அத்தியாயம் 13

வளைகாப்பு வீட்டிலிருந்து வருகையில் குமுதா மரகதத்திடம்,

“யத்தே! எனக்கு மாமங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நான் அந்த வீட்டுக்குப் போய் வரட்டா?”

“ஏம்த்தா மாறங்கிட்ட ஃபோனுல பேச வேண்டியதுதான? இதுக்கு என்னத்துக்கு வெயிலோட கெடந்து அலையுதேங்கே?”

“இல்லத்த, இது நேர்லதான் கேக்கணும். மாமன் இன்னிக்கு இங்கன வருவாகன்னு நெனச்சிருந்தேன்”

“சர்த்தான் போய் வா! ஆனா இந்நேரம் அவன் ஃபேக்டரிலல்லா இருப்பான்”

“ம்ம்ம்…அப்ப மதியம் போறேன்” என்றவள் கொஞ்சம் தயங்கி “மாமா மதிய சாப்பாட்டுக்கு இங்கன வந்து நாளாச்சில்லத்த” என்றாள்.

“ஆமாத்தா! என்னவோ வேல வேலன்னு வரவே மாட்டுக்கான்”

“அப்போ மாமனுக்குப் பிடிச்சது ஏதாவது செய்ஞ்சு கொண்டு போய்க் குடுத்துட்டு அப்படியே பார்த்துப் பேசிட்டு வரட்டுமா”

“ம்ம்ம் செய்யலாமே! என் கையாலதான் நல்லாச் சாப்பிடுவான்.நானும் வீம்பு பண்ணிகிட்டே நாளைக் கடத்திகிட்டுக் கெடக்கேன்”

“மாமனுக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்த்த?”

“உளுந்தஞ்சோறும் கறிக்கொழம்பும்னா உசுரையே குடுப்பாம்த்தா”

“எங்கத்த…அதாம் சிவாக்க அம்மை… உளுந்தஞ்சோத்துக்குக் கருவாட்டுக் கொழம்பு வைக்கும்”

“அதும் நல்லா இருக்கும்…ஆனா இந்த ராலு மீனு நண்டு கருவாடுன்னு அதுங்க கூடப் பொழங்க ஆரம்பிச்சதும் எந்நேரமும் அந்தக் கவிச்சிலயே இருக்கிறனலயோ என்னவோ அதெல்லாம் மாறனுக்குப் பிடித்தமா இருக்கிறதில்ல… அது தவுத்துக் கறி, கோழி ஏன் காடை கௌதாரியெல்லாம் கூடச் சாப்பிடுவான்”

எனவே வரும் வழியிலேயே கறியும் வாங்கிக் கொண்டவர்கள் வீட்டுக்கு வந்ததும் சமையலில் இறங்கினார்கள்.

கட்டியிருந்த மெல்லிய சரிகைக் கரையிட்ட பட்டுச் சேலையை மாற்றிக் கொண்டு வந்த மரகதம் அவள் இன்னும் உடை மாற்றாதிருப்பது கண்டு “உடுப்பு மாத்திக்கிட வேண்டியதுதான? கசகசன்னு இருக்கும்லா”

‘என்னது உடை மாற்றுவதா? பிறகு அவள் திட்டம் என்னாவது?’

ஆம் பெரிய திட்டம்தான் போட்டிருந்தாள்.

அமுதன் அன்று சொல்லிச் சென்றதிலிருந்தே அவளை அறியாமல் அவள் மனத்தில் வேதாவின் மீதான பொறாமை கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.

‘மூன்று ஆண்டுகள் கடந்தும் அவளோடு வாழ்ந்திருக்கும் வாழ்க்கைக்காக அமுதனை ஏங்க வைத்தவள் அத்தனை பெரிய அழகியா? அவள் எப்படி இருப்பாள்?’ என அறிந்து கொள்ள வேண்டும் என ஒரு வெறியே ஏற்பட்டிருந்தது அவளுள். இப்போது ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கத் திட்டமிட்டாள்

அவளைப் பொருத்தவரை அவளை அமுதன் காண வேண்டும்.அவள் வேதவல்லியின் புகைப்படத்தைப் பார்க்க வேண்டும்.

மரகதத்தைப் பொருத்தவரை இது குமுதா அமுதனிடம் ஏதோ கேட்க வேண்டி இருக்க அதற்காகச் செல்லுவது.

