அத்தியாயம் 14

அமுதனின் கோலம் கண்டவளுக்கு உண்மையாகவே நெஞ்சில் பயம் தோன்றியது. ஆனால் அதை அவன் அறியாது மறைக்க எண்ணி,

“அது…நான்…தெரியாம…”

“வாய மூடு!” என்றவன் அவளருகில் வந்து அவள் இரு தோள்களையும் பற்றினான்.

திகிலுடன் அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு அவன் கண்களில் கோபம் மட்டுமல்லாது தாள முடியாத வலியும் இருப்பது தெரிய குழம்பிப் போய் நின்றாள்.

அவன் அனுமதி இல்லாது அறைக்குள் வந்தது மட்டுமல்லாமல் புகைப்படத்தையும் உடைத்து விட்டதற்குக் கோபம் சரி. வலி ஏன்? உயிரான மனைவியின் புகைப்படத்தை உடைத்து விட்டாளே என்பதாலா? அந்த நினைவே அவளுக்கு வலித்தது. அவனோ அவள் கண்களைப் பார்த்தவாறு வலி நிறைந்த குரலில்,

“ஏண்டி? ஏன்? எப்போப் பாரு நான் மறக்க நினைக்கிறதை ஞாபகப்படுத்திகிட்டே இருக்கியே ஏன்? உனக்கு நான் என்ன கெடுதல் செய்ஞ்சேன்? என்னை நிம்மதியாவே வாழ விட மாட்டியா?”

அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அவள் அவன் நிம்மதியைக் குலைக்கிறாளா?

“இல்ல மாமா! அப்பிடில்லாம் எதுவும் இல்ல. நான் சும்மா ஒரு ஆசைக்குத்தான்.”

“ஒன்னை வாய மூடுன்னு சொன்னேம்லா”

அவள் அமைதியாகவும், அவளைக் கைப்பிடியாக இழுத்துக் கொண்டு வந்து அவள் முதலில் தங்கியிருந்த அறைக்குள் சென்றவன் அவளைப் படுக்கையில் தள்ளினான்.

“அது என்னடி அப்படி ஒரு புத்தி ஒனக்கு? அடுத்தவங்க அந்தரங்கத்துல எப்பிடியாவது தலைய நொழைக்கணும்னு. நீ மத்தவக மாதிரி இல்ல… நல்லாப் படிக்கணும்னு நெனக்குத புள்ளன்னு ஒன்னைப் பத்தி ஒசத்தியா நெனச்சுருந்தேன் பார்த்தியா? என் புத்திய செருப்பாலயே அடிக்கணும்”

“மாமா!” அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். அடுத்த நிமிடம் சீற்றம் தலைதூக்க,

“சும்மா வாய்க்கு வந்தவாக்கில ஒளறாதிய. நானொன்னும் ஒங்க வாழ்க்கையை பத்தித் தெரிஞ்சுக்கிடணும்னு வரல. ஒங்க சம்சாரம் ரொம்ப அழகுன்னு சொன்னாக. அவக எப்பிடி இருப்பாகன்னு பார்த்திடணும்னு ஒரு ஆசை. ஒங்ககிட்டக் கேட்டா நீங்க சங்கடப்படுவியளேன்னு நானே பார்த்துக்கலாம்னு வந்தேன்.மத்தபடி…”

முடிக்கும் முன் குரல் தழுதழுக்க, தொண்டையைச் செருமி அதை சரி செய்து கொண்டவள்,

“மத்தபடி ஒங்களைப் பத்தி அலசி ஆராயணும்னு அவசியம் ஒன்னும் இல்ல எனக்கு.நான் கெளம்புதேன்” என்றவள் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினாள்.

“சட்…” என்றவன் தலையை அழுத்தமாகக் கோதி விட்டுக் கொண்டான். அவள் வெகு வேகமாகச் செல்வதைக் கண்டவன் அவளைப் பின்தொடர முயற்சிக்க அவளோ புள்ளிமானின் வேகத்துடன் படிகளில் இறங்கிச் சென்றிருந்தாள்.

வாசலில் நின்ற கண்ணாயிரத்திடம் “மாமனுக்கு சோறு வச்சுக் குடுங்க அண்ணாச்சி. நான் கெளம்புதேன்” என்றவள் அவன் பதில் சொல்லும் வரை கூட நிற்காது விறுவிறுவென வெளியேறி விட்டாள்.

