அத்தியாயம் 26
இத்தனை நாட்களாகத் தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கையில் மறுபடிக் கல்லெறிந்து குழப்ப வந்து விட்டாளா இவள் என்ற எண்ணம் தோன்றி விட ஆத்திரம் அணைமீற அந்த நேரம் குளியலறையைத் திறந்து கொண்டு வெளியே வந்த அமுதனைக் கவனிக்காமல் பேச, இல்லையில்லை, ஏச ஆரம்பித்தாள்.
“ஏய்! நீ எதுக்குடி என் மாமனுக்கு ஃபோன் பண்ணுத? அதான் அவர் வேணாம்னு தலை முழுகிட்டுப் போய்ட்டேல்ல. ஊருக்கு முன்னால எம் மாமனத் தலை குனிஞ்சு நிக்க வச்சுட்டு இத்தன வருஷம் கழிச்சு இப்ப என்னத்துக்குப் பேசுத?”
குளியலறையில் இருந்து இடுப்பில் சுற்றிய துவாலையுடன் வெளியே வந்தவன் என்ன நடக்கிறது எனப் புரியாமல் ஒருகணம் திகைத்து நின்றாலும் அடுத்த கணமே நிலைமை புரிந்து அவளருகே ஓடி வந்தான்.
“ராசாத்தி! என்னதிது மருவாதி இல்லாம? ஃபோனைக் குடு!”
அவன் அலைபேசியைப் பிடுங்க முற்பட, குமுதாவோ அவள் நின்றிருந்த நிலையிலிருந்து திரும்பி, குனிந்து, நிமிர்ந்து அலைபேசி வைத்திருந்த கையை நீட்டி, மடக்கி என அவனுக்குப் போக்குக் காட்டிக் கொண்டே தொடர்ந்து இன்னதென்றில்லாத வார்த்தைகளால் வேதவல்லியை அர்ச்சனை செய்த வண்ணமிருக்க அவளைச் சுற்றி சுற்றி வந்தவன் அலைபேசியைப் பிடுங்க முடியாமல் தவித்தான்.
இங்குமங்கும் ஓட துவாலை வேறு இடையிலிருந்து நழுவ அதை ஒரு கையால் பற்றிக் கொண்டு, கொஞ்சம் அடங்காமல் பேசிக் கொண்டே இருப்பவளை முறைத்தவன் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவள் இடையை வளைத்துத் தன் கைப்பிடியில் நிறுத்தி அவள் தாடையை ஒரு கையால் அசையாமல் தாங்கி, விடாமல் பேசிக் கொண்டிருந்த அவள் இதழ்களுக்குத் தன் இதழ்கள் கொண்டு தாழிட்டான்.
அதற்கு மேல் அவளது முனகல்கள் அவன் இதழ்களுக்குள் முடிந்து போக அவள் இதழ்களை விடாமல் ஒரு கையால் அவள் தோளைப் பற்றி அவள் கையின் சுவடறிந்து அலைபேசியைப் பிடுங்கினான்.
அலைபேசியைக் காதில் வைத்தவன் வினாடி நேர இடைவெளியில் இதழ்களைப் பிரித்தெடுத்து “நான் கூப்பிடுறேன் வேதா” என்று சொல்லி விட்டு அலைபேசியை அணைத்துக் கட்டிலில் போட்டு விட்டு மீண்டும் அவள் இதழ்களில் குடிபுகுந்தான்.
முதலில் அவளை வாயை மூட வைப்பதாகவும், வரைமுறையின்றிப் பேசியவளைத் தண்டிப்பதாகவும் நினைத்து அவள் இதழ்களை முற்றுகை இட்டவன் செய்கை, ஒரு கணத்தில் முழுவதுமாகத் தடம் மாற, இடையை வளைத்திருந்த கையை இன்னும் இறுக்கியவன் அதுவரை தனக்குத்தானே விதித்திருந்த கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்து தங்குதடையில்லாமல் முன்னேற ஆரம்பித்தான்.
இதழ்களை விடாமல் தன்னோடு அவளை அணைத்துத் தூக்கியபடியே கட்டிலை நெருங்கியவன் அவளோடு கட்டிலில் சரிந்து இதழ் யுத்தத்தைத் தொடர அத்தனை நேரம் அவன் அதிரடியில் மயங்கி சுயம் மறந்திருந்தவள் கட்டிலில் விழுந்த அதிர்ச்சியில் கொஞ்சம் சுதாரித்தாள்.
