Advertisement

விழி – 1

“ஹே என்னடா இந்த நேரத்துல எங்க கிளம்புற…” என்று ராஜேஷ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், தன் உடைமைகளை எடுத்து வைப்பதிலேயே குறியாய் இருந்தான் வஜ்ரவேல்.

அவன் அவசரமாகவே அனைத்தையும் எடுத்து வைத்தாலும், முகத்தில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போக, ராஜேஷ் தான் குழம்பி போனான்..

“டேய் மாப்ள…. சொல்லிட்டு எதுவும் செய்டா…” என்று வஜ்ரவேல் பின்னாடியே சுற்ற,

“என்னடா வேணும்…?? கொஞ்ச நேரம் சும்மா இரு.. நான் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு வரேன்…” என்றவன் ராஜேஷை இழுத்துக்கொண்டு போய், அமர வைத்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடங்க,

“ஸ்… யப்பா.. என்னத்த தின்னு வளர்ந்தானோ.. உட்கார்ன்னு சொன்னா உட்கார்ந்திட போறேன். இழுத்துட்டு வந்து.. கையே போச்சு…” என்று வஜ்ரவேல் காதில் விழும்படியே முணுமுணுக்க,

“இன்னொரு கையும் இழுத்து வைக்கிறேன்.. ரெண்டும் சரியா போகும்…” என்று வஜ்ரவேல் சொல்ல,

“வேணாம் சாமி…” என்று கையெடுத்து கும்பிட்டான்.

வஜ்ரவேலும், ராஜேஷும் கடந்த இரண்டு வருடங்களாய் நண்பர்கள். மேன்சன் கொடுத்த அறிமுகம். வேலைக்கென்று சுற்றித் திரியும் போது ஒரே மேன்சனில் தங்கியிருந்தார்கள். பின் நல்லதொரு வேலை கிடைக்கவும், தனியாய் வீடெடுத்து இருவரும் வந்துவிட, நட்பு பலப்பட்டது.

ராஜேஷ் நன்றாகவே சமைப்பான். வஜ்ரவேல் அவனோடு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம். சாப்பாட்டு பிரியன். எப்பொழுதும் சரி ருசியாய் உணவு வேண்டும். பிறந்து வளர்ந்தது அப்படி.

ஹைட் அண்ட் வெய்ட் என்பார்களே அதுபோல அஜானுபாகுவாய் இருப்பான்.. முரட்டு தோற்றம் இல்லை. ஆனால் கொஞ்சம் முசுடு தோற்றம். யாருக்குமே பார்த்தால், இவனோடு அவசியம் பேசிட வேண்டுமா என்ற எண்ணம் கொடுக்கும்.. அதுவும் பெண்களுக்கு கேட்கவும் வேண்டுமா??

ஆனால் ராஜேஷ் விதிவிலக்கு…

ஒருவழியாய் தன் உடைமைகளை எடுத்து வைத்துவிட்டு, மணி பார்க்க, அதுவோ மாலை ஆறு என்று காட்ட, ‘இன்னும் டைம் இருக்கு…’ என்று அவனே சொல்லிக்கொண்டவன்,

“மச்சி… ஏழு மணிக்கெல்லாம், நல்லா வெங்கயாத்த சின்னதா நறுக்கி போட்டு ரெண்டே ரெண்டு ஆனியன் ரோஸ்ட் சுட்டு குடு டா.. அதிலயும் நீ செய்வ பாரேன். தக்காளி சட்னி… இப்போ நினைச்சா கூட நாக்குல தண்ணி வருது… என்ன ஷார்ப்பா ஏழு மணிக்கு.. ம்ம்…” என்று சொல்லியபடி வஜ்ரவேல் வந்து அமர, அவனையே முறைத்த ராஜேஷ்,

“இந்தாடா… நான் என்ன கேட்டிட்டு இருக்கேன்… நீ என்ன சொல்லிட்டு இருக்க.. இப்போ ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சு எங்க போற…???” என்று முதல் கேள்விக்கே வந்தான்.