அழுகையை விட ஆத்திரமே மேலிட்டிருந்தது அவளுக்கு.

அவளைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டான். அடுத்தவர் அந்தரங்கத்தை அலசும் அற்பப் பிறவியைப் போலவா அவள் அவன் கன்ணுக்குத் தெரிகிறாள்.

“இருக்கட்டும் வச்சுக்கிறேன்.எல்லாத்துக்கும் சேர்த்து ஒனக்கு இருக்கு மாமோவ்” தனக்குத் தானே முனகிக் கொண்டாள்.

அவளைத் தொடர்ந்து வர நினைத்துத் தன் வீட்டின் வாசலில் வந்து நின்றவன் அதற்குள் அவள் வீட்டின் பெரிய வாயிலைக் கடந்திருக்க சில நிமிடங்கள் நிலையைப் பிடித்தவாறு நின்றிருந்தான். அவன் முகத்திலிருந்து அகத்தைப் படிக்க முடியாமல், கண்ணாயிரம்,

“பசியாறுறியளாய்யா? சோறெடுத்து வைக்கட்டுமா?”

“ம்ம்ம்…”

கைகளைக் கழுவிக் கொண்டு உணவுண்ண அமர்ந்தவன் மேஜையிலிருந்த கூடையிலிருந்து கண்ணாயிரம் எடுத்து வைத்த பாத்திரங்களைப் பார்த்ததும்,

“நெறைய குடுத்து விட்டுருக்காக.இங்க எல்லாருக்கும் சேர்த்தா?”

“இல்லீங்கையா. மலரம்மா அப்போவே ஃபோனைப் போட்டு எங்களுக்குச் சமைச்சுக்கிடச் சொல்லிட்டாக”

ஆம். இங்கிருக்கும் அனைவருக்கும் என்றால் இது போதாதுதான். ஆனால் அவன் ஒருவனுக்கு இது அதிகப்படி. சொரேரென்று ஏதோ உறைக்க அலைபேசியை எடுத்தவன் அன்னைக்கு அழைத்தான்.

“மாறா! சொல்லுய்யா!”

“ம்ம்ம்…சாப்பாடு கூடுதலாக் குடுத்து விட்டுருக்கியளே!”

“இல்லையே! ஒனக்கும் மலருக்கும்தான். கொஞ்சம் கூட வேணா இருக்கும். நெறையவெல்லாம் இல்லையே. நேரமில்ல. இல்லைன்னா அம்புட்டுப் பேருக்குமே ஆக்கியிருப்பேன்”

“சர்த்தான். இனித்தான் சாப்பிடப் போறேன். வச்சுருதேன்”

அவன் மனம் படாத பாடு பட்டது. அவனுடன் சேர்ந்து உண்ணலாம் என ஆசையோடு வந்தவளை அடித்துத் துரத்தாத குறையாகத் துரத்தி விட்டுருக்கிறான். மனம் கனத்துப் போக அலைபேசியில் அவளுக்கு அழைத்தான்.

அந்த நேரம்தான் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தவள் அழைப்பைப் பார்த்து விட்டு ஆத்திரம் மேலிட, கோபத்தில் எடுக்காமல் துண்டித்து அலைபேசியையும் ஒலியெழுப்பாமல் இசைக்கும்படி (சைலென்ட் மோட்) போட்டாள்.

“ஏட்டி! இப்பத்தான் மாறன் கூப்பிட்டான்.இனித்தான் உங்கப் போறேன்னான். அதுக்குள்ள நீ வந்து நிக்குதே…”

“அது, மாமன் வர நேரமாச்சுதா, எனக்குக் கொஞ்சம் படிப்பு வேலை இருக்குது. அதான் கண்ணாயிரம் அண்ணாச்சிகிட்டப் பார்த்துக்கிடச் சொல்லிட்டு வந்துட்டேன்”

“அப்போ நீ உங்கலையா?”

“இல்லத்த.கால அங்கன விசேஷ வீட்டுல சாப்பிட்டது, இங்கனக் கறியெல்லாம் சமைச்சது எல்லாம் ஒரு மாரிப் பசிக்காம உப்புசம் மாரி இருக்கு. எனக்கு வேணாம். நான் படிக்கப் போறேன்” என்றவள் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இதற்குள் பத்து தடவை அழைத்திருந்தான் அமுதன்.