இதுவரை எத்தனையோ முறை பட்டும் படாமல் பூவால் வருடுவது போல் அவன் இதழணைப்புக்களில் இதம் கண்டிருந்தவளுக்குக் காட்டாற்று வெள்ளம் கரையுடைத்தாற் போன்ற இந்த அணுகுமுறை புதிது.
மேலும் மேலும் அவன் முன்னேறிக் கொண்டே போக அவளோ ஒன்றும் புரியாமல் தடுமாறினாள்.
அவன் உடல் வழி அவன் உணர்வுகளை அறிந்து கொண்டவள் விழிகள் நம்ப மாட்டாத அதிர்ச்சியில் விரிய, மூச்சுக்காற்றுக்காக அவன் இதழ்களைப் பிரித்த சிறிய இடைவெளியில் அந்த நேரத்திலும் அவனிடம் விளக்கம் கேட்க “மாமா!” எனத் தொடங்க, அவளது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கண்டு கொள்ளாதவனாக அமுதனவன் அவள் இதழ்வழி வழிந்த அமுதமொழிகளை அமுதாக்கி உண்ண முற்பட, குமுதமலர்விழியாளோ கிடைத்த இடைவெளியில் எல்லாம் கேள்வி எழுப்ப முயல, ஒரு கட்டத்தில் அவள் முயற்சிகளால் பொறுமையை இழந்தவனாகக் கரகரப்பான குரலில் “எட்டு வருஷ ஏக்கம் ராசாத்தி. எதுவானாலும் பொறவு கேளேன்” என்றிருந்தான்.
வியப்பால் விரிந்திருந்த அவளின் விழிகளை ஊடுருவிப் பார்த்து அழுத்தமான குரலில் அவன் மொழிய அந்தக் குரலில் அவள் ஐயப்பாடுகள் எல்லாம் அப்பால் விலகிச் செல்ல அவள் அமைதி கண்டு அவனிதழ்களில் அழகான புன்னகை ஒன்று உதயமாக அவளை அப்படியே ஆலிங்கனம் செய்து கொண்டவனின் அகன்ற மார்பில் அடைக்கலமாகினாள் அணங்கவள்.
தடையனைத்தும் விலக அணைகள் மடைதிறக்க அங்கே வானமுதம் வற்றாது பொழிந்து இதுவரை மொட்டாகக் குவிந்திருந்த குமுதமலரை மலர்ந்து மடல் பூக்கச் செய்தது.
………………………………………………………………………………………………………….
காலை நான்கு மணிக்கு அமுதனுக்கு வழக்கம் போல் விழிப்பு வர, இமைகளைப் பிரிக்க, அவன் இடக்கை வளைவில் அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கிச் சுருண்டிருந்த மங்கையவளைக் கண்டதும் உற்சாகம் ஊற்றெடுத்தது.
முந்தைய நாளிரவு அவளிடம் சொன்னது போலவே எட்டு வருட ஏக்கத்தையும் ஓரிரவில் தணித்து விட முற்பட்டவனின் முயற்சியில் மங்கையவள் மிரண்டுதான் போனாள். அவள் மிரட்சியைக் கண்டாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவனாக இதுவரை உள்ளத்தளவில் சரிபாதியாக இருந்தவளை உடலளவிலும் சரிபாதியாக்கிய பின்னரே ஓய்ந்தான்.
விளைவாக, கல்லூரியில் சேர்ந்த பிறகும் நான்கு மணிக்கு எழுந்து விடும் வழக்கமுள்ள குமுதா அன்று சிறியதொரு அசைவுமில்லாமல் உறங்கக் கண்டவனின் இதழ்கள் புன்னகையில் விரிய போர்வைக்குள்ளேயே அவள் இடையை இறுக்கிக் கொண்டே அவனும் உறக்கத்தைத் தொடர்ந்தான்.
நேரம் ஐந்தைக் கடந்திருக்க இப்போது நன்றாக விழிப்பு வந்து விட மெதுவாக அவளையும் எழுப்பினான்.
