Advertisement

சுகம் – 21

அடுத்தடுத்து வந்த நாட்கள் எல்லாம் இனிமையாய் தான் கழிந்தது.. அதிலும் இப்பொழுது எல்லாம் சௌபர்ணிகாவை கேட்கவே வேண்டாம். வீட்டில் எந்நேரமும் சலசலப்பு தான் கலகலப்பு தான். அதிலும் ஸ்ரீநிதி கல்லூரி விட்டு வந்துவிட்டால் கேட்க வேண்டியதே இல்லை..

சர்வேஷ் சௌபர்ணிகா உறவில் வேறு எவ்வித முன்னேற்றம் இல்லையெனிலும் இப்பொழுது இருப்பதே இனிமையாய் தான் இருந்தது இருவருக்கும்.. செல்ல செல்ல சீண்டல்களும், யாரும் பார்க்காத தீண்டல்களும் இருவரையுமே இன்னும் இன்னும் காதலிக்க வைத்தன..

அன்றும் அப்படி தான் சௌபர்ணிகா மாடியில் துணி காயப்போட்டு கொண்டு இருக்க சர்வேஷ் வந்து அவளை பின்னே அணைத்தான்.. முதலில் திடுக்கிட்டவள் கணவன் என்று தெரிந்து

“என்னங்க இது, மொட்ட மாடியில.. ம்ம்ச் விடுங்க…” என்று  பிடிக்காதவள் போல சலிக்கவும் அவனது அணைப்பு இறுகியதே ஒழிய விலகவில்லை..

“சொன்னா கேட்கவே மாட்டீங்களா..???” என்று சிணுங்க,

“இப்ப சொல்லு தெளிவா கேட்குது..” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான்..

“நான் துணி காய போடணும்…”

“போடு……….. ”

“உங்க முதுகில தான் நாலு போடணும்…. ”

“தாராளமா.. நீ அடிக்காம யாருடி அடிக்க போறா..????” என்று அவள் புறம் முதுகை காட்டி நிற்க மாடியின் அந்த பக்கம் இருந்து களுக் என்று சிரிப்பு சத்தம் கேட்டு இருவரும் அடித்துப் பிடித்து விலகி நின்றனர்..

வேறு யாரு எல்லாம் ஸ்ரீநிதி தான்… இருவருக்கும் அசடு வழிந்து நின்றிருந்தனர்..

“அண்ணா !!! சர்வேஷ்னு ஒரு ரோசக்காரன் இருந்தான் தெரியுமா உனக்க்கு ??” என்று நக்கலடிக்க,  

“ஸ்ரீ நீ அப்போவே கீழ போன ???” என்று இழுத்தாள் சோபி..

“போனேன் அண்ணி, அம்மா செடிக்கு தண்ணி ஊத்த சொன்னாங்க.. அதான் வந்தேன்.. பார்த்தா இப்படி ஒரு சீன்.. ஹ்ம்ம் கலக்குங்க… ஆனா அண்ணா அடி வாங்க நீ முதுகு காட்டின பாரு… அல்டிமேட்….” என்று கிண்டல் அடித்தபடியே கீழே சென்றுவிட்டாள்.

ஆனால் சர்வேஷின் முகம் தான் விழுந்துவிட்டது.. சர்வேஷை பார்த்து சிரித்தபடி திரும்பிய சோபியின் முகம் கேள்வியாய் நோக்க,

“ஸ்ரீ வீட்டுல இருக்கான்னு சொல்லமாட்டியா..?? என்ன நினைப்பா.. ??மானமே போச்சு..” என்றான் கடுகடுப்பாய்…

“என்னங்க… இதுல இவ்வளோ கோவப்பட என்ன இருக்கு?? அவ இன்னிக்கு காலேஜ் போகல.. இது ஒரு விசயமா???”

