Advertisement

விழி – 7

“என்னங்க.. கிளம்பலாமா…” என்று இருவருக்கும் மத்திய உணவு டப்பாவை எடுத்து அவரவர் பையில் வைத்தபடி கேட்ட மலர்விழியை இந்த ஒருவாரமாய் பார்க்கும் அதே ஒரு வெற்று பார்வையில் தான் பார்த்தான்.

அவளுக்கும் அந்த பார்வைக்கான அர்த்தம் புரியவில்லை, கேட்டாலோ, ஒன்றுமில்லை, வேலை நிறைய.. அது டென்சன் என்றான். சரி ஓரளவிற்கு மேல் நாமும் கேட்டு அவனை படுத்த கூடாது என்று அமைதியாய் இருக்க அதுவே தினமும் தொடர்கதை ஆனது.

அன்று அவனுக்கு அழைப்பு வந்தது தானே, வேறெங்கிருந்தும் இல்லை, அவன் புதிதாய் வேலைக்கு என்று சேரவிருந்த இடத்தில இருந்து தான்..

“சாரி சார்… ஸ்ட்ராங் ரிக்கமண்டேசன்… எங்கனால நோ சொல்ல முடியலை…” என்று இவனது பணி வாய்ப்பை அழகாய் கத்தரித்து விட்டனர்..

காதில் இருந்து போனை எடுக்காது அப்படியே அமர்ந்திருந்தான்..

“என்.. என்னங்க… என்னாச்சு..” என்று அவன் கன்னம் தொட்டு மலர்விழி கேட்க, அவளை மெல்ல தன்னிடம் இருந்து விலக்கியவன்,

“ஒரு வேலை… உடனே வர சொல்றாங்க…” என

“ஓ… லீவ் முன்னாடியே எக்ஸ்டன்ட் பண்ணிருக்கலாமே…” என்று லேசாய் குறைபட்டாள்..

அவனுக்கோ அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியவில்லை. கண் முன்னே புது மனைவி அதுவும் கைகளுக்குள், மகிழ்வாய் இருந்திட வேண்டிய தருணம் இது.. கொஞ்ச நேரம் முன் வரைக்கும் அப்படிதான் இருந்தான்.. ஆனால் இப்போது சந்தோசமா அப்படினா என்ன?? என்று கேட்கும் நிலை..

அதுவும் யாருக்கும் வெளியே தெரிந்துவிடாத படி, தனக்கு தானே கேட்டுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை..

“ம்ம் நீ இரு… நான் வந்திடுறேன்.. கதவை பூட்டிகோ…” என்று சொல்லிவிட்டு அப்போது வெளியே சென்றவன் தான் இரவு தான் வீட்டிற்கு வந்தான்.. அதுவும் ராஜேஷ் இழுத்து வந்திருந்தான்..

மலர்விழிக்கும் இதெல்லாம் புதிது தானே.. வேலைக்கு போனால் வர இரவு நெருங்கும் என்று தெரியுமாதலால் ஒன்றும் பெரிதாய் நினைக்கவில்லை.. என்ன வந்த மறுநாளே அந்த வீட்டில் தனித்து நிற்பது எப்படி இருந்தது..

மிச்சம் மீதமிருந்த வேலைகளை எல்லாம் முடித்து, அப்பாடி என்று உட்காரும் போது மாலை வேளை வந்துவிட,

‘லீவ் தானே போட்டிருக்கேன் சொன்னாரு.. வேலைன்னாலும் இவ்வளோ நேரமா..?? சாப்பிட்டாரோ இல்லையோ..’ என்று தோன்ற, அவன் எண்ணிற்கு அழைக்கலாம் என்று பார்த்தாள், இத்தனை நாட்களில் அவன் மொபைல் நம்பர் கூட வாங்கவில்லை..

‘ச்சே நான் ஒரு லூசு… போன் நம்பர் கூட வாங்கலை…’ என்று தலையில் அடித்துக்கொண்டவளுக்கு, கீழே பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்க, ஒருவேளை அவனோ என்று பால்கனிக்கு ஓடிப்போய் எட்டி பார்த்தாள்..

