Advertisement

விழி -9 

மலர்விழிக்கு கிட்டத்தட்ட இந்த சூழ்நிலை கண்ணாடி பாத்திரத்தை கையாளும் நிலை தான்.. அவளும் மனுசி தானே.. கோவம் ஆத்திரம் எல்லாம் வரும் தானே.. வரவும் தான் செய்தது.. ஆனால் வந்து செய்ய..?? வஜ்ரவேல் பேச பேச, அவனை போட்டு அடிக்கலாம் என்று கூட தோன்றியது..

‘இன்னும் எத்தனை மறைத்திருக்கிறாய்…’ என்று கேட்க துடித்தது.. ஆனால் அவன் தொய்ந்த தோற்றம், இத்தனை நாட்களாய் அவன் இருந்த நிலை, எல்லாம் யோசித்து பார்த்தாள்..

உணர்ச்சி பெருக்கில் எதுவும் செய்யலாம், ஆனால் வார்த்தைகளை விட்டால் அது அல்ல முடியாது, திரும்ப பெற முடியாது.. இப்போது இந்த நொடி வஜ்ரவேல் மிகவும் அடிபட்டு போயிருக்கிறான்.. தான் ஏதாவது சொல்ல போய், அவனை அது எதிர்மறையாய் சிந்திக்க வைத்துவிட்டால்..?? இழப்பு யாருக்கு…

‘பொறுமை பொறுமை மலர்விழி…’ என்று அவளுக்கு அவளே சொல்லிகொண்டாள்.. எக்காரணம் கொண்டும் அவள் வஜ்ரவேலின் ஈகோவை சீண்ட விரும்பவில்லை.. அதுவும் இந்த நிலையில் அவன் மனம் எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம்.

‘எனக்கு இப்போ வேலை இல்லை.. ஆனா நீ வேலை பார்க்கிற திமிரா…’ என்று கேட்டுவிட்டால் அது அவளுக்குமே கஷ்டமாய் தானே இருக்கும்.

அவனுக்கு வேலை கூட எப்படியும் கிடைத்துவிடும், ஆனால் இருவருக்கும் ஒரு மன பிணக்கு என்று வந்துவிட்டால் அது காலம் முழுமைக்கும் அல்லவா மாறா வடுவாய் மனதில் இருக்கும்.. அதை மலர்விழி விரும்பவில்லை.. ஆகையால் தனக்கு கோவம் வருத்தம் எல்லாம் இருந்தாலும் அதை அவள் வெளிக்காட்டவோ, இப்பிரச்சனை கொண்டு வஜ்ரவேலை எதுவேண்டுமென்றாலும் பேசவோ அவள் தயாராகயில்லை..

ஆகையால் தான் ‘சரி பார்த்துக்கலாம்…’ என்று சொல்லி சென்றுவிட்டாள்..

ஆனால் அவள் மனதும் ஒருநிலை இல்லாமல் தவிக்கத்தான் செய்தது.. என்னவோ இத்தனை நாள் வஜ்ரவேலிடம் இயல்பாய் பேசியது போல் இப்போது முடியவில்லை.. தன்னை தானே கொஞ்சம் பிசியாக வைத்துக்கொள்ள முயன்றாள்.

வஜ்ரவேலின் பார்வைகள் அவளை தொடர்ந்தாலும், அது அவளுக்கு தெரிந்தே இருந்தாலும், என்னவோ மனதில் ஒரு ஒதுக்கம் வந்ததும் உண்மை தான்..

‘என்னிடம் அவன் உணர்வுகளை பகிர்ந்திருக்கலாமே…’ என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்தது..  ஆனால் வஜ்ரவேலுக்கோ மலர்விழி இப்படி அமைதியாய் இருப்பது தன்னை தானே நோக வைத்தது..

‘ச்சே.. முட்டாள் மாதிரி பண்ணிட்டோம்…’ என்று தனக்கு தானே திட்டிக்கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும் அவனால்.. முன்போல் நிறைய பேசவில்லை, ஆனால் பேசாமலும் இல்லை.. அவன் சில நேரம் அலுப்பாய் அமர்ந்திருந்தாள், அவளாகவே வந்து பேசுவாள்..