“எனக்கு இதுவிஷயம் தான். அவ என்ன நினைப்பா..? வயசு பொண்ணு இப்படியெல்லாம் பார்த்தா… ம்ம்ச் இதுக்கெல்லாம் சேர்த்து தான் ஸ்ரீ கல்யாணம் முடியவும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னேன்…” என,

‘இதையேன் இத்தனை பெரிதாய் நினைக்கிறான்.. சொல்லபோனால் ஸ்ரீநிதி கூட இதனை பெரிதாய் நினைத்திருக்க மாட்டாள்..’ என்று நினைத்தவள் அதனை அப்படியே கூற,

“இங்க பாரு சுபி.. கிண்டல் கேலியா பேசுறது வேற.. ஆனா.. இப்படி..” என்றவன், இன்னமும் முகத்தை இறுக்கமாய் வைத்துகொள்ள,

“நீங்கதான் சர்வா இப்படி நினைக்கிறீங்க.. ஸ்ரீ இப்போ இதை மறந்துகூட போயிருப்பா…” என்று அவனை சமாதனம் செய்ய முயல,

“என்னவோ இனிமே ஸ்ரீ வீட்ல இருந்தா முன்னாடியே சொல்லிடு..” என்றவன் கீழிறங்கி சென்றுவிட்டான்..     

அன்றிலிருந்து சர்வேஷ் மீண்டும் சுருங்கிக்கொண்டான்.. இதையெல்லாம் யாராவது பெரிதாய் நினைப்பார்களா என்று கேட்கலாம். ஆனால் அவன் நினைப்பான்.. தன்னுடைய எந்தவொரு செயலும் பிறருக்கு எவ்வித சங்கடமும் தர கூடாது என்று நினைப்பவன் அல்லவா..

எங்கே ஸ்ரீக்கு இதெல்லாம் மனதளவில் சங்கடங்கள் தருமோ என்று எண்ணிவிட்டான். அதை செயலிலும் காட்டினான். பிறர் முன் சௌபர்ணிகாவிடம் சரியாய் பேசுவதுகூட இல்லை. அதிலும் ஸ்ரீ இருந்தால் மனைவி என்று ஒருத்தி அங்கிருப்பதே கண்ணில் படாது அவனுக்கு.. இதேது அறைக்குள் என்றால் அவளை ஒட்டிக்கொண்டு திரிவான்..

முதலில் சௌபர்ணிகா இதை பெரிதாய் நினைக்கவில்லை ஆனால் கொஞ்சம் கால் சரியாகி அவள் மீண்டும் மாலுக்கு சென்று வரவும் தான் சர்வாவிடம் இந்த வித்தியாசம் புரியத் தொடங்கியது.. வேலை நேரத்தில் கூட நன்கு பேசுபவன், வீட்டிற்கு வந்தால் அப்படியே மாறிவிடுவது..

அன்றும் அப்படித்தான் காலையில் இருந்து அவளை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இரவு உறங்கும் போது மட்டும் அணைக்கவும் வெடுக்கென்று கையை தட்டிவிட்டாள் சோபி..

“என்ன சுபி என்ன கோவம் ???” என்று கொஞ்சியவனை என்ன செய்யலாம் என்பது போல இருந்தது அவளுக்கு..

“இப்போதான் உங்களுக்கு பொண்டாட்டியே கண்ணுக்கு தெரியுதோ…??? ”

“ம்ம்ச் என்ன சுபி என்ன பிரச்சனை உனக்கு ??? ”

“எல்லாமே பிரச்சனை தான்… எதோ தெரியாம அண்ணிக்கு ஸ்ரீ பார்த்துட்டா.. அதுக்குனு இப்படியா இருப்பீங்க…?? இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கல.. உங்களுக்கு வேணும்னா ஒரு மாதிரி, இல்லைன்னா இன்னொரு மாதிரி.. எனக்கு தான் அப்படியே தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு..” என்றாள் லேசாய் தன் தலையில் அடித்து..

“ஹேய் சுபி என்ன பேசுற??? அவ வயசு பொண்ணு, நம்ம எப்படி இருக்கணுமோ அப்படிதான் இருக்கனும்…”

படுத்திருந்தவள் வேகமாய் எழுந்தமர்ந்து “இல்ல கேக்குறேன் நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?? மத்தவங்க முன்னாடி கட்டி பிடிச்சு உருள சொல்லல.. ஒரு சாதாரண பார்வை, பேச்சு இதுகூட இல்லைனா எப்படி..?? காலைல தண்ணி கேட்டீங்கன்னு குடுத்தா, டேபிள்ள வை எடுத்துகிறேன்னு சொல்றிங்க?? ஏன் தண்ணி வாங்கினா கூட அடுத்தவங்க நம்மல தப்பா நினைப்பாங்களா என்ன ?? சத்தியமா சொல்றேன் கடுப்பாகுது சர்வா…”  என்றவளுக்கு முகத்தினில் அப்பட்டமாய் எரிச்சல்..