ஆனால் வந்தது ராஜேஷ்..

‘அண்ணா வந்துட்டாங்க.. இவங்களை எங்க..??’ என்று யோசித்தபடி சரி ராஜேஷிடம் கேட்போம் என்று கீழே வேகமாய் செல்ல, அவன் அப்போது தான் வீட்டின் கதவை திறந்துக்கொண்டு இருந்தான்.

இவள் வேகமாய் இறங்கி வருவதை பார்த்து, “என்னம்மா..??” என்று விசாரிக்க,

“அண்ணா.. அது.. அவர்.. அவரெங்க..??” என,

“யார் ?? வஜ்ராவா.. எங்க..??” என்று வினவ..

“இல்லண்ணா ஆபிஸ்ல இருந்து போன் வரவும், வேலைன்னு கிளம்பி போனார்.. லஞ்சு கூட நான் கொடுத்து விடலை.. அதான்…” என்றவள் முகத்தில் அத்தனை தயக்கம் தவிப்பு..

ராஜேஷிற்கு புரிந்துவிட்டது சரி என்னவோ வில்லங்கம் நடந்துவிட்டது என்று.. ஒருபக்கம் வஜ்ரவேலை நினைத்தால் கோவமாகவும் வந்தது, இன்னொரு புறம் கவலையாகவும் இருந்தது.. அதிலும் இப்போது மலர்விழி வந்து கேட்கும் விதத்தை பார்க்க இன்னும் சங்கடமாய் இருந்தது..

முகத்தில் ஒன்றையும் வெளிக்கட்டாமல், “ஓ…  அவன் வேற செக்சன் ம்மா.. நான் பார்க்கலையே.. கால் பண்ணி பாரேன்…” என,

“அது… அதுண்ணா… போன் நம்பர்.. அது… ஹ்ம்ம் தெரியாதே…” என்று சொல்வதற்குள் மலர்விழிக்கு தொண்டையில் வார்த்தையே வரவில்லை..

அத்தனை சங்கடமாய் இருந்தது.. கட்டிய கணவனின் மொபைல் எண்ணை இன்னொருவரிடம் கேட்டு வாங்கும் சூழ்நிலை. இது ஒன்றே உணர்த்திவிடும் அவர்கள் வாழும் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று..

ராஜேஷிற்கோ தர்மசங்கடமாய் போனது.. அவன் இதில் யாருக்கு என்ன சொல்ல முடியும்..?? மலர்விழியை பார்க்கும் போது பாவமாய் இருந்தது. அவள் மீது எந்த தவறும் இல்லை.. ஆனால் இந்த வஜ்ரா எல்லாத்தையுமே பிரச்சனை ஆக்கி கொண்டான்.. அவனே அவன் வேலை விட்டத்தை மலர்விழியிடம் சொல்லாத போது ராஜேஷ் எப்படி சொல்ல முடியும்..

“ஹ்ம்ம் நோட் பண்ணிக்கோம்மா…” என்றவன் வஜ்ரவேலின் மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு,

“கவலை வேணாம்மா… வந்திடுவான்…” என,

“சரிண்ணா.. தேங்க்ஸ்…” என்றவள் அலைபேசியில் அவனுக்கு அழைப்புவிடுத்துக் கொண்டே மேலே படியேற, அதுவோ ‘சுவிட்ச் ஆப்…’ என்ற குரலையே மீண்டும் மீண்டும் பதிலாய் கொடுத்தது..

‘சார்ஜ் இல்லையோ…’ என்று தோன்றியது..

நேரம் இப்படியே கடந்து செல்ல, கடிகாரம் இரவு ஒன்பது என்று காட்ட, மலர்விழி, பல்கனியில் சேர் போட்டே அமர்ந்துவிட்டாள்.. வீட்டினுள் இருக்க முடியவில்லை..

முதல் முறை தனியாய் இருப்பது வேறு என்னவோ செய்தது.. மூச்சு முட்டுவது போல் இருந்தது. ஒவ்வொரு முறை பைக் சத்தம் கேட்கும் போதெல்லாம் இவன் தானா தானா என்று பார்க்க நடந்து நடந்து கால் வலித்தது தான் மிச்சம்..

