அந்த பெரிய அறையில் இருந்த பெண்களோ ‘இதென்னடா இது வயசான காலத்துல இந்தம்மா வேலைக்கு வந்திருக்கு’ என்று நினைத்திருந்தாலும், இது கிழவிதானே ஈசியாக ஏமாற்றிவிடலாம் என்று மகிழ்ச்சியாக தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். பாவம் இவர்களுக்கு இன்னும் நம் கிழவியின் உண்மையான முகம் தெரியவில்லை.

     கிழவி வேலைக்கு வந்து முதல் நாள் எல்லாம் நன்றாகவே சென்றது. அங்கிருந்த பெண்கள் இது தங்களுக்கான நேரமென கிழவியை ஏய்த்து வேலையை அறைகுறையாய்‌ செய்ய துவக்கினர்.

     இப்படியே ஒரு இரண்டு நாட்கள் செல்ல மூன்றாவது நாள், கிழவி தன் வேலையை காட்ட ஆரம்பித்தது‌. தன்னிடம் வந்து ஒருமணி நேரத்திற்குள் இதோடு மூன்றாவது முறை கழிப்பறை செல்ல வேண்டும் என்று கேட்டு நின்ற பெண்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தது கிழவி.

     “ஏன்டி இவளே உன் வயித்துல தண்ணீ தொட்டி எதுவும் கெட்டி வச்சிருக்கியா என்ன?”

     கிழவி கேட்டதற்கு அந்த பெண் ஒன்றும் புரியாது முழித்து “என்ன பாட்டி கேக்குறீங்க புரியலை” என்றாள்.

     “இல்ல பாத்துரூம்புக்கு போறேன்னுட்டு ஒரு மணி நேரத்துல மூனு நேரம் போறியே அதேன் கேட்டேன்”

     சற்று சத்தமாக அனைவருக்கும் கேட்கும்படி கிழவி கேட்டதில் அந்த பெண்ணுக்கு அவமானமாய் போனது. “இல்ல பாட்டி அது வந்து” என அந்த பெண் துவங்கவும்

     “என்னடி வந்து போயிங்கர. வயசான காலத்துல நானே இடைவேளை அப்பதேன் பாத்துரூம்புக்கு போறேன். மொதலாளி கொடுக்குற காசுக்கு ஒழுங்கா வேலைபாக்க முடியலையாக்கும். அப்புறம் எதுக்குடி இங்கன வேலைக்கு வாரிய எல்லா. நானும் வந்ததுல இருந்து பாத்துட்டுதேன் இருக்கேன், ஒருத்தியும் ஒழுங்கா வேலை செய்யமாட்டுறீய. இதுவரை நீங்களா எப்புடி இருந்தீயளோ எனக்கு தெரியாது, இனி நான் வந்த பொறவு ஒழுக்கமா இருக்கோணும் புரியுதா”

     கிழவி அந்த பெண்ணை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியதுடன் அங்கிருந்த எல்லோரையும் வைத்து செய்தது. கிழவியின் இந்த அவதாரத்தை அங்கிருந்த பெண்கள் அனைவரும் ஒருவித திகிலுடன் பார்த்து வைக்க, இனி இந்த கிழவியிடம் நம் பாட்சா பலிக்காது என்று அந்த பெண்களுக்கு புரிந்து போனது.

     கழிவறை செல்லவேண்டும் என்று கேட்க வந்த அந்த பெண்ணும் கிழவியின் அவதாரத்தை கண்டு பயந்து தன் இடத்தில் சென்று அமைதியாய் அமர்ந்து விட்டாள். பின்னே ஊரில் எத்தனை ஆட்களை வேலை வாங்கியிருக்கும் கிழவி, இந்த பெண்களை எல்லாம் தூசாய் தட்டிவிட்டு செல்ல தெரியாதா கிழவிக்கு.

