Advertisement

விழி – 4 

“அம்மாடி மலர்விழி.. இந்தா இன்னிக்கு இந்த பட்டு சேலை கட்டு.. தேர் வரும் போது சாமி முன்னாடி நம்மளும் நல்லா செழிப்பா, பட்டும் நகையுமா நிக்கணும்.. அப்போதான் எப்பவுமே இப்படியே சந்தோசமா இருங்கன்னு சாமி சொல்லும்…” என்று ஊரில் இல்லாத கதை ஒன்றை அலமேலு சொல்ல,

அவர் சொன்னதில் சிரிப்பு வந்தாலும் ஒன்றும் வெளிக்காட்டாமல், “சரி பாட்டி…” என்று அவர் கொடுத்த பட்டுப்புடவையை வாங்கிக்கொண்டாள்.. வஜ்ரவேல் இதையெல்லாம் கவனித்துகொண்டு தான் இருந்தான்.

‘எப்படி வீட்ல எல்லார்கிட்டயும் ஒட்டிட்டா… வந்து முழுசா ஒருவாரம் கூட ஆகலை.. ஆனா எல்லாரும் அவகிட்டயே தான் பேசுறாங்க.. நான் இருந்தா கூட மலர் இல்லையான்னு தான் கேட்கிறாங்க…’ என்று எண்ணியவனுக்கு லேசாய் பொறாமை கூட துளிர் விட்டது..

குலதெய்வ பூஜை முடிந்து, மறுவீட்டு அழைப்பு முடிந்து, இதோ திருவிழாவும் தொடங்கிவிட்டது.. அன்று தான் தேர் உலா வரும் நாள்… விடிவதற்கு முன்னமே கோவில் முன்பு கூட்டம் கூடி விடும்.. சாதாரணமாகவே பெண்கள் தங்களை இது போன்ற திருவிழாவிற்கு அலங்கரித்து செல்லவே விரும்புவர்..

அதிலும் புதிதாய் திருமணமானவர்களை கேட்கவும் வேண்டுமா..??

கவனித்து பார்த்த அளவில் மலர்விழியும் அலங்கார பிரியையாகவே பட்டது..

‘இந்த பொண்ணுங்களுக்கு மேக்கப் போடுறது… நகை போடுறதுனா அலுக்கவே அலுக்காதா…’ என்று லேசாய் எரிச்சலுட்றவன், அதை அவளிடம் கேட்டும் விட்டான்..

கேட்க வைத்திருந்தாள்.. திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகியிருக்க, அவனிடம் நிறைய மாற்றம்.. அவனே உணர்ந்த மாற்றம்.. அது பிறருக்கு தெரிகிறதா என்று தெரியவில்லை.. இல்லை அத்தனை ஒன்றும் வஜ்ரவேலை யாரும் கூர்ந்து கவனித்தது போல் தெரியவில்லை..

ஆனால் மனதில் தோன்றுவதை அவனிடம் அப்படியே கேட்கும் மலர்விழி போலவே அவனும் இப்போது கொஞ்சம் மாறியிருந்தான்..

பகல் பொழுதெல்லாம் கோவில் திருவிழா அது இதென்று இருவருக்கும் பொழுது நகர்ந்துவிட, இரவு வரும் தனிமைகளில் எல்லாம் இவனுக்கு தான் அடித்துக்கொண்டது.. மலர்விழி இயல்பாய் இருந்தாள்.. நிறைய அவளாகவே பேசினாள்.. எதிராளி மனதை படிக்க தெரிந்தது போல..

அன்றும் அப்படிதான் திருவிழா முதல் நாள் தொடங்கியதும், மணிமேகலையும், கோமதியும் மலர்விழியை அழைத்து சற்று சங்கடமாகவே,

“கண்ணு.. சொல்றோம்னு தப்பா நினைக்காத.. கோவில் திருவிழா.. ஊரே காப்பு கட்டி விரதம் இருக்கு.. அதுனால..” என்று இழுக்க,

“அதுனால என்னத்தை…” என்றாள் இவளும்..