“ராசாத்தி!”
“ம்ம்ம்.”
“ராசாத்தி!”
“என்ன மாமா?”
“நேரமாச்சு எழும்புத்தா”
“ம்ம்ம்.”
“அடியேய் நேரமாச்சு. நீ எழும்பினாத்தான் நான் எழும்ப முடியும்.”
‘என்னது நான் எழுந்தால்தான் மாமா எழ முடியுமா! என்ன சொல்கிறார் இவர்? உறக்கம் கலைந்தால் எழுந்து போக வேண்டியதுதானே?’ என்றெல்லாம் மனத்தில் எண்ணிக் கொண்டே இமைகளைச் சிரமப்பட்டுப் பிரித்தவளுக்கு அவளிருந்த கோலம் மனத்தில் உறைக்க முதல் நாளிரவு நடந்ததெல்லாம் நினைவு வர முகம் மொத்தமும் ரத்தமாகச் சிவந்து போனது.
ரசனையுடன் பார்த்தவன் அவள் நாடி பற்றி நிமிர்த்தி அவள் கண்களுக்குள் பார்த்தான். நாணத்துடன் தலை குனிய முயன்றவளைத் தடுத்தவன்,
“எழும்பவே மனசில்ல. ஆனா எட்டு மணிக்குப் பஞ்சாயத்து இருக்கு. நீயும் தயாராகணும்” எனவும் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தாள்.
ஆம்! முதல் நாளிரவு அவள் உறங்கியதும் அலைபேசியை எடுத்துப் பார்க்க அதில் வேதவல்லி எல்லா விவரங்களையும் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தாள்.
அவள் முகத்தில் கலவரத்தைக் கண்டவன் மீண்டும் அவளை இழுத்தணைத்து “பயப்பட ஒண்ணுமில்லடா. எல்லாம் நல்ல விஷயம்தான். உங்கிட்ட நிறையப் பேசணும். சொல்லணும். இப்ப நேரமில்ல. ராத்திரி பேசிக்கிடலாம்.எழும்பிக் கெளம்பு. காலேஜுக்கு லீவு சொல்ல முடியுமா? இல்லைன்னாப் பஞ்சாயத்து முடிஞ்சதும் கொண்டு போய் விடுதேன்.”
குழப்பமாகவே பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டவன் எப்போதும் போல் அவள் இதழ்களில் முத்தமிட்டு அவளை திசைதிருப்ப முயல அவனை முறைத்தவள் எழுந்து சென்று விட்டாள்.
அவனுக்கும் அவள் மனநிலை புரிந்தது. எனவே எதுவும் பேசாமல் எழுந்து தயாராக ஆரம்பித்தான்.
எட்டு மணிக்குப் பஞ்சாயத்துக்கு வந்து நின்றவர்களில் நடுநாயகமாக நின்ற வேதவல்லியைப் பார்த்தவள் உடல் அதிர்ச்சியில் விறைக்க அதை உணர்ந்தவன் அவளைத் தோளோடு அணைத்திருந்தான்.
அவள் காதருகில் “ராசாத்தி! இன்னுமா எம் மேல நம்பிக்க இல்ல? பயப்படத் தேவையில்ல செல்லம்” எனவும் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கலவரம் குறையவில்லையாயினும் “இல்ல மாமா! பயப்படல” என்று விட்டு அவனை இன்னும் ஒட்டி நின்று கொண்டாள்.
பஞ்சாயத்துத் தலைவர் வேதவல்லியைப் பார்த்து,
“நீ வேதவல்லிதானத்தா? நம்ம மாறன் தம்பியை வேணாம்னு கடுதாசி எழுதி வச்சுட்டுப் போனவதான நீயி?”
ஃப்ளொரெசென்ட் பச்சை நிறத்தில் அழகான டிசைனர் சுடிதார் அணிந்து கம்பீரமான முகபாவனையுடன் இருந்தவள் கூட்டத்தைத் தன் விழிகளால் ஒருமுறை வலம் வந்தாள்.வேதவல்லியின் குடும்பத்துக்கும் தகவல் அனுப்பப்பட்டு அவர்களும் ஒரு பக்கம் வந்து நின்றிருக்க அவர்களைக் கண்டவளின் விழிகள் பளபளக்க, பேச ஆரம்பித்தாள்.