எரிச்சலாக வந்தது அவளுக்கு.

“நேரில் திட்டுனது பத்தாதுன்னு ஃபோன் போட்டு வேற திட்டப் போறாக போல.”

அவன் அழைத்துக் கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில் முடியாமல் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்திருந்தாள்.

“ஏட்டி! எம்புட்டு நேரமாக் கூப்பிடுதேன். எடுக்க மாட்டியோ?”

“ஆங்…நீங்க கூப்பிடத்தான் இங்கன காத்துக் கெடக்காக. என்ன வேணுஞ் சொல்லுங்க”

“ரொம்பத்தான் நீட்டு மொழக்குதியே.அம்புட்டுக் கோபமா?”

“பின்ன கொஞ்சுவாகளோ?”

“ம்ம்ம்…கொஞ்சுனா நல்லாத்தான் இருக்கும்”

சட்டென்று இரண்டு பக்கமும் அமைதியானார்கள்

பேசும் வேகத்தில் எதையோ பேசி விட்டது இருவருக்குமே புரிந்து விட பலத்த அமைதி நிலவ முதலில் மௌனம் கலைப்பது யார் என்பதில் தயக்கம் இருக்க அமுதன் தொண்டையைச் செருமிக் கொண்டான். பின் கரகரத்து விட்ட குரலில்,

“பசியாறலையா?”

“எனக்கு வேணாம்.பசிக்கல”

“பொறவெதுக்கு ரெண்டு பேத்துக்கும் கொண்டு வந்தே?”

“அப்போ பசிச்சுது.இப்போ பசிக்கல”

“அதாவது நான் ஏசுனனால பசிக்கல.”

“ஐயே! நீங்க பெரிய இவுக.நீங்க ஏசிப்புட்டனால நாங்க பட்டினி கெடக்கோமாக்கும்.அதெல்லாம் ரெண்டு பங்காத் திம்பேன்”

அவள் சொன்ன தொனியில் சிரிப்பு வந்தது அவனுக்கு.

“ரெண்டு பங்கெல்லாம் வேணாம். மின்ன இருந்ததுக்கு இப்பத்தான் கொஞ்சம் உடம்பு மெலிஞ்சு அழகாயிருக்கு”

அவளுக்கு அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிற்று.

அமுதன் இதுவரை அவள் அழகு குறித்துப் பேசியதில்லை.பார்வையில் கூடக் கவனமாகத்தான் இருப்பான்.அதனால்தான், சுடிதார் அணிந்து கொண்டேயிருப்பதால் சிறு பெண்ணாகத் தோன்றுவதால்தான், அவனுக்கு அவளைப் பெரிய பெண்ணாகப் பார்க்கத் தோன்றவில்லையோ, தாவணி பாவாடையில் போனால் பார்ப்பானோ எனத் தோன்றியதால்தான் அன்று இல்லாத வேலையெல்லாம் செய்து அவன் முன் சென்று நின்றிருந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போல் அவன் பார்வையில் மாற்றம் இருந்தது. ஆனால் பிறகு எல்லாமே மாறித்தான் விட்டது.

இப்போது அவன் சொன்னதைக் கேட்டவளுக்குக் கொஞ்சம் குளிர்ந்தாலும் உடனே கோபமும் வந்தது.

“அப்ப இம்புட்டு நாளு அசிங்கமா இருந்தேனா?”

“அப்பிடிப் பச்சையாச் சொல்ல முடியாது.ஒரு யூகமா வேணாச் சொல்லலாம்” என அவன் சிரிப்புடன் வடிவேலு போலப் பேசிக் காட்ட அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

அவள் சிரித்து விட்டாள் என்பது தெரிந்ததும் கனிவைக் குரலில் தேக்கி “போய்ப் பசியாறுத்தா” என்றான்.

அவளோ இன்னும் முறுக்கிக் கொண்டாள்.

“இல்ல. எனக்கு வேணாம்”

“அப்பச் சரி. எனக்கும் வேணாம்”

“நீங்க இன்னும் உங்கலையா?”

