அத்தியாயம் 18
குமுதா தன் புகாரைச் சொல்ல முன் வந்து நின்றதுமே குற்றம் சாட்டப்பட்டவனாக எழுந்து நின்றவனின் கண்ணசைவில் அவன் பின்னிருந்த நாற்காலியை ஒருவன் வந்து எடுத்துச் சென்றான்.
“ம்ம்ம் சொல்லு தாயி.என்ன உன் ப்ராது?” பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் இருந்த ஒருவர் கேட்க அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
“இதா பாராத்தா! நீ இந்த ஊர்க்காரியில்ல. ஆனாலும் நம்ம மாறன் ஐயாவுக்கு ஒறம்பறைனால ஒன்னையும் இந்த ஊர்க்காரியா நெனச்சுத்தான் உன் ப்ராதைக் கணக்கில எடுத்துகிட்டு இருக்கு. வேற ஊர்க்காரவுகன்னா விசாரணை மொறை வேற மாரி இருக்கும்.”
“நீ இப்பிடி ஒன்னும் பேசாம இருந்தியானா நாங்க என்ன செய்யுதது? என்ன வெவரம்னு சொன்னாத்தானே மேல ஆவுறதைப் பார்க்க முடியும். என்ன நான் சொல்லுதது?” என் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் தன் தரப்பு சரிதானே என்பது போல் கேட்டுக் கொண்டார்.
அனைவரும் ஆமோதிக்கக் குமுதாவும் வாயைத் திறந்தாள்.
“பெரியவுகளுக்கு வணக்கம்.நேத்து இந்த ஊர்ல அம்புட்டு பேத்து ஃபோனுக்கும் நானும் எம் மாமனும் இருக்கிற ஃபோட்டோவெல்லாம் யாரோ வேல கெட்டுப் போய் அனப்பி விட்டுருக்காக.எனக்கு எம்மாமன ரொம்பப் பிடிக்கும். அவகளுக்கும் என்னைப் பிடிக்கும்னுதான் நெனக்கேன். ஆனா அதுக்காக வரைமொறை மீறிக் கன்னாலத்துக்கு முன்னாலக் கண்டபடி நடக்கிறவுக நாங்க இல்ல.ஆனாலும் இந்த ஃபோட்டோவை எல்லாம் பார்த்து இந்த ஊருக்குள்ள வெறும் வாய மென்னுகிட்டு இருந்தவுக இப்ப எங்களை அவலா மென்னுகிட்டு இருக்காக.இனி வார காலத்துல எந்த எளவட்டப் பயலாவது எங்கழுத்துல தாலி கட்டுவானா? அதுனால எம்மாமனுக்கே என்னைக் கன்னாலம் கட்டி வைக்க உத்தரவு போடச் சொல்லிப் பஞ்சாயத்தாரைக் கேட்டுகிடுதேன்.”
மரத்தின் மீதிருந்த பறவைகளின் சத்தமும், விஷ், விஷ் எனக் கொஞ்சம் சுழன்றடிக்கும் காற்றின் சத்தமும் தவிர பேரமைதியாக இருந்தது அந்த இடம்.
குமுதா நன்றாக வாயடிப்பாள் என்று அமுதனுக்குத் தெரியும்.அவனிடமே இம்மியும் விட்டுக் கொடுக்காமல் சரிக்குச் சரியாக மல்லுக்கு நிற்பவள்தானே.ஆனால் சரியாகப் பேச வேண்டிய விஷயத்தை மட்டும் நறுக்குத் தெறித்தாற் போல ஒரு வழக்கறிஞரின் வாய்சாலகத்துடன் பேசி முடித்திருந்தவளைக் கண்டு வியந்தவன் அந்த வியப்பையும் மீறி அவள் பேசிய விஷயத்தில் அதிர்ந்து போய் நின்றிருந்தான்.
அவளோ மறந்தும் அவன் புறம் பார்க்கவில்லை.
தன்னைப் பார்த்தால் பார்வையிலாவது என்ன இப்படிச் செய்து வைத்திருக்கிறாய் எனக் கேட்கலாம் என்று பார்த்தவன் அவளின் கண்டு கொள்ளாத பாவனையில் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு அதன் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக மெல்லக் கனைத்துக் கொள்ள இப்போது அனைவரின் பார்வையும் அவன் மீது குவிந்தது.