“ஆமாங்க! நான் வேதவல்லிதான்.இந்த மாறன் மாமாவைக் கல்யாணம் பண்ணிகிட்டு, ஒரே வாரத்துல உங்க கூட வாழப் பிடிக்கலைன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிப் போனவ நாந்தான்”
“இப்ப என்னத்துக்காத்தா பஞ்சாயத்தைக் கூட்டியிருக்க?”
“சில உண்மைகளைச் சொல்லணும். அதுக்குத்தான்”
“பொறவு சொல்ல ஆரம்பி.அதுக்குத்தானே காத்திருக்கோம்.”
“மொதல்ல என்னைப் பத்தி சில விஷயங்கள் சொல்லணும்.”
“சொல்லுத்தா!”
அவள் சொல்ல ஆரம்பிக்கவும் அமுதனுக்கு அவர்கள் திருமண நாள் இரவு நினைவு வந்தது. இப்படித்தானே அன்றிரவும் அவனிடம் விஷயங்களைக் கூறினாள். அந்தக் காட்சி அவன் மனக்கண்முன் விரிந்தது.
அவர்கள் திருமணம் முடிந்த அன்று இரவு மனத்தில் நிறைந்திருந்தவளைத் தன் கைகளிலும் நிறைத்துக் கொள்ள ஆவலாய்க் காத்திருந்தானவன்.
அன்ன நடையிட்டு வந்தவளோ கதவைத் தாழிட்ட மறு வினாடி வேரறுந்த மரம் போல் அங்கம் குலுங்கி அதிர அழுதபடியே அவன் கால்களைப் பணிந்திருந்தாள்.
பதறிப் போனவனாக,
“யத்தா! என்னாச்சு? எழும்பு.எழும்பு மொதல்ல”
அவள் செய்கையில் இத்தனை நாட்கள் மனத்தில் கொண்டிருந்த நெருக்கம் கொஞ்சம் நகர்ந்து போக, அவன் மனத்தின் மூலையில் ஏதோ ஒன்று ‘அவள் உனக்கு உரிமையானவள் இல்லை அவளைத் தொடாதே’ என அறிவுறுத்த, தொட்டெழுப்பத் தயங்கி வாய் வார்த்தையாகவே அவளை எழுப்பிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக எழுந்தவளைக் கட்டிலில் அமரச் சொல்லி விட்டு குவளையில் நீரூற்றி அருந்தக் கொடுத்தான்.
அவள் குடித்து முடிக்கவும் “போய் முகம் கழுவிட்டு வா” என அனுப்ப அவளும் அவன் சொன்ன வண்ணமே செய்து வந்தமர்ந்தாள்.
அவளெதிரில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தவன்,
“இப்பச் சொல்லு. என்ன விசயம்?”
“எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல”
புருவம் சுருக்கிப் பார்த்தவன்,
“இத நான் அன்னிக்கு ஒங்க வீட்ல வச்சுக் கேட்டப்பமே சொல்லி இருக்கலாம்லா?”
அவள் அமைதியாக இருக்கவும் அவனுக்குக் கோபம் வந்தது. இன்னொரு பக்கம் வேறு யாரையும் காதலித்து இருப்பாளோ எனத் தோன்ற இன்னொருவனிடம் தோற்றுப் போனேனா எனத் தன்னகங்காரம் தோன்ற அதை அவளிடம் கேட்டே விட்டான்.
“வேற யாரையும்…”
அவன் முடிக்கும் முன் இடையிட்டவள் “அப்படில்லாம் எதுவும் இல்ல” என்றிருக்க இனம் புரியாத வகையில் அவனுக்கு ஒரு ஆசுவாசம் பிறந்தது.
“பொறவு என்னதான் ப்ரச்சனை சொல்லு”
“நான்…நான்…முழுசா எல்லாம் சொன்னாத்தான் உங்களுக்குப் புரியும்”
“சொல்லு!” என்றவன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்தான்.
