Advertisement

அத்தியாயம் – 22

 

“ஓவி கிளம்பலாமா?? மணியாகுது சீக்கிரம் வாம்மா…” என்று அழைத்தது சிவாவே தான். அவளோ அவள் அன்னையிடம் வந்தவள் “அம்மா தனியா இருந்துக்குவீங்க தானே… நான் எதுக்கும் வனஜாம்மாகிட்ட சொல்லிட்டு போறேன்ம்மா”

 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் பாவை. நான் இப்போ நல்லாவே இருக்கேன், முடியலன்னா அவங்களை கூப்பிடுறேன். இல்லன்னா உனக்கு கூப்பிடுறேன் போதுமா” என்றார் மகேஸ்வரி.

 

அரைமனதாய் சிவா முன் வந்து நின்றாள் பாவை. “அத்தை எதுவானாலும் போன் பண்ணுங்க… இல்லன்னா உங்க பொண்ணு என்னை ஒரு வழியாக்கிருவா…”

 

“எனக்கு ஒண்ணுமில்லைப்பா நான் இப்போ நல்லாவே இருக்கேன். எனக்கு தான் கீமோ எல்லாம் முடிஞ்சு போச்சுல… இன்னும் கொஞ்ச நாள் சகஜமாகிடுவேன்” என்று நம்பிக்கையாய் பேசினார் மகேஸ்வரி.

 

ஆம் மகேஸ்வரிக்கு கீமோ எல்லாம் முடிந்திருந்தது. ஆனாலும் பாவையை அவன் உடனே தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை.

 

தற்போது தான் தேறி வந்துக் கொண்டிருக்கும் மகேஸ்வரியை தனியே விட அவனுக்கு சங்கடமாயிருந்தது. தவிர தங்கையும் இப்போது தன் வீட்டில் இருப்பதால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு உடன் கண்டிப்பாய் ஒருவர் வேண்டும் என்று தோன்ற இன்னும் சில நாட்கள் அவள் அங்கேயே இருக்கட்டும் என்றுவிட்டான் அவன்.

 

மாருதிக்கும் மகேஸ்வரிக்கும் அதில் விருப்பமில்லை என்றாலும் அவர்களுக்கு பாவையின் உதவி தேவைப்பட்டது தான். சிவாவும் பிடிவாதமாய் இருக்க சரியென்று விட்டனர்.

 

சிவா இன்று அவளை தி.நகருக்கு அழைத்திருந்தான். அவனின் கடை திறப்பு விழா வேலைகள் முடிந்து இன்னும் சில தினங்களில் கடை திறக்கப்பட்டு விடும் என்பதால் குடும்பத்தினருக்கு விழாவிற்கென்று அணிய உடைகள் எடுக்க விரும்பினான்.

 

அதற்கு தான் மனைவியை அழைத்துச் செல்கிறான் அவன். “சரிம்மா கிளம்பறேன்” என்று அவள் அன்னைக்கு தலையசைக்க சிவாவும் விடைபெற்றான்.

 

இருவருமாக அங்கிருந்து ரயில் செல்வதென முடிவு செய்திருந்தனர். திரும்பி வரும் போது வேண்டுமானால் வண்டியில் வந்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் சிவாவிற்கு.

 

இருவரும் ரயிலில் ஏறியிருக்க அங்கு காலியாயிருந்த இருக்கையில் சன்னலோரத்தில் அவள் அமர்ந்துக்கொள்ள அவளருகே அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான் சிவா.

 

“காலியா தானே இருக்கு, தள்ளி உட்காருங்க…” என்று கணவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் கிசுகிசுத்தாள் அவன் மனைவி.

 

“முடியாதுடி…” என்றான் அவன் மேலும் இடித்துக்கொண்டு.

 

“அடி வாங்க போறீங்க…”

 

“அய்யோ அம்மா பயமாயிருக்கே… இப்படி சொல்வேன்னு நினைச்சியா… நீ அடிச்சப்பவே உன் கையை பிடிச்சு முறுக்கினவன்…”

 

“எங்க இப்போ அடிச்சு தான் பாரேன். பப்ளிக் பிளேஸ்ன்னு பார்க்க மாட்டேன்… உன்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்திருவேன்” என்று அவனும் பதிலுக்கு அவள் காதில் மெதுவாய் சொல்ல அவள் முகம் சிவந்து போனது.

 

“உங்களை…” என்று பல்லைக்கடித்தவள் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

 

அவர்கள் தி.நகர் செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்பதால் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு முகத்தில் மோதிய எதிர்காற்றில் உறக்கம் ஆட்க்கொண்டு விட மெல்ல கணவனின் தோள் சாய்ந்திருந்தாள்.

 

சிவாவின் மனதில் பெரிய ஆச்சரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்னோ அல்லது சில வருடங்களுக்கு முன்னோ தானும் இவளும் ஒன்றாய் பயணிப்போம் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

 

ஏன் தானும் அவளும் இவ்வளவு இணக்கமாய் இருப்போம் என்றோ தன் மீது அவள் உரிமையாய் சாய்ந்திருப்பதும், அவள் தோளைச் சுற்றி தான் அணைவாய் கைப்போட்டிருப்பதும் கூட இன்னமும் அவனால் நம்ப முடியாத ஒன்றே!!

 

அவன் மனக்கண்ணில் அவள் நகையை கொடுத்து சென்றதும் அவள் பின்னோடு தானும் அவளுடனே சென்ற நாளும் அதன் பின்னான நிகழ்வுகளும் கண் முன்னால் வந்து சென்றது.

 

தன் தோளில் சாய்ந்திருந்தவளின் தலை மீது தன் தலையை சாய்த்துக் கொண்டவன் நினைவுகள் அன்று அவர்கள் இருவரும் மனம் திறந்து பேசிக் கொண்டதில் வந்து நின்றது…

 

____________________

 

“ஓவி…”

 

“ஹ்ம்ம்”

 

“உன்கிட்ட பேசணும்…”

 

“சொல்லுங்க” என்றவள் அவன் அணைப்பில் இருந்து இன்னமும் விடுபடவில்லை.

 

“என்னை பாரு அப்போ தான் சொல்ல முடியும்…” என்று அவன் சொல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

“நகையை கண்டிப்பா நான் எடுத்துக்கணுமா??” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க அவள் முகம் சுளித்து உடனே அவனைவிட்டு விலகி கட்டிலில் சென்று பொத்தென்று அமர்ந்து தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

 

“இல்லை ஓவி…” என்று ஆரம்பித்தவனிடம் “எதுவும் பேசாதீங்க…”

 

“இல்லைடா…”

 

“எடுத்துக்க முடியுமா?? முடியாதா?? ஆமா… இல்லை… இதை தவிர வேற எதுவும் சொல்லாதீங்க…”

 

“உன்னையே எடுத்துக்கட்டுமா…” என்றான் அவன் அவளை சீண்டும் விதமாய்.

 

அவளோ அவனை இப்போது போலியாக முறைத்துக் கொண்டிருந்தாள். “சரி சரி முறைக்காத… கண்டிப்பா எடுத்துக்கறேன் ஓகே தானே… கொஞ்சம் சிரியேன்…” என்றிருந்தான்.

 

“திரும்பவும் இல்லை வேணாம்ன்னு ஆரம்பிக்க மாட்டீங்களே!!”

 

“மாட்டேன்…”

 

“அப்போ சரி” என்றவளின் இதழில் லேசாய் புன்னகை அரும்பியது.

 

“நீ நகையை கொடுத்ததும் தான் நான் மனசு மாறி வந்திட்டேன்னு நினைச்சியா…” என்றிருந்தான் மெதுவாய்.

 

“தெரியாது…” என்றாள்.

 

“இதென்ன பதில்…”

 

“அதை நீங்க தான் சொல்லணும்… நீங்க அதுக்காக எல்லாம் வந்திருக்க மாட்டீங்க தெரியுது… ஆனா உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியலை, அதனால தான் அப்படிச் சொன்னேன்…”

 

“அன்னைக்கு நான் உன்னை இம்ப்ரெஸ் பண்ணேன்னு நீ பேசினப்போ கொஞ்சம் கோவம் வந்திடுச்சு… அண்ணன் பிரச்சனை வேற மைன்ட்ல ஓடிட்டு இருந்துச்சா, நீயும் வந்து இப்படி சொல்லவும் அதை சரியா எனக்கு புரிஞ்சுக்க தெரியலை”

 

“சட்டுன்னு கோபமா பேசிட்டேன்… நீ கிளம்பி போன பிறகு தான் நான் பண்ண தப்பே புரிஞ்சுது… உடனே சாரி கேக்கணும்ன்னு எல்லாம் தோணவே இல்லை”

 

“வேறென்ன ஈகோ தான், நாம போய் சாரி கேக்குறதான்னு… உன் மேல மனசுக்குள்ள அந்த கோபம் மாறாம இருந்திருக்குன்னு நினைக்கிறேன். அதான் ஈகோவா மாறிடுச்சு போல”

“நீ போன் பண்ணும் போதெல்லாம் சரியா பேசாம போனதுக்கு காரணம் என்னோட கோபமில்லை ஓவி, அது என்னோட குற்றவுணர்ச்சி…”

 

“எதுக்கு இப்படியெல்லாம் பேசறீங்க… என்னைவிட ஒண்ணும் உங்களுக்கு ஈகோ எல்லாம் இல்லை…”

 

“நிச்சயம் உனக்கு ஈகோ எல்லாம் இல்லைம்மா… தப்புன்னு தெரிஞ்சா மன்னிப்பு கேக்குற குணம் இருக்கு உன்கிட்ட, உன்னை மாத்திக்கிற பக்குவம் இருக்கு…”

 

“எனக்கு அது இல்லை… உன்கிட்ட பேசவும் முடியலை, பேசாம இருக்கவும் முடியலை… மொத்ததுல என்னையே எனக்கு சமாதானம் செய்ய முடியலை…”

 

“அந்த நேரத்துல தான் கவி சீமந்தம் நடந்துச்சு… உன்னை பார்க்கணும்ன்னு ஆசையா தான் வந்தேன்… ஆனாலும் வீம்பு காட்டிட்டு திரிஞ்சேன்…”

 

“மாம்ஸ் கவியும் ஒருத்தரை ஒருத்தர் பிரியறது பத்தி பீல் பண்ணிட்டு இருந்தாங்களா… அதைப்பத்தி அம்மாகிட்ட கேட்டா நீ தான் சீக்கிரம் சீமந்தம் வைக்க சொன்னேன்னு சொன்னாங்க”

 

“நான் தான் ஏற்கனவே உன் மேல கோவமா இருந்தேனே… என் மேல தப்பை வைச்சுட்டு அதுநாள் வரை உன்கிட்ட பேசாம இருந்திருக்கேன்…”

 

“என் கோபம் சரி தான் நீ மாறலை அப்படிங்கற எண்ணம் மறுபடியும் வந்திடுச்சு அந்த நேரம். என்ன சாக்கு கிடைக்கும்ன்னு தேடின மனசுக்கு சரியா இந்த காரணம் மாட்டவும் அன்னைக்கு உன்னை வறுத்தெடுத்திட்டேன் ”

 

“சாரி ஓவி… அவங்களை பிரிக்கற அது இதுன்னு பேசிட்டேன்… ரொம்ப ஓவரா தான் பேசிட்டேன் அன்னைக்கு”

 

“ஆனாலும் அது தப்பில்லைன்னு தான் மனசுக்கு தோணிட்டு இருந்துச்சு அப்போ… வீட்டுக்கு வந்து இரண்டு நாள் போயிருக்கும் அப்போ தான் கவி பேச்சுல இருந்து நீ எதுக்காக சீக்கிரம் சீமந்தம் வைக்கச் சொன்னேன்னு தெரிஞ்சுது”

 

“ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு அன்னைக்கு… உன்கிட்ட பேசணும்ன்னு தோணுச்சு, எங்க எனக்குள்ள இருந்த ஆண் அப்படிங்கற ஈகோ அதென்ன அவளா வரமாட்டாளான்னு கேள்வி கேட்டு அடக்கி வைச்சிருச்சு”

 

“அப்பாவும் நீ போன் பண்ணே தான், ஆனா எனக்கு தான் உடனே இறங்கி வர முடியலை…”

 

“ஆனா இன்னைக்கு நீ என் கோபம் ,புறக்கணிப்பு எதுவும் பொருட்படுத்தாம எனக்காக என்னைத் தேடி வந்த பார்த்தியா… அந்த ஒண்ணு தான் உன் பின்னாடியே வரணும்ன்னு எனக்கு தோணுச்சு ஓவி…”

 

“அந்த நிமிஷம் எவ்வளவு கர்வமா இருந்துச்சு தெரியுமா… உன் மனசை நான் ஜெயிச்சிருக்கேன்னு நினைச்சு… அதை வார்த்தையில சுலபமா சொல்லிற முடியாது… அவ்வளவு சந்தோசம் எனக்கு” என்றவன் கட்டிலில் அமர்ந்திருந்தவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.

 

“பணம் கிடைக்கலை அதெல்லாம் எனக்கு பெரிய விஷயமேயில்லை. நான் கேட்காமலே உங்களுக்காக நானிருக்கேன்னு நீ வந்த அந்த நிமிஷம் மறக்கவே முடியாது…”

 

“தட்ஸ் தி டைம் யூ இம்பிரெஸ்ட் மீ யலாட்… நான் உன்னை இம்பிரெஸ் பண்றேன்னு சொன்னப்போ கோவம் வந்த எனக்கு, அந்த நிமிஷம் உன்னை கண்டு நான் மயங்கி நின்னது தான் உண்மை…” என்று அவன் சொல்லும் போது அவளுக்கு கூச்சமாய் இருந்தது.

 

முகம் சிவந்து அவள் நின்றிருக்க “நான் பேசி முடிக்கற வரை எந்த எக்ஸ்பிரஷனும் கொடுத்திறாதே… அன்னைக்கே சரியா கிஸ் பண்றதுக்குள்ள நீ போய் தூங்குற மாதிரி பாவ்லா காட்டினே!!”

 

“அன்னைக்கு மாதிரி பேசாம எல்லாம் விட மாட்டேன்…” என்று சொல்ல “அப்போ நான் அந்த பக்கம் திரும்பி நின்னுக்கறேன் நீங்க பேசி முடிக்கிற வரை” என்றாள் அவள்.

 

“ஓ!! நில்லேன்” என்று அவன் சொல்ல முகம் சுணங்கியவள் திரும்பி நிற்க அவளை பின்னாலிருந்து அணைத்திருந்தான் சிவா.

 

“உன் முகம் பார்த்து முழுசா பேசி முடிக்கிறதுக்குள்ள எனக்கு மூச்சு திணறுது… நீ இப்படியே இரு அது எனக்கு வசதியாவும் இருக்கு” என்றவனின் மேல் நன்றாய் சாய்ந்துக் கொண்டாள் பாவை.

 

“என்னை என்ன செஞ்சு மயக்கினே நீ!! அன்னைக்கு கன்னத்துல அடிச்ச!! இப்போ என் நெஞ்சுல சுகமா அடிச்சுட்ட!!”

 

“என் மேல உங்களுக்கு கோவம் வரலையா” என்றவள் சற்று சாய்ந்து அவன் முகம் பார்த்தாள்.

 

“எதுக்கு??”

 

“அடிச்சேன்ல… ஏன்னு இப்போ வரை நீங்க கேக்கலையே??”

 

“நான் கூட தான் உன்னை ரொம்ப திட்டியிருக்கேன், உனக்கு என் மேல கோபமில்லையா??”

 

அவன் கவலை உணர்ந்தவளாய் “நீங்க ஏதோ புரிஞ்சுக்காம தான் பேசுனீங்கன்னு தெரியுங்க… அதையெல்லாம் இப்போ ஏன் பேசிக்கிட்டு… நீங்க என்னை கோபமா பேசுறதுக்கோ திட்டுறதுக்கோ எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்…”

 

“நீங்க என்கிட்ட பேசாம இருந்தது தான் எனக்கு கவலையா இருந்துச்சு… உங்களை என்னால தப்பா எல்லாம் நினைக்க முடியலை”

 

“ஒரு காலத்துல நான் அப்படி நினைச்சிருக்கலாம். ஆனா அப்போ உங்களை இந்தளவுக்கு எனக்கு தெரியாது. அதுனால நடந்த குழப்பத்துல அத்தை உங்ககிட்ட பேசாம இருந்ததுக்கு நான் தானே காரணம்…”

 

“அம்மா பேசாம இருந்ததுக்கு அது மட்டும் காரணமில்லை ஓவி… வேற காரணமும் இருக்குன்னு கொஞ்ச நாள் முன்னாடி தான் எனக்கு தெரியும்…”

 

“என்ன காரணம்??”

 

“எங்கண்ணன் தான் காரணம்… அதை இப்போ தான் அம்மாவே என்கிட்ட சொன்னாங்க…”

 

“அண்ணன் ஸ்கூல் படிக்கும் போதே ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்கான். அந்த பொண்ணும் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்க பொண்ணு தான், அண்ணன் காலேஜ் போன பிறகு தான் அம்மாக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு”

 

“அண்ணனை கூப்பிட்டு கண்டிச்சிருக்காங்க… இனிமே என்கிட்டே பேசாதேன்னு கோபமா சொல்லியிருக்காங்க…”

 

“ஒரு இரண்டு நாள் பேசாமலும் இருந்திருக்காங்க. இதுக்கு நடுவுல அம்மா ஒரு வேலை செஞ்சிருக்காங்க… அது அந்த பொண்ணோட அம்மாக்கிட்ட பக்குவமா இந்த விஷயத்தை சொல்லி பார்த்துக்க சொல்லி இருக்காங்க”

“இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிஞ்சு போச்சு போல… ஏற்கனவே அம்மா பேசாம வேற இருந்திருக்காங்க. அந்த பொண்ணு வீட்டிலையும் வீடு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க… அண்ணன் கொஞ்சம் அப்செட்”

 

“திரும்பவும் அண்ணன் பழைய மாதிரி சரியாகி அம்மாவும் அவன் கூட பேச ஆரம்பிச்சுட்டாங்க தான். ஆனாலும் அண்ணன்கிட்ட உள்ள ஒரு கெட்ட குணம் சொல்லிக்காட்டுறது…”

 

“எப்போவாச்சும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பொண்ணு விட்டுப் போனதுக்கு காரணம் நீங்க தானேன்னு குத்தி குத்தி பேசுவாங்கலாம்”

 

“தவிர என் விஷயம் தெரிய வந்தப்போ எனக்கு ஒரு நியாயம் உங்க செல்ல மகனுக்கு ஒரு நியாயமான்னு அண்ணன் பேசப் போக அம்மாவுக்கும் நான் படிக்காம பொறுப்பில்லாம இருந்ததுனால கொஞ்சம் கோவம்”

 

“இது தான் சாக்குன்னு என்கிட்ட பேசாம இருந்திருக்காங்க… திரும்பவும் அவங்க என்னைக்கு தெரியுமா என்கிட்ட பேசினாங்க… உங்க வீட்டில உனக்காக என்னை கேட்டப்போ தான்”

 

“உன்னால பேசாம போனவங்க என்கிட்ட திரும்ப பேசினதுக்கும் நீ தானே காரணம்”

 

“நான் என் மேல உள்ள கோபத்தை பத்தி கேட்டேன்… நீங்க வேற பேசுறீங்க…” என்றாள்.

 

“அதுக்கு தானே இவ்வளவு விளக்கம் கொடுத்தேன் நானு… அம்மாக்கு எப்படி ஒரு காரணம் இருந்துச்சோ அது மாதிரி உனக்கும் ஒரு காரணம் இருக்கலாம் தானே”

 

“சிவா…” என்று கண்கள் விரிய அவனை பார்த்தாள்.

 

“பேர் சொல்லி கூப்பிடுறடி பொண்டாட்டி…”

 

“அதானே உங்க பேரு…”

 

“ஹ்ம்ம் அது சரி…” என்றவன் ஏதோ யோசனைக்கு தாவினான். பாவைக்கு அவள் ஏன் அவன் மீது அத்தனை வெறுப்பாய் இருந்தாள் என்பதை சொல்லிவிட வேண்டும் என்று அவனை நோக்கி மீண்டும் திரும்பினாள்.

 

“ஓவி உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்…” என்றான் பீடிகையாய்.

 

“சொல்லுங்க…”

 

“என்னை தப்பா நினைக்கக் கூடாது…” என்று மீண்டும் அவன் பீடிகையாய் சொல்ல அவளுக்குள் லேசாய் கலவரம் தோன்றியது. என்னவாய் இருக்கும் என்று…

 

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லைஉயிரே வா…

 

Advertisement