“பஞ்சாயத்தாருக்கு ஒரு கோரிக்கை!”
“சொல்லுங்க தம்பி!”
“எனக்கு அந்தப் புள்ள கூடக் கொஞ்சம் தனியாப் பேசணும்” எனவும் படக்கென அவனைத் திரும்பிப் பார்த்தாள் குமுதா.
அவன் கோரிக்கையைக் கேட்ட பஞ்சாயத்துத் தலைவர் தாடையில் கைவைத்துத் தடவியபடியே யோசித்து விட்டு,
“சரி தம்பி! அந்த மரத்து நெழல்ல எங்க பார்வை படுத மாரி நின்னு பேசிட்டு வாங்க” என்றவர் தன் மகனைப் பார்த்து,
“எல கதிரு! நீ அப்பிடிக் கொஞ்சம் பக்கமாப் போய் நில்லு”
அமுதன் ஒரு தலையசைவுடன் முன்னே நடக்க அவளும் பின்தொடர கதிரவன் அவர்களைத் தொடர்ந்தான்.
எங்கே அவளை மிரட்டவோ, அடிக்கவோ செய்து விடுவானோ என்றுதான் பார்வையில் நின்று பேசச் சொன்னதும் கதிரவனையும் அருகில் காவலாக நிற்கச் சொன்னதும் என்பது அவனுக்குப் புரியாமல் இல்லை.
வேதவல்லியின் விஷயத்தின் பின் அவன் எப்போது யாரை அடிப்பானோ என்பது போல் பார்த்தவர்கள்தானே இவர்கள். எனவே இது என்ன புதிதா என்பது போலத்தான் அவனிருந்தான்.
மர நிழலுக்குச் சென்ற பிறகும் அவனை நிமிர்ந்து பார்க்காமல் நின்றிருந்தவளைக் கண்டவன் “ராசாத்தி!” என்றான் மென்மையாய்.
அந்தக் குரல் அவள் நெஞ்சைக் கலங்கச் செய்து, கண்களில் நீரை வரவழைத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக நிமிர்ந்து அவனை நேராகப் பார்த்தவளைக் கண்டு மூச்சை இழுத்து வெளியேற்றியவன் பிடரியைக் கோதிக் கொண்டு ஒரு வழியாகப் பேச்சை ஆரம்பித்தான்.
“இங்க பாராத்தா! அந்த ஃபோட்டோவை எல்லாம் பார்த்து ஏதோ பயந்து போயிட்டேன்னு நெனக்கேன்.அதெல்லாம் ஒன்னுமில்லாமப் பண்ணிப்புடலாம். நீ நல்லா யோசிச்சுக்கிடு. இந்த ஊர்க்காரனுக, பஞ்சாயத்துக்காரனுக ஆரைப் பார்த்தும் பயப்படாத. என்ன சொல்லுவானுகளோன்னு மயங்காத. நாக்கு மேல பல்லப் போட்டு இன்னிக்குப் பேசுதவன் நாளைக்கு நாம குடும்பம் நடத்துதப்போ வந்து நிக்க மாட்டான்.”
“என்னப் பத்தி ஊருக்குள்ள என்ன பேசுதானுகன்னு ஒனக்குந் தெரியும். அது சரியா தப்பான்னு நான் பேச வல்ல.ஆனா அதையெல்லாம் கேட்டும் என்னக் கன்னாலம் கட்டிக் குடித்தனம் நடத்திக் கொழந்த குட்டி பெத்துக்கிடலாம்னு யோசனை இருந்தா, நாள அதுல ஒனக்கு ஏமாத்தமாயிப் போச்சுதுன்னா பொறவு என்னக் குத்தஞ் சொல்லக் கூடாது பாரு. அதுக்குத்தான் இம்புட்டு நீட்டி மொழக்கிப் பேசுதேன்”
அவன் இத்தனை பேசியும் அமைதியாக இருந்தவளைக் கண்டவன்,
“இப்ப இங்கனயே ஒம் முடிவச் சொல்லணுமின்னு ஒன்னும் கட்டாயமில்ல ஒரு நா, பொழுது கூட யோசி. பஞ்சாயத்தாரை நாஞ் சமாளிச்சுக்கிடுதேன். நீ மட்டும் யோசிச்சு நல்ல முடிவா எடுத்தாப் போதும்” என்றவன் அப்போதும் பதில் பேசாமல் நிற்பவளைக் கண்டு பொறுமை இழந்தவனாக மீண்டும் மக்கள் கூடியிருந்த இடத்துக்கு வந்தான்.