ஆகையால் இருக்கை போட்டே அமர்ந்துவிட்டாள்..

ராஜேஷ் எங்கோ வெளியில் சென்றுவிட்டு வந்தான் மலர்விழி அங்கே மேலே பல்கனியில் அமர்ந்திருப்பது பார்த்து,

“வந்துட்டானா….” என்று கேட்டாலும், அவன் மனமும் இன்னும் வஜ்ரா வரவில்லை என்றே சொல்லியது..

“இல்லண்ணா.. அதான் பார்த்திட்டு இருக்கேன்.. போன் வேற சுவிட்ச் ஆப்…”

‘எங்க போனான்… ச்சே கொஞ்சம் கூட யோசிக்கிறதே இல்லை…’ என்று நினைத்துக்கொண்டவள்,

“சரி நீ உள்ள போ மா.. இப்படில்லா உட்கார கூடாது… நான் போய் பார்த்து கூட்டிட்டு வரேன்..”  என்று மீண்டும் பைக்கை உதைத்துக்கொண்டு கிளம்பினான்..

எங்கே போனான் என்றே தெரியவில்லை.. அலுவலகத்தில் அவனில்லை என்பது நன்றாகவே தெரியும், பின் எங்கே என்று தேடுவது.. ஓரளவு வஜ்ரா நல்லவிதமாய் பழகும் அத்தனை பேருக்கும் அழைத்து கேட்டு பார்த்தான்.

யாருமே நல்ல பதிலாய் சொல்லவில்லை..

‘எங்க போய் தொலைஞ்சான் இந்த ராஸ்கல்… வீட்ல ஒரு பொண்ணு இருக்கு அது கூட நினைப்பில் இல்லை…’ என்று திட்டிக்கொண்டே, அவனுக்கு தெரிந்த இடத்தில் எல்லாம் தேட, இறுதியாய் வஜ்ரவேல் ஒருவழியாய் பீச்சில் தான் தென்பட்டான்..

பீச் மணலில் அப்படியே படுத்துக் கிடந்தான்.. முதலில் அது வஜ்ரவேல் என்றே நம்பவில்லை ராஜேஷ்..

ஏனெனில் சும்மா பீச்சுக்கு வரும் போது கூட மணலில் அப்படியே அமர்ந்திட மாட்டான்.. இதுக்காகவே கையில் நியூஸ் பேப்பர் வேறு கொண்டு வருவான்..

‘நீ பண்ற அலம்பல் இருக்கே…’ என்று கேலி செய்து செய்து தான் அவனுக்கு அலம்பல் வஜ்ரவேல் என்று பெயரே வந்தது..

ஆனால் இப்போது வெறும் மண்ணில் அதுவும் படுத்த நிலையில்.. பார்த்ததுமே ராஜேஷிற்கு திக்கென்று தான் இருந்தது..

“டேய் டேய் வஜ்ரா…” என்று எழுப்ப, சட்டென்று எழுந்த வஜ்ரா ராஜேஷ் பார்த்து தலை கவிழ்ந்து கொண்டான்..

“டேய் இங்க என்னடா பண்ற….?? அங்க மலர்விழி போற வர்ற பைக் சவுண்டுக்கு எல்லாம் நீதானான்னு பார்த்திட்டு இருக்கு.. நீ இங்க வந்து படுத்து கிடக்க…”

“ம்ம்ச்… போச்சு டா… எல்லாம் போச்சு…” என்றவன் குரலில் அவ்வளவு விரக்தி..

என்னவோ வாழ்வில் அனைத்துமே முடிந்தது போல் ஒரு தோற்றம்.. கண்ணில் முகத்தில் எதிலுமே உயிரில்லை..

“என்னடா என்ன நடந்துச்சு…?? எதுவும் சண்டையா..??” என,

“புது வேலை.. போச்சு.. எவனோ ஸ்ட்ராங் ரிக்கமண்டேசனாம்.. போச்சு போச்சு.. இருந்த வேலையும் போச்சு… வந்த வேலையும் போச்சு.. எல்லாமே போச்சு…” என்று மணலில் ஓங்கி குத்த,

அவனை நன்றாகவே திட்டவேண்டும் போல் இருந்தாலும், வஜ்ரா இருந்த தோற்றம் ராஜேஷால் கோவம் கொள்ள முடியவில்லை.