ஆனால் அதெல்லாம் வஜ்ரவேலின் காதுகளில் விழுந்தது போலவே தெரியவில்லை..

“மச்சி கேட்க மறந்துட்டேன்… இன்னிக்கு கிளம்பும் போது, அந்த கிரிஜா என்னை பார்த்து சிரிச்ச போல இருந்துச்சுல…” என, ராஜேஷ் ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டான்..

அருகில் இருந்த செய்தித்தாளை சுருட்டி அவன் மீது வீச, அதை இலாவகமாய் கையில் பிடித்தவன், “என்னடா பேசிட்டு இருக்கும் போதே வன்முறைக்கு போற.. என்னை பார்த்தா சண்டை போடுறவன் போலவா இருக்கு…” என்று பாவமாய் முகத்தை வைத்து சொல்ல,

“வேணாம்டா.. வேணாம்… இதோட நிறுத்திக்க.. சும்மாவா பேரு வச்சாங்க அலம்பல் வஜ்ரவேல்ன்னு.. நீ பண்ற அலம்பல் தாங்க முடியலைடா…” என,

“கால் மீ வஜ்ரா டா… சொல்லும் போதே கெத்தா இல்லை…” என்று சட்டை காலரை தூக்கிவிட,

“ஐயோ இவன் தொல்லை தாங்கலையே…” என்று ராஜேஷ் தலையில் அடித்துக்கொண்டான்.

“சரி சரி.. போய் வெங்காயம் கட் பண்ணு.. நான் குளிச்சிட்டு வரேன்.. எட்டு மணிக்கு பஸ்…” என்று சொல்லிபடி எழ, ராஜேஷோ என் கேள்விக்கு பதில் சொல்லாமல் உன்னை நகர விடமாட்டேன் என்பது போல் வழியை மறைத்து நின்றான்..

“கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ…”

“ஊருக்கு தான்டா போறேன்…” என,

“அதை கேட்டப்பவே சொல்லிருக்கலாம்ல…” என்று ராஜேஷ் கடிய..

“எல்லாம் ஒரு ஜாலிக்கு தான் மச்சி…” என்றவன் குளிக்க போக, பின்னோடு “ஏய் நில்லு நில்லு..” என்று ராஜேஷ் வர,

“ஷ்… என்னடா.. நீயும் குளிக்கனுமா.. சரி வா.. சேர்ந்து குளிப்போம்…” என்று ராஜேஷை இழுக்க,

“ஏய் ச்சி ச்சி.. விடு.. ஒரு செக்கன்ட்ல என்னை என்னனு நினைச்ச…” என்று விலகி நின்றவன்,

“ஆமா உனக்கு எப்படி லீவ் குடுத்தாங்க.. அன்னிக்கு ஒன் ஹவர் பெர்மிசன் கேட்டதுக்கே அந்த ஹெட் அப்படி பார்த்தான்…” என்று சந்தேகமாய் கேட்க,

“லீவ் நான் குடுத்துட்டேன்டா…” என்று சொல்லிவிட்டு, பாத்ரூம் கதவை பட்டென்று மூட, ராஜேஷோ அவன் சொன்ன பதிலில் மீண்டும் குழம்பி நின்றான்..

“என்ன சொல்றான்.. இவன் லீவ் கொடுத்தானா..?? லூசாட்டம் உளர்றான்…” என்று சொல்லியபடி அவன் சொன்னது போல் வெங்காயம் நறுக்க போனான்..

இது அடிக்கடி நடக்கும் ஒன்று தான். வஜ்ரா ஏதாவது கேட்டால், முனங்கிக்  கொண்டேனும் மறுக்காமல் ராஜேஷ் செய்துகொடுப்பான். ஆனால் பதிலுக்கு நான் உனக்கு செய்கிறேன் என்று எதையாவது கிளறி கொடுத்து அவனை படுத்துவான் வஜ்ரவேல்.