     இங்கு நடந்த கூத்தை எல்லாம் ரவுண்டுஸ் வந்த அந்த கம்பெனி முதலாளியும் அவரின் மேனேஜரும் பார்த்துவிட அங்கிருந்த பெண்களுக்கு நெஞ்சு வலி வராத குறைதான். நடந்ததை கண்டு தங்கள் வேலையில் இனி தவறு செய்யக்கூடாது என்று அந்த பெண்கள் மனதிற்குள் சபதமே போட்டு விட்டனர்.

     இப்படியே ஒருவாரம் சென்றிருக்க, கிழவிக்கு ஒரே கொண்டாட்டம்தான். காலையில் எழுவது தனக்கு உணவை சமைத்துக் எடுத்துக் கொள்வது, வேலைக்கு கிளம்புவது என கிழவி ஒரே பிசி. அதற்கு மாறாக எப்போது வீட்டில் சிக்குவோம், சிக்கினால் எவ்வளவு நாள் வச்சு அடிப்பார்கள் என மரண பீதியில் பேத்தி ஆனந்தி சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

     வீட்டில் இருந்து சாதரணமாக ஒரு போன் வந்தால் கூட கிழவி வேலைக்கு செல்வது தெரிந்து போய் எதுவும் போன் செய்கிறார்களோ என்ற பீதியோடே போனை எடுக்கிறாள். இடையில் கிழவியிடம் வேலைக்கு எல்லாம் செல்ல வேண்டாம் என்று காலை பிடித்துக்கூட கதறி பார்த்து விட்டாள் பேத்தி, கண்டுக் கொள்ளவில்லையே கிழவி.

     என்னதான் உள்ளே பயம் இருந்தாலும் காலை கொண்டு கம்பெனியில் விட்டு மாலை வீட்டிற்கு அழைத்து வரும் வேலையை மட்டும் தொடர்ந்தாள் ஆனந்தி. இப்படியே நாட்கள் செல்ல செல்ல ஆனந்தியின் மனதிலிருந்த பயம் மெல்ல குறைய துவங்கியது.

     வீட்டில் யாருக்கும் இப்போது தெரிய வராது, அப்படி தெரிய வரும்முன் கிழவியை சாந்தப்படுத்தி வேலையை ராஜினாமா செய்ய வைத்துவிடலாம்‌ என்றொரு நம்பிக்கையில் கிழவியிடம் தினமும் தாஜா செய்துக் கொண்டிருக்கிறாள் அந்த பாவப்பட்ட பேத்தி. ஆனால் என்ன அவளின் முயற்சி வெறும் முயற்சியாக மட்டுமே இருக்கிறது.

     இதோடு கிழவி வேலைக்கு சேர்ந்து ஒருமாதம் முடிவடைந்த நிலையில் மாலை எப்போதும்போல் ஆனந்தி தன் அப்பத்தாவை அழைத்து செல்ல, இன்று சற்று நேரத்தோடே வந்து காத்திருந்தாள்.

     அப்போது அவளை நோக்கி இரண்டு பெண்கள் வந்து “வணக்கங்க” என்க, வந்தது யாரென்று தெரியாமலே மண்டையை ஆட்டி வைத்தாள் ஆனந்தி.

     “ஏன்மா நீ தெனமும் கூட்டிட்டு வந்துட்டு கூட்டிட்டு போறியே அவங்க உன் சொந்தகாரங்களாமா”

     மெதுவாக அந்த பெண்கள் கேட்டதற்கு ஆமென ஆனந்தியும் தலையை அசைத்ததில் பிடித்துக் கொண்டனர் அந்த பெண்கள்.

     “ஏம்மா வீட்டுல எதுவும் ரொம்ப கஷ்டமாமா, இல்ல வீட்டுல இருக்க புடிக்காம அந்த பாட்டி வேலைக்கு வருதா. எங்களை நிம்மதியா ஒரு பொழுது வேலை பாக்க விடமாட்டேங்குதுமா உங்க பாட்டி. பாடாபடுத்தி மோரா திரிக்குது, எங்க கம்பெனி ஓனர் கூட எங்கள்ட்ட இவ்ளோ ஸ்ட்ரிக்டா நடந்துக்கிட்டது இல்ல”

     விட்டால் ஓவென ஒப்பாரியே வைத்து விடுவார்கள் போல அந்த பெண்கள். வேறு ஒன்றும் இல்லை எல்லாம் நம் கிழவியின் மீது வந்த கம்ப்ளைன்களே.