“என்னங்க.. எல்லாம் சரியாகிடும்… ஏன் இப்படி கவலை..?? இது நீங்களா இழுத்தது தானே… கொஞ்சம் பொருத்துக்கோங்க…” என்பாள்..

“உனக்கு என்மேல கோவமே இல்லையா…” என,

“யார் சொன்னா…??” என்று கேட்டு சிரிப்பாள்.

“திட்டிடேன்…” என்பான்..

“திட்டி…???!!! என்ன செய்ய… நீங்க மனசை போட்டு படுத்தாதீங்க.. எல்லாம் சரியாகும்.. இந்த சூழ்நிலை இப்படியே இருக்க போறதில்லை..” என்று ஆறுதலாய் சொல்லும் போது அவளது கரங்களை இறுக பற்றிக்கொள்வன்.

இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போல் தான் இருக்கும் ஆனால் அன்றுபோல் கொஞ்சம் ஆசை எழும்பிவிட்டால்..?? பின் விலகுவது கடினமல்லவா. 

சில நேரம் அவளுமே ஏதாவது ஒரு யோசனையில் ஒரு சிந்திப்பில் இருப்பது போல தோன்றும். ஒருவழியாய் நாட்கள் இப்படியே போக, கண்டேன் கண்டேன் என்று ராயப்பனூரில் இருந்து வஜ்ரவேல் வீட்டினர் வந்தனர்.

அனைவரும் இல்லை, தங்கவேல், மணிமேகலை மற்றும் அலமேலு…

“நீயும் கூப்பிடுவ கூப்பிடுவன்னு பார்த்தோம்… அதான் நாங்களே வந்திட்டோம்…” என்று அலமேலு சொல்ல, வஜ்ரவேல் ஒன்றுமே சொல்லவில்லை.

இவர்கள் வந்ததே முதலில் அதிர்ச்சி தான்.. ஏனெனில் மலர்விழி வஜ்ரவேல் இருவருமாகவே இந்த சூழ்நிலையை கடந்து செல்லவும், கடத்தவும் பழகிக்கொண்டனர்.. கொஞ்சம் புரிதல் இன்னும் அதிகமானது..

இக்கட்டான சமயத்தில் தானே மனிதர்களின் உண்மையான முகம் தெரியும்.. இந்த சூழ்நிலையில் தான் மலர்விழியின் குணமும் நன்றாகவே வஜ்ரவேலுக்கு புரிந்தது..

‘விழியாச்சிய நல்லபடியா வச்சுக்கணும்…’ என்று நினைக்க தொடங்கியிருந்தான்..

வீட்டில் செலவுகள் சுருக்கப்பட்டாலும், அவ்வப்போது அவளுக்கு பிடித்த சில விசயங்களை செய்யவும் மறக்கவில்லை..

“இப்போ இந்த செலவெல்லாம் தேவையா…??” என்று அவள் சொன்னால்,

“தேவை தான்.. சில விஷயங்கள் வாழ்க்கைல ரொம்பவே தேவைதான்.. பணம் எல்லாம் அடுத்து தான்…” என்று விடுவான்.

இப்படி அவளுமே அவனுக்கான உணர்வுகளை மதித்து, புரிந்து தங்கள் வாழ்வை ஓட்டும் போது, திடீரென்று ஊரில் இருந்து இவர்கள் வரவும் பக்கென்று இருந்தது..

‘இவங்களுக்கு உண்மை தெரிஞ்சா…’ என்று இருவராலும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை..

“என்ன புருசனும் பொண்டாட்டியும் கமுக்கமா இருக்கீங்க… நாங்க வந்தது பிடிக்கலையா…??” என்று மீண்டும் அலமேலு ஆரம்பிக்க,

“ஐயோ பாட்டி.. என்ன இப்படி சொல்லிட்டீங்க.. அடுத்த வாரம் லீவ் வருதுல்ல, அப்போ நாங்களே ஊருக்கு வரலாம்னு இருந்தோம்… என்னங்க…” என்று தன் பேச்சில் மலர்விழி வஜ்ரவேலையும் இழுக்க, அவனும் ஆமாம் என்று தலையை உருட்டினான்..

