பேருந்தில் இருந்து இறங்கி முதலில் அவளது பயிற்சி மையத்துக்குச் சென்றவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, செய்ய வேண்டிய மற்ற முறைமைகளையும் செய்து முடித்தனர். அன்று துவக்க வகுப்பு அரை மணி நேரம் மட்டுமே என்பதால் மற்றிருவரும் காத்திருக்க குமுதா வகுப்பை முடித்து விட்டு வந்தாள்.
கோடனூரில் இருந்து கிளம்பும் போதே மரகதம், வந்து வெகு நாட்களாகி விட்டதால் துணியெடுக்கப் போக வேண்டும் என்று சொல்லியிருக்க இருவரையும் போத்தீசுக்கு அழைத்துச் சென்றான் அமுதன்.
அவர் ஏதோ எடுக்க வந்திருக்கிறார் எனக் குமுதா நினைத்திருக்க கடைக்குள் சென்றவர் “பட்டுப் பாவாடை தாவணி காட்டுங்க” என்றதும் “எனக்கெதுக்கு அத்த இப்ப?” என்றாள்.
“சும்மா இரி! எந்த நேரமும் இந்தச் சுடிதாரை மாட்டிக்கிட்டு… இந்த மாசம் நெறைய விசேசம்லாம் வருது. இந்தத் தாட்டியாவது தாவணி கட்டு” என்றவர் அதற்கு மேல் அதில் மூழ்கிப் போனார்.
குமுதா இதைப் போல் கடைகளுக்கெல்லாம் இதுவரை சென்றதே இல்லை. அதனால் சுற்றிச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாளே ஒழிய உடைத் தேர்வில் ஆர்வம் காட்டவில்லை.
அவள் இங்குமங்குமாகச் சுற்றித் திரிய சில இளவட்டக் கண்கள் அவளை வட்டமிட இதைக் கவனித்த அமுதன் அவளை அழைத்தான்.
பேருந்தில் வைத்துத் திட்டியதில் கோபம் கொண்டிருந்தவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே அவனருகே வந்தாள்.
“என்னத்துக்கு இங்கனயும் அங்கனயும் லாந்திகிட்டுக் கெடக்கே? ஒங்கத்த கூடப் பார்த்துப் பிடிச்ச உடுப்பை எடு. இல்லைன்னா வந்து இங்கன உக்காரு” எனத் தனக்கருகே இருந்த ஸ்டூலைக் காட்ட அதில் அமர்ந்தவள், “இல்ல மாமா! இத்தனை வருசத்துல இம்புட்டுப் பெரிய கடைக்கு நான் வாரது இதுதான் மொதோவாட்டி. எம்புட்டுப் பெருசா இருக்கு! நம்மூருக் கடை மாரிப் பத்துக் கடைய உள்ள வைக்கலாம் போலவே” எனவும் அவன் முகம் இளகியது.
“ஒங்க மாமா அத்தைலாம் உடுப்பு எடுக்க ஒன்னைக் கூட்டிட்டுப் போக மாட்டாவளா?”
“ம்ம்ஹூம்… ஆடி மாசத்துல தள்ளுபடியிலயே பொங்கலு,தீவாளிக்குன்னு வருசத்துக்கு ரெண்டு உடுப்பு அவகளே எடுத்துட்டு வந்து குடுத்துருவாக”
அவனுக்கு நெஞ்சம் துடித்தது. அவளிடம் காட்டிக் கொள்ளாமல் மறைத்தவன் “சரி வா! அம்மை பார்த்து முடிச்சுட்டாளான்னு பார்ப்போம்”
இருவரும் எழுந்து மரகதத்தின் அருகே செல்ல அவர் பத்து செட் தாவணியை எடுத்துத் தனியாக வைத்து விட்டு இன்னும் தேடிக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்துத் திகைத்தவள் அவன் கையை மெல்லச் சுரண்ட “என்னத்தா?” என்றான் அவன்.
“இம்புட்டையும் எடுக்கப் போறாவளா?” கிசுகிசுப்பாக அவள் கேட்க அந்தக் குரலில் கிறங்கியவனாக,
“நான் என்னத்தைக் கண்டேன்? நீயே கேளு!”