“அந்தப் புள்ள கொஞ்சம் தயங்குது.அந்த ஃபோட்டோவையெல்லாம் பார்த்ததும் மெரண்டு போய்ப் ப்ராது அது இதுன்னு வந்துருச்சு.வயசு வேகம். அதும் மேல தப்பில்ல.கொஞ்சம் அங்கனயே இருந்து பொறுமையா யோசிக்கச் சொல்லி இருக்கேன்” என்றவன் கூட்டத்துக்குள் சலசலப்பையும் ஆங்காங்கே சிரிப்பு சத்தத்தையும் கேட்டு என்னவெனப் புரியாமல் சுற்றிப் பார்க்க அவன் பின்னே வால் பிடித்தவாறே வந்து நின்றிருந்த குமுதா வாய் திறந்து,
“எம் மாமனைக் கன்னாலம் கட்டிக்கிட எனக்கு முழுச் சம்மதம்னு இந்தப் பஞ்சாயத்துக்குச் சொல்லிக்கிடுதேன்.”எனவும் பிறர் அறியாது பற்களை நறநறவெனக் கடித்தவன் மேலும் அவள் பேசிய விஷயத்தில் திகைப்பூண்டை மிதித்தவனாய் அவளை வெடுக்கெனத் திரும்பிப் பார்த்தான்.
ஆம். அவனோ திருமணத்திற்கே யோசி என்று சொல்லிக் கொண்டிருக்க அவளோ “இன்னிக்கே எங்க கன்னாலத்தை நடத்தி வச்சுப்பிடுங்க” என்றுரைத்திருக்க, விட்டால் எட்டி அவளை அறைந்திருப்பான்.
அவளருகில் செல்வதற்காக ஒரு காலை அவள் பக்கமாக வைத்தவன் அதே நேரம் பஞ்சாயத்துத் தலைவர் பேச ஆரம்பிக்கவும் நேராகத் திரும்பி நின்றான்.
“இப்ப எதுக்குத்தா இன்னிக்கே கன்னாலம் நடக்கணும்னு சொல்லுதே? அதெல்லாம் நல்ல நாளு, கெழம பார்க்குறது இல்லையா?”
“நாளு கெழமையெல்லாம் பார்த்து நடத்தி வைக்கிற எல்லா கன்னாலமும் நல்லா இருந்துடுதுங்களா? அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லீங்க. முக்கியமா என் மாமன் மேல எனக்கு நம்பிக்கை இல்லீங்க” என்று அடுத்த வெடிகுண்டைத் தூக்கி அவன் தலையில் போட்டாள்.
பஞ்சாயத்துத் தலைவர் ஏதோ பேசப் போக இடையிட்டவன்,
“நான் இப்பவே இவளைக் கன்னாலம் கட்டிக்கிடுதேன் தலைவரே!”
“என்ன தம்பி, அதுதான் சின்னஞ்சிறிசு.நீங்களும் ஒரு நாக் கெழமை பார்க்காம…”
“நாளு கெழமையெல்லாம் பார்த்துத்தான் எனக்குக் கன்னாலம் நடந்துச்சு. நல்லா வாழ்ந்துட்டேனா? இல்லைல்லா? எப்ப இவ எம்மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்லிட்டாளோ இனி என் வார்த்தைக்கு மதிப்பில்லைங்க. உங்க அனுமதியோட…” என்றவன் “அப்பிடியில்ல மாமா!” எனக் குமுதா ஏதோ சொல்ல வந்ததைக் கண்டுகொள்ளாதவனாக அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டே அருகிலிருந்த அம்மன் கோவிலுக்கு நடந்தான்.
அன்று வெள்ளிக்கிழமை. முழுவதும் மஞ்சள் காப்பிட்டு வெள்ளியில் கவசம் தரித்துக் கண் நிறைந்து அமர்ந்திருந்தாள் கோடனூர் மாரியம்மன்.