அவன் குணமே இப்படிதான். கோவம் எந்த வேகத்தில் வருகிறது, எந்த வேகத்தில் எங்கே செல்கிறது என்று தெரியாது. அதுபோலவே மகிழ்ச்சியும், பெரிய விஷயத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்வான், சிறு விசயங்களை கொண்டாடி தீர்ப்பான். மொத்தத்தில் இவன் இப்படிதான் என்று வரையறுக்க முடியாது…

வஜ்ரவேல் கேட்டது போலவே தக்காளி சட்டினியுடன் வெங்காய ரோஸ்ட் அவன் முன்னே அமர்ந்திருக்க,

“வாவ்… சூப்பர் மச்சி.. நான் சொல்லிக்குடுத்த மாதிரியே செஞ்சிருக்க…” என்றவன், தோசையை பிய்த்து சட்டினியில் தொட்டு வாயில் தள்ள, அதன் சுவை இன்னும் அவன் மனதை அள்ள,

“ம்ம்ம்… அருமை அருமை…” என்று கண்கள் மூடி ரசித்து சிலாகித்தவன் கரங்களை கெட்டியாக பிடித்துகொண்டான் ராஜேஷ்..

“என்னடா.. கைய விடு.. சப்பிடுறேன்ல…” என,

“அதான்.. இதுக்கு தான் வெய்ட் பண்ணேன்.. டேஸ்ட் பார்த்திட்டல, இனி உன்னால சாப்பிடாம இருக்க முடியாது… ஆனா என் கேள்விக்கு பதில் சொல்லாம உன்னால சாப்பிட முடியாது.. விடமாட்டேன்…” என்று சிறுவன் போல் தலையை இப்படி அப்படி ஆட்டி சொல்ல, வஜ்ரவேலோ ‘நீ என்ன லூசா…’ என்பது போல் பார்த்தான்..

“நீ என்ன வேணா நினைச்சுக்கோ.. ஒழுங்கா பதில் சொல்லு. இல்லை என்னால தூங்க முடியாது…” என்று இன்னும் அவன் வலகரத்தை இறுக்கி தான் பிடித்திருந்தான்.

“சரி கேட்டுத் தொலை.. ஆனா ஒரு வாய்க்கு ஒரு ஒரு கேள்வி..” என்று டீலிங் பேச,

“சரி சாப்பிட்டு தொலை…” என்றவன் முதல் கேள்விக்கு போனான்..

“என்ன திடீர்னு ஊருக்கு….”

“ஊர்ல திருவிழா.. அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவ தேர் இழுப்பாங்க…”

“ஓ.. சாமி விஷயம்…” என்று ராஜேஷ் கன்னத்தில் போட்டுக்கொள்ள, அதற்குள் இரண்டு மூன்று வாய்களை உண்டு முடித்திருந்தான்.

“டேய் இதெல்லாம் போங்காட்டம்… சரி விடு… எத்தனை நாள் திருவிழா…??” என, தோசையை வாயில் திணித்தபடி அவன் கேட்டதற்கு பதில் சொல்ல, 

“ஓ..” என்று சாதாரணமாய் கேட்டவன், அடுத்து அதிர்ந்து “எப்படி டா அவ்வளோ நாள் லீவ் கொடுத்தான்…??” என்று கேட்க, அவன் கேட்ட விதத்தை பார்த்து வஜ்ராவிற்கு சிரிப்பு வந்துவிட்டது..

“அவன் எங்கடா குடுத்தான்.. நான் லீவ் கொடுத்திட்டேன்னு…” என்று சொல்ல,

“ம்ம்ச்… புரியுற மாதிரி சொல்லு…” என,

“ஹா ஹா நான் பேப்பர் போட்டு ரெண்டு மாசம் ஆச்சு டா…” என,

“என்ன….!!!!!!” என்று அதிர்ந்தே விட்டான் ராஜேஷ்… அவனுக்கு இந்த விஷயம் சுத்தமாய் தெரியாது.. தெரியாதது போல் பார்த்துகொண்டான் வஜ்ரவேல்..