     ‘நான்லா பொறந்ததுல இருந்து அந்த கெழவிட்ட சிக்கி சீரழியிறேன். ஒரு மாசம் அந்த கெழவிட்ட சிக்குனதுக்கு நீங்க என்ட்ட கம்ப்ளைன் பண்ணா நான் யாருட்டாயா கம்ப்ளைன் பண்ணுவேன்’

     தங்கள் கிழவி வேலைக்கு வந்து ஒரே மாதத்தில் அனைவரையும் கதற விட்டத்தை கேட்டு பேத்தியின் மனக்குமுறல் இது.

   ஆனந்தி அவர்களுக்கு பதில் அளிக்கும் முன்னே “அங்கன என்னங்கடி கூட்டம்” என்றொரு குரல் கேட்க, அங்கிருந்த பெண்கள் எல்லாம் துண்டை காணோம் துணிய காணோம் என தெரித்துவிட்டனர்.

     “ஏன் அப்பத்தா இப்புடி அந்த ஆளுங்கள டார்ச்சர் பண்ற. எல்லாரையும் பாக்க பாவமா இருக்கு, கொஞ்ச பிரியா விடலாம்ல”

     வண்டியில் வீட்டிற்கு போகும் நேரம் அந்த பெண்களுக்காய் ஆனந்தி பரிந்து பேச

     “போடி இவளே, உனக்கு அவளுகள பத்தி முழுசா தெரியாது. கொஞ்சம் விட்டா கம்பெனியவே அவளுக பேருல எழுதிட்டு போயிறுவாளுக. இதெல்லாம் உனக்கு புரியாது நீ வெரசா வண்டிய வூட்டுக்கு வுடு ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என ஒரு அதட்டு போட்டு அவளை ஆஃப் செய்தது கிழவி.

     வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக தன் போனை எடுத்து காட்டிய கிழவி “அடியே இவளே எனக்கு மொத மாச சம்பள பணம் ஏத்திட்டாங்கடி” என்றது குதூகலமாக.

     பாட்டியின் சந்தோஷம் இப்போது பேத்தியையும் தொற்றிக் கொள்ள ஆர்வமாய் அந்த போனை வாங்கி பார்த்த பேத்திக்கு அவ்வளவு ஆச்சரியம். கிழவியின் சம்பளம் இருபதாயிரம், அதோடு போனில் பேங்க் அக்கவுண்டை எல்லாம் இணைத்து வைத்திருந்தது கிழவி.

     ‘யாருடா இந்த கெழவிக்கு இதையெல்லாம் சொல்லி தந்தது’ ஆனந்தி யோசித்தாலும் தன் அப்பத்தாவை எண்ணி மகிழ்ச்சியே அடைந்தாள்.

     நாட்கள் அப்படியே செல்ல சரியாக ஒரு வருடம் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்திருந்தது. ஒரு பக்கம் ரீல்ஸ் போடுவது மறுபக்கம் வேலைக்கு செல்வது என இப்போதெல்லாம் கிழவி பிசியோ பிசிதான். முன்பெல்லாம் பணம் எடுக்க வேணடுமெனில் தன் பேத்தியை தாஜா செய்து ஏடிஎமில் எடுத்து வரும் கிழவி இப்போது போனில் இருக்கும் ஆப்பை வைத்தே செய்து கொள்கிறது.

     கிழவி வேலைக்கு செல்லும் விஷயம் இன்னும் வீட்டிற்கு தெரியாமல் பாட்டியும் பேத்தியும் லாவகமாக தப்பி வருகின்றனர். முன்பெல்லாம் பயந்து போயிருந்த பேத்தி கூட ‘தெரியும்போது தெரியட்டும் அப்போ பாத்துக்கலாம்’ என்ற மனநிலைக்கு வந்திட்டாள்.

