Advertisement

அத்தியாயம் – 19

 

அவளை கூட்டிச் சென்று ஆவடியில் விட்டு வந்தான். அவன் அங்கிருந்து கிளம்பும் முன் அவனிடத்தில் வந்தவள் “வாரம் வாரம் நீங்க வரணும்…”

 

“வரமுடியாது…”

 

“நீங்க வரலைன்னா நான் அத்தைக்கு போன் பண்ணி சொல்லுவேன்” என்று ஒரு பேச்சுக்கு அவனை மிரட்டினாள்.

 

அதில் சற்று எரிச்சலுற்றவன் “அப்போ கண்டிப்பா வரமாட்டேன்… உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ போடி” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

 

பாவைக்கு அவன் வரவேண்டும் என்ற ஆசை அதனால் தான் அப்படி பேசினாள் ஆனால் அதுவும் அவனை எரிச்சல்படுத்தும் என்றறிந்திருந்தால் பேசியிருக்க மாட்டாள்.

 

நடக்கிறது நடக்கட்டும் எல்லாம் இன்னும் கொஞ்சம் நாளைக்கு தானே என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவள் வீட்டுடன் ஐக்கியமானாள். அவள் வீட்டிற்கு வந்து ஒரு வாரமும் ஓடிப் போனது

 

“சங்கவி…” என்ற அன்னையின் குரல் உள்ளிருந்து கேட்க அவள் எழுந்து செல்லும் முன் “நீங்க இருங்க அண்ணி, நான் பார்க்கறேன்…” என்று உள்ளேச் சென்றாள் பாவை.

 

“உங்க அண்ணி எங்க??” என்றார் மகேஸ்வரி.

 

“அண்ணி இப்போ தான் சமையல் முடிச்சுட்டு சோபால உட்கார்ந்து இருக்காங்க… அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்மா என்னன்னு சொல்லுங்க…”

 

“இல்லை நீ ஏன்??”

 

“என்னம்மா ஆச்சு உங்களுக்கு நான் தானே இதுவரைக்கும் செஞ்சுட்டு இருந்தேன்…”

 

“ஆமா ஆனாலும் நீ இன்னொரு வீட்டுக்கு போக வேண்டிய பொண்ணு உன்னை கஷ்டப்படுத்த வேணாம்ன்னு…” என்று இழுத்தார் அவர்.

 

“அம்மா என் வீட்டுக்காரரே அதுக்கு ஒண்ணும் சொல்லலை. பார்த்த தானே அவரே தானே என்னை கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனாரு… சும்மா எதாச்சும் சாக்கு சொல்லாதம்மா…”

 

“இனிமே என்ன வேணும்னாலும் என்னை கேளுங்க… அண்ணி மாசமா இருக்காங்க அவங்களை தொல்லை பண்ணாதீங்க…”

 

“ஹ்ம்ம் சரிம்மா…” என்றுவிட்டார் மகேஸ்வரியும்.

 

பாவை வீட்டிற்கு திரும்பி வந்த பின்னே அவள் பார்வையில் பட்டது சங்கவியின் முகவாட்டமே.

 

அதுவும் இல்லாமல் அன்னையும் தன்னை அழைப்பதை விட்டு சங்கவியை அழைப்பதும் அவளுக்கு வித்தியாசமாய் படவே தான் அன்னையிடமே பேசினாள் அவள்.

 

பாவை தனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று மாமியார் வீட்டிற்கு கிளம்பிச் சென்றுவிட்டாள். ஆனால் இடைப்பட்ட அந்த நாளில் சங்கவியை தன் அன்னை கொஞ்சம் படுத்தி வைத்திருப்பார் என்று அவளுக்கு புரிந்தது.

 

பெற்ற மகளுக்கு அன்னையின் விருப்பு வெறுப்புகள் தெரியும் அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் சங்கவிக்கு அது கஷ்டம் தானே.

 

அதுவும் இது போன்ற நேரத்தில் அவளுக்கு இன்னமும் கஷ்டமாக இருந்திருக்கும் என்று புரிந்தது அவளுக்கு.

