எல்லாம் குளித்து தயாராக இருக்க, முக்கியமானவர்கள் இன்னும் எழவே இல்லை. “அது பிள்ளைங்க தூங்குறாங்க போல. போன் எடுக்கலை” என்றார் பத்மா.
“நேத்து புல்லா அவங்களுக்கு நிக்க கூட நேரம் இல்லாம இருந்துச்சு. அசதி, விடு. நாம முன்னாடி போய் பூஜைக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி வைப்போம்” என்றார்.
ராமமூர்த்தி கேட்டபடி வந்தவர், “அண்ணா சொல்றது சரி தான். நீங்க அங்க முடிச்சுட்டு எனக்கு போன் பண்ணுங்க. நான் கூட்டிட்டு வந்துடுறேன்” என்றார்.
சில கிலோ மீட்டர் தான் என்பதால் சரியென்று மொத்த குடும்பமும் கிளம்பினர். “அவங்களுக்கு குடிக்க எதாவது வச்சிருக்கீங்களா இல்லையா?” மஞ்சுளாவிடம் கேட்டார் ராமமூர்த்தி.
இரண்டு மணி நேரம் சென்றே, அருணகிரி தம்பிக்கு அழைத்தார். சூரியனும் உதித்திருந்தார். ராமமூர்த்தி மகனுக்கு தொடர்ந்து அழைக்க, மூன்றாவது முறை தான் அவன் எடுத்தான். “கோவிலுக்கு போகணும் சாமி” என,
ரகுராம் நேரம் பார்த்து தலையில் தட்டி கொண்டவன், “இதோ சித்தப்பா வந்துட்டோம்” என்று வைத்தவன், தன் கைப்பிடியில் இருந்தவளை எழுப்பினான்.
“ப்ளீஸ்” என்றாள் அவள் கண்களை திறக்காமலே.
“கோவிலுக்கு போகணும்” என, ம்ஹூம் அவள் இன்னும் வாகாக அவனை கட்டிக்கொண்டு படுத்தாள்.
“ஹேய்.. எழுந்துக்கோடி” என்று தோள் பிடித்து அசைக்க, பலனே இல்லை.
“வீட்ல எல்லாம் கிளம்பிட்டாங்க போல. எழுடி”
“இன்னும் கொஞ்ச நேரம்”
“சித்தப்பா நமக்காக வெய்ட் பண்ணியிருக்கார்”
“பைவ் மினிட்ஸ்”
“இவளை” என்று குனிந்து கழுத்து வளைவிலே மெல்ல கடித்து வைத்தான்.
“ஸ்ஸ்ஸ்” பெண் வலிக்கு எழுந்தமர,
“ஓடு ஓடு சீக்கிரம் குளி” என்றான் அவன்.
“எதுக்கு இப்போ கடிச்சீங்க” அவள் முறைக்க,
“வந்து சண்டை போட்டுக்கலாம். இப்போ குளிக்க போடி” என்றான் கணவன்.
“என்னை கடிச்சீங்க இல்லை. நான் இன்னும் பைவ் மினிட்ஸ் தூங்குவேன். நீங்க குளிச்சுட்டு வந்து என்னை எழுப்புங்க” என்றாள் அவள்.
ரகுராம் நேரம் ஆவதை உணர்ந்து வேகமாக குளித்து வர, ஜனக்நந்தினி உடை எடுத்து வைத்து கொண்டிருந்தவள், தானும் குளிக்க சென்றாள்.
ரகுராம் வேஷ்டி, சட்டை அணிந்தவன், “கீழே இருக்கேன். கிளம்பிட்டு வா” என்று கதவு தட்டி சொல்லி சென்றான்.
ராமமூர்த்தி இவனுக்கு காபி நீட்ட, “சாரி சித்தப்பா” என்றபடி வாங்கி கொண்டான்.
“இதுக்கு எதுக்கு சாரி? மறுநாளே பூஜை வைக்கலைன்னா என்ன? எல்லாம் நம்மூர் கிழவிங்களை சொல்லணும். அப்போ இவ்வளவு ஓட்டம் இருந்துச்சா என்ன? தாலி கட்டினமோ சோறு சாப்பிட்டமோன்னு முடிஞ்சு போயிடும். இப்போ ரிசப்ஷன், அது இதுன்னு பெண்டு நிமித்திடுறாங்க” என்றார் அவர்.
