Advertisement

விழி – 2

“வாவ்.. வாட் எ ஸ்டோரி..” என்று ராஜேஷ் சிலாகிக்க,

‘நான் என்ன சொல்றேன் இவன் என்ன சொல்றான்…’ என்ற ரீதியில் வஜ்ரவேல் பார்க்க, அவன் பார்க்கும் பார்வைக்கான அர்த்தம் புரிந்து,

“பின்ன என்னடா… இதெல்லாம் ஒரு சவாலா.. இது நடந்து அஞ்சு வருஷம் ஆச்சு.. இந்நேரம் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கும்.. கிளம்பிட்டான் அதுவும் வேலையை விட்டு…” என்று ஏக கடுப்பாய் சொல்ல,

வஜ்ரவேலோ சீரியசாய் முகத்தை வைத்து “நீ என்ன வேணா சொல்லுடா.. இது எனக்கு முக்கியம் தான்.. ரெண்டு நாள் கழிச்சு தான் அவளுக்கு கல்யாணம்.. திருவிழா அதுக்கு அடுத்து ரெண்டு நாள்ல.. எல்லாம் தெரிஞ்சு தான் போறேன்…” என்று உறுதியாய் சொல்ல,

“ஏன்டா ஒரு பொண்ணு வாழ்கைய கெடுக்கவா நீ வேலைய விட்டு போற…” என ராஜேஷ் கேட்க,

“வாழ்க்கை முக்கியமா வேலை முக்கியமா நண்பா…” என,

“வாழ்க்கை தான் டா…” என்றான் ராஜேஷ்..     

“ம்ம்.. அதான் வேலை விட்டு போறேன்..” என்று தோளை குலுக்கியவன் உண்டு முடித்து எழுந்துவிட, அடுத்து கிளம்பியும் விட்டான்..

இரவு எட்டு மணிக்கு பேருந்து.. விழுப்புரம் சென்றடையவே பதினொன்று ஆகிவிட்டது.. அதற்குமேல் ராயப்பனூர் செல்ல மிகவும் தாமதம் ஆகிவிடும் என்று விழுப்புரத்திலேயே ஒரு லாட்ஜ் பார்த்து தங்கினான்.. விடிந்ததும் முதல் வேலையாய் மீண்டும் ஊருக்கு கிளம்பிவிட, ஒருவழியாய் வீடும் வந்து சேர்ந்துவிட்டான்..

வீட்டிற்குள் நுழையும் போதே எதோ வித்தியாசமாய் பட, அவனுக்கு என்னவென்றும் புரியவில்லை. அவன் வீட்டில் நிறைய பேர்.. அப்பா அம்மா சித்தப்பா சித்தி, பாட்டி , தங்கை இரண்டு தம்பிகள் என்று கூட்டு குடும்பம்..

தங்கை மகேஸ்வரிக்கு திருமணம் முடிந்து ஓராண்டு ஓடிவிட்டது.. அவள் திருமணத்திற்கு என்று ஊருக்கு வந்து சென்றவன் தான். அடுத்து வரவேயில்லை.. தம்பிகள் இருவரும் சிறியவர்கள் பள்ளிக்கூடம் போகின்றனர்.

என்னதான் திருவிழா என்றாலும் வீட்டில் ஏன் அனைவரும் பரபரப்பாய் இருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனாலும் என்னவோ இருக்கிறது என்றுமட்டும் தெரிய, மெல்ல தம்பிகளிடம் நூல் விட்டு பார்த்தான்..

“என்னடா விசயம்…” என,

“என்ன விசயம்னா…” என்றனர் பதிலுக்கு, ராகவனும் கேசவனும்… இரட்டையர்கள்..

“ஹ்ம்ம் உங்க கிட்ட கேட்டேன் பாரு…” என்றவன், அடுத்து அவன் பாட்டியிடம் கேட்டான்..

“பாட்டி… என்ன எல்லாம் பரபரப்பா இருக்காங்க…” என..

“கல்யாண வீடுன்னா பரபரப்பா இல்லாம எல்லாம் பாய் போட்டு படுத்தா  இருப்பாங்க…” என்று அசராமல் அலமேலு சொல்,

“கல்யாணமா…?? நம்ம வீட்லையா…??யாருக்கு…” என்று கேட்க,

“என்னண்ணா ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கிற… உனக்கு தான் கல்யாணம்..” என்று கையில் தன் ஆறு மாத குழந்தையை தூக்கியபடி வந்தாள் மகேஸ்வரி..