“என்ன சுபி இப்படியெல்லாம் பேசுற.. நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோம்மா…” என்று சமாதனம் செய்ய முயல,

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்… நீங்க என்ன நினைக்கறீங்க இந்த காலத்து பிள்ளைங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னா.. அது அது ஸ்கூல் படிக்கும் போதே எல்லாம் கரைச்சு குடிச்சுருதுங்க… முறைக்காதீங்க… உண்மை அது தான்..  நான் ஒன்னும் உங்களை எல்லார் முன்னாடியும் கொஞ்சுங்கன்னு சொல்லலை.. இயல்பா இருங்கன்னு தான் சொல்றேன்.. அப்படி இல்லைன்னா தான் எல்லாருக்கும் வித்தியாசமா படும்… ” என்றாள் அழுத்தமாய்.

சர்வேஷோ பதில் எதுவும் கூறாமல் அமைதியாய் இருந்தான். அவள் கூறுவதிலும் நியாயம் இருப்பது போலத்தான் தெரிந்தது அவனுக்கு. ஆனாலும் என்னவோ மனம் உடனே சரியென்று சொல்லிட முடியவில்லை.. அவனுக்கே அவனது நிலையை எண்ணினால் சிரிப்பு தான்..

“என்ன சிரிப்பு வருதோ… நான் நிஜமாதான் சொல்றேன்.. சின்ன சின்ன விசயங்களை எல்லாம் நீ தான் லென்ஸ் வச்சுப் பார்த்து பெருசு பண்றீங்க..” என,

“ஹ்ம்ம் சரி சரி.. போதும்விடு.. சும்மா அதையே சொல்லாத சுபி..” என்றான் சலுகையாய்..

“பின்ன நீங்க எப்போ எப்படி இருப்பீங்கன்னு தெரியாம அவதி படுறது நான்தான்..” என, “ஓகே ஓகே.. இனிமே அப்படி இல்லை போதுமா…” என்றான் உறுதியாய் சொல்வதுபோல்..

“ம்ம் தட்ஸ் குட்..” என்று சௌபர்ணிகா சொல்ல,   

‘என்னடா சர்வா உன் நிலைமை.. இருக்க இருக்க நீ பொண்டாட்டிக்கு தலை மட்டும் தான் ஆட்டுவ போல..’ என்று கேலி பேசிய மனதை அடக்கி

“அதெல்லாம் இல்லை, சுபி எப்பவும் சரியா தான் சொல்லுவா, நான் தான் சரியா புரிஞ்சுக்காம நடந்துப்பேன்…” என்று தனக்கு தானே சமாதானம் கூறிக்கொண்டான்..

“என்ன அமைதியா இருக்கீங்க ????”

“ஹ்ம்ம் வர வர நான் உன்னை மாதிரி ஆகுறேன், நீ என்னை மாதிரி ஆகுற சுபி அதான் யோசிக்கிறேன் ”

“புரியல.. ”

“இல்ல முதல்ல எல்லாம் நீ மனசுக்குள்ள யோசிப்ப, நான் என்ன அமைதியா இருக்கன்னு கேட்பேன், இப்போ அது தலைகீழா நடக்குதா அதான்..” என்று வேண்டுமென்றே இழுத்தான்..

அவன் கூறிய விதம் அவளுக்கே சிரிப்பை கொடுக்க, “ஓ !! சர் மனசுக்குள்ள என்ன நினைச்சீங்க???” என்றாள் தலை சரித்து..

அவளை ஒரு பார்வை பார்த்தவன் “என்னென்னவோ நினைச்சேன் ” என்றான் ஒரு மார்க்கமாய்..

“அந்த என்னனென்னவோ தான் என்னனு கேட்டேன்… ”

“அதெல்லாம் சொல்ல முடியாது சுபி…” என்ற படியே அவன் நெருங்கி அமரவும் தான் அவனின் மாற்றம் புரிந்தது..