“பூசாரி ஐயா! அம்மன் காலடியில இருக்கிற மஞ்சள் கயிறொன்னு எடுத்து ஒரு மஞ்சள் வச்சுக் கட்டித் தாங்க”
இதற்குள் பஞ்சாயத்தின் மொத்தக் கூட்டமும் கோவிலின் முன் கூடியிருக்க அவன் சொன்னது போலவே மஞ்சளைக் கயிற்றில் கட்டித் தயார் செய்த மாங்கல்யத்தைப் பூசாரி தட்டில் வைத்துக் கொண்டிருக்க அவரை “பூசாரி ஐயா!” என அழைத்தவள் அவர் அருகே வந்ததும் தன் இடுப்பில் செருகி வைத்திருந்த தங்கம் கோர்த்த பத்து பவுன் தாலிச் சரடை எடுத்து அவர் கையில் கொடுத்து “இதையும் அம்மன் காலடியில வச்சு ஆசீர்வாதம் பண்ணிக் குடுங்க” எனவும் அந்தச் சரடைப் பார்த்தவன் ‘எல்லாத்தையும் திட்டம் போட்டுத்தான் வந்திருக்கா’ என முணுமுணுத்துக் கொண்டே முகத்தைக் கடுகடுவென வைத்திருந்தான்.
இதற்குள் கண்ணாயிரத்தின் ஏற்பாட்டில் மங்கல வாத்தியக்காரர்களும் வந்து சேர்ந்திருந்தனர்.
பூசாரி மந்திரங்களை ஓத, கெட்டி மேளம் முழங்க, முன்னின்றிருந்தவளின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை வைத்தவன் முடிச்சிடாமல் தாமதிக்க, குனிந்திருந்தவள் என்னவெனப் புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் கண்களில் கோபமுமில்லாமல் வெறுப்புமில்லாமல் ‘இப்படிச் செய்து விட்டாயே’ என்பது போல ஒரு பாவனை மட்டுமிருக்க, அவளோ ‘மன்னிச்சுருங்க மாமா’ என்பது போல் கண்களில் ஒரு யாசிப்புடன் பார்க்க, ஒரு பெருமூச்சுடன் மூன்று முடிச்சுக்களை அவன் இட்ட நேரம் கோவிலுக்குள் நுழைந்திருந்தார் மரகதம்.
காலையில் தண்டோரா போட்ட விஷயம் தெரியாமல் உள்ளே இருந்தவர் அப்போதுதான் கோகிலா விஷயத்தைச் சொல்லக் கேட்டு அரக்கப்பரக்க ஓடி வந்திருந்தார்.
அமுதன் அடுத்து அந்தத் தாலிச் சரடையும் அணிவித்து விட்டு பூசாரி சொன்னபடியே குங்குமத்தையும் அவள் நெற்றியிலும் வகிட்டிலும் தாலிச் சரடிலும் வைத்து விட்டான்.
“ரெண்டு பேரும் அம்பாளைக் கும்பிட்டுக்கோங்கோ!”
அவன் அமைதியாக நிற்க அம்மனைக் கண்களில் நீர் வழிய மனதார வணங்கி விட்டு நிமிர்ந்தவள் எதிரில் மரகதத்தைக் கண்டதும் புன்னகை பாதியும் அழுகை மீதியுமாக இதழ்கள் துடிக்கச் சட்டென ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து பணிந்தாள்.
அவளை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தவரின் பார்வை ‘அவசரப் பட்டுட்டியேத்தா’ என்ற செய்தியைச் சொல்ல, கண்களை இமைத்து எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறாமல் கூறிப் புன்னகை புரிந்தவள் அமுதனைத் திரும்பிப் பார்க்க அவன் அங்கே இல்லை.
பதறித் தேடியவளிடம் வந்த கண்ணாயிரம் “ஐயா இப்பத்தான் பைக்ல ஏறிப் போறாகம்மா” என்றான் வருத்தத்துடன்,
தன் எஜமானனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஆர்வத்தில் குமுதாவுக்கு உதவியாக எல்லா விஷயங்களையும் செய்தவனுக்கு இப்போது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி ஆட்டிப் படைக்க அவன் வருந்துவதைக் கண்டவள்,
“வெசனப்படாதிய அண்ணாச்சி! எல்லாம் நல்லதுக்குத்தான் நடந்துருக்கு” என்று அவனைத் தேற்றினாள்.