மணிமேகலைக்கு சொல்ல சற்று சங்கடமாய் இருக்க, கோமதி முகம் பார்க்க, அவரோ, “அதில்லம்மா.. இப்போதான் கல்யாணம் ஆச்சு.. அதான்… அது.. திருவிழா முடியுற வரைக்கும் கொஞ்சம் சுத்த பத்தமா இருக்கணும்…” என,

“ஓ.. இவ்வளோதானா…. இதுக்கு ஏன் அத்தை ரெண்டு பெரும் இவ்வளோ தயக்கம்…” என்றவளின் மனமோ உள்ளே

‘இல்லாட்டினா மட்டும் உங்க மகன் கொஞ்சிட்டு தான் மறுவேலை…’ என்று எண்ணியது..

இவர்கள் மூவரும் தனியே பேசுவதை பார்த்த வஜ்ரவேல், மலர்விழி அறைக்கு வரவும் என்ன என்பது போல் பார்க்க, அவளும் அதுபோலவே பார்த்தாள்..

“இல்ல நீ அம்மா சித்தி எல்லாம் என்ன பேசிட்டு இருந்தீங்க.. சீரியஸா என்னவோ சொன்னது போல இருந்துச்சே…” என, அவன் கேட்ட விதம் அவளுக்கு லேசாய் விளையாடிப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது..

வேண்டுமென்றே, சேலையை முந்தியை கையில் திருகியபடி, “அது… அது.. வந்து… நீங்க.. நேத்து… இந்த மாடிப்படி கீழ வச்சு என்னை கிஸ் பண்ணீங்களா.. அத அத்தை பார்த்திட்டாங்க போல.. அதான் இனிமே இப்படியெல்லாம் பண்ண கூடாது… வீட்ல இத்தனை பேர் இருக்காங்கன்னு ஒரே அட்வைஸ்..” என்று பாவம் போல் சொல்ல,

‘அம்மாடி….’ என்று வாயில் கை வைத்துவிட்டான்.. அவள் கண்களில் தோன்றிய கள்ளத்தனமும், இதழ்களில் திணறிக்கொண்டிருந்த புன்னகையும், இதெல்லாம் சும்மா என்று சொல்ல,  

“என்னா வாய்…???? பேச்சாடி பேசுற… ஒருநிமிஷம் திக்குன்னு ஆகிடுச்சு…” என்றவன், “உன்கிட்ட கேட்டேன் பாரு…” என்றான்..

அவன் முகம் போன போக்கை பார்த்து நன்றாகவே வாய்விட்டு சிரித்தவள், “என்ன பயந்துட்டீங்களா…??? ஆனா இதை தான் அவங்க சொன்னாங்க…” என, அவனுக்கு புரியவில்லை..

“நம்ம… கொஞ்சம் தள்ளியே நிக்கனுமாம்… திருவிழா இல்லையா அதான்…” என்று சொல்லி சிரிக்க, அவள் சிரித்தது பார்த்து அவனுக்கும் சிரிப்பு வந்தாலும் மனம் ஏனோ சங்கடமாகவும் உணர்ந்தது..

மலர்விழி மீது வெறுப்பெல்லாம் இல்லை.. சொல்ல போனால் முன்பிருந்த கோவம் கூட இப்போது காமடியாய் தெரிந்தது.. ஆனாலும் ஏனோ இந்த திருமணம், அதை முழுதாய் இன்னும் மனதில் பதித்துக்கொள்ள முடியவில்லை.. சட்டென்று இந்த பந்தத்தில் அவனை அவனால் பொருத்திக்கொள்ள முடியவில்லை..

“அது.. அது… சாரி.. நான்..” என்று தொடங்க,

“எதுக்கு இது இப்போ… நான் உங்களை எதுவும் நினைக்கலையே…” என,

“அதில்ல, அம்மா சித்தி அப்படி சொல்லவும் சங்கடமா இருக்கும் தானே…” என்று அவன் சொன்னபோது நிஜமாகவே அவன் முகம் வருத்தம் காட்டியது..

“ஹ்ம்ம் லேசா இருந்துச்சு தான்.. ஆனா எனக்கும் இந்த கல்யாணம் எப்படி நடந்துச்சு தெரியும் தானே.. சோ ஒன்னும் பிரச்சனை இல்லை…” என்றவள் கீழே சென்றுவிட்டாள்..

இது நடந்து மூன்று நாட்கள் ஆகியிருக்க, அதன்பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வஜ்ரவேல் அவளிடம் நன்றாகவே பேசினான்.. நிறைய பேசினான் என்று சொல்ல முடியாது, ஆனால் பேசுவதை நல்லவிதமாய் பேசினான்..

முட்டல் மோதல் இல்லை..

அலமேலு கொடுத்த பட்டுப்புடவை கட்டி, நகைகள் நிறைய போட்டு கண்ணாடி முன் நின்று பூ வைத்துகொண்டிருந்தாள்..

“நான் ரெடி ஆகி அரைமணி நேரமாச்சு.. நீ இவ்வளோ நேரமா கிளம்புற,..” என்று வஜ்ரவேலு சொல்ல,

“இதோ அவ்வளோதான்… லேட் ஆகலையே…” என்றபடி மலர்விழி திரும்ப, அவள் செய்திருந்த அலங்காரமும், அவள் திரும்பிய விதமும் அவன் மனதை நிறைத்தாலும், ஏனோ கேட்க வந்ததை கேட்டே ஆகவேண்டும் என்ற பிடிவாதம்..

“என்ன இது… இவ்வளோ நகை போட்டிருக்க… இப்படி ஜல் ஜல்ன்னு கொலுசு போட்டிருக்க.. என்ன இது…” என்று முகம் சுளிக்க,

“நல்லா இல்லையா…” என்று அவளும் முகம் சுனங்கத் தான் கேட்டாள்..

ஒரு நிமிடத்திற்கு முன் பளிச்சிடும் முகத்துடன் பேசியவள், இப்போது தன் பேச்சால் டல்லாய் பேச, அவன் மனமும் சட்டென்று ‘ச்சே இப்படியா பட்டுன்னு கேட்கிறது.. உனக்கு பேசவே தெரியலை வஜ்ரா…’ என்று தன்னை தானே நொந்துகொண்டவன்,

“அதில்ல.. நான் அதை கேட்கலை… இவ்வளோ தேவையா.. கொஞ்சம் லைட்டா வந்தா என்ன…” என்றான் தன்மையாகவே..

“ம்ம்.. ஏன் இப்படி வர்றது நல்லா இல்லையா…” என்று அவள் கேட்க,

“நான் அது சொல்லலை.. பொண்ணுங்க ஏன் எப்பவும் சேலை நகைன்னு இருக்கீங்க…” என, அத்தனை நேரம் மலர்விழி பிடித்து வைத்திருந்த அமைதி காணமல் போய்விட்டது..

“என்ன என்ன சொன்னீங்க…?? பொண்ணுங்க சேலை நகைன்னு இருக்கோமா..?? சரி அப்படியே இருந்தாலும் இதிலென்ன தப்பு…?? ” என்று புருவம் உயர்த்த,

‘அடுத்த கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டா…’ என்றே தோன்றியது அவனுக்கு.. ஒன்றும் சொல்லாமல் அப்படியே நிற்க,

“என்ன சைலன்ட் ஆகிடீங்க.. சரி இப்போ நான் சாதாரணமா ஒரு சேலை கட்டி நீங்க கட்டின தாலி மட்டும் போட்டிட்டு வரேன்.. எனக்கொண்ணும் இல்லை.. யார் கேட்டாலும் உங்களை தான் கை காட்டுவேன்.. நீங்க தான் பதில் சொல்லணும்…” என்றபடி போட்டிருந்த நகையை கழட்ட போக,

“ஹே ஹே இரு இரு.. வேணாம்… கழட்டாத…” என்று அவள் கழுத்தின் பின் பக்கம் கொக்கியில் இருந்த கையை பிடித்தவன்,

“வேணாம்.. கிளம்பு நேரமாச்சு…” என,

“நிஜமா இப்படியே வரவா…” என்று அவளும் அப்படியே நின்று கேட்க,

“அம்மா தாயி.. நீ இப்படியே வா..” என்று அவன் சொன்னதில் அவளுக்கு அவளது ட்ரேட் மார்க் சிரிப்பு வந்துவிட,

“ம்ம் அது…” என்று சொல்லி அவனோடு இறங்கியவள், “நகை பட்டு சேலை எல்லாம் தினமுமா போடுறோம்.. விசேச சமயங்கள்ல போடுறது தானே.. உங்களுக்கு எப்படி பைக் கார் இதுங்க மேல ஒரு விருப்பமோ.. அதுபோல தான் எங்களுக்கும்…” என்று சொல்ல,

அவன் முகம் அவள் சொல்வதை கவனிக்காது வேறேதோ சிந்திப்பது போல் இருக்க, “என்னங்க…” என்றவளை பார்த்தவன்,

“இந்த மாடி படிக்கு கீழ வச்சு தானே நான் உன்னை கிஸ் பண்ணதா அம்மா சொன்னாங்க..” என்று அவன் அசராமல் கேட்க,

மலர்விழி கண்கள் விரித்து, அப்படியே லேசாய் அதிர்ந்து நின்றுவிட்டாள்..

அவள் அப்படியே நிற்க, “நீ சும்மா சொன்ன.. ஆனா எனக்கு இப்போ அதை நிறைவேத்தனும் போல இருக்கு…” என, அவனுக்கே ஆச்சர்யம் தான்..

தானா இது  என்று…??

வஜ்ரவேலுக்கு தான் யாரிடமும் இப்படி தன்மையாய் பேசி பழக்கமே இல்லையே..

“என்… என்ன சொன்னீங்க..” என்று அவள் முழிக்க,

“டீச்சரம்மா இப்படி முழிக்க கூடாதே… நல்லா இல்லையே..” என்று சொல்லி சிரிக்க,

“ச்சி.. விளையாட்டா.. நான் கூட என்னவோ நினைச்சிட்டேன்..” என்றவள் படியிறங்க போக,

“நான் சீரியஸா தான் கேட்டேன் விழியாச்சி…” என்றான் வஜ்ரவேல் இறங்காமல்.

‘விழியாச்சி… இதென்ன புதுசா…’ என்பது போல் அவள் திரும்பி பார்க்க,

“உங்கப்பா மலராச்சின்னு சொல்றார்.. எல்லாம் மலர்விழி சொல்றாங்க.. நான் என்ன சொல்றது… விழியாச்சி நல்லா இருக்குல…” என,

“அப்பாக்கு அவங்க ஆச்சி மாதிரி நான் இருக்கேன்னு சொல்றார்.. உங்களுக்கு என்ன இப்போ…” என்று கேட்டாள்,,

“ஹ்ம்ம் எனக்கும் ஒரு சாயல்ல நீ என் பாட்டி மாதிரி இருக்க..” என,

“என்னது பாட்டியா…” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தவள்,

“இதெல்லாம் ஓவர் தாத்தா…” என,

“ஹா ஹா.. நீ என்னவேணா சொல்லிக்கோ இனி விழியாச்சி தான் சொல்வேன்…” என்றவன் அவளுக்கு முன் கீழே இறங்கி சென்று, முன்னே வரவேற்பறையில் இருந்து,

“விழியாச்சி… என்ன பண்ற இன்னும் சீக்கிரம் வா…” என்று கத்த,

வீட்டில் இருந்த அனைவருமே ‘என்னடா இது…’ என்று தான் பார்த்திருந்தனர்..

‘மானம் போச்சு…’ என்று தலையில் அடித்துக்கொண்டாலும், அவன் அப்படி அழைத்தது அவளுக்கு பிடித்து தான் இருந்தது.. சற்றே அசடு வழிந்து, அனைவரும் ஒரு பார்வை பார்த்து, கணவனை முறைக்க முடியாமல் முறைத்து, இது ஒரு கலவையான உணர்வு அவளுக்கு..

ஆனாலும் மகிழ்வாய் இருந்தது… இன்னும் இந்த வீடும், வீட்டு மனிதர்களும் நெருக்கமாய் தோன்றினர்..

ஒருவழியாய் அனைவரும் கிளம்பி கோவில் செல்ல, ஏற்கனவே கூட்டம் முட்டி மோதியது.. தேர் வரும் நேரம், அனைவரும் ஆவலோடு காத்திருக்க, சொல்லி வைத்தது போல், செல்லியம்மன் தேர், அய்யனார் தேர், மாரியம்மன் தேர் என மூன்று தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாய் வலம் வர, ராயப்பனூரே பக்தி பரவசத்தில் மூழ்கியது..

வழக்கமான தேர் திருவிழாவை விட மலர்விழிக்கு இந்த திருவிழா மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது போல் இருந்தது.. என்னதென்று தெரியவில்லை, மனதில் ஒருவித இதம் பரவ வஜ்ரவேலை காணும் போதெல்லாம் சிரித்தாள்..

‘எப்பவுமே இவளுக்கு இந்த சிரிப்பு ரெடியா இருக்கும் போல.. டக்குன்னு சிரிக்கிறா….’ என்று நினைத்தவன்,

“ஏன்டா தம்பி, உங்க மிஸ் சிரிப்பு டீச்சரா, சீரியஸ் டீச்சரா…” என்று அருகில் இருந்த ராகவனிடம் கேட்க, அவன் பேசுவதை கேட்டுகொண்டிருந்த கேசவனோ, ராகவன் பதில் சொல்லும்முன்,

“அண்ணி, உங்களை சிரிப்பு டீச்சரான்னு அண்ணா கேட்கிறாங்க…” என்று கத்தி சொல்ல, அவர்களை சுற்றி நின்றிருந்த சிலரும் என்ன என்பது போல் பார்க்க,

மலர்விழி, ‘இங்க வந்து என்ன இதெல்லாம்…’ என்பது போல் பார்த்துவிட்டு பின் தேர் பார்க்க திரும்பிவிட்டாள்..

“டேய் என்னடா பேசிட்டு இருக்கும் போதே இப்படி பண்ணிட்ட…” என, அதற்கு பதில் சொல்லாமல், ராகவனும் கேசவனும் சிரிக்க,

“இதென்ன நம்மளை பார்த்து எல்லாம் சிரிக்கிறானுங்க.. அப்படி காமடியாவா இருக்கோம்…” என்று முனுமுனுத்தவனை, பார்த்து “சாமி கும்பிடுங்க…” என்பதுபோல் சைகை செய்தாள் மலர்விழி.. 

‘நான் அரட்டறேன் சொல்லிட்டு இவ தான் என்னை ஒவ்வொரு நிமிசமும் அரட்டுரா…’ என்று நினைத்தவனுக்கு ‘டேய் வஜ்ரா நீயா டா இது…’ என்றுதான் தோன்றியது..

தனக்கு சுத்தமாய் பிடிக்கவே பிடிக்காது என்று நினைத்த ஒருத்தி தனக்கே மனைவியாய் வந்து, அதுவும் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை அவள் வசப்  படுத்துகிறாள் என்றும் உணர்ந்து, எதுவுமே செய்ய முடியாமல் இப்படி நிற்பது கூட அவனுக்கு சுகமாய் இருந்தது.

ஒருவழியாய் தேர் வலம் வந்து, அனைவரும் மீண்டும் கோவில் சென்று, அபிசேக ஆராதனை முடிந்து, அன்னதானம் உண்டு, திருவிழா வேடிக்கை பார்த்து என அனைத்தும் முடிந்து வீடு வந்து சேர, இரவு ஆகிவிட்டது..

வீட்டிற்கு வந்தபின்னும் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, வஜ்ரவேல் அப்போதும் அமைதியாகவே இருக்க,

“என்ன மச்சான் கல்யாணம் ஆகுற வரைக்கும் அவ்வளோ கோவமா இருந்தீங்க.. இப்போ கோவமா எனக்கான்னு இருக்கிறது மாதிரி இருக்கீங்க…” என்று லோகநாதன் கேட்க,

“அதானே நான் எங்க கோவப்பட்டேன்…” என்றான் வஜ்ரா..

“அதுசரி.. கேட்டது என் தப்பு தான்.. டீச்சரம்மா தோப்புக்கரணம் போட சொல்லிடுச்சோ” என்று கேட்க,

“அது மட்டும் தான் இல்லை…” என,

“ஓ.. பார்த்து இருங்க மச்சான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர்ன்னு கேள்வி பட்டேன்…” என்று லோகநாதன் எச்சரிக்க,

‘பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு…’ என்று வஜ்ரவேல் மனம் நினைத்ததை வெளியே சொல்லவில்லை..

மேலும் சிறிது நேரம் அனைவரோடும் பேசிவிட்டு, மேலே தங்கள் அறைக்கு வந்து மலர்விழி செய்த முதல் வேலை, அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் வைத்திருந்த நகைகளையும் எடுத்து நகை பெட்டியில் வைத்து,

“இதெல்லாம் அத்தை கிட்ட கொடுத்திட்டு வரேன்..” என்று சொல்ல,

“ஏன்…?? இப்போ என்ன???” என்றான் வஜ்ரா..

“இனி எதுக்கு இதெல்லாம்… ஊருக்கு இவ்வளோ கொண்டு போக முடியுமா… அதான்..” என,

“ஊருக்கா… எங்க?? எந்த ஊருக்கு…??” என்று வேகமாய் கேட்க,

“அட ஹனி மூனுக்கு, ஊட்டி போறோம்ல…” என்று சொன்னவள், அவன் முறைக்கத் தொடங்கவும்,

“சரி சரி சும்மா சொன்னேன்… சென்னை போறப்போ இதெல்லாம் எதுக்கு… நாளைக்கு இருந்து எல்லாம் பேக் பண்ணனும்…” என்று சொல்ல,   

அவள் ‘சென்னை..’ என்று சொன்ன பிறகு தான் வஜ்ரவேலுக்கு சென்னை நியாபகமே வந்தது. கூடவே தான் வேலை விட்டு வந்ததும் நினைவில் வர, அது கூட அவனுக்கு அப்போது பெரிதாய் தெரியவில்லை, புது வேலை ஒன்றிற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் பழைய வேலையை விட்டிருந்தான்..

ஆனால் வீடு ????

இவளோ என்னவோ அங்கே அனைத்தும் தயாராக இருப்பது போல் அல்லவா சொல்கிறாள் என்று தோன்ற,

“என்ன சொல்ற…???”என்றான்..

“என்ன சொன்னேன்.. எப்படியும் நம்ம சென்னை போகணும்ல… நாளைக்கு இருந்து பேக் பண்ணாதானே எல்லாம்.. உங்களுக்கும் எப்படியும் நிறைய நாள் லீவ் இருக்காதுல…” என,

“என்ன விளையாடுறியா…??” என்று கடுப்பாகவே கேட்டான்..

இதில் விளையாட என்ன இருக்கிறது என்பது போல் அவள் பார்க்க,

“சென்னை போக சென்னை போக சொல்ற, அங்க போய் எங்க நிக்கிறது.. வீதிலயா…” என்று கடிய,

அவன் திடீரென்று இப்படி பேசவும், லேசாய் அதிர்ந்த மலர்விழி, “நீ.. நீங்க அங்க வீட்ல தான் தங்கிருக்கீங்க.. அப்.. அப்படிதான் சொன்னாங்க..” என,

“நல்லா சொன்னாங்க.. ம்ம்ச்.. நான் தங்கிருக்க வீடு இந்த ரூம் அளவு கூட இருக்காது… அதும் நான் மட்டுமில்ல.. கூட என் பிரன்ட்டும் இருக்கான்…” என்று சொல்ல,

“இது… இது எனக்கு தெரியாதே…” என்று அவள் சொல்ல,

“என்ன தெரியாது… இல்ல என்ன தெரிஞ்சு நீ என்னை கல்யாணம் பண்ண…??” என்று கேட்ட கேள்வியில் அவளுக்கும் கோவம் தலை தூக்க,

“இதே கேள்விய நான் கேட்கவா..???” என்று அவனை நேருக்கு நேர் பார்த்து நின்றாள்..      

 

Advertisement