“யத்தே! இம்புட்டையும் எடுக்கப் போறீகளா?”
“ம்ம்ம்.எல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஒனக்கு ஏதாவது பிடிக்கலைன்னா மட்டும் அதை ஒதுக்கிடலாம்.”
அவளுக்குக் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
கோடனூருக்கு வந்த புதிதில் அவர் பணம் கொடுத்து உடை எடுக்கச் சொன்ன போது கூட பிடித்த நிறம், தினுசு என்றெல்லாம் பார்க்காமல் சாயம் போகாமல் இருக்குமா, கிழியாமல் உழைக்குமா, பல வருடங்கள் பழசாகாமல் இருக்குமா என்றெல்லாம் அந்தக் கடைக்காரனை ஆயிரம் கேள்விகள் கேட்டுத்தான் உடைகளைத் தெரிவு செய்தாளே தவிரத் தன் பிடித்தம் பார்க்கவில்லை.
இப்போது அவளுக்குப் பிடிக்காவிட்டால் கழித்து விடலாம் என மரகதம் சொல்ல அவளுக்குத் தாளவில்லை.
அவள் விழிநீரைப் பார்த்து விட்டவன் அருகில் வந்து “ஏ,கோட்டிக்காரி! என்னத்துக்கு இப்போ கண்ணுல தண்ணி?” என்று அன்னைக்குக் கேட்டு விடாமல் அதட்டியவன் தாயிடம் “ம்ம்மோவ்… இவளுக்கு இன்னும் வளர்த்தி இருக்கு. நீ பாவாடை தாவணியாப் பார்த்தா ஒரு வருசத்துல எல்லாம் கெரண்டக் காலுக்கு ஏறிரும்.ஒரு நாலு செட்டு நல்லதாப் பார்த்து எடு. நாங்க அதுக்குள்ள சுடிதார் பாக்கோம்” என்றவன் அவளிடம் கண்ணைக் காட்டி விட்டு சுடிதார் பக்கம் நகர்ந்தான்.
அங்கே செல்வதற்குள் தன்னை நிலைப்படுத்தி இருந்தவள் “சுடிதாரும் எதுக்கு மாமா? எங்கிட்ட அஞ்சு இருக்கு போதும்”
“முன்ன பள்ளிக்கோடத்துக்கு யூனிஃபார்ம் போடுவே. பொழுதாகப் போடவும் வாரக் கடைசில போடவும் அது போதும்.இப்ப நெதமும் சுடிதார் போடணும்லா.அஞ்சு எந்த மூலைக்கு?” என்றவன் அதற்குள் சுடிதார் இருக்கும் இடத்துக்கு வந்திருக்க ஒவ்வொன்றாக எடுத்து அவள் மீது வைத்துப் பார்த்தான்.
அவனுக்கு நன்றாக இருப்பவைகளாகத் தோன்றியவற்றை அவளுக்குப் பிடித்திருக்கிறதா எனக் கேட்டு அவள் தலையசைத்த பிறகே பில் போடச் செய்தான்.
அவள் முகம் வாடியே இருக்க அவளருகில் நெருங்கியவன் “நாளப் பின்ன எனக்கோ எங்கம்மைக்கோ ஒடம்பு கிடம்பு சரியில்லைன்னா மருத்துவம் பார்க்க மாட்டியா டாக்டரு?” அவன் முடிக்கும் முன் இருக்கும் இடம் மறந்து அவன் இதழ்களைத் தன் தளிர் விரல்களால் மூடி இருந்தாள்.
அவன் திகைத்துப் போய்ப் பார்க்க, பட்டென விரல்களை எடுத்தவள் “பேச்சுக்குக் கூட அப்பிடிச் சொல்லாதிய மாமா. ஒங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் வராது…வரவும் கூடாது” என்றவள் மீண்டும் கண் கலங்க,
“ஏதாவது ப்ரச்சனைன்னா எங்களுக்கு மட்டும் யாரிருக்கா? நீதான பார்க்கப் போறே? அப்போ உன் கடனையெல்லாம் கழிச்சுக்கோன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள அழுகாச்சி” என்றவனின் அலைபேசி அழைத்தது. கூட்டம் அதிகமாக இருக்க அதில் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அலைபேசியில் அழைத்திருந்தார் மரகதம்.