“கோகுல் கிட்ட பேசினயா..?? அவன்தானே ரெபர் பண்ணான்…”

“ம்ம்ச்.. அவனுக்கும் ஒன்னும் தெரியலைடா… சாரின்னு சொல்லிட்டான்…”

“ஹ்ம்ம் சரி வீட்டுக்கு வா.. கிளம்பு… போயி பேசிக்கலாம்…”

“வீட்டுக்கா.. அங்க போய்… விழியா… அவகிட்ட என்ன பேச சொல்ற.. என்ன சொல்ல முடியும்… கல்யாணம் அப்போவே வேலை இல்லைன்னு சொல்ல முடியுமா.. ஏற்கனவே நான் அவ கல்யாணத்தை நிறுத்த தான் வந்தேன்னு தெரிஞ்சே, கோவப்பட்டா.. அப்போதான்டா அவளை சமாதானம் பண்ணேன்..

நான் சொல்றதை அவ்வளோ அழகா புரிஞ்சுக்கிட்டா தெரியுமா… நானே நினைக்கலை.. ஸ்வீட் கேர்ள்.. சந்தோசமா சிரிச்சு பேசிட்டு இருந்தோம் டா.. அது பொறுக்கலை எவனுக்கோ…

மச்சி உனக்கு தெரியுமா அந்த இன்டர்வியூல நான் தான்டா பிரஸ்ட் பாயின்ட்.. த்ரீ மினிட்ஸ்ல சால்வ் பண்ண வேண்டியதை ஜஸ்ட் ஒன் மினிட்ல பண்ணேன்டா… எல்லாருமே என்னை ஆச்சர்யமா பார்த்தாங்க.. ஆனா இப்போ பார் எவனோ எவன் கால்லயோ விழுந்து என் தலையில இடிய இறக்கிட்டான்…” என்று வருந்த,

‘பேப்பர் போட்டேன்…’ என்று அலட்சியமாய் சொன்ன வஜ்ரா,

‘நான் லீவ் கொடுத்திட்டேன்…’ என்று இறுமாந்து சொன்ன வஜ்ரா, அவனா இவன் என்று யோசிக்க வேண்டியதாய் இருந்தது..

இப்பொதும் அப்படிதான் தூக்கி எறிந்திருப்பான், நீ என்னடா என்னை வேண்டாம் என்று சொல்வது என்று.. ஆனால் அவன் வாழ்வில் பெண்ணொருத்தி வந்துவிட்டாள். வாழ்வில் மட்டுமில்லை அவன் மனதிற்குள்ளும்.. அது தான் அவனை இப்படி ஆட்டி படைத்தது.. அவனது இயல்பில் அவனால் இருக்க முடியவில்லை..

“சரி வா வீட்டுக்கு போலாம்…” என்று ராஜேஷ் இழுக்க,

“வீட்டுக்கா.. அங்க வந்து நான் என்னடா சொல்வேன்… வேலை போச்சுன்னா…” என,

“சொல்லாம இருக்க முடியுமா…” என்று ராஜேஷ் கேட்க,

“நோ நோ இது விழியாச்சிக்கு தெரியவே கூடாது…” என்றான் வேகமாய்..

“பின்ன… பின்ன எப்படி சமாளிப்ப..??”

“அதுக்குள்ள எப்படியும் வேலை தேடிரனும்டா…”

“அதுவரைக்கும்…???!!!!”

“சமாளிக்கணும்…” என்றவன் முகத்தில் சமாளித்தே ஆகவேண்டும் என்ற உறுதி பிறந்தது..

பெண்களுக்கு எப்போதுமே முதல் ஹீரோ அவரவர் அப்பா தான்.. ஆனால் கல்யாணம் ஆனா புதிதில் ஹீரோ என்றால் அது அவரவர் கணவன்மார்கள் தான்.. அதிலும் ஆண்களை கேட்கவும் வேண்டுமா, எத்தனை ஹீரோயிசம் காட்ட முடியுமோ அத்தனையும் காட்ட தோன்றும்..