மகேஸ்வரி வந்ததோ, அவள் கையில் இருக்கும் குழந்தை அவன் சட்டையை பிடித்து இழுத்ததோ எதுவுமே அவன் மனதில் பதியவில்லை.. ‘உனக்கு தான் கல்யாணம்…’ என்று சொன்னதிலேயே நிற்க,

“வஜ்ரா சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு, நல்ல நேரம் முடியறக்குள்ள நம்ம அங்க போகணும். பரிசம் இன்னிக்கு போட்டா, தான் நாளை கழிச்சு கல்யாணத்துக்கு சரியா இருக்கும்…” என்றபடி அவன் அம்மா மணிமேகலையும் சித்தி, கோமதியும் வர,

“ம்மா…” என்று கத்தியே விட்டான்… அவன் கத்தியதில் மகேஸ்வரி கையில் இருந்த குழந்தை அழ, குழந்தை அழுகுரல் கேட்டே சற்று தன் குரலை இறக்கியவன்,

“என்ன எல்லாம் விளையாடுறீங்களா…??” என்று அடிக்குரலில் சீர,

“இதில விளையாட என்ன இருக்கு வஜ்ரா….”என,

“சித்தி ப்ளீஸ்… நேத்து கூட உங்கட்ட பேசினேன் தானே.. ஏன் சொல்லல…” என,

“அவ்வளோ வேலை இருக்கு… யாரும் கிளம்பாம எல்லாம் இங்க நின்னு என்ன அரட்டை அடிக்கிறீங்க.. மணிமேகலை எதுனாலும் போய்ட்டு வந்து பேசிக்கலாம்.. கிளம்புங்க…” என்ற தங்கவேல்,

“உனக்கும் தனியா சொல்லனுமா கிளம்பு…” என்பது போல் மகனை பார்த்தார்..

“அப்பா.. நான் இன்னும் பேசி முடிக்கலை… யாருக்கோ கல்யாணம் போல என்னை கிளம்ப சொல்றீங்க…” என்று தயங்காமல் பேச,

“வஜ்ரா… நாங்க உனக்கு நல்லது தானே செய்வோம்…” என்று தணிகாசலம் சொல்ல,

“எது சித்தப்பா நல்லது… என்கிட்டே சொல்லாம எனக்கு கல்யாணம் பேசி முடிக்கிறதா…” என்றவன் கேள்வி அனைவருக்கும் நியாயமாகவே பட்டது.. ஆனால் என்ன செய்ய இது தங்கவேல் எடுத்த முடிவு. அவரே அவர் எடுக்கும் முடிவில் இருந்து மீற மாட்டார். இதில் மற்றவர்கள் என்ன செய்வது..

“அண்ணா கொஞ்சம் நாங்க சொல்றதை கேளேன்…”

“என்ன கேட்கணும்…?? எதுவும் என்கிட்ட சொல்லலை இதில என்ன கேட்க…??”

“ம்ம்ச் உனக்கு அப்படி யாரும் தப்பா செஞ்சிடுவோமா.. பொண்ணு சூப்பர் பொண்ணுண்ணா…”

“உலக அழகியாவே இருக்கட்டும்.. ஆனா என்னை கேட்ருக்கணும்..” என்று வஜ்ரா சொல்ல,

“இப்போ முடிவா என்ன சொல்ல வர்ற…” என்று தங்கவேலு கேட்க,

“நான் எங்கயும் வர முடியாது.. இதுக்கு தான் ஊருக்கு வா ஊருக்கு வா சொன்னீங்களா.. நான் அடுத்த பஸ்க்கு கிளம்பி போறேன்…” என்று நகர,

“சரி அப்போ உனக்கு நாப்பது வயசுல தான் கல்யாணம் நடக்கும்…” என்று தங்கவேல் சொல்ல, 

“என்ன…???!!!!!” என்று அதிர்ந்து நின்றான் வஜ்ரவேல்.