“நான் பத்தாவதுல மார்க்கு ரொம்பக் கொறைச்சல்.படிப்புல எனக்கு ஆர்வம் இல்லை.இங்க்லிஷ், தமிழ்ல ஓரளவு எடுத்தாலும் மத்ததுல எல்லாம் பாஸ் பண்ணினதே பெருசுதான்.சின்ன வயசுல இருந்தே டிசைனிங், அதாவது துணிகளை வித விதமா தைக்கிறது,அழகா ட்ரெஸ் பண்ணிக்கிறது,என்னை அழகா வச்சுக்கிறது இதிலெல்லாம் ரொம்ப ஆர்வம். அதுனாலதான் பத்தாவது முடிச்சதும் ஹோம் சயன்ஸ் எடுத்தேன்.அப்புறம் காலேஜுல சேர்ந்து ஃபேஷன் டெக்னாலஜி படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா என் அண்ணனுங்க இவ இங்க படிச்சே மார்க்கு ஒன்னும் கிழிக்கல. இன்னும் திருநெல்வேலி போய்த்தான் படிக்கப் போறாளக்கும்னு சொல்லி என்னப் போக விடல”
“எவ்வளவோ பிடிவாதம் பிடிச்சுப் பார்த்தேன்.பட்டினி கிடந்து பார்த்தேன்.விட மாட்டேன்னுட்டாங்க. அப்புறம் எங்க கிராமத்துலயே ஒருத்தர் சொல்லிக் குடுத்த ப்யூட்டிஷியன் கோர்ஸ் பண்ணினேன்.ஆனா எனக்கு ட்ரெஸ் டிசைனிங் படிக்கணும்னுதான் ஆசை.”
“ஒரு தடவை ஒரு க்றிஸ்டியன் ஃப்ரெண்ட் வீட்டுக் கல்யாணத்துல கல்யாணப் பொண்ணுக்கு மேக்கப், இன்னும் ட்ரெஸ் பண்ணி விடுறது இதெல்லாம் நான் செய்ஞ்சது பார்த்து அந்தக் கல்யாணத்துக்கு வந்திருந்த வில்லியம் எங்கிட்ட வந்து பேசினாரு.”
“உங்களுக்கு நல்ல திறமை இருக்கு. நீங்க படிப்பை நிப்பாட்டிட்டதா சொன்னாங்க. நீங்க ஏன் ஃபேஷன் இன்ஸ்டிட்யுட்ல சேர்ந்து படிக்கக் கூடாதுன்னு கேட்டார்.”
“நான் என் வீட்டு நிலைமையை எடுத்துச் சொன்னேன். அப்போ அவர் நான் வீட்ல கன்வின்ஸ் பண்ணிக் கிளம்பி வந்தா எனக்கு உதவி செய்றதா சொன்னார். நானும் யோசிக்கிறதா சொன்னேன்.”
“அப்போதான் எனக்கு உங்களோட கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க.நான் எவ்வளவோ அழுது அடம்பிடிச்சுப் பார்த்தேன்.ஆனா வீட்ல சம்மதிக்கலை. நீங்க என்னைப் பெண் பார்க்க வந்தப்போ உங்ககிட்டச் சொல்லிடலாம்னு நினைச்சேன். ஆனா நான் நிக்கிற இடத்துக்கு எதிரே மொபைல் கேமராவை வச்சு நான் பேசுறதை அடுத்த ரூம்ல இருந்து என் அண்ணனுங்க பார்த்துகிட்டுதான் இருந்தாங்க. ஏதாவது தப்பாப் பேசினா என்னையும் கொன்னுட்டுக் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குவோம்னு மிரட்டினாங்க. அதுனாலதான் நான் மறுத்துச் சொல்லாமக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்.”
“அப்புறமும் என்னை எந்த நேரமும் காவல் காத்துகிட்டே இருந்தாங்க. அதுனால ஃபோன் மூலமாவோ இல்ல ஆள் மூலமாவோ கூட எனக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லைங்கிறதை உங்களுக்குத் தெரிவிக்க முடியாமலே போய்டுச்சு. அது மட்டுமில்லாம உங்ககிட்ட நான் விஷயத்தைச் சொல்லி நீங்க கல்யாணத்தை நிறுத்தினாலும் வேற யாரையாவது கொண்டு வந்து நிறுத்துவாங்க.”