நல்லவேளை வந்தவர்கள் வார இறுதியில் வந்தார்கள், மலர்விழி வீட்டில் இருக்க முடிந்தது. ஆனால் வஜ்ரவேலால் இருக்க முடியவில்லை..

பார்ட் டைம் ஜாப் ஒன்று கிடைத்திருந்தது. அதில் விடுமுறை எல்லாம் இல்லை..  ஒன்றுமே இல்லாததற்கு இது எத்தனையோ மேல் என்பது போல, அந்த வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.

தங்கவேலு வந்து மறுநாளே கிளம்பிவிட, மணிமேகலையும், அலமேலுவும் மட்டும் இருந்தனர்.

“எப்படியும் நீங்களும் அடுத்த வாரம் ஊருக்கு வருவீங்க தானே.. எல்லாம் ஒண்ணா போவோம்…” என்று மணிமேகலை சொல்ல,

‘ஐயோ நான் சும்மா சொன்னதை இவங்க நம்பிட்டாங்களா…??’ என்று மலர்விழிக்கு தோன்ற, ஒன்றும் சொல்லாமல் ஒரு சிரிப்பை மட்டும் வழக்கம் போல் சிந்தினாள்.

அதிலும் மணிமேகலையும், அலமேலுவும் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்வதற்குள் இவளுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.. அதிலும் முக்கால்வாசி பொய் சொல்ல வேண்டியதாய் இருந்தது..

“உன்னை நல்லா பார்த்துக்கிறானா…???”

“நீயும் அவசியம் வேலைக்கு போகனுமா..??”

“நாள் எதுவும் தவறிருக்கா..??”

“சந்தோசமா தானே இருக்கீங்க…??” என்று இப்படியான கேள்விகள் அவள் முன் வைக்கப்படும் போது, ‘போங்க.. போய் இதெல்லாம் உங்க மகன் கிட்ட கேளுங்க…’ என்று கத்த வேண்டும் போல கூட இருக்கும் அவளுக்கு..

ஆனால் முடியாதே.. சொல்ல போனால், இது வஜ்ரவேலின் போறாத காலம் இல்லை. மலர்விழிக்கு தான் நேரம் சரியில்லை என்று சொல்லவேண்டும் போல.. அப்படிதான் ஆனது..

சண்டை போடவேண்டியவனிடம், அவனையே சமாதானம் செய்யும் நிலை, இதில் அவன் வீட்டினர் வேறு.          

‘உன்னோடு சேர்ந்து நானும் இப்படி பொய் பேச ஆரம்பிச்சுட்டேன்…’ என்று வஜ்ரவேலிடம் கத்த வேண்டும் போல இருந்தது..

ஆனால் அவனே மாலை நேரத்தில் தான் வேலைக்கு செல்கிறான், நள்ளிரவு தான் வருகிறான்.. அவனிடம் அந்த நேரத்தில் என்னவென்று அவள் கடிய முடியும்..

அடுத்து வார வேலை நாட்கள் என்றால், இவளும் பள்ளிக்கு செல்லவேண்டும், முதலில் வீட்டில் இவர்கள் இருக்கும் போது தான் எப்படி போவது என்ற தயக்கம் இருக்க,

“நீ போய்ட்டு வா… நாங்க பார்த்துக்கிறோம்…” என்று மணிமேகலை சொல்ல, மனதில் லேசான நிம்மதி..

வழக்கம் போல் வஜ்ரவேல் கொண்டுபோய் விட்டு, அவனும் பணிக்கு செல்வது போல், பகல் நேரமெல்லாம் வெளியில் இருந்து, பின் மாலை தன் வேலைக்கு சென்று இரவே திரும்புவான்..

“இவ்வளோ அலையனுமா.. காலை நேரத்துல வீட்ல இருங்களேன்..” என்று மலர்விழி சொல்ல,

“அதெல்லாம் வேணாம்… கொஞ்ச நாள் தானே..” என்று சொல்லி வழக்கமாய் நாட்கள் நகர, மணிமேகலைக்கும், அலமேலுக்கும் என்ன தோன்றியதோ, அன்று மாலை மலர்விழி வீட்டிற்கு வரவும்,

“இவன் நடுராத்திரி வீட்டுக்கு வர்றான்… நீ காலையில வேலைக்கு போயிடுற… இப்படி இருந்தா எப்படி…” என்று ஜாடை மாடையாய் பேச்சை தொடங்க,

‘அடுத்து இதுவா…’ என்று அலுப்பாய் இருந்தது..