“என்.. என்ன??” என்றவள் திடுக்கிடத் பார்க்க,

“ஏன் உனக்கு புரியாதா..??” என்றவனின் பார்வை அவளை ஏனோ செய்ய,

“இல்லை.. அது.. சர்வா…” என்றவளுக்கு தொண்டை வறண்டு போவது போல் இருக்க, பார்வையை தழைத்துக் கொண்டாள்..

“ஓய்  படபட பட்டாசு.. இப்படி பார்க்காம முகத்தை திருப்பினா எப்படி??” என்று சர்வேஷ் இன்னமும் அவளை நெருங்க,    ஏன் என்று கேட்க நினைத்தவளுக்கு வார்த்தை வரவில்லை..

“ஏன்னு கேட்கமாட்டியா சுபி….” என்று அவளை தன் மீது சாய்த்தவனுக்கு மேற்கொண்டு அவள் என்ன கேட்டாள் என்பது புரியவில்லை, அவன் என்ன கூறினான் என்றும் தெரியவில்லை, இதயம் இரண்டும் பேச தொடங்கவும், வார்த்தைகளுக்கு வேலை இல்லை..

மௌனம் தான் ஆட்சி செலுத்தியது, ஆயினும் அம்மௌனத்தில் மறைந்திருந்த சிருங்கார மொழி சர்வேஷ் சௌபர்ணிகா மட்டுமே அறிவர்.. மனமும் மனமும் பேசிக்கொள்ள உடலும் உடலும் உறவாடிக்கொண்டது.. ஒருவரது நினைவில் ஒருவர் இத்தனை நாள் சுகம் கண்டிருக்க, இன்று நிஜத்தில் அச்சுகத்தை உணர்ந்தனர்…

மறுநாள் சௌபர்ணிகா கண் விழிக்கும் போதே, சர்வேஷ் அங்கேயில்லை.. எங்க போனான் என்று பார்வையை சுற்றி முற்றிப் பார்க்க, அப்போது தான் கடிகாரத்தின் மீதும் அவள் பார்வை பதிய, மணி காலை எழு மணியைத் தொட்டுக்கொண்டு இருந்தது..

“ஓ.. சர் வாக்கிங் போயிருப்பார்…”  என்று எண்ணிக்கொண்டு குளித்து முடித்து இவள் கீழே வரும்போது அவனும் வந்து அங்கே ஹாலில் அமர்ந்திருக்க,

“ம்மா சீக்கிரம்மா… பஸ் போயிடும்…” என்று ஸ்ரீநிதி கத்திக்கொண்டு இருந்தாள்..

சௌபர்ணிகா சர்வேஷை ஒரு பார்வை பார்த்தவள் “என்ன ஸ்ரீ.. இன்னிக்கு சீக்கிரமே கிளம்பிட்ட..” என்றபடி டைனிங் டேபிளை நோக்கிப் போக,

“ம்மா… எனக்கு டீ குடு…” என்றான் சத்தமாய் சர்வேஷ்..

இப்போது அவனைக் கடந்து தானே வந்தேன்.. என்னிடம் கேட்டால் என்ன.. அப்போ நேத்து சொன்னதெல்லாம் சும்மா.. இப்போ ஸ்ரீ முன்பு மீண்டும் தன்னை கண்டுகொள்ளாமல் விடுகிறான் என்று நினைத்தவளுக்கு ரொம்பவும் மனம் சுணங்கிப் போனது..

மோகனா அப்போது தான் சட்னி செய்துகொண்டு இருக்க, “நான் ஸ்ரீக்கு தோசை ஊத்துறேன் அத்தை…” என்றபடி இவள் போய் நிற்க,

“அதெல்லாம் வேணாம்.. அவனுக்கு டீ போடு சோபி.. சட்னி ரெடிதான்.. நான் தோசை ஊத்திக்கிறேன்..” என்று மோகன சொல்ல,

“இல்லத்தை அது..” என்று அவள் தயங்கவும்,

“என்ன சோபி.. அவன் என்கிட்ட தானே கேட்டான்னு தயக்கமா.. அவன் அப்பப்போ அப்படித்தான் விடு கண்டுக்காத.. இப்போ நீ கொண்டு போய் கொடுத்த குடிக்கமாட்டன்னு சொல்வானா என்ன..??” என்று சொல்லவும்,

“ம்ம் சரிங்கத்தை..” என்றவள் சர்வேஷுகும் அவளுக்குமாய் டீ போட்டு எடுத்துக்கொண்டு போக, அவன் ஹாலில் இல்லை..