“ஆமாடா.. ஜோசியர் உனக்கு இப்போ பண்ணலைனா அடுத்து நாப்பது வயசுல தான் கல்யாணம் நடக்கும்னு சொல்லிட்டார்.. இல்லைனா நாங்களே எதுக்கு இவ்வளோ அவசரமா பண்ண போறோம்.. நம்ம வீட்ல முதல் பையனோட கல்யாணம்…” என்று தணிவாகவே தணிகாலசம் சொல்ல, இன்னும் கூட அவனுக்கு இதெல்லாம் நம்ப முடியவில்லை.. மண்டை குடைந்தது..

‘நான் ஒருத்தி கல்யாணத்தை நிறுத்த வந்தா.. இங்க எனக்கு கல்யாணம் பேசி வச்சிருக்காங்க.. என்னடா நடக்குது…’ என்று நின்றிருக்க, அடுத்து ஒவ்வொருவராய் பேசி அவனை கரைக்க,

“மச்சான் இந்தாங்க இந்த ட்ரெஸ் போட்டு கிளம்புங்க…” என்று மகேஸ்வரியின் கணவன், லோகநாதன் சொல்ல, ஒன்றுமே செய்ய முடியாமல் அவன் நீட்டிய உடையை வாங்கிக்கொண்டு தன்னறைக்கு சென்றான்..

‘நாப்பது வயசுல கல்யாணம்.. இல்ல இல்ல அப்படியெல்லாம் நடக்காது… ஒருவேளை நடந்திட்டா…. நோ நோ.. அதுக்குள்ளே அந்த அவளுக்கு.. ச்சே பேரு கூட தெரியலை.. அவளுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை கூட  இருக்குமே.. அப்போதான் எனக்கு கல்யாணம் ஆகுமா..’ என்று அவன் மனமே பலவாறாய் சிந்திக்க, அவனையும் அறியாது உடைகள் மாற்றி, தயாராகி கீழிறங்கி வந்தான்.

“என் மகன் ராஜா மாதிரி இருக்கான்..” என்று மணிமேகலை நெட்டி முறிக்க, கோமதியோ அவனுக்கு நெற்றியில் திருநீர் வைத்துவிட்டார்.

அலமேலு “சும்மாவா உனக்கு உன் தாத்தா பேர் வெச்சோம்… அம்சமா இருக்க டா…” என்று பேரனை கொஞ்ச, வேண்டா வெறுப்பாய் கிளம்பி சென்றான்.

காரில் அமர்ந்தவனுக்கு எந்தப்பக்கம் கார் செல்கிறது என்றெல்லாம் கவனிக்க முடியவில்லை. அவன் சிந்தனைகளிலேயே உழல, அவனுக்கோ கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தன தன் வீட்டினரிடம்..

“அண்ணா அண்ணி வேற யாருமில்ல எங்க மிஸ் தான்…” என்று ராகவனும் கேசவனும் சொல்ல, என்ன என்பது போல் அவர்களை பார்க்க,

“அண்ணி டீச்சர்ன்னா..” என,

“ஓ..” என்றவன் “படிச்சா பொண்ணா… பின்ன எப்படி இந்த திடீர் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா…??” என்று யோசிக்க அவன் மனமோ அடுத்த நொடி மலர்விழிக்கு தாவியது..

‘அவளுக்கு வேற பேசி முடிச்சிட்டாங்கன்னு அந்த மாணிக்கம் சொன்னானே.. அவனையும் ஆள காணோம்.. யாருக்கு பேசிருக்காங்கன்னு தெரிஞ்சா தானே அவ கல்யாணத்தை நிறுத்த முடியும்…’ என்று நினைத்துகொண்டிருக்கும் போதே கார் ஓர் வீட்டின் முன் நிற்க,

“வஜ்ரா இறங்கு… பொண்ணு வீடு வந்திருச்சு…” என்று தணிகாலசம் சொல்ல, அப்போது தான் அவனுக்கு சுற்றம் உணர்ந்தது..  

“மச்சான் இப்படி திகைச்சு போய் நின்னுட்டா எப்படி. வாங்க…” என்று லோகநாதன் அழைக்க,

“ம்ம்..” என்று தலையை ஆட்டியவன், அனைவரோடும் சேர்ந்து உள்ளே சென்றான்.