ரகுராம், “நீங்க குடிச்சீங்களா?” என்று கேட்டு கொண்டவன், மிகவும் தேவையாக இருந்த காபியை முழுதாக காலி செய்தான். “இன்னும் எடுத்துக்கோ. பிளாஸ்க் நிறைய தான் வைச்சிட்டு போயிருக்காங்க” என்று ஊற்றி கொடுத்தார்.
ஜனக்நந்தினியும் விரைவில் வந்துவிட, அவளுக்கும் காபி கொடுத்தே கிளம்பினர். ராமமூர்த்தி கார் எடுக்க, ரகுராம் வழியில் பூ கடையில் நிறுத்தி மனைவிக்கும், மற்றவர்களுக்கும் வாங்கினான். “அவங்களுக்கு எதுக்கு, எல்லாம் இருக்கும்?” என்றார் ராமமூர்த்தி.
“இருக்கட்டும் சித்தப்பா” என்றவன், பண்டிலை மனைவியிடம் கொடுத்தவன், அவளுக்கு தனியே இருந்ததையும் கொடுத்தான்.
அவன் கொடுத்த புடவையையே பெண் உடுத்தியிருக்க, அடிக்கடி கண்கள் அவள் பக்கம் சென்று வந்தது. கோவில் வந்துவிட, ஜனக்நந்தினி அவள் கையால் அரிசி இட்டு பொங்கலை முடித்து வைக்க, பூஜை ஆரம்பமானது.
மாலை மாற்றி கொண்டு, கோவிலை சுற்றி வந்தனர். உணவும் அங்கேயே என்பதால், எல்லாம் முடித்து கிளம்பினர். வீடு வரவும், உறவுகள் அவரவர் வீடு செல்ல, குடும்பத்தினர் மட்டும் மிஞ்சினர்.
“நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. சாயந்திரம் திருப்பூர் கிளம்பலாம். நான் பாரதிகிட்ட பேசிடுறேன்” என்றார் அருணகிரி.
மணமக்கள் விட்டால் போதும் என, ரூம் சென்று கட்டிலில் விழுந்தனர். “ஹேய் புடவை மாத்திக்கோடி” ரகுராம் சொல்ல,
ரகுராம் சிரித்தபடி அவளை அணைத்து கொண்டான். அடுத்த ஐந்தாம் நிமிடம் இருவரும் நல்ல தூக்கத்தில்.
மதிய உணவுக்கும் எழவில்லை. வீட்டினரும் அவர்களை தொந்தரவு செய்யவில்லை. முன் மாலை போல மறுவீடு அழைத்து செல்ல என்று ப்ரவீன் வந்தான்.
அவனை வரவேற்று பலகாரம் கொடுத்து, ரகுராம்க்கு போன் செய்தனர். “மறுவீடு போகணும் தம்பி. ப்ரவீன் வந்துட்டார்” என்றார் பத்மா.
“வந்துடுறோம்மா” என்று வைத்தவனுக்கு இப்போது தான் கொஞ்சம் நன்றாக இருந்தது. ஜனக்நந்தினியும் புத்துணர்ச்சியுடன் எழுந்துவிட, இருவரும் கிளம்பி வந்தனர்.
“வாங்க” என்று பிரவீனை வரவேற்றான் ரகுராம்.
“ண்ணா” என்று பெண் அண்ணன் கை பிடித்து கொண்டாள். அவளின் மலர்ந்த முகத்தில் அண்ணனுக்கும் மகிழ்ச்சி.
புது தம்பதிகளுக்கு பலகாரம் கொடுத்து ப்ரவீனுடன் மறுவீடு அனுப்பி வைத்தனர். இரவு போல திருப்பூர் வந்துவிட்டனர். பாரதி இருவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்தார்.
நெருங்கிய உறவுகள் இருக்க, ரகுராம் எல்லோரிடமும் பேசினான். ராஜேஸ்வரி பேத்தியை பக்கத்தில் அமர வைத்து பேசி கொண்டிருந்தவர், ரகுராமிடம் தலை மட்டுமே அசைத்தார். அவனும் அதையே செய்து சென்றுவிட, அவருக்கு பொறுமல் தான்.
“வயசுல பெரியவங்ககிட்ட வணங்கி பேசினா குறைஞ்சு போயிடுவானா? அந்தஸ்து பார்க்காம என் பேத்தியை கொடுத்திருக்கேன். மரியாதை தெரியுதா பார்” என்று வேணியிடம் பேச,
“ம்மா.. என்ன இது. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்று பதட்டத்துடன் அவரை அடக்கினார் வேணி.
