Advertisement

                                  விழி – 5

ஒருவழியாய் சென்னை வந்தாகிவிட்டது.ஆனால் அதற்குள் வஜ்ரவேலுக்கு விழிப்பிதுங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்..

“இதே கேள்வியை நான் கேட்கவா…” என்று மலர்விழி சொல்லவும் அவனுக்கு கோவம் வந்தது என்னவோ உண்மை தான்.. ஆனால் கோவம் அவள் மீது அல்ல, அவன் வீட்டினர் மீது..

திருமணம் பற்றி மட்டும் யோசித்தார்களே தவிர, அதன் பின் என்ன என்று யோசித்தார்களா என்று அத்தனை கோவம்.. ஆனால் தங்கவேல் அனைத்தும் ஏற்பாடு செய்திருக்கிறார் என்று அதன் பின்னே தான் அவனுக்கு தெரிய வந்தது. ஏற்பாடு செய்தார் ஆனால் மகனிடம் ஒருவார்த்தை கேட்டிருக்க வேண்டும். அதை அப்போதும் செய்யவில்லை..

அவனை ஏன் இதற்கெல்லாம் தொல்லை செய்துகொண்டு என்று தனக்கு தெரிந்தவர்கள் மூலமாகவே ஒரு வீடு ஏற்பாடு செய்திருந்தார்.   

“எதுவுமே என்கிட்டே சொல்லாதீங்க… எல்லாம் நீங்களே செய்றதுன்னா பின்ன நான் எதுக்கு…” என்று மறுநாளே காலையில் ஆரம்பித்துவிட்டான்..

மலர்விழி எதையுமே காதில் வாங்கவில்லை.. அவன் பாடு அவன் வீட்டினர் பாடு.. என்று ஒதுங்கியே நிற்க, அவளும் தான் வேறு என்ன செய்ய முடியும்.. மலர்விழி அப்பா அம்மா வந்து சீர் கொடுத்து விட்டு போயினர்..

“இவ்வளோ திங்க்ஸ் எல்லாம் வேணாம்… இந்த அண்டா, இவ்வளோ பெரிய பானை இதுக்கெல்லாம் அங்க வேலையே இருக்காது.. தேவையானது மட்டும் எடுத்து வை… பிளாஸ்டிக் குடம் ரெண்டு போதும்.. கேன் வாட்டர் தான் வரும்..”  அது இதென்று வஜ்ரா சொல்ல, அதற்கு  ஏற்றவகையில் அனைத்தையும் பிரித்து போட்டு தேவையானதை மற்றும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்..

வஜ்ரவேல் அவன் அப்பாவோடு பேசுவது காதில் விழத்தான் செய்தது ஆனாலும் இவள் முகத்தில் இருந்து எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

“நீ இதெல்லாம் ஒன்னும் கண்டுக்காத…” என்று அலமேலு சொல்ல,

“சரி பாட்டி…” என்றவள், தன் வேலையை தொடர்ந்தாள்., அவளுக்கு துணையாய் அவள் மாமியாரும், சின்ன மாமியாரும் இருந்தனர்.

“ப்பா.. நீங்க சொல்ற வீட்டுக்கு மாச வாடகையே இருபதாயிரம் கிட்ட.. வாங்குற சம்பளத்துல பாதி நெருக்கி அதில போனா மீதம் என்ன செய்றது.. முதல்ல என்னை கேட்காம ஏன் இப்படி பண்றீங்க…” என,

“டேய் அதுக்காக புறாக்கூண்டு கணக்கா வீடு பாக்க முடியுமா..” என்று தங்கவேலு சொல்ல,

“ம்ம்ச்.. ஏன் உங்களுக்கு நான் சொல்றது புரியலை…” என்று சலித்தான் வஜ்ரா..

இருக்காதா பின்னே, எல்லாமே அவர்கள் விருப்பம் தான் எனில், பின் அவன் எதற்கு.. கல்யாணம் தான் இப்படியானது என்றால், அடுத்து குடியேற போவதிலும் இத்தனை குழப்பம்..