“வாங்க வாங்க..” என்று பலத்த மரியாதை கிடைக்க,

“வாங்க மாப்பிள்ளை… நான் தான் உங்க வருங்கால மாமனார், இது உங்க அத்தை…” என்று ராஜேந்திரனும், வாசுகியும் கரம் குவிக்க, வஜ்ரவேலுக்கு அவனையும் அறியாது அவன் கரங்களும் குவிந்தன..

வீடு நிறைய ஆட்கள் இருக்க, வஜ்ரவேலின் கண்கள் இங்கும் அங்கும் அலைபாய்ந்தது..

‘இந்த கூட்டத்துல பொண்ணா எங்கிட்டு தேடுறது… எல்லாம் சேர்ந்து என்னை இப்படி பண்ணிட்டாங்க… ரெண்டு நாள்ல கல்யாணம்.. ஆனா எனக்கு இப்போதான் சொல்றாங்க.. என்ன நினைச்சாங்க… ச்சே.. இருக்கட்டும் அந்த பொண்ணு வரட்டும்.. ஐயோ இந்த பொண்ணு பேரென்ன..

கடவுளே எனக்கு ஏன் எந்த பொண்ணு பேரு கூட தெரிய மாட்டேங்குது,.. இந்த பொண்ணுகிட்ட தனியா பேசணும் சொல்லி, முதல்ல இந்த கல்யாணத்த நிறுத்தனும்…’ என்று அவன் கணக்கு போட,

‘அப்போ உனக்கு நாப்பது வயசுல தான் கல்யாணம்… பரவாயில்லையா…’ என்று அவன் மனசாட்சி கூற,

‘இல்லை இல்லை அதெல்லாம் பொய் என்னை சம்மதிக்க வைக்க இப்படி சொல்றாங்.. நான் முதல்ல வந்த வேலையை கவனிக்கணும்… அவ,, அவ… அவளோட கல்யாணத்தை முதல்ல நிறுத்தனும்.. அப்புறம் தான் எதுன்னாலும்….’ என,

‘அட இதுக்கு ஏன்டா ஒருத்தி கல்யாணத்தை நிறுத்தனும்.. நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணா நீ சவால்ல ஜெயிச்சது போல தானே…’ என்று அவன் மனசாட்சி சொல்ல,

‘ஓ…!!! இப்படி ஒன்னு இருக்கோ… முதல்ல அவளோட கல்யாண முகூர்த்தம் எப்போன்னு தெரியனும்.. சரியா அதுக்கு முன்னாடி முகுர்த்த நேரத்துல என் கல்யாணம் நடக்கணும்…’ என்று அவனுக்கு தெரியாமலேயே இந்த திருமணத்திற்கு மனதளவில் தயாராகிவிட்டான்..

“மாப்பிள்ள எவ்வளோ நேரம் தான் பொண்ணு கணக்கா தலைகுனிஞ்சு உக்காந்து இருப்பீங்க… பொண்ணு பார்க்கத்தான் வரலை.. இப்போவாது தலை நிமிர்ந்து பாருங்கப்பா…” என்று ஒரு பெருசு சொல்ல,

“மச்சான் தங்கச்சி சபைக்கு வந்து ரொம்ப நேரம் ஆச்சு… இன்னும் நீங்க நிமிர்ந்து கூட பார்க்கலை.. பொண்ணு பல தடவ உங்களை பார்த்திடுச்சு…” என்று லோகநாதன் சொல்ல, சுற்றி இருந்த அனைவரும் லேசாய் சிரிக்க, 

‘எனக்கென்ன தயக்கம்…’ என்று தோன்ற, நெஞ்சை நிமிர்த்தி நேராகவே பார்த்தான் வஜ்ரவேல்..

அவனை போல் தலைநிமிர்ந்து நேராக பார்க்கவில்லை என்றாலும் கண்களை மட்டும் நிமிர்த்தி, அவன் பார்க்கும் அதே நேரம் அவனை தான் பார்த்தாள் மலர்விழி..

அவன் தன்னை பார்க்கிறான் என்றதும், சட்டென்று மலர்விழி பார்வையை தளர்த்திக்கொள்ள, வஜ்ரவேலுக்கோ அப்படியே சகலமும் நின்றுவிட்டது..

