அத்தியாயம் 20
அவள் பேச ஆரம்பிக்கும் முன்னதாகவே “அறிவு கிறிவு இருக்கா ஒனக்கு? இன்னும் பத்தே நாளுல பரீச்சைய வச்சுகிட்டு இப்படி வாசல்ல நின்னு லாந்திகிட்டு நேரத்த வீணாக்கிகிட்டுக் கெடக்கே.காலைல இருந்து பட்டினி வேற. ஏன் பரிச்ச நேரத்துல ஒடம்புக்கு ஏதாவது வியாதிய இழுத்து விட்டுக்கிடணுமா? அது சரி! பரீச்ச எழுதுற எண்ணம் இன்னும் இருக்கா ஒனக்கு?”
வாசலில் வைத்து அனைவரும் பார்க்க அவன் திட்டி விட்டதில் முகமெல்லாம் சிவந்து விட கண்களில் குளம் கட்டிக் கன்னங்களில் வழியப் பார்த்த கண்ணீரை மூக்கை உறிஞ்சி உள்ளே இழுத்தவாறே,
“சும்மா வாய்க்கு வந்தபடி ஏசாதிய மாமா.மெத்த மேல உக்காந்து படிச்சுகிட்டு இருந்தவள இந்த அத்ததான் மூஞ்சியக் கழுவு, வாசல்ல நில்லு, பசியாறக் கூப்பிடுன்னு வம்படியா இழுத்துட்டு வந்தாவ” என்றவள் மரகதத்தின் முன் சென்று இடுப்பில் கையை வைத்து நின்றபடி அவரையும் ஒரு முறை முறைத்து விட்டு விறுவிறுவெனப் படியேறி மேலே சென்று விடடாள்.
வீட்டில் குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் அமைதி.
‘ஆத்தாடி ஆத்தா இவ என்ன இந்தப் போடு போடுதா’ என அனைவரும் பார்த்திருக்க “வீட்ல ஆருக்கும் வேற சோலிக் கழுத இல்ல” என அமுதன் பெரிதாக ஒரு அதட்டல் போட அடுத்த வினாடி அங்கே மரகதத்தைத் தவிர யாரும் இல்லை.
அமுதனை இதுவரை நேருக்கு நேர் நின்று யாரும் எதிர்த்துப் பேசியதில்லை. அப்படிப் பேசியவர்களை அவனும் விட்டதுமில்லை. குமுதா அவனிடம் வாயாடிய சமயங்களும் அவர்களுக்குள்ளாக நடந்ததே அன்றி அதை யாரும் பார்த்தது இல்லை.
இன்று இத்தனை பேர் முன்னிலையில் அவன் வாயை அடைத்து விட்டுப் போன சிறு பெண்ணை அவன் கடிந்து கொள்ளாமல் விட்டதே அவன் மனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விட உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.
புறக்கடைக்குச் சென்று கை கால் கழுவியவன் நேராகச் சென்று உண்ணும் மேசையில் அமர மரகதம் சென்று அவனுக்கு உணவை எடுத்து வைத்தார்.
கைகள் அதன் போக்கில் பரிமாறினாலும் மாடியின் பக்கம் அவரது பார்வை சென்று சென்று மீள்வதைக் கவனியாதவன் போல்,
“நீங்க பசியாறுனியளா?”
“ஹான்! என்னைய்யா கேட்டே?”
“நீங்க பசியாறுனியளான்னு கேட்டேன்”
“ஆன்.ஆச்சு.மாத்திரை போடணுமல்லா”
மளமளவென உண்டு முடித்தவன் கையைக் கழுவி விட்டு வந்து “அவளுக்குச் சாப்பாட்டை ஒரு தட்டுல போட்டுக் குடுங்க!” எனவும் வாடியிருந்த அவர் முகம் மலர்ந்தது.
காலை முதல் குமுதா அவனுக்காகக் காத்திருக்க அவன் மட்டும் உண்டு செல்கிறானே என்ற எண்ணமும் மருமகள் பசியோடு படித்துக் கொண்டிருக்கிறாளே என்ற எண்ணமும் அவரது மனத்தை வருத்தியிருக்க இப்போது அவன் வார்த்தைகளில் வருத்தம் மறைந்தவராக எல்லாவற்றையும் தட்டில் வைத்துக் கொடுத்தார்.