 

மகேஸ்வரி நல்லவர் தான் ஆனால் இந்த பாழாய் போன நோய் வந்ததில் இருந்து அவரின் புலம்பல்களும் ஓலங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

 

நோயின் அறிகுறியின் போது கூட அவர் இப்படி இல்லை. இந்த நோய் என்று தெரிந்த நாளில் இருந்து “நான் செத்து போய்ட கூடாதா… உங்களை எல்லாம் கஷ்டப்படுத்துறேனே” என்ற புலம்பல் தான் அதிகம்.

 

சமயங்களில் “அய்யோ எரியுது திகு திகுன்னு எரியுதே” என்றும் அலறுவார். பாவைக்கு அதெல்லாம் பழகிய ஒன்று. அந்த காலகட்டங்களில் தான் அவள் பொறுமை என்பதையே கற்றுக் கொண்டிருந்தாள்.

 

முதல் கீமோ முடிந்த அன்று அவர் புலம்பியது கொஞ்ச நஞ்சமல்ல. அது அவரின் வலியின் வேதனை நோயினால் அவர்படும் பாடு என்பது அவளுக்கு தெரியும்.

 

அதனாலேயே அவரைவிட்டு இப்படி அப்படி நகராமல் அவரை பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படியே இங்கிருப்பது அவளுக்கு பெரும் மனவுளைச்சலை கொடுத்திருந்தது.

 

அதுவும் அவள் மாமியார் வீட்டிற்கு சென்று வந்ததிற்கு ஒரு சாக்காகி போனது. ஆனால் தான் இல்லாத இத்தனை நாளில் தன் அன்னை சங்கவியை கொஞ்சம் அதிகமாகவே வேலை வாங்கியிருப்பார் என்று புரிந்தது.

 

அன்னையின் தேவை கவனித்து அறையை விட்டு வெளியில் வந்தவள் சங்கவியின் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

“அண்ணி அம்மா ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்களா…” என்றாள் மெது குரலில்

 

“அச்சோ அப்படியெல்லாம் இல்லை, ஏன் அப்படி நினைக்கறீங்க??”

 

“உங்க முகவாட்டமே சொல்லுது… சரி விடுங்க, இனிமே அம்மாவை நான் பார்த்துக்கறேன். நீங்க ரிலாக்ஸ்டா இருங்க, ஆளும் கொஞ்சம் இளைச்சு போன மாதிரி இருக்கீங்க…”

 

“நல்லா சாப்பிடுங்க அப்போ தானே பாப்பாக்கு நல்லது” என்ற அவளின் கனிவான குரலில் கொஞ்சம் கண்ணைக் கரித்தது சங்கவிக்கு.

 

அதை மற்றவளுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டாள் அவள். ஆனாலும் அது பாவையின் கண்ணில் தப்பாமல் விழுந்தது. “ஆமா அண்ணி உங்களுக்கு ஏழாம் மாசம் ஆரம்பிக்க போகுது தானே” என்றாள்.

 

“ஆமா அண்ணி அதுக்கு இன்னும் இருபது நாளிருக்கே…” என்றாள் அவள்.

 

“ஹ்ம்ம்…” என்றவள் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஒன்றை செய்தாள்.

 

அன்று மாலை அவள் மாமியாருக்கு அழைத்தாள். “சொல்லும்மா எப்படியிருக்கே?? சங்கவி எப்படியிருக்கா??” என்ற அவரின் பரஸ்பர நல விசாரிப்பிற்கு பதில் சொல்லி முடித்திருந்தாள் பாவை.

 

“அத்தை ஒரு விஷயம் சொல்லணும்…” என்று நிறுத்தினாள்.

 

“சொல்லும்மா…”

 

“அது வந்து அத்தை, நான் அதிகப்பிரசங்கித்தனமா பேசுறேன்னு நினைச்சுக்காதீங்க…” என்றவள் இன்னமும் விஷயம் என்னவென்று சொல்லவில்லை.

 

“நான் அப்படியெல்லாம் எடுத்துக்க மாட்டேன் நீ சொல்லும்மா…” என்றார் மாலினி.