“என்னடா சொல்ற.. என்கிட்டே ஏன் சொல்லல…” என,

“சொன்னா நீ சண்டை போடுவ… அதான்…”

“ம்ம்…. ஏன்டா திருவிழாக்காக எல்லாமா ஒருத்தன் பேப்பர் போடுவான்…???” என்று கேட்க,

“அதுக்காக எல்லாம் வேலையை விடுவாங்களா டா…” என்று வஜ்ரவேலும் சொல்ல,

“டேய்… என்ன விளையாடுறியா.. அந்த பட்டர ஒழுங்கா தடவு…” என, இதற்குமேல் விட்டால் ராஜேஷ் வாய்க்கு வந்தது எல்லாம் பேசுவான் என்று தெரிந்ததால் தன் விளையாட்டை நிறுத்திக்கொண்டான்.

“அது ஒரு முக்கியமான வேலைடா.. அதான்…”

“அப்படி என்னடா முக்கியாமன வேலை.. இருக்கிற வேலையை விட்டு போற அளவு…”

“அதுவா ஒருத்தி கல்யாணத்தை நிறுத்தனும்…” என, மீண்டும் ராஜேஷ் அதிர்ந்தே போனான்..

“என்.. என்ன…??? என்ன சொல்ற…???ஹே நீ நிஜமா தான் சொன்னியா…???” என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்ப, தான் சொன்னது நிஜம் என்பது போல பார்த்தான் வஜ்ரவேல்..

அவன் பார்வையே புரிந்துவிட, “என்னடா….” என்றான் ராஜேஷ்..

“ஒருத்தி என்கிட்ட சவால் விட்டா டா… உனக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணி காட்றேன்.. எனக்கு தான் முதல்ல கல்யாணம் ஆகும்னு…” என்று வஜ்ரவேல் சொல்ல, அவனையே உத்து பார்த்தான் ராஜேஷ்..  ‘யாருகிட்ட கதை விடுற…’ என்பது போல் அவன் பார்வை இருக்க,

“நிஜமா தான்டா….” என்று வஜ்ரவேல் சொல்ல,

“அஹான்… சரி.. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி என்ன நடந்திச்சு….????” என்று ராஜேஷ் கேட்க,

“அப்பவும் ஊர் திருவிழா தான்டா… காலேஜ் பைனல் இயர்.. என் பிரண்ட்ஸ் கூட்டிட்டு போயிருந்தேன் திருவிழாக்கு…” என்று சொல்ல ஆரம்பித்த வஜ்ரவேலின் நினைவுகள் ஐந்து வருடங்களுக்கு முன்னே சென்றது.

ராயப்பனூர்…

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை ஒட்டிய கிராமம்… இங்கே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக பிரம்மாண்டமான முறையில் தேர் திருவிழா நடைபெறும். செல்லியம்மன் தேர், அய்யனார் தேர், மாரியம்மன் தேர் என மூன்று தேர்களும் ஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தேர் பவனி உலா வரும்.

மூன்று தேர்களும் உலா வரும் அழகை காணவே, அருகில் உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் கூட்டம் கூட்டமாய் ஆட்கள் வருவர்.. அந்த வருடம், வஜ்ரவேலும், தன்னுடன் பயிலும் நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.

ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, வானில் மின்னும் நட்சத்திரங்கள் தான்  வண்ண வண்ணமாய் கீழிறங்கி வந்து மின்னுகிறதோ என்று நினைக்கும் படி  ஊர் முழுவதும் வண்ண விளக்குகளால் மின்னியது.

ராயப்பனூரை சார்ந்த பெண்கள் அனைவரும் முளைப்பாரி போட்டிருக்க, கிரகம் எடுக்கும் அன்று தானே முளைப்பாரி அடுக்கி, கும்மி அடிப்பர். ஆகையால் ஒரு செம்பில் தண்ணீர் நிறைத்து அதற்கு பூ அலங்காரம் செய்து, அதனை அம்மனாய் நினைத்து மனையில் வைத்து  சுற்றி நின்று கும்மி அடிக்க தயாராக, அத்தனை பெண்களும் ஒருசேர, ஒன்றுபோல் பாட்டு பாடி, குலவை போட்டு, கும்மி அடித்து வலம்வருவதை காண அத்தனை அழகாய் இருக்கும்.