‘அதுக்குள்ள எங்க போனான்…’ என்று பார்வையை சுழல விட, “சர்வேஷ் இப்போதான் ரூமுக்கு போனான் ம்மா…” என்றார் விஸ்வநாதன்..

“சரிங்க மாமா நீங்க டீ குடிக்கிறீங்களா??” என்று கேட்க,

“இல்லைம்மா அல்ரடி முடிஞ்சது..” என்று விஸ்வநாதன் சொல்லவும் “ம்ம்..” என்று சொன்னபடி மேலே அறைக்குச் சென்றாள்.

சர்வேஷ் ஹாயாக அங்கே அறையில் இருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவன் முன் டீ க்ளாஸ் வைத்தவள், அவளுக்கும் ஒன்றை எடுத்துக்கொண்டு இன்னொரு இருக்கையில் அமர,

“ஓய்.. என்னதிது…” என்றான் கொஞ்சம் அதிகாரமாய் கேட்பதுபோல்..

“என்ன??” என்றவள் பார்வை அவன் பக்கம் இல்லாமல் போக,

“இப்படிதான் டீ குடுக்குறதா..??” என,

“பின்ன..” என்பதுபோல் பார்த்தாள்.. 

அவனோ பதில் சொல்லாமல் எழுந்து வந்து அவளருகே அமர்ந்தவன் அவள் குடித்துக்கொண்டு இருந்த டீ கிளாஸ் வாங்கி, தானும் ஒருவாய் பருகி “திஸ் இஸ் ஸ்பெஷல்…” என, அவளோ என்ன செய்கிறான் என்று இமைக்காது பார்த்தாள்..

“என்ன சுபி..” என்று சர்வேஷ் கேட்க,

“கீழ டீ கேட்டுட்டு ஏன் மேல வந்தீங்க??” என,

“இதோ இதுக்குதான்..” என்றவன் அவளை இன்னமும் நெருக்கி அமர்ந்து, டீ குடிக்க,

“நீங்க இருக்கீங்களே..” என்று அவன் முதுகில் தட்டியவள், “நான் ஒன் செக்கன்ட் டென்சன் ஆகிட்டேன்..” என்றாள்..

“ஹா ஹா.. அப்பப்போ இப்படி டென்சன் ஆகு அப்போதான் நல்லாருக்கு..” என்று அவளோடு வம்பு பேசியவன், பின் கொஞ்ச நேரத்தில் குளிக்க செல்ல, மீண்டும் சௌபர்ணிகா இறங்கி கீழே வந்தாள்.

நாட்கள் இப்படியே செல்ல,   ஒருநாள் காலை,  “என்னால முடியாது சர்வா… நான் ஷாப்பிங் தான் போகணும்…” என்று  ஒரேடியாய் அடம் பிடித்து கொண்டு இருந்தாள் சோபி..

“ஏய் சுபி அதைதான் நானும் சொல்றேன், மாலுக்கு வர தான, அங்கேயே நமக்கு பிடிச்சதா பார்த்து வாங்கலாம்..”

எத்தனை முறை இதையே கூறி இருப்பானோ, அவன் குரலில் அத்தனை கெஞ்சலும் சலிப்பும்.. வேறொன்றும் இல்லை, தலை தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் எடுக்க என்று சௌபர்ணிகாவின்  பெற்றோர் கேட்க, அவளோ எங்களுக்கு பிடித்தமாய் வாங்கிக்கொள்கிறோம் என்றுவிட்டாள்..

சௌபர்ணிகா இப்படி சொல்லவும் முறைப்படி வந்து பரந்தாமனும் புனிதாவும் தாம்பூலம் வைத்து அதில் பணமும் வைத்துக் கொடுத்தனர் புது துணி வாங்கவென்று..   

சர்வேஷ் தங்கள் மாலில் ஏதாவது வாங்கலாம் என்று கூற சோபியோ வேறு கடைக்கு தான் போவேன் என்று ஒற்றை காலில் நின்றாள்.. இவர்களது சண்டையை வீடே வேடிக்கை பார்த்தது..

“அத்தை நீங்களே சொல்லுங்க, இவர் மால் வச்சிருந்தா அதுக்குன்னு அங்கேயே தான் போய் விழணுமா?? மதுரைல வேற கடைக்கே போக கூடாதுன்னு சட்டமா என்ன ???” என்று அவள் மோகனவையும் கூட்டுக்கு இழுத்தாள்..

அவள் சொல்வதும் சரிதானே, பெண்களுக்கு உடை விசயத்தில் ஒரு கடையில் மனம் திருப்தி ஆகுமா என்ன??? மருமகள் கூறியதற்கு மாமியாரும் ஆமாம் சொல்ல மகனது நிலை தான் பாவமாய் போனது, இறுதியில் சௌபர்ணிகாவின் முடிவே சரி என்று அனைவரும் கூற சர்வேஷோ தன் முடிவில் பிடிவாதமாய் நின்றான்..

“அம்மா என்னை எல்லாருக்கும் தெரியும், நானே வேற கடையில வாங்குனா, அப்புறம் நம்ம பொருள் எல்லாம் குவாலிட்டி இல்லை போலன்னு தான நினைப்பாங்க. நம்மாலே நம்ம கடையில வாங்கலைன்னா எப்படிம்மா.. அப்பா நீங்களே சொல்லுங்க…” என்று அவனும் கேட்க,

அவன் சொல்வதும் சரிதானே, முதலாளி அவனே அவன் கடையில் வாங்கவில்லை என்றால் வேறு யார் வருவர்?? மோகனாவும் விஸ்வநாதனும்  மகனுக்கும் மருமகளுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழித்தனர்..

இவர்களோடு சேர்ந்து ஷாப்பிங் செல்லலாம் என்று காத்திருந்த ஸ்ரீநிதியும் கார்த்திக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர்..

“ஸ்ரீ, இவங்களை நம்புன்னா அம்போ தான், தீபாவளிக்கு உனக்கும் எனக்கும் ட்ரெஸ் கிடைக்காது.. நான் கிளம்புறேன்பா, பசங்கக்கூட போய் வாங்கிக்கிறேன்…” என்று அவன் தப்பிக்க பார்க்க ஸ்ரீயோ,

“ஓய் ஒழுங்கா இரு.. இல்லை உங்கப்பாகிட்ட சொல்லிருவேன்…” என்று மிரட்டவும் வேறு வழியில்லாமல் காத்திருந்தான்…

இறுதியாய் சௌபர்ணிகா “சரி நீங்க வர வேண்டாம், நாங்க போய் பர்ச்சேஸ் பண்ணுறோம் உங்களுக்கும் சேர்த்து…” என்று கூறிவிட்டு கிளம்ப ஆயத்தமானாள்..

“என்ன எனக்கும் சேர்த்தா.. நோ, நோ நான் தான் எனக்கு செலக்ட் பண்ணுவேன்..” என்று அவளோடு பதிலுக்கு பதில் கேட்டபடி அவனும் அறைக்குள் நுழைய வெளியே

ஸ்ரீநிதி “போச்சு இன்னிக்கு இவங்க வந்த மாதிரி தான்…” என்று கூறும் சத்தம் நன்றாய் கேட்டது இவர்களுக்கு..

“பாத்தியா எல்லாம் உன்னால தான்.. ஒருநாள் சொல்ற பேச்சு கேட்கிறயா சுபி…??”

“ஏன் கேட்காம என்னவாம்… ”

“அப்போ நம்ம மால்ல வாங்கலாம்…” என்றவனை முறைத்தவள் அவன் சட்டை பொத்தானை திருகியபடி

“என்னங்க நீங்க, இந்த ஒரு தடவை தானே.. ப்ளீஸ்…” என்று பார்க்கவும்,

“நானும் ஒரு தடவை தான சுபி சொல்றேன்..” என்று அவனும் அவள் கழுத்தில் போட்டிருக்கும் செயினை பிடித்து திருக்கிகொண்டே கேட்க,

“ப்ளீஸ் சர்வா…” என்று கேட்டவளின் குரலும் முகமும் பார்த்ததும். சர்வேஷ் சரண்டர் ஆகாமல் என்ன செய்வான்..??