அமுதனைப் பொருத்தவரை மரகதம் சமைத்ததை அமுதனுக்குக் கொண்டு வந்து கொடுக்க வந்தாள்.

தன் திட்டங்களைத் தானே மெச்சிக் கொண்டவள் மரகதத்துக்கு பதிலாக,

“இருக்கட்டும்த்த… எப்பிடியும் மறுக்கா வெளிய போகனுமில்ல”

அவளை வினோதமாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் வேலையை ஆரம்பித்தார் மரகதம். குமுதாவும் உடனிருந்து உதவ அடுத்த ஒரு மணி நேரத்தில் உளுந்தஞ்சோறும் கறிக்குழம்பும் தூக்குப் போனியில் தயாராக இருந்தன.

முகம் கழுவிக் கண்ணாடியில் பார்த்து பார்த்த அளவில் திருப்தியுற்றவள் கூடையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.

உணவு கொண்டு போவதாகத் திட்டமிட்டதுமே கண்ணாயிரத்துக்கு அழைத்திருந்தாள்.

“சொல்லுங்கம்மா!”

“அண்ணாச்சி! இன்னிக்கு மாமனுக்கு நான் சாப்பாடு கொண்டு வருதேன். அங்கன பார்த்து உங்களுக்கெல்லாம் மட்டும் பண்ணிக்கிடுங்க”

“ஏன் தாயி நீங்க அலையுதீக? நான் வந்து வாங்கிக்கிடட்டுமா?”

‘கெட்டுது போ’ என மனத்துள் எண்ணியவள் வெளியே “இல்ல அண்ணாச்சி எனக்கு மாமங்கிட்ட ஒன்னு கேக்க வேண்டியிருக்கு அதான்…”

“அப்ப ஃபோனைப் போட்டு ஐயாவை அங்கன வரச் சொல்ல வேண்டியதுதான தாயி”

அவளுக்கு சுறுசுறுவென எரிச்சலாக வந்தது.

“இல்ல அங்கன எனக்கு ஒரு வேலையிருக்கு. நான் வந்து சொல்லுதேன்” என்று வைத்து விட்டாள்.

“இந்த அண்ணாச்சி வேற, மனுசி அவஸ்த புரியாம…”

ஏதோ யோசித்தவள் மறுபடியும் கண்ணாயிரத்துக்கு அழைத்து “மாமாகிட்ட ஒன்னுஞ் சொல்லண்டாம் (சொல்ல வேண்டாம்). வந்து பார்த்துத் தெரிஞ்சுக்கிடட்டும்”

தனக்குள் சிரித்துக் கொண்டவனும் “சரி தாயி” என்றிருந்தான்.

நடந்து வந்து கொண்டிருந்தவள் தீவிர யோசனையில் இருந்தாள்.

‘வேதவல்லியின் படத்தை எங்கே தேடுவது?’

அவ்வப்போது மரகதத்திடம் பேச்சுக் கொடுத்து வேதவல்லி எப்படி இருப்பாள் என அறிய முற்பட்டிருந்தாள்.

“அத்த! உங்க மருமகப் பொண்ணு ரொம்ப அழகோ?”

“யாரை வேதாவையா கேக்குதே?”

“ம்ம்ம்…”

“ஆமாத்தா! ரொம்ப அழகுதான்”

“எப்பிடி இருப்பாக?”

“எப்பிடி இருப்பான்னா எப்பிடிச் சொல்ல? நல்ல பொன்னெறமா இருப்பா. பொறவு கண்ணு காது மூக்கு எல்லாம் திருத்தமா, மெலிசுன்னும் சொல்ல முடியாம தடிப்புன்னும் சொல்ல முடியாமக் கொஞ்சமாப் பூசுனாப் போல, அந்தக் காலத்துல கோவில்ல வெங்கலச் சிலயெல்லாம் இருக்கும்லா… அது மாதிரிப் பளபளன்னு இருப்பா.அதும் போக அந்த பூட்டி கோர்சு…”

“எது? பூட்டியா?”

“அதாம்த்தா… அழகு படுத்திக்கப் படிக்காகள்லா”

“ஓ! பியூட்டிசியன் கோர்சா!”