“யய்யா மாறா! நான் எடுத்து முடிச்சுட்டேன். நீங்க வாரியளா?” என்றார்.
“இதா வந்துட்டோம்மா”
தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த பத்து சுடிதார்களையும் ஆளை எடுத்து வரச் சொல்லி விட்டு மரகத்திடம் வந்தார்கள் இருவரும்.
எல்லாம் முடித்து வெளியே வந்தவர்களை உணவகத்துக்கு அழைத்துச் சென்று உண்டு முடித்ததும் திரையரங்கிற்குக் கூட்டிச் சென்றான்.
அவளை எத்தனை முடியுமோ அத்தனை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைத்தவன் அதில் தன் மனமும் மகிழ்வதையும் உணர்ந்தேயிருந்தான்.
திரையரங்கத்தில் முதலில் குமுதாவையும் அடுத்து மரகதத்தையும் அமர வைத்து விட்டு மரகதத்தின் அருகில் அவன் அமர சில நிமிடங்களிலேயே “முன்னால இருக்கவர் மறைக்காரு மாமா” என்று எழுந்து வந்து அவனருகில் காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாளவள்.
அவன் தோளோடு உரசிக் கொண்டும், காலைச் சம்மணமிட்டு அமர்கிறேன் என்று அவன் தொடையை இடித்துக் கொண்டும், அவன் காதோரம் சாய்ந்து கொண்டு படம் குறித்து ஏதாவது கிசுகிசுத்துக் கொண்டும், இடைவேளையில் அவன் வாங்கிக் கொடுத்த பாப்கார்னை எடுக்கிறேன் பேர்வழி என அவன் கையை உரசிக் கொண்டும் என இல்லாத அழிச்சாட்டியங்களுடன்தான் படத்தைப் பார்த்து முடித்திருந்தாள் குமுதா.
ஒரு வழியாக இருவரையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தவன் கிளம்பப் போகையில் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு ஒலிப்பானை அடித்தான்.
என்னவென அவள் ஓடி வர அவளிடம் “நாளைக்கு கவனமாப் போய் வரணும்.காலைலயே ஒன் ஃபோன்ல சிம் போட்டுட்டேன்.எப்பன்னாலும் எந்தப் ப்ரச்சனைன்னாலும் என்னக் கூப்பிட்டறணும்.யோசிக்கவே கூடாது.சரியா?” எனவும் அவள் தலையாட்டினாள்.
“அம்மை மூணு வருசமா எங்கயுமே போனதில்ல. இன்னிக்குத்தான் ஒன்னோட வந்தா.எப்பயும் ராசியில்ல அது இதுன்னு ஒதுங்கிருவா.” என்றவன் சற்று நிதானித்து விட்டு “எங்கல்யாணத்துல கூட நான் எவ்வளவோ சொல்லியும் முன்ன வந்து நிக்க மாட்டேன்னுட்டா.முன்ன வந்து நின்னு மனசார ஆசீர்வாதம் பண்ணித் தாலி எடுத்துக் குடுத்துருந்தா நானும் மனசுக்குப் பிடிச்சவளோட நல்லா இருந்துருப்பேனோ என்னவோ?”
அவள் மனத்துக்குள் மளுக்கென ஏதோ முறிந்தது. அவள் மலர்ந்த முகம் சட்டெனக் கூம்பியதைக் கவனித்தாலும் கவனியாதது போலவே அவன் தொடர்ந்தான்.
“அதுக்குத்தான் ஒனக்கு நன்றி சொல்லணும்னு…”
“சரி மாமா! நான் போறேன்”
“ம்ம்ம்.”
அங்கே நின்றிருந்தால் எந்த நேரமும் அழுகை வந்து விடும் என உணர்ந்தவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்ல அவள் சென்ற பின்னும் சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தவன் விழிகளிலும் நீர்த்திரை.
“எனக்கு வேற வழி தெரியல ராசாத்தி” என முணுமுணுத்தவன் வண்டியை எடுத்தான்.
