் அவரின் முடிவில் இருந்து இறங்குவதாக இல்லை என்பதாலே, பர்வீனினுக்கு முதலில் திருமணம் நடக்கிறது.
பாரதி எப்போதும் போல வீட்டின் மருமகளாய் எல்லாம் எடுத்து கட்டி செய்து கொண்டிருந்தார். மகனின் நிச்சயம் என்பது அவரின் முகத்தில் மலர்ச்சியை கொடுத்திருந்தது.
தணிகைவேல் எல்லோருக்கும் புது நகை, உடை எடுத்து வந்து கொடுத்தவர், மனைவிக்கு தனியே கொடுத்தார். வைரம் ஜொலித்தது.
பாரதி அமைதியாக வாங்கி கப்போர்டில் வைக்க, தணிகைவேலுக்கு கடுப்பு. “இந்த வயசுல கூட என்னை உன் பின்னாடி அலைய வைக்கிறியா?” என்று கேட்டு வைத்தார்.
பாரதி கப்போர்டுக்குள் தலை நுழைத்து மெலிதாக சிரிக்க, “பையனுக்கு கல்யாணமே நடக்க போகுதுடி. இப்போ போய் என்னை இப்படி படுத்துற?” என்று அவர் கேட்க,
‘பேரன் பேத்தி எடுத்தாலும் பொண்டாட்டின்னா இப்படி தான் டிசைன்’ பாரதி உள்ளுக்குள் கேலியாக சொல்லி கொண்டவர், வெளியே விறைப்பாய் முகம் வைத்து கொண்டார்.
“நாளைக்கு வரைக்குமாவது கொஞ்சம் இறங்கி வா பாரதி. சந்தோஷமே இல்லை” என்றார் தளர்ந்து போய்.
பாரதிக்கு கணவனின் நிலை வருத்தமே. அவர் கை பிடிக்க, தணிகைவேல் மனைவியின் இரு கையையும் இறுக்கமாக பிடித்து கொண்டார்.
ப்ரவீன் ஏதோ கேட்க வந்தவன், அமைதியாக விலகி போய்விட்டான். அப்பா, அம்மாவின் பிணைப்பு தெரியும் அவனுக்கு. ஆனாலும் அப்பா அம்மாவுக்கு நியாயம் செய்யல!
ஜனக்நந்தினி இரண்டு நாள் முன்பே ஊருக்கு வந்துவிட்டிருந்தாள். வருங்கால அண்ணியுடன் ஷாப்பிங் வரை சென்று வந்தாயிற்று.
அங்கு அருணகிரி வீட்டில் ரகுராம் நிச்சயத்துக்கு வரவில்லை என்றுவிட்டான். அனுஷாவையும் நேரிலே சென்று பாரதி அழைத்திருக்க, அவள் முந்தின இரவே குடும்பத்துடன் அம்மா வீடு வந்துவிட்டாள். ராமமூர்த்தி தம்பதி, இவர்கள் எல்லாம் செல்ல, கார் ஒன்றை பேசினர்.
மறுநாள் நிச்சயதார்த்தம். சம்மந்தக்காரர்களின் வீடே மாளிகையாக இருந்த போதும் பெரிய மண்டபத்தில் தான் நிச்சயம் வைத்திருந்தனர்.
யார் பணம் பெரிது என்ற போட்டியே ராஜேஸ்வரி தலைமையில் நடந்து கொண்டிருந்தது. வேணி அதற்கு தூபம் போட, அம்மாவும் மகளும் அதில் பிசி.
எல்லாம் மண்டபம் வந்துவிட, ஏற்பாடுகள் ஆரம்பித்தது.”ம்மா.. இது எங்க வைக்கட்டும்” என்று ஜனக்நந்தினி கேட்க, பாரதி சொன்னபடி வாசலையே நொடிக்கொரு முறை பார்த்திருந்தார். முதல் முறை அவளின் பிறந்த வீடு சபையில் இருக்க போகிறது. நினைக்கவே ஆனந்தம் பொங்கியது.
இத்தனை வருடங்களில் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டது. இருபிள்ளைகளின் காது குத்தில் இருந்து மகளின் சடங்கு வரை எல்லாம் சுந்தரம் தான் செய்தார். எதிலும் பாரதியின் அம்மா வீடு இல்லை.
“என் மருமக அம்மா வீட்ல அவளை கணக்கு கழிச்சு விட்டுட்டாங்க. அதான் என் மாப்பிள்ளையே பெரிய மனசு பண்ணி செஞ்சுட்டு இருக்கார். ம்ம்ம். என்ன பண்ண. அவங்க பாசம் அவ்வளவு தான்” ராஜேஸ்வரி எல்லா பங்க்ஷனிலும் இதையே தான் பேசி கொண்டிருப்பார்.
பாரதிக்கு அது உண்மையே என்று தான் தோன்றும். அவரின் அப்பா திடீர் உடல் நல குறைவால் ப்ரவீன் கருவில் நிற்கும் முன்னே தவறிவிட்டார். அம்மாவிற்கு தன் துயரமே பெரிதாக இருக்க, மகளை கண்டுகொள்ளவில்லை.
“அவளுக்கு என்ன அவ நல்லா தான் இருப்பா” என்ற மகனிடமும் சொல்லி கொள்வார்.
பாரதி தான் ‘என் அப்பா போனார் அம்மா வீடு போயிடுச்சு’ என்று தனிமையில் அழுது கரைவார்.
.
இனி அந்த நிலை அவருக்கு இல்லையே. முன்பே சுந்தரத்திடமும் பேசிவிட்டாள். வேணியின் கணவர் என்றாலும் மிகவும் நல்ல மனிதர்.
“இத்தனை வருஷம் நீங்க தான் என்னை தாங்கி பிடிச்சீங்கண்ணா. நீங்களும் இல்லன்னா.. என்னால் அதை சொல்ல கூட முடியலை” என்று கண் கலங்க,
“எனக்கு தங்கச்சி இல்லை பாரதி. உன்னை என் சொந்த தங்கச்சியா தான் பார்த்தேன். இனியாவது சந்தோஷமா இரு. சபையிலே உன் அண்ணனோடு சேர்ந்து இந்த அண்ணனும் உட்கார்ந்து ப்ரவீன் நிச்சயத்தை முடிச்சு கொடுப்பேன்” என்றார். கேட்கும் சிரமம் கூட கொடுக்கவில்லை அவர்.
“பாரதி வரிசை தட்டு எல்லாம் அடுக்கியாச்சா? என்ன பண்ணிட்டிருக்க. நேரம் ஆச்சு பாரு” என்று வந்தார் ராஜேஸ்வரி.
பாரதி, “இதோ ஆச்சு அத்தை” என்றவர், அண்ணன் இன்னும் வராததில் கலக்கம் கொண்டார்.
மகளுக்கு புரிந்தது அம்மாவை. அவர் கை பிடித்தவள், “வந்திடுவாங்கம்மா” என்றாள்.
“இன்னும் ஏன் வரல? சீக்கிரம் வந்தா என்னவாம்” ஜனக்நந்தினியும் வாசலை பார்த்தாள்.
ராமமூர்த்திக்கு போன் செய்தான் ப்ரவீன். அவர் எடுக்கவில்லை.
“வேலா.. எல்லோரையும் கூப்பிட்டு சபையில உட்கார வை” என்று ராஜேஸ்வரி மகனிடம் சொல்ல,
அவர் மனைவிக்காக, “இன்னும் நேரம் இருக்கும்மா. சிலர் சாப்பிட போயிருக்காங்க, வரட்டும்” என்றார்.