“ஆங்… அதான்… அந்தக் கோர்சு படிச்சுருந்தா.சாதாரண பள்ளிக்கோடப் படிப்புல பெருசா ஆர்வம் இல்ல போல.சிறு வயசுல இருந்தே இதைப் போல அழகு படுத்திக்க, அழகா உடுத்திக்கப் பிடிக்குமாம்.அதான் அது சம்பந்தமாவே படிச்சா போல.”

“கண்ணுக்கழகாப் பொண்டாட்டி இருந்தாலும் குடுத்து வைக்கணுமல்லா. யானை தானே தன் தலையில மண்ண வாரிப் போட்டுக்கிட்ட மாரிப் போட்டுகிட்டான். என்னத்த சொல்ல”

அவர் புலம்பிபடிச் சென்று விட்டார்.

அவர் வேதவல்லியை வர்ணித்தது கேட்டு அவளுக்குக் காதில் புகை வராத குறைதான்.அன்றிலிருந்தே வேதவல்லியின் புகைப்படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாள். மரகதத்தின் வீட்டில் ஒழித்துப் போட்டிருக்கும் பொருட்களில் கூடத் தேடி விட்டாள். கிடைக்கவில்லை.அதனால்தான் அமுதனின் வீட்டில் தேடக் கிளம்பி விட்டாள்.

அடுத்த பத்தாவது நிமிடம் அமுதனின் வீட்டை அடைந்திருந்தவள் கூடையைக் கொண்டு போய் உணவு மேஜையில் வைத்து விட்டு, தொடர்ந்து வந்த கண்ணாயிரத்திடம் “அன்னிக்கு நான் வந்தப்போ ஒரு க்ளிப் ஒன்னை மேல விட்டுட்டுப் போய்ட்டேன். நான் போய்த் தேடிப் பார்த்து எடுத்துட்டு வாரேன்”

‘எது தாயி, மூணு வருஷம் மின்ன வச்சதையா’ என்ற கேட்க வாய் வரை வார்த்தைகள் வந்தாலும் எதுவும் சொல்லாமல் “சரி தாயி!” என்றவன் அமைதியாக வாசலில் போய் அமர்ந்து விட்டான்.

எஜமானனின் வாழ்வில் எத்தனையோ நடந்திருக்க இப்போது குமுதாவின் வரவு அமுதனை மகிழ்ச்சிப் படுத்துவதை அறிந்திருந்தவன் அவளின் செயல்களுக்கு ஆதரவாகவே இருந்தான்.

துள்ளிக் குதித்துக் கொண்டு மாடிப் படிகளில் ஏறிச் சென்றவள் முன்பு தான் இருந்த அறைக்குள் நுழையாமல் அமுதனின் படுக்கையறையைத் தேடிப் போனாள்.

முதல் இரண்டு அறைகளும் சிறியதாக இருக்க மூன்றாவது அறையைத் திறந்தாள்.

அறையின் நடுவிலிருந்த இரட்டைக் கட்டில், ஓரமாக இருந்த மெத்திருக்கை என பல பொருட்களின் மேல் வெள்ளைத் துணி கொண்டு மூடியிருக்க ஏதோ தோன்ற அந்த அறைக்குள் சென்றாள்.

அமுதனும் வேதவல்லியும் இருந்த அறை அதுவாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது அவளுக்கு.

அங்கிருந்த பெரிய மர அலமாரியின் அருகே சென்று அதைத் திறந்தாள்.

கீழிருக்கும் அடுக்குக்கள் காலியாக இருந்தாலும் மேலிருந்த அடுக்குக்களில் புடைவை, சுடிதார் போன்றவை அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

இதெல்லாம் வேதவல்லி கொண்டு வந்ததா அல்லது அவள் மேலிருந்த ஆசையில் அமுதன் வாங்கித் தந்ததா என நினைக்க அவளுக்கு வயிறு காந்தியது.

‘அவக பொண்டாட்டிக்கு அவக வாங்கிக் கொடுத்துருக்காக. ஒனக்கேன் பொறாம’ எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் அவர்களின் திருமணப் புகைப்படமோ அல்லது ஆல்பமோ ஏதாவது இருக்கிறதா எனத் தேட ஆரம்பித்தாள்.

………………………………………………………………………………………………………….

தொழிற்சாலையில் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன். இப்போதெல்லாம் காலை எட்டு மணிக்கு வந்து விட்டானானால் மீண்டும் மதிய உணவுக்கு ஒன்றரை மணிக்குத்தான் கிளம்புவான்.அது வரை வேலை வேலை என நில்லாது ஓடிக் கொண்டே இருப்பான்.

