Advertisement

தீண்டல்  – 31(1)

              மகள் கிளம்பிய நிமிடம் வரை விறைப்பாய் நின்றிருந்த முனீஸ்வரன் பார்கவியை பார்த்து முறைத்துவிட்டு வேகமாய் மாடிக்கு சென்றுவிட்டார். அறைக்குள் நுழையும் வரை அதே மிடுக்கும் திமிருமாய் இருந்தவர் முகம் கதவை அடித்ததும் வேதனையில் கசங்கியது.

சந்நிதி அவரை பேசி சென்றதை தாங்கமுடியாமல் வலியின் சுமை அழுத்த அமைதியாக படுத்துக்கொண்டார். யாரையும் பார்க்கவும் பிடிக்கவில்லை. பேசவும் பிடிக்கவில்லை.

கோபம் தான் தன் கண்ணை மறைத்தது. இருப்பினும் தன்மையாக பேசியிருக்கலாமோ என்ற எண்ணமெலாம் இல்லை?  என் பொண்ணை நான் பேச கூடாதா? அந்த உரிமை இல்லயா? என்ற வறட்டுபிடிவாதமும் அர்த்தமில்லாத கோபமும் அவரை ஆட்டிப்படைத்தது,

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல வசீகரனின் வருகை. இதை கொஞ்சமும் அவர் எதிர்பார்க்கவில்லை.

“போயா” என்ற வார்த்தை மகளின் வாயிலிருந்து வர திடுக்கிட்டு பார்த்தவர் அங்கே வசீகரனை கண்டதும் நிலைகுலைந்து போனார்.

அவன் எப்பொழுது வந்திருப்பானோ என்ற அச்சமும் அவன் முன்னால் மகள் பேசி சென்றாளே என்கிற அவமானமும் போட்டிபோட இனி எந்த முகத்தை வைத்து அவனை பார்க்க? என்ற ஆற்றாமை படுத்தியது.

இரவு வரை நடந்ததை நினைத்து நினைத்து கவலைகொண்டவர் சரியாக சாப்பிட வந்துவிட்டார் நேரத்திற்கு. பார்கவி அப்பொழுதும் அதே இடத்தில் அழுதுகொண்டே இருக்க கோபமாய் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்துகொண்டார்.

அவரின் வருகையை பார்த்ததும் தான் எதுவும் செய்யவில்லை என்கிற ஞாபகமே வர அடுப்படிக்குள் செல்லும் நேரம் புகழ் வந்துவிட்டான் உணவு பாத்திரங்களுடன்.

“சித்தி இதுல டிபன் இருக்கு. உங்களுக்கும் சித்தப்பாவுக்கும் அம்மா குடுத்துவிட்டாங்க…” என்றவன் சற்று சத்தமாக முனீஸ்வரனுக்கு கேட்கும் விதமாக,

“நிதியும், மாப்பிள்ளையும் நம்ம வீட்டுல தான் இருக்காங்க சித்தி…” என பார்கவியிடம் மட்டுமே பேசியவன் முனீஸ்வரனிடம் முகம் காட்டவே இல்லை.

புகழ் கோபமாய் இருப்பதை கண்டுகொண்டவர் இவனெல்லாம் என்னை பார்த்து முகம் திருப்பறதா என்று நக்கலாய் நினைத்துக்கொண்டார்.

“நாளைக்கு காலையில விஷ்வா மாப்பிள்ளையும், தியாவும் வராங்க. நிதியை அவங்க கொண்டுபோய் மாமியார் வீட்டில விடறாங்கலாம்…” என்று அவன் சொலி முடித்ததும்,

“என்ன? அவங்களுக்கு யார் தகவல் சொன்னது? இப்படித்தான் ஊர் ஊரா தம்பட்டம் அடிச்சு மானத்தை ஏலம் போட்டுட்டு இருக்காளா சிறுசு?…” என படக்கென முனிஸ்வரன் எழுந்து நிற்க,

“யாரும் வர சொல்லலை சித்தி. யாரோ தியா வீடியோ கால்ல இருக்கும் போது கோவமா பேசினாங்களாம். அவ பயந்துட்டா. அதான் கிளம்பி வரா. அவங்கவங்க கோவத்த அடக்கி வாய மூடி புத்தியை வேலை செய்ய விட்டிருந்தாலே இத்தனை தூரம் இந்த பிரச்சனை வந்திருக்காது சித்தி…”

“டேய் எதுனாலும் என்னை பார்த்து பேசுடா. உன் சித்தி என்ன உனக்கு கொடுக்கா? நீ சொல்லி அவ என்கிட்டே சொல்ல?…” அதற்கும் அவனிடம் பாய,