“போன மாசம் வரைக்கும் இப்படி இல்லை அத்தை.. இப்போ அவங்க ஆபிஸ்ல எதோ புது ஆர்டர் வந்திருக்காம், அதான் இவ்வளோ நேரம் ஆகுது…”

“ஏன் ராஜேஷ் சீக்கிரம் தானே வர்றான்…”

“அது.. இவங்க வேற செக்சன்… அவங்க வேற செக்சன்..”

“அவன் செக்சனுக்கே இவனும் போக வேண்டியது தானே…. நேத்து ராத்திரி ரெண்டு மணிக்கு வர்றான்.. இப்படி இருந்தா குடும்பம் எப்படி ஓடும்…” என்று மணிமேகலை கடிய,

“மணி நீ கொஞ்சம் சும்மா இரு…” என்ற அலமேலு, “ஏம்மா மலர்விழி, உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா…??” என்று கேட்க, அவளோ விக்கித்து போனாள்..

“இந்த காலத்துல ஆளுக்கு ஒருபக்கம் வேலைக்கு ஓடுறது எல்லாம் சகஜம் தான்.. ஆனா உங்ககிட்ட என்னவோ குறையுதே.. நீங்க சாதாரணம் போலவே இல்லையே…” என்று கிழவி சரியாய் பாயிண்டை பிடிக்க, ‘ஆத்தாடி….’ என்று நெஞ்சடைத்தது…                                                   

பதில் சொல்லாமல் அப்படியே மலர்விழி அமர்ந்திருக்க, “மலர்விழி உண்மையை சொல்லும்மா… என்ன பிரச்சனை…??” என்றார் மணிமேகலை..

“ஒ.. ஒண்ணுமில்ல அத்தை…” என்று வார்த்தை தடுமாற,

“நிஜமாவா…??” என்று அலமேலு கூர்ந்து பார்க்க, தலையை குனிந்துகொண்டாள்..

“அதானே பார்த்தேன்… இந்த பைய கல்யாணத்துக்கு சரின்னு சொல்லி அமைதியா இருக்கும் போதே, நினைச்சேன்.. எப்படின்னு.. இப்போதானே புரியுது.. எங்க இஷ்டம்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து இங்க உன்னை கண்டுக்காம இருக்கானா…??” என்று மணிமேகலை வேறுவிதத்தில் யோசித்து சொல்ல,

உள்ள சூழ்நிலை தெரிவதை விட, இது எத்தனையோ மேல் என்று பட்டது மலர்விழிக்கு..

“போக போக எல்லாம் சரியாகிடும் அத்தை..” என,

“என்ன சரியாகும்… உங்க கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு.. இப்போ வரைக்கும் உன்னை பொண்டாட்டியா நினைக்கலைன்னா எப்படி…” என, ஒருபக்கம் மலர்விழிக்கு சிரிப்பு கூட வந்துவிட்டது.இதை மட்டும் வஜ்ரவேல் கேட்கவேண்டும் அவ்வளோதான்.. ஹா ஹா மனதிற்குள் சிரித்துக்கொள்ள, தலையை மேலும் தொங்கப்போட்டாள்..

“நீ எதுக்கும் கலங்காத மலர்விழி… பாட்டி நான் இருக்கேன்… நான் சொல்ற யோசனை படி…” என்று, அடுத்தகட்டமாய், வஜ்ரவேலை எப்படி அவள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பது என்ற யோசனைகளை அலமேலு வாரி வழங்க தொடங்க,

‘டேய் ஆள விடுங்கய்யா சாமி…’ என்று மலர்விழிக்கு ஓட வேண்டும் போல் இருந்தது..

இதெல்லாம் அவனிடம் சொல்லலாம் என்று பார்த்தால், அவனே பாவமாய் வருகிறான், இதையும் சொல்லி இன்னும் அவனை சங்கடப்படுத்த விரும்பவில்லை.. இரண்டொரு நாள் தானே பின்னே கிளம்பிவிடுவர் அதுவரைக்கும் பொறுமையாய் இருப்போம் என்று இருந்தாள்..