“எனக்கு உங்களைப் பிடிக்காம இல்ல. எனக்குப் படிக்கணும். நான் ஆசைப்பட்ட மாதிரி முன்னேறணும். அதுக்குக் கல்யாணம் ஒரு தடையா இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அவ்வளவுதான். உங்களைப் பத்தி எங்கிட்ட சொன்ன எல்லாரும் நீங்க ரொம்ப நல்ல மாதிரின்னு சொன்னாங்க. அதுனால கல்யாணம் முடிஞ்சதும் உங்ககிட்டயே உதவி கேக்கலாம்னு நினைச்சுத்தான் அமைதியா இருந்துட்டேன்”
குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தவன்,
“இப்ப நான் என்ன ஒதவி செய்யணும்னு எதிர்ப்பார்க்குத?”
“நான் மேற்கொண்டு படிக்கணும்.எனக்கு மும்பை போகணும்.அங்க பெரிய பெரிய ஃபேஷன் டிசைனிங் காலேஜெல்லாம் இருக்குது.அங்க படிச்சு அதுக்கப்புறம் பாரிஸ், இட்டாலின்னு உலகத்தோட பெரிய, ஃபேஷன் உச்சத்துல இருக்கிற நகரங்களுக்குப் போகணும்.உலகத்துல தலைசிறந்த ஃபேஷன் டிசைனர் ஆகணும்”
கண்களில் கனவோடு விவரித்துக் கொண்டே போனவளைப் பார்த்தவன் ஏனோ மனத்தால் இன்னுமே அவளை விட்டு விலகினான். ஆனாலும் பெற்றவர்கள் பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணத்தை அப்படியே விட்டு விடவும் மனம் இல்லாதவனாக,
“உனக்குப் படிக்கணும். அம்புட்டுத்தானே! இப்போ என்ன? என் பொண்டாட்டியாவே போய்ப் படி. அதுக்கு ஏன் கன்னாலத்துல விருப்பமில்லன்னு சொல்லுதே?”
சங்கடமாக அவனைப் பார்த்தவள்,
“அப்பிடி இல்ல.இது முழு முயற்சியோட செய்ய வேண்டிய வேலை. உங்களுக்கோ ஒரு பெரிய தொழில் இருக்கு.அதை விட்டுட்டு என் கூட வந்து உங்களால இருக்க முடியுமா? ஊரு விட்டு ஊரு அலைஞ்சுகிட்டு இருக்க முடியுமா? படிப்பை மட்டும் முடிச்சுட்டு இங்க வந்துடறதா இருந்தாலும் பரவாயில்ல. ஆனா நான் அங்கேயே மொத்தமா இருந்துடற யோசனையில இருக்கேன். படிச்சு முடிச்சுட்டு இந்த கிராமத்துக்கு வந்து என்ன செய்ய முடியும் சொல்லுங்க? என்னோட ஃபாரின் வந்து உங்களால செட்டில் ஆக முடியுமா? எல்லாத்துக்கும் மேல இதைப் பத்தின விவரமெல்லாம் உங்களுக்கு, ஏன் எனக்குமே அதிகம் தெரியாது”
“அந்த வில்லியம்னு யாரையோ சொன்னியே அவருக்குத் தெரியுமா?”
“ம்ம்ம்.அவர் மும்பைல ட்ரெஸ் டிசைனராதான் இருக்காரு. நான் கல்யாணத்துக்குப் போனேன்னு சொன்னேனே, அந்தப் பொண்ணோட ஒண்ணு விட்ட அண்ணன்தான் இவரு. என் ஃப்ரெண்டும் அவரைப் பத்தி ரொம்ப நல்ல மாதிரிதான் சொன்னா.அவரும் நான் அவர் கூடச் சேர்ந்துகிட்டா என்னைப் பெரிய ஆளாக்கிக் காட்டுறேன்னு சொன்னாரு”
அவனை விட ஒரு வயதே சின்னப் பெண் வேதவல்லி. ஆனால் தன் குறிக்கோளில் தெளிவாகத்தான் இருக்கிறாள் என்பதும் அவள் சொன்ன நடைமுறைச் சிரமங்களும் புரிய தலையைக் கோதியபடி யோசித்தவன்,
“அந்த வில்லியம் நம்பர் குடு. நான் பேசணும்” எனவும் மலர்ந்த முகமாக உடனே எடுத்துக் கொடுத்தாள்.