முதலில் அவன் கையில் இப்போது வேலையில்லை.. புது வேலை தயாராய் இருக்கிறது தான்.. ஆனால் போனதுமே சம்பளம் வந்துவிடுமா என்ன?? ஏற்கனவே பேப்பர் போட்டதில் இருந்து சம்பளம் இல்லை.. இதெல்லாம் தோன்ற தான் வஜ்ரவேல் சலிப்படைந்தான்..

“இப்ப நீ முடிவா என்ன சொல்ல வர்ற..??” என்று தங்கவேல் கேட்க,

“நீங்க பார்த்திருக்க வீடு வேணாம்…” என்றவன் அடுத்து ராஜேஷிற்கு அழைத்தான்..

ஊருக்கு வந்ததில் இருந்து இப்போது தான் அழைக்கிறான். இதுவரை எதுவுமே அவனிடம் சொல்லவில்லை..

“சொல்லுடா நல்லவனே.. ஊருக்கு போய் இப்போதான் என் நியாபகம் வந்ததா…” என்று ராஜேஷ் ஆரம்பிக்க,

“டேய் நான் சொல்றத கேளு.. நம்ம மாடி போர்சன் காலியா இருக்குல.. ஹவுஸ் ஓனர் கிட்ட பேசு… இப்போவே… நானும் அடுத்து கால் பண்றேன்…” என,

“டேய்.. என்ன சொல்ற.. போன் எதுவும் மாத்தி போட்டியா…???” என்று ராஜேஷ் குழம்ப,

“டேய் சொன்னதை செய்.. வந்து பேசுறேன்… அந்த வீட்ட பேசி முடி… அட்வான்ஸ் கைல இருந்தா கொடு.. இல்லை நானே பேசுறேன்…” என்றவன், அடுத்து அவன் ஹவுஸ் ஓனருக்கு அழைக்க, விபரம் சொல்லி தனக்கு அந்த வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டு ராஜேஷ் வந்து பேசுவான் என்றும் சொல்லி உறுதிபடுத்தி பின்னே அழைப்பை வைத்தான்..

“நான் இருக்க வீட்டுக்கு மாடில தான்.. நீங்க சொன்ன புறாக்கூண்டு எல்லாம் இல்லை.. டபிள் பெட்ரூம் தான். ரொம்ப பெரிய வீடெல்லாம் இல்லை.. அளவான வீடு, வாடகை கம்மி… எங்களுக்கு அது போதும் இப்போதைக்கு…” என்றவன் அதோடு பேச்சை முடித்துவிட்டான்.

ஏனோ வஜ்ராவிற்கு மனம் ஒருவித பரபரப்பில் இருந்தது. சென்னை வந்து சேரும் வரையிலும் அப்படிதான் இருந்தது.. வந்த பின்னும் அப்படித்தான் இருந்தது.. எல்லாமே சரியாய் நடப்பதாகவும் இருந்தது, இல்லை எதுவும் சரியில்லை என்பது போலவும் இருக்க, இருவேறான மன நிலையில் அவன் தான் தவித்தான்.

இவர்களை குடி வைக்க வீட்டிலிருந்த அனைவருமே கிளம்ப, வேண்டவே வேண்டாம் என்றான் வஜ்ரவேல்.

“உங்களை யாரையும் நான் வரவேணா சொல்லலை.. ஆனா வீடு சின்னது… இத்தனை பேர் அங்க உட்கார்ந்தா கூட மூச்சு முட்டும்… இப்போ எங்க கூட விழியாச்… ம்ம்ச்.. மலர்விழி அப்பா அம்மா வரட்டும், அடுத்து அடுத்து நீங்க வாங்க..” என்று சொல்ல,

‘ஐயோ இவன் சொல்கிறான்… யாரும் தப்பா நினைக்க போறாங்க…’ என்று மலர்விழி அதிர்ந்து பார்க்க, ஆனால் அங்கே யாருமே அதை பெரிதாய் நினைத்தது போல தெரியவில்லை.

“இப்போவாது பொறுப்பா பேசுறானே…” என்றபடி தங்கவேலு நகர்ந்துவிட, மணிமேகலை தான் மகனை பிடித்துகொண்டார்..

“அப்படி என்னடா கோவம்…” என,

“இப்போ நீங்களாம்மா…” என்றான் சலிப்பாய்.