அண்ணன் மகள் மீது பாசம் கொண்டவருக்கு, அம்மாவின் பேச்சை அச்சத்தை கொடுத்தது. மறுநாளே இப்படி பேசி வைக்கிறாங்களே. அந்த தம்பி காதுல விழுந்துட்டா என்ன ஆகும்? வேணி சுற்றும் முற்றும் பார்த்து கொண்டார்.
“கேட்டது அவ. திட்டு எனக்கு” பிரவீன் முணுமுணுத்து கொண்டான். பக்கத்தில் இருந்த ரகுராம், ராக்கி சிரித்துவிட, “எல்லாம் என் நேரம்” என்றான் ப்ரவீன்.
உறவுகளுக்கு பந்தி நடக்க, அவர்கள் ஒவ்வொருவராக கிளம்பினர். சுந்தரம், இவர்கள் குடும்பம் மட்டும் மிச்சமிருக்க, “எங்க உங்க தம்பி?” என்று கேட்டான் ரகுராம்.
“டிரெக்கிங்க் கிளம்பிட்டான்” என்றான் ராகேஷ்.
“அவனுக்குன்னு ஒரு பெரிய சர்க்கிள் வைச்சிருக்கான் ராம். சைக்கிளிங், பைக் ட்ரிப், டிரெக்கிங்க்ன்னு எல்லாம் அந்தந்த சீசனுக்கு நடக்கும். பணத்தை எப்படி அனுபவிக்கணும்ன்னு அவன்கிட்ட தான் கத்துக்கணும்” என்றார் சுந்தரம்.
அவர் பேச்சில் வருத்தம் இருந்ததை உணர முடிந்தது. “இப்போ என்ன மாப்பிள்ளை. என் பேரனுக்கு பணம் இருக்கு. அனுபவிக்கிறான். அதுல என்ன தப்பு?” என்று வந்தார் ராஜேஸ்வரி.
“ஒரு தப்பும் இல்லை அத்தை. சம்பாதிக்க தான் நானும், அவன் அண்ணாவும் இருக்கோம் இல்லை” சுந்தரம் கேலியாக சொன்னார்.
“அதெல்லாம் நாள் வந்தா அவனும் சம்பாதிப்பான்”
“எப்படி ஆடி போய் ஆவணி வந்தாவா” ராக்கி சிரிக்க,
ராஜேஸ்வரிக்கு செல்ல பேரனை திட்ட முடியவில்லை. “ராக்கி நீயே உன் தம்பியை எல்லார் முன்னாடி விட்டு கொடுக்கலாமா?” என்றார் மனத்தாங்கலுடன்.
“இதுல விட்டு கொடுக்க என்ன இருக்கு அத்தை. இங்க எல்லாம் நம்ம பேமிலி தான். அதோட தம்பி வாழ்க்கை பத்தி அவனுக்கும் அக்கறை இருக்கு” என்றார் சுந்தரம்.
ராஜேஸ்வரி அதை தொடர விரும்பாமல், “ஆர்த்தி ஏன் ரிசப்ஷனுக்கு வரலை?” என்று ப்ரவீனிடம் கேட்டார்.
ப்ரவீன் முகம் இறுக, “டையர்டா இருந்திருக்கும். விடுங்க பாட்டி” என்றான்.
“அதெப்படி விடுறது? மண்டபம் என்ன பத்து மைல் தொலைவா இருக்கு? வீட்டுக்கு ஒரு மருமக, என் பேத்தி அண்ணியா இருந்து கல்யாணத்துக்கு தான் எதையும் செய்யல. ரிசப்ஷனுக்கு வந்து தலை காட்டிட்டு போக கூடவா கஷ்டம்” என்று கேட்டார்.
ப்ரவீனுக்கு இவர் எதையோ கிளப்பி விட்டுவிட்டார் என்று புரிந்து போனது, அதே போல, அந்த நேரத்துக்கு ஆர்த்தியை அழைத்து கொண்டு அவர் அப்பா மனைவியுடன் வந்துவிட்டார்.
“வாங்க.. வாங்க” என்று வரவேற்ற குடும்பத்தார் முகம் பார்த்து கொண்டனர்.
ஆர்த்தி கண்கள் சிவந்திருக்க, அழுதிருக்கிறாள் என்று புரிந்து போனது. ஆர்த்தியின் அம்மா யாரையும் பார்க்க முடியாமல் அமர்ந்திருக்க, ஜனக்நந்தினியிடம் வந்த ஆர்த்தி, “சாரி.. நான்.. என்னால் ரிசப்ஷனுக்கு வர முடியல” என்றாள்.