தட்டைத் தூக்கிக் கொண்டு படிகளில் ஏறிச் செல்பவனை ஆங்காங்கே மறைந்திருந்து என்றாலும் அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
‘வேதவல்லியைத் திருமணம் செய்து கொண்ட போது அவள் இவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இவன் ஆடிய ஆட்டமென்ன? இப்போது மனைவிக்காகத் தட்டைத் தூக்கிப் போகும் லாவகமென்ன?’ என மரகதத்துக்குமே வியப்புத்தான்.
தனக்குத்தானே “ஒருவேளை அந்தப் புள்ள படிக்காததுதான் இவனுக்குப் பிடிக்கலையோ?” என்றவர் பின் “என்னவோ நல்லா இருந்தாச் சரி!” என்று விட்டுத் தன் அறையை நோக்கிச் சென்றார்.
மாடிக்குச் சென்றவன் அவனும் வேதவல்லியும் பயன்படுத்தின அறைக்கு அடுத்த அறை திறந்திருக்கக் கண்டு “ப்ச்!” என்று விட்டு அந்த அறைக்குள் நுழைந்தான்.
நடுநாயகமாகப் பெரிய கட்டில் புதுவிரிப்புகள், தலையணை உறைகள் என்று போடப்பட்டு நறுவிசாக்கப்பட்டு இருந்தது. நாற்காலியோ, மெத்திருக்கையோ, கட்டிலோ இருந்தாலும் எப்போதுமே தரையில் சம்மணமிட்டு அமர்ந்துதான் பாடங்களைப் படிப்பாள் குமுதா. அதைப் போல் இப்போதும் கட்டிலின் கால் முகப்பின் முன்னால் புத்தகத்தை விரித்து வைத்து அமர்ந்திருந்தவள் அவன் நுழைந்தது தெரிந்தாலும் நிமிர்ந்து பார்க்காமல் படிப்பில் கவனமாக இருந்தாள்.
‘என்னத்துக்கு? நான் நிமிந்து பார்த்தா, படிக்காம என்னைப் பார்த்து எதுக்கு நேரத்தை வீணடிக்குதேன்னு ஏசுவாக. வம்பா எனக்கு?’ எனத் தனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டவளின் பார்வை வட்டத்தில் அவன் நாற்காலியின் மேலே உணவுத் தட்டை வைப்பது தெரிய மனம் ஏனோ இதமாக உணர்ந்தது.
சிறுகுடல் பெருங்குடலைத் தின்று கொண்டிருந்தது அவளுக்கு. சாதாரணமாகவே நன்றாக உண்ணக் கூடியவள்தான்.அதுவும் அன்றைய பரபரப்பான நிகழ்ச்சிகளால் மதியம் வரை பசி கொஞ்சம் மந்தித்திருக்க கீழே சென்ற போது நாசி உணர்ந்த உணவின் நறுமணமும் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலம் எனக் கலந்து கட்டி வந்த இனிப்பின் நறுமணமும் அவள் நாவில் எச்சிலைச் சுரக்கச் செய்திருந்தன. அவளை உண்ண விடாமல் விரட்டி அடித்து விட்டானே என மறுகிக் கொண்டிருந்த மனம் இப்போது அவன் செய்கையில் மகிழ்ந்தது.
அவளைக் கடந்து ஜன்னலின் அருகில் சென்று பாதி மூடியிருந்த திரைச்சீலைகளை விலக்கி அவள் படிப்பதற்கு நல்ல வெளிச்சம் வருமாறு செய்தவன்,
“க்கும்…” என்று கனைக்க
அவள் நிமிரவே இல்லை.
“பசியாறிட்டுப் படி!”
“எனக்கு வேணாம்”
“பக்கத்துல வந்தேன் பொளேர்னு வச்சுருவேன். மருவாதியா எழும்பி வா”
அதிர்ந்து போனவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தவள், கண்களை எட்டாத அவனின் அலட்டல் கோபத்தில் கொஞ்சம் ஆசுவாசமடைந்து பிகு போதும் என எண்ணிக் கொண்டவளாக எழுந்து சென்று கைகளைக் கழுவி வந்து மளமளவென உண்டு முடித்தாள்.