“ம்ம்ஹூம்… அம்மை நிறைய குடுத்து விட்டுருக்கவும் உனக்கும் சேர்த்தோன்னு தோனுச்சு. உங்காமப் போய்ட்டியேன்னுதான் கூப்பிட்டேன்.”

அவன் அக்கறை மழைச் சாரலாய் மெல்ல வருடிச் செல்ல சில வினாடிகள் அமைதியின் பின்,

“சாரி மாமா!”

“எதுக்குத்தா?”

“உங்க ரூம்புக்குள்ள நொழைஞ்சு…”

“அது பேச வேனாம்த்தா.விடு.நடந்து போச்சு.நானும் கொஞ்சம் அதிகமாத்தான் ஆத்திரப்பட்டுட்டேன்.நானும் சாரி. போ! போய்ப் பசியாறு”

“ம்ம்ம்…நீங்களும்…”

“இதா போறேன்.ஃபோனை வச்சுருதேன்”

“ம்ம்ம்”

வெளியே சென்றவள் மரகதம் வாசலின் அருகே கால் நீட்டி அமர்ந்திருக்கக் கண்டு மெதுவாகப் பூனைப்பாதம் வைத்து சமையலறையின் பக்கம் நகர,

“அங்கன எங்கத்தா போறே?”

“அது…வந்துத்த…இப்பத்தான் லேசாப் பசிக்கித மாரி இருக்கு”

“பசிக்குதா? அடடா நீ வேணாம்னியேன்னு இப்பத்தான் கோகிலாவைக் கூப்பிட்டு எல்லாத்தையும் குடுத்து விட்டேன்” என்றவர் எழுந்து வந்தார்.

திருதிருவென விழித்துக் கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றிருந்தவளைக் கண்டதும் சிரிப்பு வந்து விட வாய் விட்டுச் சிரித்தவர்,

“போ! அங்கன மூடி வச்சுருக்கேன். போய்ப் பசியாறு”

“சும்மாக்காச்சுக்கும் சொன்னியளா!”

“ஆமா நீ மட்டும் பொய் சொல்லலாமோ? இந்த மூணு வருஷத்துல ஒனக்கு என்ன பிடிக்கும், எது ஒத்துக்காதுன்னெல்லாம் எனக்குத் தெரியாதாத்தா? அப்ப மாறன் கூட ஏதோ சண்டை அதான் பசியில்ல.இப்ப சமாதானமாயாச்சு அதான் பசிக்குது.நாஞ்சொன்னது சரித்தான?”

“அத்த! நீங்க வெவரமானவுகதான்”

“வெவரமானவுக இல்லத்தா. வெவரம் தெரிஞ்சவுக.போ! போய்ப் பசியாறு. நானும் அப்படி இடுப்பைச் செத்தக் கீழ போடுதேன்”

உணவை முடித்துக் கொண்டு படிக்க அமர்ந்தாள்.

நாட்கள் கடந்திருக்க இன்னும் இரண்டு மாதங்களில் தேர்வு என்ற நிலையில் புத்தகமும் கையுமாகவே திரிந்தாள் குமுதா. அமுதனின் ஆணைப்படி மரகதமும் அவளை எந்த வேலையும் செய்ய விடவில்லை. காபி, டிபன், சாப்பாடு எல்லாம் அவள் அறைக்கே சென்று கொண்டிருந்தன.

அமுதன் தினமும் ஐந்து நிமிடங்கள் பேசுவான் அவளிடம். அவளைத் தூண்டுவிப்பதாக இருக்கும் அந்தப் பேச்சு.சில நேரங்களில் படித்துக் கொண்டேயிருப்பவளை இயல்பாக்கும் பொருட்டு கேலியும் பேசுவான். அந்த ஐந்து நிமிடங்கள் அவளுக்கு அத்தனை பிடித்தம்.

அன்று பயிற்சி மையத்திற்குக் குமுதா கொஞ்சம் முன்னமே வந்திருக்க தன் வகுப்பிற்குப் போகும் வழியில் இன்னொரு வகுப்பில் யாரோ முன்னிருந்த பெஞ்சில் கவிழ்ந்து படுத்திருப்பது போல் தோன்ற குமுதா நிதானித்தாள்.