“அச்சோ அண்ணி அதுக்கெதுக்கு சாரி எல்லாம், நீங்க விடுங்க” என்று அவள் கையை பிடித்து கொண்டாள் ஜனக்நந்தினி.
“எங்களை மன்னிச்சிடுங்க. எனக்கு மினிஸ்டர் கூட ஒரு முக்கியமான மீட்டிங். இன்னைக்கு விட்டா என் தொழில்ல கை வைச்சிடுவாங்க. அதான் தவிர்க்க முடியாம போயிட்டேன். இவங்க ரிசப்ஷன்க்கு வரலைங்கிறதே எனக்கு தெரியல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ராஜேஸ்வரி அம்மா சொன்னதும் தான் தெரிஞ்சது, கேட்டா ஏதேதோ காரணம் சொல்றாங்க” என்று ஆர்த்தியின் அப்பா இப்போதும் அவர்களை கோவமாக பார்த்து சொல்ல,
ஆர்த்தி வராதது அவர்களுக்கும் வருத்தம் தான், மண்டபத்தில் எல்லாம் கேட்டுவிட்டனர் ஆனால் மனிதர் மன்னிப்பு கேட்கும் போது என்ன செய்ய?
“ஆர்த்தி.. முதல்ல இந்த தண்ணீர் குடி” என்று பாரதி நீட்ட, அத்தை என்று அவர் கை பிடித்த மருமகளுக்கு கண்ணீர் வந்துவிட்டது. பாரதி என்ன நினைத்திருப்பார் என்பது மிகவும் உறுத்தியது.
ப்ரவீன் வந்ததில் இருந்து மனைவியை நெருங்காமல் விலகி நிற்க, ஏதோ பிரச்சனை என்று புரிந்தது.
ராஜேஸ்வரி, “உடம்பு ஏதாவது செய்தா உனக்கு?” என்று ஆர்த்தியிடம் கேட்டார், அவளின் வாடி வதங்கிய தோற்றம் அவரை கேட்க வைத்தது.
“இல்லை” என்று ஆர்த்தி சொல்ல,
“என் மக வரணும்ன்னு தான் கிளம்பியிருக்கா. என் வீட்டம்மா தான் ஏதேதோ சொல்லி கலாட்டா பண்ணியிருக்கா” என்றார் ஆர்த்தியின் அப்பா.
“ஏம்மா எங்க வீட்டு மருமக, எங்க வீட்டு ரிசப்ஷனுக்கு வரதில உனக்கு என்ன பிரச்சனை?” என்று ராஜேஸ்வரி கேட்க,
அவர் வாய் திறக்க வேண்டுமே?
“பிள்ளை பெக்க தான் உங்க வீட்டுக்கு அனுப்பியிருக்கோம். பார்த்துக்கோ” என்று ராஜேஸ்வரி சொல்ல,
“உங்க வீட்டு பிள்ளை என்னை கல்யாணத்துல வைச்சு வாங்கன்னு கூட கூப்பிடலை” என்றார் அவர்.
“திரும்ப ஆரம்பிக்காத” என்று அவர் கணவர் அதட்ட,
“என் பேரனுக்கு மரியாதை கொடுக்க தெரியும். நீ என்ன பண்ணன்னு சொல்லு முதல்ல” என்று கேட்டார் ராஜேஸ்வரி.
“நான் அவர் அம்மா”
“பாட்டி.. இந்த பேச்சை இதோட விடுங்க” என்றான் ப்ரவீன் இடையிட்டு.
“அவன் அம்மாவா, என் மருமகளை நீ என்ன பேசின, சொல்லு முதல்ல” என்று நின்றார் ராஜேஸ்வரி.
“பாட்டி விடுங்கன்னு சொல்றேன் இல்லை”
“ஏன். உன் மாமியாரை காப்பாத்த நினைக்கிறியா”
“அவர் என்கிட்ட சண்டை போட்டுட்டு சாப்பிடாம கூட வந்துட்டார், அவங்க அம்மாவோட பிறந்த வீடு”
“உங்களை நிறுத்துங்கன்னு சொன்னேன்” என்று கத்தினான் ப்ரவீன். ரகுராம் அங்கிருப்பதில் அவனுக்கு பதட்டமே.