சிறிய குவளையில் வைத்திருந்த பாயாசத்தையும் குடித்து முடித்தவள் தட்டையும் குவளையையும் கழுவி வைத்து விட்டு மீண்டும் படிக்க அமர்ந்தாள்.
காலையில் நடந்த திருமணம் அவள் மனத்தில் பெரிய மாற்றம் எதையும் விளைவிக்கவில்லை. ‘தன் மாமன் தனிமரமாய் நின்று விடக் கூடாது. தன்னைத் தவிர இந்த நிலையில் அவனுக்கு நல்ல துணையாக இருக்கக் கூடியது வேறு யாரும் இல்லை.இதனால் கண்டிப்பாக மரகதத்துக்கும் மன மகிழ்வே ஏற்படும்’ என்றெல்லாம் சிந்தித்துக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவன் மனைவியாகி இருந்தவள் தான் செய்தது தவறென்றே நினைக்கவில்லை.அமுதனின் கோபமும் அவள் எதிர்பார்த்ததுதான். எனவே நினைத்ததை முடித்து விட்ட மகிழ்ச்சியில் தங்குதடையில்லாமல் தன் படிப்பைத் தொடர்ந்தாள்.
அவள் அமர்ந்ததும் எழுந்து அடுத்திருந்த தன் தனியறைக்குச் சென்றவன் சில நிமிடங்களில் கையில் ஒரு சிறிய பெட்டியுடன் திரும்பி வந்தான்.
மீண்டும் அவளைக் கடந்து கட்டிலில் சென்று அமர்ந்தவன் “இங்கன வா!” என்றிருந்தான்.
பின்னாலிருந்து அவன் குரல் கேட்க ‘இப்ப என்ன வாங்கிக் கட்டிக்கிடப் போறேன்னு தெரியலையே!’ என நினைத்துக் கொண்டவள் ‘அதெல்லாம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ எனத் தன் மனத்தோடு சொல்லிக் கொண்டவளாக ஒரு பெருமூச்செடுத்து விட்டு எழுந்து அவனிடம் சென்றாள்.
“இரு!” எனவும் புரியாமல் விழித்தவள் அப்போதுதான் அவன் முன்னிருந்த முதலுதவிப் பெட்டியைக் காணவும் அவளுக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.
என்னதான் தான் செய்தது அவன் நல்லதற்காகத்தான் என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாலும் ஊருக்கு முன் அவன் விருப்பத்துக்கு மாறாகத்தான் அவள் கழுத்தில் தாலி கட்ட வைத்திருக்கிறாள் என்பதும் இத்தனை நாட்கள் தனக்காகப் பார்த்துப் பார்த்து செய்தவனைக் காயப்படுத்தி இருக்கிறாள் என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது.
ஆனால் தான் அவனைக் காயப்படுத்தி இருந்தது குறித்து ஒரு வார்த்தை கூடக் கேளாமல் தன் காயங்களுக்கு மருந்திட அழைப்பவனை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து போக “மாமா!” எனத் தழுதழுத்தவளை “ஷ்ஷ்ஷ்!” என அதட்டி அடக்கியவன் காயங்களுக்குப் போடும் களிம்பை எடுத்து அவள் காயங்களில் மென்மையாகத் தடவி விட்டான்.
பின்கைகளிலும் முதுகிலும் முகத்திலும் எனக் களிம்பைத் தடவி விட்டவன் “ம்ம்ம், போ! போய்ப் படி! எதுவானாலும் பொறவு பேசிக்கிடலாம். இப்போ படிக்குதது மட்டும் பாரு!” எனவும் வழக்கம் போல் தலையாட்டியவள் சென்று படிக்க அமர்ந்தாள்.
தன் சட்டையைக் கழற்றித் தாங்கியில் மாட்டியவனும் தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான். இடை இடையே அவள் படிக்கத் தொந்தரவில்லாமல் வெளியே சென்று அலைபேசியில் பேசி விட்டு வந்தவன் தன் வேலைகளில் மூழ்கிப் போனான்.
மாலை மணி ஐந்தாக எழுந்து கீழே செல்லப் போனவளை “எங்க போறே?” எனவும்,
“உக்காந்தே இருக்குறது ஒரு மாரிக் கஷ்டமா இருக்கு மாமா. கீழ போயிக் காப்பிக் குடிச்சுட்டு ஒங்களுக்கும் எடுத்தாரேன்” என்று விட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் சென்று விட்டாள்.