நின்று பின்னோக்கி வந்து பார்க்க அந்தப் பெண் படுத்திருக்கவில்லை, குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தது தெரிய வந்தது.

அருகில் சென்றவள் அவள் முதுகைத் தொட அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் வளர்மதி.குமுதாவுக்கு அவளை நன்றாகத் தெரியும். மன்னவனூர் தாண்டி உள்ள இன்னொரு கிராமத்தில் இருந்துதான் வந்து படித்துக் கொண்டிருக்கிறாள் அவள். நன்றாகப் படிக்கும் பெண்ணும் கூட.

“என்னாச்சு? ஏன் அழுகுறே?”

“இல்ல… ஒன்னும் இல்ல” அவள் புறங்கையால் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழப் போக அவளை இழுத்து உட்கார வைத்தாள் குமுதா.

“என்னன்னு சொல்லு! என்னால முடிஞ்ச ஒபகாரத்தைப் பண்ணுதேன்”

“அது…வந்து… நாள எனக்குக் கன்னாலம்”

அதிர்ந்து போனாள் குமுதா.

“எதே? கன்னாலமா? அதுக்குள்ளயா? இன்னும் கொஞ்ச நாள்ல நீட்டுப் பரீட்சை இருக்கு.நீ எழுதப் போறதானே?”

“ஆமா எழுதணும்.ஆனா…”

“ஆனா என்ன? மொதல்ல பதினெட்டு வயசு முடிஞ்சுடுச்சா ஒனக்கு?”

“இல்ல இப்பத்தாதான் பதினெட்டு நடக்கு.அடுத்த வாரந்தான் முடியுது”

“சரி! இப்ப எதுக்குப் பரீட்சைக்கு மின்ன கன்னாலம் வைக்காக.பரீட்சை முடிஞ்சதும் வைக்க வேண்டியதுதானே”

“எனக்கும் அதான் தெரியல.திடீர்னு ஜாதகம்னாக. ஜோசியம்னாக.ஆரோ பொண்ணு கேட்டு வந்தாக.நீ ஒரே நாளு கன்னாலத்த முடிச்சுட்டு அப்புறம் போயிப் பரீட்சை எழுதுன்னுட்டாக.எனக்குக் கன்னலாம் கட்டிக்கிடக் கொஞ்சமும் இஸ்டமில்ல”

“பொறவு சொல்ல வேண்டியதுதான”

“அதெல்லாம் ஆனமட்டும் சொல்லிப் பார்த்துட்டேன். ஆரும் கேக்க மாட்டுக்காக.”

“நாளக் கன்னாலம்ங்கே. இன்னிக்கு எப்பிடி வர விட்டாவ?”

“முக்கியமான பரீட்சை இருக்குன்னு பொய் சொல்லிட்டு வந்தேன். வாசல்லயே என் சின்னம்மை மவன் காத்திருக்கான் எனக்காக.”

“அப்பிடி என்னதான் அவசரமாம்?”

“தெரியலையே! எனக்குப் பதினெட்டு வயசாகக்குள்ள கன்னாலம் பண்ணியாகணும்னு சோசியர் சொல்லிட்டாராம்”

இதென்ன வினோதமாக இருக்கிறது.இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என யோசித்தவளுக்கு அமுதன் ஒரு நாள் சொன்னது நினைவு வந்தது.

அவள் கோடனூர் வந்து சில மாதங்களாகி இருந்த நிலையில் ஒரு நாள் வீட்டுக்கு வந்தவன் பேசிக் கொண்டிருக்கும் போது,

“ஒன்னகிட்ட ஒன்னு சொல்லணும்னு நெனச்சேன்த்தா. பொறவு அப்பிடியே விட்டுப் போயிட்டு.பதினெட்டு வயசுக்குக் கொறச்சலா இருக்கிற பொண்ணுங்களுக்குக் கன்னாலம் பண்ண யாராவது முயற்சி பண்ணுனா அந்தப் பொண்ணுதான் ப்ராது குடுக்கணும்னில்ல.வேற யாராவது கூட இப்பிடி நடக்குன்னு போலீசுல சொல்லிட்டாப் போதும்.போலீசுல கேச எடுத்துக்காட்டிக் கமிஷனரு, கலெக்டரு ஆருகிட்ட வேணாச் சொல்லலாம். மனு எழுதிப் போட்டாக் கூட ஒடனே ஆக்‌ஷன் எடுத்துருவாக.தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லதுன்னு தோனுச்சு.அதாம் சொன்னேன். ஒனக்கில்லைன்னாலும் ஆருக்காச்சும் ஒபயோகப்படுமில்ல”

ஒரு முடிவுக்கு வந்தவளாக எழுந்து நின்றாள்.