“வாங்கத்த! வீட்டுக்குப் போவோம்” என்று கிளம்பியவளை இப்போது எந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வது என்று குழம்பிய மரகதம் பின் அவன் மனம் ஒப்பித்தானே தாலி கட்டினான்.இனி அவன் பெண்டாட்டி அவன் வீட்டில்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டவர் அவளுடன் கோவிலை விட்டு வெளியே வந்தார்.
மாரியம்மன் கோவிலின் அருகில்தான் வீடு என்பதால் பொடி நடையாக இருவரும் நடக்க ஊரே அவர்களுடன் நடந்து கொண்டே அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டே வந்தனர்.
ஊர் பேசுவதைப் பற்றிக் கவலை கொள்ளாத இருவரும் விறுவிறுவென நடந்து வீட்டு வாசலை நெருங்கி இருந்தார்கள்.
“ஒரு நிமிசம் நில்லுத்தா!” என்றவர் முதலில் உள்ளே சென்று ஆலம் கரைத்து வந்து, தனக்கு எப்போதுமே ஆதரவாக இருக்கும் ஒரு சில பெண்களை அழைத்து ஆலம் சுற்றச் சொல்ல குமுதாவோ அவரையும் சுற்றச் சொன்னாள்.
“நான் எதுக்குத்தா?”
அவள் முறைக்க வேறு வழியில்லாமல் மனத்தை சமாதானப்படுத்திக் கொண்டவராக மற்றவர்களுடன் சேர்ந்து ஆலம் சுற்றிப் பின் மருமகளை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டார்.
அதே நேரம் தொலைவில் தோப்பு வீட்டின் வாசலில் வண்டியில் நுழைந்து கொண்டிருந்தான் அமுதன்.
அந்த வீடு வேதவல்லியோடான திருமணத்தை ஒட்டி அவன் பார்த்துப் பார்த்துக் கட்டியது.அந்தத் திருமணம் தோல்வியில் முடிந்த பிறகு அவன் அந்தப் பக்கம் வந்ததேயில்லை.
முன்னால் இருக்கும் மாந்தோப்பை மட்டும் பார்வையிட்டு விட்டுக் கணக்கு வழக்கைப் பார்த்து விட்டுக் கிளம்பி விடுவான். அவனுக்கு அமைந்த விசுவாசமான வேலையாட்கள் அவன் சொல்லாமலே அடிக்கடி வீட்டில் தூசு தட்டிக் கூட்டித் துடைத்து சுத்தமாக வைத்திருந்தனர் என்பது கதவைத் திறந்ததுமே அவனுக்குப் புரிந்து போனது.
பெரிய கூடத்தில் ஓரத்தில் மெத்தை விரித்து, எதிரே தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து, கூடத்தின் அந்தப் புறம் பெரிய இரும்பு ஊஞ்சல் கட்டி என அவன் செய்திருந்த ஏற்பாடுகள் எதிலும் பார்வையை செலுத்தாமல் நேராக உள்ளே சென்றவன் படுக்கையில் சென்று விழுந்தான்.
தலை வலிப்பது போல் இருந்தது. என்னென்னவோ கற்பனைகள் செய்து வைத்திருந்தானவன்.குமுதாவை நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய மருத்துவராக்கி இந்த ஊருக்கே நாட்டுக்கே ஏன் உலகத்துக்கே அவள் பெயரைத் தெரிய வைக்க வேண்டும் என்றெல்லாம் மனதுக்குள் அடுக்கு மாடிக் கோட்டைகள் கட்டி வைத்திருந்தான்.
அவள் மற்ற பெண்களைப் போலில்லை.அசாத்திய நினைவாற்றலும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்திப் படிக்கும் தன்மையும் படித்ததை அழகாக எழுத்தில் முன் வைக்கும் தன்மையும் என முதலிடத்தில் வரக் கூடிய ஒரு மாணவிக்கான அத்தனை அருங்குணங்களும் வாய்க்கப் பெற்றிருக்கிறாள் என அவன் அவளைத் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்க கடைசியில் அவளும் சராசரி கிராமத்துப் பெண்ணைப் போல் கல்யாணம், குடும்பம், குழந்தை என யோசிக்க ஆரம்பித்தது அவனை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருந்தது.