புதிதாக அருகில் போடப்பட்டிருந்த யூனிட் முடிவடையும் நிலையில் இருந்தது. இவ்வளவு நாட்களாக இறால், மீன் போன்றவற்றை வாங்கி அதனை உடனுக்குடன் ஊறுகாயாகத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அளவு அதிகம் தேவைப்படுவதால், ஆகும் பொருட்களின் அளவை அதிகரிக்க வேண்டியிருப்பது மட்டுமல்ல சேமித்து வைக்கவும் இடம் தேவைப்பட்டது. வெறும் சேமிப்பு மட்டுமல்ல… பதப்படுத்தி வைக்க வேண்டி இருந்தது. எனவே பெரிய பெரிய குளிர்பதனிகளுடன் அந்த இரண்டாவது யூனிட் தயாராகி இருந்தது.

முதலில் வீட்டுக்குச் செல்ல யோசித்துக் கொண்டு உணவை அங்கே வரவழைத்தவனுக்கு அதைப் போல் உண்ணப் பிடிக்கவில்லை. வீட்டில் இலை போட்டு சுடச் சுட உணவருந்திப் பழக்கப்பட்டவன் அவன். இப்போது இங்கே கொண்டு வருவது ஓரளவு சூடாக இருந்தாலும் வீட்டில் உண்பது போலில்லை என்பதால் மதிய உணவுக்கு வீட்டுக்கே போய் வந்து கொண்டிருந்தான்.

அன்றும் நேரம் ஒன்றரையாகவும் மாணிக்கம் நினைவுறுத்த வீட்டுக்குக் கிளம்பினான்.

………………………………………………………………………………………………………….

துணி அலமாரி முழுவதும் தேடியும் எதுவும் கிடைக்காமற் போகவே சலிப்பாகிப் போனது அவளுக்கு.ஒருவேளை வேறு அறை எதிலும் இருக்குமோ? ஆனால் இங்குதான் இருக்கும் என அவள் உள்ளுணர்வு சொல்ல மீண்டும் சுற்றிலும் பார்த்தாள்.

ஒரு மேஜையின் மீதும் வெண்ணிறத் துணி போர்த்தப்பட்டிருக்க சென்று அதை விலக்கினாள்.

மேஜை இழுப்பறையைத் திறக்க அவள் தேடி வந்தது அங்கேதான் இருந்தது.

………………………………………………………………………………………………………….

வாசலில் அமுதன் வண்டியை நிறுத்தவும் கண்ணாயிரம் எழுந்து நின்றான்.

என்ன என்பது போல் பார்த்தவனிடம் “மலரம்மா ஒங்களுக்குச் சாப்பாடு கொண்டாந்துருக்காக”

அவன் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க, அகத்தை முகம் காட்டிக் கொடுக்க, கண்ணாயிரம் அறியாமல் அதை மறைக்கப் பெரும்பாடுபட்டுப் போனான்.

“ஓ” என்றவன் “என்ன விசயமாம்?” என வினவ,

“தெரிலங்கையா.”

உள்ளே சென்றவன் ஆவலாய் அவளைத் தேட “மேல போய் இருக்காக” என்றான் கண்ணாயிரம்.

“ம்ம்ம்…” என்றவன் மாடிப் படிகளில் ஏற ஆரம்பித்தான்.

‘இவ எதுக்கு மேல வந்தா’ தனக்குத்தானே கேட்டுக் கொண்டவன் முதலில் இருந்த இரு அறைகளிலும் பார்த்து விட்டு அங்கில்லாமல் போகவே மூன்றாவது அறை திறந்திருக்கக் கண்டு புருவம் சுருக்கினான்.

அவனும் வேதவல்லியும் பயன்படுத்துவதற்காக இருந்த அந்த அறையை அவள் சென்றதன் பின் அவன் திறந்தது இல்லை. பூட்டுப் போட்டுப் பூட்டா விட்டாலும் அந்த அறைக்குள் யாரும் நுழையக் கூடாது என்பது அவன் போடாமல் போட்டிருந்த கட்டளை.

பத்து நாட்களுக்கு ஒரு முறை அதுவும் அவன் அந்த பெரிய ஊஞ்சலில் அமர்ந்திருக்கையில் வேலையாள் வந்து தூசி தட்டிக் கூட்டி விட்டுப் போவாள்.