“அதான் காது கேட்குதுல. உங்ககிட்ட பேசவே முடியாது சித்தப்பா. சும்மா என் கோவத்தை கிளப்பாதேங்க. ஆடிக்கு அழைச்சுட்டு வந்துட்டு அவளை படாத பாடு படுத்திட்டீங்க. அதுவும் அவ புருஷன் வந்து கூப்பிட வந்த நேரத்துல. இதுல தனியா ஏலம் போடறாங்களாம் மானத்தையும் கௌரவத்தையும்…”

“கூப்பிட வராங்கன்னு சொல்லிட்டா வந்தாங்க? திடுதிப்புன்னு வந்து நின்னா? வேணும்னு செய்யறாங்களா?…”

“ஆமா அவங்களுக்கு தேவை பாருங்க வேணும்னு செய்ய? வேற வேலை இல்லையாக்கும்? நீங்க என்ன எல்லாத்தையும் அவங்கட்ட சொல்லிட்டா செஞ்சீங்க?…”

“என் மகளை கூட்டிட்டு வரதுக்கு நான் யாரை கேட்கனும்? அவளை அனுப்பறது எப்போன்னு நான் முடிவெடுக்க கூடாதா? எனக்கு எல்லா உரிமையும் இருக்கு…” ஈ வசனம் பேச,

“செம்ம டயலாக் சித்தப்பா, அப்ப நீங்க நிதியை உங்க வீட்லயே வச்சுக்கனும். கல்யாணம் செஞ்சு குடுத்திருக்க கூடாது. கோபம் வந்தா என்ன வேணும்னாலும் உங்களுக்கு சாதகமா பேசுவீங்களா?…” புகழும் குரலை உயர்த்தி அவரை கேள்வி கேட்க,

“புகழ் நிதி சாப்ட்டாளா? மாப்பிள்ளை எதுவும் சொன்னாரா?…” பார்கவி சிறிய குரலில் பேச,

“எங்க சித்தி? அழுதுட்டே இருந்தா. இப்பதான் கொஞ்சம் சமாதானம் ஆகியிருக்கா. ஓகே ஆகிடுவா. மாப்பிள்ளை, அவர் என்ன நினைக்கார்ன்னு தெரியலை. ஆனா நிதியை கூட்டிட்டு தான் கிளம்புவேனு சொல்லிட்டார்…” என்றதும் முனீஸ்வரனின் முகத்தில் சிறு நிம்மதி பரவியது அவரறியாமல்.

“நீங்க சாப்பிடுங்க சித்தி. உங்களை நினைச்சு தான் அவளுக்கு ரொம்ப கவலை. அவளை நாங்க பார்த்துப்போம். நீங்க உங்களை கவனிச்சுக்கோங்க. உங்க உடம்பை பார்த்துக்கோங்க…”

அவனின் அக்கறையில் முனீஸ்வரனின் முகம் சுருங்கிவிட்ட அதை கண்டு பதறிய பார்கவி வேகமாய் தட்டை எடுத்துவைத்து அவருக்கு உணவை பரிமாற்ற சுழித்த முகத்துடனே உண்டுமுடித்தார்.

“நீங்களும் சாப்டுங்க சித்தி. நான் அதுக்கப்பறம் தான் போவேன்…” அவன் சொல்லியதும் கை கழுவ எழுந்தவர்,

“அதான் மவன் சொல்றான்ல, என்னத்துக்கு என் மூஞ்சியையே பார்த்துட்டு இருக்க? நாலு உருண்டைய அள்ளி வயித்துல அடை. அதான் மவளும், மருமவனும் சேர்ந்து கிளம்புறாங்கள. இதுக்கு மேல என்ன உனக்கு?…” என பார்கவியிடம் கடுமையாக சொல்லிவிட்டு அவர் செல்ல,

“உங்களை சாப்பிட சொல்லித்தான் அந்த லட்சணத்துல பேசிட்டு போறாரு. நீங்க உட்காருங்க. நானும் சேர்ந்தே சாப்பிடறேன்…” என உடன் அமர்த்தி பேசிக்கொண்டே சாப்பிட்டு அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

நீதிமாணிக்கம் வீட்டில் அனைவரும் இரவு உணவை அமைதியாகவே உண்ண ராதா அழைத்துவிட்டார் என்ன ஏதென்று கேட்க. கோமதி அனைத்தையும் ஒப்பித்துவிட,

“அவருக்கு இதெல்லாம் பத்தாதுக்கா. மனுஷனுக்கு என்னதான் குணமோ? நல்ல குணசாலியை பார்த்து உங்க தங்கச்சியை கட்டிவச்சீங்க போங்க…” என அவர் பங்குக்கு பேச நிதி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

சாப்பிட்ட பின்னர் தான் வீட்டிற்கு சொல்லவேண்டும் என்கிற ஞாபகமே வர போனை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்கு சென்றான் வசீகரன். அம்பிகாவை அழைக்க,

“என்னடா ஆடி விருந்தா?…” எடுத்த எடுப்பிலேயே கேட்க இவன் கடுப்பாக,

“கிளம்பியிருந்தா தான் நீ சொல்லியிருப்பியே…”

“ம்மா, என்னை பேச விடுங்க…” என்றவன் நடந்த அனைத்தையும் சொல்ல அம்பிகாவின் பக்கம் அத்தனை அமைதி.