வீட்டுக்குள் சென்றவள் தன் முகத்தை மரகதம் பார்த்து விடாமல் ஒரு புறம் திரும்பியவாறே “உடுப்பு மாத்திட்டு வரேந்த்தை” என்று மெல்லிய குரலில் உரைத்து விட்டுத் தன்னறைக்குச் சென்றவள் கதவை மூடி விட்டுத் தன் படுக்கையில் விழுந்து அழுது கரைந்தாள்.
‘அப்படியானால் மாமாவின் மனத்தில் இன்னும் அந்த வேதவல்லி இருக்கிறாள். அவளுடன் வாழ முடியாமல் போனதே என்ற கவலை இன்னும் அவருக்கு இருக்கிறது.’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டவளுக்கு அழுகை நிற்காமல் வந்து கொண்டே இருந்தது.
உள்ளே சென்று நெடுநேரமாகியும் வரவில்லையே என மரகதம் அறைக்கதவைத் தட்டவும்தான் உணர்வுக்கு வந்தவள் உடையை மின்னல் விரைவில் மாற்றி முடித்து விட்டு வெளியே வந்தாள்.
“ரொம்ப அலுப்பா இருக்குத்த. ராவுக்குச் சாப்பாடு கூட வேணாம்.நான் படுக்கப் போறேன்” என்று விட்டு அவர் மறுமொழி சொல்லும் முன் சென்று படுத்தே விட்டாள்.
“என்ன புள்ளையளோ? ஒரு நா அலைச்சலுக்கு ஒடம்பு தாங்கல. இதுங்கல்லாம் கன்னாலம் கட்டிப் புள்ள பெத்து…” எனப் புலம்பிக் கொண்டே மரகதம் அவர் வேலையைப் பார்க்க குமுதாவுக்கு மறுபடியும் உடைப்பெடுத்தது கண்ணீர்.
கல்யாணம், குழந்தை… இனி அவள் வாழ்வில் அதெல்லாம் நடக்குமா? பதினைந்து வயதில் பார்த்ததும் பசுமையாகப் பதிந்து போன அவன் உருவம்.அது இதுவெனச் சொல்லி அவள் வெறுப்பை வளர்த்துக் கொண்டாலும் நீறு பூத்த நெருப்பாக நீங்காமல் அவள் நெஞ்சில் நிறைந்திருந்த அந்த நெடிய உருவத்துக்கு பதில் இன்னொருவனை ஏற்க அவளால் முடியுமா?
ஆம்! அவள் மனத்தில் அந்தப் பொல்லாத காதல் வந்தே விட்டது. ஆரம்பத்தில் விருப்பு வெறுப்பெனத் தடுமாறிய உள்ளம் அவன் அவள்பால் காட்டிய அக்கறையில் கனிந்து கசிந்து இனி காதலனோ கணவனோ அவன் மட்டும்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தது.
முதல் திருமணத்தில் அவனுக்கு என்னென்னவோ நடந்திருக்கலாம். ஆனால் அவள் அவன் வாழ்வை மலர வைப்பாள். பெயரில் மட்டுமே இருக்கும் அமுதத்தை அவன் வாழ்வில் கொண்டு வருவாள்.
இந்த முடிவுக்கு வந்திருந்ததாலேயே அவனோடு ஒட்டி உரசிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவனோ இன்னும் வேதவல்லியின் நினைவிலிருந்து வெளியே வரவில்லை என்பது அவளுக்கு அதிர்ச்சியே! கண்கள் இன்னுமின்னும் கண்ணீரைப் பெருக்க அழுதவாறே உறங்கிப் போனாள்.
காலை கண்விழிக்கையிலேயே மனதெல்லாம் பாரமாக இருக்க ‘இல்லை இப்படி இருப்பது சரியில்லை.படிக்க வேண்டும், மருத்துவராக வேண்டும் என்ற அவளது கனவு நனவாக வேண்டும், அதன் பின்தான் வேறு எதுவும்’ என நினைத்தவள், ‘எங்க போயிருவே மாமா? நீ எங்கன போனாலும் என் கழுத்துல உன் கையாலதான் தாலி ஏறும்’ என அமுதனுக்குச் சொல்வது போல தன் மனத்திற்குத் தானே தைரியம் கூறிக் கொண்டு உற்சாகமாகவே எழுந்து கிளம்பலானாள்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் பெரும்பாலும் ஏழரை மணிக்கு வரும் அரசு பேருந்தைப் பிடித்து விடுவாள். செல்லக்கிளியும் அவளது பயிற்சி மையத்துக்கு அருகிலேயே ஒரு டுடோரியல் மையத்தில் சேர்ந்திருக்க இருவருமாகச் சேர்ந்து சென்று வர ஆரம்பித்தனர்.