‘இவளா…..’ என்று அதிர்ந்து போய் பார்க்க,

“டேய் மகனே ஏன்டா மானத்தை வாங்குற.. பார்க்க சொன்னா இவ்வளோ நேரம் பார்க்கிறதா….” என்று தனிகாசலம் தன் அண்ணன் மகனின் தொடையை தட்ட,

“சித்தப்பா. நான் பொண்ணுகிட்ட பேசனும்… அதுவும் பரிசம் போடுறதுக்கு முன்னாடி…” என,

“ஏ.. என்னடா சொல்ற.. அதெல்லாம் நம்ம பழக்கத்துல இல்லையே…” என்று அவர் தயங்க,

“நீங்க இதை செய்யாட்டி நான் இப்படியே எந்திரிச்சு வெளிய போயிடுவேன்…” என்று அழுத்தமாய் கூற, அவருக்கு வேறு வழியில்லை.. தன்னருகே அமர்ந்திருந்த தங்கவேலுவிடம்,

“அண்ணே, வஜ்ரா, மருமக கிட்ட பேசணுமாம்…” என,

“என்ன பேச போறான்… எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் பேசட்டும்…” என்று அவர் சொல்ல, வஜ்ரவேல் சொன்னதை முழுதாய் தணிகாசலம் சொல்ல, தன் மகன் அமர்ந்திருந்த விதம் பார்த்தால் எழுந்து போனாலும் போவான் என்று தோன்ற,

“அதுங்க சம்பந்தி… என் மகன் இப்போதானே மருமகளை பார்க்கிறான்.. தனியா பேசணுமாம்..” என்று தங்கவேலு இழுக்க,

“எதுக்கென்ன சம்பந்தி… நாளைக்கு கல்யாணம் பண்ண போறவங்க.. பேசிக்கிட்டா நல்லது தானே…” என்ற ராஜேந்திரன்,

“மலராச்சி… போம்மா.. மாப்பிள்ளைய பின்னாடி தோட்டத்துக்கு கூட்டிட்டு போ…” என, இருக்கையில் இருந்து எழுந்தவள்,

‘வா…’ என்பது போல் வஜ்ரவேலை ஒரு பார்வை பார்த்துவிட்டு, முன்னே நடந்து சென்றாள்..

‘கண்ணுல மை தான் வச்சிருக்காளா இல்ல வேறெதுவுமா.. அப்போ பார்த்தப்போ கூட இப்படி இல்லையே…’ என்று லேசாய் சட்டை காலரை தூக்கிவிட்டபடி அவனும் அவள் பின்னே செல்ல, அவள் கொலுசொலி மட்டுமே அவன் இதயத்திலும் கேட்க தொடங்கியது..

‘இவ்வளோ முத்து வச்சா போடுவா…’ என்றெண்ணியவன், பின்னே தோட்டத்திற்கு செல்ல, தோட்டம் என்னவோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையாய் தான் தெரிந்தது.. ஆனால் அந்த குளிர்ச்சி அவன் மனதில் இல்லை..

தனியாய் பேசவேண்டும் என்று வந்தாகிவிட்டது, ஆனால் என்ன சொல்லி முதலில் ஆரம்பிக்க என்று தெரியவில்லை.. அவன் இந்த ஊருக்கு வந்ததே மலர்விழி திருமணத்தை நிறுத்தத்தானே..

‘டேய் மாணிக்கம்… நீ மட்டும் என் கைல கிடைச்ச… செத்த…’ என்று பல்லை கடித்தவன், கை முஷ்டியை இறுக்க, அவனை கவனித்தவள்,

“ரொம்ப டென்சனா…” என்றாள்.

இத்தனை நேரம் தோட்டத்து பக்கம் திரும்பி நின்றிருந்தவன், அவள் குரல் கேட்டு, பின்னே திரும்பி பார்க்க, அவளோ பார்வையை நிமிர்த்தி அவன் முகத்தை தான் பார்த்தாள்.. கொஞ்சம் கூட அச்சமோ, தயக்கமோ எதுவும் இல்லை..