மடிக்கணினியை மூடி வைத்தவன் கட்டிலில் சாய்ந்து படுத்தான். மதியம் உணவுக்குப் பிறகு ஒரு பத்து நிமிடங்கள் படுத்திருப்பது அவன் வழக்கம். ஆனால் தான் படுத்திருப்பதைப் பார்த்தால் எங்கே அவளுக்கும் உறக்கம் வருமோ என நினைத்து அமர்ந்தே இருந்திருந்தான்.
அதுவும் அன்றைய நிகழ்வுகள் அவன் மனத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தன. எதிர்பாராதது எல்லாம் நடந்து முடிந்து விட, இனி என்ன செய்வது என்ற தவிப்பு மனமெல்லாம் தளும்பி நிற்க, அதே நேரம் குமுதா அவன் மனைவியாகி விட்டது ஒரு வித நிம்மதியையும் தந்திருக்க இரு வித உணர்வுகளுக்கு இடையே தத்தளித்திருந்தவனுக்கு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஆசுவாசமாகப் படுத்திருக்கத்தான் தோன்றியது.
கையைக் கண்ணுக்குக் குறுக்காக வைத்து மறைத்திருந்தவன் சில நிமிடங்களில் தன்னையும் அறியாமல் உறங்கியிருந்தான்.
கையில் சுடச் சுடக் காப்பியுடன் வந்தவள் அவன் உறங்கிக் கொண்டிருப்பது கண்டு அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
முதல் நாள் அவள் மானம் காக்க நினைத்தவன் அவன் உடைகளை அவளுக்குக் கொடுத்த போது அவனை இது போல் கண்டிருந்தாலும் கருத்தில் பதிய வைத்துக் கொள்ளவில்லை அவள்.
இப்போதோ உருண்டு திரண்டிருந்த புஜங்களும் அகன்று விரிந்திருந்த மார்புமாக ஆண்மையின் இலக்கணமாகப் படுத்திருந்தவனைக் கண்டு எங்கிருந்தோ வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது அவளிடம்.
உறங்குபவனைத் தொல்லை செய்ய மனமில்லாதவளாக, சத்தமில்லாமல் திரைச்சீலைகளை இழுத்து மூடி அறையை இருட்டாக்கி விட்டுத் தன் புத்தகத்துடன் வெளியே சென்றவள் கண்ணாயிரத்தை அழைத்துக் காப்பியைக் கொடுத்து விட்டு வெளியே ஊஞ்சலில் அமர்ந்து தன் படிப்பைத் தொடரலானாள்.
நேரம் ஆறை நெருங்குகையில் விழித்தெழுந்தவன் அறை இருட்டாக இருக்கக் கண்டு புருவம் சுருக்கினான்.
எழுந்து அமர்ந்தவன் “எங்க போனா இவ?” என முனகியவாறு எழுந்து வெளியே வர, ஊஞ்சலில் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு கால்களை நன்றாக நீட்டி வைத்து புத்தகத்தை மடியில் கவிழ்த்தும் மீண்டும் எடுத்தும் என முழுமூச்சாகப் படித்துக் கொண்டிருந்தவள் அவன் விழிகளில் விழுந்தாள்.
அவனுக்கு முதுகு காட்டி அவள் அமர்ந்திருக்க அங்கே யாரும் இல்லை என்பதால் துப்பட்டாவை அலட்சியமாக மடியில் போட்டிருந்தவள் அமர்ந்திருந்த நிலையில் அவள் பக்கவாட்டுத் தோற்றம் கோவில் சிலையின் வடிவமாகத் தெரிய, காலை அவள் கழுத்தில் தாலி கட்டியதிலிருந்து தோன்றாத மனைவி என்ற உரிமை உணர்வு உதிக்க, கைகளைக் கட்டிக் கொண்டு நிலையில் சாய்ந்து கொண்டவனின் விழிகள் ரசனையுடன் அவளைத் தழுவின.