வில்லியத்திடம் பேசி முடித்தவனுக்கும் திருப்தியே! இருந்தாலும் அவளிடம்,
“வேதா! நீ என்னை நம்பித்தான் வந்துருக்கே.உன்னுடைய கொள்கைகள் சரியா இருந்தாலும் நீ சரியான இடத்துக்குப் போய்ச் சேரவும் உன் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டிய கடமை எனக்கு இருக்கு. அதுனால ஒன்னு ரெண்டு நாள் பொறு! நீ சொன்ன விஷயமெல்லாம் விசாரிச்சிட்டு என்ன பண்ணலாம்னு நான் சொல்லுதேன்”
அவள் முகம் மலர ‘சரி’ என்பதாகத் தலையாட்டினாள்.
“இப்பக் கொஞ்சம் படுத்து ஒறங்கு. யோசிச்சு என்ன செய்யன்னு பார்க்கலாம்” என்றவன் அவள் படுக்கையில் படுக்கவும் தன் ஆடும் நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.
படுக்கையில் படுத்து இருப்பவள் காலையில் தான் தாலி கட்டிய மனைவி.ஆனால் அவள் மனத்தில் அவனுக்கு இடமில்லை. ஊர் உலகத்துக்காக, அவர்கள் பேசுவார்கள் என்பதற்காக இந்த வாழ்க்கையைக் கட்டாயத்தின் பேரில் தொடர்வது எந்த அளவு சரியாக இருக்கும்.
ஒரு பெண் தனக்கு விருப்பமானதைப் படிக்க உரிமை இல்லையா? கல்யாணம் கல்யாணம் என்று ஏன் பெண்களைப் பிறந்ததிலிருந்து அதற்காக மட்டுமே தயார்படுத்துகிறார்கள்? வேதவல்லியின் அண்ணன்களை நினைத்து ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவனுக்கு.
‘படிக்காத தற்குறிப் பயலுங்க.ஒரு பொம்பளைப் புள்ள படிக்கணும்னு நெனச்சா அதுக்கு ஒதவி பண்ணுவானுவளா…வெட்டுவோம் குத்துவோம்னு’ மனத்திற்குள் வசை பாடியவன் உண்மையில் திருமணத்திற்கு மரகதம் வேதாவைப் பார்த்த போதே அவளது சகோதரர்கள் குறித்த தன் அதிருப்தியை வெளியிட்டிருந்தான். ஆனால் மரகதமோ “பொண்ணு நல்ல பொண்ணுய்யா.அவளை நாம நல்லா வச்சுகிட்டா அவ அண்ணனுங்க என்ன ப்ரச்சனை பண்ணப் போறாக” என அவன் வாயை அடைத்திருந்தார்.
எழுந்து குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான். இடையில் ஒருமுறை வேதவல்லியின் புறம் பார்வையை செலுத்தியவன் ப்ரச்சனைகளை அவன் தோளில் இறக்கி வைத்து விட்ட நிம்மதியோ அல்லது இந்தக் குழப்பங்களினால் எத்தனை நாட்கள் உறங்கவில்லையோ நிச்சலனமாய் உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டு தான் அவள் கணவன் என்பது மறந்து போய் தன்னை நம்பி வந்த பெண்ணை நல்லபடியாக வழிநடத்தி அனுப்ப வேண்டுமே என எண்ணும் பொறுப்புள்ள பாசமுள்ள நண்பனாக மட்டுமே உணர்ந்தான்.
யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு அவள் அண்ணன்களை ஏமாற்ற வேண்டுமானால் தவறு அவள் பக்கம் என்றில்லாமல் அவன் பக்கம் என்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி, நேரமாக ஆக அது வலுப்பட அதிகாலை மூன்று மணிக்கு அவளை எழுப்பினான்.
“ஒனக்கு மேக்கப் போடத் தெரியும்னு சொன்னியே, நான் அடிச்சா மாரி, உடம்புல காயமா இருக்கிற மாரி மேக்கப் போட்டுக்க முடியுமா?” என்று கேட்டான்.
தன்னந் தனிச்சிருக்க தத்தளிப்பில் தான் இருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையநான் அறிஞ்சேன்
உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே நானே
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா