Advertisement

அத்தியாயம் – 23

 

“என்னங்க ஏதோ பேசணும்ன்னு சொல்லிட்டு பேசாம இருக்கீங்க??”

 

“எப்படி ஆரம்பிக்கறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்… நான் பண்ண நல்லதுன்னா ஈசியா சொல்லிடலாம்…”

 

“நீங்க என்ன தப்பா பண்ணீங்க… இப்படி தயங்கிட்டு இருக்கீங்க… எனக்கு தெரிஞ்சு நீங்க எதுவும் தப்பு செஞ்ச மாதிரி தெரியலை” என்றாள் அவன் மனைவி.

 

“அப்படி எல்லாம் இல்லை ஓவி… தப்பு பண்ணாதவன்னு யாருமேயில்லை… ரொம்ப நல்லவனா, தப்பே பண்ணாதவனா எவனுமே இருக்க முடியாது…”

 

“இன்பாக்ட் தப்பு பண்ணி திருத்திக்கறான் பாரு அவன் தான் நல்லவனா இருப்பான்… தப்பே பண்ணாம நல்லவனா இருக்கவனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கலைன்னு வேணும்ன்னா சொல்லிக்கலாம்…”

 

“மொத்தமா எல்லாரையும் சொல்றதா நினைக்காத, இதுல கண்டிப்பா சில எக்செப்ஷன் உண்டு தான் இல்லைங்கல…”

 

“இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க??” என்றாள் புரியாமல்.

 

அவனோ இன்னும் தயங்கியே நிற்க அவனருகே வந்தவள் “நீங்க தப்பே பண்ணியிருந்தாலும் நான் உங்களை தப்பா நினைக்க மாட்டேன் போதுமா… என்கிட்ட எதுக்கு இந்த தயக்கம்”

 

“ஏன் தப்பா நினைக்க மாட்டே?? தப்பு பண்ணா கண்டிக்க வேணாமா?? சண்டை போட வேணாமா”

 

“அடடா இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்… என்ன விஷயம்ன்னே சொல்லாம இப்படி பில்டப் கொடுத்தா நான் என்ன செய்வேன்…” என்றாள் அவள்.

 

கட்டிலில் சென்று அமர்ந்தவன் “இங்க வந்து உட்காரு” என்று அவனருகே சுட்டிக்காட்ட அவன் சொன்னதை செய்தாள் அவள்.

 

அவள் வலக்கரம் பற்றி தன் கரத்தினுள் வைத்துக் கொண்டவன் “நான் ஒரு தப்பு பண்ணியிருக்கேன் ஓவி… சாரி ஒன்னில்லை ரெண்டு…”

 

அவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்ன சொல்வானோ என்று. மனதிற்குள் ‘நீ அவனிடம் பேச நினைத்ததும் அவன் உன்னிடம் சொல்ல நினைத்ததும் ஒன்றாக இருக்குமோ’ என்ற மனசாட்சியின் குரல் வேறு.

 

அதன் தலையில் தட்டி, அதை தூர ஒதுக்கி அவன் விழிகளை ஊடுருவினாள். “நான் இதைப்பத்தி அம்மாகிட்ட மட்டும் தான் இதுவரைக்கும் சொல்லியிருக்கேன்”

 

‘அம்மாகிட்ட சொன்னானா அப்போ ஏதோ சின்னப்புள்ள தனமான விளையாட்டா தான் இருக்கும்’ என்று எண்ணிக்கொண்டு அவன் பேச்சை கேட்டிருந்தாள்.

 

“இங்க ஆவடி மெயின்ல ஜெயா இன்ஸ்டிடியூட் இருக்கு தெரியுமா மெயின் ரோடுல…” என்று அவன் ஆரம்பித்ததுமே அவளுக்கு விளங்க ஆரம்பித்துவிட்டது.

 

அவனுக்கு வாயால் பதில் சொல்லாமல் தெரியுமென்பதாய் தலையாட்டினாள். நான் பிளஸ் ஒன் படிக்கும் போது எங்க வீட்டில அடம் பிடிச்சு அங்க தான் டைபிங் கிளாஸ் சேர்ந்தேன்…”

 

“என்னோட ஸ்கூல் பசங்க எல்லாம் அங்க தான் படிச்சாங்க… டெய்லி வந்து சொல்வாங்க அந்த பொண்ணு அழகா இருந்தா இந்த பொண்ணு அழகா இருந்தான்னு…”

 

“அந்த வயசுல பொண்ணுங்களை சைட் அடிக்கிறது தப்பில்லைன்னு மத்த பசங்க மாதிரி தான் நானும் சுத்திட்டு இருந்தேன்…”

 

“பசங்க பண்ணுற அலம்பல் தாங்காம நானும் கெத்து காட்டணும்ன்னு தான் வீட்டில எங்கம்மாவை சோப்பு போட்டு இங்க உள்ள இன்ஸ்டிடியூட்ல சேர்ந்தேன்”

 

“என்னை ஒரு பொண்ணும் பார்க்கவே பார்க்காது. நான் வேற பார்க்க ஸ்கூல் பையன் மாதிரி இல்லாம பெரிய பையன் மாதிரி இருந்தேன் அப்போவே”

 

“முதல்ல ரொம்ப கடுப்பா இருந்துச்சு… என்னடா ஒரு பொண்ணும் நம்மை திரும்பி கூட பார்க்க மாட்டேங்குதேன்னு கொஞ்சம் ஈகோவாவும் இருந்துச்சு”

 

“நான் பார்க்க கொஞ்சம் சுமாரா தானே இருப்பேன்… எங்கண்ணன் கவி மாதிரி இல்லை நானு. கொஞ்சம் அப்பா ஜாடை” என்று அவன் சொன்ன போது அவன் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தாள் அவள்.

 

எல்லாரிடமும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் தான் நினைத்தை பேசும் அவனிடத்தில் இப்படி ஒரு பக்கம் இருந்ததை அப்போது தான் கண்டாள்.

 

ஒன்றும் சொல்லாமல் அவன் முகத்தை தன் இருகைகளால் தாங்கி மெதுவாய் அவன் இதழில் தன் இதழ் பதித்தாள்.

 

அதில் அவனுக்கு அப்படி ஒரு நிறைவு “தேங்க்ஸ் ஓவி…” என்றவன் விலகி சென்றவளை இழுத்து அவள் இதழை மூடினான்.

 

பின் மெல்ல விடுவித்தவன் “இந்த எண்ணமெல்லாம் எனக்கு அப்போ இருந்துச்சு ஓவி… இப்போ நான் அப்படி எல்லாம் நினைக்கறதில்லைடா…”

 

“அப்படி ஒரு எண்ணத்துல இருந்தப்போ நான் பண்ண தப்பு தான் அது. என்னை எந்த பொண்ணும் பார்க்கலைன்னா என்னன்னு நானே ஒரு பொண்ணை பார்த்தேன்”

“நிஜமாவே அவ ரொம்ப அழகா இருந்தா… பசங்க முன்னாடி கெத்து காமிக்கறதுக்காக ஒரு நாள் லவ் லெட்டரை அந்த பொண்ணோட டேபிள்ல வைச்சுட்டேன்…”

 

“அப்படி பார்க்காத ஓவி, நிஜமாவே நான் அந்த பொண்ணை லவ் எல்லாம் பண்ணவேயில்லை… அந்த வயசுல மத்த பசங்க முன்னாடி நானும் ஒண்ணும் சளைச்சவன் இல்லைன்னு காட்டுறதுக்கு பசங்க பண்ணுற அதே கெத்து தான் நானும் செஞ்சேன்”

 

“ஆனா அவகிட்ட இருந்து எந்த ரெஸ்பான்ஸ் இல்லை அப்போ… என்னடா இதுன்னு திரும்பவும் ஒரு நாள் லெட்டர் வைச்சேன்…”

 

“லவ் பண்ணலைன்னு திரும்பவும் ஏன் லெட்டர் வைச்சேன்னு யோசிக்கறியா… அட்லீஸ்ட் ஒரு ரெஸ்பான்ஸ் வேணுமா இல்லையா… சரின்னு சொல்றதோ இல்லை திட்டுறதோ எதுவா இருந்தாலும் தெரியணும்ல”

 

“எதுவுமே சொல்லலைன்னா கூட அதை அக்செப்டன்ஸ் பண்ணிட்டாங்கன்னு கூட தோணுமா இல்லையா…”

 

“நான் உங்களை எதுவும் கேட்கலை, நீங்க சொல்லுங்க…” என்றாள் அவள்.

 

“ஆனா இந்த முறை நான் வைச்ச லெட்டர் இன்ஸ்டிடியூட் சார் கைக்கு போய்டுச்சு… அதை படிச்சுட்டு அவர் அந்த பொண்ணை செமையா திட்டினார். முதல் தடவை வேற லெட்டர் வந்திருக்கு நீ ஏன் அதை என்கிட்ட சொல்லலைன்னு அவளை பிடிச்சு நல்லா திட்டி விட்டுட்டார்”

 

“நான் அந்த லெட்டர்ல இப்படி தான் எழுதி இருந்தேன், நான் முதல்ல அனுப்பின லெட்டர்க்கு பதில் இல்லையே, என்னை ஏத்துக்கிட்டீங்களான்னு”

 

பாவை ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்திருந்தாள். “அப்போ நான் பண்ணதெல்லாம் நினைச்சா இப்போ எனக்கு ரொம்ப சில்லியா தோணுது…”

 

“சார் அப்புறம் அந்த லெட்டர் யாரு எழுதினான்னு விசாரிக்க ஆரம்பிச்சார்… நான் என்ன தெரியுமா செஞ்சிருந்தேன், லெட்டரை கையில எழுதாம டைப் அடிச்சு கொடுத்திருந்தேன்…”

 

“பத்தாததுக்கு என் பேரை வேற நான் போடவேயில்லை அதுல…”

 

‘ரொம்ப தான் தெளிவு’ என்று எண்ணிக் கொண்டாள் பாவை.

 

“ஆனா லெட்டர் வைச்சப்போ அவ பார்வையில படுற மாதிரி வைச்சதென்னவோ நான் தான்…”

 

“அவ என்னை கைக்காட்ட எனக்கு சட்டுன்னு வேர்த்திடுச்சு… அதுவரைக்கும் நான் பொண்ணுங்க விஷயத்துல எல்லாம் மாட்டினதே இல்லை. எப்போ பார்த்தாலும் விளையாட்டு இல்லை பேசிட்டே இருக்கேன், சண்டை போடுறேன் இப்படிலாம் வீட்டில கம்பிளைன்ட் போயிருக்கு”

 

“அதுனால எனக்கொரு பயம், இதுல இன்னொரு விஷயம் என்னன்னா அந்த இன்ஸ்டிடியூட் சார் வேற யாருமில்லை அந்த பொண்ணோட அண்ணன் தானாம்…”

 

“அதுவே எனக்கு அன்னைக்கு தான் தெரியும்… முதல்லயே தெரிஞ்சிருந்தா அப்படி செஞ்சிருக்க மாட்டேனோ என்னவோ… எனக்கு என்னை பண்ணுறதுன்னு தெரியலை”

 

“சட்டுன்னு வேற ஒரு பையனை கைக்காட்டி விட்டுட்டேன். நான் எழுதவேயில்லை எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லி அடுத்த பேட்ச் பையனை கைக்காட்டி விட்டுட்டேன்”

 

“அப்புறம் என்னாச்சோ நான் அந்த இன்ஸ்டிடியூட் பக்கமே மறுநாள்ல இருந்து போகவே இல்லை…”

 

“ரொம்ப நாளா மனசுக்கு அந்த விஷயம் உறுத்திட்டே இருந்துச்சு. ஒரு நாள் திரும்பவும் அந்த பக்கம் வந்தேன், அப்போ தான் பிரண்ட்ஸ் அந்த பொண்ணு காணோம் வேற வீடு மாறிட்டாங்க போலன்னு சொன்னாங்க”

 

“ரொம்பவும் மனசுக்கு கஷ்டமா போச்சு. உண்மையாவே அன்னைக்கு நான் திரும்ப போனது அந்த பொண்ணை நேர்ல பார்த்து மன்னிப்பு கேட்கலாம்ன்னு தான்”

“ஆனா என்னென்னவோ நடந்து போச்சு. சரி நான் கைக்காட்டி விட்ட அந்த பையன் என்னானான்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு பார்த்தா பசங்க யாருக்கும் அவனை பத்தி தெரியலை…”

 

“மனசெல்லாம் ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியா இருந்துச்சு பெரிய தப்பு பண்ணிட்டமோன்னு… அந்த எண்ணத்துல இருந்து தப்பிக்க தான் விளையாட்டுல அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சேன் படிப்பைவிட்டு. அந்த வருஷம் பிளஸ்டூ பெயில் ஆனேன்”

 

“யார்கிட்டயாச்சும் நான் பண்ண தப்பை சொல்லிட்டா மனசுக்கு நிம்மதியா இருக்கும்ன்னு தோணிச்சு. அதனால தான் அம்மாகிட்ட மட்டும் விஷயத்தை சொன்னேன். நல்லா திட்டினாங்க…”

 

“அப்புறம் அட்வைஸ் பண்ணாங்க… அதுல இருந்து மனசு கொஞ்சம் தெளிவாச்சு… அப்புறம் தான் டிப்ளமோ சேர்ந்தேன்… நடுவுல படிப்புல கொஞ்சம் கவனம் இல்லாம போனதினால அங்கயும் எல்லா பாடமும் அரியர் வைச்சேன்”

 

“அதுக்கு அப்புறம் தான் உனக்கே தெரியுமே… காலேஜ்ல கொஞ்ச நாள் சஸ்பென்ட் பண்ணது அம்மா பேசாம போனது, அப்புறம் தான் படிப்புல கவனமா இருந்து படிக்கவே செஞ்சேன்” என்று நீண்ட உரையாய் சொல்லி முடித்திருந்தான் அவன்.

 

“ஒரு தப்பு சொல்லிட்டீங்க இன்னொன்னு…” என்றாள் பாவை மிகத்தெளிவாய்.

“ஹ்ம்ம் குட் இப்போ தான் நீ நல்ல பொண்டாட்டி!! இப்படி தான் இருக்கணும்” என்றவன் தொடர்ந்தான்.

 

“இன்னொரு தப்பு பெரிசா ஒண்ணுமில்லை, அது வந்து… அது வந்து… எப்படி சொல்றது…”

 

“உங்க வாயால தான் சொல்லணும், சொல்லுங்க எதுக்கு எனக்கு டென்ஷன் கூட்டுறீங்க…”

 

“இவ்வளவு நடந்த பிறகும் ட்ரைன்ல வைச்சு உன்னை சைட் அடிச்சேன்டி…”

 

‘அடப்பாவி இதுக்கா இம்புட்டு பில்டப்’ என்று எண்ணியவள் “அதான் எனக்கு தெரியுமே…” என்றாள் அவனிடத்தில்.

 

“அதுனால தான் நான் உங்களை பிரின்சிபால்கிட்ட மாட்டி விட்டனே…” என்றதும் அவன் புரியாமல் பார்த்தான் அவளை.

 

“சைட் அடிச்சா பிரின்சிபால்கிட்ட மாட்டிவிடுவியா என்ன??”

 

“அதுக்காக மட்டுமில்லை, நீங்க சொன்னீங்களே ஜெயா இன்ஸ்டிடியூட் நானும் அங்க தான் படிச்சேன்…” என்று அவள் சொன்னதும் என்ன என்பது போல் அவளை பார்த்தான் அவன்.

 

“ஹ்ம்ம் உண்மை தான் ஆனா நான் வேற பேட்ச், அதுனால நீங்க என்னை பார்த்திருக்க வாய்ப்பில்லை…”

“ஆனா எனக்கு உங்களை தெரியும்… நீங்க லெட்டர் கொடுத்த திவ்யா என்னோட கிளாஸ்மேட் தான்… நானும் அவளும் ஒண்ணா தான் கிளாஸ் ஜாயின் பண்ணோம்…”

 

“அவ ஸ்கூல்விட்டு வந்ததும் டியூஷன் போய்டுவா, அதுனால அவளுக்கு டைம் செட் ஆகலை… அவளோட அண்ணாகிட்ட கேட்டு நெக்ஸ்ட் பேட்ச் டைம் வாங்கிட்டா…”

 

“அப்போ தான் நீங்க முதல் லெட்டர் கொடுத்திருப்பீங்க போல… அதை பார்த்ததும் அவளுக்கு பயத்துல என்ன பண்ணறதுன்னே தெரியலை… உங்களை பார்த்தா கரடுமுரடா தெரிஞ்சிருக்கீங்க”

 

“எதுவும் பண்ணிடுவீங்களோன்னு பயம், கொஞ்ச நாள் முன்னாடி தான் ஸ்கூல்ல ஒரு பொண்ணு முகத்துல ஒரு பையன் ஆசிட் அடிச்சிட்டான் அந்த பொண்ணு அவனை லவ் பண்ணலைன்னு”

 

“அந்த பயம் எல்லாம் சேர்ந்து நீங்க கொடுத்த லெட்டரை கிழிச்சு குப்பையில போட்டிருக்கா…”

 

“மறுநாள் நான் கிளாஸ் முடிஞ்சு போகும் போது எனக்காக வெயிட் பண்ணி இப்படி விஷயம் சொல்லவும் நானும் நீ பண்ணது தான் சரி, லெட்டர் வந்த மாதிரியே கண்டுக்காதேன்னு சொல்லி அவகிட்டசொன்னேன்”

 

“உங்களை பார்த்தாலும் பார்க்காத மாதிரியே போக சொன்னேன்… ஆனாலும் அவளுக்கு பயம் போகலை… நீங்க உங்க பிரண்ட்ஸ் கூட சேர்ந்து பொண்ணுங்களை சைட் அடிக்கிறதுலாம் பார்க்கும் போது தினமும் வந்து புலம்புவா… எங்க அவ முகத்துலையும் ஆசிட் அடிச்சிடுவீங்களோன்னு”

 

“இப்படியே புலம்பிட்டே இருக்காளேன்னு லெட்டர் கொடுத்தவனை ஒரு வாங்கு வாங்கிற வேண்டியது தான்னு நானே அன்னைக்கு தான் பேட்ச் மாறலாம்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அவங்க அண்ணாகிட்ட பேசுறதுக்கு. அப்போ தான் உங்களை காமிச்சா… அன்னைக்கு தான் உங்களை முத முதல்ல பார்த்தேன்…”

 

“பார்த்ததும் ஒரு வில்லன் இமேஜ் தான் மனசுக்குள்ள எழுந்திச்சு… அன்னைக்கு என்னோட கணிப்பு அது தான்…”

 

“அன்னைக்கு பார்த்து தான் நீங்க அடுத்த லெட்டரை கொடுக்க விஷயம் அவளோட அண்ணனுக்கு போய் நடந்த கலாட்டா எல்லாம் தெரியுமே…”

 

“நீங்க அவ டேபிள்ல லெட்டர் வைச்சதை நானே பார்த்தேன்… ஆனா அவ அண்ணா கேட்கும் போது இல்லைன்னு சாதிச்சீங்க…”

 

“பழியை வேற ஒரு பையன் மேல வேற போட்டீங்க, செம கோபம் வந்துச்சு எனக்கு. அங்கவே வைச்சு ஒரு வாங்கு வாங்கலாம்ன்னு பார்த்தேன், நீங்க எஸ்கேப் அப்போ”

“திவ்யா வீட்டுல அவ டென்த் முடிக்கவும் ஊருக்கு அனுப்பி வைச்சுட்டாங்க அவளை. ஊர்ல போய் படிக்கட்டும்ன்னு…”

 

“ஊருக்கு போகும் போது அப்படி ஒரு அழுகை அழுதா… தப்பு செய்யறது ஒருத்தர் தண்டனை அனுப்பவிக்கறது ஒருத்தரான்னு அப்போல இருந்து உங்க மேல கோபம் வளர்ந்துகிட்டே போச்சு”

 

“என்னைக்காச்சும் மாட்டினா ஒரு வழி செய்யணும்ன்னு தான் நினைச்சேன்…”

 

பாவை தன் பாட்டில் சொல்லிக் கொண்டிருக்க சிவா முகத்தில் துடைத்து வைத்த உணர்வு…

 

முழுதும் பேசி முடித்த பின் அவனிடம் பேசிக் கொள்ளலாம் என்று அவள் பேச வந்த விஷயத்தை தொடர்ந்தாள் அவள்.

 

“கொஞ்ச நாள் கழிச்சு ட்ரைன்ல உங்களை பார்த்த உடனே எனக்கு அடையாளம் தெரிஞ்சிடுச்சு… கூடவே நீங்களும் உங்க பிரண்டும் சேர்ந்து கலாட்டாவா பேசுனீங்க…”

 

“உங்க பார்வையும் என் மேலேயே வேற இருந்துச்சா, என்ன செய்யலாம்ன்னு யோசிச்சேன்… திவ்யா மாதிரி எல்லாம் பயந்து ஓடக் கூடாது… எதுவா இருந்தாலும் நாமளே ஒரு கை பார்க்கணும்ன்னு தோணுச்சு. அவ பிரச்சனையால உங்க மேல இருந்த அந்த எண்ணமும் மாறலை…”

“அன்னைக்கு ட்ரைன்ல எல்லாரும் சேர்ந்து கூட்டமா இறங்கினப்போ நடந்த தள்ளு முள்ளுள தான் நான் ட்ரைன்ல இருந்து கீழே விழுந்திருந்தேன். பக்கத்துல பார்த்தா உங்க பிரண்டு, நிமிர்ந்து பார்க்கவும் நீங்க”

 

“எப்படி சொல்றதுன்னு தெரியலை, அந்த நிமிஷம் ஒரு மாதிரி அவமானமா இருந்துச்சு…”

 

“நீங்க நிக்கவும் என் கோபம் மொத்தமும் உங்க மேல திரும்பிச்சு… எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு அன்னைக்கு உங்களை அடிச்சிட்டேன், பிரின்சிபால்கிட்டயும் மாட்டிவிட்டேன்”

 

“பிரின்சிபால் அங்கிள் எங்களுக்கு தூரத்து சொந்தம், நான் டென்த்ல பெயில்ன்னு சொன்னதும் அண்ணன் அவங்ககிட்ட தான் சொல்லி என்னை அங்க சேர்த்துக்க சொன்னாங்க”

 

“அவர் எனக்கு தெரியுங்கறதால நானும் ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு கொஞ்சம் கூட குறையவே உங்களை பத்தி வத்திவைச்சுட்டேன்”

 

“அன்னைக்கு நான் பண்ணது சரின்னு தோணின எனக்கு, இப்போ அதை நினைக்கும் போது சிறுபிள்ளைத்தனமா தெரியுது…”

 

“நெறைய நாள் யோசிச்சிருக்கேன்… எல்லா தப்பையும் உங்க மேல மட்டும் திணிக்கிறது எந்த விதத்துல நியாயம்ன்னு…”

 

“இதுல நெறைய பேர் மேல தப்பிருக்கு… திவ்யா இப்படி லெட்டர் பார்த்ததும் தைரியமா உங்ககிட்ட அதை பத்தி பேசி இஷ்டமில்லைன்னு சொல்லியிருக்கலாம்”

 

“இல்லை அவளோட வீட்டில பேசியிருக்கலாம்… அவ வீட்டில இருக்கவங்களும் அவ மேல நம்பிக்கை வைச்சிருக்கலாம்ன்னு தோணிச்சு…”

 

“இதுல ஒரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா திவி இப்போ லவ் மேரேஜ் தான் பண்ணியிருக்கா, பையன் யாருன்னு தெரியுமா… நீங்க கைக்காட்டிவிட்டு போனவன் தான்…

 

“இந்த விஷயம் கொஞ்ச நாள் முன்னாடி தான் எனக்கே தெரியும்… அம்மாவுக்காக ஆஸ்பிட்டல்க்கு செக்கப் போயிருக்கும் போது அவளும் வந்திருந்தா அங்க… கன்சீவ் ஆகியிருப்பா போல டாக்டர் பார்க்க வந்திருந்தா”

 

இந்த தகவல் அவனுக்கு புதிது, தன்னால் தானோ என்ற எண்ணத்தில் பாவையை நிமிர்ந்து பார்த்தான்.

 

“இதுக்கும் உங்களுக்கும் இருக்க ஒரே சம்மந்தம் நீங்க அவனை கைக்காட்டி விட்டது மட்டும் தான். மத்தப்படி இதுல நீங்க எதுவுமே செய்யலை…”

 

“இன்னொரு விஷயம் என்னன்னா அவன் நிஜமாவே திவியை விரும்பியிருக்கான் போல. எப்படியோ என்னென்னவோ நடந்து அவங்க கல்யாணம் ஆகிட்டு. இதுல நாம நடுவுல தேவையில்லாம முட்டிக்கிட்டது தான் மிச்சம்”

“அதுவும் நான் பண்ணது ரொம்பவே டூ மச்… சாரிங்க அந்த வயசுல என்ன செய்யறோம் ஏது செய்யறோம்ன்னு புரியாம மனசுல தோணினதை செஞ்சுட்டேன்”

 

“என்னால உங்களுக்கு அப்போ எவ்வளவு கஷ்டம் அத்தை பேசாம போய், காலேஜ் சஸ்பென்ட் பண்ணி… இதுக்கெல்லாம் என்ன பிரயாசித்தம்ன்னே எனக்கு தெரியலை” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.

 

சிவா பதிலொன்றும் பேசவேயில்லை இன்னமும் அமைதி அவனிடத்தில். அவன் அப்படி இருப்பதே அவளுக்கு எதுவுவோ செய்தது.

 

“என்னங்க ஏதாச்சும் சொல்லுங்க இப்படி பேசாமலே இருந்தா என்ன அர்த்தம்” என்று அவனருகே சென்றாள்.

 

அவனோ அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. ‘கடவுளே இப்போ தானே எல்லாம் சரியாச்சுன்னு நினைச்சோம். மறுபடியுமா’ என்றிருந்தது அவளுக்கு.

 

அவள் பேசும் போதே கட்டிலில் சென்று அமர்ந்திருந்தவனின் தோளை தொட்டு மெல்ல உலுக்கியது மட்டுமே அவள் நினைவில்.

 

அதன் பின் என்ன நடந்தது என்று யோசிக்கவே முடியவில்லை அவளால். அவள் மூச்சுக்கு திணறும் அளவிற்கு அவள் இதழை தன் வசப்படுத்தியிருந்தான்.

 

இருவரும் தங்கள் உலகில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருக்க வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டு இருவரையும் இவ்வுலகுக்கு அழைத்து வந்தது.

 

பாவை அவனிடமிருந்து விடுபட போராட அவனே மெதுவாய் அவளை விடுவித்தான். “என்ன செஞ்சீங்க இப்போ??” என்றாள் கம்மிய குரலில்.

 

“திரும்ப செஞ்சு காட்டணுமா…” என்று அவன் கண் சிமிட்ட “அய்யா சாமி ஆளைவிடுங்க” என்றாள் அவள்.

 

“கோவமா இருக்கீங்கன்னு பார்த்தா என்ன வேலை பாக்குறீங்க…” என்று அவனைவிட்டு ஓரடி பின்னே நகர்ந்தாள்.

 

“இனிமே உன்னை விடுறதா இல்லை, போதும் நாம முட்டிக்கிட்டது எல்லாம் இனிமே கட்டிக்கிறது மட்டும் தான்… நெறைய மிஸ் பண்ணிட்டேன்…” என்றான் அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே!!

 

அவளை அருகேயிழுத்து அவன் அணைத்திருக்க வெளியில் மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க “யாரோ கதவை தட்டுறாங்க??” என்ற பாவை அவன் மேல் சாய்ந்து கொண்டிருந்தாள்.

 

“ஹ்ம்ம் ஆமா மாம்ஸ் வந்திருப்பார்ன்னு நினைக்கிறேன்…” என்று சிவா சொல்லவும் அவனிடம் இருந்து துள்ளிக் குதித்து விலகினாள் அவன் மனைவி.

 

“அண்ணனா… அண்ணன் இந்த நேரத்துல எப்படி?? இவ்வளவு சீக்கிரம் வராதே…”

 

“மணி இப்போ என்ன தெரியுமா??” என்று கையை திருப்பி பார்த்திருந்தான் சிவா இப்போது.

 

“என்ன??”

 

“ஐஞ்சு மணி ஆகுது…”

 

“அச்சோ நாம இவ்வளோ நேரம் இங்க என்ன பண்ணிட்டு இருக்கோம். அம்மாக்கு மாத்திரை கொடுத்திட்டு வரும் போது மணி இரண்டரை அடராமா…” என்றாள் அவள்.

 

“வேணும்ன்னா மறுபடியும் நீ அழு, நாம என்ன செஞ்சோம்ன்னு நான் செஞ்சு காட்டுறேன்” என்றவனின் தோளில் இடித்தாள் அவள். “செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு பேச்சை பாரு…”

 

“ஹேய் நான் இன்னும் எதுவும் செய்யவே ஆரம்பிக்கலை. என்னை போய் இப்படி சொல்றே… சரி நம்ம கதை அப்புறம் பேசுவோம்… நீ போய் இப்போ என்னோட மாம்ஸ் கவனி… அப்புறம் வந்து நீ உன்னோட மாமனை கவனிப்பே” என்றான்.

 

“உங்களை… வந்து பேசிக்கறேன்” என்றவள் கதவை திறந்து வெளியில் சென்றாள்.

 

சிவா சொன்னது போலவே மாருதி தான் வீட்டிற்கு வந்திருந்தான். வந்தவன் தங்கையின் முகத்தை தான் கூர்ந்திருந்தான்.

 

“என்ன அண்ணா சீக்கிரம் வந்திட்டே, ஆறு மணிக்கு மேல தானே வருவே!!”

 

“எப்பவும் அந்த நேரத்துக்கு தான் வருவேன். இன்னைக்கு எனக்கு ஒரு ஆர்டர் வந்திச்சு. ஒரு வாரத்துக்கு நான் வேப்பம்பட்டு போகணும்ன்னு”

 

“அதான் வந்து டிரஸ் எடுத்திட்டு போகலாம்ன்னு பெர்மிஷன் சொல்லிட்டு வந்திட்டேன்”

 

“யாருண்ணா ஆர்டர் போட்டது இவரா??” என்று அப்போது அங்கு வந்தவனை முறைத்தாள் அவள்.