சில நிமிடங்கள் கடந்திருக்க அவளுக்கு யாரோ தன்னைப் பார்க்கும் குறுகுறுப்புத் தோன்றி விட சட்டெனத் திரும்பினாள். வினாடியில் சுதாரித்தவன் கட்டியிருந்த கையை வேகமாகப் பிரித்து விட்டு அப்போதுதான் அறையிலிருந்து வருவது போல் வெளியே வந்தான்.
“எழும்பிட்டீகளா மாமா?” என்றவள் துப்பட்டாவை எடுத்துப் போட்டுக் கொண்டு படிகளின் விளிம்பில் நின்றவாறு “கண்ணாயிரம் அண்ணாச்சி! மாமாவுக்குக் காப்பி கொண்டாங்க!” என்றாள்.
“வாரேன் தாயி!”
கண்ணாயிரம் மேலே வரப் போகிறான் என்றதும் கூர்மையான பார்வையுடன் மீண்டும் நிலையில் சாய்ந்த வண்ணம் படிகளில் பார்வையைப் பதித்தவன் கண்ணாயிரத்தின் தலை தெரியவும் அவனை உறுத்து விழித்தான்.
எஜமானின் பார்வையைக் கண்டவன் ஒரு கணம் காப்பிக் குவளையை நழுவ விட்டிருப்பான். ஒருவழியாகச் சமாளித்து அவள் கையில் காப்பியைத் திணித்தவன் விட்டால் போதும் எனப் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடி விடக் குமுதாவுக்கோ குற்றக் குறுகுறுப்பு.
அவனிடம் வந்து காப்பியை நீட்டியவள் “அண்ணாச்சி மேல தப்பில்ல மாமா. நாந்தான் வம்படியா…”
ஒரு கை உயர்த்தி அவளைப் ‘போதும்’ என்பது போல் தடுத்தவன் ‘போய்ப் படி’ என்பது போல் சைகை காட்டி விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து ஏழை நெருங்கவும் மரகதம் தன் அறையில் கையைப் பிசைந்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார்.அவருக்குள் நிறைய கேள்விகள் உதித்தன.
மகன் இருக்கும் நிலைக்கு, அதுவும் அந்த விஷயம் ஊருக்கே தெரியும் என்ற நிலையில் எந்த தைரியத்தில் குமுதாவை அலங்கரித்து அவனறைக்கு விசேஷத்துக்கு என அனுப்புவது? அவளும் சிறு பெண்! ஒருவேளை மனத்தில் எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தால்? மகனுக்கு அழைத்துக் கேட்கலாம் என்றால் ஏற்கனவே நொந்து போயிருப்பவனின் இயலாமையைச் சுட்டிக் காட்டிப் பேசுவது போலிருக்குமே எனத் தவியாய்த் தவித்துப் போனார்.
மாடியில் வேட்டி சட்டை அணிந்து வெளியே கிளம்பத் தயாரானவன் சுற்றி நடக்கும் எதையும் கருத்தில் கொள்ளாமல் படித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு “க்கும்!” எனக் கனைத்தான்.
அவள் திரும்பிப் பார்க்க “நான் ஃபேக்டரிக்குக் கெளம்புதேன்.கீழ வந்து நிக்கேன், மேல வந்து உலாத்துதேன்னு சுத்தாம ஒழுங்கா இருந்த எடத்துலயே இருந்து படி.வெளங்குதா?”
அவள் வேகமாகத் தலையை ஆட்டவும் “மூணு வருஷமா இந்த மண்டைய ஆட்டுததை மட்டும் மாத்திக்கவேயில்ல” என முணுமுணுத்தவன் கீழே சென்று விட்டான்.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கில் வந்தது போல் வந்தவனை ஜன்னல் வழியாகக் கண்ட மரகதம் அவனிடம் விரைந்தார்.