அப்படியிருக்கையில், உத்தியோகம் புருஷலச்சணம் என்று நினைத்திருப்பவர்களுக்கு இதை எப்படி சொல்ல முடியும்..

வீட்டுக்கு வந்த பின்னேயும் கூட வஜ்ரவேலால் மலர்விழியை தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.. மனம் பதைபதைத்தது.. தன்னை மீறி எதுவும் சொல்லிவிடுவோமோ என்று..

அவளை நேருக்கு நேர் பார்க்கவே தவிர்த்தான்.. தவித்தான்.. ஆனால் அவளோ,

“ஹப்பா வந்துட்டீங்களா.. செம டென்சன் ஆகிட்டேன்.. போனை முதல்ல சார்ஜ் போடுங்க.. எத்தனை டைம் கால் பண்றது… உங்க நம்பர் வேற என்கிட்டே இல்ல.. ராஜேஷ் அண்ணா வரவும் அவர்கிட்ட தான் வாங்கினேன்.. சங்கடமா போச்சு..

ஆமா மதியம் என்ன சாப்பிடீங்க..??? முதல்ல சாப்பிட்டீங்களா இல்லையா…?? எனக்கு அது வேற கவலை…” என்றவள் பேசிக்கொண்டே போக, அவள் அத்தனை வேகமாய் பேசுவதிலேயே தன்னை மிகவும் தேடியிருப்பாள் என்று தோன்றியது..

அவளிடம் மறைக்கிறோமே என்று இருக்க,  அவளோ, “போங்க முதல்ல குளிச்சிட்டு வாங்….” என்று அவனை துரிதபடுத்தி, அவன் குளித்து வரவும் பின் அவனுக்கு உணவு எடுத்துவைக்க, அதுவோ தொண்டையில் இறங்குவேனா என்றது..

“என்ன இப்படி சாப்படுறீங்க..?? அங்க ஊர்ல எல்லாம் கைக்கும் வாய்க்கும் சண்டை போடுறது போல சாப்பிட்டீங்க..இப்ப என்ன.. சமையல் நல்லா இல்லையா…” என்று அவள் கேட்ட விதத்தில், அந்த நிலையில் கூட அவனுக்கு லேசாய் புன்னகை எட்டி பார்த்தது..

“ஹ்ம்ம் இப்படி சிரிச்சா தான் என்னவாம்… எப்போ பார் முகத்தை உர்ருன்னு வச்சிட்டு…” என்று நொடித்து கொண்டே போனவளை கண்கள் இமைக்காமல் பார்த்தான்..

‘இவளிடம் சொல்லிவிட்டால் என்ன… சொல்லிவிடேன்… என் பாரத்தை கொஞ்சம் இறக்கேன்…’ என்று அவன் மனம் கெஞ்சியது..

ஆனால் அவன் மனதின் இன்னொரு பகுதியோ, ‘சொல்ல போறியா… போச்சு போச்சு.. காலையில தான் ஒரு விஷயத்துக்கு விளக்கம் கொடுத்த.. இப்போ இப்படி சொன்னா உன்னை என்ன நினைக்க மாட்டா… அவ்வளோ தான்.. முதல்ல வேலையை தேடி எல்லாம் சரி பண்றதை பார்…’ என்று சொல்ல, அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..

அடுத்து மலர்விழி வந்து ஏதாவது கேட்டாள் என்றாள் நிச்சயம் வஜ்ரவேல் வாய் திறந்து விடுவான். அது உறுதியாய் அவனுக்கே தெரிந்தது.. ஏனெனில் மலர்விழி முன் அவன் தன்வசம் எத்தனை வேகத்தில் இழக்கிறான் என்பது அவனே உணர்ந்திருந்தான்..

‘நோ… நோ… இப்போதைக்கு எதுவும் சொல்ல கூடாது… எதுன்னாலும் கைல ஒரு வேலை வரவும் தான் சொல்லணும்… போதும் போதும்.. இப்போதான் என்னை நல்லவிதமா நினைக்கிறா… இதையும் சொல்லி கெடுத்துக்க வேணாம்…’ என்று எண்ணியவன்,

“எனக்கு தலை ரொம்ப வலிக்குது… நான் தூங்குறேன்…” என்று சொல்லிவிட்டு போய் படுத்துக்கொண்டான்..