அன்று இரவு வஜ்ரவேல் சீக்கிரமே வந்துவிட, “போ.. போ.. போயி அவன்கிட்ட பேசு…நீயும் இப்படி தள்ளி நின்ன எப்படி…” என்று மணிமேகலை மருமகளை விரட்டினார்..

‘பேசவா… நாங்க பேசினதே இல்லையா…’ என்று நோன்தவள், அறைக்குள் நுழைய, அவள் முகத்தை பார்த்தவன் “என்ன விழியாச்சி..” என விளிக்க,

“ஹா.. இல்ல சும்மா உங்கட்ட பேசிட்டு இருக்கலாம்னு…” என்று இழுக்க, அவன் முகமோ ஆச்சர்யமாய் விரிந்தது..

“இல்ல அது வந்து…” என்று இழுத்தவள், ‘இதுக்குமேல் என்னால முடியாது..’ என்று ஓரளவு அவனுக்கு புரியும்படி அனைத்தையும் சொல்ல, அவனுக்கோ அவளை பார்க்க பாவமாய் இருந்தது. அனைத்தும் தன்னால் தானே என்று நினைக்கும் போது அதுவும் கடுப்பாய் வந்தது..

“அவங்க சொல்றதை எல்லாம் மனசில வச்சுக்காத…” என,

“ஹ்ம்ம் இல்லை…” என்று தலையை உருட்டியவள், சிறிது நேரத்தில் வெளியே போக,

“பேசினியா… இப்படிதான் அவன் வந்தா எனக்கென்னனு இருக்காம என்ன எதுன்னு பேசணும்…” என்ற அலமேலு,  “சரி இந்தா இந்த கலர் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. இந்த சேலை கட்டு…” என,

‘நடுராத்திரில என்னை மேக்கப் போட சொல்றாங்களே…’ என்று கடுப்பானாள்..

“இல்ல பாட்டி வேணாம்…” என்று தயங்க,

“சொன்னா கேளு… நீ இப்படி நைட்டியும் கொண்டையுமா இருந்தா அவனுக்கு எப்படி பிடிக்கும்…?? கொஞ்சம் பளிச்சின்னு இருக்கவேணாமா..” என்றவர் அவளை அந்த சேலையை கட்ட வைத்து, போதாதா குறைக்கு, “இந்த பூ.. இதையும் வச்சிட்டு போ…” என்றே அவளை அனுப்பினார்..

‘நல்ல குடும்பம் டா சாமி…’ என்று நொடித்துக்கொண்டே அறைக்கு மீண்டும் வந்தவள் கட்டிலில் பொத்தென்று அமர, படுத்திருந்தவன் திரும்பி பார்த்தான்..

அவனுக்கு பிடித்த நிறத்தில் சேலை கட்டி, லேசாய் ஒப்பனையோடு, தலையில் பூச்சூடி, மலர்விழி அமர்ந்திருக்க, அவளது தோற்றமே அவன் மனதை தடுமாற தான் செய்தது.. அப்போதும் அவன் மனம் ‘அடியே ரதியே…’ என்று பாட,

“விழியாச்சி…” என,

“என்ன நோன்ன விழியாச்சி…??? நல்லா வந்து சேர்ந்தீங்க… மாமியார் கொடுமை கேள்விபட்டிருக்கேன்.. ஆனா இந்த கொடுமை பெருங்கொடுமையா இருக்கு.. ” என்று கடிந்தபடி, அப்படியே படுக்க, அவனால் பார்வையை விலக்க முடியவில்லை..

அவளையே பார்த்து படுத்திருக்க, அப்போது தான் உணர்ந்தாள் அவன் பார்வை தன் மீது இருப்பதை..

“இந்த கலர் உங்களுக்கு பிடிக்குமா…” என்று சேலை காட்டி கேட்க,

“ம் ஆமா.. இப்போ ரொம்ப பிடிக்குது…” என,

“பாட்டி தான் இதை கட்ட சொன்னாங்க…” என்றாள் ஒரு சிணுங்கலோடு.. அவள் சொன்ன விதமும்,. அவள் சிணுங்கலும், அவனுக்கு இன்னும் கொஞ்சம் பித்தமேற்ற, இப்படி விலகி இருப்பது கொடுமையிலும் கொடுமை என்று எண்ணினான்…

“எப்படி தான் கண்டுபிடிச்சாங்களோ… ஒருநாள் நீங்க வீட்ல இருந்து கேட்கணும் இவங்க பேசுறதை எல்லாம் அப்போ தெரியும்…” என்று சொன்னவள், அப்படியே உறங்கியும் போக, அவனால் அது முடியவில்லை..