அவளது பள்ளியில் படித்த இன்னும் ஒரு சிலரும் கூட திருநெல்வேலியில் அவளது பயிற்சி மையத்திலும் இன்னும் அரசு பயிற்சி மையத்திலும் எனச் சேர்ந்திருக்கக் கலகலப்பாகவே இருந்தது பிரயாணம்.
தினமும் தேர்வுகள் நடைபெறும்.ஆரம்பத்தில் இதைப் போல் தேர்வுகளின் சூட்சுமம் புரியாமல் கொஞ்சம் தடுமாறினாலும் சூடிகையான பெண்ணானதால் சீக்கிரமே தெளிந்து விட்டாள். அதன் பின் எல்லா தேர்விலும் அந்தப் பயிற்சி மையத்திலேயே முதலாவதாக வர ஆரம்பித்தாள்.
அமுதனை நேரில் அவள் பார்த்தே ஒரு மாதம் ஆகி இருந்தது. அவள் இல்லாத நேரங்களில் வந்து போய்க் கொண்டிருந்தவனை எப்படி அவள் பார்ப்பது?
என்னதான் மனத்தை அடக்கிப் படிப்பின் பக்கம் திருப்பினாலும் வீட்டை விட்டு வெளியே வந்ததுமே அவனைத் தேடிக் கண்கள் அலைபாய்வதும், பேருந்தில் ஏறும் வரை பார்க்குமிடமெல்லாம் அவன் முகம் எங்காவது தென்படுகிறதா எனச் சல்லடை போட்டுச் சலிப்பதும், அவனது புல்லட்டின் உறுமலுக்காகக் காதுகளைக் கூர்தீட்டி வைத்துக் கொள்வதுமாக என்னென்னவோ செய்து பார்த்தும் தேவன் தரிசனம் தேவிக்குக் கிடைக்கவேயில்லை.
அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு உறவினர் வீட்டில் விசேஷம் என மரகதம் அவளையும் அழைத்துப் போகிறேன் எனச் சொல்லி இருந்தார். வழக்கமாக ஞாயிறு அன்றுதான் பெரிய தேர்வுகள் இருக்கும்.ஆனால் அந்த ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் அவள் செல்லத் தேவை இல்லை என்பதில் மரகதத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி.
காலையிலேயே ஒரு பட்டுப்பாவாடை தாவணியைக் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொல்லி அவளைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார். தாவணியும் பாவாடையும் உடுத்தித் தலை நிறைய மல்லிகை வைத்து மரகதம் கொடுத்த சில நகைகளையும் அணிந்து தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டவளுக்கு வியப்பாகவே இருந்தது.
வயதுக்கு வந்த போது மட்டுமே தாவணி அணிந்தவள் அதன் பின் இப்போதுதான் அணிகிறாள். பூசினாற் போன்ற உடற்கட்டு இப்போது நன்றாக மெலிந்து உடுக்கை போல் இடையின் மேலும் கீழும் பெண்மையின் இலக்கணங்கள் அழகுற மிளிர அவளுக்கே அவளை அவ்வளவு பிடித்தது.
காலை எட்டு மணிக்குப் பயிற்சி மையத்துக்கு சென்று விடுபவள் மாலை ஐந்துக்குத்தான் வெளியே வருவது என்பதால் வெயில் படாத தேகம் இன்னும் பொன்னென ஒளிர ஏதோ தகதகவென மின்னுவது போலிருந்தது அவளுக்கு.தன்னையே ரசித்தவளுக்குக் காண வேண்டியவன் இதைக் கண்டு ரசிக்க வேண்டுமே எனத் தோன்றி விட, விடுவிடுவென ஓடினாள் மரகதத்திடம்.
“அத்த!”