அந்த அழகை காணவே பல இளசுகள் காத்திருக்கும்.. அந்த கூட்டத்தில் வஜ்ரவேலுவும், அவன் நண்பர்களும் நிற்க,

“இப்படி வழிய மறைச்சு நின்னா… நாங்க எப்படி போறதாம்….” என்ற கணீர்  குரல் அவனை திரும்பி பார்க்க வைத்தது.. திரும்பி பார்த்தவன் கண்களில் லேசாய் ஓர் ஆச்சர்ய ரேகை மின்ன,

“ஏன்.. இவ்வளோ பெரிய ஊர்ல நான் நிற்கிற இடம் மட்டும் தான் வழியா தெரியுதா..” என்று நக்கலாய் கேட்டு வைத்தான்.

அவன் எதிரே நின்றிருந்த பதினேழு வயது மங்கையோ, “ஊரெல்லாம் வழியிருக்கு, ஆனா கும்மியடிக்க போக இது தான் வழி.. தள்ள முடியுமா கொஞ்சம்…” என்று தலை சரித்து கேட்க, அவனையும் அறியாது வழிவிட்டான் வஜ்ரவேல்.

‘யாருடா இவ… புதுசா இருக்கா…??’ என்றபடி அவன் கண்களை அவளை தொடர,

“மலர்விழி சீக்கிரம் வா டி..” என்ற அவளது தோழியின் அழைப்பிற்கு இணங்க, இன்னும் நடையை வேகம் போட்டாள்..

அவள் வயதிற்கே ஏற்றவாறு அளவான உடல்வாகு, கிராமத்து பாங்கு அப்படியே அவளிடம் தெரிந்தது. பாவாடை தாவணி அணிந்திருந்தாள். கழுத்தில் லட்சுமி டாலர் வைத்த செயின்.. காதுகளில் சிறு குடை ஜிமிக்கி.. அந்த இரவு நேர வண்ண விளக்குகளோடு அவளது பளீரென்ற சிரிப்பும் போட்டி போட்டது.

சிரித்துகொண்டு தான் இருந்தாள்.. தன்னருகே அவள் வயதை ஒத்த இருவர் நிற்க, அவர்களோடு பேசி சிரித்தபடி தான் நின்றிருந்தாள்.. வஜ்ரவேலின் கண்கள் அவளிலேயே நிலைத்து நிற்க, அதனை கவனித்த அந்த ஊர்க்கார நண்பன் மாணிக்கம்,

“மாப்பள பார்த்து.. அவங்கப்பா வாத்தியார்… பார்க்க தான் பொண்ணு சாது.. ஊர்ல பல பேர் அடிவாங்கிருக்கான்…” என,

“ஓ… பல பேர் வாங்கிருக்கலாம்.. ஆனா இந்த வஜ்ரா கிட்ட கூட அவளால வர முடியாது…” என்று கெத்து காட்ட,

“ஏன்டா… போன வாரம் தான் அந்த நிஷா உன்னை வேணாம் சொன்னா.. அதுக்குள்ளே இப்போ இந்த பொண்ண பார்க்கிற…” என்று அவன் கல்லூரி நண்பன் வஜ்ரவேலின் காதை கடிக்க, சடுதியில் வஜ்ரவேலின் முகம் மாறிவிட்டது,

கல்லூரியில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் நிஷா பின்னால் சுற்றி, ஒருவழியாய் அவளையும் திரும்பி பார்க்க வைத்து, காதல் கை கூடி விடும் என்று நினைத்து இறுமாந்திருந்த நேரம், ‘நான் உன்னை அப்படி நினைக்கலை…’ என்று சொல்லி நிஷா அவனை நிராகரிக்க, அந்த கோவம் இப்போது ஏனோ கண்ணெதிரே சிரித்தபடி நிற்கும் மலர்விழி மேல் வந்தது.