இப்போது இவள் இங்கே, அதுவும் இந்த அறையில் என்ன செய்கிறாள் என யோசித்தவன் அறை வாசலை நெருங்கியிருந்தான்.

கையில் கண்ணாடிச் சட்டமிட்ட புகைப்படம் இருக்க, திருமணக் கோலத்தில் வேதாவும் அமுதனும் இருக்க, வேதவல்லியைப் பார்க்க வந்தவள் அதை மறந்து போய் அமுதனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

படத்தைக் கையில் எடுத்ததுமே முதலில் அவள் வேதாவைத்தான் பார்த்தாள். மரகதம் சொன்னது போல பொன்னிறமாகத் திருத்தமாகத்தான் இருந்தாள். ஆனால் ஏதோ ஒன்று குறைவது போலிருந்தது அவளுக்கு.

மணமகளுக்கேயுரிய மெல்லிய புன்னகை வேதாவின் முகத்திலும் இருந்தது.ஆனால் என்ன குறைகிறது எனக் கண்டு கொள்ள முடியாமல் பார்வையை அமுதனிடம் திருப்பியவள் கண்ணைச் சிமிட்டக் கூட மறந்தாள். அத்தனை அழகாக கம்பீரமாக இருந்தான் அவள் அமுதன்.

களையும் உற்சாகமும் வாய் கொள்ளாச் சிரிப்புமாய் இருந்தவனிடம் இருந்து பார்வையை மீட்க முடியவில்லை அவளால்.

அதே நேரம் பின்னால் ஏதோ அரவம் கேட்க சட்டெனப் படத்தை மேஜை மேல் வைத்து விட்டுத் திரும்பினாள்.

“இங்கன என்னத்தா பண்ணுதே?”

தெரியாமல் அந்த அறைக்குள் நுழைந்திருப்பாள் என எண்ணியவன் சாதாரணமாகவே கேட்டுக் கொண்டே அவளைப் பார்க்க, பார்த்தது பார்த்தபடி நின்றான்.

இத்தனை நாட்கள் சுடிதாரில் பார்த்தவன் இன்று தாவணியில் கண்டதும் கண்ணிமைக்க மறந்தான்.

கத்தரிப்பூ நிறத் தாவணி, பச்சைச் சட்டை, பச்சைப் பட்டுப் பாவாடை தலை நிறைய மல்லிகை என தேவதை போல் நின்றிருந்தவளைக் கண்டவனின் இதயம் தாளம் தப்பித் துடிக்க ஆரம்பித்தது.

அதுவும் தாவணியின் ஊடாகத் தென்பட்ட மெல்லிய வெண்ணிற இடை பளீரிட்டு அவனை வாவென அழைக்க அவனோ மதிமயங்கி நின்றான்.

“அது…நான்…வந்து…மாமா…” என்றவள் முன்னோக்கி நகர முற்பட. தாவணியின் பட்டுக் குஞ்சத்தின் நூல் அந்தப் புகைப்படத்தின் ஓரத்தில் சுற்றிக் கொண்டிருக்க அவள் முன்னே நகர புகைப்படமும் இழுபட்டு அவள் சுதாரிப்பதற்குள் சிலீரெனக் கீழே விழுந்து நொறுங்கியது.

அந்தப் படத்தை இழுப்பறைக்குள் வைக்க அவகாசம் இல்லையாதலால் முதலில் அமுதனை உள்ளே வர விடாது அழைத்துப் போய் விட்டு, அவன் உணவு உண்ணும் நேரமோ, இல்லை கிடைக்கும் நேரமோ, மறுபடி மேலே வந்து படத்தை உள்ளே எடுத்து வைத்துக் கொள்ளலாம் என நிமிஷமாக அவள் தீட்டீயிருந்த திட்டத்தில் மண் விழ, புகைப்படமோ விழுந்து நொறுங்க, அதைக் கண்டவன் முகமும் கண்களும் சிவந்து ருத்ர மூர்த்தியாகி நின்றான்.

ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்தக்கிளியே
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே

சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே

ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே

வேரு விட்ட ஆலம் கன்னு வானம் தொட பாக்குது

வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது

பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு

பாடுகிற பாட்டுல தான் நீயும் அதை கூறு

யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு