Advertisement

விழி – 3  

கதவு லேசாய் தட்டப்படும் சத்தம் கேட்க, அப்போது தான் குளித்து முடித்து, வெளி வந்தவள் வேகமாய் சென்று கதவு திறக்க, வெளியே கோமதியும், மணிமேகலையும் நிற்க,

“அத்.. அத்தை…” என்று விளித்தவள் இருவரையும் பார்க்க, அவள் முகத்தில் இருந்த பொலிவும், தெளிவும், கண்கள் லேசாய் படபடத்து கொண்டதும் எதிரே நின்ற இரு பெண்களுக்கும் என்ன உணர்த்தியதோ, தானாய் சிரித்துக்கொண்டவர்கள்,

“காப்பி கொடுக்க வந்தோம்… அவனுக்கு தூங்கி முழிக்கும் போதே கண்ல காப்பி தான் தெரியனும்.. இல்லாட்டி கத்துவான்…” என்று மணிமேகலை சொல்ல,

கோமதி கையில் இருந்த தட்டை வாங்கியவள், “கூப்பிட்டு இருந்தா நானே கீழ வந்திருப்பேன்ல அத்தை.. இதுக்காக ரெண்டு பெரும் மாடியேறி வரணுமா…” என்று கேட்டு சிரிக்க,

“ம்ம்.. இந்த சிரிப்பு தான்… எங்க எல்லாரும் உன்னை ரொம்ப பிடிச்சது.. பிள்ளைங்க இப்படிதான் சிரிச்ச முகமா இருக்கனும்..” என்று கோமதி சொல்ல, இன்னும் அவள் புன்னகை விரிந்தது..

“சீக்கிரம் தயாராகி வாங்க.. குலசாமி கோவிலுக்கு போயிட்டு இன்னிக்கே மறுவீட்டுக்கு போயிட்டு வந்திடுங்க… நாளைக்கு கொடிமரம் நடுறாங்க… நம்ம பூஜை தான் முதல்ல.. புது மருமக நாளைக்கு நீ தான் முன்னாடி நிக்கணும்…” என்று மணிமேகலை சொல்ல,

சரியென்று தலையை உருட்டியவள், அவர்கள் சென்றதும், கையில் இருக்கும் காப்பி தட்டை கட்டிலின் அருகே இருந்த மேஜையில் வைத்துவிட்டு, வஜ்ரவேல் முகம் பார்த்தாள்.

ஆழ்ந்த உறக்கம். தன்னை மறந்த நிலை.. அப்போது கூட முகம் லேசாய் சுளித்திருந்தது. எதையோ சிந்தித்தபடியே உறங்கியிருப்பான் போல.. புருவங்கள் இரண்டும் சுருங்கியிருக்க, அவளுக்கு லேசாய் புருவத்தி சுண்டிவிட வேண்டும் போல் வந்தது..

வகுப்பறையில் மாணவர்கள் தன்னை மீறி உறங்கிவிட்டால் இப்படிதான் செய்வாள்.. லேசாய் புருவத்தை சுண்டிவிடுவாள்.. அதன் பின் உறக்கமாவது இன்னொன்றாவது..

நேற்று தான் திருமணம் முடிந்திருந்தது.. மொத்தத்தில் இவனை பார்த்தே மூன்று நாட்கள்.. முதல் நாள் பரிசம்.. இரண்டாவது நாள் திருமணத்திற்கு என்று தாலி உருக்கினர்.. மூன்றாவது நாள் திருமணமே முடிந்து தடபுடல் விருந்தும் முடிந்து இதோ முழுதாய் ஒருநாளும் முடிந்துவிட்டது.

ஆனால் இந்த மூன்று நாட்களில் பேசியது என்பது அன்று பரிசம் போட்ட அன்று தான்.

“என்னை பிடிக்கலையா…?? இல்லை இந்த கல்யாணம் பிடிக்கலையா…??” என்று அவள் கேட்ட தினுசில், அவள் கண்களையே பார்த்திருந்தவனுக்கு அந்த நேரம் அவன் மனதில் இருப்பது எல்லாம் காணமல் போக,

அவளை பிடித்திருக்கு என்றும் சொல்லவில்லை, பிடிக்கவில்லை என்றும் சொல்லவில்லை, நேராய் முன்னே வரவேற்பறைக்கு வந்தவன், தங்கவேலுவிடம்,

“ஆக வேண்டியதை பாருங்கப்பா…” என, அவருக்குமே அப்போது தான் நிம்மதியாய் இருந்தது.

எங்கே கடைசி நேரத்தில் மகன் ஏதாவது குளறுபடி செய்துவிடுவானோ என்று மனதில் ஒரு எண்ணம் இருந்துகொண்டே தான் இருந்தது.. வஜ்ரவேல் வந்து இப்படி சொன்னதுமே அவ்வீட்டு பெண்களுக்கு கூட ஆச்சர்யம் தான்..

“அண்ணி.. என்ன சொல்லி எங்க அண்ணன் வாய ஆடைச்சீங்க..” என்று மகேஸ்வரி மலர்விழியை கிண்டல் செய்ய, ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடி தலைகுனிந்து கொண்டாள்.

அவளது பளீர் சிரிப்பு அப்போதும் கூட அவனை என்னவோ செய்தது..

‘இவ மட்டும் எப்படி எப்போ பாரு சிரிச்சுகிட்டே சந்தோசமா இருக்கா…??? நான் ஏன் இப்படி இருக்கேன்.. ச்சே.. இவளை பார்த்தாலே அடுத்து எனக்கு டென்சன் தான் வருது…’ என்று தனக்குள் முனக,

“மாப்பிள்ள வந்து பொண்ணுக்கு பொட்டு வைங்க…” என்று பெண் வீட்டு சார்பாய் யாரோ அழைக்க, மெல்ல எழுந்து நின்றவன், அதனினும் மெதுவாய் நடந்து போக,

“அண்ணா சீக்கிரம் போ.. எங்க மிஸ்க்கு எல்லாமே சரியா இருக்கணும்… இல்லை கோவம் வந்திடும்…” என்று ராகவனும் கேசவனும் அவன் காதில் கிசுகிசுக்க,

‘இவள்லா டீச்சரா… கடவுளே…’ என்று கடவுளை நொந்தபடி, கூடவே சேர்த்து தன் விதியையும் நொந்தபடி, அவளருகே சென்று அவள் நெற்றியில் குங்குமம் வைக்க, அப்போதும் விழிகள் நிமிர்த்தி அவன் முகத்தையே மலர்விழி பார்க்க, ஒருநொடி அவனும் தான் அப்படியே நின்றுவிட்டான்..

‘என்.. என்னவோ பண்றா… இவ நெஜமா கண்ல மை வைக்கல.. வேறெதுவோ வச்சிருக்கா..’ என்று அப்போவும் தோன்ற,

“வஜ்ரா… இந்த மோதிரம் போட்டு விடு…” என்று மணிமேகலை மோதிரத்தை  நீட்ட,

“அண்ணி நீங்க கொஞ்சம் எழுந்திருங்க..” என்று மகேஸ்வரி மலர்விழியை எழுப்பி நிறுத்த, அவளும் எழுந்து நிற்க, வஜ்ரவேல் அவள் கரம் பற்றி மோதிரம் போட்டுவிட்டான்..

‘அந்த கைகளை அப்படியே பிடிச்சுக்கோ….’ என்று அவன் மனம் சொல்ல, மலர்விழி அதற்குள் அவன் கரங்களில் இருந்து தன் கையை உருவிக்கொண்டாள்..

அதன்பின் நடந்தவை எல்லாம் வேக வேகமாய் நடந்துவிட, இதோ திருமணம் முடிந்து ஒருநாள் ஆகிவிட்டது.. அவனோ அயர்ந்த உறக்கத்தில் இருக்க, மலர்விழி வெகு நேரம் வரைக்கும் அவன் முகத்தையே பார்த்தவள்,

“இவரை போட்டோ பார்க்கும் போதே எங்கயோ பார்த்தது போல இருந்ததே… இதே ஊர்ல தான் நம்மளும் இருக்கோம்… ஆனா எங்க பார்த்தோம்…” என்று தெரியாமல் யோசிக்க,

காப்பி ஆறுவது வேறு அவள் கண்ணில் பட, “என்னங்க…” என்று மெல்ல எழுப்பினாள்.. அவனோ கண்களையே திறக்காமல்,

“தூங்க விடுறா ராஜேஷ்…” என்று முனங்கியபடி புரண்டு படுக்க,

“ராஜேஷா…!!!!!” என்று ஆச்சர்யமாய் பார்க்க, ராஜேஷ் தான் யாரென்றே தெரியாதே, தோளை குலுக்கிவிட்டு, ‘எந்திரிக்கும் போது எந்திரிக்கட்டும்…’ என்று தனக்குள்ளே சொல்லிகொண்டவள், சற்று தள்ளி காற்றாடிக்கு அடியில் நின்று தலை துவட்ட தொடங்கினாள்.

ஈர கூந்தலை முன்னே போட்டு துவட்டியவள், அதே வேகத்தில் கூந்தலை மொத்தமாய் பின்னே போட, ஏற்கனவே முகம் சுளித்து படுத்திருந்தவன் முகத்தில் ஒருசில நீர் துளிகள் விழ,

“ம்ம்ச்…” என்று முனங்கியபடியே கண் முழித்தவனுக்கு, மலர்விழி தான் தெரிந்தாள்..

கொலுசில் சிக்கியிருந்த சேலையை குனிந்து விடுவித்து கொண்டிருந்தவளின் கழுத்தில் இருந்த தாலி முன்னே விழுந்து ஆட, அது வஜ்ரவேல் கண்களுக்கு தவறாமல் பட்டது..

‘அடுத்த தேர் திருவிழால்ல நீ என்னை பார்க்கும் போது என் கழுத்துல தாலி ஏறியிருக்கும்…’ என்று அவள் என்றோ சொன்னது இப்போதும் நினைவில்  வர, நாளை இருந்து தான் தேர் திருவிழா என்பதும் நினைவில் வர, என்னவோ இந்த மலர்விழி சொல்வது எல்லாம் நடப்பது போல தெரிந்தது..

‘உன்னை ஒருத்தியும் திரும்பி கூட பார்க்க மாட்டா…’ என்றாள்.. அதுபோலவே நடந்தது..

இதோ அவள் சொன்னது போலவே தேர் திருவிழா முன்பே அவள் கழுத்தில் தாலி ஏறியிருக்கிறது…

‘இவளுக்கு எதுவும் சக்தி இருக்குமோ…’ என்று அவன் மனம் யோசிக்க, அவன் பார்வையோ அவள் முகத்திலேயே நிலைக்க, அவனுக்குமே அவள் முகம் பொலிவாய் இருப்பது போல் தோன்றியது.. இதற்கு எந்த ஒப்பனையும் இல்லை.. எவ்வித நகை அலங்கராமும் இல்லை..

கழுத்தில் வெறும் மஞ்சள் சரடில் கட்டிய தங்க தாலி மட்டுமே.. ஆனால் அதுவே அவன் மன உணர்வுகளை கிளற போதுமானதாக இருந்தது..

‘சொன்னது மாதிரியே அவ ஜெயிச்சுட்டா…’ என்று நினைக்க,

‘டேய் நீ என்ன லூசா… அவளுக்கு தாலி கட்டினதே நீதான்டா.. அப்படி பார்த்தா யாருமே தோத்து போகலை… ரெண்டுபேருமே ஜெயிச்சிருக்கீங்க…’ என்று அவன் மனசாட்சி வந்து ஆஜராக,

அடுத்து அவன் என்ன நினைத்தானோ,

“எந்திரிச்சுட்டீங்களா.. உங்களுக்கு பெட் காப்பி தானாமே.. அத்தை வந்து சொல்லி கொடுத்திட்டு போனாங்க..” என்று சொல்லி இதழில் ஒரு புன்னகையை தவழ விட்டவள், அவன் முன்னே காப்பி டம்ப்ளரை நீட்ட,

“ம்ம் தேங்க்ஸ்…” என்றபடி எழுந்தமர்ந்து வாங்கினான்..

அவன் குடிப்பதை பார்த்தவள், லேசாய் முகத்தை சுளித்து, “எனக்கெல்லாம் பல் விளக்காம பச்சை தண்ணி கூட உள்ள போகாது…” என, அவள் சொல்லிய விதத்தில் அவனுக்கே எப்படியோ போக, சட்டென்று காப்பியை வைத்துவிட்டவன், பாத்ரூமினுள் நுழைந்துகொண்டான்..

“அட இப்போ நான் என்ன சொல்லிட்டேன்…” என்று அவனுக்கு கேட்கும் படியே மலர்விழி கேட்டாலும், அவளும் பதில் எல்லாம் பார்க்கவில்லை..

இதுதான் அவள் குணம்.. கண்ணாடி போல.. எதுவுமே அவளுக்கு முன் நிற்பவர்களை பொருத்து.. சுமுகமாய் போகவேண்டும் என்றுதான் அவளும் நிற்பாள்.. ஆனால் அப்படியில்லை என்று தோன்றிவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவாள்..

மலர்விழியை பொருத்தவரைக்கும் இது முழுக்க முழுக்க பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்துவைத்த திருமணம்.. அப்படியிருக்க பெரிதாய் அவளுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை..  என்னதான் இவன் சென்னையில் வேலை என்றாலும் சொந்த ஊர் ராயப்பனூர் என்பதால் யோசிக்கவும் வேறென்றும் இல்லை..  

ஆனால் உண்மையை சொல்லவேண்டும் என்றால் அவளுக்கு வஜ்ரவேல் புகைப்படம் பார்த்து பிடித்தே இருந்தது.. புதிதாய் பார்ப்பது போல் என்றில்லாமல் ஏற்கனவே பார்த்த முகமாய் தெரிய, படிப்பு, வேலை குடும்பம் எல்லாம் சேர்ந்து சரி சொல்ல வைத்திருந்தது..

வஜ்ரவேல் வந்து திருமணம் வேண்டாம் சொல் எனவுமே, அவளுக்கு தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், திடீரென்று திருமணம் என்று சொன்னதனால் அப்படி சொல்கிறான் என்று.. ஆகையால் அவன் போங்கிலேயே விட்டு பிடிக்கலாம் என்று தான் இதோ இந்த மூன்று நாட்களாய் அவள் எதையுமே வெளிக்காட்டவில்லை.

அவன் வருவதற்குள் மலர்விழி தயாராகி நிற்க, வஜ்ரவேல் குளித்து முடித்து வந்தவன், முகத்தில் துண்டை வைத்து துடைத்தபடியே வெளியே வர, அவனுக்கு தெரியவில்லை மலர்விழி அங்கே நிற்கிறாள் என்று, மோதிவிட்டான்..

ஆனால் அவள் அதை தவறாக நினைக்கவில்லை..

“பார்த்து.. பார்த்து வாங்க…” என, அவனுக்கு தான் எதோ எரிச்சலாய் ஆனது..

“ம்ம்ச்.. வர்றேன்ல.. இப்படி வந்து குறுக்க நிக்கிற.. அறிவில்ல…” என்றவன்,

“நீ மாறவேயில்ல… ஆளுக்கு முன்ன எல்லாத்துலையும் முன்ன நிக்கிறது…” என்று அவள் முகம் பார்த்து சொன்னவன் பார்வை அவள் முகத்திலேயே நிலைத்துவிட, வெகு நேரம் அவளது கண்களை அவனால் சந்திக்க முடியவில்லை.. விலகி செல்ல,

“ஒரு நிமிஷம்…” என்று அவனை நிறுத்தினாள்.. குரல் மாறியிருந்தது.. முகமும் தான்..

என்ன என்றும் கேட்கவில்லை. அவளை திரும்பியும் பார்க்கவில்லை. அப்படியே அவன் நிற்க, அவளே அவனை சுற்றி முன்னே வந்து, அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து,

“என்.. என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா…??” என, அவனோ முகத்தை வேறெங்கோ திருப்பி,

“ஏன் உனக்கு எல்லாம் மறந்து போச்சா…??” என, அவன் மனமோ ‘எப்படி நடிக்கிறா… எனக்கே மறக்கலை… இவளுக்கு எப்படி மறக்கும்…??’ என்று வசை மொழி பாடியது..

“எதையும் தெளிவா சொன்னா தான் தெரியும்…”

“நீ டீச்சர் தானே… சொன்னதும் புரியாதா…”

“எஸ்.. நான் டீச்சர் தான்… ஆனா இங்க நான் உங்க வைப்… முதல்ல அதை மனசில வைங்க.. நீங்களா ஒன்னு நினைச்சு பேசினா எனக்கு எப்படி புரியும்…??”

“புரியவே வேணாம்..” என்று நகர்ந்து போனவனை கைகளை பிடித்து நிறுத்தினாள்..

“நான் இன்னும் பேசி முடிக்கலை… இப்படி போனா என்ன அர்த்தம்…” என,

“ஏய் என்ன ரொம்ப பேசுற…” என்று அவனும் எகிறிக்கொண்டு வர, அவனை முறைத்தவள்,

“என்னை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்…” என்று மீண்டும் ஆரம்பிக்க,

“ஏன் உனக்கு தெரியாதா…??” என்றான் இன்னும் தோரணை குறையாமல்,

“நல்லா தெரியும்… என் புருசன்ங்கிற முறையில.. நல்லாவே தெரியும்…” என்று அவள் சொன்ன தினுசில், லேசாய் வஜ்ரவேல் மனதில் ஒரு சாரல் வீசியது தான்..

‘இப்படி பேசி பேசியே உன்னைய சாச்சிடுவா போலவே…’ என்று அவன் மனசாட்சி சொல்ல, அதை உதறி தள்ளியவன்,

“நல்லது.. அப்படியே தெரிஞ்சா மட்டும் போதும்…” என,

“ஆனா நீங்க உங்க பொண்டாட்டியை எப்படி ட்ரீட் பண்ணணுமோ அப்படி செய்யணும்…” என்று சொல்ல,

“என்ன கிளாஸ் எடுக்கிறியா…??” என்றான்.

மலர்விழிக்கு அவ்வளவு தான் பொறுமை.. சொல்லபோனால் இந்தளவு அவள் பொறுமையாய் நின்று பதில் சொன்னதே பெரியது.. அவளுக்கு மதிப்பு கொடுத்தால் தான் அது யாராக இருந்தாலுமே நின்று பேசுவாள். இவனுக்கு கொஞ்சம் சலுகை காட்டினால் ரொம்ப போகிறான் என்பது போல் தோன்றியது.

அவனையே உறுத்து பார்த்தவள், “டைவர்ஸ் பண்ணிடலாமா…” என,

“என்ன…???!!!” என்று கண்களை விரித்து அதிர்ந்து பார்த்தான்..

“ம்ம் ஆமா… ஒருநாள் தானே ஆகிருக்கு… உங்களுக்கும் என்னை பிடிக்கலை போல… ஏன் இனி லைப் லாங் வேஸ்ட் பண்ணனும்… இப்போவே சொல்லிட்டா, நான் இப்படியே எங்க வீட்டுக்கு போயிடுவேன்…” என்றாள் தீர்க்கமாய்..

“ஏய்.. ஏய்.. பொண்ணா டி நீ.. இப்படி பேசுற… கல்யாணம் ஆகி முழுசா ஒருநாள் தான் ஆகிருக்கு.. அதுக்குள்ள டைவர்ஸ்ன்னு சொல்ற..”

“ம்ம் புரியுதா…. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்திடாது… அதுபோல தான் எதுவுமே.. நீங்க மனசில ஒன்னு வச்சிட்டு பேசினா எனக்கு எப்படி தெரியும்.. இது தான் அப்படின்னு சொன்னாதானே எனக்கும் புரியும்.. அது நல்ல விசயாமா இருந்தாலும் சரி, இல்ல வேறெதுவுமா இருந்தாலும் சரி…” என,

அவனுக்கோ ‘நிஜமாவே இவளுக்கு என்னை நினைப்புல இல்லையா.. அதெப்படி இல்லாம போகும்… நான் மறக்கலையே… இவ எப்படி மறந்தா…??’ என்று எண்ணங்கள் ஓட, வஜ்ரவேல் அப்படியே அவளையே பார்த்து நிற்க,

அவன் பார்வை தன்னிடம் இருந்து மீளாதது கண்டு, அவளுக்கோ தான் லேசாய் சங்கடமாய் போக, லேசாய் வேர்ப்பது போல் தோன்ற, சேலை தலைப்பில் முகத்தை ஒற்றி எடுத்தவள் பார்வையை தழைத்து,

“கோவிலுக்கு போகணும் நேரமாச்சு…” என,

“என்னை எப்படி மறந்த…” என்றான் ஒருமாதிரி குரலில்..