 

“இல்லை என் பொண்டாட்டி” என்றிருந்தான் அவன்.

 

“நான் தான் சொன்னேன்… இப்போ என்னாங்குற??”

 

“எதுக்கு அப்படி சொன்னீங்க??”

 

“சங்கவி மாம்ஸ் தேடுறாளேன்னு சொன்னேன். நீ தனியா இருப்பேன்னு தான் நான் இங்க இருக்கேன்னு மாம்ஸ்கிட்ட சொன்னேன்… என்ன மாம்ஸ் சொல்லுங்க நாம அதானே பேசினோம்”

 

“பாவை அதெல்லாம் நீங்க ரெண்டு பேரும் பொறுமையா பேசிக்கோங்க. இப்போ எனக்கு ஒரு காபி போடு, அதுக்குள்ளே நான் போய் என் டிரஸ் எடுத்து வைச்சுட்டு வர்றேன்” என்று நகர்ந்துவிட்டான் மாருதி.

 

“எதுக்கு அண்ணாவை அங்க போக சொன்னீங்க??” என்றாள் அருகே வந்து.

 

“இங்க வைச்சு இப்படி கேட்கிறதை உள்ள வைச்சு கேட்டிருந்தா பதிலை ஒழுங்கா சொல்லியிருப்பேன்…”

 

“ஏன் இப்போ சொல்ல மாட்டீங்களா??”

 

“நாம அப்புறம் பேசுவோம், இப்போ மாம்ஸ் கவனி. அத்தையும் எழுந்திட்டாங்கன்னு நினைக்கிறேன். நான் அவங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். எனக்கும் ஒரு காபி”

 

“டீ தானே உங்களுக்கு…”

 

“என் பொண்டாட்டிக்கு காபி பிடிக்கும் சோ நான் அதை காபி அடிச்சிட்டேன்… பரவாயில்லை காபி கொடு” என்று சொல்லிவிட்டு மகேஸ்வரியின் அறையை நோக்கி நகர்ந்தான் அவன்.

 

மாருதியும் கிளம்பி வந்தவன் அன்னையிடம் சொல்லிக்கொண்டு வேப்பம்பட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டான்.

 

எப்படியோ இருவரும் மனம்விட்டு பேசி சமாதானம் அடைந்துவிட்டனர். சிவா தன் நினைவில் இருந்து விடுபடவும் அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்து சேர இருவருமாக சென்று கடை திறப்பு விழாவிற்கு அனைவருக்கும் உடை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

 

விழா நாளும் அழகாய் விடிந்தது. வெளி வாயிலில் வாழை மரம் தோரணம் கட்டியிருக்க உள் வாயிலில் பலூன்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

 

அவர்கள் வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோசமும் நிரம்பியிருந்தது. ஒரு வாரம் முன்னர் தான் சங்கவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது.

 

ஆட்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்திருந்தனர். சிவாவின் நண்பன் ஜெகதீஷ் வந்திருந்தான்.

 

“டேய் மச்சி எப்படியோ சொன்ன மாதிரி செஞ்சிட்டடா உன்னை பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்குடா… விளையாட்டா சொன்ன மாதிரி இருந்துச்சு மச்சி… ஆனா சாதிச்சுட்டடா”

 

“ராயல் என்பீல்ட்க்கு ஓனர் ஆக முடியாதுன்னாலும் ஷோரூம்க்கு ஓனர் ஆகிட்டடா… வாழ்க்கையில் கண்டிப்பா உன்னைப்போல பெரிய லட்சியம் இருக்கணும்டா, அப்போ தான் சாதிக்க முடியும்ன்னு நிருப்பிச்சிட்டடா”

 

“டேய் போதும்டா ஓவரா புகழாதே, அப்பா இல்லைன்னா இதெல்லாம் எதுவுமே இல்லை. என்னை நம்பி கடையை என்கிட்டே கொடுத்தாரு, அது இல்லைன்னா எவனும் என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்திருக்க மாட்டான்ல” என்றான் அவன்.

பினனாலேயே அவன் தந்தை சதாசிவம் இருந்ததை கவனிக்காமலே நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.

 

சதாசிவத்திற்கு தான் இப்போது பெருமையாய், இவன் தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல் என்ற குறள் உண்மையாவதாய் தோன்றியது அவருக்கு.

 

அவர் பெருமைப்படும்படி அவன் நிச்சயம் நடந்திருக்கிறானே. இதில் உச்சபட்சமாய் ஷோரூமை நிர்வகிக்கும் பொறுப்பை அவன் தன் தந்தையிடமே ஒப்படைத்தான்.

 

சதாசிவத்திற்கு கையில் ஸ்டிக் வைத்து நடக்க முடிந்தது இப்போது. சிவா அவ்வப்போது வந்து  மேற்பார்வை மட்டும் பார்ப்பதாய் பேச்சு.

 

பூஜையில் மனைவியின் அருகில் நின்றிருக்க மனம் நிறைந்திருந்தது அவனுக்கு. கடை ஆரம்ப நாள் அன்றே ஜெகதீஷ் மற்றும் அவன் நண்பர்கள் ஓரிருவர் புது வண்டியை புக் செய்ய அட்டக்காச ஆரம்பமாயிருந்தது அன்று.

 

மாருதி சங்கவியுடன் சிறிது நேரம் வந்து தலைக்காட்டி சென்றிருந்தான். குழந்தையை வைத்துக்கொண்டு புகையில் அமர முடியாதென்று…

 

மகேஸ்வரியும் மாலினியும் ஒன்றாய் ஒரு ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். என்ன தான் அண்ணனுடன் மனத்தாங்கலாய் இருந்தாலும் சந்திரனையும் சங்கீதாவையும் கூட விழாவிற்கு அழைத்திருந்தான் சிவா.

 

சங்கீதாவிற்கு கொஞ்சம் பொறாமை தான் அவள் கண்களில் அதை அப்பட்டமாய் பார்க்க முடிந்தது. சந்திரன் எப்போதும் போல் இதெல்லாம் எனக்கு ஒன்றுமேயில்லை என்பது போல் பெயருக்கு வந்து சென்றிருந்தான்.

 

ஒவ்வொருவராய் கிளம்பியிருக்க பட்டுப்புடவையில் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்த மனைவியை நோக்கிச் சென்றான் சிவா. அவன் எண்ணமோ பாவையை சுற்றியே…

 

பாவையின் அவசரப்புத்தி சிவாவை கஷ்டப்படுத்தியிருந்தாலும், மரத்தின் வேர் போல் உறுதியாய் இருந்தவனை பின்னாளில் ஆணிவேரையே தீண்டிய இலையை போல் அவள் காதல் அவனை அசைத்து இருவரையும் ஒன்றாக்கியிருந்தது இப்போது…

 

“ஓவி என்னடி பண்ணறே??”

 

“பார்த்தா தெரியலை, இந்த ஜூஸ் கிளாஸ் எல்லாம் எடுத்திட்டு இருக்கேன்…”

 

“இப்போ இது ரொம்ப முக்கியமா”

 

“வேற என்ன முக்கியம் இப்போ…”

 

“இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா…”

 

“தெரியுமே…”

 

“எதுக்குன்னு தெரியுமா…”

 

“ஹ்ம்ம் தெரியும் நம்ம ஷோரூம் திறந்தாச்சு, உங்க கனவு நிறைவேறியாச்சு அதானே…”

 

“போடி…”

 

“வேறென்னவாம்…”

 

“ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ன்னு சொல்லுவாங்க… இன்னைக்கு அய்யா நெறைய மாங்காய் அடிக்க ப்ளான் பண்ணியிருக்கேன்…”

 

“என்ன சொல்றீங்க எனக்கு புரியலை…”

 

“உனக்கு எது தான் புரிஞ்சிருக்கு…”

 

“புரிய வைங்கன்னு தானே சொல்றேன்”

 

“இன்னைக்கு என்ன நாள்…”

 

“கடை திறப்பு நாள்…”

 

“அதைத்தவிர வேற என்ன சிறப்பு…”

 

“நம்ம கல்யாண நாள்…” என்று சொல்லும் போது லேசாய் ஒரு வெட்கம் வந்தது அவளுக்கு.

 

“இப்படியே மெயின்டெயின் பண்ணு ஓகே வா… இன்னைக்கு ஷோரூம் ஓபனிங், அப்புறம் நம்ம கல்யாண நாள், அப்புறம் நீ நம்ம வீட்டுக்கு வரப் போற நாள்…”

 

“அப்புறம் இது தான் ஹைலைட்டே!!” என்று இடைவெளி விட்டான் அவன்.

 

“என்ன??”

 

“இன்னைக்கு தான் நமக்கு பர்ஸ்ட் நைட்”

 

“சீய்!!” என்றவளை “ஏய் என்ன நீ சீய்!! சொல்ற… இந்த உலகத்துலேயே கல்யாணம் முடிச்சு ஒரு வருஷம் கழிச்சு அதுவும் கல்யாண நாள் அன்னைக்கு பர்ஸ்ட் நைட் கொண்டாடுற முத ஜோடி நாமளா தான் இருப்போம்…”

 

“ரொம்ப தான் பெருமை…”

 

“பெருமை இல்லைம்மா என்னோடா பொறுமை…”

 

பாவை இப்போது அவனை நெருங்கி நின்றிருந்தாள். சுற்றும் முற்றும் பார்வையை துழாவவிட “எதுக்குடி அங்கயும் இங்கயும் பார்க்குறே…”

 

“இதுக்கு தான்…” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவள் ஓடப்பார்க்க சிவா அவளை இழுத்து அணைத்து “ஐ லவ் யூ ஓவி” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்…

 

தாங்கும் தண்டாய்

மட்டுமில்லை

நிலைநிறுத்தும் வேராய்

ஆனேன்

நீ வந்தாய்

என் வாழ்வின்

வசந்தகாலமாய்

 

பசும் தளிராய் துளிர்த்த

காதல் இலை தீண்டியது

என்னையா??

உன்னையா??

வேரை தீண்டியதோ இலை!!

இல்லையில்லை

இந்த வேர் தீண்டியதோ இலையை!!

 

முற்றும்

 

Advertisement