“என்னம்மா ரொம்ப பீல் பன்றீங்க போல?…” இடக்காய் மகன் பேச,

“ஒரு ப்ரீ அட்வைஸ் மகனே, அங்க வச்சு நிதிக்கிட்ட ஏதும் பேசிடாத. ஏற்கனவே கோபத்தில இருக்கா. பெரியமாமனார் வீட்ல போன மாதிரியே கிளம்பி வந்துடு. இங்க வச்சு பேசிக்கோ. சமாதானம் செஞ்சுக்கோ…”

“ம்மா, என்னை டேமேஜ் பண்ணிட்டே இருக்கீங்க…”

“நீ ஸ்ட்ராங்கா இருந்தா என் டேமேஜ் எல்லாம் உனக்கு ஒரு இமேஜா? போடா போய் தூங்கு…” என்று வைத்துவிட்டாலும் அம்பிகாவிற்கு மனம் கனத்துப்போனது. போன் செய்து பேசு என்று குகன் சொல்ல,

“நான் இப்ப பேசினா பரிதாபப்படற மாதிரி இருக்கும்ங்க. அதுவும் போன்ல பேசற விஷயம் இல்லை இது. இங்க வரட்டும் இதை பத்தி நிதியா சொல்ற வரை நாம கேட்டுக்க வேண்டாம். சங்கடப்படுவா. என்ன சண்டை, கோபம்னாலும் அவர் அவளுக்கு அப்பா…” என்று சொல்லிவிட்டார்.

அம்பிகாவிடம் பேசிவிட்டு அமைதியாக நின்றுகொண்டிருக்க புகழ் அவனை அழைக்க வந்துவிட்டான்.

“தூங்க போகாம இங்க என்ன பன்ற?…” வசீகரன் கேட்க,

“நீங்க இங்க என்ன பன்றீங்களோ அதத்தான் நானும் பண்ண போறேன்…”

“நான் அம்மாக்கிட்ட பேச வந்தேன்…”

“அத்தைகிட்ட சொல்லியாச்சா நாளைக்கு வரீங்கன்றதை…”

“ஹ்ம்ம் பேசிட்டேன்…”

“இங்க நடந்தது எல்லாம்…”

“சொல்லிட்டேன்…”

“ரொம்ப வருத்தப்பட்டாங்களா?…”

“ஹ்ம்ம், என்னை நிதிட்ட வாயை குடுத்து வாங்கிக்கட்டிக்காதன்னு ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாங்க…” சிரிக்காமல் அவன் சொல்ல புகழ் தான் அப்படி சிரித்தான்.

“அத்தை சான்ஸே இல்லை…” என சொல்லி சொல்லி சிரிக்க வசீகரனுக்குமே புன்னகை.

“நிதி என்ன பன்றா?…”

“அதத்தான் சொல்ல வந்தேன். தூங்க வர சொன்னாங்க அப்பா. நாளைக்கு சீக்கிரமே விஷ்வா மாப்பிள்ளை வந்திடுவாரு. வந்ததும் காலைல டிபன் சாப்பிட்டு கிளம்பிடுவோம்னு சொல்லியிருக்காங்க…”

“ஹ்ம்ம், ஓகே…”

“உங்களுக்கு ட்ரெஸ்?…”

“இட்ஸ் ஓகே, இதுவே போதும்…”

“அதெல்லாம் எதுவும் வேண்டாம். நான் சித்தி வீட்டுக்கு போய்ட்டு வரப்போ உங்களுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வந்துட்டேன். போறப்பவே அண்ணன் சொல்லித்தான்விட்டான். உங்க ரூம்ல இருக்கு. நைட் சேஞ்ச் பண்ண லுங்கி கொண்டு வந்திருக்கேன். மாத்திக்கோங்க…”

“ஏன் நீ திடீர்ன்னு வாங்க போங்கன்ற புகழ்?…”

“அப்பப்போ தானாவே வந்திடுது. இப்பவும் வந்திருச்சு…”

“வரவேண்டாம். எனக்கு என்னவோ போல இருக்கு…” ஏனோ இந்த பிரச்சனையால் புகழ் விலகி நிற்பதை போல தோற்றமளிக்க சொல்லிவிட்டான். புகழுக்கு கஷ்டமாகிவிட்டது.

