ஆனால் ஆனந்தி பயந்ததிற்கு மாறாக அவள் தந்தை அவள் எப்படி இருக்கிறாள் அப்பத்தா எப்படி இருக்கிறார் என்று குசலம் விசாரித்துவிட்டு வைத்துவிட, ஆச்சரியமாய் போனது ஆனந்திக்கு.
     ‘அப்போ கெழவி நம்மல வீட்டுல போட்டுக்குடுக்கலையா. ஹப்பாடா நாம பயந்தா மாதிரி எதுவும் ஆகல’
     இப்போது பயத்திலிருந்து நீங்கியிருந்த ஆனந்தி மெல்ல வெளியே எட்டிப்பார்த்தாள். கிழவி அதே போசில் இன்னும் அமர்ந்திருக்க, கிழவியை பார்க்க சற்று பயமாக இருந்தது ஆனந்திக்கு.
     இருந்தும் தைரியத்தை திரட்டிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறி வர, கிழவி ஆனந்தியை கண்டுக் கொள்ளவே இல்லை. கிழவியின் கவனத்தை கவர அவளும் இங்கும் அங்கும் நடந்து பார்க்க, கிழவி ஏன் என்றுகூட கேட்கவில்லை.
     தொடர்ந்து ஒருவாரம் இதுவே நடக்க, ஆனந்திக்கு மனதே சரியில்லை. ஒரே வீட்டில் இருந்தும் அப்பத்தா தன்னோடு ஒருவார்த்தை கூட பேசாது இருப்பதை பொறுக்க முடியாத ஆனந்தி இன்று அப்பத்தா வந்தவுடன் எப்படியும் பேசிவிட வேண்டும் என்று கிழவிக்காக காத்திருந்தாள்.
     இதுவும் கடந்த ஒரு வாரமாக நடக்கும் நிகழ்வுதான். அப்பத்தா அப்போ அப்போ எங்காவது அப்ஸ்கான்ட் ஆகிவிடுவது. முதல் நாள் பதறி ஆனந்தி தேடியும் காலை சென்ற அப்பத்தா சாயந்திரமே வந்தது. அதுவே இந்த ஒருவாரம் முழுக்க தொடர்கிறது.
     ஆனந்தியின் ஒருமணி நேர காத்திருப்பை காலாவதி ஆக்கி பொறுமையாக வந்து சேர்ந்தது கிழவி. அப்படி வந்த கிழவி வழக்கத்திற்கு மாறாக தானாகவே போய் ஆனந்தியின் முன் நின்று, தன் கையில் இருந்த கவரை கெத்தாய் நீட்டி நின்றது.
     பேச வந்தாலும் கூட முகத்தை திருப்பி சென்ற அப்பத்தா இன்று தானே வந்து தன்னிடம் நின்றதில் மகிழ்ந்து போன பேத்தியவள்
     “அப்பத்தா சாரி அன்னைக்கு உன்கிட்ட நான் அப்படி பேசியிருக்க கூடாது. நீ என்ன மன்னிச்சிட்ட அதான் என்கிட்ட பேச வந்திருக்க அப்படிதானே”
     நம்பிக்கையோடு கேட்ட ஆனந்திக்கு பதில் ஏதும் கூறாத கிழவி, அப்போதும் அந்த கவரை நீட்டியபடி நிற்க பேத்தியவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
     ‘என்னவா இருக்கும்’ என யோசித்தபடி அந்த கவரை வாங்கி பார்த்த ஆனந்திக்கு ஒரு நிமிடம் தலையெல்லாம் சுற்றி, நெஞ்சுக்குள் பூகம்பமே வெடித்தது.
     “அப்பத்தா என்னதிது”
     அதிர்ச்சி விலகாமல் கேட்டு வைத்த ஆனந்திக்கு முன்னால் இருந்த ஷோபாவில் கெத்தாய் கால்மேல் கால் போட்டு அமர்ந்த கிழவி கைப்பையில் இருந்து ஒரு கூலர்சை எடுத்து கண்ணில் மாட்டியது.
     “ஏன்டி இவளே ஆனந்தி! அன்னைக்கு உன் பொட்டிய தெரியாத்தனமா கீழ தட்டிவுட்டதுக்கு என்னா பேச்சு பேசுன. நீ சம்பாரிச்ச காசா உன் அப்பன் வீட்டு பணமான்னுட்டு. இப்ப பாத்தியா இந்த வயசுலேயும் ஒரு கம்பேனிக்கு போயி வேலை வாங்கியாந்திருக்கேன்டி”
     இல்லாத காலரை தூக்கிவிட்டபடி கெத்தாய் கிழவி அமர்ந்திருந்த விதம் ‘இது ஏதுடா புது வம்பு’ என ஆனந்தியின் வயிற்றிற்குள் ஆசிட்டை கரைத்தது. அன்று ஏன் கிழவி அவ்வளவு அமைதியுற்று அமர்ந்திருந்தது என்று இப்போது ஆனந்திக்கு புரிய, புரிந்தும் ஒன்றும் செய்யமுடியாத நிலை.