 

“அண்ணிக்கு ஏழாம் மாசம் பிறக்க போகுது… நாம சீமந்தம் பண்ணிடலாம்ல அத்தை… நீங்க அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாம்ல…”

 

“அஞ்சாம் மாசம் கூட அவங்க இரண்டு நாள் தான் இருந்திட்டு வந்தாங்க அங்க… அம்மாவை பார்த்துக்க தான் நானிருக்கேனே…”

 

“அவங்க அங்க வந்து ரெஸ்ட் எடுக்கட்டுமே… அவங்களுக்கு பிடிச்சதை நீங்க செஞ்சு கொடுப்பீங்கல்ல…” என்று அவள் பேச அவருக்கு என்ன சொல்ல புரியாமல் அமைதியாய் இருந்தார்.

 

“அங்க எதுவும் பிரச்சனையாம்மா??” என்றார் மெதுவாய்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை… அண்ணிக்கும் அங்க வரணும்ன்னு ஆசையா இருக்கும்ல… அதுவும் இல்லாமல் அம்மாவை ஆஸ்பிட்டல் கூட்டி போக வைக்கன்னு இருக்கோம்”

 

“அவங்களும் பேஷன்ட் அண்ணி வேற மாசமா இருக்காங்க… எதுவும் அபெக்ட் ஆகிட கூடாதுல…” என்று இழுத்தாள்.

“நான் இல்லாம பத்து நாள் அவங்களே கவனிச்சிருக்காங்க… நான் பாட்டுக்கு லூசு மாதிரி அங்க கிளம்பி வந்திட்டேன் அவங்களை தனியாவிட்டு…” என்றாள்.

 

“சரிம்மா எனக்கு புரியுது” என்றவர் “நான் உங்க அம்மாகிட்ட பேசறேன்” என்றார்.

 

“நாளைக்கு பேசுங்க அத்தை… நான் அதுக்குள்ளே அம்மாகிட்ட பக்குவமா பேசி வைக்கிறேன்” என்றாள் அவள்.

 

சொன்னது போலவே அன்று இரவே அன்னையிடம் பேச்சை ஆரம்பித்தாள். “அம்மா அண்ணிக்கு ஏழு மாசம் ஆகப் போகுதுல…”

 

“சீமந்தம் பண்ணி அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடலாம்ல…”

 

“இப்போவே என்ன அவசரம், இங்க இருக்க வீடு தானே. பொறுமையா ஒன்பது தொடங்கும் போது செஞ்சுக்கலாம்…” என்றார் மகேஸ்வரி.

 

“அம்மா சொன்னா கேளுங்க… நாம இங்க ஆஸ்பிட்டல் வீடுன்னு அலைஞ்சிட்டு இருக்கோம்… அண்ணிக்கு எதுவும் இன்பெக்ட் ஆகிட்டா பேபிக்கு தானேம்மா கஷ்டம்…”

 

“நம்ம வீட்டு வாரிசும்மா நல்லபடியா பிறக்க வேணாமா… ஒன்பதாம் மாசம் போறதுக்கு கொஞ்சம் சீக்கிரம் போகப் போறாங்க அதானே…”

 

“வேணும்னா குழந்தை பிறந்து சீக்கிரமே இங்க கூட்டிட்டு வந்திடுங்க… அதுக்குள்ளே நீங்களும் நல்லா தெம்பா எழுந்து நடமாட ஆரம்பிச்சிடுவீங்க…” என்று அவர் மறுக்காதவாறு பேசினாள்.

 

அவரும் இப்போது சரியென்று அவளுக்கு தலையாட்ட மறுநாள் காலையில் சங்கவியின் முன் அண்ணனிடம் பேச அவள் முகம் ஒரு நொடி மலர்ந்ததை உணர்ந்தாள் பாவை.

 

என்ன தான் மாலினி வாரம் இரு முறை வந்து போனாலும் அவருடனே இருப்பது போலாகுமா… அன்னையின் கவனிப்பே தனி தானே!! அதை சங்கவியும் எதிர்பார்த்திருந்தாள் போலும்.