“நீ வா! என்ன பண்ணனும்னு நாஞ்சொல்லுதேன்”

வாசலில் அவளது சிற்றன்னை மகன் யாரெனக் கேட்டுக் கொண்டவள்,

“மொதல்ல நான் சார்கிட்டப் போயி ஒனக்கு ஒடம்பு சொகமில்லை நானும் கூடப் போறேன்னு பெர்மிசன் கேக்கேன்.அப்புறம் வெளியே ஒன் சித்தி மவனைப் பேச்சுக் குடுத்துக் கொஞ்சம் தள்ளிக் கூட்டிட்டுப் போய்ருதேன். அந்த நேரம் நீ வெளிய வந்து எங்கனயாவது ஒளிஞ்சிக்கிடு. பொறவு நான் வந்து சேர்ந்துக்கிடுதேன்”

“இப்படித் தப்பிச்சுப் போயி என்ன செய்யப் போறோம்?”

“சொல்லுதேன் வா”

குமுதா சொன்னது போலவே வளர்மதியின் உறவினன் கண்களில் மண்ணைத் தூவி சாமர்த்தியமாக வெளியே வர, ஒளிந்திருந்த வளர்மதியுடன் ஒரு ஆட்டோவைப் பிடித்து,

“கலெக்டர் ஆஃபிசுக்கு விடுங்க அண்ணாச்சி”

“அங்கன எதுக்கு?” வளர்மதி கேட்டாள்.

“அங்கன போயி இப்பிடி நடக்குன்னு சொன்னாக் கன்னாலத்தை நிப்பாட்டிருவாக”

சோர்ந்திருந்த வளர்மதியின் கண்ணில் ஒரு கணம் ஒளி வந்தது.

“ஆனா எங்கூட்டுல தெரிஞ்சா என்ன வெட்டிப் போட்டிருவாகளே!”

“தெரியாது.ப்ராது கூட நீ குடுக்க வேணாம்.நான் குடுக்கேன். இந்தா பேனா. இதுல ஒம் பேரு, ஒனக்க பெத்தவக பேரு, வீட்டு அட்ரசு எல்லாம் எழுது… கன்னாலப் பத்திரிக்க ஏதும் கையோட வச்சுருக்கியா?”

“ம்ம்ஹூம் இல்ல”

“சரி பரவாயில்ல.சொல்லிச் சமாளிச்சுக்கலாம் வா”

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றவர்கள் அவரைப் பார்க்க அனுமதி கேட்க அவர்கள் நல்ல நேரமோ என்னவோ உடனே கிடைத்து விட்டது.

கனிவும் கருணையுமாக இருந்த ஆட்சியரின் முகத்தில் அவர்கள் கூறிய விஷயம் கேட்டதும் கடுப்பேறியது.

அவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்டு விட்டு குமுதாவின் கையால் ஒரு புகாரையும் எழுதி வாங்கிக் கொண்டு, வளர்மதியைப் பார்த்து,

“தைரியமா இருக்கணும்.குமுதாவைப் பார்.எத்தனை தைரியமா இருக்கா! இத்தனைக்கும் அவளும் இதே மாதிரி ஒரு கொடுமையில இருந்து தப்பிச்சு வந்துருக்கா.ஆனா நீ தப்புப் பண்ணிட்டே குமுதா. உன் மாமனுக்கு தண்டனை வாங்கிக் குடுத்துருக்கணும் நீ”

அவர் சொல்லும் போது அப்படித்தான் செய்திருக்க வேண்டுமோ என்றுதான் தோன்றியது.அமுதன் எத்தனையோ முறை சொன்னான். அவள்தான் கேட்கவில்லை.

அவர் தொடர்ந்து பேசினார்.

“வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்

   வேகாது வேந்தராலும்

கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும்

   நிறைவொழியக் குறைபடாது

கள்ளத்தார் எவராலும் களவாட

   முடியாது கல்வி என்னும்

உள்ளத்தே பொருளிருக்க உலகெங்கும்

   பொருள்தேடி உழல்வ தென்னே

அப்பிடின்னு விவேக சிந்தாமணி சொல்லுது. என்ன? பாட்டுப் புரியுதா?” அவர் கேட்கவும் இருவரும் ஆம் என்றும் இல்லையென்றும் தோன்றாமல் தலையை உருட்ட சிரித்துக் கொண்டே விளக்கினார்.

“கல்வி ஒன்னுதான் தண்ணிலயோ தீயிலயோ அழியாது. அரசனால அடிச்சுப் பிடுங்க முடியாது.திருடனால திருடிப் போக முடியாது. அப்படிப்பட்ட கல்வியை சேர்த்து வச்சுக்காம மக்கள் பொருளை சேர்த்து வைக்கிறாங்களேன்னு பாட்டு சொல்லுது. அந்தக் கல்வியைப் பெண்களுக்கு மறுக்கிற உன் மாமன் மாதிரி சில அயோக்கியனுகளை எல்லாம் தகுந்த விதத்துல தண்டிக்கணும்”

வளர்மதியைப் பார்த்தவர்,

“உன் கல்யாணத்தை நிறுத்தி இதுக்குக் காரணமா இருக்கிறவனகளுக்குத் தண்டனை வாங்கிக் குடுக்கிறதைப் பார்க்கிறதுல மத்தவங்க திருந்தணும். அது மட்டுமில்லாம குமுதாதான் கம்ப்ளைன்ட் குடுத்ததுன்னு வெளிய தெரியாமயும் நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாமப் போய் வாங்க” என்றார்.

அவருக்கு நன்றி கூறி விட்டு இருவரும் பேருந்தில் ஏறித் தங்கள் ஊர் திரும்பினர். பேருந்தில் இருந்து இறங்கும் முன் வளர்மதிக்கு தைரியம் சொல்லி எதுவும் நடக்காது, அப்படியே பெரிய பிரச்சனை என்றால் தன்னை அழைக்குமாறும் தான் தன் மாமனுடன் வந்து அவளைக் காப்பாற்றுவதாகவும் வாக்களித்தாள்.

ஆனால் அதற்கு அவசியமில்லாமல் மறுநாள் காலை நான்கு மணிக்கே அந்த ஆட்சியர் பெரிய போலீஸ் படையுடன் அதிரடியாக வருகை தந்து திருமணத்தை நிறுத்தி அந்த மாப்பிள்ளை வீட்டாரைக் கைது செய்து விலங்கு மாட்டித் தெருவில் பலர் பார்க்க இழுத்துச் செல்ல வைத்தார்.

வளர்மதியின் பெற்றோரை அவள் வேண்டுகோளின் பேரில் கைது செய்யாமல் எச்சரித்து விட்டு ஊர் மக்களிடமும்,

“இனி யாராச்சும் இந்த மாதிரிப் பதினெட்டு வயசுக்குக் குறைவான பெண்களை ஜாதகம், ஜோசியம், குடும்ப கௌரவம், குல கௌரவம்னு கல்யாணம் பண்ணிக் குடுக்கப் பார்த்தீங்க…முட்டிக்கு முட்டி தட்டி உள்ள தள்ளிக் காலத்துக்கும் கம்பியெண்ண வச்சுருவேன்.” என்று கடுமையாக எச்சரித்து விட்டுச் சென்றிருந்தார்.

இதைக் கேட்டதும் குமுதாவுக்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது. வளர்மதி அழைத்துச் சொல்லிய போது நேரம் ஆறரை. அவள் உடனே அமுதனை அழைக்க அவன் தொழிற்சாலையில் உள்ளே இருக்க, டவர் கிடைக்காமல் நாட் ரீச்சபிள் என்று வந்தது. அதன் பிறகு குமுதாவும் இந்த நிகழ்வை அவனிடம் சொல்ல மறந்து போனாள்.

அவள் ஞாபகமாகச் சொல்லி இருந்தால் பின்னால் நேரப் போகும் பல கொடுமையான விஷயங்கள் நேராமலே இருந்திருக்கும்.

விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும்அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்