     “அப்பத்தா விளையாடாத இந்த வயசுல போய் வேலைக்கு போறேன்னு வந்து நிக்கிற. பிளீஸ் அப்பத்தா உனக்கு என் மேல என்ன கோவம் இருந்தாலும் என்ன ரெண்டு அடிகூட அடிச்சிக்க, தயவு செஞ்சு இந்த விபரீத முடிவை எல்லாம் எடுக்காத அப்பத்தா”
     இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்தால், அவள் அப்பா சித்தப்பாவிடம் இவள்தானே மொத்து வாங்குவது. அதை எண்ணி பயம் அவள் முகத்தில் தெரிய, இப்போது காலில் விழ சொன்னால் கூட படுத்தே விடுகிறேன் என்ற நிலையில் பேத்தி அவள் நின்றிருந்தாள்.
     ஆனந்தியின் கெஞ்சல்களை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாத கிழவி, தன் அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை கைப்பைக்குள் தினித்து தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்று மறைந்தது.
     இங்கு ஹாலில் இருந்த ஆனந்தி தலையில் இடி இறங்கிய தோரணையில் அமர்ந்துவிட்டாள்.
     ‘நாம திட்டுனதுல ரோசம் வந்து வேலைக்கு போற அளவுக்கு கெழவி வந்திருச்சு. இதுக்கு இந்த வேலைய யாரு ரெபர் பண்ணியிருப்பா, மொதல்ல கெழவிக்கு இந்த வயசுல எவன்டா அது வேலைய‌ குடுத்தது. ஐயோ வீட்டுல எனக்கு வெளக்கமாத்தடி வாங்கி தராம விடாது போலையே கெழவி’
     மனதிற்குள் எவ்வளவு அழுது புலம்பியும் ஒரு பிரயோஜனமும் இல்லை என முடிவு செய்து, கிழவியிடம் அன்று முழுவதும் பலவித சமாதனக்கொடியை பறக்கவிட்டு பார்த்தாள் ஆனந்தி.
     ம்ஹூம் கிழவியின் முடிவில் இருந்து ஒரு செங்கலை கூட அவளால் அசைக்க முடியவில்லை. விடிந்தால் கிழவி வேலைக்கு கிளம்பிவிடும் என்ற நிலையில் எதுவும் செய்ய முடியாத ஆனந்தி பீதியுடனே தூங்க சென்றாள்.
     பரபரப்பு நிரம்பிய சிட்டியில் அமைந்திருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்த அந்த வீட்டில் பேரமைதி. அங்கே ஜன்னலில் அமர்ந்திருந்த ஒரு புறாவின் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.
     அந்த வீட்டின் ஹாலில் நடுவே கிடந்த சோஃபாவில் தலையில் துண்டை போட்டு அமர்ந்திருந்தது நம் ஆனந்தியே. ஆனால் அவளுக்கு முற்றும் மாறாக பம்பரமாய் சுழன்று வேலை செய்து கொண்டிருந்தாள் ஆனந்தியின் அப்பத்தா.
     இன்றுதான் கிழவி வேலைக்கு போகும் முதல்நாள் ஆயிற்றே அதான் கிழவி காலையில் சூரியன் உதிக்கும் முன்னரே எழுந்து தனக்கு காலை மதிய உணவுகளை சமைத்துவிட்டு, இப்போது வேலைக்கு செல்ல மேக்கோவர் செய்து கொண்டிருந்தது.
     ‘அடி கெழவி ஆபிஸ் போக நான்கூட இவ்ளோ மேக்கப் போட்டதில்லை. என் மேக்கப் செட்ல இருக்க எல்லாத்தையும் ஒரு நாள்ல காலி பண்ணி விட்டுவ போலையே’
     ஆனந்தி எப்போதும் போல் மனதிற்குள் புலம்பும் நேரம் ஒரு அரை பாட்டில் செண்டை எடுத்து தன் மேல் அடித்து ஃபைனல் டச் கொடுத்தது. கிழவி கடைசியாய் தன் ஹேண்ட் பேக்கை எடுத்து மாட்டி ரெடியாகி தன் பேத்தியின் முன்னே கெத்தாய் வந்து நின்று
     “இந்தா புள்ள ஆனந்தி நான் மொத நாளு வேலைக்கு போறேன். ஒழுங்கா வந்து என்னைய அங்க உட்டுபுட்டு நீ உன்ற வேலைய பாக்க போ” என்றது.
     ‘இது வேறையா. இந்த கிழவி எனக்கு அடி வாங்கி தராம ஓயாது போலையே. அது என்னவோ பண்ணிட்டு போகுதுன்னு நாம அமைதியா இல்லாம ஏதேதோ பேசி எக்குதப்பா மாட்டிக்கிட்டமே’ உள்ளுக்குள் அலறினாள் ஆனந்தி.
     ஆனந்தி மைண்ட் வாய்ஸில் பேசும் நேரம் அவள் முன்னால் சொடக்கிட்டி தன் பக்கம் திருப்பிய கிழவி
     “அங்க என்ன கணா காணுறவ, வெரசா ஏந்திரிடி வேலைக்கு நேரம் ஆவுதில்ல” ஒரு அதட்டலை போட்டது கிழவி.
     ‘பேய்க்கு வாக்கபட்டாச்சு இனி மரத்துக்கு மரம் தாவிதானே ஆகனும்’ தன் விதியை நொந்த ஆனந்தி மௌனமாய் கிழவியுடன் வீட்டை பூட்டி வெளியேறினாள்.
     ‘கெழவிக்கு இந்த ஐடியாவ குடுத்தது மட்டும் யாருன்னு தெரியட்டும் அப்புறம் இருக்கு’
     இந்த ஐடியாவை குடுத்த நபரை திட்டியபடி கிழவியை ஏத்தி கொண்டு இருந்த டிராபிக்கில் சந்து பொந்து பார்த்து பூந்து, கிழவி சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தாள் ஆனந்தி.
     அந்த இரண்டு மாடி பெரிய கட்டிடத்தின் முன்னே கொட்டை எழுத்துக்களில் இருந்தது அந்த கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பெயர்.
     ‘இந்த கார்மெண்ட்ஸ்ல கெழவிக்கு என்ன வேலையா இருக்கும்’ என்று யோசித்த ஆனந்தி அதை கிழவியிடமே கேட்டு வைத்தாள்.
     “ஆமா அப்பத்தா இந்த கம்பெனில உனக்கு என்னா வேலை”
     பெரிதாய் என்ன வேலை இருந்துவிட போகிறது என்ற எண்ணத்தில்தான் ஆனந்தியும் கேட்டாள்.
     “இவ்வளோ பெரிய கம்பெனில நான் சூப்பருவைசருடி”
     கெத்தாய் கிழவி கூறிய பதிலில் ஆவென்று வாயை பிளந்துவிட்டாள் பேத்தியவள்.
     “எப்படி அப்பத்தா” ஆச்சரியமாய் ஆனந்தி கேட்டதற்கு “நான் அந்த கால பியூசிடி என் வெண்ணமவளே!” கவுண்டர் கொடுத்தவாறு கிழவி கம்பெனியினுள் சென்றுவிட,
     “கெழவி உனக்கு சரியான கொழுப்புதான். ஆனா உனக்கு போய் ஒருத்தன் வேலை குடுத்துருக்கான்பாரு அவனை சொல்லனும்”
     கிழவிக்கு வேலை கொடுத்தவனை வாய்விட்டு திட்டிய படி, இன்னும் இந்த கிழவி என்ன செய்ய காத்திருக்கோ என பயந்தவள் அவளின் அலுவகத்தை நோக்கி வண்டியை திருப்பினாள்.
     பேத்தி அங்கு வராத கண்ணீரை வழித்து துடைத்து கொண்டு செல்ல, இங்கு அலுவலகத்தின் உள்ளே சென்ற அப்பத்தாவோ வெற்றிகரமாய் கையெழுத்திட்டு தன் பதவியில் சேர்ந்தது.
     “ஹலோ ஒரு நிமிஷம் எல்லாரும் இங்க பாருங்க, ஒரு முக்கியமான இன்பர்மேஷன் சொல்லனும்”
     அந்த கம்பெனி மேனேஜரின் குரல் அந்த பெரிய அறையில் இருந்த அனைத்து பெண்களின் கவனத்தையும் ஈர்த்தது. தங்கள் கம்பெனியின் மேனேஜர் ஒரு வயதான பாட்டியுடன் வந்து நிற்பதை அங்கிருந்த பெண்கள் குழப்பத்துடன் பார்க்க, அந்த மனிதர் தன் பேச்சை தொடங்கினார்.
     “இவங்க நம்ம கம்பெனிக்கு புதுசா வந்து சேர்ந்திருக்காங்க. இவங்கதான் இனி உங்க யூனிட்டோட சூப்பர்வைசர். அதனால உங்களுக்கு இனி என்ன வேணும்னாலும் இவங்கட்ட கேட்டுக்கலாம்”
     கிழவியை சார்ட்டாக அறிமுகப்படுத்திய மேனேஜருக்கு கூட தங்கள் முதலாளி எதற்காக இந்த பல்லு போன கிழவியை வேலைக்கு எடுத்தார் என்று தெரியவில்லை. ‘இந்த கெழவியெல்லாம் என்னத்த வேலைய பாக்க போகுதோ’ என்ற எண்ணம் அவர் மனதிற்குள் ஓடினாலும் தன் முதலாளி சொன்னதை கேட்டு கிழவியை அறிமுகப்படுத்தி சென்றார்.