 

“இல்லை பாவை இப்போ என்ன அவசரம்… இன்னும் இரண்டு மாசம் அம்மாக்கு கீமோ முடிஞ்சிரும்… அப்புறம் வேணா அவ போகட்டுமே!!”

 

‘இந்த அண்ணன் சரியான லூசு… இவனுக்கு எப்படி புரிய வைக்க…’ என்று யோசித்தாள் பாவை.

 

“அதெல்லாம் சரி தான் அண்ணா… அண்ணி அங்க வீட்டுக்கு போய்ட்டா இங்க மறுபடியும் அம்மா தனி தானே… என்னையும் எங்க வீட்டுக்கு அனுப்பிருவீங்க…”

 

“ஹ்ம்ம்…” என்று குழப்பமாய் பார்த்தான் அவன். அவனையும் ஏதேதோ பேசி சம்மதிக்க வைத்திருந்தாள். அவனாகவே மாலினியிடம் மனைவியின் சீமந்தம் பற்றி பேசவும் வைத்திருந்தாள்.

 

அவன் அப்புறம் நகர்ந்ததும் பாவையின் அருகே வந்த சங்கவி “தேங்க்ஸ் அண்ணி…” என்றிருந்தாள்.

 

“எனக்கு எதுக்கு தேங்க்ஸ்…”

 

“இல்லை எனக்கும் அம்மா வீட்டுக்கு போகணும் போல இருந்துச்சு. ஆனா இங்க சூழ்நிலை இப்படி இருக்கும் போது அவர்கிட்ட கேட்க தயக்கமா இருந்துச்சு…”

 

“நீங்க மட்டும் பேசலைன்னா இதெல்லாம் நடந்திருக்காது…” என்றாள் அவள் உள்ளார்ந்து.

 

அதோ இதொவென்று ஒரு மாதம் கடந்து சங்கவியின் சீமந்த நாளும் வந்திருந்தது. சிவாவிற்கு நடந்தது எதுவும் தெரியாது.

 

தங்கைக்கு விரைவாகவே சீமந்தம் செய்து அழைத்து வருகிறோம் இவ்வளவு தான் அவனறிந்தது. மாருதி வீட்டளவிலேயே செய்துக் கொள்ளலாம் என்றிருக்க வீடு விழா கோலம் பூண்டிருந்தது.

 

பாவை இங்கு வந்து இத்தனை நாளில் சிவா ஒரு முறை கூட வந்து எட்டிப்பார்க்கவில்லை. அவனுக்கு அழைத்தால் வேலை இருக்கிறது என்று சொல்லி பேசாமலே போனை வைத்துவிடுவான்.

மாலினியிடமும் கடையில் அதிக வேலை என்பதால் அங்கு செல்ல முடியவில்லை என்றே தான் சொல்லியிருந்தான்.

 

பாவை இருவீட்டின் சார்பாகவும் பம்பரமாய் தான் சுழன்றுக் கொண்டிருந்தாள் அன்று. விழா நாளுக்கென்று பட்டுப்புடவையும் கட்டி அழகாய் தயாராகி இருந்தாள்.

 

இன்று எப்படியும் சிவா வருவானே என்பதிலும் அவனை நினைத்தும் முகம் செங்காந்தளாய் மலர்ந்து சிவந்திருந்தது அவளுக்கு.

 

மாலினியும் சதாசிவமும் காரில் முன்னமே வந்து இறங்கியிருந்தனர். சிவா அவர்களுடன் வரவில்லை போலும்.

 

மாமியாரிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனை பாவைக்கு. அவரிடம் மெதுவாய் “அவர் பின்னாடி வர்றாரா அத்தை…” என்றாள்.

 

“கோவில்க்கு போயிட்டு நேரா இங்க வந்திடறேன்னு சொன்னான். அவன் தங்கச்சி பேர்ல அபிஷேகத்துக்கு கொடுத்திருக்கானாம்மா…” என்றார் அவர்.

 

‘என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல’ என்று மனம் சிணுங்கியது அவளுக்கு. முகம் கொஞ்சம் வாடிய போதும் வந்தவர்களை கவனிப்பதும் சங்கவியை தயார்ப்படுத்துவதும் என்று வேலை ஓடியது.