“சரி சரி முகத்தை தூக்காத, எனக்கு எப்பவும் என் சுபி சிரிச்ச முகமா இருந்தா தான் பிடிக்கும்…” என்று அவளது கைகளை பிடித்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தினான்..

“அது உங்க பொறுப்பு சர்.. ”

“ம்ம் ம்ம் என் பொறுப்பு என்னனு எனக்கு தெரியும்…” என்றபடி அவளை அணைக்க முற்பட, வெளியே வேண்டுமென்றே கார்த்திக்கும், ஸ்ரீயும் “அக்கா…. அண்ணா…” என்று கத்த

“கரடிங்க” என்று முணுமுணுத்த படி வெளியே வந்தனர் இருவரும்..

மோகனா “என்னடா முடிவு பண்ணிட்டீங்களா எங்கன்னு?? ” என்று கேட்கவும்

“ஹ்ம்ம் சுபி சொல்ற இடத்துக்கே போலாம்மா, எல்லாருக்கும் தான் வியாபராம் நடக்கணும்.. நம்மலே இப்படி நினைச்சா எப்படிம்மா.. அதுனால அடுத்தவங்களுக்கும் வாய்ப்பு குடுக்கணும்ல…” எனவும் கார்த்திக்கும் ஸ்ரீயும் பார்த்த பார்வையில்

சர்வேஷ் “சரி சரி எல்லாம் கிளம்பி வாங்க நான் கார் எடுக்கிறேன்…” என்று நழுவிக்கொண்டான்..

விஸ்வநாதன் “நீங்க எல்லாம் போயிட்டு வாங்க..” என்றிட, மற்றவர்கள் மட்டும் கிளம்பினர்.. 

அங்கே ஷாப்பிங் சென்ற இடத்தில் கேட்கவா வேண்டும், சௌபர்ணிகா மட்டும் சென்றாலே அப்படி இருக்கும்.. இதில் ஸ்ரீ, கார்த்திக் வேறு சென்றால் யப்பா சர்வேஷின் பாடுதான் திண்டாட்டமாய் போனது..

பொருத்து பொருத்து பார்த்தவன் “டி சுபி ஒழுங்கா சீக்கிரம் செலக்ட் பண்ணு… இல்லை நடக்குறதே வேற…” என்று மெல்ல மிரட்டினான்..

“அப்படியா என்ன பண்ணுவிங்கலாம்???” என்று கெத்தாய் கேட்டவள்,

“என்னங்க… இந்த கலர் நல்லாருக்கா.. இந்த டிசைன் பாருங்க..” என்று அவனை ஒருபாடு படுத்தி எடுத்துவிட்டாள்.

“சுபி, நீ ஸ்ரீக்கு ஹெல்ப் பண்ணு, நானே உனக்கு செலக்ட் பண்றேன் ” என்று நகட்டிவிட்டு அவனே சடுதியில் தேர்ந்தெடுத்தும் விட்டான்..

“யப்பாடி, எப்படி டா கார்த்திக் இவளை சமாளிச்சீங்க இத்தனை வருஷம்???” என்று கார்த்திக்கிடம் கேட்க,

“அதை ஏன் மாமா கேக்குறீங்க??? எப்பவுமே இப்படி தான் சென்னையில எடுத்துக்கோன்னு சொன்னா அதுவும் எடுக்கமாட்டா, இங்க அம்மாவையும் எடுக்க விடமாட்டா, தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்ன அவசர அவசரமா கடைக்கு போய் கூட்டத்தில கடைக்கு போய் வாங்கினா தான் இவளுக்கு திருப்தியா இருக்குமாம்..” என்றான் அவனும்..

இப்படி ஆண்கள் இருவரும் புரணி பேச, பெண்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கி வரவும் பணம் கட்டிவிட்டு ஒருவழியாய்  அனைவரும் கிளம்பினர்.. ஒருவழியாய் தீபாவளியும் நெருங்கியிருந்தது..          

                           

   

                

 

 

Advertisement