“ஐயோ அப்படியில்லை வசீ, நான் இதை வச்சு கூப்பிடறேன்னு நினைக்க வேண்டாம். தானா வந்திருச்சு…”

“ஓகே, வா போகலாம்…” என அவனுடன் பேசிக்கொண்டு கீழே வர கோமதி நின்றுகொண்டிருந்தார் புகழை முறைத்துக்கொண்டு.

“ஓகே புகழ் குட்நைட்…” என சொல்லிவிட்டு வசீகரன் கீழே உள்ள ஒரு அறைக்குள் நுழைந்துகொள்ள,

“அறிவிருக்காடா, கூட்டிட்டு வான்னு சொன்னா உடனே வரமாட்டியா? அவ தூங்கறதுக்குள்ள அவர் வந்தா தான எதாச்சும் பேசி சமரசம் ஆவாங்க. உன்னையெல்லாம்…” என திட்ட,

“ம்மா போய் தூங்குங்க. காலையில பேசிக்கலாம்…” என்றுவிட்டு அவனும் தூங்க சென்றுவிட்டான்.

வசீகரன் அறைக்குள் வரும் பொழுது நிதி உறங்கியிருந்தாள். கணவனை தவிர்க்க உறங்குவது போல கண்ணை மூடியவள் நிஜமாகவே உறங்கிவிட வசீகரனும் வெகுநாட்களுக்கு பின்னான அவளின் அருகாமையில் உறக்கம் வராமல் விடிய விடிய விழித்திருந்தான்.

அதிகாலையிலேயே விஷ்வா வந்துவிட ஹாலில் கேட்ட சத்தத்தில் நிதி எழுந்துகொண்டாள். அவளின் முகம் பார்த்தபடியே வசீகரன் இருக்க அவனை கண்டமாத்திரத்திலேயே புரிந்துபோனது இரவெல்லாம் அவன் தூங்கவில்லை என்பது.

ஏனோ அவனின் பார்வை அவளை சிறிது தடுமாற செய்ய கட்டிலில் இருந்து இறங்கியவள் முகத்தை கழுவிவிட்டு ஹாலுக்கு வர அவளின் பின்னே வசீகரனும் வந்துவிட்டான். விஷ்வா அவனை முறைக்க இதேதடா இந்த பார்வை என்பதை போல வசீகரன் சிரிக்க,

“சரி பேசிட்டு இருங்க, நா போய் குளிச்சுட்டு வரேன்…” என்ற நீதிமாணிக்கம் இளையவர்களுக்கு வழிவிட்டு எழுந்துசெல்ல கோமதியும் அடுப்படிக்குள் நுழைந்துகொள்ள அங்கே சட்டென ஒரு அமைதி சூழ,

“இதென்ன திடீர் சைலன்ட்? இதுக்குத்தான் நீங்க அவ்வளவு தூரத்தில இருந்து கிளம்பி வந்தீங்களா?…” வேண்டுமென்றே விஷ்வாவை சீண்ட,

“நீ பேசாதடா, வாய்ச்சவடாலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அனுப்பமட்டேன்னு சொன்ன நீ நிதியை கூப்பிட்டு பேசி கிளம்பி வர சொல்லியிருந்தா அவ வரமாட்டேன்னா சொல்லியிருப்பா?…”

“ஒருவேளை சொல்லிட்டா. அதான் பேசலை…” சட்டென வசீகரனும் நிதியை பார்த்துக்கொண்டே சொல்லிவிட அனைவருக்குமே என்னவோ போல் ஆகிவிட்டது.

“ப்ச், இப்ப இதை பேசனுமா? அதுவும் இந்த காலையில? ரொம்ப நாள் கழிச்சு ஒண்ணா இன்னைக்கு மீட் பண்ணியிருக்கோம். ஜாலியா பேசலாமே. இந்த பிரச்சனை இப்ப வேண்டாம்…”புவன் சொல்ல அனைவருமே பொதுவாய் பேச ஆரம்பித்து நேரம் செல்ல நன்றாக விடிந்து விட்டது.

பரபரப்பாக காலை உணவை முடித்துக்கொண்டு அனைவரும் கிளம்பி வர வசீகரனுக்கு திகைப்பாகிவிட்டது.

“எல்லாருமே தான் வரோம் மாப்பிள்ளை. எங்க பொண்ணை இப்படியே அனுப்ப எங்களுக்கு மனசில்லை. அதான் நாங்களே கொண்டுவந்து விடறோம்…” என நீதிமாணிக்கம் கிளம்பிவந்து நிற்க யாரும் எதுவும் சொல்லவில்லை.

வசீகரனின் காரில் சந்நிதி, விஷ்வா, சந்தியா சேர்ந்துகொள்ள விஷ்வாவின் காரை புகழ் எடுத்துக்கொள்ள அதில் நீதிமாணிக்கமும், கோமதியும் ஏறிக்கொள்ள ராதாவிற்கு அழைத்து தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டார் நீதிமாணிக்கம்.

Advertisement