 

இடையில் அவள் அன்னையையும் கிளப்பி ஹாலில் போட்டிருந்த இருக்கையில் அமர வைத்தாள். சங்கவியையும் அழைத்து வந்து மனையில் உட்கார வைத்தாயிற்று.

 

ஒவ்வொருவராய் அவளுக்கு நலங்கிட்டு வளையல் பூட்டவும் விழா தொடங்கிவிட்டது. இன்னமும் சிவா வந்திருக்கவில்லை.

 

வாசலில் ஒரு கண்ணும் விழாவில் ஒரு கண்ணுமாய் அவள் பார்வை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.

 

‘என்னை பிடிக்காம தான் வராம இருக்காரோ’ என்று தோன்ற விழிகளில் நீர் அரும்பியது… “பாவை… பாவை…” என்று வெகு நேரமாய் யாரோ அழைக்கும் குரலில் தன்னை மீட்டவள் திரும்பி பார்க்க மாலினி தான் அழைத்திருந்தார்.

 

“இங்க வந்து நில்லும்மா… இதை வர்றவங்களுக்கு கொடு…” என்று அவள் கையில் வளையல், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் அடங்கிய தாம்பூலத்தை கொடுத்தார்.

 

கடனே என்று வந்து அங்கு நின்றவளின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. ஆனால் உதட்டில் செயற்கை புன்னகை ஒட்டவைத்து வந்தவர்களை கவனித்தாள்.

 

தன்னினைவில் இருந்தவளுக்கு சிவா வந்ததோ அங்கு ஒரு ஓரமாய் அமர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்ததோ தெரியவில்லை.

விழா முடிந்த தருவாயில் தான் தன்னவனை கண்டுக்கொண்டாள் அவள். முகம் நொடியில் மலர்ந்துவிட அவனை பார்த்தவள் முகம் நாணம் கொண்டிருந்தது.

 

‘இவ ஏன் இப்படி என் உயிரை வாங்குறா… பார்த்து பார்த்து கொல்றா… என்னமோ ரொம்ப நாளா எனக்காக உருகற மாதிரியும் லவ் பண்ணிட்டு இருக்க மாதிரியும்…’ என்று எண்ணிக்கொண்டான் சிவா.

 

வெளியாட்கள் சாப்பிட்டு கிளம்பிவிட்டனர். வீட்டினர் மட்டுமே இனி உணவருந்த வேண்டும். பாவை அவள் அன்னைக்கு முன்னமே உணவளித்து விட்டிருந்தாள்.

 

சங்கவிக்கு மாலினி தனியே உணவை கொடுத்து உண்ண வைத்திருந்தார். மாருதியும் அவளுடன் சேர்ந்து கொள்ள அவனும் உண்டு முடித்திருந்தான்.

 

“பாவை நீயும் சிவாவும் சாப்பிட்டிருங்கம்மா… மாமாவும் நானும் அப்புறம் சாப்பிடுறோம்” என்றார் மாலினி.

 

“நீங்க மூணு பேரும் சாப்பிடுங்க அத்தை… நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன் எனக்கு பசியில்லை…” என்றுவிட்டு அவள் அவர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

“சிவா நீ அவளோட சேர்ந்து சாப்பிடேன்…” என்றார் மாலினி.

 

“எனக்கு ரொம்ப பசிக்குதும்மா…”

 

“அத்தை அதெல்லாம் ஒண்ணும் வேணாம்… தனியா சாப்பிடுறது எனக்கொண்ணும் புதுசில்லை நான் சாப்பிட்டுக்கறேன்…” என்று அவர்களை உண்ண வைத்தாள்.

 

தனியே அவளுடன் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்கத் தான் சிவா அப்படி சொன்னான். ஆனால் அதற்கு அவள் சொன்ன பதில் தான் ஏனோ அவனை பிசைந்தது.

 

ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு எழுந்துவிட்டான். மூன்று மணிக்கு மேல் நல்ல நேரம் தொடங்குவதால் அப்போது கிளம்பலாம் என்றிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

பிறகு சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொன்னவளுக்கு ஏனோ சாப்பிட பிடிக்கவில்லை. மாலினி சாப்பிட்டு முடித்து அவளை கவனிக்க நினைக்க அதற்குள் மகளின் குரல் கேட்கவும் அங்கு சென்றுவிட்டார்.

 

அனைவரும் இருந்தும் ஒரு வித தனிமை உணர்வு அவளை வாட்டியது. ஓவென்று கத்தி அழ வேண்டும் போல் தோன்றியது.

 

அனைத்தும் ஒதுக்கி முடித்து மதிய சமையலை கவனிக்கச் சென்றாள். மூன்று மணிக்கு மேல் சிவா சொல்லியிருந்த வண்டி வந்திருக்க அவர்கள் சங்கவியை கூட்டிக்கொண்டு கிளம்பினர்.

 

ஏனோ சிவா பாவையின் பார்வையை தவிர்த்துக் கொண்டிருந்தான். கிளம்பும் முன் தான் அவனுக்கு தெரியும் சீமந்தம் விரைவாக நடந்ததில் பாவையின் பங்கு அதிகம் என்று.

 

கணவனை விட்டு பிரிவதால் சங்கவிக்கு கஷ்டமாக இருந்தது. சிவா தற்செயலாய் பின்னால் போக செல்ல சங்கவி மாருதியின் மீது சாய்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்.

 

“தினமும் உங்களை பார்க்காம எனக்கு கஷ்டமா இருக்கும்… என்னை அடிக்கடி வந்து நீங்க பார்க்கணும்… வார வாரம் வந்திடணும்…” என்று எழுதுக்கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். மாருதியும் பிரிவுத்துயரில் இருப்பது அவனை பார்க்கும் போதே புரிந்தது.

 

சிவாவிற்கு ஒரு மாதிரியாகி போனது. அவன் அன்னையை தேடி வந்தவன், “ஏம்மா இப்போவே சீமந்தம் வைச்சீங்க… கொஞ்ச நாள் கழிச்சு வைச்சிருக்கலாம்ல. நெறைய பேருக்கு ஒன்பதாம் மாசம் தானே சீமந்தம் பண்றாங்க” என்றான்.

 

“இல்லைப்பா பாவை தான் சொன்னா… எனக்கும் அதான் சரின்னு பட்டுச்சு, அதான் முன்னமே வைச்சுட்டோம்” என்று அவர் மொட்டையாய் சொல்ல சிவாவிற்கு இப்போது கோபம் மூக்கின் நுனியில் வந்து அமர்ந்தது.

 

சமையலறையில் இருந்த பாவையிடம் சென்றவன் “உன்கிட்ட பேசணும் உள்ள வா…” என்றுவிட்டு அவளறைக்குள் நுழைந்திருந்தான். பின்னோடு அவளும் உள்ளே வர கதவை மூடியவன் “உன் மனசுல என்ன தான்டி நினைச்சுட்டு இருக்கே??”

“அதான் சொன்னீங்களே உங்களை தான் நினைச்சுட்டு இருக்கேன்…” என்றாள் அவள் பதிலுக்கு.

 

அவளின் அந்த பதில் அவனை இன்னமும் கோபப்படுத்த பல்லைக்கடித்தவாறே “உன்னால தான் சங்கவியை இன்னைக்கே வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்…”

 

“என்னை பழிவாங்குறதுக்கு பதிலா இப்போ என் தங்கச்சியை பழி வாங்குறியா நீ… புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்திருந்தா உனக்கு பிடிக்காதுல”

 

“கூட பிறந்த அண்ணனையும் அண்ணியையும் கூட பிரிச்சு வைப்பியாடி நீ…” என்று தன் போக்கில் கத்தினான் அவன்.

 

“என்ன பேசறீங்க நீங்க?? நான் அப்படிலாம் நினைக்கலை…”

 

“உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சும் தலையை கொடுத்த என்னைத் தான் அடிச்சுக்கணும்… நீ மனுஷியே இல்லைடி ராட்சசி…” என்று கத்திச் சென்றுவிட்டான்…

 

தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாலும்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்!!

Advertisement