“எனக்கு புரியுது இல்லைன்னு சொல்லல.. அதுக்கு இப்பவும் இப்படி எரிஞ்சு விழுந்தா எப்படி… நாங்களும் ஒன்னும் உனக்கு இப்படி அவசரமா கல்யாணம் பண்ணனும்னு நினைக்கல.. சூழ்நிலை. உனக்கு சொன்னா நீ சம்மதிக்க மாட்ட.. அதான் சொல்லலை.. அதுவுமில்லாம நேரம் காலம் கூடி வந்தா எல்லாம் தானா நடக்கும்..

அவசரத்துல ஏற்பாடு பண்ண கல்யாணம்னாலும், உனக்கு எதிலையும் குறைய நாங்க பார்த்திடலை.. எங்கக்கிட்ட காட்ற கடுப்பெல்லாம் உன் பொண்டாட்டிகிட்ட காட்டாத.. வெடுக்கு சடுக்குன்னு பேசுறதை இதோட விட்று..” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

வஜ்ரவேல் அப்படியே தான் நின்றிருந்தான். எதுவும் பேசவில்லை.. மலர்விழியிடமும்.. அறைக்கு வந்தவன் அவனது பொருட்கள் சிலதை எடுத்து வைக்க, அப்போது தான் மலர்விழியும் கேட்டாள்,

“என்ன டென்சன் உங்களுக்கு…” என்று..

“என்ன டென்சன்…??”

“இல்ல எப்பவுமே ஒரு டென்சன்ல பேசுறது போலவே இருக்கே… அதான் கேட்டேன்…”

“டென்சன்.. அதெல்லாம் எதுமில்ல.. என்னை ஒரு வார்த்தை கேட்கணுமா இல்லையா.. இப்படி அவங்களா ஒரு முடிவு பண்ணா எப்படி…” என, அவன் முகத்தில் கலவையான உணர்வுகள். ஒருவித தவிப்பும் இருந்தது..

“ஹ்ம்ம் நான் ஒன்னு சொல்லட்டுமா…” என்று மலர்விழி கேட்க,

“ம்ம்…” என்றவனும் என்ன சொல்ல போகிறாள் என்று பார்க்க,

“நீங்க காலேஜ்ல இருந்து ஹாஸ்ட்டலா…” என்று கேட்க,

“ஒன்னு சொல்லவான்னு கேட்டிட்டு, இப்போ கேள்வி கேட்கிற…” என்று கேட்டான்..

“ம்ம்.. பதில் சொல்லுங்க…” என்று அவனருகே அமர, அவள் தன்னோடு இப்படி இயல்பாய் பொருந்தி போவது அவனுக்கு மனதில் ஒரு அமைதி கொடுத்தது..

அவன் முகம் சுளித்தாலும் அந்த நேரத்தில் பதிலுக்கு பதில் சொல்கிறாளே தவிர, மனதில் ஒன்றும் வைப்பது இல்லை. பிடிவாதமாய் அதையே பிடித்து தொங்காமல், சாதாரணமாய் இருப்பது அவனுக்கு வியப்பாய் இருந்தது..

ஏனெனில் அவன் அப்படி இல்லையே..   

“ம்ம் ஆமா ஹாஸ்ட்டல் தான்…”

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க… நீங்க இன்னும் உங்க வீட்ல உங்களை உணர்த்தலை..” என,

“என்ன சொல்ற… உணர்த்தலைன்னா.. எப்படி புரியலை…” என்று புருவத்தை சுளிக்க,

“உங்க குணம் அதாவது நான் புரிஞ்ச அளவில, கொஞ்சம் வேகமா பட்டுன்னு பேசுற குணம்.. ஆனா மனசில எதுவும் இருக்காது.. அதையும் தாண்டி ஒருவிசயம்னா நீங்க இப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு உங்களுக்குன்னு ஒரு நேச்சர் இருக்குமில்லையா, அதை நீங்க உங்க வீட்ல உணர்த்தலை.. ” என, லேசாய் அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது..

உண்மை தானே..

“எஸ்.. இந்த கல்யாணமே எடுத்துக்கோங்க, உங்களுக்கு லாஸ்ட் நேரத்துல தான் சொன்னாங்க, வேற வழியே இல்லாம தான் நீங்க சரி சொன்னீங்க.. ஆனா லாஸ்ட் நேரம்னாலும் நம்ம பையன்கிட்ட சொன்ன அவன் புரிஞ்சுப்பான் அப்படிங்கிற ஒரு எண்ணம் இங்க வரல யாருக்குமே…

இதில யார் தப்பு யார் சரி சொல்ல வரலை.. அதே போல தான் வீடு பார்த்ததும். உங்க சம்பளம் என்ன வரவு செலவு என்ன எதுவும் இங்க தெரியாது போல.  அதான் மாமா அவ்வளோ பெரிய வீட்ட வாடகைக்கு பார்த்திருக்கார்…. நீங்க முன்னாடியே சொல்லிருக்கணும் தானே, என்னோட வருமானம் இவ்வளோதான் அப்படின்னு…” என்று அவள் பொறுமையாகவே சொன்ன விதத்தில் அப்போது தான் அவனுக்கு புரிந்தது, தனக்கும் தன் வீட்டினருக்கும் நடுவில் எத்தனை பெரிய இடைவெளி என்று..

ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் அமர்ந்திருந்தான்.

“நான் ஒன்னு மட்டும் தான் உங்க கிட்ட எதிர் பார்க்கிறேன்… என்கிட்டயும் இப்படி இருந்திடதீங்க.. அவ்வளோதான்… என்னோட் வாழ்கைய உங்க கூட சேர்ந்து வாழ தான் வந்திருக்கேன், உங்களுக்கான ஸ்பேஸ் கண்டிப்பா உங்களுக்கு இருக்கும். அதே போல தான் நானும், ஆனா நமக்குன்னு இருக்க வாழ்க்கை நம்ம தான் வாழனும்….” என்று அவள் சொன்ன போது,

இவள் தானா ‘டைவர்ஸ் செய்யலாமா…’ என்று கேட்டாள் என்று ஆச்சர்யமாய் இருந்தது..

“ஆச்சர்யமா இருக்கு.. நீ தானா டைவர்ஸ் கேட்டன்னு…” என,

“நான் அப்படிதான், என் முன்னாடி நீங்க எப்படியோ அப்படியே தான் நான்.. ஆனா நம்ம குணத்தையும் தாண்டினது நம்ம விருப்பம்… நமக்கு பிடிக்கவே பிடிக்காதுன்னு நினைச்சிருப்போம் ஆனா அது தான் நம்மளுக்கு ரொம்ப பிடிக்கும்.. அது போல தான் எல்லாமே…” என்று சொல்ல,

‘உன்னை போல…’ என்று நினைத்துகொண்டான் சொல்லவில்லை.. 

இப்படியாக அடுத்த நாளில் ஒருவழியாய் சென்னையும் வந்து. மேல் வீட்டில் சாமான்கள் அனைத்தும் இறக்கிவிட்டு பால் காய்ச்சி,  ஓரளவு அனைத்தையும் ஒழுங்குபடுத்தி உட்கார, மாலை ஆகிவிட்டது.. அடுத்து ராஜேஷ் வந்துவிட, அவன் முகத்தில் பலத்த அதிர்ச்சி தெரிந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் நல்லவிதமாய் பேச, மலர்விழிக்கு நல்ல நண்பனை தன் கணவன் கொண்டுள்ளான் என்று தோன்றியது..

அவளது குணம் அப்படி.. யாரையும் கண்டதும் இவர்கள் இப்படித்தான் என்று சரியாய் எடை போட்டு விடுவாள். வஜ்ரவேல் புகைப்படம் பார்த்ததுமே கொஞ்சம் முசுடோ என்று தோன்றியது, அதுவே உண்மையாகிவிட, அவளுக்கு அது பெருத்த அதிர்ச்சியாக எல்லாம் இல்லை..       

 “அண்ணா உங்க மேல இவர்க்கு ரொம்ப பாசம்…” என்று ஆரம்பித்தாள் மலர்விழி.. முகத்தில் அப்பட்டமாய் கிண்டல் தெரிய,

‘அப்படியா சொல்லி வச்சிருக்கான் இவன்.. இருக்காதே…’ என்று சந்தேகமாய் பார்த்தான் ராஜேஷ்..

‘இவ என்ன புதுசா வந்தன்னைக்கே ஆரம்பிக்கிறா…’ என்று வஜ்ரவேல் பார்க்க,

“அட ஆமா.. தூக்கத்துல கூட உங்க பேர் தான் ராஜேஷ் ராஜேஷ்ன்னு…” என்று சொல்ல,

‘நிஜமாடா’ என்பது போல் ராஜேஷ் வஜ்ரவேலை பார்க்க, அவனோ

‘நான் எப்போ சொன்னேன்…’ என்பது போல் பார்க்க, அவளோ சத்தியம் செய்யாத குறையாய் முகத்தை வைத்திருந்தாள்..

“மலராச்சி போம்மா… போய் எல்லாருக்கும் குடிக்க ஏதாவது போடு…” என்று  ராஜேந்திரன் சொல்ல,

“சரிப்பா..” என்று அவளும் எழ, அடுத்து சில நேரத்திலேயே டீயோடு வந்தவள், அனைவருக்கும் கொடுத்துவிட்டு, ராஜேஷிடம் நீட்டியவள்,

“அண்ணா நீங்க அது என்ன ஆ.. ஆனியன் தோசை நல்லா சுடுவீங்கலாமே…” என்று தலைசரித்து கேட்ட விதத்தில், வாயில் வைத்த டீ புரையேற, விலுக்கென்று திரும்பிய ராஜேஷ் வஜ்ரவேலை தான் முறைத்தான்..

‘படுபாவி கல்யாணம் ஆனதை என்கிட்டே சொல்ல முடியலை.. ஆனா பொண்டாட்டி கிட்ட என்ன என்ன சொல்லியிருக்கான்…’ என்று முறைக்க,

‘இவ வாய் மூடவே மாட்டாளா… இப்படி கோர்த்து விடுறா…’ என்று அசடு வலிந்து பார்த்தான் வஜ்ரவேல்..

இதெல்லாம் அவனுக்கு புதிது.. சிரிப்பு கேலி இருக்கும் தான்.. ஆனால் இப்படி மாட்டிகொண்டு முழிப்பது ஐயோ என்று இருந்தது..

“அதுவும்.. அந்த தக்காளி சட்னி.. அது தானேங்க..” என்று அவனையும் கூட்டு சேர்த்த மலர்விழி, மீண்டும் ராஜேஷை நோக்க,

“வேற என்ன சொன்னான்மா…” என்றான் அடக்கிய கோவத்துடன்..

“வேறெதுவும் சொல்லலைன்னா.. உங்க கையாள வெங்காய தோசை சாப்பிட்டு கிளம்பின மகிமை தான், இவருக்கு கல்யாணம் கூடி வந்துச்சுன்னு சொன்னார்..” என்று மற்றுமொரு கதை பின்ன,

‘அடியே…’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு..

ஆனால் முடியவில்லை.. புது மனைவி, மாமனார் மாமியார் வேறு.. அவர்களோ இவள் பேசுவதை யாரும் கண்டுகொள்வதாய் தெரியவில்லை. அவர்கள் பாட்டில் அவர்கள் வேலையை பார்க்க, இவன் தான் மனைவிக்கும் நண்பனுக்கும் இடையில் முழித்தான்.

மலர்விழிக்கு வஜ்ரவேலை இப்படி மாட்டிவிட்டு முழிக்க வைப்பது மிகவும் ஜாலியாய் இருந்தது போல.. என்னவோ அவனை வம்பிழுக்கவே தோன்றியது.. பொதுவாய் அவன் அமைதியாகவே இருப்பதும் சில நேரங்களில் பட் பட்டென்று பேசுவதுமாய் இருக்க, அவளால் முடிந்த அளவு அவனை சகஜமாக்க முயன்றாள்.

ஐந்து ஆண்டுகளாய் தன்னை நினைவில் வைத்திருந்தான் என்பதே அவளுக்கு மனதில் ஒரு மகிழ்ச்சி கொடுத்திருந்தது.. நல்லதாய் நினைத்தானோ, இல்லை வேறப்படியோ, ஆனாலும் தான் அவன் மனதில் அவன் நினைவுகளில் இருந்தது அவளுக்கு நிறைய பிடித்திருந்தது..

‘என்னை என்ன நினைச்சீங்க’ என்று அவளும் கேட்கவில்லை, ‘நான் இதான் உன்னை பத்தி நினைச்சிருந்தேன்…’ என்று அவனும் சொல்லவில்லை.