“இந்த பொண்ணுங்களே இப்படிதான்டா.. ஆரம்பத்துல சிரிப்பாளுங்க.. அப்புறம் பைத்தியம் பிடிக்க வைப்பாளுங்க..” என்று சொல்லியவன், அடுத்து மறந்தும் கூட மலர்விழி பக்கம் பார்க்கவில்லை..

ஆனால் திருவிழா அன்றோடு முடியவில்லையே, அடுத்தடுத்த நாள்களில் எல்லாம் ஓயாமல் மலர்விழி அவன் கண்களில் பட்டுக்கொண்டு தான் இருந்தாள். திருவிழா போட்டிகளில் அனைத்திலும் பங்குகொண்டாள். பரிசுகள் வென்றாளோ இல்லையோ, அவள் ஒரு போட்டியையும் விடவில்லை..

“ஏன்டா மாப்ள… ஊர்ல எல்லாரும் உன்னை பார்த்தாலே நின்னு பேசிட்டு போவாங்கன்னு சொன்ன… ஆனா நாங்க பார்த்த அளவுல, அந்த பொண்ணுகிட்ட தான் எல்லாம் பேசுறாங்க.. உன்னை யாருமே கண்டுக்கலை. எங்க காதுல பூ வச்சியா…?? ” என்று அவனோடு வந்தவர்கள் கேலி பேச,

வஜ்ரவேலுக்கோ தன்னுடைய தன்மானம் சீண்ட பட்டதாகவே தோன்றியது.. ஊரில் அவன் அப்பா பெரிய தலை. அவனுக்கு விவரம் தெரிந்து சிறு வயதில் எல்லாம் எங்காவது வெளியே சென்றால், அவனை பார்த்து ஒருசிலராவது பேசுவர். அதை தான் தன் நண்பர்களிடமும் அளந்து விட்டிருந்தான்.

ஆனால் இன்றோ பார்ப்பவர்கள் எல்லாம் என்றில்லை ஆனால் ஒருசிலராவது  மலர்விழியிடம் நின்று பேச, அவனுக்கோ என்னவோ போல் ஆனது..

‘அதென்ன எல்லாரும் என்னை கண்டுக்காம இருக்கிறது….’ என்று கோவம் எழ, வீம்புக்கென்றே மலர்விழி கலந்துகொள்ளும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றான். அவள் அதை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவனுக்கோ ஏனோ தெரியவில்லை, அவளை ஒரு போட்டியிலாவது ஜெயித்து விட வேண்டும் என்று.

மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி நடைபெற, அதிலும் இருவர் அமர்ந்து ஓட்டவேண்டும் என்று சொல்ல, ஆளுக்கு முன்னே மலர்விழி தன் தோழியோடும் சைக்கிலோடும் வந்து நிற்க,

“டேய் நீயும் வா…” என்று தன்னருகே நின்ற ஒருவனை இழுத்தபடி வஜ்ரவேலும் சைக்கிளோடு சென்று நிற்க, போட்டி ஆரம்பம்மாகியது..

பாவாடையை லேசாய் தூக்கி சொருகியபடி, எத்தனை மெதுவாய் சைக்கிள் ஓட்ட முடியுமோ அத்தனை மெதுவாய் மலர்விழி சைக்கிள் ஓட்டிகொண்டிருக்க, வஜ்ரவேலுவோ, தான் ஜெயிக்கிறோமோ இல்லையோ அவளை ஜெயிக்க விடக்கூடாது என்று தோன்ற கவனமெல்லாம் போட்டியில் இல்லை.. அவள் மேல் இருந்தது..

பலன்.. மெதுவாய் சைக்கிள் ஓட்டுவதற்கு பதில் வேகமாய் சைக்கிளை மிதித்து விட்டான்.. அனைவரும் கொல்லென்று சிரித்து விட, மலர்விழிக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.