அந்தப் புகைப்படங்களில் இருந்த விஷயங்களை அவன் விளக்கி எடுத்துச் சொல்லி மற்றவர்கள் அவளையும் அவனையும் தவறாக நினைக்காமல் தடுத்திருக்க அவனால் முடியும். ஆனால் அவன் மேல் நம்பிக்கையில்லை எனச் சொல்லி அவனை ஒரேடியாகச் சோர்ந்து போகச் செய்து தன் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டாளே எனக் கோபம் கொண்டிருந்தானவன்.
தனக்குள் யோசித்து யோசித்து அவன் களைப்படைந்து கொண்டிருக்க அவன் அலைபேசி அழைத்தது.
குமுதாவின் எண்ணைக் கண்டவனுக்கு ஆத்திரம் மிக “என்ன ஏத்தம் இவளுக்கு எனக்கே கூப்பிடுதா” என முனகிக் கொண்டே அழைப்பைத் துண்டித்தவன் அவள் மீண்டும் மீண்டும் அழைக்க அலைபேசியை ஒலியெழுப்பாமல் இசைப்பது போலப் போட்டு விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
இங்கோ அலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த குமுதாவின் தோள் தொட்டுத் திருப்பினார் மரகதம்.
சிறிது நேரம் முன்பு ஆலம் எடுத்து வீட்டுக்குள் அழைத்து வந்தவளை “மொத சாமி ரூம்புல வெளக்கேத்திரு தாயி” என்றவர் அவளுக்குப் பால், பழம் எடுத்து வர உள்ளே சென்றார்.
அவள் விளக்கேற்றி வந்ததும் அவளுக்குப் பழத்தையும் பாலையும் கொடுக்க முற்பட “வேணாம் அத்த! மாமன் ஒண்ணுமே சாப்பிடாமக் கோபமாப் போய்ட்டாக.எனக்கும் ஒண்ணும் சாப்பிடப் பிடிக்கல” என்று விட்டாள்.
அவளை வற்புறுத்திப் பார்த்த மரகதம் அவள் திடமாக மறுத்து விடவே “சரி நீ ரூம்புல போய் உக்காரு. நான் இத வாரேன்” என்றவர் சமையல் கட்டுக்குச் சென்று மதியத்துக்கு என்ன சமையல் என்றெல்லாம் கட்டளைகள் பிறப்பித்து விட்டுக் குமுதா அமர்ந்திருந்த அறைக்கு வந்தார்.
வந்தவர் அவள் அலைபேசியை வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்ததைக் கண்டு அருகே வந்தமர்ந்து “வெசனப்படுதியாத்தா?” எனவும் அவள் கண்களில் நீர்த்திரை.
“மூணு வருஷமாச்சு இந்த வீட்டுக்கு வந்து.வேதா ஓடிப் போன அன்னிக்கு இந்த வீட்ட விட்டு வெளிய போனேன். மறானாள் மாறன் வந்து கூப்பிட்டப்போ என்ன சொன்னேன் தெரியுமா?”
குமுதா கேள்வியாக நோக்க,
“என்னிக்கு நீ நல்ல புத்தி வந்து, முழு மனசா நல்லபடியாக் குடுத்தனம் நடத்துவேன், என்ன நம்பி வாரவளைக் கண்ணு கலங்க விட மாட்டேன்னு உறுதி எடுத்துக்கிட்டு ஒரு புள்ளயக் கன்னாலம் கட்டுதியோ அன்னிக்குத்தான் நான் இந்த வீட்டுல காலெடுத்து வைப்பேன்னு சொன்னேன்”
குமுதா ஏதோ பேசப் போக அவளைக் கையைக் காட்டி அமைதியாய் இருக்கும்படி சைகை செய்தவர் “ஆனா அந்த நாளு வராதுன்னு எனக்கு அடுத்த ரெண்டு நாளுலயே தெரிஞ்சு போச்சு”
அவள் புருவம் சுருக்கவும்,
“ஆமா தாயி எம் புள்ளயால ஒரு பொண்ணக் கன்னாலம் கட்டிச் சந்தோசமா வச்சுக்கிட முடியாது.அவன் ஒடம்புல ஏதோ கோளாறு இருக்குன்னு பொறவுதான் எனக்குத் தெரிஞ்சது.”
பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது
வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம் வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்