மலர்விழி கூறியதற்கு ஒன்றும் சொல்லாமல், “டீ ரொம்ப நல்லாருக்குமா.. நான் கீழ போறேன்…” என்று கிளம்பியவன், “நீயும் இப்ப வர்ற…” என்பது போல் வஜ்ரவேலை பார்த்துவிட்டு சென்றான்.

வஜ்ரவேலுக்கும் ராஜேஷிடம் பேச நிறைய இருந்தது தானே. அவன் செல்லவும்

“விழியாச்சி…”என,

“உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது…” என்று முறைத்தாள்.

“என்னக்கு இப்படி தான் கூப்பிட பிடிச்சிருக்கு.. இப்படிதான் கூப்பிடுவேன்…”

“சரி போனா போகுது…” என்று பெருந்தன்மையாய் சொல்வது போல் சொல்ல,

‘இவள் நிஜமா டீச்சர் தானா…’ என்று தோன்றியது…

“நான் கீழ போய்ட்டு வர்றேன்..” என்று கிளம்ப, சரி என்றவள் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.

கீழே ராஜேஷ் தயாராய் காத்திருந்தான், இந்த வஜ்ரவேலை ஒரு கை பார்த்திடனும் என்று.

“வரட்டும்.. நல்லா நான் செஞ்சு கொடுத்ததை தின்னுட்டு.. பக்கி பைய.. பொண்டாட்டி கிட்ட ஒன்னுவிடாம சொல்லிருக்கான்.. ஆனா கல்யாணம் ஆனதை மட்டும் இவன் நேத்து தான் சொல்றான்… வரட்டும் இன்னிக்கு இருக்கு…” என்று வாசலை பார்க்க, அங்க வஜ்ரா நிற்க,

“வாங்க மாப்பிள்ளை சார்.. வாங்க வாங்க..” என,

“டேய்…” என்று பல்லை கடித்தான் வஜ்ரா..

“அப்புறங்க மாப்பிள்ள சார், கல்யாணம் மட்டும் தான் முடிஞ்சதா, இல்லை குழந்தை கூட இருக்கா…” என,

“டேய் ரொம்ப பண்ணாதடா…” என்றபடி அமர்ந்தவன், ஒன்றுவிடாமல் நடந்த அனைத்தையும் சொல்ல,

“டேய் அப்போ அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா…” என்று அதிர்ச்சி காட்ட,

ஆமாம் என்பது போல் வஜ்ரவேல் தலையை மேலும் கீழும் ஆட்ட,

“என்னடா சொல்ற… அப்போ நீ யார் கல்யாணத்தை நிறுத்தனும்னு போனியோ அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கியா…” என்று இன்னும் அதிர்ச்சி போகாமல் கேட்டான்..

“ஆமாடா… ஆனா மச்சி, விழியாச்சிக்கு என்னை அடையாளமே தெரியலை…” என,

“உங்க ஆச்சிக்கு கண்ணு மங்களா போயிருக்கும் வயசாகுதுல…” என்று ராஜேஷ் சொல்ல,

“டேய்… நான் என் பொண்டாட்டிய சொல்றேன்டா…” என்று மீண்டும் வஜ்ரா எரிச்சலுற,

“இப்படி ஒரு பேரா…??” என்று கேட்டான் ராஜேஷ்..

“பேர் மலர்விழி ஆனா நான் விழியாச்சின்னு தான் சொல்வேன்…” என, அவன் முகத்தில் லேசாய் தெரிந்த ஒரு புன்னகை கீற்றில், ராஜேஷிற்கே ஆச்சர்யம் தான்..

“இந்த மூஞ்சி தான் கல்யாணத்தை நிறுத்த போன மூஞ்சின்னு நம்பவே முடியலை…” என்று அவன் சொன்ன அடுத்த நொடி,

“யார் கல்யாணத்தை யார் நிறுத்த போறா…” என்ற மலர்விழி குரல் கேட்டு இருவருமே அதிர்ந்து திரும்ப, கைகளை கட்டி கதவில் சாய்ந்து நின்றிருந்தாள் மலர்விழி..             

 

 

Advertisement