அவன் கேட்டதில் விழுக்கென்று நிமிர்ந்தவள், “என்ன சொல்றீங்க…” என்று ஆச்சர்யமாய் கேட்க,

ஒன்றுவிடாமல் வஜ்ரவேல் முழுதாய் சொன்னான். ஆனால் அவன் ஊர் வந்த காரணம் மட்டும் சொல்லவில்லை.. அவள் விட்ட சாபம், சவால் எல்லாம் சேர்த்து மொத்தமாய் சொல்ல, அவளுக்கோ கேட்க கேட்க,

‘இதெல்லாம் எப்போ நடந்தது..’ என்ற பாவனை தோன்றி, ‘ஆமால்ல… போன தேர் திருவிழா…’ என்று நியாபகம் வந்து, அவளது முகம் இன்னும் ஆச்சர்யத்தில் வியக்க,

“அட அது நீங்க தானா…???” என்றவள் முகத்தில் அப்பட்டமாய் மகிழ்ச்சி..

“ரியல்லி அது நீங்க தானா…?? வாவ் சூப்பர்ல…. நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை.. பார்த்தீங்களா நான் சொன்னது போல இந்த தேர் திருவிழா முன்னாடி என் கழுத்தில தாலி ஏறிடுச்சு…” என்று அங்கலாய்க்க,

அவனோ ‘நீ என்ன லூசா…’ என்று தான் பார்த்தான்…

“என்ன.. அப்படி பார்க்கிறீங்க… இதை தான் முதல் நாள் இருந்து கேட்டிட்டு இருந்தீங்களா, என்னை தெரியுதான்னு.. நீங்களே சொல்லிருக்கலாம்ல.. சாரி எனக்கு நிஜமா அடையாளம் தெரியலை.. உங்க போட்டோ பார்க்கும் போது எங்கயோ பார்த்தது போல இருக்கேன்னு நினைச்சேன்…

நிஜமா அப்போக்கும் இப்போக்கும் எவ்வளோ வித்தியாசம்.. அப்போ உங்க கன்னத்துல இவ்வளோ சதை இருக்காது.. இப்பவும் அவ்வளோ இல்லைதான், ஆனா அப்போ நீங்க இப்படி அடர்த்தியா மீசை வைக்கலைல…” என்று அவள் பாட்டுக்கு இப்போதிருக்கும் வஜ்ரவேலுக்கும், ஐந்து வருடம் முன்பிருந்த வஜ்ரவேலுக்கும் ஆறு வித்தியாசங்கள் சொல்லிக்கொண்டிருக்க, அவன் தான் அசந்து போய் நிற்கவேண்டி இருந்தது..

அவன் மனதில் என்னவோ, அவள் மீதிருந்த அத்தனை கோவமும் போனது போல் தோன்ற, அவளையே தான் பார்த்துகொண்டு நின்றிருந்தான்.. மனம் லேசானது போல் இருந்தது.. ஆக தான் தான் இதெல்லாம் பெரிதாய் நினைத்தது போல் இருக்கிறது.. அவள் மனதில் ஒன்றும் இல்லை..

‘ச்சே.. இவ கல்யாணத்தை நிறுத்தனும் நினைச்சோமே…’ என்று லேசாய் வருத்தம் தோன்ற, அவளிடம் அடுத்து என்ன சொல்லவென்று தெரியாமல் நிற்க,

“அண்ணி.. அண்ணா…” என்று தன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள் மகேஸ்வரி..

அவளை பார்த்து மலர்விழி சிநேகமாய் புன்னகைக்க, வஜ்ரவேலை கண்டு முகத்தை சுருக்கி அழப் போகிறேன் என்பது போல் முகத்தை குழந்தை வைக்க,

“மாமா பார்த்து பயமாடா.. என்கிட்ட வா….” என்று மலர்விழி தூக்க,  அவளிடம் வாகாய் குழந்தை போக,

“அதுண்ணி.. முதல் நான் அண்ணே லேசா சத்தம் போட்டிச்சு.. அன்னிக்கு இருந்து இவனுக்கு பயம் கொஞ்சம்….” என,

“எல்லாரையும் அரட்டுறீங்க..” என்று அவள் சொன்ன விதம் அவனுக்கு வெகுவாய் பிடித்தது..

 

Advertisement