அடுப்பில் வேலை செய்து கொண்டிருந்தவர் “என்ன மலரு?” எனத் திரும்ப அவளைக் கண்டவர் அப்படியே விழிகளை விரித்து நின்று விட்டுப் பின் சட்டென அருகில் வந்து இரு கன்னங்களையும் வழித்துத் தன் நெற்றியில் வைத்து நெட்டையிட்டார்.
“ஆத்தி! எம்புட்டு அழகா இருக்க எந்தங்கம்! போய்ட்டு வந்து உப்பும் மெளகாயும் சுத்திப் போடணும்”
“அட அத்தைக்கு என்ன வச்சுருக்கே? சும்மா சும்மா அத்த அத்தன்னுட்டு…”
“அது வந்து…”
“அடச் சும்மாச் சொல்லாத்தா”
“அது…மாமன் அங்க வருவாகளா?”
“மாறனா? அவன் என்னத்துக்கு வளையடுக்கிறதுக்கெல்லாம் வரணும்? இது பொம்பளைங்க விசேசம்த்தா.குடும்பத்தைச் சேர்ந்த ஆம்பிளைங்க மட்டும்தான் இருப்பாக”
அவளுக்கு சொத்தென்று போய் விட்டது.
இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்ப வழியெல்லாம் அனைவரும் குமுதாவின் அழகைப் பற்றியே பேச அவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.
தாவணியின் நுனியைத் திருகியபடியே தீவிர யோசனையில் இருந்தவள் விசேஷ வீட்டில் மரகதம் அறிமுகப்படுத்தியவர்களையெல்லாம் பெரிதாக மனதில் போட்டுக் கொள்ளாது பேருக்குச் சிரித்து வைத்தாள்.
அவள் கைகழுவப் போயிருந்த நேரம் மரகதத்தின் உறவினர் ஒரு பெண்மணி “ஆமா, இவ அம்மை வேற சாதியில்ல?” என்று கேட்டு வைக்க மரகதத்துக்கு கோபமான கோபம் வந்து விட்டது.
“சாதியென்னளா சாதி? எல்லாரும் மனுசப்பய சாதிதான். இப்பிடிப் பேசிப் பேசி எங்க சந்திரன் அண்ணாச்சிய ஒதுக்கி வைக்காம இருந்துருந்தா இந்நேரம் எம் மதினியும் உசிரோட இருந்துருக்குமோ என்னவோ? எம் மருமகளும் இம்புட்டுத் தும்பப்பட்டுருக்க மாட்டா.நாக்கிருக்கேன்னு அதும் மேல பல்லப் போட்டு நாலையும் பேசிறப் பிடாது.நல்லத நயந்து பேசணும் கேட்டியளா?அப்புடி இருந்தாத்தான் அது மனுச சென்மம்” என்று ‘நீயெல்லாம் ஒரு மனுஷியே இல்லை’ என்று சொல்லாமல் சொன்னவர் குமுதா வருவதைக் கண்டு சட்டென அவ்விடத்திருந்து நகர்ந்தார்.
குமுதாவுக்கோ எப்படி அமுதனைச் சந்திப்பது என்பது மட்டுமே யோசனையாக இருந்தது.விசேஷ வீட்டிலேயே உணவையும் முடித்துக் கொண்டு கிளம்ப, நேரம் பதினொன்றாகி இருந்தது.
நடந்து வந்து கொண்டிருக்கும் போதே அவள் மனத்தில் ஒரு பெரிய திட்டம் உருவானது.
ஆனால் அந்தத் திட்டத்தைப் பலிக்க வைக்கும் முயற்சியில் அமுதனின் நிஜமான கோப முகத்தைக் காணப் போவது தெரியாமல் அவள் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.
நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன் ஊருங்கூட ஒன்ன நம்பி இருக்குது ராசா ஒன்னாரு எனக்கு கண்ணாரு ஒன்னத்தான் எண்ணி இந்த கன்னி ஒரு சிந்து படிச்சேனே ஒன்னத்தான் கனாக் கண்டு கண்ணு முழிச்சேனே ஒன்ன நம்பி நெத்தியிலே ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா விட்டுப் போனா உதிர்ந்து போகும் வாசனை ரோசா