ஆனால் உறங்கவில்லை, சிறிது நேரத்தில் மலர்விழி வந்தது, படுத்திருக்கும் இவனருகில் வந்து, மெல்ல தலையை கோதிவிட்டு, பின் அவளும் படுத்து எல்லாம் அவன் கண்கள் மூடியிருந்தாலும் மனம் உணர்ந்துகொண்டு தான் இருந்தது.   

தொண்டை அடைப்பது போல் இருந்தது வஜ்ரவேலுக்கு.. எப்போதுமே இப்படி ஒரு நிலையில் அவன் வருவான் என்று கனவில் கூட நினைக்கவில்லை.. ‘எப்படியாவது அடுத்த மாசம் குள்ள ஒருவேளையில் உட்கார்ந்திடனும்…’  என்று மனதில் உறுதி பிறக்க, கண்களை மூடினான்.

மறுநாளில் இருந்து காலையில் சீக்கிரமே உண்டு கிளம்பிடுவான்.. மலர்விழி நினைத்ததெல்லாம் வேலைக்கு தான் செல்கிறான் என்று நினைத்தாள்.. ராஜேஷும் நண்பன் வாழ்வில் வேறு எந்த குளறுபடியும் வரக்கூடாது என்று எண்ணி, அமைதியாய் இருந்தான்.

“வேலை எல்லாம் இருக்கட்டும்… சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வாங்க..” என்று சாப்பாடு பேக்கை கையில் கொடுத்து கீழே வந்து ‘டாட்டா’ காட்டும் மலர்விழியை காணும் போதெல்லாம் மனம் திக் திக்கென்று இருக்கும் வஜ்ரவேலுக்கு..

‘இவளுக்காகவாது சீக்கிரம் ஒரு வேலை வேணும்..’ என்று தோன்ற, எங்கெங்கே எல்லாம் வேலை வாய்ப்பு என்று கேள்வி படுகிறானோ அங்கேயெல்லாம் ஏறி இறங்கினான்..

ஆனால் அத்தனை எளிதில் எதுவும் கிடப்பதாய் இல்லை..

‘திடீரென்று ஏன் வேலையை விட்டீர்கள்…’

‘அப்போ வேறு நல்ல சம்பளம் என்றால் இங்கேயும் வேலை விடுவீர்களா…’

‘உங்க தகுதிக்கு ஏத்த வேலை இங்கே இல்லை…’

இதுபோல எல்லாம் சொல்லி அவன் திருப்பி அனுப்பப்படும் போது அத்தனை கோவம் வந்தது வஜ்ரவேலுக்கு.. ஆனால் தவறு அவன் மீது தானே.. பொருத்துகொண்டான்..

“நான் வேணா, நம்ம ஹெட் கிட்ட பேசவாடா…” என்று ராஜேஷ் கேட்க,

“ம்ம்ச் நானே பேசிட்டேன் டா… அவர் த்ரீ மன்த்ஸ் வெய்ட் பண்ணு சொல்றார்.. அதுவும் உறுதியா சொல்லல…” என்றான் முகத்தை தூக்கி..

“சரி என்ன செய்யலாம் இருக்க…???”

“அக்கவுன்டல இருக்க பணம் ஒரு த்ரீ மன்த்ஸ் வர தாங்கும்… பாப்போம்…” என்றவன் வீட்டிற்கு சென்றுவிட்டான்..

இரண்டு வாரமாக இப்படிதான் நாட்கள் சென்றுகொண்டிருக்கிறது.. வேலைக்கு செல்கிறான் என்று அவள் இருக்க, அவளுக்கு தெரியாமல் வேலை தேடுவதும், வேலைக்கு சென்று வந்தது போல் பாவனை காட்டுவதும் வஜ்ரவேலுக்கு சிரமமாய் இருந்தது..