     அன்று ஞாயிறு ஆதலால் ஹாலில் கிழவி காலை நீட்டி அமர்ந்து தன் போனில் வீடியோ பார்த்துபடி இருக்க, கிழவியின் அருகில் அமர்ந்திருந்த பேத்தியோ தன் போனில் மூழ்க்கியிருந்தாள்.

     “ஏன்டி இவளே இந்தா இதுல காட்டுதாவளே இதெல்லாம் என்னா ஊருடி”

     தன் அப்பத்தாவின் கேள்வியில் தலையை மட்டும் தூக்கி எட்டி பார்த்த பேத்தி “இது கேரளா பாட்டி, டிரிப் போயிட்டு வீடியோ போட்டிருக்காங்க” சாதரணமாக சொல்லிவிட்டு தன் போனில் மீண்டும் பேத்தி மூழ்கிட, பாவம் அவள் கொழுத்தி போட்ட பட்டாசை கவணிக்காது விட்டுவிட்டாள்.

     அன்றிருந்து கிழவி எதை பார்க்கிறதோ இல்லையோ, யார் யாரெல்லாம் ஊர் சுத்தி வீடியோ போடுகிறார்களோ அதை எல்லாம் எடுத்து வைத்து பார்க்க துவங்கியது. எப்போதும் பரபரவென இருக்கும் கிழவியின் இந்த சில நாள் அமைதி அப்படியே பேத்தி கண்ணில் பட்டுவிட, என்னவோ சரியில்லை என அவள் உள்மனம் அடித்து கூறியது.

     ஆனால் கிழவியின் அடுத்த டார்கெட் என்னவாக இருக்கும் என்றுதான் ஆனந்தியால் கணிக்க முடியவில்லை.

     “ஏன்டி இவளே நாம ரெண்டு பேரும் சேந்து ஒரு டிரிப் போலாமா”

     “என்ன அப்பத்தா சொல்லுற, என்ன டிரிப்பு, எங்க போகணும்” திடீரென கிழவி வந்து தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கேட்கவும் தன் குழப்பத்தை கேட்டாள் பேத்தி.

     “அது ஒன்னுமில்லடி புள்ள ஆனந்தி, எனக்கு சின்ன வயசுல இருந்தே இப்புடி நாலு ஊரு போவனும் புதுபுது மக்க மனுஷகள பாக்கனும்னு ஆசைடி. அதேன் நாம ரெண்டு பேரும் சேந்து போலாமான்னுட்டு கேக்குதேன்”

     அப்பாவியாய் கேட்டு நின்ற தன் அப்பத்தாவை பார்த்து திட்டிவிடவும் மனம் வரவில்லை ஆனந்திக்கு. ஏனெனில் இவள் கோவமாக பேசப்போய் கிழவி எக்குத்தப்பாய் எதாவது முடிவை எடுத்துவிட்டால் என்ன செய்வது அந்த பயம்தான். எனவே பொறுமையாகவே பேசினாள்.

     “இங்க பாரு அப்பத்தா நீ சொல்றது எனக்கு புரியுது. ஆனா நாம நெனச்ச உடனே எல்லாம் டிரிப் போக முடியாது. அதுக்கு முதல்ல ஒரு பிளான் போடனும், அதுக்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்யனும். அப்புறம் முக்கியமா எங்க போகப்போறமோ அங்க நமக்கு தேவையான எல்லாத்தையும் அரேஜ்ச் பண்ணனும். இப்புடி நெறைய இருக்கு அப்பத்தா”

     ஆனந்தி பெரிதாய் லிஸ்டை எடுத்து அடுக்க, எல்லாவற்றையும் ஒரு தலையசைப்புடன் கேட்டுக்கொண்ட கிழவி தன் கையில் வைத்திருந்த நோட்டு ஒன்றை ஆனந்தியிடம் நீட்டியது.

     அதில் எப்போது எங்கு செல்ல வேண்டும், எந்த ஊரில் எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும், அதற்கு தோராயமாக எவ்வளவு செலவு ஆகும் என்பது முதற்கொண்டு கிழவி எழுதி வைத்திருந்தது. அதை பார்த்து வாயை பிளந்துவிட்டாள் ஆனந்தி.