‘என்ன மாதிரி வாழ்க்கை இது…’ என்று தோன்றியது வஜ்ரவேலுக்கு.. மௌனமாய் அவளையே பார்த்து படுத்திருந்தவனை பட்டென்று விழிகள் திறந்து நோக்கியவள்,

“என்னங்க…” என,

“தூங்கலையா…??” என்றான்..

“ம்ம்ஹும்… ஒன்னு யோசிச்சேன்…” என,

“என்ன யோசிச்ச…??” என்று வஜ்ரா கேட்க, அவனை பார்த்து திரும்பி படுத்தவள்,   

“பேசாம ஊருக்கே போயிடலாமா… இங்க இருந்தா தானே இந்த வேலை டென்சன்.. அது தொட்டு இந்த பிரச்சனை எல்லாம்.. ஊருக்கு போனா அதெல்லாம் இல்லையே.. உங்களுக்கு என்ன அங்க ஒண்ணுமில்லையா..?? அங்க போனா எல்லாம் சரியாகும் தானே…” என,

“வேலை விட்டு போறது வேற, வேலை இல்லாம போறது வேற இல்லையா…” என்றான்..

“அது நம்ம மனசை பொருத்தது தான்… அங்க உங்களுக்குனு நிலம் புலம் எல்லாம் இருக்கே… மாமா சின்ன மாமா எல்லாம் வேலைக்கு போயா இவ்வளோ சேர்த்தாங்க… விவசாயம் பார்த்து தானே.. அவங்களுக்கு அப்புறம் யார் பார்ப்பா…??” என,

ஏனோ அந்த கேள்வி அவனை யோசிக்க வைத்தது..

ராயப்பனூரில் நிறைய விவசாய நிலம் அவர்களுக்கு இருந்தது. பக்கத்தில் கள்ளக்குறிச்சியிழும், சின்ன சேலத்திலும் கூட இவர்களுக்கு சொந்தமான நிலங்கள் இருந்தன. அதெல்லாம் இப்போது வரைக்கும் தங்கவேலும் தணிகாசலமும் தான் பார்த்துகொண்டு இருந்தனர்..

அவர்களுக்கு அடுத்து என்ற கேள்வி இப்போது வர, அவனை யோசிக்க வைத்தது..

“ஏன் இப்படி அலையணும், அவஸ்தை படனும்.. யார்கிட்டயும் வேலைக்கு கை கட்டி நிற்கணும். அங்க நீங்க தான் முதலாளி. உங்களோடது தான் எல்லாம்.. எல்லாம் படிச்சிட்டு இப்படி வேலைக்குன்னு வந்திட்டா, அங்க அடுத்து யார் பார்ப்பா…” என, அவள் சொல்வது அனைத்தும் சரியாய் பட்டது..

“நீ… நீ… நிஜமா தான் சொல்றியா…???” என்று விழிகள் விரிக்க,

“இதில சும்மா சொல்ல என்ன இருக்கு.. என்னிக்கு இருந்தாலும் அங்க தானே நம்ம போகணும்… அதை இப்போவே போனா என்ன?? காலம் போன கடைசியில, சொந்த ஊர்ல போய் இருந்து, நம்ம பழகினவங்க, நமக்கு தெரிஞ்சவங்க எல்லாம் முக்காவாசி போய் சேர்ந்தப்புறம், நமக்குன்னு ஒருத்தரும் இல்லைன்னு புலம்பி என்ன பிரயோஜனம்..” என, 

மனைவி என்பவள் மதிமந்திரியும் கூட என்பது இப்போது அவனுக்கு நன்றாகவே புரிந்தது…  ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனே முடிவு எடுக்க முடியவில்லை. அடிப்பட்டிருக்கிறான் இல்லையா..

யோசனையில் புருவம் சுருங்கியது..

 

 

Advertisement