அதிலும் மலர்விழி அவனை கேள்வியாய் பார்க்கும் போது, மனம் அத்தனை துடித்தது.. அனைத்தையும் சொல்லி அவளை இறுக கட்டி, அவள் மடியில் தலை புதைத்து, தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிட துடித்தது அவனுள்ளம்..

ஆனால் முடியவில்லை…

அன்றும் அப்படி அவள் வருவதற்கு முன்னே கண்களை மூடிக்கொண்டு படுத்துவிட, மலர்விழியோ, “தூங்கிட்டீங்கள…??” என்று அவன் கரங்களை மெல்ல தொட,

“ம்ம் சொல்லு விழியாச்சி…” என்றான்..

“நாளைக்கு இருந்து நான் வேலைக்கு போகணும்…” என, படுத்திருந்தவன் படக்கென்று எழுந்து அமர்ந்து விட்டான்..

‘ஒருவேளை நமக்கு வேலை இல்லைன்னு தெரிஞ்சு இவ வேலைக்கு போகணும் சொல்றாளோ…’ என்று தோன்ற, இருதயம் வேகமாய் அடிக்க தொடங்க, அவன் கண்களோ அதனினும் வேகமாய் மலர்விழியின் பார்வையை அலசியது..

“என்.. என்னங்க…” என,

“என்ன திடீர்னு வேலைக்கு…” என்றான் எதும் வெளிக்காட்டாமல்..

“திடீர்னு எல்லாம் இல்லை… கள்ளக்குறிச்சி ஸ்கூல்ல தானே பார்த்திட்டு இருந்தேன்… மேரேஜ் பிக்ஸ் ஆகவும் ரிசைன் பண்ணிட்டேன்… அப்போதான் சரி சென்னை தானே போக போறோம் அங்க ஸ்கூல் வேக்கன்சி இருக்கான்னு பார்த்தப்போ என் பிரன்ட் அவ ஸ்கூல்ல இருக்குனு சொன்னா…” என,

‘அப்பாடி… உண்மை தெரியலை…’ என்று நிம்மதி அடைந்தாலும், அவள் வேலைக்கு சென்று இவன் வெட்டியாய் சுற்றுவதா என்று தோன்றியது.. ‘அதெல்லாம் ஒன்னும் வேணாம்…’ என்று பட்டென்று சொல்ல வாய் திறந்தவன், அவள் முகத்தில் தோன்றும் மகிழ்வை பார்த்து, இது அவள் விருப்பம் அதை நான் எப்படி வேண்டாம் சொல்வது என்ற தயக்கமும் சேர்ந்தே விழைய,

“ஹ்ம்ம் நீ என்ன படிச்சிருக்க…” என்றான்..

“அதுவே உங்களுக்கு தெரியாதா…. B.Sc., B.Ed.. கெமிஸ்ட்ரி..” என்றாள் புருவம் தூக்கி..

“கெமிஸ்ட்ரியா.. கஷ்டமாச்சே…” என, என்னவோ அவனுக்கு அவளோடு கொஞ்ச நேரம் பேசவேண்டும் போல் இருந்தது.

“இஷ்டப்பட்ட எதுவுமே கஷ்டமில்லை…” என்று அவள் சிரித்தபடி சொல்ல, அவள் சொன்னது என்னவோ அவனுக்கே சொன்னது போல் இருந்தது..

இவளோடு வாழும் வாழ்வு எனக்கு பிடித்திருக்கிறது.. மிக மிக இஷ்டமாய் இருக்கிறது..  ஆகையால் இதில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கி தாண்டி செல்வேன் என்று மனத்தில் அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது..

அன்றிலிருந்து அப்படிதான்..

அவள் காலையிலேயே தயாராகி வேலைக்கு கிளம்புவாள், அவனும் அவளுக்கு வீட்டு வேளைகளில்  கொஞ்சம் உதவிகள் செய்து, பள்ளியில் இறக்கியும் விட்டு அவன் வேலை தேடும் படலத்திற்கு செல்வான்.. அன்றும் அப்படிதான் மலர்விழி கிளம்பலாமா  என்று கேட்க, இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணா மூச்சி ஆட்டம் என்று தோன்றியது வஜ்ரவேலுக்கு..

 

 

 

Advertisement