மற்றவர்கள் சிரித்ததெல்லாம் அவனுக்கு பெரிதாய் தெரியவில்லை. அவள் கேலியாய் சிரித்தது தான் பொறுக்கமுடியாது போக, அவள் வீட்டிற்கு செல்லும் நேரம் பின்னாடியே வேகமாய் துரத்தி போய், அவள் முன்னே முறைத்து நின்றான்.. அவன் தோற்றத்திற்கும், முறைப்பிற்கும் யாராய் இருந்தாலும் பயந்து தான் போயிருப்பர். ஆனால் மலர்விழியோ,

“எப்பவுமே வழிய மறைச்சு நிக்கிறது தான் உன் வேலையா…” என்று துடுக்காய் கேட்க,

“ஏய் நீ எல்லாம் பொண்ணா டி.. எல்லாத்துக்கும் முந்திட்டு வர.. ஊர்ல எத்தனை பொண்ணுங்க இருக்காங்க, இருக்கிற இடம் தெரியுதா… அதென்ன அப்படி ஒரு சிரிப்பு. ஆளும் மூஞ்சியும்..” என்று திட்ட, அவன் திட்டியதில் லேசாய் அதிர்ந்தவள்,

பின் நிலைபெற்று, “உனக்கென்ன கவலை…??” என்றாள்..

அவன் புரியாமல் புருவம் சுருக்க,

“இல்லை நான் போட்டிக்கு போனா உனக்கு ஏன் கவலை.. உனக்கு வேணா நீயும் போ.. அதுக்கு ஏன் என்னை சொல்ற…??” என்று பதிலுக்கு பேச,

“ஏய் ஏய்.. வாய் பாரு.. ச்சே ச்சே இப்படியா பேசுவ.. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம.. ” என்று பதிலுக்கு அவனும் எகிற,

“என் வழிய மறைச்சா இவ்வளோதான் மரியாதை…” என்று அவளும் அழுத்தம் திருத்தமாய் கூற,

“ஓ.. நல்ல வளர்ப்பு. இதுல வாத்தியார் மக வேற.. இப்படி இருந்தா உன்னை எல்லாம் எவன்டி கல்யாணம் பண்ணுவான்…” என, அவன் சொன்னதில் சிரிப்பு வந்துவிட, இடுப்பில் கை வைத்தவள் “ஹா ஹா..” என்று சிரித்து,

“கல்யாணம் தானே… நல்லா கேட்டுக்கோ… அடுத்த தேர் திருவிழா.. அஞ்சு வருஷம் கழிச்சு இதே தேர் திருவிழாக்கு நீ என்னை பார்க்கும் போது என் கழுத்துல தாலி ஏறியிருக்கும்….” என்று சவால் போல் சொல்ல, வஜ்ரவேலுக்கு இன்னும் கோவத்தை சீண்ட,

“ஓ.. சவாலா.. சரி அதையும் பாப்போம்.. இதே தேர் திருவிழாக்கு நானும் வருவேன்.. பாப்போம் யார் ஜெயிக்கிறான்னு…” என்று சொல்ல, அவனை மேலும் கீழும் பார்த்தவள்,

“ம்ம் எனக்கு கல்யாணம் ஆகுதோ இல்லையோ.. ஆனா நீ இப்படியே இருந்தன்னு வை.. உன்னை ஒருத்தியும் திரும்பி கூட பார்க்க மாட்டா…” என்று சொன்னவள் மேற்கொண்டு அங்கே நிற்காது அவனை சுத்திக்கொண்டு ஓடிவிட்டாள்.

ஆனால் அவள் சொன்ன நேரமோ என்னவோ தெரியவில்லை, அடுத்து அவன் வாழ்வில் எந்த பெண்களுமே வரவில்லை. அத்தனை ஏன் இவனே வழிய போய் பேசினாலும் கூட யாரும் இவனிடம் விருப்பம் இருப்பது போல் காட்டுவதாகவும் இல்லை.. ஒரே வறட்சியாய் போனது.

இதற்கெல்லாம் காரணம் மலர்விழி சொன்னது தான் என்று ஆணித்தரமாய் நம்பினான்..   

 

Advertisement