விறுவிறுவென வந்தவர் அவனருகில் நெருங்கியதும் தயங்கி நிற்க, நிமிர்ந்து பார்த்தவன் அவர் முகத்தில் படிந்திருந்த குழப்ப ரேகைகளைக் கண்டு விட்டு “என்னம்மா? எதும் கேக்கணுமா?” எனவும்,
“அது…வந்துய்யா…ராத்திரிக்கு…விசேசம்…அது…என்ன செய்யன்னு…” என இழுக்க அவனுடல் சட்டென இறுகியது.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.மொதல்ல அவ பரீட்ச முடியட்டும். பொறவு என்னன்னு யோசிச்சு…” என்றவனுக்கு அந்தப் பேச்சை எப்படிக் கொண்டு சென்று முடிப்பதெனத் தெரியாமல் “சரி! நான் ஃபேக்டரிக்குக் கெளம்புதேன்.அவளுக்குச் சாப்பாடு மட்டும் மேல குடுத்து விடு. படிக்குததத் தொல்லை பண்ணண்டாம்”
“சரிய்யா! சரிய்யா! நான் பார்த்துக்கிடுதேன்.நீ போய்ட்டுப் பொழுதோட வந்துரு”
“ம்ம்ம். ஆட்டும்”
அவன் சொன்னது போலவே எட்டு மணிக்கு மாடிக்கு இரவு உணவை அனுப்பி விட்டவர் வேறு எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
ஒன்பதரைக்கு வீட்டுக்கு வந்தவன் குமுதா உண்டு விட்டாளா எனக் கேட்டுக் கொண்ட பின் தானும் உணவை முடித்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.
அறைக்குள் நுழைந்தவன் கண்டது கட்டில் முகப்பிலேயே தலைசாய்த்து உறங்கிக் கொண்டிருந்தவளைத்தான்.
தொழிற்சாலையில் மீன் இறாலையெல்லாம் தொட்டுப் புழங்கி இருக்க மேலே அந்த வாடை அடிப்பதை உணர்ந்தவன் சட்டெனக் குளியலறைக்குள் சென்று ஒரு குளியலை முடித்து வந்தான்.
இப்போது இன்னும் கொஞ்சம் சரிந்து கிடந்தவளைக் கண்டவன் “அதான் ஒம்பது மணிக்கு ஒறக்கம் வந்துடும்னு தெரியுமில்ல.மேல படுக்கையில ஏறிப் படுக்காம, இவ பண்ணுத அலும்பு” என்று விட்டு அருகில் வந்தவன் அவள் முன்னிருந்த புத்தகத்தை மூடி ஒதுக்கி வைத்து விட்டு அவளை அலுங்காமல் தூக்கி மெத்தையில் படுக்க வைத்தான்.
அவன் முகத்துக்கு வெகு அருகில் அவள் முகம். திருமணமே ஆகி விட்டாலும் வாலிபத்தின் கறைகள் பெரிதாகப் படிந்திராத அந்தக் கள்ளமில்லாத முகம் அவனை ஈர்க்க மெல்ல நெருங்கியவன் அவள் குண்டுக் கன்னத்தில் பட்டும் படாமல் இதழ்களை ஒற்றினான்.
இதழ்கள் அழுத்தம் தரவில்லையாயினும் அவன் மீசையின் முடி கன்னத்தில் குத்தி விட சட்டெனக் கையை உயர்த்திக் கன்னத்தைச் சொறிந்து விட்டுக் கொண்டாள் குமுதா.அதைக் கண்டவனுக்குப் புன்னகை தோன்ற ‘லேசா மீசை குத்துனாத் தாங்கிக்கிட மாட்டியோ’ என மனதுள் கொஞ்சிக் கொண்டவன் அவள் சொறிந்த இடத்தில் தன் பெருவிரலால் மென்மையாய் வருடிக் கொடுத்து விட்டு லேசாக அவளை அணைத்தவாறே படுத்துக் கொண்டான்.
வேதவல்லி அவனை விட்டுச் சென்றதில் இருந்தே நிம்மதியான உறக்கம் என்பது அவனுக்கு வசப்பட்டதில்லை.ஆனால் இன்றோ கைவளைவில் கண்ணுக்கும் மனதுக்கும் இனியவளைக் கட்டிக் கொண்டிருக்க ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றிருந்தவனை அலைபேசி கிணுகிணுத்து அழைத்தது.
அவள் உறக்கம் கலையாது என்று உறுதியாகத் தெரிந்தாலும் முன்ஜாக்கிரதையாக சட்டென எடுத்து உயிர்ப்பித்துக் காதில் பொருத்த, அழைத்தது மஞ்சளூர்ப் பண்ணையார் குமரவேலழகன்.
மாமனே உன்னை காங்காம வட்டிலில் சோறும் உங்காம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலும் கதவு தான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடைக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம் கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே
ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது