“ஐயையோ கெழவி வந்த இடத்துல காணம போச்சு போலையே. ஊர்ல இருக்க அப்பா சித்தாப்பாக்கு நான் என்ன பதில் சொல்லப் போறேன்”

     பதறியவாறு ஆனந்தி சுற்றும்முற்றும் தேட, கிழவி ஒரு பெரிய ஹோட்டலின் முன்பு நின்றதை கவனித்து வேகமாக கிழவியிடம் ஓடினாள்.

     “ஏ புள்ள ஆனந்தி! மதிய நேரம் வரப்போவுதுள்ள வாடி இந்த கடைல சாப்புட்டு போவோம்” ஆனந்தி பேசும் முன் தானே பேசி முடித்து ஹோட்டலினுள் நுழைந்தது கிழவி.

     வகைவகையாய் நான்வெஜ் உணவுகளை ஆர்டர் போட்ட கிழவி, நான்கு நபர்கள் தாராளமாய் உண்ணும் உணவை ஒன் மேன் ஆர்மியாக வெளுத்துவாங்கி மேலும் ஒரு இரண்டாயிரம் ரூபாய் பில்லை தன் பேத்தியின் தலையில் தீட்டியே ஓய்ந்தது.

     ‘அடி சண்டால கெழவி என் ஒருமாச சம்பளத்தை இப்புடி அநியாயமா ஒருமணி நேரத்துல முழுங்கி ஏப்பம் விட்டுட்டியே’

     கிழவியை மனதிற்குள் கருவியபடி தன் அருகே வாங்கிய புதுபோனை திருப்பி திருப்பி பார்த்தபடி அமர்ந்திருந்த கிழவியை அப்படியே கொன்றுவிட்டாள் என்ன என்னும் எண்ணத்திற்கே வந்துவிட்டாள் அந்த பாவப்பட்ட பேத்தி. இறுதியில் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று புரிந்துவிட, இந்த கிழவி இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ என்று நினைத்து பயந்துபோய் பார்த்து வைத்தாள்.

     அவள் இடிந்துபோய் அமர்ந்திருந்தும் விடவில்லையே கிழவி, தனக்கு தேவையான சோசியல் மீடியா அக்கவுண்ட் அனைத்தையும் ஆனந்தியை வைத்தே ஓபன் செய்ய வைத்து, அதை எப்படி இயக்குவது என்பது வரை தெரிந்துக் கொண்டது.

     ஆர்வமே சாதனையின் முதல் படி என்று சொல்வதை மெய்யாக்கும்படி அந்த கைப்பேசியில் என்னென்ன தெரிந்துக் கொள்ள முடியுமோ அனைத்தையும் ஆனந்தியிடம் கறந்துவிட்டது கிழவி‌. மிச்சமீதி எதாவது தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், அதுக்குதானே இருக்கவே இருக்கிறான் கிழவியின் அல்லக்கை பரசு. ஆனால் கிழவி எதை சாதிக்க இப்படி தீவிரமாய் இறங்கியதோ யார் கண்டார்.

      இந்த போன் வந்ததிலிருந்து கிழவியை கையில் பிடிக்க முடியவில்லை. செல்ஃபி எடுப்பது என்ன, ரீல்ஸ் போடுவதென்ன, பொழுதாபொழுதும் ஆன்லைனிலே இருப்பதென்ன. கடந்த ஒரு வாரமாக கையில் எடுத்த போனை கிழவி கீழே வைத்ததாக நினைவில்லை.

     இன்று வார இறுதிநாள், ஆனந்திக்கு வாரத்தில் இருக்கும் ஒரேயொரு விடுமுறை நாள். எனவே நன்றாக இழுத்து போர்த்தி தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் தூங்கும் நேரம் திடீரென டொம் என்றொரு சத்தம் காதை பிளக்க, அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள் பேத்தி.

     ‘என்னடா இவ்ளோ சத்தம் கேக்குது, ஐயோ அப்பத்தாக்கு என்னாச்சுன்னு தெரிலையே’ கேட்ட சத்தத்தில் கிழவிக்கு மரியாதை எல்லாம் தானாக வந்தது பேத்திக்கு.

     அவள் அப்படி அடித்து பிடித்து எழுந்து வந்து பார்த்தால், ஹாலின் நடுவே கிழவி போனை வைத்துக்கொண்டு முழித்துபடி நின்றிருந்தது‌. இருந்த கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் விரட்டிவிட்டு ஆனந்தி ஹாலை சுற்றி பார்க்க, அங்கே அவளுடைய லேப்டாப் கவிழ்ந்து பல்லைக்காட்டி கொண்டு கிடந்தது.

     என்னவானது என ஒரு நிமிடம் ஆனந்திக்கு புரியாது, கிழவியையும் லேப்டாப்பையும் மாறி மாறி பார்த்தவளுக்கு புரிந்துவிட்டது. கிழவிதான் ஏதோ பெரிய வேலையை பார்த்துவிட்டதென.

     நடந்தது வேறொன்றும் இல்லை, கிழவி ஒரு பாட்டுக்கு ரீல்ஸ் செய்யும்போது கொஞ்சும் உணர்ச்சிவசப்பட்டு ஓவர் எமோஷனில் ரைட் லெக்கை காற்றில் தூக்கி குதிக்கும் நேரம், டீப்பாயின் மீதிருந்த லேப்டாப் சிறியதொரு உதை வாங்கி பாவமாய் தரையை முத்தமிட்டிருந்தது.

     இந்த கிழவியின் வேகம் ஆனந்தியின் சோகமாய் மாறிவிட, “ஐயோ என் லேப்டாப் போச்சே!” என கதறியடித்து ஓடிபோய் எடுத்து பார்க்க வெளிப்புறம் எந்தவித சேதமும் இல்லை.

     ‘ஹப்பாடா எதுவும் வெளிய உடையல’

     ஆனந்தி மனதிற்குள் நிம்மதி அடைந்து அதை திறந்து பவர் பட்டனை அழுத்தி பார்க்க, ‘ம்ஹூம்’ ஒன்றும் வேலை செய்யவில்லை. இப்போது ஆனந்திக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது. பின்னே இது கம்பெனி லேப்டாப்பாக இருந்திருந்தால் கூட பரவாயில்லை, இது அவளின் சொந்த லேப்டாப் ஆச்சே.

     ‘போச்சே போச்சே’ என அழுதே விட்டாள் ஆனந்தி. இதற்குமேல் இந்த கிழவியை இப்படியே விட்டால் அவ்வளவுதான் என்று கோபம் கொண்டு கொதித்தெழுந்த ஆனந்தி,

     “ஏய் கெழவி சும்மாவே இருக்கமாட்டியா நீ. இந்த லேப்டாப் எவ்ளோ விலைனு தெரியுமா உனக்கு, இப்புடி பொசுக்குன்னு போட்டு உடைச்சிட்ட. சொந்தமா உழைச்சு வாங்கியிருந்தா ஒரு பொருளோட மதிப்பு தெரியும். எவனோ சம்பாதிச்ச காசுன்னுதானே உன் இஷ்டத்துக்கு ஆடுற. அந்த போனை வாங்கி குடுத்து நான்தான் பெரிய தப்பு பண்ணிட்டேன். இரு வந்து பேசிக்கிறேன் உன்னைய”

     கிழவியிடம் தன் மனதிற்குள் இருந்த அனைத்தையும் போட்டு கொட்டி தீர்த்த ஆனந்தி, குளித்து லாப்டாப்பை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டாள். இங்கு கிழவி என்ன நிலைமையில் இருக்கிறது என்று கூட கவனிக்காது.

     இருந்த கோபத்தை எல்லாம் தன் நடையில் போட்டு நடத்த ஆனந்தி, தன் இருசக்கர வாகனத்தை எடுத்து வெளிய வந்த நேரம், அவளுக்கு எதிரில் வந்தான் பரசு.

     சும்மா இருந்த கிழவியை தூண்டிவிட்டு இப்போது அவள் இருக்கும் நிலைக்கு காரணமானவன் இந்த பரசுதானே. எனவே கிழவியை திட்டியதில் சற்று தனிந்திருந்த ஆனந்தியின் கோபம் இப்போது பரசுவை பார்த்ததும் ராக்கெட்டில் ஏறியது. பரசுவின் முன் சடன்பிரேக் போட்டு தன் வண்டியை நிறுத்திய ஆனந்தி

     “டேய் பரங்கிக்கா மண்டையா நில்லுடா”

     தன் தோல்பட்டைக்கே இருந்த பரசுவின் கையை பிடித்து ஆனந்தி நிறுத்தியதில் முழித்தபடி நின்றான் அந்த பரசு.

     “ஏன்டா சும்மாவே இருக்க முடியாதாடா உன்னால, அந்த கெழவிக்கு எதுக்கு அதையும் இதையும் சொல்லி குடுத்த. இப்ப புது போன் வாங்கி அது பண்ற சேட்டைல என் நிம்மதிதான் போகுது”

     ஆனந்தி மூச்சுவாங்க பேசி நிறுத்திய நேரம், பரசு ஆரம்பித்துவிட்டான்.

     “எக்கா போதும் நிறுத்துக்கா. நியாயமா பாத்தா நான்தான் உன்கிட்ட சண்டைக்கு வந்திருக்கனும். என்ன கெழவிய வளத்து வச்சிருக்க, நான் பாட்டுக்கு சிவனேன்னு என் கேள்பிரண்ட் கூட பேசிட்டு இருந்தேன். அதை எப்படியோ மோப்பம் புடிச்ச அந்த கெழவி, இந்த மேட்டரை வீட்டுல சொல்லிருவேன்னு சொல்லி சொல்லியே என்ன மெரட்டி எல்லாம் சாதிக்குது.

     அது என்ன பண்ற டார்சர்க்கு நான்தான் உன் வீடு ஏறி வந்து சண்டைய போட்டிருக்கனும். பேசாம போயிறு. ஆனா கடைசியா ஒன்னு சொல்றேன் க்கா அந்த கெழவி இங்க இருக்கவரை எல்லாருக்கும் டேஞ்சர்தான் பாத்துக்க”

     பட்பட் பட்டாசை பொறிந்து தள்ளிய பரசு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டிவிட்டு போக வாயடைத்து போய் நின்றாள் ஆனந்தி. இந்த பரசு எதோ கிழவிக்காய் பார்த்து எல்லாம் சொல்லி தந்திருப்பான் என இவள் எண்ணியிருக்க, இந்த டுவிஸ்ட்டை ஆனந்தி சத்தியமாய் எதிர்ப்பார்க்கவில்லை.

     பரசு சொல்லியதைப்போல இந்த கிழவி மிகவும் டேஞ்சரஸான ஆள்தான் என தானும் உணர்ந்த ஆனந்தி இனி தானும் அந்த கிழவியிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று சபதம் கொண்டாள். ஆனால் நம் கிழவியிடம் இதெல்லாம் சாத்தியமா என்ன பார்ப்போம்.

     ஆனந்தி இந்த பக்கம் வெளியேறிய நேரம், கிழவி அவள் பேசியதை கேட்டு ஆடிப்போய் அமர்ந்திருந்தது. தான் கண்டு வளர்ந்த பேத்தி தன்னையே கைநீட்டி ஒரு சொல் சொல்லி சென்றது, அதுவும் நீ சம்பாதிச்ச பணமா என கேட்டு சென்றிருக்க அந்த வார்த்தை சுருக்கென கிழவியின் மனதில் குத்தியிருந்தது.

     அதற்கு என்ன முடிவு என்று யோசித்த கிழவிக்கு ஒரு விபரீதமான எண்ணம் தோன்றி வைக்க, ஆனந்தி வரும்வரை நடந்த நிகழ்வை மனதில் போட்டு யோசித்துக் கொண்டிருந்த கிழவி தான் எடுத்த முடிவே சரியென இறுதியில் உறுதியாய் நின்றது.

     லாப்டாப்பை கடையில் வேலை செய்துவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து வந்த ஆனந்தி பார்த்தது, ஷோபாவில் சம்மனமிட்டு தீவிரமாக சிந்தனையில் அமர்ந்திருந்த கிழவியைதான்.

     ‘ஆத்தி என்ன கெழவி அதே போசுல உக்காந்துட்டு இருக்கு. இந்த பரசு வேற என்னன்னவோ சொன்னான். நாம வேற போற போக்குல கெழவியை கத்திவிட்டுட்டு போனமே. இந்நேரத்துக்கு நம்மல பத்தி வீட்ல ஒன்னுக்கு ரெண்டா போட்டுவிட்டு இந்த வேலைக்கு சுவாகா போட வச்சிருக்குமோ’

     ஹாலில் இருந்து தன் அறைக்கு போவதற்குள் இப்படி பல்வேறு எண்ணங்கள் ஆனந்தியின் மனதிற்குள் உதித்து அவளை பீதியடைய செய்ய, அப்போதும் அவள் கிழவியிடம் மன்னிப்பை கேட்டாள் இல்லை. அது அவளுக்கு தோன்றாது போனது விந்தையே.

     ஆனந்தியின் மைண்ட் வாய்ஸ்க்கு ஏற்றார்போல் அவள் அறையினுள் வந்த நேரம் அவளுடைய கைப்பேசி அலற, பார்த்தால் அழைத்திருந்தது அவள் தந்தை.

     ‘அடிக்கெழவி நான் நினைச்சா மாதிரியே என்ன அப்பாட்ட மாட்டிவிட்டுட்டியே. போச்சு என்ன வேலைக்கே போகவேணாம் மறுபடியும் ஊரபாத்து வான்னு சொல்லப்போறாங்க’ என மனதிற்குள் பயந்தபடியே அழைப்பை எடுத்தாள்.