மாறாக இது என்னிடம், நீ தான் இங்கே புதியவன் என்பது போல் அவள் நிற்க, அவளிடம் சிறு தயக்கம் கூட இல்லாதது கண்டு அதுவும் அவனுக்கு எரிச்சல் ஏற,

‘என்ன கொழுப்பு..’ என்று நினைத்தவன், அவள் முன்னே ஓரடி எடுத்து வைத்து தன் இருகைகளையும் கட்டி “சோ.. என்னை யாருன்னு தெரியுதா…” என,

“ஏன் தெரியாம, கண் முன்னாடி தானே நிற்கிறீங்க..” என்று தலை சரித்து சொன்னவள் இதழ்களில் புன்னகை.

கண்களை இறுக மூடி திறந்தவன், “ம்ம்ச் என்கிட்ட இந்த நக்கல் எல்லாம் வேண்டாம்.. அதெப்படி என்னை பார்க்கமையே நீ இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொன்ன…” என்று வேகமாய் ஆரம்பிக்க,

இரண்டு கைகளையும் ஆசீர்வாதம் செய்வது போல் வைத்தவள், “கூல் கூல்… ஏன் இவ்வளோ டென்சன்…” என, என்னவோ அவனுக்கு அவள் அலட்சியாமாய் பேசுவது போலவே பட்டது..

என்ன சொல்ல வந்தானோ, “ஒரு நிமிஷம் நானே பேசிக்கிறேன்…” என்று தன்மையாகவே சொன்னவள், “உங்க போட்டோ காட்டினாங்களே. அப்புறம் தான் நான் சரி சொன்னேன்… கல்யாணம் பண்ண போறவங்களை பார்க்காம கூட சரின்னு சொல்ல நான் என்ன…” என்று அவள் பேசி முடிக்கவில்லை,

“ஏய்.. என்னை குத்தி காட்றியா..?? எனக்கு கல்யாணம்னு இப்போதான் தெரியும்..” என்று பதிலுக்கு அவன் லேசாய் எகிற, அவன் பேசியதில் தலையை இடமும் வலமும் ஆட்டியவள்,

“இப்போ உங்க பிரச்சனை என்ன…??” என்று கேட்க, அவனுக்கோ இன்னும் கோவம் வந்தது..

சுத்தமாய் அவளுக்கு தன்னை நினைவில் இல்லை, ஆனால் தான் மட்டுமே இந்த ஐந்து ஆண்டுகளில் அவளை ரொம்ப நினைத்திருக்கிறோம் என்று தோன்ற, அவனுக்கு இன்னும் கோவம் தான் கூடியது.

“என்னை நிஜமாவே யாருன்னு தெரியலையா…??” என்று மீண்டும் கேட்க,

“அட அதான் சொன்னேனே…” என்று அவள் மீண்டும் பதில் அளிக்க,

“ம்ம்ச்… உன் பேரென்ன அதை சொல்லு.. அஞ்சு வருசமா எனக்கு உன் பேர் கூட தெரியாது…” என,

“அஞ்சு வருசமா…??” என்று யோசனையாய் புருவம் தூக்கியவள், “மலர்விழி…” என்றாள்..

“மலர்விழி…ம்ம்..” என்றவன், “ஆனா உங்கப்பா வேற எதுவோ சொன்னாரே…” என்று கைகளை ஆட்டி கேட்க,

“அதுவா… அது நான், எங்கப்பாவோட ஆச்சி சாயலாம்.. அதுனால மலராச்சின்னு சொல்வார்..” என்று சொல்ல,

“ம்ம் அவர் என்னவோ சொல்லிட்டு போகட்டும்… நீ இப்போ போய் என்னை பிடிக்கலை சொல்லு…” என,

அவன் சொன்னதில் அதிர்ந்தவள் “ஏன்… ஏன்???” என,

“எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல.. ஆனா நான் சொன்னா நல்லாருக்காது…” என,

“என்னை பிடிக்கலையா…?? இல்லை இந்த கல்யாணம் பிடிக்கலையா…” என்று அவன் கண்களை மட்டும் பார்த்து மலர்விழி கேட்க, சத்தியமாய் அவள் கண்கள் பேசிய பாசையில், அதில் லேசாய் ஓடிய தவிப்பில், வஜ்ரவேல் முடிவுகள் எல்லாம் சுக்குநூறாய் தான் போனது…

Advertisement